ஜெகனதும் பிரீடாவினதும் திருமணத் திருவிழாவின் முதல் நாள் அது. மணப்பெண்ணை மாப்பிள்ளை வீட்டாருக்கும் மாப்பிள்ளையைப் பெண் வீட்டாருக்கும் அறிமுகம் செய்யும் நிகழ்வு. க்வாஞ்சுலா என்று லுகாண்டா மொழியில் இதனை அழைக்கிறார்கள்.
பிரீடாவின் குடும்பத்தினர் பகாண்டா இனக்குழுவைச் சேர்ந்தவர்கள். அந்தக் குழு சார்ந்த பல விசயங்கள் காண்டா என்றே முடிவடைகின்றன. பகாண்டா. லுகாண்டா. புகாண்டா. முகாண்டா. கிகாண்டா. இதுபற்றிக் கொஞ்சம் தேடிப்பார்த்தேன். காண்டா என்பது அந்தக் குழுவைக் குறித்து நிற்கும் வேர்ச்சொல். அதற்கென தனி அர்த்தம் ஏதுமில்லை. ஆனால் அடையாளம் உண்டு. கம்பாலா, விக்டோரியா ஏரியை ஒட்டிய நிலப்பரப்புகளில் வாழும் ஒரு குறிப்பிட்ட மொழியைப் பேசும் அந்த இனக்குழுவின் வாழ்வியலைக் காண்டா என்று அடையாளப்படுத்தலாம். அந்தச் சொல்லின் முழு அர்த்தம் அதன் முன் எழுத்துகளால் தீர்மானிக்கப்படுகிறது. அதாவது லுகாண்டா என்பது காண்டாவின் மொழியைக் குறிக்கிறது. பகாண்டா என்றால் அதன் மக்கள் கூட்டம். முகாண்டா என்றால் அக்கூட்டத்தில் ஒருவரை விளிப்பது. புகாண்டா என்பது அந்த மக்களின் இராச்சியம். கிகாண்டா என்பது கலாசாரம் சம்பந்தமான விசயங்கள். இந்த மொழியில் பகுதியாக இருப்பது நம் தமிழ் மொழியில் விகுதியாக மாறுகிறது. உதாரணத்துக்குத் தமிழ் என்ற ஒற்றைச் சொல் மொழியாகித் தனித்து நின்று, பின் அதிலிருந்து தமிழர், தமிழன், தமிழச்சி, தமிழரசு எனப் பல சொற்கள் உருவாவதுபோல. சொன்னாற்போல, மேற்சொன்ன காண்டாக்களில் உகாண்டா என்ற சொல் அடங்காது. உண்மையில் உகாண்டா என்ற சொல்லே அந்த மொழியில் இல்லை. புகாண்டா என்ற தேசத்தின் பெயர் பிரித்தானியர்களின் காதில் உகாண்டா என்று விழுந்ததால் வந்த வினை அது. அகலக் காண்டாமிருகம் வெள்ளைக் காண்டாமிருகமானதுபோல புகாண்டா என்ற நாடே வெள்ளையர் உச்சரிப்பால் உகாண்டா ஆகிவிட்டது. யாழ்ப்பாணம் யாப்னா ஆகியதுபோல.
அன்றைய கொண்டாட்டம் செங்கா வீட்டில் ஒழுங்கமைக்கப்பட்டிருந்தது.
அப்பாவின் சகோதரியை அங்கே செங்கா என்று உறவு சொல்லி அழைக்கிறார்கள். நம்முடைய அத்தை, மாமிபோல. பகாண்டாவினுடைய பெண்களது வாழ்வில் செங்காவின் பங்கு என்பது மிகப்பெரியது. ஒரு பெண் பருவமெய்தியதும் செங்காவின் பொறுப்பின்கீழ் அவள் கொண்டுவரப்படுகிறாள். அவளுக்குப் பாலியல் கல்வியையும் கலவியின்போது ஆணை எப்படித் திருப்திப்படுத்துவது என்பதையும் சொல்லிக்கொடுப்பது அவர்தான். உடலுறவின்போது எப்படிச் சத்தம் போடவேண்டும். படுக்கைக்கருகில் எப்போதும் துடைப்பதற்காக ஒரு துணியை வைத்திருந்தால்தான் கலவி முடிந்ததும் ஆண் எழுந்து செல்லமாட்டான். மாதவிடாய் வந்தால் காலையிலேயே கணவனிடம் சொல்லி அவனை மனதளவின் தயார் செய்யவேண்டும். இப்படிப் படு டீடெயிலிங்காக அவருடைய அறிவுரைகள் இருக்கும். கணவன் வீட்டாரிடம் எப்படி நடந்துகொள்வது, வீட்டை எப்படிச் சுத்தமாக வைத்திருப்பது, சமைப்பது என்று பலதையும் அவர் அறிவுறுத்துவார். பலதை அவர் கவித்துவமாகவே விளிப்பார்.
பெண் என்பவள் ஒரு மனைவியாக, காமக் கிழத்தியாக, வீட்டைப் பராமரிப்பவளாக வாழும்போதே அவள் முழுமையடைகிறாள்.
இவளுக்கு இவன் பொருந்துவான் என்பதைத் தீர்மானிப்பதும் செங்காதான். ஒரு பெண்ணைக் காதலித்துத் திருமணம் முடிப்பதற்கு ஆண் அவரிடம்தான் சென்று அனுமதி பெற வேண்டும். அதிலும் உகண்டாவில் இன்னமும் பலதாரத் திருமணங்கள் வழக்கத்தில் இருக்கின்றது. ஆக, வருகிற ஆணுக்கு ஏலவே மனைவிகள் இருக்கும் பட்சத்தில் தன் வீட்டுப் பெண்ணையும் அவன் நன்றாகக் கவனிப்பானா என்பதை செங்காதான் ஆய்ந்து முடிவெடுக்கவேண்டும். கணவன் மனைவிக்கிடையே சண்டை மூளும்போது தீர்த்துவைப்பதும் அவர்தான். அவருடைய அறிவுரைகள் பலவும் அடங்கிப்போ என்ற வகையில்தான் இருக்கும்.
ஒரு பெண் ஏன் இன்னொரு பெண்ணிடம்போய் ஆணிடம் அடங்கிப்போ என்று சொல்லவேண்டும்?
ஆண்கள் பொதுவாக கலாசாரத்தைப் பயன்படுத்தித் தம் அதிகாரத்தையும் கௌரவத்தையும் வளர்த்துக்கொள்ள முயல்வார்கள். அவர்கள் சாமியைக் கும்பிடுகிறார்களோ இல்லையோ கோயில் தர்மகர்த்தா சபையில் பதவி வகிக்கவேண்டும் என்று விரும்புவார்கள். ஆண்களுக்கு அதிகாரம்தான் முதன்மையான போதை. கலாசாரம் அல்ல. தம் அதிகாரத்தைத் தக்கவைப்பதற்காகக் கலாச்சாரத்தை அவர்கள் பயன்படுத்திக்கொள்வர். ஆனால் கலாச்சாரங்களைத் தலைமுறை தலைமுறையாகக் கடத்துவது என்னவோ பெண்கள்தாம். மிக அடிப்படைவாத, சமூக நீதியற்ற, தம் இனத்தின் அடிமைத்துவத்துக்கே ஏதுவாகிப்போகக்கூடிய கலாச்சாரக்கூறுகளைக்கூடப் பெண்கள் எதிர்ப்பு ஏதுமின்றி சுமப்பதும் அவற்றின்கண் பெருமை கொள்வதும் அவற்றை ஆக்ரோசமாகப் பின்பற்றுவதும் மனித சமூகத்தின் மிக நுணுக்கமான பண்புகளுள் ஒன்று. ஆயிரமாயிரம் ஆண்டுகளாக பெண்கள்மீது ஏற்றிவிடப்பட்ட சிந்தனையினதும் வன்முறையினதும் விளைவாக இது இருக்கக்கூடும். செங்காவும் அதனைத்தான் ஒருவகையில் இங்கே செய்கிறார். நம்மூரில் பல அம்மாமாரும் இதனையே செய்கிறார்கள். எப்போதாவது இந்தச் சங்கிலியை உடைத்து வெளிவரும் பெண்களையும் சமூகம் பந்தாடி விடுகிறது. அதனால் தவறு என்று தெரிந்தும் பெரும்பான்மையானவர்கள் இந்த status quoவை காப்பாற்றிக்கொள்ள முயல்கிறார்கள். இந்தப் பயத்தைக் கலாச்சாரத்தோடு மூளைக்குள் ஏற்றி வைப்பதன்மூலம் ஆண்கள் என்றென்றைக்கும் பிழைத்துக்கொண்டுவிடுகிறார்கள்.
செங்காகள் பற்றிய சமீபத்திய சேதி ஒன்று. உகாண்டாவில் எச்.ஐ.வி தொற்றின் பாதிப்பு மிக மிக அதிகம். இங்குள்ள வயது வந்தவர்களுள் ஆறு வீதமானவருக்குத் தொற்று இருக்கிறது. அதாவது கிட்டத்தட்ட பதினேழு பேரில் ஒருவருக்கு. கம்பாலாவில் அது இன்னமும் அதிகம். அதிலும் இளம் பெண்களிடையே தொற்றின் வீதம் மேலும் கூடுதலாக இருக்கிறது. இதனால் பாலியல் கல்வி, பாதுகாப்பான உடலுறவு தொடர்பான விழிப்புணர்வு உரையாடல்கள் உகண்டாவின் பொதுவெளியில் பரவலாக இப்போது பேசப்படுகிறது. பல அமைப்புகள் செங்காக்களைத் தொடர்புகொண்டு அவர்களுக்கு அறிவூட்டும் செயற்திட்டங்களைச் செய்கிறார்கள். அவர்களினூடாக இளம் பெண்களிடையே விழிப்புணர்வைத் தூண்டலாம் என்று நம்புகிறார்கள். இன்றெல்லாம் செங்காகள் மணமகனின் எச்.ஐ.வி சான்றிதழைப் பார்த்துவிட்டே அவனை மணமுடித்துக்கொடுக்க ஒப்புதல் அளிக்கிறார்களாம்.
ஆனால் ஆக்சிடண்ட் நடந்த பிறகு பிரேக் போட்டு என்ன பயன்?
எல்லாவற்றையும் ஜெகன்தான் எனக்குச் சொன்னான். சென்ற வருடம் மெல்பேர்னில் எங்கள் வீட்டுக்கு வந்திருந்தபோது அதிகாலை மூன்று மணிவரை இதுபற்றித்தான் பேசிக்கொண்டிருந்தோம். உகண்டா சென்றதும் மறுபடியும் இக்கதைகளைச் சொன்னான். நண்பர்கள் அனைவருக்கும் தனித்தனியாகவும் சொல்லியிருக்கிறான். கதைகளை எழுதுவது என் இயல்பு எனில் அவற்றைச் சொல்லிக்கொண்டிருப்பது அவன் இயல்பு. சிறு வயதிலிருந்தே கதை சொல்வதற்கு அவனுக்கு அலுப்பே அடிப்பதில்லை.
எங்கடை ஊரில எங்ஜினியர், டொக்டரா எண்டு பாக்கிறமாதிரி இங்கை பெட்டையள் எச்.ஐ.வீ நெகடிவ்வா எண்டுதான் பார்ப்பாளவை.
அப்ப நீயும் சேர்ட்டிபிகட் எடுத்து வச்சிருக்கிறியா?
பக்கின் ஹெல் மச்சான். கிழமைக்குக் கிழமை எடுக்கிறனான். இல்லாட்டி சோபாலதான் கிடக்கோணும்.
சடக்கென்று நான் அமர்ந்திருந்த சோபாவிலிருந்து எழுந்தேன். அது ஏன் இத்தனை ஊத்தையாக இருக்கிறது என்று கேட்டதற்கு செக்கண்ட் ஹாண்ட் தளபாடம் என்று முன்னர் அவன் சொல்லியிருந்தான். இவனொரு உகண்டன் ஜே.டி.வான்ஸாக இருப்பானோ என்ற சந்தேகம் இப்போது யோசிக்கையில் வந்துபோனது.
செங்கா வீட்டுக்குக் கிளம்புவதற்காகக் காலையிலேயே மாப்பிள்ளை வீட்டார் தயாராகிவிட்டிருந்தார்கள்.
ஆண்கள் எல்லோரும் உகண்டாவின் பாரம்பரிய உடையான கன்சுவை அணிந்திருந்தோம். பெண்கள் வண்ண வண்ணச் சட்டைகளை அணிந்திருந்தார்கள். எங்கள் ஊர் அன்ரிமார்களும்தான். நான் சொல்லும் அன்ரிமார்கள் பலருக்கு என் வயதுதான் இருக்கும். சிலர் என்னைவிட இளையவர்கள். ஆனால் என்னவோ தெரியவில்லை, நம் கண்களுக்குத் தாம் என்றுமே பதினாறு வயது என்ற எண்ணம்போல. நாற்பது வயதினர் எல்லோருமே அன்ரி, அங்கிளாகத் தெரிகிறார்கள். மாப்பிள்ளை வீட்டுப் பெண்கள் எல்லோரும் பொங்கிய கைகள் உள்ள சட்டைகளோடும் அகலமான இடுப்புப் பட்டிகளோடும் ஒவ்வொரு வண்ணத்தில் வந்து நிற்பதைப் பார்க்கவே குதூகலமாக இருந்தது.
ஜெகன் வீட்டார் என்று ஒரு நூற்றைம்பது பேர் வந்திருந்தோம். வெளி நாடுகளிலிருந்து வந்த பல்லினத்தவரும் அவனுடைய உகண்டா அலுவலக நண்பர்களும்தான் இந்தத் தானாச் சேர்ந்த கூட்டம். எல்லோருமே வாகனங்களில் புறப்பட்டு செங்கா வீட்டுக்கருகே ஒரு ஹோட்டலில் இறங்கினோம். பின்னர் நம்மிலிருந்து ஒரு குழு செங்கா வீட்டுக்குச் சென்று பெண் கேட்டு வருவதற்கு அனுமதி பெறவேண்டும். செங்கா சம்மதித்த பின்னர் அவர்கள் வந்து ஏனையவர்களை அழைத்துச்செல்வார்கள். இந்தச் சடங்குக்கு ஒரு மணி நேரம் பிடித்தது. அதற்குள் பல பியர் போத்தல்களும் கொக் டெயில்களும் ஹோட்டலில் தீர்ந்துவிட்டன. நாங்கள் நண்பர்கள் ஒன்றாகக்கூடி பழைய பாடசாலை விசயங்களைப் பேசினோம். வழமையாக ஒன்று கூடல்களில் பேசுகின்ற, பேசப் பேசச் சலிக்காத பழைய ஞாபகங்கள். எல்லோருக்குமே தனித்தனியான நினைவுகள் மற்றவரைப்பற்றி இருந்தன. முப்பத்தைந்து வருடங்கள் கழித்தும் ஒருவர் உங்களது பிரத்தியேகமான சில விசயங்களை நினைவுபடுத்தி வைத்திருப்பது என்பது ஆச்சரியம் கொடுக்கக்கூடியது. நானும் ஜெகனும் கொண்டையில் தாழம்பூ பாடலைப் பாடி ஆடி பிரின்சியிடம் ஏச்சு வாங்கிக்கொண்டது மறுபடியும் நினைவுகூரப்பட்டது. அங்கிருந்து சுண்டுக்குளி போனோம். பின்னர் வேம்படி. அப்புறம் கொன்வெண்ட். இந்து மகளிர். எனக்குச் சில பெயர்கள் மாத்திரமே ஞாபகமிருந்தது. ஜெகன் மொத்த டாப்பையும் மனப்பாடம் செய்து வைத்திருந்தான். ராதிகாவின் இரண்டாவது மகன் எந்தப் பாடசாலைக்குப் போகிறான் என்பதுகூட அவனுக்குத் தெரிந்திருந்தது. எனக்கு ராதிகாவின் முகமே ஞாபகம் இல்லை என்றேன்.
உன்னைப்பத்தியும் கேப்பாள் மச்சான். நீ எழுதுறதும் தெரியும். ஆனால் வாசிக்கத்தான் நேரம் கிடைக்கிறதில்லையாம். எல்லாரும் இப்ப பிசிதானே. அவளிண்ட படம் இருக்கு. பார்க்கப்போறியா?
நான் வேண்டாமென்று நைல் பியரின் இன்னொரு மிடறினை அருந்தினேன். ராதிகா என்பது தூங்கி எழும்போது மறக்கவேண்டிய ஒரு பெருங் கனவு. கனவுகள் எப்போதும் பதியப்படலாகாது என்றேன். உரையாடல் நம்முடைய உயர்தர நாள்களை நோக்கி நீண்டது. லோகுலன் நான் பூவுக்குள் ஒளிந்திருக்கும் கனிக்கூட்டம் அதிசயம் பாட்டைப் பாடினேன் என்று ஞாபகப்படுத்தினான். பாஸ்தியனில் பியர் அடித்துக்கொண்டிருக்கையில் அமலசீலன் வாத்தி வந்துவிட்டதைப் பற்றி நூறாவது முறையாக ஜெகன் சொன்னான். நானும் ஜெகனும் வி.ஐ.பி படத்தை அடுத்தடுத்து தொடர்ச்சியாக இரண்டு ஷோக்கள் செல்வாவில் பார்த்ததைப்பற்றிப் பேசினோம். பழைய வி.ஐ.பி. அப்பாஸ், பிரபுதேவா நடித்தது. சிம்ரன் புயல் முதன்முதலாக யாழ்ப்பாணத்தில் மையம்கொண்ட நாள் அது. நிஜமாகவே அன்று மழை பெய்தது. காலையில் முதல் ஷோ பார்த்துவிட்டு, மின்னல் ஒரு கோடி பாட்டு கொடுத்த தாக்கத்தில் மறுபடியும் குமரனின் பிசிக்ஸை கட் பண்ணி அடுத்து ஷோவுக்குப் போயிருந்தோம். பேச்சு அங்கிருந்து மயூவுக்குத் தாவியது. பின்னர் லௌமீ, தனேஷ், மகிந்தா என்று எல்லோருடைய கதைகளும் எழுந்தன. தயாளனும் ஜெகனும் மட்டக்களப்பில் ஒரே ஹொஸ்டல் அறையில் தங்கியிருந்த நாள்கள் பேசப்பட்டன. ஜெகன் பல நாவல்களைத் தன் வசம் தேக்கி வைத்திருப்பவன். சென்ற அத்தியாயத்தில் வருகின்ற கிபேட்டேயின் வாழ்வு அவனுடையது. அவன் பயணங்களைத் தொடர்ந்து செய்வது மாத்திரமின்றி, போகுமிடங்களிலெல்லாம் மனிதர்களைத் தேடி அடைந்து அவர்களை நட்பாக்கியும் கொள்பவன். தேவைகள் கருதி உருவாக்கும் நட்புகள் அல்ல அவை. அவன் அவர்களது கதைகளைக் காது கொடுத்துக் கேட்பவன். உலகெலாமிருந்து நண்பர்கள் அவன் திருமணத்துக்குத் தேடி வந்ததன் காரணம் அதுதான். ஒரு ஜேர்மன்காரி வந்த நாளிலிருந்து ஜெகனைப்பற்றிச் சொல்லிக்கொண்டேயிருந்தாள். ரம் உள்ளே போனால் அழுவாள். டக்கீலாவும் சேர்ந்தால் தேம்புவாள். அதைப்பார்க்க நண்பர்களுக்கெல்லாம் புகை எழுந்து முகில் மூட்டும். இத்தனைக்கும் அவள் ஜெகன் ஜேர்மனியில் படிக்கப்போன பல்கலைக்கழகத்தில் புதிய மாணவர்களை ஒருங்கிணைக்கும் பணியில் இருந்தவள். முதன் முதலாக ஒரு நாட்டுக்குப் படிக்கப்போன இடத்தில், அங்கு பணிபுரியும் மாணவ ஒருங்கிணைப்பாளரையே நட்பாக்கி, அவளைத் தன் திருமணத்துக்கும் வரவைத்து, தேம்பித் தேம்பி அழவும் வைக்க ஜெகன் ஒருவனால்தான் முடியும். ஜெகனுக்கு நாமெல்லோருமே நண்பர்கள். ஆனால் ஒவ்வொருவருக்கும் அவன் ஒரு பிரத்தியேக நண்பனாக இருந்தான். This is not a joke. குட்டி இளவரசன் உதாரணம்தான் மறுபடியும் வருகிறது. ஒருத்தர் ஒரு ரோசாவைப் பழக்கப்படுத்தலாம். ஆனால் ஜெகன் ஒரு தோட்டத்தையே பழக்கப்படுத்தியிருந்தான். அந்தத் தோட்டமே அவன் திருமணத்துக்கு வந்து அவனை வாழ்த்திக் கொண்டாடியது. அந்த வகையில் ஜெகனும் ஒரு குட்டி இளவரசன்தான். நான் பிரீடாவுக்கும் ஜெகனுக்கும் அந்தப் புத்தகத்தைத்தான் திருமணப் பரிசாகவும் கொடுத்திருந்தேன். ஆனால் அவன் வாசிப்பானா என்பது சந்தேகமே. காலையிலிருந்து மாலைவரை ரோசாக்களைப் பழக்கப்படுத்திக்கொண்டிருப்பவனுக்குக் குட்டி இளவரசன் வாசிக்க நேரமேது?
செங்கா வீட்டுக்கு நாங்கள் போகும்போது நேரம் பதினொன்றாகியிருந்தது.
அது கம்பாலா நகர மையத்துக்கு வெளியே வடக்கே பல மைல்கள் தூரத்தில் அமைந்திருந்த ஒரு புற நகர்ப்பகுதி. நகரம் விழுங்கிக்கொண்டிருந்த கிராமம். அதன் கிறவல் வீதிகளிலிருந்து எழுந்த புழுதிகள் படிந்து வீடுகள் அத்தனையும் பழுத்துப்போயிருந்தன. எல்லாமே குட்டிக் குட்டி வீடுகள். இடை நடுவே குப்பைக் கூழங்கள். சேறு ஓடும் சிற்றோடைகள். கட்டாக்காலி கால்நடைகள். நாய்கள். மனிதர்கள். குழந்தைகள் பலவும் அளவற்ற சட்டைகளை அணிந்திருந்தன. அத்தனையும் சர்வதேச பிராண்டுகள். ஒரு பக்கம் படித்த வசதியான மக்கள் வாழும் கம்பாலாவின் நகர்ப்பகுதி. இன்னொரு புறம் அதற்கு எதிர்மறையான, ஏழ்மை சூழ்கின்ற, நகரம் தின்று ஏப்பம் விடுகின்ற புறநகர்ப்பகுதிகள். அப்புறம் கிராமங்கள். கூடவே, இவை எதற்கும் சம்பந்தமேயில்லை என்று வாழுகின்ற காடும் நீர் நிலைகளும் வன விலங்குகளும். உகண்டாவில் நான் பார்த்த வாழ்வியல் இது. எல்லாமே ஏதோ ஒரு வகையில் ஒன்றோடு ஒன்று பின்னிப் பிணைந்திருந்தன. ஒவ்வொன்றும் மற்றையதை விழுங்கியே பிழைக்கவும் முடியும் என்ற சூழல் அங்கு வந்துவிட்டது. இயற்கை சூழ் நிலத்தையும் மக்களையும் காலனித்துவமும் தற்போதைய உலகமயமாகிய நவ முதலாளித்துவத்துவமும் எப்படித் தின்று தீர்க்கின்றன என்பதற்கு உகண்டா இன்னொரு உதாரணம். செருப்பிலேறிய முள்ளைப்போல மறுபடியும் மறுபடியும் இவை இந்தப் பயணம் முழுதும் என்னை நெருடிக்கொண்டேயிருந்தன.
நம் பயணம் செய்த வாகனத்தை ஆயுதம் தரித்த சீருடையினர் மறித்தனர்.
அவர்கள் வேறு யாருமல்ல. திருமண வீட்டைக் காவல் காக்க வந்த படையினர். அந்தப் பகுதியிலேயே பிரீடாவின் செங்கா வீடு பெரிதாக மாளிகையாட்டம் இருந்தது. நாலா புறமும் மதில்கள் அமைத்து அவற்றுக்குமேலே முட்கம்பி வேலிகள் சுற்றப்பட்டிருந்தன. காவல் படையினர் ஏ.கே துவக்குகளை ஏந்தியிருந்தனர். முகத்துக்கு முகமூடி வேறு. அதற்கான காரணம் இறங்கியவுடனேயே புரிந்தது. மொத்தக் கிராமமுமே திருமணத்தை வேடிக்கை பார்க்க வந்திருந்ததால் சனக்கூட்டத்தைக் கட்டுப்படுத்தத்தான் அந்தக் காவல். குழந்தைகள், சிறுவர்கள், பெண்கள் என்று வாயிலில் கூட்டம் அம்மியது. வீதியால் சென்ற மோட்டர் சைக்கிள்களும் நின்று வேடிக்கை பார்த்தன. காவலர்கள் அவர்களை விரட்டி, சற்றுத் தள்ளி நிற்கச் சொன்னார்கள்.
வாசலில் வைத்து எம்மை ஆண்கள் தனியாகவும் பெண்கள் தனியாகவும் பிரித்தார்கள். ஆண்கள் எல்லோருக்கும் பூக்கள் குத்தப்பட்டன. பெண்களுக்கும் பூக்கள் கொடுத்தார்கள் என்று நினைக்கிறேன். நாம் உள்ளே நுழைகையில் மொத்தக் கூட்டமுமே குலவை இசைத்தது. குலவை இசைப்பது என்பது உகாண்டர்களின் அனிச்சைச் செயல். நாம் கைதட்டுவதுபோல. எல்லோருமே ஏகத்தொனியில் கலகல கலகல என்று குலவை போடுவார்கள். அவர்கள் போட்டுக்கொண்டிருக்கும்போதே பாடல் ஆரம்பித்தது.
சாரட்டு வண்டியில் சீரொட்டொளியில ஓரந்தெரிஞ்சது உன் முகம்.
நான் ஒரு பாட்டுப் பைத்தியம் என்று சிறுவயதிலிருந்தே ஜெகனுக்குத் தெரியுமாதலால் ஏற்கனவே திருமணத்துக்கு இசைக்கக்கூடிய தாளம் போடவைக்கும் பாட்டுகளை என்னிடம் கேட்டு வாங்கியிருந்தான். நிகழ்வு முழுதும் ஒரு உள்ளூர் உகண்டாப் பாடலும் ஒரு தமிழ்ப் பாடலுமென மாறி மாறி இசைத்தார்கள். அண்மையில் வந்த சிங்குச்சா, ரஞ்சிதமே முதற்கொண்டு மாஸ்டர், அரபிக்குத்து, பேரு வச்சாலும் என்று ஒரு லிஸ்டை அவனிடம் கொடுத்திருந்தேன். மெலடிக்கென்று இன்னொரு லிஸ்டும் தயார் செய்திருந்தேன். அவங்களோட ஆட்டத்துக்கு அது வேலைக்காகாது என்று சொல்லிவிட்டான். அது எவ்வளவு உண்மை என்பது உள்ளே போனதும்தான் தெரிந்தது.
உள்ளே வீட்டு முற்றத்தில் இரண்டு கொட்டில்கள் போட்டிருந்தார்கள். நடுவிலே வட்டமாக ஒரு வெளியை விட்டு மறு பக்கம் மண மேடை அமைக்கப்பட்டிருந்தது. ஒரு கொட்டிலில் பெண் வீட்டார் உட்கார்ந்திருந்தார்கள். மற்றக் கொட்டிலில் மாப்பிள்ளை வீட்டார். மாப்பிள்ளை வீட்டாருக்கு ஒருவர், பெண் வீட்டாருக்கு ஒருவர், பொதுவாக ஒருவர் என்று மூன்று நகைச்சுவை அறிவிப்பாளர்கள் அழைக்கப்பட்டிருந்தார்கள். அவர்களின் வேலையே ஒரு தரப்பின் காலை மற்றத் தரப்பு வாருவதுதான். முக்கால்வாசி நேரம் லுகாண்டாவில் பேசினார்கள். அவ்வப்போது ஆங்கிலம் வந்தது. அவர்களது நிகழ்வு ஒரு வில்லுப்பாட்டுபோலப் போனது. அந்தப் பக்கமிருந்து மாப்பிள்ளையை நக்கலடித்துப் பேசினால் நம்மாள் பெண் வீட்டைத் திட்டுவார். இப்படி மாறி மாறி பேச்சு போய்க்கொண்டிருந்தது. திருமண வீடுகளில் ஐயரும் நாதசுரமும் மாறி மாறி அழுவதைப் பார்த்துப் பழகிய நமக்கு இந்த நகைச்சுவைக் கொண்டாட்டமே புதிதாக இருந்தது.
அவரவர் நாட்டுத் தேசிய கீதங்களோடு கொண்டாட்டத்தை ஆரம்பித்தார்கள். ஶ்ரீ லங்கா தேசிய கீதம் தமிழில் இசைக்கப்பட்டது. வேறு கீதம் எதையும் கொடுக்கலாமா என்று யோசித்தோம். வேண்டாம், என் வேலை போயிடும் மச்சி என்று ஜெகன் சொன்னான். அதன் பிறகு தொடங்கியது ஆட்டம். தாள வாத்தியங்கள் முழங்கின. நாலா பக்கங்களிலிருந்தும் குலவை பறந்தது. பெண்கள் இடுப்பை எறிந்தார்கள். ஆண்கள் நெளிந்தார்கள். ஒவ்வொரு பாடலுக்கு ஒவ்வொரு குழுவென ஒத்திகை பண்ணி நடனங்களை ஆடினார்கள். எல்லாமே பிரீடாவின் உறவினர்களும் நண்பர்களும்தான். உகண்டர்களின் இரத்தத்திலேயே தாளம் இருக்கிறது. எங்களுக்கு காக்டெயில் கொண்டுவந்து கொடுத்த பெண்கூட தாளத்தோடுதான் நடந்தாள். பாத்ரூம் போக எழுந்துபோன ஆள்கள்கூட ஆடிக்கொண்டே போனதைப் பார்த்தேன். உள்ளேயும் ஆடிக்கொண்டே இருந்திருப்பார்கள் என்பது நான் ஒருமுறை அவசரமாகப் போனபோது புரிந்தது. வயோதிபர்களும் ஆடினார்கள். குழந்தைகளும் ஆடினார்கள். மற்றவர் எப்படி ஆடுகிறார் என்றோ, இப்படி ஆடுகிறாரே என்றோ அவர்கள் எவரையும் எடை போடவில்லை. ஆனால் மாப்பிள்ளை பகுதி மட்டும் அம்மிக்கொண்டு நின்றது. பனங்கொட்டை இப்படியான கணங்களில் அசெம்பிளியில் பாடசாலை கீதம் பாடுகிறார்கள் என்ற நினைப்பில் உறைந்துபோய் நின்றுவிடுகிறது. அல்லது தன்னை ஆடச்சொல்லப்போகிறார்களே என்ற பயத்தில் இடத்தைக் காலி பண்ணுகிறது. எப்போதுமே இறுக்கமான மனதோடும் உடல் மொழியோடும் நாம் வளர்ந்துவிட்டோம். மற்றவர் என்ன நினைப்பாரோ என்ற அச்சத்தில் நம் உடல் இயற்கையிலேயே பொது வெளியில் ஒடுங்கிவிடுகிறது. கண்கள் தாழ்கின்றன. அந்தக் கழிவிரக்கத்திலோ என்னவோ, யார் எவ்வளவு நன்றாக ஆடினாலும் நமக்குப் பிடிப்பதுமில்லை. என்ன விசர்க்கூத்து ஆடுது என்று உள்ளூர நினைத்துக்கொள்கிறோம். மற்றவரை நக்கலடித்து மட்டம் படுத்துவதில் அப்படி ஒரு சுகம் நமக்கு. அந்தச் சிறு வயதுப் பழக்கம் சுடுகாடுவரைக்கும் பனங்கொட்டைக்கு எத்தனை நாடுகள் பயணித்தாலும் இலகுவில் மாறிவிடுவதில்லை. ஆயினும் நேரம் போகப் போக, உகண்டர்களின் தொடர்ச்சியான ஆட்டம் நம்மையும் தொற்றிக்கொண்டிருக்கவேண்டும். ஒருவர் ஆட ஆரம்பிக்க, மற்றவர் அவரைப் பார்த்துத் தொடர, ஆளாளுக்கு ஆடு களத்துக்குள் இறங்க ஆரம்பித்தார்கள். அதுவும் சிக்கல்தான். நமமாள் உள்ளே இறங்கினால் கதை அவ்வளவுதான். மனதில் மைக்கல் ஜாக்சன் நினைப்பும் எல்லோரும் தம்மையே பார்த்து இரசிக்கிறார்கள் என்ற எண்ணமும் மண்டைக்குள் இறங்கிவிடுவதால், பாட்டு நின்றாலும் தலைவர் தொடர்ந்தும் ஆடிக்கொண்டிருப்பார். நாம்தான் அவரை இழுத்துச்சென்று உட்கார வைக்கவேண்டும். வைத்தோம்.
அடுத்து பிரீடாவின் செங்கா அரங்குக்கு வருகிறார்.
மனிசிக்கு குறைந்தது எழுபது வயதேனும் இருக்கலாம். பொன்னிறத்தில் கை பொங்கிய சட்டை, இடுப்புப்பட்டி, குளிர் கண்ணாடி என்று மனிசி கலக்கியது. அவரது ஆட்டத்தில் அற்புதமான நளினம் இருந்தது. கூட்டத்தில் ஒளிந்திருக்கும் மணமகனை அவர் இப்போது தேடிக் கண்டுபிடிக்கவேண்டும். மனிசி ஆடி ஆடி நம்மிடையே வந்தது. நம்மில் பலரை உருப்படாதவர்கள் என்று தட்டிக் கழித்தது. மாப்பிள்ளைத் தோழனான தயாளனைப் பார்த்துக் கண்ணடிக்க, அவன் வெலவெலத்துப்போனான். பின்னர் மனிசி ஜெகனை அடையாளம் கண்டுகொண்டு எக்காளமிட்டுச் சிரிக்க, குலவைச் சத்தம் ஊரெங்கும் பறந்தது. செங்கா ஜெகனைக் கைப்பிடித்து அழைத்து அரங்கு மையத்துக்குச் சென்றார். அங்கே இருவரும் சேர்ந்து ஆட ஆரம்பித்தார்கள். செங்காவுக்கு ஜெகனைப் பிடித்துக்கொண்டுவிட்டது என்று நான் முணுமுணுத்தேன். ஜெகன் நமக்கு அருளியிருந்த செங்கா புராணம் முழுதும் ஞாபகத்துக்கு வந்தது. அப்போது அருகில் உட்கார்ந்திருந்த லௌமி ஒரு ஜோக் சொன்னான்.
சுஜாதாவின் மெக்சிக்கன் சலவைக்காரி தோற்றுவிடுவாள். வேண்டாம்.
செங்காவுக்கு ஜெகனைப் பிடித்துக்கொண்டாலும் பிரீடாவின் ஏனைய குடும்ப அங்கத்தவர்களுக்கு அவனைப் பிடிக்கவேண்டுமே? அவனுடைய குடும்பம் எத்தனை செல்வாக்கானது என்று அவர்களுக்குத் தெரிய வேண்டாமா? அதனால் ஜெகன் வீட்டு ஆண்கள் அனைவரும் தாம் எவ்வளவு பெரிய கைகள் என்பதைக் காட்ட ஆளுக்கொரு படத்தைத் தூக்கிக் காட்டினார்கள். எல்லாமே சட்டமிடப்பட்ட புகைப்படங்கள். ஒன்றில் உகாண்டா அரசரின் முகமிருந்தது. இன்னொன்றில் நகர மேயரின் முகம். இன்னொன்றில் சனாதிபதி. மற்றவர் கையில் இராணி புன்னகைத்துக்கொண்டிருந்தார். இவர்கள் எல்லோரும் மாப்பிள்ளை தரப்பிலிருந்து திருமணத்துக்கு வந்திருக்கிறார்களாம். ஒருவர் மாம்பா பாம்பினைப் படமெடுத்துப் பிடித்தார். எதற்காகப் பாம்பைக் காட்டுகிறார்கள் என்று அருகிலிருந்த உகண்டா பெண்ணிடம் கேட்டேன். அவள் தெரியவில்லை என்று சிரித்தாள். ஜெகனின் மாமா என்று நினைக்கிறேன். தம்மிடம் நிறைய மாடுகள் இருக்கிறதென்று ஒரு சட்டத்தில் மாட்டைப் படமெடுத்துக் காட்டிக்கொண்டு நின்றார். ஏதோ உலகக்கிண்ணத்தையே தூக்கி நிற்கும் அர்ஜூன ரணதுங்க மாதிரி அவர் அந்தத் தருணத்தைக் கொண்டாடினார். யாழ்ப்பாணத்தில் ஒரு கலியாண வீடு என்றால் மாப்பிள்ளை பகுதி காட்டுகிற சீன்களோடு இதனை ஒப்பிட்டபோது சிரிப்புச் சிரிப்பாக வந்தது.
இவற்றையெல்லாம் சாத்தியமாக்கிய ஜெகனுக்கு அன்பும் நன்றியும்.
பாம்பையும் மாட்டையும் இராணியையும் பார்த்து மாப்பிள்ளை வீட்டின் செல்வாக்கை அறிந்து வியந்த பெண் வீட்டார், ஜெகன் ஒரு பெரிய கைதான் என்பதை ஒப்புக்கொள்கிறார்கள். இந்த அட்டகாசங்கள் நிகழ்ந்து முடிவதற்குள் நேரம் இரண்டைத் தாண்டியிருந்தது. நான்கு காக்டெயில்கள்வேறு வெறும் வயிற்றுக்குள் இறங்கிப் பிசைய ஆரம்பித்தன. பசிக்கிறது என்று இரண்டு வாழைப்பழங்களை எடுத்து உரிப்போம் என்று நினைத்த கணத்தில் திடீரென்று, குலவைச் சத்தம் கூரையைக் கிழித்தது. என்னவாக இருக்குமென்று நிமிர்ந்தோம்.
வேறென்ன? யாழ்ப்பாணம், கொழும்பு, மியான்மர், ஜேர்மனி, கனடா, அமெரிக்கா, இங்கிலாந்து என அத்தனை ஊர்களிலுமிருந்தும் பல பெண்கள் வீசிய வலைகளுக்குள் சிக்காத, எழுநூற்று இருபது சாதகப் பொருத்தங்களுக்கும் மடங்காத, இனி இவன் திருமணமே முடிக்கமாட்டான் என்று நம்மை எல்லாம் நம்ப வைத்த, ஜெகன் என்ற காண்டா ஈற்றில் கவிழ்ந்த காரிகை. லுகண்டா மொழியில் அவளைச் சொல்வதானால் அவள் ஒரு ஒமுகாசி ஒமுகேசி. ஒற்றைச் சொல்லில் அழைப்பதானால் அவள்,
பிரீடா.
வந்துவிட்டாள்.
தொடரும்

Comments
Post a Comment