சம்பவங்கள் நாளாந்தம், மணித்தியாலம், நிமிடம், கணம் என்று நடந்துகொண்டே இருக்கும். யாருக்கும் காத்திருக்காது. ஒருநாள் சிட்னி செல்லும் ஹியூம் நெடுஞ்சாலையில் பயணித்துக்கொண்டிருக்கும்போது கண் சொருக ஆரம்பிக்க, காரை அவசர லேன் பக்கம் நிறுத்தினேன். நண்பன் சிகரட் பற்றவைத்துக்கொண்டான். முகத்தை போத்தல் தண்ணீரால் அடித்து கழுவிவிட்டு, ஆயாசமாய் காரிலே சாய்ந்தபடி நெடுஞ்சாலையை அவதானித்துக்கொண்டிருந்தேன். வாகனங்கள், வேகமாக, மிகவேகமாக மணிக்கு 100, 110, 120, 140 கிலோமீட்டர்கள் என்று பறந்துகொண்டிருந்தன. சில வாகனங்களில் சிரிப்புகள், சிலதில் குழந்தைகள், ஒன்றில் வயோதிபர் ஒருவர் தொப்பியும் அணிந்தவாறு மனைவி சகிதம், இன்னொன்றில் நான்கு இளைஞர்கள் யன்னல் இறக்கி கூக்குரலிட்டுக்கொண்டு. இடையிடையே லாரிகள், கெண்டையினர்கள், பெருத்த உருவத்தில் ஓட்டுனர்கள். எல்லோருக்குமே பொதுவான ஒன்று இருந்தது. அது வேகம். அப்படி எங்கே போகிறார்கள். வேகக்கட்டுப்பாட்டை மீறி அப்படி ஓடுவதற்கு என்ன அவசரம்?