எங்கள் ஊரிலே கொழும்பர் மாமி என்கின்ற ஒரு ஆச்சி இருக்கிறார். இப்போது அவரின் வயது தொண்ணூறைத் தாண்டியிருக்கலாம். கலியாணம் கட்டி சில மாதங்களிலேயே "கொழும்பர்" இறந்துவிட, கிட்டத்தட்ட எழுபது ஆண்டுகளாக கொழும்பரை பெயரில் தாங்கியவாறு மாமி தனிக்கட்டையாக வாழ்ந்துவருகிறார். கொழும்பர் மாமி இத்தனையாண்டுகளில் உறவுக்காரர்களின் அத்தனை பிள்ளைகளையும் தூக்கி வளர்த்தவர். என் அம்மாவைத் தூக்கி வளர்த்தவர். என் அண்ணாவை. என் அக்காவை. என்னை. இப்படி சொந்தக்காரர்கள் பலரின் பிள்ளைகளை எல்லாம் தூக்கி வளர்த்தவர். அவரின் வீடு இருப்பது என்னவோ நயினாதீவில். ஆனால் அம்பாள் கோவில் தீர்த்தத்திருவிழா முடிய அவரும் எம்மோடு யாழ்ப்பாணத்துக்கு பஸ் ஏறிவிடுவார். மாதத்துக்கு ஒரு வீடு என்று யாழ்ப்பாணத்து உறவுக்காரர்களின் வீட்டில் மாறி மாறித் தங்குவார். எவர் வீட்டிலாவது பிள்ளைப்பேறு, சாமத்தியச் சடங்கு, கலியாணம், செத்தவீடு, ஆட்டத்துவசம் என்றால் முதலில் அழைத்துவருவது கொழும்பர் மாமியைத்தான். மாமி வீட்டில் நின்றாலே போதும். வேலைகள் எல்லாமே தன்னாலே நடைபெறும். வீட்டு வாசல்கட்டில் இருந்து வெத்திலை போட்டபடியே முழு நிகழ்வையும் நெறிப்ப