Skip to main content

கறுத்தக் கொழும்பான்

 

11167977_822538151149176_3229650245050593914_n

எங்கள் ஊரிலே கொழும்பர் மாமி என்கின்ற ஒரு ஆச்சி இருக்கிறார். இப்போது அவரின் வயது தொண்ணூறைத் தாண்டியிருக்கலாம். கலியாணம் கட்டி சில மாதங்களிலேயே "கொழும்பர்" இறந்துவிட, கிட்டத்தட்ட எழுபது ஆண்டுகளாக கொழும்பரை பெயரில் தாங்கியவாறு மாமி தனிக்கட்டையாக வாழ்ந்துவருகிறார்.

கொழும்பர் மாமி இத்தனையாண்டுகளில் உறவுக்காரர்களின் அத்தனை பிள்ளைகளையும் தூக்கி வளர்த்தவர். என் அம்மாவைத் தூக்கி வளர்த்தவர். என் அண்ணாவை. என் அக்காவை. என்னை. இப்படி சொந்தக்காரர்கள் பலரின் பிள்ளைகளை எல்லாம் தூக்கி வளர்த்தவர். அவரின் வீடு இருப்பது என்னவோ நயினாதீவில். ஆனால் அம்பாள் கோவில் தீர்த்தத்திருவிழா முடிய அவரும் எம்மோடு யாழ்ப்பாணத்துக்கு பஸ் ஏறிவிடுவார். மாதத்துக்கு ஒரு வீடு என்று யாழ்ப்பாணத்து உறவுக்காரர்களின் வீட்டில் மாறி மாறித் தங்குவார். எவர் வீட்டிலாவது பிள்ளைப்பேறு, சாமத்தியச் சடங்கு, கலியாணம், செத்தவீடு, ஆட்டத்துவசம் என்றால் முதலில் அழைத்துவருவது கொழும்பர் மாமியைத்தான். மாமி வீட்டில் நின்றாலே போதும். வேலைகள் எல்லாமே தன்னாலே நடைபெறும். வீட்டு வாசல்கட்டில் இருந்து வெத்திலை போட்டபடியே முழு நிகழ்வையும் நெறிப்படுத்தும் ஆற்றல் அவருடையது.

எனக்கு அப்போது ஆறு வயதிருக்கலாம். ஒருமுறை வீட்டு முற்றத்தில் விளையாடிக்கொண்டிருந்தவனை மாமி கிணற்றடிக்கு அழைத்துக்கொண்டுபோய் அங்கே இரண்டு மூன்று சிறிய கிடங்குகளை வெட்டச்சொன்னார். பாக்கு விதைகளை அதற்குள் போட்டு, மண் நிரவி, சுற்றிவர குட்டிப்பாத்திபோட்டு “தம்பி, நான் போனாப்பிறகு நீதான் இதுக்கு தண்ணி மாறோணும்” என்றார். அன்றையிலிருந்து கிணற்றடியில் கமுகுக்கு பாத்தியை மாற்றிவிட்டே நான் குளிக்க ஆரம்பிப்பேன். மாமி இப்படி ஒவ்வொரு வீடுகளிலும் கமுகு மரங்களை நாட்டியிருந்தார். ஒவ்வொரு வீட்டிலும் ஒரு சிறுவன் தண்ணீர் பாய்ச்சிக்கொண்டிருந்தான். நாங்கள் இடம்பெயர்ந்தாலும் அந்தக்கமுகுகள் இன்றும் அந்த வீடுகளிலே ஓங்கி வளர்ந்து நிற்கின்றன. காய்கள் தருகின்றன.

கொழும்பர் மாமி இன்னமும் நயினாதீவிலேதான் இருக்கிறார். அவருக்கு இப்போது நினைவுகள் தவற ஆரம்பித்துவிட்டன. நான் ஊருக்குப்போனால் “ஆரு, மணியாளிண்ட மோனே? கமுகுக்கு தண்ணி மாத்தினியா அப்பு?” என்று கேட்பார்.

கொழும்பர் மாமி ஒரு அற்புதமான கதை சொல்லி.

ஐம்பதுகளில் ஊரிலே நிகழ்ந்த கலவரங்கள். எப்படி நேவி நயினாதீவிலே குடிகொண்டது. நயினாதீவு அம்மாள் கோவிலை நேவி எரித்த சம்பவம். தேர் தானாகவே உருண்டோடி கடலுக்குள் ஒளிந்துகொண்டது என்கின்ற பல கதைகள் சொல்லுவார். கேட்கும்போது பரவசமாக இருக்கும். எது உண்மை, எது பொய் என்பதெல்லாம் தாண்டி கதைகள் இறக்கை விரித்து வானத்தில் பறக்க ஆரம்பிக்கும். மாமி கதை சொல்லும்போது கைகளை முடக்கிக்கொண்டு அவரின் தோளோடும் கதவோடும் சாய்ந்துகொண்டு கண்ணை மூடிக்கேட்போம். அது வேறு உலகம். மாமியும் அப்படியே. பாக்கு உரல் சீரான தாளத்தில் இடிபட்டுக்கொண்டிருக்கும். வெற்றிலை குதப்பியபடியே வாய் கதைகள் சொல்லும். அனேகமான கதைகளில் அவருடைய ஐயாதான் நாயகன். கொழும்பரை மாமி ஐயா என்றே அழைப்பார். ஐயா எப்படி கொழும்புக்குப்போனார்? அங்கே எப்படி கடை வைத்திருந்தார்? ஐயாவுக்கும் சண்டியர் வீரவாகுவுக்கும் நடந்த சண்டை எப்படி? ஐயா வளர்த்த நெல்லி மரம். ஐயா தியத்தலாவையிலிருந்து கொண்டுவந்து நட்ட முதல் பார்பட்டன்ஸ். எல்லாக் கதைகளிலும் ஐயா. ஐயா. ஐயா.

இப்போது யோசித்துப்பார்த்தால், மாமிக்கு கொழும்பரைப்பற்றி அவ்வளவு விடயங்கள் தெரிந்திருக்க சாத்தியமில்லை. திருமணமாகி சில மாதங்களே வாழ்ந்த மனிதர் எப்படி மாமியின் அத்தனை கதைகளிலும் வருகிறார்? கொழும்பர் தியத்தலாவைக்கு போனாரா என்பதே சந்தேகந்தான். ஆனால் என் ஒன்றுவிட்ட அக்கா தியத்தலாவையில் பிறந்தபோது கொழும்பர் மாமி அங்கே போய் பிள்ளைப்பேறு பார்ப்பதற்காக தங்கியிருந்திருக்கிறார். மாமிக்கு ஐயா என்பது ஒரு பாத்திரம். இல்லாத கணவனுக்கு உயிர்கொடுத்து கதைகள்மூலம் அவரோடு வாழ்ந்துகொண்டிருக்கிறார்.

இன்னமும் யோசித்துப்பார்த்தால் அவர் நட்ட கமுகுகள்தான் அவரின் சொந்தப்பிள்ளைகள்.

மாமியின் கதைகளில் எது நிஜம்? எது புனைவு? மாமிக்கே அது தெரியாது. அவரைப்பொறுத்தவரையில் கதைகளின்மூலம் ஐயாவோடு குடும்பம் நடத்திய அந்த வாழ்க்கை நிஜம். தனக்கென ஒரு வீடோ, தனிக்குடும்பமோ இன்றி உறவுக்காரர் வீடுகளுக்கு இத்தனை வருடங்களாக அலைகிறாரே, அது அவரைப்பொறுத்தவரையில் பொய். கமுகு மரங்களை பிள்ளைகளாட்டம் தடவிப்பார்த்துக்கொள்ளும்போது அவர் தன் பிள்ளைகளையே தடவிக்கொள்கிறார். மாமியோடு இந்த விடயங்களில் எது உண்மை எது பொய் என்று தர்க்கிப்பதிலோ, எடுத்துச் சொல்வதிலோ எந்த அர்த்தமுமில்லை. அதைவிடுங்கள். நான் சொல்லும் இந்த கொழும்பர் மாமியின் கதையில்கூட எது உண்மை? எது பொய்? எதற்கு அறியவேண்டும்?

ஆ.சி.கந்தராஜாவின் கறுத்தக்கொழும்பான் நூல் என்பது கொழும்பர் மாமியின் வாழ்க்கை போன்றது.

புனைவுக்கட்டுரைகள் என்று தன்னுடைய அனுபவங்களுக்கு நிறைய நிஜங்களையும் நிறைய தகவல்களையும் புனைவுகளோடு சேர்த்து ஆ.சி. கந்தராஜா தொகுத்துத் தந்திருக்கிறார். எந்த வரலாறும் அனுபவமும் சொல்லப்படும்போதே புனைவாகிவிடுகிறது. அதனால்தான் சிவபெருமான் நரிகளைப் பரிகளாக்கினார். மாணிக்கவாசகர் என்ற பாத்திரம் வரலாற்றில் வாழ்ந்தது உண்மை. திருவாசகம் உண்மை. ஆனால் நரிகள் பரிகளான கதை வரலாற்றின் ஓட்டத்தில் நிகழ்ந்துவிட்ட புனைவு.

அதுபோலவே சமயத்தில் புனைவு சொல்லப்பட்டபின்னர் வரலாறாகிவிடுகிறது. இராமாயணம் ஒரு காப்பியம். இராமன் அயோத்தியை சேர்ந்தவன். புனைவு. காலப்போக்கில் அதுவே உண்மையாகிவிட்டது. அதனால்தான் மனிதன் அயோத்தியில் மசூதியை எரிக்கிறான். பாக்கு நீரிணையை அகழ மறுக்கிறான். ஜெருசெலமில் சண்டை பிடிக்கிறான். இன்னும் பல வருடங்களில் இவையும் புனைவாகும், வரலாறாகும். உண்மை சொல்லப்படும்போதே பொய்யாகிறது. பொய் சொல்லப்படும்போது உண்மையாகிவிடுகிறது.

நவீன இலக்கியத்தில் கீ.ரா இவ்வகை புனைவுக்கட்டுரைகளுக்கு ஒரு முன்னோடி. சமகாலத்தில் முத்துலிங்கம் இதனை அருமையாகச் செய்வார். அவருடைய ஒன்றுக்கும் உதவாதவன், பூமியின் பாதி வயது போன்ற நூல்கள் புனைவுக்கட்டுரைகளுக்கு ஒரு பைபிள்மாதிரி. கறுத்தக்கொழும்பானை இவற்றின் நீட்சியாகவே பார்க்கிறேன்.

ஏழு கட்டுரைகள். ஆஸ்திரேலியாவுக்கும் மேற்கு ஜேர்மனிக்கும், கிழக்கு ஜெர்மனிக்கும்,  மத்திய கிழக்கு நாடுகளுக்கும், எதியோப்பியாவுக்கும், கென்யாவுக்கும், தென் ஆபிரிக்காவுக்கும் தான்சானியாவுக்கும் பயணம் செய்யும் இந்தக்கட்டுரைகள் எல்லாமே பயணம் செய்கின்ற விமானம் “சாப்பாடு”. சாப்பாட்டைப் பற்றியும் பயணங்களைப்பற்றியும் சொன்னாலும், சுத்திச் சுத்திச் சுப்பரின் கொல்லைக்குள்ளேயே வருவதுபோல எல்லாக்கட்டுரைகளும் ஊர் நினைவுகளிலேயே வந்து முடிகிறது. ஒரு கட்டத்தில் கந்தராஜாவின் சாப்பாடு என்பது கொழும்பர் மாமியின் கமுகு மரங்களோ என்கின்ற எண்ணம் வருகிறது. அவர் சாப்பாட்டைச்சொல்லவில்லை, நம் ஊரையும் இனத்தையும்தான் உருவகிக்கிறார் என்பது இறுதியில் புலப்படும்போது ஒரு அந்தளிப்பு வரும். அந்த அந்தளிப்புத்தான் இந்தப்புத்தகம்.

ஏழு கட்டுரைகளைப் பற்றியும் சொல்லிக் கழுத்தறுக்கப்போவதில்லை. ஒவ்வொரு கட்டுரையாய் ஆராய்ந்து எழுபத்தாறாம் பக்கத்தில் பதின்மூன்றாம் வரியில் கோமளாவுக்குப் பின்னாலே குத்துப்போடவில்லை என்றெல்லாம் சும்மாவே தூங்கிக்கொண்டிருப்பவருக்கு மேலும் தூக்கமாத்திரைகளை நான் கொடுக்க விரும்பவில்லை.

ஒரு கதை, உடையாரின் கதையை மாத்திரம் சொல்கிறேன்.

உடையாருக்கு கறுத்தக்கொழும்பான் மாம்பழம் என்றால் பைத்தியம். ஆஸ்திரேலியாவில் அதைப்பயிரிடவேண்டும் என்பது அவரின் வாழ்நாள் இலட்சியம். ஆனால் கறுத்தக்கொழும்பானை ஆஸ்திரேலிய உயிரியல் தொற்றுத்தடுப்புக்குள்ளால்(quarantine) அனுமதிபெற்றுக் கொண்டுவருவது என்பது இயலாதகாரியம். இந்த நாட்டில் ஒரு பயிரை உருவாக்குவதென்றால் அதற்கான முறையான முன் அனுமதி பெறவேண்டும். மாம்பழம் வெறுமனே இனிப்பதால் மாத்திரமே அந்த அனுமதி கிடைத்துவிடாது. அதைச் சந்தைக்கடையில் பார்த்தால் அழகாக, வழுவழுப்பாக, உடனேயே வாங்கவேண்டும்போலத் தோன்றவேண்டும். பழம் பல நாட்களுக்கு கெட்டுப்போகாமல் பெட்டிகளில் இருக்கவேண்டும். கறுத்தகொழும்பானின் ருசியில் எவரும் "கை" வைக்க முடியாது. ஆனால் அது பார்ப்பதற்கு அவ்வளவு “வடிவான” மாம்பழம் கிடையாது. இதெல்லாம் எப்படி இனிக்கப்போகிறது என்ற தோற்றத்தில் இருக்கும். அதன் அடி சமயங்களில் கறுத்துக்கூட இருப்பதுண்டு. கறுத்தக்கொழும்பான் பழத்தின் ஆயுட்காலமும் குறைவானது. பழுத்து சில நாட்களிலேயே அது கெட்டுவிடும். இதனால் இதனுடைய விற்பனைப்பெறுமதி குறைவு. இதனாலேயே அவுஸ்திரேலியாவில் இதைப்பயிரிட அனுமதி கொடுக்கமாட்டார்கள். ஆக கறுத்தக்கொழும்பான் அவுஸ்திரேலியாவில் வளரவேண்டுமென்றால் அதன் சுவையை மாற்றாத, ஆனால் ஏனைய பணப்பயிரின் பண்புகளை பேணக்கூடியதான மரபணுக்கலப்பைச் செய்யவேண்டும்.

தென் ஆபிரிக்காவில் நடைபெறும் ஒரு விவசாய கருத்தரங்குக்கு உடையார் செல்கிறார். தென் ஆபிரிக்காவின் காலநிலையும் கிட்டத்தட்ட ஆஸ்திரலிய காலநிலைக்கு ஒப்பானதால், அங்கு வெற்றியளித்திருக்கும் கறுத்தக்கொழும்பான் வகை மாமர மரபணுக்கலப்புகளை ஆஸ்திரேலியாவிலும் செய்துபார்க்கலாம் என்பது உடையாரின் திட்டம். இப்படி கருத்தரங்கில் பலரோடு கலந்து பேசிக்கொண்டிருக்கும்போதுதான் ஐயர் என்கின்ற பெண்ணை உடையார் சந்திக்கிறார். அந்தப்பெண்ணுக்கு பெயரில்தான் ஐயர் உண்டேயொழிய அவள் ஒரு சுத்தமான கிறிஸ்தவர். பல தலைமுறைகளுக்கு முன்னாலே குடியேறிய இந்திய வம்சாவளி. இந்தியத்தனம் அவளது நிறத்திலும் பெயரிலும்தான் எஞ்சியிருக்கிறதே ஒழிய அவளுக்கு எந்த இந்திய மொழியுமே தெரியவில்லை. தன் மூதாதையரின் கலாச்சார, வாழ்வு பற்றிய அறிவோ, தேடலோ கிடையாது. அவளுக்கு அடுத்த சந்ததியில், எஞ்சியிருக்கும் அந்த பெயரும் போய்விடும். அதற்கடுத்த சந்ததியில் பெயரோடு சேர்த்து நிறமும் போய்விடும்.

உடையார் அதகளித்துப்போனார்.

கறுத்தக்கொழும்பானை மரபணுக்கலப்பு செய்து ஆஸ்திரேலியாவில் வெற்றிகரமாக வளர்த்துக்காட்டவேணும் என்று நினைத்து தென் ஆபிரிக்கா வரைக்கும் வந்தவருக்கு, கறுத்தக்கொழும்பானைவிட பெரியதொரு பிரச்சனை புலம்பெயர்ந்த தமிழினத்துக்கு வரப்போகிறது என்பதை ஐயர் பெண்மூலம் அறியக்கிடைக்கிறது. அவுஸ்திரேலியாவில் பிறந்து வளர்ந்து இந்த நாட்டின் பண்புகளோடு வளரப்போகும் நம் தலைமுறை கறுத்தக்கொழும்பானின் சுவையை ஒத்த நம் மொழியின் வளத்தை இழக்காமல் பேணவேண்டுமே என்கின்ற எண்ணத்தில் உடையார், கறுத்தக்கொழும்பானை கிடப்பில் போட்டுவிட்டு இங்குள்ள இரண்டாம் தலைமுறைக்கு தமிழையும் தமிழ் பண்பாட்டையும் கொண்டுசேர்க்கவேணும் என்று உழைக்கத்தொடங்குகிறார்.

எனக்கு உடையாரை வாசித்து முடித்ததும் கொழும்பர் மாமியே ஞாபகத்துக்கு வந்தார். கொழும்பர் மாமியின் கதைகளில் எப்படி கொழும்பர் ஒரு முக்கிய பாத்திரம் ஏற்கிறாரோ அதுபோலத்தான் கந்தராஜாவுக்கு உடையார் என்று எண்ணத்தோன்றுகிறது. உடையார் வேறு யாருமில்லை. கந்தராஜாவேதான். கறுத்தக்கொழும்பானை அவுஸ்திரேலியாவில் வளர்க்கவேண்டும் என்கின்ற இச்சை உடையாரினுடையது அல்ல. அது கந்தராஜாவினுடையது. கந்தராஜா தான் கதைசொல்லியாக நின்றுகொண்டு தன்னுடைய இன்னொரு பாகத்தை உடையார் ஆக்கி அலைய விடுகிறார். கட்டுரை புனைவாவது இங்கேதான். கந்தராஜா ஒரு தேர்ந்த கதைசொல்லியாவதும் இங்கேதான்.

10479324_822538077815850_4205696404547269561_nஆ. சி. கந்தராஜா தாவரங்களின் மரபணுகளில் பல ஆராய்ச்சிகள் செய்பவர். ஒரு இயல்பான இயற்கையாக வளர்கின்ற மரங்களின் மரபணுக்களில் சிறு மாற்றங்களை ஏற்படுத்துவதன்மூலம் எப்படி அவற்றை பணப்பயிராக பயிரிட்டுக்கொள்ளலாம் என்கின்ற ஆராய்ச்சிகள். உதாரணமாக உயரமாக வளரும் பனைமரங்களை எப்படி குட்டையாக்கி, இலகுவில் பயன் எடுக்கத்தக்கவாறு மாற்றுவது என்பது. ஆண் பனைகளை குறைத்து பெண் பனைகளின் வளர்ச்சியை எப்படி அதிகரிப்பது. கறுத்தக்கொழும்பானை எப்படி பணப்பயிர் ஆக்குவது. இப்படி பல்வேறு ஆராய்ச்சிகள். சமயத்தில் ஆ. சி. கந்தராஜாவின் எழுத்தும் ஒரு மரபணுச் சேர்க்கையோ என்கின்ற எண்ணம் வருகிறது. ஆ. சி. கந்தராஜா ஒரு எழுத்து விஞ்ஞானி. சுவாரசியமாகவும் எழுதுகிறார். புத்தகம் திறந்தால் மூட முடியாது. இதில் சந்தேகம் இல்லை. ஆனால் எழுத்தில் ஒரு கட்டம் தாண்டியபின்னர் எல்லாமே எதிர்பார்த்தபடியே இடம்பெறுகிறது. எழுத்து என்பது மரபணுச் சோதனைமூலம் உருவாக்கி சொட்டுநீர் ஊற்றி, மூடி வளர்க்கும் பணப்பயிர் அல்ல. அதில் சுவையுமில்லை. எழுத்து என்பது காட்டுமரம்போல வளரவேண்டும். கந்தராஜாவிடமிருந்து கட்டுடைத்த காட்டுத்தனமான எழுத்தினை விரைவில் எதிர்பார்க்கிறேன்.

இந்தப்புத்தகத்தில் மூன்று புள்ளிகள் இருக்கின்றன. ஒன்று தன்னுடைய பயணங்களையும், செல்கின்ற நாடுகளின் உள்நாட்டு விடயங்களையும் பதிவு செய்யும் புள்ளி. இரண்டாவது உணவு பற்றிய ஆழமான வரலாற்று, விஞ்ஞான சமூக விளக்கங்களைக் கொடுப்பது. மூன்றாவது இந்த இரண்டையும் ஈழத்து வாழ்க்கையோடு கோர்த்து நம் மண்ணைப்பற்றியும், வாழ்க்கையைப் பற்றியும் இன்னல்களைப்பற்றியும் பதிவு செய்வது. கந்தராஜா இந்த டிசைனுக்குள் நின்றே மேற்கு ஜெர்மனியையும் எழுதுகிறார். கிழக்கு ஜேர்மனியையும் எழுதுகிறார். எதியோப்பியாவையும் எழுதுகிறார். தென் ஆபிரிக்காவையும் எழுதுகிறார்.

இந்த மூன்றிலே ஈழத்து வாழ்க்கை பற்றிய நனைவிடை தோய்தல்கள் மேலோட்டமான உணர்வுக் கிளர்ச்சிகளோடு எழுதப்படுவதால் அதன் தாக்கம் இரண்டாவது வாசிப்பின்போது அடிபட்டுப்போகிறது. ஒரு வாழ்க்கையை அதன் அகவுணர்வுகள் இன்றி எழுதும்போது அந்த எழுத்து அடிபட்டுப்போய்விடும். சும்மா இரண்டு பந்தியில் ஊர் அனுபவங்களை எழுதிவிட்டு அடுத்த பந்தியிலேயே கென்யாவுக்கு பறப்பதன் இலக்கிய ஆயுள் மிகக்குறைவு. எழுதினால் அது கீ.ராஜநாராயணனின் கோபல்லகிராமம், எஸ்.ராவின் நெடுங்குருதிபோல உள்ளே இறங்கி எழுதவேண்டும். அல்லது நாஞ்சில் நாடன்போல வாழ்க்கையை பட்டவர்த்தனமாக எழுதவேண்டும். ஊரைப்பிரிந்த உணர்ச்சி மேலீட்டால் ஒரு எழுத்தாளன் நனைவிடை தோய்ந்தால் அந்த எழுத்து மேம்போக்கான உணர்ச்சிகளையே கிளரும். நனைவிடை தோய்தல் நிச்சயமாக கந்தராஜாவின் புள்ளி அல்ல. அத்தோடு நனைவிடை தோய்வதற்கு நிறையப்பேர் இங்கே அலைகிறார்கள், அதற்கு கந்தராஜா தேவையில்லை என்பது என்னுடைய அபிப்பிராயம்.

இரண்டாவது புள்ளி பயண அனுபவம். கந்தராஜாவின் பயண அனுபவங்கள் சுவாரசியமானவை. அதில் அவர் புனைவுக்காக சேர்க்கின்ற விடயங்கள் இன்னமும் சுவாரசியமானவை. பயணக்கட்டுரையில் எதை எழுதவேண்டும் என்று அவர் தெரிந்து வைத்திருக்கிறார். வெறுமனே சுற்றுலா தலங்களுக்குச்சென்று அவைபற்றிய வரலாற்றையும், அவை அழகாக இருக்கின்றன, அங்கிருக்கும் பெண்கள் நன்றாக இருக்கிறார்கள் என்கின்ற மொன்னையான விடயங்கள் இல்லாமல், செல்லும் இடங்களில் அதிகநாட்கள் தங்கி, மனிதர்களோடு உறவாடி, வாழ்ந்த அனுபவத்தை எழுதுகிறார். அவருடைய பனிப்போர் காலத்து கிழக்கு மற்றும் மேற்கு ஜேர்மனி அனுபவங்கள் அற்புதமானவை. ஒரு பயணிக்கேயுரிய பண்போடு, கம்யூனிசம், முதலாளித்துவம் போன்ற கோட்பாடுகளில் எந்தச்சார்பும் எடுக்காமல் அவர் கண்ட மக்களின் வாழ்வை பதிவு செய்வதில் கந்தராஜா வெற்றியடைகிறார். எதியோப்பிய, எரித்திய பிரச்சனைகளையும், கென்யாவிலும் தென் ஆபிரிக்காவிலும் வாழ்கின்ற இந்திய வம்சாவளிகளின் பிரச்சனைகளையும் கந்தராஜா சொல்லுகின்றபோது நம்மாலும் அந்த ஊர்களுக்குச் சென்று மனிதர்களோடு உறவுகொள்ள முடிகிறது. எட்வேர்டையும், ஜேம்சையும், மன்ரீயையும் நமக்கும் தெரிகிறது. நிச்சயமாக பயணக் கட்டுரைகள் கந்தராஜாவின் புள்ளியேதான். கந்தராஜா அவருடைய ஜெர்மன் அனுபவங்களையோ, எதியோப்பிய அனுபவங்களையோ இன்னமும் ஆழமாக, தகவல்கள் சேர்த்து தனி நூலாக வெளியிடலாம்.

எனினும் ஆ.சி. கந்தராஜாவிடம் நான் எதிர்பார்ப்பது வேறு.

கறுத்தக் கொழும்பான், பனை, பழப்புளி, முருங்கக்காய் என்று அவர் ஒவ்வொரு தாவரங்கள் பற்றியும் விளக்கும்போது கொடுக்கின்ற தகவல்கள் மிரட்டுகின்றன. பனைக்குள்ளே இவ்வளவு விடயங்கள் இருக்கின்றனவா? பனையை வைத்துக்கொண்டு அதன் வரலாறு, வகைகள், பயன்கள், எந்தெந்த ஊரில் எப்படி வளர்க்கப்படுகின்றன, நம்மூரில் பனையின் வரலாறு என்ன, அதன் பயன்பாடு என்ன, இதன் மரபணுவில் என்னவகை மாற்றங்களை செய்தால் இதனை பணப்பயிராக்கலாம் என்று ஏராளமான தகவல்கள். முன்னர் ஒருமுறை, பொருண்மிய மேம்பாட்டு நிறுவனம் போட்டி ஒன்றை பத்திரிகைகளில் அறிவித்திருந்தது. இலகுவாக கள்ளிறக்குவதற்கு ஒரு வழியை கண்டுசொல்லும் விஞ்ஞானிக்கு பரிசாக இருபத்தையாயிரம் ரூபாய்கள் அறிவித்திருந்தார்கள். போட்டியில் கலந்துகொண்டிருந்தால் ஆ. சி. கந்தராஜா நிச்சயம் அந்தப்பணத்தை வென்றிருப்பார். கோழி முட்டை சைவமா மச்சமா என்ற தகவல்களும் முருங்கக்காய் பற்றிய தகவல்களும் அதகளம்.

எங்கள் ஊர் கோயில் கும்பாபிஷேகங்களின்போது தானியங்களை கலசங்களில் நிரப்பி கோபுரங்களில் பிரதிஷ்டை செய்வார்கள். பன்னிரு வருடங்களுக்குப் பின்னர் மீண்டும் கும்பாபிஷேகம் நடைபெறும்போது தானியங்கள் மீள நிரப்பப்படும். இது ஏன் என்பதற்கும் விளக்கம் இருக்கிறது. ஊரிலே வெள்ளப்பெருக்கோ அல்லது வேறேதும் கிருமித்தொற்று அழிவுகள் வந்து உணவுத்தானியங்கள் அழிந்துபோகும் தறுவாயில் உயரமான கோயில் கோபுரக்கலசத்தில் பாதுகாப்பாகவிருக்கும் தானியங்களைப் பயன்படுத்தி மீண்டும் பயிரை உருவாக்கலாம். இன்றைக்கு உலக நாடுகள் எல்லாவற்றிலும் germplasm conservation என்று சொல்லி இன்றைக்கு எல்லாத் தாவர விலங்கு இனங்களையும் ஆராய்ச்சி சாலைகளில் பாதுகாத்து வைத்திருக்கிறார்கள். அதுதான் இதுவும். பன்னிரண்டு வருடங்கள் கோபுரக்கலசத்தில் பாதுகாத்து வைக்கப்பட்டிருந்த வரகுத்தானியத்தை ஆராய்ச்சி செய்துபார்த்தால் அதற்கு இன்னமும் உயிர் இருப்பது தெரியவருகிறது. அதனை பயிரிடலாம் என்பது தெரியவருகிறது. காலனித்துவத்துக்கு முன்னதான நம் விஞ்ஞானம் வாழ்க்கையோடும் சூழலோடும் மிகவும் பின்னிப்பிணைந்திருக்கிறது என்பதை அறியும்போது ஒரு பரவசம் கிடைக்கிறது.

இங்கேதான் ஆ. சி. கந்தராஜா என்கின்ற எழுத்தாளர் தனித்துத் தெரிகிறார்.

ஆங்கிலத்திலே Popular Science என்கின்ற ஒரு வகை எழுத்து இருக்கிறது. விஞ்ஞானத்தகவல்களை அதன் வரலாற்றோடு சுவாரசியமாக கதைபோல சொல்லுவது. ஆங்காங்கே தேவையான அளவுகளில் புனைவு சேர்த்து, வாசகனை கட்டிப்போடும் இவ்வகை எழுத்துகளின் நோக்கம் விஞ்ஞானத்தினை மிக எளிமையாக சொல்லுவதுதான். நான் அறிய சைமன் சிங் இதிலே ஒரு விண்ணன். பௌதீகவியல் நிபுணரான சைமன் சிங் “Fermat’s Last Theorem” என்கின்ற கணித விதியின் வரலாறு பற்றி எழுதிய நூல் ஒன்று விஞ்ஞானப் புனைவுக்கட்டுரைகளில் உச்சம் கண்ட நூல். அவருடைய ஏனைய நூல்களான The Code Book, Big Bang போன்றவையும் அப்படியே. வோல்டர் ஐசக்சனுடைய சுயசரிதை நூல்களும் இந்த வகையிலேயேயே அடங்கும். Dava Sobel இன் எழுத்துக்களும் இந்தவகையே. Popular Science வகை எழுத்துக்களை தமிழில் சுஜாதா அங்கொன்றும் இங்கொன்றுமாக தொட்டும் தொடாமலும் எழுதியிருக்கிறார். எம்.ஜி.சுரேஷ் எழுதுகிறார். ஆனால் யாருமே ஒரு குறிப்பிட்ட விடயத்தை எடுத்து, அதன் வரலாற்றையும் விஞ்ஞான விளக்கங்களையும் அடிமுதல் நுனிவரை முழுமையாக சுவாரசியமாக எழுதவில்லை.

ஆ.சி. கந்தராஜா முயற்சி செய்தால், பனையை மட்டுமே வைத்து முந்நூறு பக்கங்களுக்கு ஒரு சுவாரசியமான புத்தகத்தை எழுதலாம். அப்படி எழுதினால் அது தமிழில் Popular Science நூல்களின் முன்னோடியாக உருவாகும் என்ற நம்பிக்கை எனக்கிருக்கிறது.

அதை காப்பாற்றும் பொறுப்பு கந்தராஜாவுக்கு இருக்கிறது.

Popular posts from this blog

பர்மா புத்தர் - சிறுகதை

பனம் பாத்தி மெதுவாக முளைவிட ஆரம்பித்திருந்தது .   அதிகாலைக் குளிருக்கு அத்தனை பனங்கொட்டைகளும் நிலவண்டுகளின் கூட்டம்போல ஒட்டிக்குறண்டியபடி தூங்கிக்கொண்டிருந்தன . பாத்தியில் இடையிடையே கோரைப்புற்கள் கிளம்பியிருந்தன . முந்தைய நாள் அடித்து ஊற்றிய மழையில் இருக்காழிகள் சில குப்புறப்புரண்டு சாம்பல் நரையேறிய மயிர்க்கற்றைகளோடு வானம் பார்த்தபடி அண்ணாந்து கிடக்க , சில கொட்டைகள் பாத்தியினின்று சளிந்து அடிவாரங்களில் சிதறிக்கிடந்தன . பூரானுக்காகப் பிளக்கப்பட்டிருந்த கொட்டைகள் எல்லாம் ஒரு பக்கம் குவிக்கப்பட்டிருந்தன .  கார்த்திகை விளக்கீட்டுக்குப் பாத்தியடியில் குத்திவிடப்பட்டிருந்த பந்தத்தடி பாதி எரிந்த நிலையில் கறுப்பு வெள்ளைத் தொப்பியோடு இன்னமும் எஞ்சி நின்றது .  

விளமீன் - சிறுகதை

அந்த ஒரு மீன் மாத்திரம் முழித்துக்கொண்டுத் தனித்துத் தெரிந்தது. அந்தக் குவியலில் கிடந்த மீதி அத்தனை மீன்களும் இளஞ்சிவப்பு நிறத்திலிருக்க இது மாத்திரம் வெள்ளைத்தோலில் மெலிதாகப் படர்ந்திருந்த தங்கநிறக் கண்ணாடிச் செதில்களோடும், சற்றே திறந்துகிடந்த இரத்தச்சிவப்பு செவுள்களோடும் குவிந்த கண்களோடும். சரசு மாமி ராசனிடம் திரும்பவும் சொல்லிப்பார்த்தார். இம்முறை சற்றுக் கெஞ்சலாக. “தம்பி. நான் சொல்லுறன். அது எங்கட ஊர் விளமீன்தான். விறைச்சுக்கொண்டு கிடக்கு. நல்ல உடன் மீன். வாங்கித்தாவன்.” “அரியண்டம் பண்ணாம வாங்கோம்மா. ஊர் விளமீனை ஊருக்குப்போகேக்க சாப்பிட்டுக்கொள்ளலாம்.” மாமி அந்த விளமீனையை பார்த்தபடி நின்றார். இனி எப்போது ஊருக்குப் போய், எப்போது விளமீன் வாங்கி. இதுவெல்லாம் நடக்கிற காரியமா? ராசன் வேகமாக அடுத்த கடையை நோக்கி நடக்க ஆரம்பித்திருந்தான். சந்தை முழுதும் ராசனும் ரூபிணாவும் நடந்த வேகத்துக்குச் சரசு மாமியால் ஈடு கொடுக்கமுடியவில்லை. சேலை நிலத்தில் அரிபட அவர் பின்னாலேயே இழுபட்டுக்கொண்டுபோனார். அந்த விளமீன் அவர் பின்னாலேயே இழுபட்டு வந்துகொண்டிருந்தது. “இந்த ஊர் சினப்பரும் விளமீன்மாதிரித்தான் இருக

"என் கொல்லைப்புறத்துக் காதலிகள்" பற்றி இளங்குமரன்

யாழ்ப்பாண மக்களின் வாழ்க்கை போருடனும் துயருடனும் கடந்தது என்று எல்லோரும் அறிந்ததுதான், கதைகளும் ஏராளம். ஆனால் ஜே.கே தனது சொந்த அனுபவங்களின் ஊடே காட்டும் தொண்ணூறுகளின் யாழ் வாழ்க்கை மிக அழகானது, இயல்பானது. இன்னல்கள் கடந்த ஜன்னல் காற்று அந்த வாழ்க்கை. அந்த வாழ்வுணர்வு யாழில் வாழ்ந்தவர்களுக்கு தெரியும்(வாழ்பவன் நான், சற்றுப் பின்னே பிறந்துவிட்டேன், சில அனுபவங்களை இழந்தும் விட்டேன்). • ஒவ்வொரு அத்தியாயமும் ஒவ்வொரு சுளை, ஒவ்வொரு சுளையும் தனிச்சுவை. அவ்வப்போது தூறும் குண்டுமழையில் நனையாமல் பதுங்கும் பங்கர்கள், பங்கருக்குள்ளும் பய(ம்)பக்தியுடன் வைக்கும் பிள்ளையார் படம். அவரின் தம்பி முருகனைக்காண என விழாக்கோலம் பூண்ட நல்லூர் போய், வள்ளி, தெய்வானையையே தேடித் திரியும் உள்ளூர் முருகன்கள். விளையாட்டுப்பொருட்கள், ஜஸ்கிரீம், கச்சான் என கடைக்கண் கடைத்தெருப்பக்கமே இருக்க சுற்றித்திரியும் சின்னன்கள். தெருவெல்லாம் தெய்வம்கொண்ட கோயில்கள், பரீட்சை பயத்தில் அத்தனை கோயில்களுக்கும் போடும் கும்பிடுகள். எந்தப் பக்கம் பந்து போட்டாலும் நேரே மட்டும் அடிக்க கற்றுக்கொடுக்கும் ஒழுங்கை கிரிக்கட்டுகள். பாடசாலைகளுக்கிட