அதிகாலையிலேயே போடாபோடாசுகளின் ஹோர்ன் சத்தங்கள் தூக்கத்தைக் கலைத்துவிட்டன.
நான் எழுந்து திரைச்சீலையை விலக்கிப்பார்த்தேன். பள்ளமான முட்டுச் சந்து ஒன்றில் வாகனங்கள் ஊர்ந்துகொண்டிருந்தன. முட்டாமல் மோதாமல் விலகியும் நழுவியும் ஓடுவதுதான் கம்பாலாவில் வாகனம் ஓட்டுவதற்கான கலை. ஒரு ரக்பி வீரர் எப்படி சுழித்துக்கொண்டு பந்தை அடுத்த கரைக்குக் கொண்டுசேர்ப்பாரோ அதுபோல போடாபோடாசுகள் ஓடிக்கொண்டிருந்தன. பாதையோரங்களில் சூட்டும் சப்பாத்தும் அணிந்த பாடசாலை மாணவர்கள் புழுதிக்கு இடையே நடந்துபோனார்கள். உகண்டாவில் பாடசாலைகள் அதிகாலையே ஆரம்பித்து மாலை ஆறு மணிவரைக்கும் நீளும் என்று ஜெகன் சொல்லியிருந்தான். அங்கே இன்னமும் ஆங்கிலக்கல்விதான். பிரித்தானியக் காலனித்துவம் இந்த நிலத்தில் பூர்வீகமாகப் பரவி வாழ்ந்த பலவிதமான மொழிகளைப் பேசும் இனக்குழுக்களை (clans) ஒருங்கிணைத்து உருவாக்கப்பட்ட நாடு என்பதால் இன்னமும் ஆங்கிலம் பொதுமொழியாக உகண்டாவில் பயன்படுத்தப்படுகிறது. ஆயினும் தத்தமது இனக்குழுக்களிடையே அவர்கள் தமது மொழியைச் சரளமாகப் பேசுகிறார்கள். ஆங்கிலத்தை இந்த நாட்டில் எல்லோருமே பேசுவார்கள். அது ஒரு தொடர்பாடல் மொழியாக மாத்திரம் பயன்படுவதால் அதற்கென ஒரு மேட்டிமைத்தனம் இங்கில்லை. அதே சமயம் சுதேசிய மொழிகளும் நன்றாகவே பேசப்படுகிறது. ஒரு சுதேசிய மொழியை இன்னொரு சுதேசிய மொழி தின்னாமல் இருப்பதற்கு இருவருக்கும் பொதுவான பிறிதொரு காலனித்துவ மொழி தேவைப்படுகிறது. இது ஒன்று அபத்தமோ அவமானமோ இல்லை. இது சுதேசியமாகவும் சுதந்திரமாகவும் வாழ்ந்த இனக்குழுக்களைக் காலனித்துவம் ஒன்றிணைத்ததன் விளைவு. அது வரலாறு. இனங்களுக்கென்று தனியான நாடு உருவாக்கமுடியாத நிலையில் இதுவே ஓரளவுக்கு உகந்த மாற்று வழி. அல்லது ஒரு மொழி மற்றதை எப்படியும் தின்று தீர்க்கவே முயற்சி செய்யும். அயர்லாந்தில் ஆங்கிலம் செய்ததுபோல. இந்தியாவில் ஹிந்திபோல. ஈழத்தில் சிங்களம்போல.
நாங்கள் கம்பாலா நகரத்துக்குள்ளேயே ஒரு அடுக்குமாடிக்குடியிருப்பில் தங்கியிருந்தோம். ஜெகனும் அந்தக் குடியிருப்பு வீடு ஒன்றில்தான் வாடகைக்கு இருக்கிறான். வெளி நாட்டிலிருந்து வந்த உறவினர்களுக்கும் நண்பர்களுக்கும் அங்கேயே பல வீடுகளைப் பதிவு செய்து கொடுத்திருந்தான். எங்கள் நண்பர்களில் நானும் மகிந்தவும் ஒரே வீட்டில் தங்கினோம். மயூவும் தனேசும் லோகுலனும் தயாளனும் இன்னொரு வீட்டில். லௌமீயின் குடும்பம் பிறிதொரு வீட்டில். நாங்கள் தங்கியிருந்த வீட்டுத் தொகுதியின் பெயர் தாகூர் அப்பார்ட்மெண்ட்ஸ். லௌமி குடும்பம், ஜெகன், ஏனைய உறவினர்கள் எல்லோரும் தங்கியிருந்தது தாகூர் லிவிங். இந்தச் சொத்துகளின் உரிமையாளரின் பெயர் சுதீர் ரூபாரெலியா என்பவர். உகண்டாவின் மிகப்பெரும் பணக்காரர் இவர்தான். நிறைய அப்பார்ட்மெண்டுகள், ஹோட்டல்கள், பல்லங்காடிகள் என்று இந்தக் குடும்பம் கட்டி ஆளுகிறது. மூன்று தலைமுறைகளாக உகண்டாவிலேயே வாழும் குஜராத்திகள் இவர்கள். சுதீரின் தாத்தா பிறந்ததும் உகண்டாவில்தான். எழுபதுகளில் இடி அமீன் இந்தியர்களை நாட்டைவிட்டுத் துரத்தியபோது பிரித்தானியாவுக்குப் புலம்பெயர்ந்த குடும்பம் பின்னர் மறுபடியும் எண்பதுகளில் நாட்டுக்குத் திரும்பி தம்முடைய வியாபாரச் சாம்ராஜ்ஜியத்தை மீள நிறுவிக்கொண்டது. உகண்டாவில் குஜராத்திகளின் செல்வாக்கு மிக அதிகம். அவர்கள் தம்மை ஒரு மேட்டிமை சமூகமாகவே அந்த நாட்டில் உணருகிறார்கள். பலர் அந்த நிலத்தின் பூர்வீக இனக்குழுக்களோடு நட்பு பாராட்டுவதில்லை. அனேகமானவர்கள் பெரு வியாபாரிகள். ஒரு சிலர் சுகாதாரம், கல்வித்துறைகளிலும் மிளிர்கிறார்கள். அண்மைக்காலத்தில் பெரிதும் பேசப்படுகின்ற நியூ யோர்க் மேயர் போட்டியில் முன்னிலை வகிக்கும் சோரான் மந்தானியும் உகண்டாவில் பிறந்த குஜராத்திதான்.
பத்து மணிக்குக் கம்பாலா சந்தைத் தெருவுக்குச் சென்று புளோவை சந்திக்கவேண்டும் என்று ஏற்பாடாகியிருந்தது. புளோ வேறு யாருமில்லை. ஜெகன் திருமணம் முடிக்கும் பிரீடாவின் தங்கை அவள். திருமணத்தில் நாங்கள் மாப்பிள்ளைத் தோழர்கள் எல்லோரும் அணிவதற்கான கோர்ட்டு, சூட்டு அளவெடுக்க நம்மைக் கூட்டிப்போவதாக அவள் சொல்லியிருந்தாள்.
டேய் வெளிக்கிட்டு வெள்ளனையே போயிடுங்கடா. அவள் பாவம். கலியாணத்துக்கு ஆயிரத்தெட்டு வேலை இருக்கும். மெனக்கெடுத்தாதீங்க.
ஜெகனுக்கு மச்சினிமீது இருந்த கரிசனத்தை மையப்படுத்தி சில ஜோக்குகள் வழமைபோல பறந்தன. உகண்டாவில் இறங்கி இரண்டாவது நாளிலேயே ஒரு உள்ளூர்க்காரியோடு பயணம் செய்யப்போகிறோம் என்கின்ற ஆர்வமோ, என்னவோ, அத்தனை பேரும் ஆறு மணிக்கே தயாராகிவிட்டார்கள். அதிகம் வெயிலே இல்லாத நாள் என்றாலும் கறுப்புக் கண்ணாடிகள் பளிச்சிட்டன. நான் மெல்பேர்னிலிருந்து புறப்படும்போது என்னுடைய கறுப்புக் கண்ணாடியை எடுத்து வைக்க மறந்ததை நினைத்து நொந்துகொண்டேன். ஆனால் காட்டிக்கொள்ளவில்லை.
முகத்திலேயே கண்ணுதாண்டா வடிவு. அதை மறைச்சா எப்பிடி? அத்தோட கண்ணாடியைப் போட்டா புது நாட்டையும் மனிசரையும் வடிவா இரசிக்கேல்லாது மச்சான்.
சனியனுகள் அப்போதும் கழட்டவில்லை. பத்து மணி சந்திப்புக்கு நாமெல்லோரும் எட்டு மணிக்கே தயாராகியதால் காலை உணவை உட்கொள்ளலாம் என்று அருகிலிருந்த ஜாவா கபேக்கு சென்றோம். எட்டு மணிக்கு வெயில் வந்திருந்தாலும் காற்றில் குளிர் கலந்திருந்தது. கடையில் ஓம்லட், குரோசண்ட், பை என்று ஐரோப்பிய உணவுகளும் கப்புசீனோ, எக்ஸ்பிரஸ்ஸோ என்ற வழமையான கோப்பி வகைகளும் கிடைத்தன. நான் எனக்கு மிகவும் பிடித்த பாதாம் குரோசண்ட், கப்புசீனோவோடு கொஞ்சம் பழங்களும் சாப்பிட்டேன். அது முடிய எல்லோரும் ஊபர் எடுக்கலாம் என்று நினைத்தால் நாங்கள் ஏழு பேர் இருந்தோம். ஆனாலும் ஆறு பேருக்கான ஊபரைப்போட்டு வரவழைத்து சாரதியிடம் ஏழு பேர் உட்காரலாமா என்று கேட்டோம். அவனைப்பார்த்தால் பாடசாலைச் சிறுவன்போல இருந்தான்.
ஆறு பேரே கடினம். எப்படி ஏழு பேர் இருப்பீர்கள்?
கார் சின்னதுதான். ஆனால் நாங்கள் சாதாரண C50யிலேயே ஐந்து பேர் உட்கார்ந்துகொண்டு இரண்டு சூட்கேசுகளையும் காவிக்கொண்டு திரிந்த கூட்டம் அல்லவா? கிழங்கு அடுக்கியதுபோல ஏறி உட்கார்ந்தோம். மகிந்தவுக்கு மற்றவர் மடியில்கூட உட்கார இடமில்லை. அந்தரத்தில் நின்றான். பெடியன் காரை எடுக்க, நானும் லோகுலனும் சேர்ந்து மகிந்தவோடு காருக்குள் ஸ்கை டைவிங் செய்தோம். வழியெங்கும் கரண்டு கம்பங்களிலும் குட்டிச்சுவருகளிலும் உகண்டன் சனாதிபதி முசேவ்னி வெள்ளையும் சொள்ளையுமாகச் சிரித்துக்கொண்டிரு நின்றார். நிறைய இராணுவப் பொலிஸ்காரர்கள் ஆயுதங்களுடன் தரித்து நின்றார்கள். சின்னச் சின்ன அலுவலகங்களுக்கும் இராணுவக் காவல் போடப்பட்டிருந்தது. ஆங்காங்கே பொலிசும் நின்றது. ஆனால் அவர்களது வேலை என்னவென்று தெரியவில்லை. பாதசாரிக்கடவைகளும் சிக்னல்களும்கூட அந்த நாட்டில் ஏன் இயங்குகின்றன என்பதும் தெரியவில்லை. சிக்னல்கள் அது பாட்டுக்கு பச்சை, சிவப்பு என்று மாறிக்கொண்டிருந்தாலும் மக்கள் அதனைக் கவனியாது, தம்பாட்டுக்கு ஒருவித புரிதலில் குறுக்கும் நெடுக்குமாக நடக்கிறார்கள். பொலீஸ் அவர்கள் பாட்டுக்குத் தமக்குள்ளே பேசிக்கொண்டு நின்றார்கள். இத்தனைக்கும் உகண்டாவில் நின்ற காலத்தில் ஒரு வாகன விபத்தை நாம் சந்திக்கவுமில்லை. கேள்விப்படவுமில்லை. அவ்வளவு மெஸ்ஸியான நெரிசலுக்குள் எல்லோருமே முட்டுப்படாமல் மெஸ்ஸியாட்டம் வெட்டி ஆடினார்கள்.
கூகை டவர் கட்டடத்துக்கு அருகே புளோவை நாங்கள் சந்தித்தோம்.
நான் இரண்டாவது பாகத்தில் எத்தியோப்பியப் பெண்களைப் பற்றிக் குறிப்பிட்டிருந்தேன் அல்லவா? அதில் எத்தியோப்பியாவை உகண்டாவோடு find & replace பண்ணிவிடுங்கள். சின்ன வித்தியாசம். எத்தியோப்பியர்களின் முகம் கொஞ்சம் சாந்தமானது. அவர்களுடைய கண்களில் ஒருவித அக்கறையும் கரிசனையும் தென்படும். உகண்டா மக்களோ கலகலப்பானவர்கள். Care free. வாகனம் நெரிசலில் தாமதித்தால் சாரதி உட்பட எல்லோரும் ரீல்ஸ் பார்த்துக்கொண்டு சிவனேயென இருப்பார்கள். எல்லோரும் இன்ஸ்டகிராம் வைத்திருக்கிறார்கள். குறிப்பாக உகண்டாப் பெண்களின் கண்கள் எப்போதும் மலர்ந்துபோய்க் கிடக்கையில், வாய் சிரித்துக்கொண்டேயிருக்கும். அவர்களிடம் தன்னம்பிக்கையும் அதிகம். புளோவும் அப்படியே. போடாபோடாசில்தான் அவளும் வந்திறங்கினாள். கட்டியணைத்து வணக்கம் சொன்னாள். முகம் முழுக்கச் சிரித்தாள்.
நீங்கள் வந்தது சந்தோசம். எல்லோரும் திருமணத்தை எண்ணி உற்சாகமாக இருக்கிறீர்களா?
என்ன சொல்கிறாய்? இவ்வளவு தூரம் பயணித்து நாட்டுக்கு வந்திருக்கிறோம். உற்சாகமில்லாமல் இருப்போமா?
நீங்கள் பயணித்து வந்தது எங்களது நாட்டைப் பார்க்க அல்லவா? நான் கேட்பது ஜெகனின் திருமணத்தை.
புத்திசாலி. சிரித்தபடியே நாசூக்காக ஊசியை ஏற்றுவதிலும் உகண்டாகாரிகள் வல்லவர்கள். கவனமாக இரு மச்சி என்று ஜெகனுக்கு மெசேஜ் அனுப்ப அவனிடமிருந்து உடனேயே பதில் செய்தி மின்னியது.
நீ வேறை. ஒவ்வொரு நாளும் உடம்பு முழுக்க அக்குபஞ்சர்தான். பயங்கரமாக் குத்துவாளவை.
அவன் பன்மையில் சொன்னதை நான் கவனிக்கவில்லை. புளோ சொன்னதிலும் உண்மை உள்ளதுதான். ஜெகனின் திருமணம் என்பது மிக மகிழ்ச்சியான ஒரு தருணம். ஆனால் இத்தனை நண்பர்கள் உலகெல்லாம் இருந்து வந்தமைக்கு திருமணம் உகண்டாவில் நிகழ்வதும் மணப்பெண் உகண்டாகாரி என்பதும் மிக முக்கிய காரணங்கள். ஒரு ஆபிரிக்க நிலத்து வாழ்க்கையை, கலாசாரத்தை, கொண்டாட்டத்தை இதனைவிட அற்புதமாக அனுபவிக்க வேறு வழி உண்டா என்ன?
சரி. எல்லோரும் என்னையே பின் தொடருங்கள். ஆங்காங்கே ஏமலாந்தவேண்டாம்.
புளோ நடக்கத்தொடங்கினாள். போடாபோடாசுகளை நிறுத்தி சுழித்தாள். வாகனங்களுக்கு அவளது நடையின் வேகம் தெரிந்திருந்தது. தழையத் தழைய ஒரு சட்டை. டெனிம். காலில் வெறும் பாட்டா செருப்புதான் போட்டிருந்தாள். குண்டு, குழி, தெரு, நெரிசல் என எல்லாவற்றையும் அநாயசமாகத் தாண்டினாள். கம்பாலா என்ற முழு நகரமே பல மலைகளில் பரந்து கிடக்கிறது. நடுவே பள்ளப் பகுதியில் சதுப்பு நிலங்களும் பற்றைகளும் போக்குவரத்து மையங்களும் தொழிலாளர் குடியிருப்புகளும் அமைந்திருக்கின்றன. ஆரம்பத்தில் ஏழு மலைகளில் உருவான நகரம் இப்போது பத்துக்கு மேற்பட்ட மலைகளுக்குப் பரவிவிட்டது. அவற்றில் ஒரு மலைதான் நகசேரோ. அங்கு அமைந்திருக்கும் பெரும் சந்தைக்குத்தான் புளோ எங்கள் எல்லோரையும் அழைத்துச்சென்றாள். சந்தை என்றால் மரக்கறி, மீன் விற்கும் சந்தை என்று நினைத்துவிடவேண்டாம். கொழும்பின் புறக்கோட்டை நெரிசலைவிட இரண்டு மடங்கு அதிகம் நெரிசல் அங்கிருந்தது. இலத்திரனியல் பொருட்கள், உடுப்புகள், விதம் விதமான கைப்பைகள் என்று ஏராளம் பொருட்களை விற்கும் கடைகள். பெங்களூரில்கூட நான் அவ்வகையான நெரிசலைக் கண்டதில்லை. டெல்லியின் கரோல் பார்க்போல நெரிசல் இருந்தாலும் அங்கிருக்கும் அன்றாட அவசரங்கள் இங்கில்லை. பொதுவாகவே உகண்டர்களிடம் பெரும் அவசரங்கள் இருப்பதில்லை. நேர ஒழுங்கு, வாழ்க்கையில் எல்லோரையும் மிதித்துக்கொண்டு மேலேறவேண்டும், எப்போதும் தேனிபோல சுறுசுறுப்பாக வாழவேண்டும், காலை எழுந்தவுடன் படிப்பு, மாலை முழுதும் விளையாட்டு போன்ற அறிவுரைப் பாடல்கள் எதுவுமே அந்த நாட்டில் இல்லை என்று நினைக்கிறேன். கடைகளிலும் பெரிதாக யாரும் சாமான்களை வாங்கியதாகத் தெரியவில்லை. ஆனால் மொத்த ஊருமே சந்தையில் நின்றது. போடா போடாசுகள் கூட்டம் கூட்டமாகக் கூடி நின்று கதையளந்துகொண்டிருந்தன. யாராவது குறுக்கே போனால் சவாரியா என்று கேட்பார்கள். இல்லையா, மறுபடியும் எங்க மச்சான் விட்டேன் என்று அருகிலிருப்பவரிடம் கதையைத் தொடருவார்கள். வாழ்க்கையில் அடுத்த கட்டம், அடுத்த கட்டம், அடுத்த கட்டம் என்று தறிகெட்டு ஓடிக்கொண்டிருப்பவர்கள் ஒருமுறை உகண்டாவுக்குப் போய்த் திரும்பினால், இரண்டு வாரங்களேனும் நிம்மதியாக வாழலாம்.
புளோ எங்களை ஒரு குறுகலான கடைத்தொகுதி சந்துக்குள் கொண்டுசென்றாள். அது முழுதும் சிறிய புடவைக்கடைகள் வரிசையாக இருந்தன. எல்லாமே பாரம்பரிய உடைகளாக இருக்கவேண்டும். உகண்டாவில் ஆண்கள் பாரம்பரியமாக கன்சு என்கின்ற நீண்ட வெள்ளை ஆடைகளையே அணிகிறார்கள். இஸ்லாமிய ஆண்கள் அணியும் உடைபோல. ஆனால் இவர்கள் அதற்குமேலே ஒரு கோர்ட்டும் போட்டுக்கொள்வார்கள். பெண்களின் உடைகள் பெரும்பாலும் அகலமான பட்டியால் இறுக்கப்பட்ட நீளச் சட்டைகளாக இருக்கும். அவற்றின் கைகள் பொங்கும். சட்டை பலவித வண்ணங்களில் மினுங்கும். அங்கிருந்த அங்காடிகளில் எல்லாம் பொம்மைகள் அவ்வாறான சட்டைகளைத்தான் போட்டிருந்தன. அந்த நிலத்துப் பெண்களுக்கே உரித்தான பிருமாண்ட பின்புறத்தை அந்தப் பொம்மைகளும் கொண்டிருந்தன. அவை எடுப்பாகத் தெரியும் வண்ணம்தான் சட்டைகளும் தைக்கப்பட்டன. நம்மின்ப் பெண்களுக்கு அவ்வகையான சட்டைகளை…
புளோ சடாரென்று நடையை நிறுத்தினாள்.
இதுதான் உங்களது சூட்டுகளை அளவு பார்க்குமிடம்.
யாழ்ப்பாணம் நியூ மார்க்கட்டில் நாம் கவனிக்காமல் கடந்து போகக்கூடிய சிறிய கடை அது. மூன்று பெண்கள் அங்கு நின்றிருந்தார்கள். நம் அளவுகளை ஜெகன் ஏலவே வாட்சப்பில் வாங்கியிருந்ததால் அவர்கள் ஆளுக்கு ஒரு சூட்டை அட்ஜஸ்ட் பண்ணி வைத்திருந்தார்கள். எதுவுமே எவருக்குமே செற்றாகவில்லை. ஆனால் நாம் அவற்றில் மிக அழகாக இருக்கிறோம் என்று அவர்கள் சிரித்தார்கள். உகண்டாவில் பெண்கள் சிரிக்கிறார்கள் என்றால் பொய் சொல்கிறார்கள் என்று நாம் புரிந்துகொண்டோம். ஆண்கள் சிரிக்கிறார்கள் என்றால் அவர்கள் பெண்கள் சொல்லும் பொய்யை நம்புகிறார்கள். அல்லது அப்படி நடிக்கிறார்கள். உடனே இரண்டு நாள், நாங்கு பெண்களுடன் கதைத்துவிட்டு உகண்டா பெண்களையே பொதுமைப்படுத்துகிறாயா என்று நீங்கள் கேட்கலாம். அதனாலாயே இது உண்மையா என்று ஜெகனிடம் கேட்டேன். அவன் யாழ்ப்பாணப் பெட்டையளும் அப்படித்தான் என்றான். இவ்வாறான குவாலிடிடேடிவ் ஆய்வுகளில் ஜெகனது சாம்பிள் டேட்டா மிக அதிகம்.
கோர்ட்டு, பாண்டு இரண்டுமே அளவில்லை. எனக்கு கமக்கட்டு, இடுப்பு எல்லாமே இறுக்கியது. கடையில் நின்ற பெண் சிரித்தபடியே சொன்னாள்.
இல்லையே. நீங்கள் மிக அழகாக இருக்கிறீர்கள். உங்கள் உடற்கட்டுக்கு இறுக்கமான உடைத்தான் தோது.
சோத்து வண்டி சட்டென உள்ளே ஒதுங்கியது. நான் மெய்தான் என்று சிரித்தபடியே அந்த அளவை ஏற்றுக்கொண்டேன். லோகுலனுக்கு இது எதுவுமே பிடிக்கவில்லை. போட்டிருப்பதற்கு மேலே போட்டுப்பார்க்கமுடியாது என்று சொல்லி உடை அணிந்து பார்க்கும் அறை இருக்கிறதா என்று அவன் கேட்டான். அவர்களும் இருக்கிறதே என்று சொல்லிச் சிரித்தார்கள். ஒருத்தி பெரிய பெட்சீற் ஒன்றை உயர்த்திப் பிடித்து அவனைப் பின்னே மறைந்துகொள்ளுமாறு சொன்னாள். மற்றையவள் பெட்சீற்றுக்கு அப்பாலே, அளவு சரியாக இருக்கிறதா என்று பார்ப்பதற்கு நின்றாள். சிரித்தாள். அவர்கள் அளவு பார்த்துக்கொண்டிருக்கையில் நாம் கடைத்தெருவை விடுப்புப் பார்த்தோம். யாரோ ஒரு கடைக்காரியின் குழந்தை ஒன்று தத்தி தத்தி நடந்து வந்து நம்மிடையே நுழைந்து நம்மை விடுப்புப் பார்த்தது. தனேஷ் அதனைத் தூக்கி வைத்தபடி தங்களைப் படம் பிடிக்கச்சொன்னான். நான் மாட்டேன் என்றேன்.
இந்த வேலையளைப் பார்க்காதீங்கடா. இதுவே பரீசில போய் ஒரு வெள்ளைக்காரக் குழந்தையைத் தூக்கி மடியில வைப்பிங்களா? இல்லதானே? பிறகு எதுக்கு இங்க மட்டும் செய்யிறியள்?
அவன் நீ எப்பவுமே இப்படித்தான் என்று அவன் செல்பியை எடுத்தான். குழந்தையும் சிரித்தது. கொஞ்ச நேரம் கழித்து குழந்தையின் தாய்க்காரி வந்து சேர்ந்தாள். இருபது வயதுதான் இருக்கும். நம்மோடு சிரித்துக் கதைத்தாள். ஶ்ரீலங்காவை சிரி லங்கா என்று உச்சரித்தாள். டெல்லிக்கு அருகிலா அது இருக்கிறது என்று கேட்டாள். இதற்கிடையில் லோகுலன் அளவு பார்த்து முடித்துவிட்டான். அவன் கேட்டதுக்கு அவர்கள் எதையோ சொல்லிச் சிரிக்க, அவனும் சிரித்துக் கை கொடுத்தான்.
மச்சி. எல்லா இடத்திலயும் கோர்ட்டு பிடிக்குது. ஆனால் அவளவை கேக்கிறாளவை இல்லை. இனிப் பிரிச்சுத் தைக்க ஏலாதாம். ஏதும் சொன்னா சிரிக்கிறாளுகள்.
புறப்பட்டோம். கோர்ட் சூட் தேவாலயத்திலே நடக்கப்போகும் திருமணத்துக்காக. அதே சமயம் பிரீடாவின் வீட்டிலே கலாசாரத் திருமணமும் நடக்க இருக்கிறது. அதற்காக எல்லா மாப்பிள்ளைத் தோழர்களுக்கும் ஜெகன் கன்சு உடைகளை வாங்கி வைத்திருந்தான். ஆனால் மகிந்தவின் உடை துண்டற அளவில்லை என்பதால் ஒரு பெட்டிக்கடையில் அவனுக்கும் ஒரு கன்சு வாங்கினோம். இறுதி நேரத்தில் புதிதாக இரண்டு ஜேர்மனியர்கள் வருவதாகச் சொன்னதால் அவர்களுக்கும் சேர்த்து வாங்கினோம். புளோவும் மகிந்தவும் உடை வாங்கிக்கொண்டிருக்கையில் நாம் சந்தைத் தொகுதியை வீடியோ பிடித்தோம். தலைக்குமேலே செல்பேசியைப் பிடித்தபடி நான் சுற்றிக்கொண்டு நிற்க, புளோ வந்து என் முதுகில் தட்டினாள்.
பைத்தியமா உங்களுக்கு? இப்படியே செல்பேசியைப் பிடித்துக்கொண்டிருங்கள். யாராவது பறித்துக்கொண்டு போய்விடுவார்கள்.
திருட்டு என்பது இங்கே ஒருவித அனிச்சைச் செயல். குறிப்பாக கம்பாலாவின் இது ஒரு பெரும் பிரச்சனை. லண்டன், பரீஸ், பார்சிலோனா, ரோம் என்ற நகரங்களிலும் திருட்டு அதிகம்தான். ஆனால் அங்கே சுற்றுலாப்பயணிகளைத்தான் திருடர்கள் பெரிதும் குறிவைப்பதுண்டு. ஆனால் இங்கே நிலைமையே வேறு. அதற்கான சமூகக் காரணிகள் பல. கம்பாலாவின் சனத்தொகை நாள்தோறும் பெருகிக்கொண்டேயிருக்கிறது. உலகிலேயே மிக வேகமாக வளரும் பெரு நகரங்களில் கம்பாலாவும் ஒன்று. அதிலும் நாடு முழுவதிலுமிருந்து இளையவர்கள் பிழைப்புத்தேடி கம்பாலாவுக்கு வந்துகொண்டேயிருக்கிறார்கள். இன்று இளையவர்கள்தான் நகரத்தின் பெரும்பான்மையினர். அவற்றில் பலரும் சிறுவர்களாக இருக்கையிலேயே இங்கு வந்துவிடுகிறார்கள். இலவசக்கல்வியும் இங்கில்லை. வளம் முழுதும் ஒரு சில பணக்காரர்களிடம் மாத்திரம் செறிந்துகிடக்க ஏனைய சமூகம் வறுமையில் அல்லாடுகிறது. அதனால்தான் பதின்மத்தினர் பலர் போடாபோடாசுகளையும் ஊபர்களையும் ஓடித்திரிகிறார்கள். கடைகளில் வேலை பார்க்கிறார்கள். மரவள்ளியையும் வாழைக்காயையும் சுட்டு பெட்டிகளின் மேல் வைத்து விற்கிறார்கள். அதன் நீட்சியாகத்தான் திருட்டும் இந்த நகரில் பரவிக்கிடக்கிறது. எந்த வித நகரத் திட்டமிடல்களுமின்றி வளரும் ஊர் என்பதால் இவற்றைக் கண்காணிப்பதும் கடினம். கல்வியின்மை, வேலைவாய்ப்பின்மை போன்றவற்றால் அல்லற்படும் இளைய சமுதாயத்தில் ஒரு பகுதி ஏதோ ஒரு கட்டத்தில் திருடினால்தான் பிழைக்கலாம் என்ற நிலைக்குள் தள்ளப்படுகிறது. எப்படியும் பிடிபடமாட்டோம் என்ற நம்பிக்கை வருகையில் எந்த அச்சமும் இல்லாமல் அதனைச் செய்யவும் முடிகிறது. சந்தை முழுதும் ஏன் அவ்வளவு செல்பேசிக்கடைகள் என்பதற்கும் ஒருவித விளக்கம் கிடைக்கிறது அல்லவா? சில செல்பேசிகள் பல தடவைகள் களவாடப்பட்டுக்கூட ஒரு பாவனையாளரைச் சென்றடையக்கூடும். இங்கே பொருள் ஒன்று திருடு போனால் போனதுதான். இதனாலேயே பல கட்டடங்களின் மதில்களில் இராணுவ முள்வேலி சுற்றப்பட்டிருக்கிறது. எங்களுடைய விடுதியில்கூட முள்ளுக்கம்பிதான். அப்படியிருந்தும் ஒரு விடுதியிலிருந்து மற்றைய விடுதிக்குப் போகும்போது ஒருத்தருடைய செல்பேசியை ஒரு போடாபோடாஸ் பறித்துச்சென்றுவிட்டது.
புள்ளிகளை இணைத்துப்பார்த்தால் எல்லாமே பிரித்தானியக் காலனித்துவத்தைத்தான் சென்று சேர்கிறது. எல்லா அநியாயங்களுக்கான மூலம் அவர்கள்தான். மாற்றுக்கருத்து இல்லை. ஆனால் புள்ளிகளை விடாது பிடித்துக்கொண்டு தொடர்ந்தது உகண்டர்கள்தானே? இந்தச் சங்கிலியில் எங்கோ ஒரு புள்ளியை உடைத்து ஆற்றைத் திசை திருப்பி விவசாய நிலத்துக்கு மடை மாற்றவேண்டிய தேவை சுதேசிகளுக்கு இருக்கிறது அல்லவா? பின் காலனித்துவ அரசுகள் பலவற்றின் நிலையே இதுதான். காலனித்துவத்தை மறுதலித்து, அதனைக் கட்டுடைத்து உருவாக்கப்படுகின்ற decolonisation கூறுகளால்தான் சமூகங்கள் மீள எழுச்சிகொள்ளவேண்டும். ஆனால் காலனித்துவம் ஊட்டி வளர்த்த செல்வத்திலும் அதிகாரத்திலும் குளிர்காய்கின்ற அரசுகளும் முதலாளிகளும் எப்படி இதனை அனுமதிக்கக்கூடும் என்பதுதான் தெரியவில்லை. அவர்கள் முயன்றாலும் தற்கால முதலாளித்துவம் அதனை அனுமதிக்குமா என்ன?
நான் என்னுடைய செல்பேசியைக் கவனமாகப் பொக்கற்றினுள் போட்டுக்கொண்டு புளோவோடு நடக்க ஆரம்பித்தேன்.
தொடரும்.

Comments
Post a Comment