Skip to main content

உகண்டாவின் ஒன்பது நாட்கள் - பாகம் 6 - காண்டாமிருகங்களும் கொம்புத்தீயும்


இது கிபாட்டே எனும் குடியானவனின் கதை.

முன்னொரு காலத்தில் அடர் காட்டுக்கு அருகாமையில் அமைந்திருந்த சிறு கிராமம் ஒன்றிலே கிபாட்டே என்ற இளைஞன் வாழ்ந்து வந்தான். ஊரிலே அவனுக்குப் பல நண்பர்கள் இருந்தார்கள். அவர்கள் எல்லோருமே தம்மைப் பெரும் அறிவாளிகளாக நினைப்பவர்கள். அறிவுரை சொல்வதிலும் வல்லவர்கள். கிபாட்டே கேட்கிறானோ, இல்லையோ, எதற்கெடுத்தாலும் அவர்கள் அவனுக்கு ஆலோசனைகளை வாரி வழங்கிக்கொண்டேயிருப்பார்கள்.
ஒரு நாள் கிபாட்டே தனக்கென்று ஒரு வீடு கட்டலாம் என்று தீர்மானித்தான். இதைக் கேள்விப்பட்ட அவனுடைய நண்பர்கள் அவர்களாகவே தேடிவந்து ஆளுக்கொரு அறிவுரை சொல்லத்தொடங்கினார்கள். எல்லோரிடமும் வீடு கட்டுதல் சம்பந்தமான ஒரு எதிர்மறை அனுபவம் இருந்தது. ஏதேனும் ஒரு விசயத்தில் அவர்கள் பாதிக்கப்பட்டிருந்தார்கள். அவற்றை அவர்கள் கிபாட்டேயிடம் அழுத்திச் சொன்னார்கள். ஒவ்வொருவரும் இப்படித் தம் அனுபவங்களைச் சொல்லி மிரட்ட ஆரம்பிக்கவும் வீடு கட்டும் தன் முயற்சிமேலேயே கிபாட்டேக்கு வெறுப்பு வந்துவிட்டது. அவன் எல்லா ஆலோசனைகளையும் அமைதியாகக் கேட்டான். பின்னர் அவர்கள் எவரும் அறியாவண்ணம் இரகசியமாகத் தன் வீட்டுக்கான திட்டத்தைத் தானே போட ஆரம்பித்தான். தானே தன் நிலத்தைச் சுத்தம் செய்து, காட்டில் முறிந்துகிடந்த மரங்களையும் ஓலைகளையும் சேகரித்து வீட்டினைக் கட்ட ஆரம்பித்தான். இந்த நாட்களில் அவனுக்குக் காட்டிலிருந்த பறவைகளோடும் விலங்குகளோடும் பறவைகளோடும் நட்பும் ஏற்பட்டது. அவை அவனுக்கு அறிவுரை எதுவும் சொல்லவில்லை. ஆனால் கிபாட்டேக்கு அவற்றிடமிருந்து கற்றுக்கொள்ள ஏராளம் இருந்தது. ஒவ்வொரு உயிரியும் தனக்கு உகந்த வாழ்வுக்கேற்பவே கூடுகளும் குடில்களும் அமைக்கின்றன என்பதை அவன் புரிந்துகொண்டான். பருவம் மாறும்போது தாம் கட்டிய கூட்டையே பற்றுகள் ஏதுமின்றி விட்டுப்போகும் அவற்றின் பண்பைக் கண்டு அதிசயித்தான். ஆர்வம் இன்னமும் மேலிட, அவன் மரங்களினதும் விலங்குகளினதும் மொழியைக் கற்று, அவற்றோடு உரையாடியபடியே வீட்டைக் கட்ட ஆரம்பித்தான். அவையும் தம்மாலான உதவியை கிபேட்டேக்கு செய்து கொடுத்தன. மரங்கொத்திப் பறவை அவனுக்கு ஓலை அறுத்துக்கொடுத்தது. விருட்சங்கள் தமது பட்ட கிளைகளை உதிர்த்து அவனுக்கு நிலைகளை அளித்தது. எறும்புகள் தாம் கைவிட்டிருந்த புற்றுகளை இனம் காட்டி அவனுக்குக் களிமண் செய்யக்கொடுத்தது.
ஒருவாறாக கிபாட்டே தன் வீட்டைக்கட்டி முடித்துவிட்டான்.
புது வீட்டுக்குக் குடி புகும் நிகழ்வு அன்று அவன் தன் நண்பர்களையும் அழைத்தான். வந்தவர்கள் பலரும் கிபாட்டே தங்களுடைய ஆலோசனைகள் இன்றியே வீட்டைக் கட்டி முடித்துவிட்டானே என்று ஆச்சரியப்பட்டனர். பலர் வியந்து பாராட்டினாலும் சிலருக்குப் பொறாமை பொருமியது. அவர்கள் வீட்டில் குறைகளைக் கண்டுபிடித்தனர். அவர்களில் மெத்தப் படித்தவன் ஒருவன் விடாப்பிடியாக கிபாட்டேயோடு கோபித்தான்.
கிபாட்டே. இங்கே பார். இந்த வீட்டின் அமைப்பின்படி தெற்கு மூலையில் நீ ஒரு தூண் போட்டே ஆகவேண்டும். அல்லாவிடில் அடுத்த பருவக்காற்றுக்குக் கூரை பிரிந்துவிடும்.
யோசித்துப்பார்த்தபோது அவன் சொல்வதும் சரிதான் என்று கிபாட்டேக்குத் தோன்றியது. அங்கு ஒரு தூணை உயர்த்தாது விட்டது அவனது தவறுதான். அவன் நண்பனிடம் சொன்னான்.
நன்றி நண்பனே. நீ இங்கேயே இரு. நான் இப்போதே காட்டுக்குச் சென்று ஒரு மரத்தைக் கொண்டுவருகிறேன்.
கிபாட்டே காட்டுக்குப் போகிறான். அங்கே ஒரு முறிந்த மரம் ஏதாவது கிடைக்குமா என்று தேடினான். கிடைக்கவில்லை. அதனால் ஒரு பச்சை மரத்தை வெட்டப்போனான். அப்போது மரம் பேசியது.
கிபாட்டே. நான் உன் நண்பன் அல்லவா? என்னைப் போய் வெட்டப் பார்க்கிறாயே?
அவன் அடுத்த மரத்திடம் போனான். அதுவும் அவனிடம் தன்னை விட்டுவிடுமாறு இறைஞ்சியது. காட்டில் நின்ற மரமெல்லாம் அவனை நண்பன் என்று அழைத்ததால் ஒரு எதிரி மரத்தைக்கூட அவனால் இனம் காணமுடியவில்லை. காடு முழுதும் அலைந்து திரிந்ததில் திரும்பிப்போகும் வழியையும் அவன் தவறவிட்டுவிட்டான். ஈற்றில் சோர்ந்துபோய் ஒரு மரத்தடியில் சாய்ந்து அமர்ந்தவன், அப்படியே தூங்கிப்போனான்.
திடீரென்று ஏழு தலைப் பாம்பு ஒன்று அவன் முன்னே தோன்றியது. அது அவனிடம் பேசத்தொடங்கியது.
கிபாட்டே, அரசன் உன்னை அழைப்பான். நீ ஒரு நாள் பெரும் தலைவனாக உருவெடுப்பாய். புகாண்டாவே உன்னைப் புகழும். நீ இராணுவத்துக்கு நெருப்பு கொடுப்பாய். நீ காண்டாமிருகத்தைச் சிரிக்க வைப்பாய்.
பாம்பு இப்படிச் சொல்லிக்கொண்டிருக்கவே கிபாட்டே திடுக்கிட்டு விழித்தான். அங்கே பாம்பைக் காணவில்லை. அது கனவாக்கும் என்று நினைத்து, அவன் மறுபடியும் வீட்டைத் தேடிப் புறப்பட்டான். வழி தெரியாமல் காடெங்கும் அலைந்து கடைசியில் ஒருவாறாக வீதி ஒன்றைக் கண்டடைந்தான். ஆனால் அது அவனது ஊர் கிடையாது. வீதியில் மக்கள் எல்லோரும் ஒரே திசையில் போய்க்கொண்டிருந்ததைக் கண்டான். அவர்களிடம் நீங்கள் எல்லோரும் எங்கே செல்கிறீர்கள் என்று அவன் கேட்டான்.
நம் மன்னர் எதிரி நாட்டின்மீது படை எடுக்கிறார். நம் எல்லோரையும் படையில் வந்து சேருமாறு அவர் பணித்திருக்கிறார். வீட்டிலேயே ஒளிந்திருப்பவர்கள் தண்டனைக்குள்ளாவர் என்றும் அறிவித்திருக்கிறார்.
அதைக்கேட்ட கிபாட்டேயும் அவர்களோடு இணைந்துகொண்டான். பயிற்சி எடுத்தான். தன் கை வசம் வைத்திருந்த கோடரியையும் கத்தியையும் தீட்டிக்கொண்டான். அவன் இணைந்திருந்த படை பல நாட்கள் பயணம் செய்து எதிரி நாட்டைச் சென்றடைந்தது. அங்கே எல்லையில் அவர்கள் கூடாரம் அமைத்துத் தங்கினார்கள். ஆனால் அடுத்த நாளே அங்கு பெரும் மழை கொட்ட ஆரம்பித்தது. அவர்களுடைய கூடாரங்கள், உடைகள், ஆயுதங்கள், உலர் உணவுகள் எல்லாமே நனைந்து போயின. பல நாட்கள் பெய்த மழையால் அனைவருக்கும் பசி எடுத்தது. ஈற்றில் மழை நின்றுபோக, சமைக்கலாம் என்று நினைத்தால் மரக்கட்டைகளும் நனைந்து நெருப்பு மூட்டுவதே கடினமாகிப்போனது. அன்றிரவு பசி மயக்கத்தில் அனைவரும் சரிந்து கிடக்கையில் தூரற்றே மலை உச்சியில் நெருப்பு எரிவதைப் படைத்தலைவன் கண்டான். அவன் கிபாட்டேவையும் வேறு சிலரையும் அனுப்பி, அங்கிருந்து நெருப்பு எடுத்து வருமாறு அவர்களைப் பணித்தான்.
இவர்கள் மலையை நோக்கி நடக்க ஆரம்பித்தார்கள். உச்சிக்கு அருகில் சென்றபோதுதான் அங்கு ஒரு காண்டாமிருகக் கூட்டம் ஓய்வெடுத்துக்கொண்டிருந்தது தெரிந்தது. அவற்றின் கொம்புகளிலிருந்துதான் நெருப்பு சுவாலை விட்டுக்கொண்டிருந்தது. இவர்கள் தமக்கும் கொஞ்சம் நெருப்பு தரமுடியுமா என்று அவற்றிடம் கெஞ்சினார்கள். ஆனால் அவை முடியாது என்று தலையாட்டின. இவர்கள் தமக்குப் பசி என்று இறைஞ்சிப் பார்த்தார்கள்.
சரி. ஆனால் ஒரு நிபந்தனை. இங்கே மலையில் தனிக்கூட்டமாக உட்கார்ந்து ஓய்வெடுக்க எமக்கு அயர்ச்சியாக இருக்கிறது. உங்களில் எவராவது பகடி சொல்லி எம்மைச் சிரிக்கவைத்தால் மாத்திரமே நாம் உங்களுக்கு நெருப்பைத் தருவோம்.
இதைக்கேட்ட வீரர்கள் பலரும் பல்வேறு பகடிகளைச் சொல்லிப்பார்த்தார்கள். ஆனால் அவை எல்லாவற்றுக்கும் காண்டாமிருகங்கள் முகம் சுழித்தன. கடைசியில் கிபாட்டேயின் முறை வந்தது. அவன் தன் குரலைச் சற்று மாற்றிப் பேசினான்.
முன்னொரு காலத்தில் ஒரு அரசன் இருந்தான். அவனுக்கு இரண்டு கால்களும் இல்லை.
காண்டாமிருகங்கள் என்னது என்று நிமிர்ந்து பார்த்தன. கிபாட்டே அவற்றிடம் குழந்தை கேட்பதுபோலக் கேட்டான்.
அவன் எப்படி நடந்திருப்பான் சொல்லுங்கள் பார்க்கலாம்?
காண்டாமிருகங்கள் ம்ஹூம், தெரியவில்லையே என மூசிக்கொண்டன. அப்போது அவற்றின் கொம்புகளின் தீச்சுவாலையிலிருந்து பொறிகள் பறந்தன.
வேறெப்படி நடப்பான்? தன் கைகளால்தான்.
சொல்லியபடியே கிபாட்டே தலைகீழாக நின்று கைகளால் நடந்தும் காட்டினான். காண்டாமிருகங்களுக்குச் சிரிப்பு வந்துவிட்டது. கால்களற்ற அரசன் தலைகீழாகக் கைகளால் நடப்பது ஒன்றும் மனிதர்களுக்கு நகைச்சுவையான விசயம் கிடையாது. ஆனால் காட்டுச் சீவங்களோடு அதிகம் பழகியிருந்த கிபாட்டேக்கு காண்டாமிருகங்களிடமிருந்து எப்படிச் சிரிப்பை வரவழைப்பது என்று தெரிந்திருந்தது. எலியிடம் பயந்த சிங்கம், வாலைக் கட்டி குளத்தில் குதித்த யானை, ஒட்டகச் சிவிங்கியை வேட்டையாட நினைத்த எறும்பு என்று அவன் மேலும் பல நகைச்சுவைகளை அள்ளித்தெளிக்க, காண்டாமிருகங்கள் உருண்டும் புரண்டும் சிரிக்க ஆரம்பித்தன. மகிழ்ச்சியில் திளைத்து, கிபாட்டேக்கு தமது கொம்பிலிருந்து நெருப்பை அள்ளி எடுத்துக்கொடுத்தன. அவனும் அவர்கள் எடுத்துச் சென்றிருந்த சட்டியில் அதை வாங்கிக்கொண்டு மறுபடியும் கூடாரத்துக்கு வீரர்களோடு வருகிறான். நெருப்பு ஏற்றப்படுகிறது. வீரர்கள் குளிர் காய்ந்தார்கள். உணவு சமைக்கப்பட்டது. அன்றிரவு அனைவரும் பசியாறி வெம்மைக்கருகே நிம்மதியாகத் தூங்கினார்கள்.
அப்புறம் நீண்ட போர் ஆரம்பித்தது.
கிபாட்டேயும் வீர தீரத்துடன் தன் தரப்புக்காகப் போராடினான். ஈற்றில் அவனது படை எதிரி நாட்டை வெற்றிகொள்ள அவன் கொஞ்சக்காலம் மன்னனுடன் தங்கியிருந்தான். தகுந்த தருணத்தில் சாதுரியமாகப் பேசி காண்டாமிருகங்களிடம் நெருப்பு வாங்கி வந்தமைக்காக மன்னன் கிபாட்டேக்கு பல பரிசுகளைக் கொடுக்கிறான். ஊர்த்தலைவர் என்ற பதவியும் அவனுக்கு வழங்கப்படுகிறது. வீடுகளுக்குத் திரும்பிய படைவீரர்கள் அனைவரும் அந்த நெருப்பு வாங்கிய சம்பவத்தைத் தம் ஊரவரோடு பகிர்ந்துகொள்ள, கிபாட்டேயின் புகழ் நாடெங்கும் பரவுகிறது.
பல ஆண்டுகள் கழித்து கிபாட்டேக்குத் தன் ஊர் ஞாபகம் வருகிறது. அவன் கேட்டு விசாரித்து காடு, கழனி எல்லாம் தாண்டி ஈற்றில் அவனது வீட்டை வந்தடைகிறான். இத்தனை ஆண்டுகள் கழிந்தும் அவன் கட்டிய வீடு, எந்தப் புயலுக்கும் மழைக்கும் சரியாது நிமிர்ந்து நின்றதைக்காண அவனுக்கு மகிழ்ச்சியாக இருந்தது. அவன் வீட்டுக்குள் காலடி எடுத்து வைத்தான்.
உள்ளே அவனது நண்பன் இன்னமும் நின்றிருந்தான்.
வயதாகி, தாடி மீசை எல்லாம் நரைத்து அவனது முகமே பொலிவிழந்து போயிருந்தது. உடல் சோர்ந்திருந்தது. கிபாட்டேவைக் கண்டதும் அவன் நிம்மதிப் பெருமூச்சு விட்டான்.
அப்பாடி. வந்துவிட்டாயா கிபாட்டே. வா, நாம் தூணை உடனேயே நடவேண்டும். பெரும் புயல் வரும்போலத் தெரிகிறது. வீடு இடிந்துவிடும். சீக்கிரம்.
*****
கம்பாலாவுக்கு வடக்கே 175 கிலோமீற்றர்கள் தூரத்தில் அமைந்திருக்கும் சீவா வனவிலங்கு சரணாலயத்துக்கு வந்திருந்தோம். தனியே வெள்ளைக் காண்டாமிருகங்களை மாத்திரம் பராமரிக்கும் சரணாலயம் இது. பெயர்தான் சரணாலயமே ஒழிய இது கிட்டத்தட்ட 70 சதுர கிலோமீற்றர் பரம்பியிருக்கக்கூடிய பெரும் பற்றைக்காடு. 70 வனக் காவலர்கள் ஆயுதங்களுடன் எந்நேரமும் இந்தக்காட்டில் கடமையில் ஈடுபட்டிருப்பர். அதற்குக் காரணமும் இருக்கிறது. எழுபதுகளுக்கு முன்னர் உகண்டாவில் இரண்டு வகைக் காண்டாமிருகங்களும் காடுகளிலும் வெளிகளிலும் ஏகத்துக்கு அலைந்து திரிந்திருக்கின்றன. இடி அமீன் காலத்துக்குப் பிறகு ஒற்றைக் காண்டாமிருகம்கூட காட்டில் இல்லை. காரணம் எந்தக் கட்டுப்பாடுகளுமின்றி அவற்றின் கொம்புகளை அறுத்து விற்பதற்காகக் கடத்தல்காரர்கள் அவற்றை வேட்டையாடியதுதான். அதுவும் வெள்ளைக் காண்டாமிருகங்களுக்குக் கண் பார்வையும் அரிது. கொஞ்சம் சாதுவான மிருகங்களும்கூட. அதனால் இலகுவாக அவற்றை வேட்டையாடித் துடைத்து ஒழித்துவிட்டார்கள்.
பத்தாண்டுகளுக்கு முன்னர், மறுபடியும் காண்டாமிருகங்களை உகண்டாவுக்குள் வளர்த்தெடுக்கவேண்டுமென இந்தச் சரணாலயம் வெறுமனே ஆறு காண்டாமிருகங்களோடு ஆரம்பிக்கப்பட்டது. உலகெங்குமிருந்து சரணாலயங்களிலிருந்து காண்டாமிருகங்கள் கொண்டுவரப்பட்டன. கென்யாவிலிருந்தும் அமெரிக்காவிலிருந்தும் கொண்டுவந்த காண்டாமிருகங்கள் இரண்டு கலவி கொண்டதில் இந்தப் பூங்காவில் முதன்முதலாக ஒரு காண்டாமிருகக் குழந்தையும் பிறந்தது. அதற்கு வைக்கப்பட்ட பெயர் ஒபாமா. இப்போது ஒபாமோவோடும் சேர்த்து மொத்தமாக நாற்பத்தெட்டு காண்டாமிருகங்கள் இங்கே இருக்கின்றன. பெரும்பாலானவை இங்கேயே பிறந்தவை. இவற்றின் எண்ணிக்கை ஐம்பதுக்கு மேலே போனதும் அவற்றைக் கொஞ்சம் கொஞ்சமாகப் பற்றைக் காடுகளில் சென்று விடப்போகிறார்கள். அதற்குக் கொம்பு திருடர்களும் கொம்பின் பகுதிகளை அதிக விலை கொடுத்து வாங்கிப் பயன்படுத்தும் செல்வந்தத் திருடர்களும் மனம் திருந்தியாகவேண்டும்.
சொன்னாற்போல, வெள்ளைக் காண்டாமிருகம் உண்மையில் வெள்ளை நிறமே கிடையாது தெரியுமா?
சாம்பல் நிறத்து மிருகத்தை எப்படி வெள்ளை என்று அழைத்தார்கள். வெள்ளைக்காரரின் உச்சரிப்பு அபத்தம்தான் இதற்குக் காரணம். வெள்ளைக் காண்டாமிருகத்தின் தலையும் வாயும் மிக அகலம். அதனது தலையின் கனம் காரணமாக அது எப்போதுமே குனிந்த நிலையில் தாழ்வான புற்களையே மேய்ந்துகொண்டிருக்கும். தலையைத் தூக்கி செடிகளை அவற்றால் உண்ண முடியாது. புற்களை உண்பதற்கு ஏதுவாக அவற்றின் வாய்ப்பகுதி மிக அகலமாக இருக்கும். இந்த அகலமான வாயின் காரணமாக ஆப்ரிக்கான் மொழியில் இதனை wyd renoster என்றழைப்பார்கள். ஆப்ரிக்கான் மொழியில் டச் மொழியின் தாக்கம் இருக்கிறது. Wyd என்ற சொல் ஆங்கிலத்தில் wide என்றாகிறது. அதனை அப்படியே மொழி பெயர்த்தால் அகலமான காண்டாமிருகம் என்றுதான் வரவேண்டும். ஆனால் ஆங்கிலேயர்கள் முதன் முதலில் இந்தப் பெயரைக் கேள்விப்பட்டபோது அவர்களது காதுகளில் ஆபிரிக்கரிகளின் தடித்த உச்சரிப்பால் அது வைற் ரைனோ (white rhino) என்று கேட்டுவிட்டது. அப்போதிலிருந்து எந்தக் கேள்வியுமின்றி அவர்கள் அதனை வெள்ளைக் காண்டாமிருகம் என்று அழைக்கத்தொடங்க, வெள்ளைக்காரன் சொன்னால் சரியாக இருக்குமென்று, உலகம் முழுதும் அவற்றை வெள்ளைக் காண்டாமிருகம் என்று சொல்லத்தொடங்கிவிட்டது. இது அகலம் என்றால் மற்றையது ஒடுக்கமான சற்று நீண்ட முகத்தைக் கொண்ட காண்டாமிருகம்தானே. ஆனால் அவர்கள் அதைப்பற்றியெல்லாம் யோசிக்காமல் இது வெள்ளை, ஆகவே மற்றையது கறுப்பு என்று அதனைக் கறுப்புக் காண்டாமிருகம் என்று அழைக்கிறார்கள். ஒரு வெள்ளைக் காண்டாமிருகத்தையும் கறுப்புக் காண்டா மிருகத்தையும் பக்கம் பக்கமாக வைத்துப்பார்த்தால் அவை இரண்டினது நிறங்களும் சாம்பலில்தான் இருக்கும். தலையையும் அளவையும் வைத்துத்தான் நீங்கள் அவற்றை வேறு பிரிக்கமுடியும். தலை அகலமாக, ஆள் கொஞ்சம் பெரிதாக இருந்தால் அது வெள்ளைக் காண்டா. தலையும் ஆளும் கொஞ்சம் ஒடுக்கமாக இருந்தால் அது கறுப்புக் காண்டா. அவ்வளவுதான்.
கேட்கும் நமக்கே காண்டாகிறது என்றால் காண்டாமிருகங்களுக்கு எப்படியிருக்கும்?
உகண்டாவில் அறிந்துகொண்ட இன்னொரு விசயம். அனேகமான விலங்குகளில் ஆண்கள் தனியாக அலைகிறார்கள். யானையாகட்டும். சிங்கமாகட்டும். காண்டாமிருகமாகட்டும். கறுப்புக் காண்டாமிருகங்களில் பெண்களுமே தனியேதான் அலைகின்றன. வெள்ளை அப்படியல்ல. அவற்றின் பெண்கள் யானை இனத்துப் பெண்களைப்போலக் குழந்தை குட்டிகளோடு கூட்டமாகத் திரிகிறார்கள். ஆண்கள் தமக்கென்று தம் கக்காவால் எல்லை போட்டு நிலத்தைக் காவல் காக்கிறார்கள். பெண்கள் அந்த எல்லைகளைத் தாண்டி அலைய அனுமதி உண்டு. ஆண்களுக்கு இல்லை. எல்லாக் காண்டாமிருகங்களும் வெயில் அதிகம் இல்லாத காலையிலும் மாலையிலும் புற்களை மேய்ந்துவிட்டு பகல் முழுதும் ஓய்வெடுக்கிறார்கள்.
அப்படி ஓய்வெடுக்கும் கூட்டத்தைத்தான் நாம் இப்போது பார்த்துக்கொண்டிருக்கிறோம். இயற்கையில் எல்லாவற்றுக்கும் ஏன், எதற்கு, எப்படி என்ற காரணங்கள் உண்டு. சிலது நமக்கு இன்னமும் தெரியாது. அவ்வளவே. வெள்ளைக் காண்டாமிருகங்கள் திறந்த புல்வெளிக்காடுகளில் திரிந்து தரைப்புற்களை மேய்வதால் உணவுக்குப் பஞ்சமில்லை. அதனால் அவை கூட்டமாக மேய்வதற்குப் பழகிக்கொண்டன. ஆனால் கறுப்புக் காண்டாமிருகங்கள் செடிகளையும் கொடிகளையும் தின்பவை. அவை புற்கள் அளவுக்குச் செறிவாகக் கிடைப்பதில்லை என்பதால் கூட்டமாகக் கும்மியடித்தால் சாப்பாடு உடனே தீர்ந்துவிடும். அதனாலேயே அவை தனியே திரிகின்றன. பண்டா மிருகங்களும் அப்படிப்பட்டவைதான்.
கறுப்பு காண்டாகள் பற்றைகளுக்குள் வாழ்வதால் எதிர்ப்புகளைச் சமாளிப்பது கடினம். அதனால் ஏதேனும் அசுமாத்தம் என்றால் விரட்ட ஆரம்பித்துவிட்டுத்தான் என்ன ஏது என்று ஆராயுமாம். ஆனால் வெள்ளைக் காண்டாமிருகங்கள் புல்வெளிகளுக்குள் கூட்டமாக வாழ்வதால் அந்த அளவுக்கு ஆக்ரோசமானவை அல்ல. இரண்டுக்குமே கண் பார்வை கொஞ்சம் குறைவு. துரத்தினால் குறுக்கும் மறுக்குமாக ஓடுமாறு வனக்காவல் எமக்குச் சொன்னார். அல்லது மரத்தில் ஏறிவிடுங்கள் என்றார்.
காண்டாமிருகங்கள் வெயிலிலிருந்தும் பூச்சிக்கடியிலிருந்தும் தம்மைப் பாதுகாக்கச் சேற்றில் புரண்டு எழுவதுண்டு. எந்நேரமும் அவை மேனியெங்கும் சேறு பூசியபடியே கிடக்கும். காண்டாமிருகங்கள் ஒன்றோடொன்று சண்டை போடும்போதோ அல்லது மரங்களோடு தம்மை உராய்க்கும்போதோ அவற்றின் கொம்புகளிலிருந்து புகை கிளம்புமாம். அதனால் அந்தக் கொம்புகளுக்குள் நெருப்பு உறைந்திருக்கிறது என்று ஒரு நம்பிக்கை. இதை வைத்து பல்வேறு ஆபிரிக்க நாட்டார் கதைகள் உருவாகியிருக்கின்றன.
அவற்றில் ஒன்றுதான் கிபாட்டேயின் கதையும்.
*****
நாட்டார் கதைகளின் அழகே அவை தம் நிலத்தின் மரங்கொடிகளையும் விலங்குகளையும் கொண்டு சொல்லப்படுவதால்தான். இயற்கையோடு ஒன்றிய அறமும் தேடலும் அவற்றில் எப்போதுமே குடியிருக்கும். உகண்டா நிலத்தின் பல்வேறு குடிகளின் கதைகளில் நைல் நதியும் பறவைகளும் விலங்குகளும் மரங்களும் வந்து போகின்றன. கிபாட்டேயின் கதையை வாசிக்கையில் பயணங்களை மனித இனம் எப்படிக் கொண்டாடியிருக்கிறது என்பதைப் புரிந்துகொள்ளக்கூடியதாக இருந்தது. புலம்பெயர்வு என்பது பல உயிரிகளின் வாழ்வாதாரம். உலகம் முழுதும் அலைந்து திரிந்து வீடு திரும்பும் கிபாட்டேயையும் அவனது வீட்டிலேயே காலம் பூராகத் தரித்து நிற்கும் அவன் நண்பனையும் ஒரே கதையில் சொல்வதன் ஆழம் யோசிக்க யோசிக்க மேலும் அதிகரித்தது. நாமே பல சமயங்களில் பயணங்கள் முடித்து வீடு திரும்புகையில் அவனது நண்பனைத் தரிசித்திருக்கிறோம். நாமே கிபாட்டேயாகும்போதுதான் நமக்குள்ளிருக்கும் அவனது நண்பனையும் அறிந்துகொள்ளும் சக்தி எமக்குக் கிடைக்கிறது. நம்முடைய முன்முடிபுகள், அறிவு எனும் அகங்காரம், பிறரை ஏளனம் செய்து எள்ளி நகையாடும் குணம் என அனைத்தையும் நம் பயணங்கள் அடித்து நொறுக்கக்கூடியவை. அதற்காக உகண்டாவரை செல்லவேண்டிய தேவையுமில்லை. அறிந்ததை நீர்த்துப்போக வைக்கக்கூடிய புதிய அறிதல்களை அனுதினமும் அடைதலே இங்கே முக்கியம். புத்தகங்களோ, மனிதர்களோ, பயணங்களோ அல்லது ஏரியில் பத்துக் குஞ்சுகளுடன் தத்தித் தத்திச் செல்லும் இரண்டு வாத்துகளோ அந்த அறிதலை நமக்குக் கொடுக்கக்கூடும். அதற்கு நம் புலன்களை எப்போதும் தயாராகத் தீட்டி வைந்திருந்தாற் போதும். நாமும் காண்டா மிருகங்களிடமே பகடி சொல்லி நெருப்பு வாங்கி வந்துவிடலாம்.
கிபாட்டேயைப்போல.

தொடரும்

Comments

Popular posts from this blog

அயலும் உறவும்

ஊரிலே ஒரு வீடு திருமண நிகழ்வு ஒன்றுக்குத் தயாராகிறது. அந்த வீட்டின் இளைய பெண்ணுக்குத் திருமணம். வீடே திருவிழாக்கோலம் பூணுகிறது. ஒரு திருமண வீட்டின் அமளிகளை நாம் எல்லோருமே அனுபவித்திருப்போம் அல்லவா? அதுவும் நிகழ்வுக்கு முந்தைய சில தினங்கள் அங்கு நடக்கும் ஆயத்தங்கள்தான் உண்மையிலே ஒரு திருமணத்தின் முத்தாய்ப்பான கணங்கள் என்பது என் எண்ணம். சுவர்களுக்குப் பூச்சு அடிப்பது. வீட்டைக் கழுவித்  தரைக்குப்  பிழிந்த தேங்காய்ப்பூ போட்டுப் பாலிஷ் பண்ணுவது. கிணறு இறைப்பது. சுவர்களில் சோடனைகளைத் தொங்கவிடுவது. வெளியே சொக்கட்டான் பந்தல் போடுவது. சவுண்டு சிஸ்டம் ஒன்றை வாடகைக்கு எடுத்து காலையிலிருந்தே கோயில் திருவிழாக்கள்போல பாடல்களை ஒலிக்கவிடுவது. தூக்குக் கணக்கில் விறகுகளையும் பொச்சு மட்டைகளையும் வாங்கி இறக்குவது. பலகாரச்சூட்டுக்கென உறவெல்லாம் கூடுவது. பாத்திரங்களாலும் அடுப்புப்புகையாலும் ஊர் வம்புகளாலும் நிரம்பும் கொல்லைப்புறம். சிறுவர்களின் விளையாட்டுகளால் எழும் புழுதி. முற்றத்தில் சும்மா உட்கார்ந்து பத்திரிகை படித்தும், வெற்றிலை பாக்கு போட்டுக்கொண்டும் அரசியல் பேசும் பெரிசுகள். திருமணத்துக்குத...

மனோ யோகலிங்கம்

சென்ற வாரம் இங்கே மெல்பேர்னில் மனோ யோகலிங்கம் என்ற 23 வயது இளைஞர் தீக்குளித்து உயிரிழந்தார். 2013ம் ஆண்டு தன்னுடைய பன்னிரண்டாவது வயதிலே மனோ தன் குடும்பத்தாரோடு படகிலே வந்து அவுஸ்திரேலியாவில் அகதியாகத் தஞ்சம் புகுகிறார். அவுஸ்திரேலிய அரசாங்கம் ஓராண்டுக்கும் மேலாக மனோவையும் அவருடைய குடும்பத்தையும் தடுப்பு முகாமில் அடைத்துவைத்து, பின்னர் தற்காலிக விசாவிலே அவர்களை மெல்பேர்னிலே வசிப்பதற்கு அனுமதி கொடுக்கிறது. பதின்மூன்று வயது பதின்மத்துச் சிறுவன் இப்போது உள்ளூர் பாடசாலையில் இணைந்துகொள்கிறான். படிக்கிறான். நண்பர்களைத் தேடிக்கொள்கிறான். இந்த நிலத்திலேயே வளர்ந்து பெரியவனாகிறான். ஆயினும் மனோவினதும் அவரது குடும்பத்தினதும் தஞ்சக்கோரிக்கை வழக்குகள் தொடர்ச்சியாக நிராகரிக்கப்பட்டுக்கொண்டிருக்கின்றன. அந்தக்குடும்பத்துக்கான பொது மருத்துவமும் உயர் கல்வி மானியமும் மறுக்கப்படுகிறது. ஒரு தசாப்தம் கடந்து அரசாங்கங்கள் மாறினாலும் காட்சி மாறவில்லை. தவிர நிலைமை இன்னமும் மோசமாகிக்கொண்டே இருந்தது. ஈற்றில் மறுபடியும் இலங்கைக்குத் திருப்பி அனுப்பப்படுவோம் என்ற அச்சத்தில் மனோ யோகலிங்கத்தின் இந்தத் தீக்குளிப்புச் சம...

என் கொல்லைப்புறத்துக் காதலிகள் : 6. கக்கூஸ்

                                          நடுச்சாமத்தில கக்கூசுக்கு அவசரமாக வந்துவிட்டால் அது ஒரு மிகப்பெரிய அரசியற் பிரச்சனை. தனியாகப் போகமுடியாது. கூட்டணி வைக்கவேண்டும். செத்துப்போன தாத்தா பின்பத்திக்குள்ளே சுருட்டுப் பிடித்துக்கொண்டு நிப்பார். கிணற்றடியில் பாம்பு பூரான் கிடக்கலாம். ஒரே வழி, பக்கத்தில் நித்திரை கொள்ளும் அம்மாவைத் தட்டி எழுப்புவதுதான். முதல் தட்டிலேயே எழுந்துவிடுவார். “பத்து வயசாயிட்டுது இன்னும் என்னடா பயம்?”