டொன்சபாலா டொன்சபாலா என்று லுகண்டா மொழியில் அமைந்த ஒரு கோஸ்பல் பாட்டு பின்னணியில் ஒலித்தது. ஆழமாகக் கேட்டால் ஏ. ஆர். ரகுமானின் பாடல் ஒன்றும் நினைவுக்கு வந்து சேரும்.
அந்த ஈசா பொழிஞ்ச வரம் மணிகள் பல தைத்த செவ்வந்தி வண்ணச் சட்டை அணிந்து நம் முன்னே வந்தது. முகம் முழுக்கப் புன்னகை. ஓரத்தில் உடைந்த பல் ஒன்று. கருங்கதிர் விரிக்கும் மேனி என்று சேக்கிழார் வியப்பாரே, அப்படியொரு கறுப்பு வண்ணம். கோஸ்பல் பாட்டின் தாளத்திற்கேற்ப பிரீடா நயமாக நடனமாடியபடியே தெரிந்தவர்களையும் அடையாளம் கண்டு புன்னகைத்தாள். கூட்டத்திடையே எழுந்த ஜெகனைக் கண்டதும் அவள் விழிகள் விரிந்து காதுகளை எட்டியது. சிறிய வெட்கத்தோடு இவன்தான் என் ஆள் என்று தன் மக்களுக்கு அவள் சொல்லியபோது குலவை மறுபடியும் பறந்தது.
லோகுலன் மெதுவாக என் காதுகளுக்குள் சொன்னான்.
***** ஜெகன் இவ்வளவு காலமும் வெயிட் பண்ணினாலும் கடைசில பெருங்காயை மடக்கிட்டான் மச்சான்.
அவன் குரலில் அமிழ்ந்திருந்தது சந்தோசமா இல்லை கவலையா என்று எனக்கு விளங்கவில்லை. அந்த ஐந்து நட்சத்திரத் தூசணத்தையும் நான் பாடசாலைக் காலத்துக்குப் பின்னர் அப்போதுதான் முதற்தடவையாகக் கேட்கிறேன். பதின் வயதில் பெட்டைகளைப் பார்த்துச் சொல்லிப்பழகியது. நான் மெதுவாக முணுமுணுத்தேன்.
***** ஜெகன். வீரன்தாண்டா.
பிரீடாவை ஜெகன் கைப்பிடிக்க, இருவரும் ஆடிப்பாட ஆரம்பித்தார்கள். கொண்டையில் தாழம்பூவுக்குத் தாளம் தப்பி ஆடிய ஜெகன் இல்லை இவன். இப்போது நன்றாக ஆடவும் பழகியிருந்தான். அந்த ஆட்டம் முடிய, மண மேடையில் பிரீடா மாத்திரம் சென்று உட்கார, கொஞ்சம் தள்ளி செங்காவும் அவரின் தங்கையும் உட்கார்ந்தார்கள். இப்போது மாப்பிள்ளை வீட்டுப் பெண்களின் முறை. கண்டாங்கி கண்டாங்கி கட்டி வந்த பொண்ணு பாட்டுக்கு ஆபிரிக்க உடை அணிந்து அசத்தலாக பிரீடா முன்னே ஆடினார்கள். பின்னர் எல்லோரும் கூட்டாகச் சென்று அவள் முன் மண்டியிட்டு உட்கார்ந்தார்கள்.
பிரீடா. உன்னை எங்கள் குடும்பத்துக்கு வரவேற்கிறோம். நீ, உன் சிரிப்பையும் அழகையும் அமைதியையும் நம் வீட்டுக்கு எடுத்து வருவாயாக. எங்கள் இரு குழுவினரிடையே ஒளியாக வீசுவாயாக. நம் குடும்பத்தில் ஒருவராகத் திளைப்பாயாக.
மாப்பிள்ளை வீட்டுப் பெண்கள் அனைவரும் மணப்பெண் முன்னே மண்டியிட்டு உட்கார்ந்திருக்கும் காட்சியே புதிராக இருந்தது. பிரீடாவும் அவர்கள் முன்னே மண்டியிட்டிருந்தாள். அதுபோல இந்த அறிமுக விழாவில் ஜெகனுக்கு முன்னாலும் பெண் வீட்டு ஆண்கள் சென்று மண்டியிடுவார்கள் என்று எதிர்பார்த்தேன். ம்ஹூம். எல்லோரும் பியர் அடித்துக்கொண்டிருந்தார்கள். மாப்பிள்ளையும் பெண்ணும் ஏன் இப்படிக் குடும்பங்களுக்கு உத்தியோகப்பூர்வமாக அறிமுகமாகவேண்டும் என்பதற்கும் காரணம் இருக்கிறது. புகண்டா கலாசாரத்தில் ஒரு இனக்குழு தமக்குள்ளே திருமண உறவுகளை ஏற்படுத்துவதில்லை. ஒரு குழுவுக்குள்ளேயே இருவர் காதல் செய்வது அங்கு தடை செய்யப்பட்டுள்ளது. தவறி ஒரே குழுவுக்குள் உறவு கொண்டால் தண்டனையும் கொடுப்பார்கள். உடலியல் ரீதியாகவும் கூர்ப்பின் அடிப்படையிலும் ஒரு கூட்டத்துக்குள்ளேயே தலைமுறைகள் சுற்றுவது எதிர்மறையான விளைவையே ஏற்படுத்தும். உடலின் எதிர்ப்புச் சக்தி குறையும். உடல், மனக் குறைபாடுகள் கொண்ட குழந்தைகள் பிறப்பதற்கும் சாத்தியங்கள் அதிகமாகும். பல விலங்குக்கூட்டங்கள் இதனை கூர்ப்பின் போக்கில் பட்டுத் தெளிந்துவிட்டன. ஏன், தாவரங்கள்கூட தம் மகரந்தங்களை எவ்வளவு தொலைவில் தள்ளிவிடமுடியுமோ அவ்வளவுக்கு முயற்சிக்கின்றன. பல்வகைத்தன்மை இல்லாமல் வெறுமனே ஒரு கிழங்கிலிருந்து பல கிழங்குகள் தோன்றுவதால்தான் உருளைக்கிழங்கு போன்ற பல தாவர வகைகள் சாதாரண நோய்த்தொற்றுகளுக்கே எதிர்ப்பு சக்தி இன்றி இலகுவில் அழிந்துபோன வரலாறு பதியப்பட்டிருக்கிறது. இது இயற்கையாக இருக்கையிலே, இந்திய உபகண்டத்தில் மாத்திரம் சாதிகளும் உட்சாதிகளும் தம் சமூகத்துக்குள்தான் திருமண உறவு கொள்ளவேண்டும் என்ற இயற்கைக்குப் புறம்பான விதி உருவாகிவிட்டது. அதிகாரம், செல்வம், கௌரவம் போன்ற பேராசைகள் நம் சமூகத்தை கூர்ப்புக்கு எதிராகத் தொழிற்பட வைத்துக்கொண்டிருக்கின்றன. அதுவும் சொத்து விட்டுப்போகக்கூடாது என்று இரத்தச் சொந்தத்துக்குள்ளேயே திருமணம் முடித்து பலர் படும் அவஸ்தைகள் சொல்லி மாளாதவை. சிலர் பெயருக்குக் கோத்திரங்களைக் கடைப்பிடித்தாலும் மாமனையும் மச்சாளையும் திருமணம் செய்ய இந்த அமைப்பு அனுமதிக்கிறது. இதன் பாதிப்பு முதற் தலைமுறையில் தெரியாவிட்டாலும் பல தலைமுறைகள் தாண்டி எங்கேனும் அந்த உயிரணுக்கள் ஒருங்கிணையும்போது வெளிக்கிளம்பலாம். நம் சமூகத்தில் பலர் கிழங்குகள்போல வாழ்வதன் காரணமும் அதுவாக இருக்கலாம். பரம்பலின்மூலமே உயிரினங்கள் செழுமையடையும் என்பது இயற்கையின் நியதி. ஆனால் நாங்கள் திருந்த மாட்டோம். விளக்கு வச்ச நேரத்தில் மாமன் வந்து நெளிந்தால், மாசி மாசம் ஆளான பொண்ணு மாமன் உனக்குத்தானே என்று வளைந்துகொடுப்போம்.
மூன்றரை மணிக்குப் பின்னர்தான் சாப்பிட அழைத்தார்கள். உகண்டர்களின் சாப்பாட்டில் எப்போதும் வாழை உணவுகள் இருந்தே தீரும். வாழைக்காயை அவித்து மசித்து மட்டோக் என்று தருவார்கள். இந்த மட்டோக் என்பது இவர்களின் தேசிய உணவு. அவித்த வாழைக்காய் மசியலுக்குக் கொஞ்சம் உப்புப்போட்டால் போதுமானது. காலை, மதியம், மாலை என்று மூன்று வேளைகளும் அள்ளி எறிவார்கள். வாழைப்பழத்தை இரண்டாகச் சீவி பொரித்தும் உண்பார்கள். இதரை வாழைப்பழமும் கிடைக்கும். தவிர அவித்த கடலைகள். வாழை இலையில் சுற்றிச் சுட்டு அவித்த கோழி இறைச்சி. நெருப்பில் வேக வைத்த மாட்டிறைச்சி. சிவப்புச் சோறு. இப்படித்தான் அவர்களது உணவு இருக்கும். இறைச்சியோ வாழைக்காயோ, எல்லாமே அதனதன் மூலச் சுவை மாறாவண்ணம் சமைக்கப்படும். கொஞ்சமே உப்பு போடுவார்கள். அவ்வளவுதான். கூடுதலாக எந்த வித மசாலா பொருட்களும் அவர்கள் உணவில் சேர்ப்பதில்லை. சோஸ் இல்லை. நாடோடி இனக்குழுக்களின் உணவுப்பழக்கம் இது. ஆற்றுப்படுக்கைகளில் நிரந்தரமாகத் தங்கி, பருவத்துக்குப் பயிர் செய்து, விதம் விதமான சுவையூட்டிகளையும் பதனிடு முறைகளையும் பயன்படுத்தி சிக்கலான சமையல்களைச் செய்யும் சமூகங்களின் பழக்கங்களிலிருந்து இது பெரிதும் வேறுபட்டது. ஆரம்பத்தில் எனக்கு அந்த உணவு பிடிபடவில்லை. புதிய சுவைகளை உணர்ந்து வியந்தேற்ற நாவுக்குப் பல நாட்கள் தேவைப்படுகிறது. அதி அற்புதமான லசானியாவும் சுஷி வகைகளும் என் நாவுக்குப் புரியவே சில ஆண்டுகள் பிடித்தது எனும்போது இங்கே பத்து நாட்கள் எம்மாத்திரம்? ஆயினும் வாழைக்காய் மசியலோடு சுட்ட பன்றி இறைச்சித் துண்டை மாய்ந்து மாய்ந்து சாப்பிட்ட ஜெகனைப் பார்க்கையில் அந்த உணவும் ஒரு நாள் வசப்படும் என்றே தோன்றியது.
சாப்பிட்டு முடித்துவிட்டு வந்தபோது வாசலில் பெரிய அமளி ஏற்பட்டது. போய்ப்பார்த்தால் அங்கே பெரிய தாட்டான் லாரி ஒன்று வந்து நின்றிருந்தது.
அதுதான் மாப்பிள்ளை வீட்டுச் சீதன லாரி. புகண்டா கலாசாரத்தில் மாப்பிள்ளைதான் பெண் வீட்டுக்குச் சீதனம் கொடுக்கவேண்டும். ஒமுகாகா என்று இதனை அழைக்கிறார்கள். அதாவது பெண்ணுக்கான விலை. Return on investment என்று பெண் பகுதிக்காரர் ஒருவர் என்னிடம் சொல்லிச்சிரித்தார். நாங்கள் பேசிக்கொண்டிருக்கையிலேயே இசை முழங்க, பெண்கள் கூட்டமொன்று ஆட ஆரம்பித்தது. சீதனம் வந்திருக்கிறது, வந்து உட்கார்ந்து அதனைப் பரிசீலிக்கவும் என்று பெண் வீட்டாரை அழைக்கும் படலம் அது. வீட்டுக்கு வெளியே, நாம் ஆரம்பத்தில் பார்த்ததைவிட ஐந்து மடங்கு கூட்டம் கூடிவிட்டிருந்தது. மாப்பிள்ளை வீட்டினர்தான் சீதனத்தைத் தூக்கிக்கொண்டு உள்ளே போகவேண்டும். பெட்டி பெட்டியாகச் சீதனம். சோப்பு, சீப்பு, கண்ணாடி, உடைகள் என்று ஆரம்பித்தது. பின்னர் அரிசி, சோடா, வாழைப்பழத்தை நொதிய வைத்துக் காய்ச்சிய மது, வாழைக்குலைகள் என்று வளர்ந்தது. நான் ஒரு நான்கு பெட்டிகளைத் தூக்கியிருப்பேன். அதற்குள் பெண்டு நிமிர்ந்து விட்டது. ஆண்கள், பெண்கள் என்று மாப்பிள்ளை வீட்டார் எல்லோருமே பெட்டி தூக்கினார்கள். எல்லோருக்குமே பெண்டு நிமிர்ந்தது. கடைசியில் முடியாது என்று நாம் உட்கார்ந்துவிட, அதற்கென வேலைக்கு நியமிக்கப்பட்டவர்கள் பெட்டிகளைத் தூக்கிக்கொண்டு வந்து உள்ளே அடுக்கினார்கள். ஐந்து கோழிகள் ஒரு கூட்டுக்குள் வைத்துக் கொண்டுவரப்பட்டன. இசை முழங்கிக்கொண்டேயிருந்தது. பெண்கள் இடுப்பை வீசி ஆடிக்கொண்டிருந்தார்கள். நான்கு பேர் ஒரு பெரும் பெட்டியைத் தூக்கி வந்தார்கள். உள்ளே ஒரு மாடு அடித்து உரிக்கப்பட்டுப் படுத்துக்கிடந்தது. அதன் ஒரு கால் மாத்திரம் வெளியே நீட்டியபடி, நான் இன்று காலைகூட உயிரோடுதான் இருந்தேன் என்பதை உறுதிப்படுத்தியது.
பெண் வீட்டினர் இப்போது சீதனத்தைச் சுற்றிச் சுற்றி வந்தனர். அறிவிப்பாளர், சீதனம் போதாது, இன்னமும் வேண்டும் என்று சொல்லிக்கொண்டிருந்தார். பிரீடாவின் தந்தைக்குத் திருப்தி இல்லையாம். உடனே இரண்டு புதிய சோபாக்களைக் கொண்டுவந்து இறக்கினார்கள். இந்த சோபாவின் மரம் அந்தக் காட்டிலிருந்து எடுத்தது, பெரும் நுட்பத்துடன் செய்யப்பட்டது என்று மாப்பிள்ளைத் தரப்பு அறிவிப்பாளர் விளக்கினார். பின்னர் ஒரு கட்டிலும் கொண்டு வந்தார்கள். எவ்வளவு துள்ளினாலும் கட்டில் உடையாது என்றார்கள். அதற்கு செங்கா ஆமோதித்து கை அசைத்தார். கொஞ்சம் கொஞ்சமாக பெண் வீட்டினர் இரக்கம் காட்டினார்கள். கடைசியில் பிரீடாவின் நெருங்கிய சொந்தங்களுக்குத் தனித்தனியாக சூட்கேசுகளை ஜெகன் கொடுத்தான். அதன் பின்னர்தான் பெண் தரப்பு முகங்களில் கொஞ்சம் மலர்ச்சி தெரிந்தது. சரி, போனால் போகிறது, பெண்ணை உனக்குக் கொடுக்கிறோம் என்று ஜெகனுக்குப் பச்சைக் கொடி காட்டினார்கள்.
இப்போது மறுபடியும் ஒரு நடனம். சீதன அமளிக்குள் பிரீடா பிறிதொரு உடைக்கு மாறியிருந்தாள். ஜெகனும் பிரீடாவும் பாட்டொன்றுக்கு ஆடினார்கள். ஜெகன் பிரீடாவுக்கும் ஒரு சூட்கேஸ் கொடுத்தான். மறுபடியும் ஆட்டம். நேரம் இப்போது ஐந்தரை ஆகிவிட்டிருந்தது. அடுத்ததாக எல்லோரையும் வேட்டி, சேலை அணிந்து வரச்சொன்னார்கள். பக்கத்து வீட்டிலே இதற்கென ஒரு கொட்டில் போடப்பட்டிருந்தது. அவசர அவசரமாக நாம் வேட்டிக்கு மாறினோம். பின்னர் நம்மை வெளியேற்றிவிட்டுப் பெண்கள் எல்லோரும் உள்ளே சென்று சேலைக்கு மாறினார்கள். மறுபடியும் நிகழ்ச்சி ஆரம்பித்தது. கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் பாட்டுக்கு பிரீடாவும் ஜெகனும் ஆட்டம் போட்டார்கள். தொடர்ச்சியாகப் பாடல்கள். தரை முழுதும் ஜெகனின் சீதனப் பொருட்கள் பரவிக்கிடந்தன. அவற்றுக்கிடையே ஆடுவது சிரமமாக இருந்தது. இடையிடையே கத்தோலிக்கப் போதகர்களும் வந்து அறிவுரைகள் சொன்னார்கள். அவர்களும் ஆடினார்கள். பிரீடாவின் அறிமுகப்பாடலை இசையமைத்துப் பாடிய அந்தப் பிரபல பாதிரியாரும் வந்து ஆசீர்வதித்தார். பாடினார். ஆடினார். ஆட்டாமல் உகண்டர்கள் எதையுமே செய்யமாட்டார்கள் என்று தோன்றியது.
எட்டு மணிக்கு மறுபடியும் சாப்பாடு. வெக்கையும் தொடர்ச்சியான ஆட்டத்தால் வந்த வியர்வையும் மதுவின் கிறக்கமும் உடலைப் புரட்டிப்போட்டிருந்தது. மூன்று நாட்கள் கழித்து மறுபடியும் ஒரு திருவிழா. அது வழமையான கத்தோலிக்கத் தேவாலயத் திருமணம். அது முடித்து மாலையில் இன்னொரு திருவிழா ஐந்து நட்சத்திர விடுதியில் ஏற்பாடாகியிருந்தது. மறுபடியும் பாட்டும் ஆட்டமும் மதுவும் கத்தோலிக்கப் போதனைகளும் நிறையப்போகிறது. உகண்டாவில் கத்தோலிக்கமும் இஸ்லாமும் பெரும் ஆதிக்கத்தைச் செலுத்திக்கொண்டிருக்கின்றன. இப்படிப்பட்ட இனக்குழுக்களை இந்த மதங்கள் எப்படியோ கடுமையாகப் பீடித்துவிடுகின்றன. உலகம் முழுதும் மதங்களை இரண்டு வகையான தரப்பினர் கடுமையாகக் கட்டிப்பிடித்துத் தொங்குவார்கள். தொடர்ச்சியான அறிவுத்தேடல் இல்லாது, பழமையை அப்படியே ஏற்றுக்கொள்ளும், கடவுள் என்ற தத்துவத்துக்குச் சற்று அஞ்சிய தரப்பு ஒன்று. இந்தத் தரப்பினைப் பயன்படுத்தி, அவர்களது நம்பிக்கைகளை முதலீடாக்கி தம்முடைய அதிகாரத்தையும் பண பலத்தையும் உயர்த்திக்கொள்வது மற்றைய தரப்பு. இதைச் சுட்டிக்காட்டினால் இரண்டு தரப்புமே ஏற்றுக்கொள்ளவும் போவதில்லை. ஒன்றை மற்றையது விட்டுக்கொடுத்துப் பேசுவதுமில்லை. முதல் தரப்புக்குத் தாம் இதில் வீழ்ந்து கிடக்கிறோம் என்றே தெரிவதில்லை. மற்றைய தரப்புக்கு இது நன்றாகவே புரியும். ஆனால் காட்டிக்கொள்வதில்லை. ஜெகனின் மாமனார்கூட பைபிள் ஒன்றைத்தான் அவனுக்குப் பரிசாகக் கொடுத்தார். இந்தப் புத்தகத்தைவிட வேறொரு பெரும் ஆசான் உனக்குக் கிடையாது என்று அடித்துச்சொன்னார். மிக நீண்ட ஆழமான நாட்டார் செவ்விலக்கிய மரபு இருக்கிற பூர்வீக இனக்குடிகள் இன்று எப்படி மதங்களால் மடை மாற்றப்பட்டிருக்கின்றன என்பதை நினைக்கையில் எரிச்சல் வந்தது. எப்படி ஒரு மருந்து எல்லா நோய்களையும் தீர்க்காதோ அதுபோல ஒரு நூலோ, ஒரு தத்துவமோ உலகின் அத்தனை சிக்கல்களுக்கும் விடை கொடுத்துவிடாது. அறிய அறிய, நாம் அறியாதது எவ்வளவு என்பதுதான் தெரியவருமே ஒழிய, தீர்வுகள் இலகுவில் கிடைத்துவிடுவதில்லை. அறம் என்பது மிக நுணுக்கமான, காலத்தோடு மருவுகின்ற, சிக்கலான ஒரு கானல். அதனைத் தேடி அறியத்தான் இலக்கியங்களும் தத்துவங்களும் காலம் காலமாக முயற்சி செய்கின்றன. யாரேனும் ஒருவர் பைபிளோ, பகவத் கீதையோ, கம்ப இராமாயணமோ, திருக்குறளோ, வெண்முரசோ, ஏதோ ஒரு புத்தகம் அத்தனை சிக்கல்களையும் தீர்த்துவிட வல்லது என்று சொன்னால், அக்கணமே அவரை அன்பஃலோ பண்ணிவிடுங்கள். தொலைந்தது துன்பம்.
இதற்கிடையில் இரவு பத்து மணியாகிவிட்டது. எல்லோரும் புறப்பட ஆரம்பித்தோம். வெளியே கூட்டம் கும்மியடித்ததால் காவலர்கள் கேற்றினை மூடியிருந்தார்கள். நம்மை ஒவ்வொருவராக வெளியே பாதுகாப்பாகக் கூட்டிச் சென்றார்கள். வெளியே இன்னமும் பல குழந்தைகள் விடுப்புப் பார்த்துக்கொண்டிருந்தன. திருமண வீட்டு மீதி உணவுக்காகவோ அல்லது தமக்கும் பரிசுப்பொருட்கள் கிடைக்கும் என்ற ஆவலிலோ அவர்கள் அங்கு நின்றிருக்கலாம். நடுவில் ஒரு மதிலும் முள்வேலியும்தான். ஒரு புறம் பெரும் திருமணக் கொண்டாட்டம் நிகழ்கிறது. மறுபுறம் அதை அனுபவிக்கத்துடிக்கும், அதை நினைத்து ஏங்கியபடி விடுப்புப் பார்க்கும் ஏழைப்பாடிகள்.
நம் விடுதிக்கு வந்து சேர்ந்தபோது நேரம் பதினொரு மணி. அயர்ச்சியில் உடம்பு நொறுங்கிப்போயிருந்தது. அடுத்த நாள் காலையில் காட்டை நோக்கிய பயணம் ஒழுங்கமைக்கப்பட்டிருந்தது. சரி, நன்றாகத் தூங்கி எழலாம் என்று நினைக்கையில் ஜெகனின் உகண்டன் நண்பன் டொனால்டிடமிருந்து அழைப்பு வந்தது. கம்பாலாவின் இரவு வாழ்க்கையை எங்களுக்குக் காட்டவேண்டும் என்று அவன் துடித்தான். ஒரு மணிக்கு எங்கோ ஒரு நைட் கிளப்பில் இடம் பதிவு செய்திருப்பதாகச் சொன்னான். தூக்கம் என்னிடம், போகாதே போகாதே என் கணவா என்று கெஞ்சிக்கேட்டது. ஆனால் இத்தனை தூரம் வந்துவிட்டு இப்படியொரு சந்தர்ப்பத்தைத் தவறவிட மனமில்லை. ஆபிரிக்க நாடொன்றின் இரவு வாழ்வு எப்படியிருக்கும் என்ற ஆர்வம் தூக்கத்தை உதைத்துத் தள்ளியது. நானும் மயூவும் லோகும் தனேசும் குளித்துத் தயாரானோம். இதைக் கேள்விப்பட்டு மாப்பிள்ளை ஜெகனும் ஓடிவந்துவிட்டான்.
என்னடா, மாப்பிள்ளை. பிரீடாவை விட்டிட்டு இஞ்ச வந்து நிக்கிறாய்?
இரவு பத்து மணிக்கு மேலே மனிசிக்குப் பக்கத்தில நிக்கக்கூடாதெண்டு செங்கா என்னைக் கலைச்சிட்டுது. ஆனாலும் நான் கேப்பில போய்க் கடாய் வெட்டீட்டன் தெரியுமா?
இந்த வகை ஜெகன் வெடிகளைச் சிறுவயதிலிருந்தே கேட்டு வளர்ந்ததால் எவனும் அவன் சொன்னதை நம்பவில்லை. நள்ளிரவு பன்னிரண்டரை மணிபோல ஊபர் ஒன்றைப் பிடித்து புகோலொபி என்கின்ற இடத்துக்குப் போனோம். நாம் போகவிருந்த விடுதியிலிருந்து சில கிலோமீற்றர்கள் தூரத்திலேயே வாகன நெரிசல் ஏற்பட்டிருந்தது. இரவு ஒன்றரை மணிக்கு வீதிகளில் வாகனங்கள் நகரவே முடியாத நெரிசல் எனுமளவுக்கு கம்பாலாவின் இரவு வாழ்க்கை உயிர்ப்போடு இருந்தது. போடாபோடாசு என்றால் நெளித்தும் சுழித்தும் ஓடியிருப்பார்கள். ஊபர் கார் நகரவே முடியாமல் திணறியது. நாம் அங்கிருந்து இறங்கி விடுதியை நோக்கி நடக்க ஆரம்பித்தோம். வீதியெங்கும் சொகுசு ஐரோப்பிய வாகனங்கள். மருங்குகளில் இளையவர்கள் பலர். அத்தனைப்பேரும் அழகாகவும் கவர்ச்சியாகவும் உடையுடுத்தி, கூட்டமாகவோ தனியாகவோ விடுதிகளை நோக்கியும் வெளியேறியும் சென்றுகொண்டிருந்தார்கள். இடையிடையே போதை மருந்துத் தரகர்கள்வேறு. திருவிழாவுக்குக் கோயிலை நோக்கி ஊர்ந்து செல்லும் பக்தர்கள்போல நாலாபுறத்திலிருந்தும் மனிதர்கள் உடைகளும் ஒப்பனைகளும் மின்னியபடி இரவு விடுதிகளை நோக்கிப் படையெடுத்துக்கொண்டிருந்தார்கள்.
நாங்கள் முதலில் நுழைந்தது ஆக்கிமிஸ்ட் என்ற விடுதியாக இருக்கவேண்டும். வாசலிலேயே பவுன்ஸர்கள் போதை வஸ்து இல்லை என்பதை உறுதிப்படுத்த உடல் பரிசோதனை செய்தார்கள். கதவைத் திறந்ததும் சத்தம் காதைக் கிழித்தது. ஏதோ ஒரு உகண்டன் பொப் பாடல் ஒன்றை டீஜே இசைத்துக்கொண்டிருந்தார். என்னுடைய செல்பேசி, ஒலி மீடிறன் எல்லை தாண்டிவிட்டது என்று எச்சரித்தது. எங்களுக்கென்று டொனால்ட் ஒரு மூலையில் மேசையைப் பதிவு பண்ணியிருந்தான். பெயருக்குத்தான் மேசை. சுற்றி நின்றுதான் உரையாடவேண்டும். கொஞ்சம் திரும்பினால் அடுத்த மேசைக்காரரோடு முட்டிவிடுவோம். அத்தனை நெருக்கம். அந்தச் சின்ன விடுதிக்குள் எப்படியும் ஐந்நூறு அறுநூறு பேர் கூடியிருந்தார்கள். ஆண்களைவிடப் பெண்கள் அதிகமாக இருந்தாற்போலத் தோன்றியது. அல்லது என் கண்களுக்குப் பெண்கள் மாத்திரமே தெரிந்திருக்கலாம். ஜெகன் சில பொரியல்களும் குடிப்பதற்கு நைல் பியரும் ஓர்டர் பண்ணினான். பொதுவாக மெல்பேர்ன் விடுதிகளில் இருப்பதுபோல அங்கே ஆடுகளம் என்று ஒன்று மையத்தில் இருக்கவில்லை. எல்லோரும் அவரவர் மேசைக்கருகிலேயே நின்று ஆடினார்கள். ஆட்டம் என்றால் யாக்கை திரி என்று துள்ளிக்குதிக்கும் ஆட்டமில்லை. எளிமையான நயமான ஆட்டம். குப் குப் குப் குப் என்று டீஜே சத்தம் இடித்துக்கொண்டிருந்தது. மூளை இதற்கெல்லாம் வயதாகிவிட்டது, உனக்கு இளையராஜா இசைதான் சரி என்றது. குப் குப் குப் குப். மயூ என் காதுக்குள் எதையோ சொன்னான். கேட்கவில்லை. குப் குப் குப் குப். தனேஷ் பக்கத்து மேசையில் நின்று ஆடிக்கொண்ட நான்கு பெண்களையும் ஒரு ஆணையும் வாய் பிளந்து பார்த்தபடி நின்றான். குப் குப் குப் குப். மூன்றாவது பியர் வந்து, லோகுலன் அதனை என்னுடைய குவளைக்குள் நிறைத்தான். குப் குப் குப் குப். நான்கு மேசை தள்ளி இளம் பெண் ஒருத்தி நாற்காலியில் இரண்டு கைகளையும் பிடித்தபடி, சற்று உடலை வளைத்து நளினமாக நடனமாடினாள். குப் குப் குப் குப். நிலவே நான்தானா? நிஜமா? வீண் கேலி. உந்தன் மடிதானே நிலவின் நாற்காலி. ஒரு நாள் அமர்ந்தாலும் உலகில் நான் ராணி. குப் குப் குப் குப். இந்தச் சரணத்து மெலடிப் பகுதியின் இராகம் தனியானது என்று சசி அண்ணா ஒருமுறை சிலாகித்திருந்தார். குப் குப் குப் குப். சனியன் இராகத்தின் பெயர் வருகுதில்லை. நாதம் எழுந்ததடி என்று ஜானகி பாடுகிறார். அதே இராகம்தான். பெயர் மட்டும் வரக்காணோம். குப் குப் குப் குப். மச்சான் வா செல்பி ஒன்று எடுப்பம். குப் குப் குப் குப். அதிகாலை மூன்று மணிக்கு டொனால்ட் வந்து சேர்ந்தான். ஹாய் சொல்லிக் கட்டியணைத்தான். மறுபடியும் ஒரு நைல் ரவுண்டு. குப் குப் குப் குப். டொனால்ட் அங்கிருந்து 1420 என்கின்ற இன்னொரு விடுதிக்கு எம்மைக் கூட்டிச்சென்றான். குப் குப் குப் குப். ஜீவனாகக் கேட்குதே. சேர்ந்து இன்பம் கூட்டுதே. வராத காலம் வந்து சேர்ந்ததே. இதுவும் அதே இராகம்தான். ஒரு பெண்ணின் பெயர். குப் குப் குப் குப். இதெல்லாம் என்ன இராகம் என்று சசி அண்ணாவுக்கு வாட்சப்பில் மெசேஜ் அனுப்பினேன். அதற்கு வாட் த பக் என்று கேட்டு அலுவலக நண்பி ஸ்டேசியிடமிருந்து பதில் வந்திருந்தது. குப் குப் குப் குப். நண்பர்கள் மூன்றாவது விடுதிக்கும் போகலாம் என்று முடிவெடுத்திருந்தார்கள். இடையிடையே பல குவளைகள் தீர்ந்திருந்தன. டக்கீலா, வொட்கா. யாரோ ஒருத்தன் ஷொட்டுக்கு நன்றாக இருக்கும் என்று உப்பை எடுத்து என் கையில் திணித்தான். குப் குப் குப் குப். நான்கரை மணிக்கு வீட்டுக்குப் போகலாம் என்று எல்லோரும் கிளம்பினோம். வெளியே இன்னமும் கூட்டம்தான். மூன்று இளம் பெண்கள் அப்போது பரபரப்பாக விடுதிக்குள் நுழைந்தார்கள். அந்த வேளையிலும் ஒப்பனைகளின் புத்துணர்ச்சி மாறாமல். வெளியில் வந்தாலும் டீஜே சத்தம் காதுக்குள் இன்னமும் இரைந்துகொண்டேயிருந்தது. குப் குப் குப் குப். ஊபர் ஒன்றை டொனால்ட் பிடித்தான். உள்ளே ஏறி உட்கார்ந்ததும் சொன்னான்.
அடடா. நாமொருத்தரும் இரவு உணவு சாப்பிடவில்லையே?
தூக்கம் மொத்தமாகத் தொலைந்துபோய் மூளை செமிக்காத வயிறுபோல இறுகிப்போயிருந்தது. சாப்பிடும் எண்ணமே இல்லை. குப் குப் குப் குப். ஒரு மந்தாரப்பூ வந்தா மந்திரமா என்ற பாட்டு திடீரென்று ஞாபகத்துக்கு வந்தது. கார்த்திக்கும் கதாநாயகியும் கொஞ்சினார்கள். பெயர் மறந்துவிட்டது. ஓ பிரியா பிரியா பாடலிலும் அந்தப்பெண்தான் நடித்திருப்பார். சிரித்தால் தெத்திப்பல் தெரியும். சங்கரலிங்கம் நகை மாளிகையின் 94ம் ஆண்டு கலண்டரில் அந்தப் பெண் மைசூர் சில்க்கில் திரீ இன் வன் சேலை அணிந்து சிரித்த அதே நடிகை. பெயர் மட்டும் சனியன் வருகுதில்லை. குப் குப் குப் குப். உன்னால இராத்திரி தூக்கம் கெட்டுப் போகுது. ஒத்தையில தூங்கினா என் உடம்பு நோகுது. உந்தன் மடிதானே நிலவின் நாற்காலி. நாதம் எழுந்ததடி. எல்லாமே ஒரே இராகம்தான். ஆனால் சனியன், இராகத்தின் பெயரும் வருகுதில்லை. நாயகியின் பெயரும் வருகிதில்லை. குப் குப் குப் குப்.
இந்த ஊரில் இரவு விடுதிகளுக்கு வந்தால் ரொலெக்ஸ் சாப்பிடாமல் வீட்டுக்குத் திரும்பவே கூடாது.
டொனால்ட் விடுவதாக இல்லை. அவன் ஊபரை காத்திருக்கச் சொல்லிவிட்டு வீதிக்குள் இறங்கினான். அங்கே பல சாலையோர நள்ளிரவுக் கையேந்தி பவன்கள் திறந்திருந்தன. இரவு நேரத்து நாய்கள் நட்புடன் நம்மைச் சுற்றிவந்தன. உகண்டாவின் நாய்கள் யாழ்ப்பாணம், சென்னை நாய்கள் அளவுக்குக் குரைத்தோ கடித்தோ தொந்தரவு செய்வதில்லை. விரோதம் பாராட்டுவதில்லை. அவை உள்ளூர் டொனால்டையும் வெளிநாட்டிலிருந்து வந்த எம்மையும் ஒரேமாதிரியாகவே முகர்ந்து பார்த்து வணக்கம் வைத்தன. டொனால்ட் எல்லோருக்கும் ரொலக்ஸ் ஓர்டர் பண்ணினான். Rolled Eggs என்பதைத்தான் ரொலக்ஸ் என்கிறார்கள். கடைக்காரன் ஒரு இளைஞன்தான். ஆங்கிலம் மிக நன்றாகப் பேசினான். வெறுங்கையால் வெங்காயத்தையும் காரட்டையும் பச்சை மிளகாயையும் வெட்டியபடி எம்மைப்பற்றி விசாரித்தான். ரொலக்ஸ் சம்பந்தமாக ஏதோ ஒரு மொபைல் ஆப் செய்வதாகச் சொன்னான். நாய் ஒன்று என் கால்களுக்கிடையே சுற்றி வந்தது. ஒரு நாய்க்கு விசர் இருக்கா இல்லையா என்று எப்படிக் கண்டுபிடிப்பது என்று மயூவிடம் கேட்டேன். அவன் ஒரு வைத்தியன். விசயம் தெரிந்திருக்கும் என்று நினைத்தேன். ஆனால் நான் வெறுமனே பத்து நைல் பியர்களை அடித்திருந்தால் அவன் மொத்த நைல் நதியையும் குடித்து முடித்து நின்றிருந்தான். நாய் உன்னைக் கடித்தபின்னர் நீ என்னவாகிறாய் என்பதிலிருந்து நாய்க்கு விசரா என்று கண்டறியலாம் என்றான். விசர் என்பது மற்றவர்களுக்கானது. நாய்க்கில்லை என்றான். தலையைச் சுற்றியது. தத்துவம் கேட்கும் மனநிலையில் நான் இருக்கவில்லை. கடைக்காரன் ஒரு பொரித்த கோழித்துண்டையும் எடுத்து சிறிது சிறிதாக வெட்டினான். தக்காளியையும்தான். எல்லாவற்றையும் ஒரு பிளாத்திக்கு ஜக்கில் போட்டு ஐந்து முட்டையோடு சேர்த்து அடித்தான். பின்னர் அடுப்புத் தட்டில் போட்டு பொரித்து எடுத்து, சப்பாத்தி போன்ற உறொட்டிக்குள் சுருட்டித்தந்தான். மனோ குரல் கேட்டது. உன்ன விட்டு அஞ்சு நிமிஷமும் என்னால் வாழ ஆவாது. பக்கிங் ஹெல். கண்டுபிடிச்சிட்டன். பெயர்.
ஶ்ரீரஞ்சனி.
வாட் த பக் என்று டொனால்ட் என்னிடம் திரும்பினான். நான் ரொலக்ஸ் நன்றாக இருக்கிறது என்று சமாளித்தேன். ரொலக்ஸ் நிஜமாகவே நன்றாக இருந்தது. பாதையோர பெட்டிக்கடைகளின் உணவிலிருக்கும் சூடும் அதன் ஒருவித அரை அவியலும் மிக ருசியாக இருக்கும். ரொலக்சும் விதிவிலக்கல்ல. கோழி இறைச்சி இல்லாது வெறுமனே முட்டை மட்டுமே போட்ட ரொலக்ஸ் இன்னமும் நன்றாக இருந்தது. நான் என் உறொட்டிக்குள் இருந்த இறைச்சித் துண்டுகளை நைஸாக நழுவவிட்டு வெறும் முட்டைப்பொரியலோடு மாத்திரம் மீதியைச் சாப்பிட்டேன். இதற்கென்ற காத்திருந்த நாய் ஒன்று ஓடி வந்து கோழி இறைச்சியைக் கவ்வித் தின்றது. நாங்கள் சாப்பிட்டு முடித்தபோது நேரம் ஐந்து மணியைத் தாண்டிவிட்டது. ஆச்சரியமாக, எங்களுடைய ஊபர்காரன் இன்னமும் சொன்ன இடத்திலேயே நாம் வருவதற்காகக் காத்திருந்தான். அந்த கிபாட்டேயின் நண்பன் காத்திருந்ததைப்போல. நாம் விடுதியைப் போய்ச்சேரும்போது சூரியன் உதித்துவிட்டது. இன்னமும் ஒரு மணி நேரத்தில் எம்மை ஏற்றிச்செல்லச் சுற்றுலா வாகனம் வந்துவிடும் என்று ஜெகன் எச்சரித்தான். போடா ***** என்று மறுபடியும் அந்த பாடசாலைக்கால தூஷணத்தை உதிர்த்துவிட்டு நான் கட்டிலில் போய் அப்படியே விழுந்தேன்.
தூக்கம் சனியன் வருவதாகவேயில்லை. குப் குப் குப் குப். டீஜே சத்தம் மூளைக்குள் முழங்கிக்கொண்டிருந்தது. குப் குப் குப் குப்.
எல்லாமே ஒரு மிதப்பாக இருந்தது. குப் குப் குப் குப். ஒரு பக்கம் ஜெகனும் பிரீடாவும் ஆடிக்கொண்டிருந்தார்கள். இன்னொரு பக்கம் ரேவதியும் கமலும் கை கொட்டினார்கள். மற்றைய பக்கம் கார்த்திக்கும் அந்தத் தெத்திப் பல்காரியும். குப் குப் குப் குப். இடையிடையே செங்கா வந்து பிரீடாவுக்கும் ஜெகனுக்கும் எப்படி முத்தம் கொடுப்பது என்று சொல்லிக்கொடுத்தார். குப் குப் குப் குப். ஜெகனின் அத்தை, தனக்கு மண்டியிட்டு உட்கார்ந்ததில் முழங்கால் தேய்ந்துவிட்டது என்று முறைப்பாடு வைக்கிறார். குப் குப் குப் குப். ஜெகனின் மாமனார் அவனைக் குரல்வளையில் பிடித்தபடி பைபிளைக் பழுக்கக் காய்ச்சி அவனது தொண்டைக்குள் ஊற்ற ஜெகன் ஐயோ அம்மா என்று அலறுகிறான். அந்த அலறலில் ஜெகன் கொடுத்த சீதன மாட்டின் கால் திடீரென்று அசைந்தது. பெட்டிக்குள்ளிருந்து மாடு வெளியே பாய்ந்து உம்பா என்று அலறியது. அதைக்கேட்டு கூட்டுக்குள் நின்ற சேவல்களும் கொக்கரித்தன. குப் குப் குப் குப். இவற்றின் சத்தத்தில் மிரண்டுபோய், வெளியே காவலுக்கிருந்த படைவீரன் தன் துப்பாக்கியால் சகட்டுமேனிக்கு சுட ஆரம்பிக்கிறான். வாசலில் விடுப்புப் பார்க்கக் கூடியிருந்த குழந்தைகள் நாலாபுறமும் தெறித்து ஓடுகின்றன. சிலது சுடுபட்டு வீழ்கிறது. சிலது காயம் பட்டு ஒளிகிறது. ஒரு குழந்தை தொடர்ந்து ஓடி, வளர்ந்து, பெரியவனாகி ஆக்கிமிஸ்ட் இரவு விடுதிக்குள் நுழைகிறான். குப் குப் குப் குப். அங்கு ஒரு அழகியை அவன் காண்கிறான். அவளும் காண்கிறாள். குப் குப் குப் குப். அன்பே நீ இன்றி அலைகள் ஆடாது, கண்கள் சாய்ந்தாலும் இமைகள் மூடாது. அவள் அந்த நாற்காலியில் கைகள் இரண்டையும் பிடித்தபடி ஆட, அவன் பின்னே நின்று அவள் இடுப்பைப் பற்றியபடி கூட அசைகிறான். பூவே நீ இன்றி பொழுதும் போகாது. காதல் இல்லாமல் கவிதை வாராது. குப் குப் குப் குப். சிங்களத்து சின்னக்குயிலே பாட்டிண்ட பல்லவி பாக்யஶ்ரீ ஐசே. ஆனால் சரணத்துக்குள்ள தலைவர் ஶ்ரீரஞ்சனிய கோர்த்திருப்பார். Its called pivoting மச்சான். சசி அண்ணா பேசிக்கொண்டிருந்தார். குப் குப் குப் குப். டொனால்ட் இடையில் வந்து ரொலக்ஸ் தருகிறான். உறொட்டிக்குள்ளிருந்த கோழி இறைச்சித்துண்டை நான் வீசி எறிய, அது இறக்கை முளைத்துப் பறக்க ஆரம்பிக்கிறது. கீழே என்னோடு கூட நின்ற நாய் வெறியோடு அதனைத் துரத்த, கோழி கெலியில் மேலும் கேறிக்கொண்டு பறந்தது. அப்போது ஒரு குடிலுக்குள்ளிருந்து சங்கத்தலைவி கோபத்தோடு வெளியே வருகிறாள். தலைவனோடு நான் மகிழ்ந்திருக்கும் நேரத்தில் கூவிக் குழப்புகிறாயா என்று கோழியைக் கொல்ல அவளும் ஓடுகிறாள். மதுரைக்கண்ணனார் பாட்டு. மருதத்திணை. தலைவி கூற்று. கூர்ந்து பார்த்தால் அவளுக்கும் தெத்திப்பல்லு தெரிந்தது. சங்க இலக்கியப் பாட்டு தெரிகிறது. ஆனால் பிடிச்ச கதாநாயகி பெயர் மறந்துபோட்டுது. குப் குப் குப் குப். நள்ளிரவில் நாம கலந்தா, கோழி கூவக் கூடாது. வினிதா. அந்தத் தெத்திப்பல்லுக்காரியின் பெயர் வினிதா. ஒரு மந்தாரப்பூ வந்தா மந்திரமா. தெத்திப்பல்லுக்காரியின் பெயர் வினிதா. வீரன்தாண்டா நீ.
குப் குப் குப் குப்.
தொடரும்

Comments
Post a Comment