Skip to main content

உகண்டாவின் ஒன்பது நாட்கள் - பாகம் 11 - நைல் எனும் பாலூட்டும் தாய்


இது புகண்டா இனக்குழுக்களிடையே நிலவும் ஒரு நாட்டார் கதை.

ஒரு கிராமத்திலே மட்பானைகளை செய்யும் குயவர் தம்பதியினர் வாழ்ந்து வந்தனர். அவர்களுக்கு ஒரு மகன் இருந்தான். ஏனைய சிறுவர்களைப்போலன்றி கொஞ்சம் விட்டேற்றியாக, தானும் தன்பாடுமாகத்தான் அவன் திரிவான். ஒருவர் வித்தியாசமாக இருந்தால் அவரை எள்ளி நகையாடுவது ஒன்றும் மனிதர்களுக்குப் புதிதல்லவே. இந்தச் சிறுவனையும் அவன் பிறந்ததிலிருந்தே ஊரில் அவனை எல்லோரும் பழித்துவந்தார்கள். அவனது தாய்கூட தன் பிள்ளை மற்றவர்களைப்போல இல்லையே என்று வருந்தினாள். அவனும் ஒரு கட்டத்தில் விரக்தியடைந்து வீட்டை விட்டே வெளியேறுகிறான். காட்டில் அலைகிறான். வழியில் காணும் விலங்குகளிடம் அவன் தன்னைப்பற்றிச் சொல்லவும், அவையும், நீ வேலை செய்வதில்லை, நன்றியுடையவனாய் இல்லை, மக்களோடு பழகுவதில்லை என்று ஒவ்வொரு காரணங்களாய்ச் சொல்லி அவனை முட்டாள் என்று விளிக்கின்றன. இவற்றையெல்லாம் கேட்டு அவனது மனம் மேலும் சஞ்சலப்பட்டது. அப்போதுதான் அவன் ஒரு முயலைக் காண்கிறான். முயல் அவனை அரவணைத்து ஆறுதல் சொல்கிறது. தன் வீட்டுக்கு அவனை அழைத்துச்சென்று தான் சேகரித்து வைத்திருந்த பருப்புகளைத் தின்னக்கொடுத்தது. சருகுகளால் படுக்கை செய்து அவனை வளத்திவிட்டது. சிறுவனோ இன்னமும் புலம்பியபடியே கிடந்தான்.
நான் இனி எப்படி வீடு திரும்புவேன்? முட்டாளாக ஓடிப்போனவன் திரும்பி வந்துவிட்டான் என்பார்கள்.
முயல் அவனிடம் அமைதியாகப் பதில் சொன்னது.
மனித வாழ்க்கை நதியைப்போலவே ஓடிக்கொண்டிருக்கிறது. இதில் கடந்தது என்றும் கடந்ததே. அடுத்து வரும் நீரும் எங்கிருந்து எப்படி வந்து சேரும் என்று நமக்குத் தெரிவதுமில்லை. ஆனாலும் நதி என்னவோ எந்நேரமும் இங்கேயே இருக்கிறது அல்லவா? அதுபோலத்தான் நம் வாழ்க்கையும். ஒவ்வொரு கணமும் புதிதுதான். அது எங்கிருந்து வருகிறது என்றும் நமக்குத் தெரியாது. எங்கு போகிறது என்றும் தெரியாது. ஆனால் பார்க்கும் கணத்திலேயே அது மறைந்தும் விடுகிறது. அதனால் மற்றவர்களைப் பற்றி எண்ணு மறுகாதே. நம்மைப் பழித்தவர்களுக்கு நாம் ஒரு பொருட்டே இல்லை. அவர்கள் ஏலவே மற்றொன்றை நோக்கி நகர்ந்திருப்பார்கள். நமக்கு மாத்திரமே நாம் பொருட்டு. இந்த இக்கணம்தான் நம் வாழ்வு. கடந்துபோன நீரையும் இனி வந்து சேரப்போகிற நீரையும் நினைத்து அலட்டிக்கொள்வதானால் நதியில் வாழவே முடியாது.
000
அன்று மதியம் நைல் நதியில் படகுப் பயணம் செல்வதாகத் திட்டமிட்டிருந்தோம்.
நம் இரண்டு சபாரி வாகனங்களும் படகுத்துறையில் எம்மைக் கொண்டு வந்து இறக்கிவிட்டுத் திரும்பிச்சென்றன. மௌலீமா மாத்திரம் நம்மோடே தங்கிவிட்டாள். படகு புறப்படுவதற்கு இன்னமும் அரை மணி நேரம் இருந்தது. எல்லோருக்குமே அதீதக் களைப்பு. காலையில்தான் காட்டில் சிம்பன்சிகளைப் பார்க்கப்போயிருந்தோம். அப்புறம் மதிய உணவு. அது முடிய நேரே படகுத்துறைக்கு வந்துவிட்டோம். கால்கள் எல்லாம் மலைப்பாதையில் நடந்து சோர்ந்துபோயிருந்தன. நான் நதிக்கரையில் வளர்ந்து நின்ற ஒரு மரத்தடித் திண்ணையில் உட்கார்ந்தேன். அருகிலேயே ஐந்தாறு உள்ளூர்க் கலைஞர்கள் அமர்ந்து ஒருவித நாட்டுப்புற வாத்திய இசையை மீட்டிக்கொண்டிருந்தார்கள். யாழ் போன்ற இரண்டு நரம்புக் கருவிகளும் சில தாள வாத்தியங்களும் சேர்ந்த குழு அது. இசை அற்புதமாக இருந்தது. இந்த மனிதர்களின் இரத்தம் நாளம் எல்லாவற்றிலும் இசை ஊறிக்கிடக்கிறது. இசைக்கும்போது அவர்கள் அதிகம் அலட்டிக்கொள்ளவுமில்லை. அபரிமிதமான உடலசைவுகள் இல்லை. கண்கள் விட்டேற்றியாகக் கிடக்க, மனம் எங்கோ அலைபாய்ந்தபடி இருக்க கைகளும் வாயும் இசை மீட்டிக்கொண்டிருந்தன. இசை என்பது இவர்களுக்கு ஒரு அனிச்சைச் செயல்.
அந்த இசையை நைல் நதியும் அமைதியாகக் கேட்டுக்கொண்டிருந்தது.
நைலினை கடல்போல வியாபித்திருந்த நதி என்று முன்னைய அத்தியாயம் ஒன்றில் குறிப்பிட்டிருந்தேன் அல்லவா? அது தவறு என்று இப்போது தோன்றுகிறது. கடல் எந்நேரமும் அமைதியின்றித் தன் சிறு அலைகளால் கனன்றுகொண்டேயிருக்கும். பரந்து நீடித்து நிலைத்து நிற்கும் வாழ்வுதான் கடலுக்கு என்றாலும் அது என்னவோ எப்போதுமே அலைக்கழிவுடனும் சஞ்சலத்துடனும்தான் இருப்பதுண்டு. ஆனால் எந்நேரமும் ஓடிக்கொண்டிருக்கும் நதி அப்படியல்ல. தான் நகர்ந்துகொண்டேயிருப்பவள் என்பதை நதி இலகுவில் யாருக்கும் சொல்வதில்லை. அதே சமயம் அவளைச் சீண்டிவிட்டால் போதும். பெருக்கெடுப்பாள். புரள்வாள். கரை பாய்வாள். ஏறி மிதிப்பாள். மலையினின்றும் குதிப்பாள். நதியின் குணத்தைப் பல சமயங்களில் நிலமே தீர்மானிக்கிறது. சும்மா இருப்பவளைச் சீண்டிவிடுகிறது. நைலும் அப்படித்தான். மற்றபடி அவள் நகர்கிறாள் என்பதையே அறிவது கடினம். அவ்வப்போது இழுபட்டுச்செல்லும் மரக்கட்டைகளும் சிறு மிதவைத் தீவுகளும்தான் அவளை நதியென உணர்த்திக்கொண்டிருந்தன. ஆறாயிரத்து ஐந்நூறு கிலோமீற்றர்கள் நீளம். இங்கிருந்து ஆரம்பித்து எகிப்துவரை எத்தனையோ நதிக்கரை நாகரிகங்கள் உருவாகக் காரணமானவள். பல்லாயிரக்கணக்கான உயிரிகளின் வாழ்வாதாரம். எத்தனை தலைமுறைகளைக் கண்டிருப்பாள். அவள் பிரசன்னத்திலேயே தோன்றி மறைந்த உயிரிகள் ஏராளம். அந்தப் பெரிய மனிசி அமைதியாக வாளாதிருந்தாள்.
யாழிசை தொடர்ந்துகொண்டிருந்தது.
நாங்கள் இப்போது உகண்டாவின் தலைநகர் கம்பாலாவிலிருந்து வட மேற்கே சுமார் இருநூற்றைம்பது கிலோமீற்றர் தொலைவில் அமைந்திருக்கும் அல்பேர்ட் ஏரிக்கு அருகே நிற்கிறோம். நைல் நதி கம்பாலா நகரத்துக்கருகே அமைந்துள்ள விக்டோரியா ஏரியிலிருந்துதான் ஆரம்பிக்கிறது என்று சில ஆய்வாளர்கள் குறிப்பிடுவதுண்டு. இல்லை, விக்டோரியா ஏரிக்கு நீர் கொண்டுவரும் மேல் ஆறுகளான ககாரா நதிதான் நைலின் மூலம் என்பவரும் உண்டு. இப்படியாக நதிகளின் மூலங்களை அறிவதும் அவற்றின் நீளங்களை அளந்து அவற்றை வகைப்படுத்துவதும் ஐரோப்பிய ஆய்வுக் கலாசாரத்தினுடைய பண்புகள் எனலாம். பெயர்களையும் அவர்கள் தான்தோன்றித்தனமாகவே சூட்டினார்கள். விக்டோரியா, அல்பேர்ட், மேர்ச்சிசன் போன்ற பெயர்களுக்கும் இந்த நிலப்பகுதிக்கும் எந்தப் பூர்வீகச் சம்பந்தமுமில்லை. ஏன் நைல் என்ற சொல்கூட கிரேக்க நிலத்திலிருந்து உருவாகிய சொல் என்கிறார்கள். ஆறாயிரம் கிலோமீற்றர் நீளமான நதிக்கு ஒரே பெயர் வைப்பதே அபத்தமானது. அது அந்தந்த நதிக்கரைச் சமூகங்களால் பல்வேறு பெயர்களில் அழைக்கப்பட்டிருக்கும் அல்லவா?
நைல் நதியை வெள்ளை நைல், நீல நைல் என்று பிரிக்கிறார்கள். விக்டோரியா ஏரியிலிருந்து ஆரம்பிப்பது வெள்ளை நைல் நதி. எத்தியோப்பியாவிலிருந்து ஆரம்பிப்பது நீல நைல். இரண்டுமே சூடானில் இணைந்து எகிப்துவரை நீண்டு மத்திய தரைக் கடலில் கலக்கின்றன. நைலின் நதிமூலம் பற்றி ஐரோப்பியர் மத்தியில் பெரும் ஆய்வுப்போரே இடம்பெற்றிருக்கிறது. 1858ம் ஆண்டளவில் ஸ்பெக்கி, பேர்ட்டன் என்கின்ற இரண்டு ஐரோப்பிய ஆய்வாளர்கள் நைலின் மூலத்தை அறியப் பயணம் செய்கிறார்கள். நடுவே இருவருக்குமிடையில் வாதப் பிரதிவாதம் வந்துவிட்டது. ஸ்பெக்கி தனியாக ஒரு வழிகாட்டியையும் படகையும் துணைக்கழைத்துக்கொண்டு விக்டோரியா ஏரி முழுதும் அலைந்து திரிந்து ஒருவாறாக அதுதான் நைலின் மூலம் என்பதைக் கண்டு அறிவித்திருக்கிறார். இதனை பேர்ட்டன் ஏற்றுக்கொள்ளவில்லை. இங்கிலாந்து திரும்பியதும் இவர்கள் புவியியல் சஞ்சிகைகளில் மாறி மாறி இதுபற்றிச் சண்டை போட்டிருக்கிறார்கள். ஒரு கட்டத்தில் பொது மேடை ஒன்றில் விவாதத்துக்கு வருமாறு ஸ்பீக்கியை பேர்ட்டன் அறைகூவல் விடுக்க, ஸ்பீக்கிக்கு ஒரே பதற்றம். வாத நிகழ்வுக்கு முதல் நாள் அன்று அவருடைய துப்பாக்கி தவறுதலாக வெடித்ததில் ஸ்பீக்கி தலத்திலேயே கொல்லப்பட்டுவிட்டார். அது விபத்து அல்ல, வாதத்தை எதிர்கொள்ளப் பயந்து அவர் தற்கொலை செய்தார் என்று பத்திரிகைகள் அப்போது செய்தி வெளியிட்டன. இங்கிலாந்திலிருந்து எத்தனையோ ஆயிரம் மைல்கள் தொலைவில் ஓடுகின்ற ஒரு நதியின் மூலம் என்ன என்ற விவாதத்திற்காகத்தான் இவ்வளவும் என்பது எத்தனை பெரு அபத்தம்?
இப்படியான ஆய்வுகளையும் வாதங்களையும் ஐரோப்பியர்கள் செய்துகொண்டிருக்கையில் நைலை அண்டி வாழ்ந்த பூர்வீகச் சமூகத்தினர் தம் பாட்டுக்குத் தம் வாழ்வைப் பார்த்துக்கொண்டிருந்தார்கள். லுகாண்டா மொழியில் அவர்கள் தம் பகுதி நைல் நதியைக் கீரா என்கிறார்கள். விக்டோரியா ஏரிக்குப் பெயர் நலுபாலே. நலுபாலே என்ற சொல்லுக்குக் கடவுள்கள் வாழும் பகுதி என்று அர்த்தம் வருகிறது. அந்தக் கடவுள்களின் அரசருக்குப் பெயர் முகாசா. ஒவ்வொரு பிரச்சனைக்கும் ஒவ்வொரு கடவுள் என நலுபாலேயில் கடவுள்களின் அமைச்சரவையே இருக்கிறது. வனீமா என்பவர் தொற்று நோய்களைக் கவனிப்பவர். கிபூக்கா பாதுகாப்புத்துறை. முசோகோ என்று ஒருத்தர். சமாதானத்துக்கான கடவுள் இவர். கோபத்தில் வானம் இருண்டு, இடி மின்னல் முழங்க ஆரம்பித்தால் இவர் வானவில்லாய் மாறி வானத்துக்கும் பூமிக்கும் உறவுப்பாலம் அமைப்பாராம். பல ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக வாழையடி வாழையாக அடுத்து வரும் தலைமுறைகளுக்குக் கடத்தப்பட்டு வரும் நம்பிக்கைகள் இவை. எல்லாக் கதைகளுமே ஏதோ ஒரு வாழ்வியலைப் பேசும் எளிமையான கதைகள். இந்தப் பூர்வீகக் குடி மக்களின் வாழ்வில் பெரும் எதிர்பார்ப்புகளோ பேராசைகளோ இருக்கவில்லை. இயற்கையை அளவு செய்து, வகை பிரித்து, ஆவணப்படுத்திவிட்டுப் பின்னர் முறையாகச் சூறையாடும் வேலையை இவர்கள் செய்வதில்லை. இயற்கையோடு ஒன்றிய இயல்பான வாழ்வு இவர்களோடது. காலனித்துவம் வந்து பொன்னையும் வைரத்தையும் தந்தத்தையும் திருடி, நிலத்தைச் சீரழித்துவிட்டு இப்போது இவர்களை மூன்றாம் உலக நாடுகள் என்று இவர்களை அழைத்துக்கொண்டிருக்கிறது. நீங்கள் பாரிஸ் சென்ற எவருடனும் பேசிப்பாருங்கள். கறுப்பினக் குடியேறிகள் பாரிஸ் நகரத்தின் அழகையே சிதைக்கிறார்கள் என்று வசை பாடுவார்கள். நம்மாட்கள்தான் அதிகம் கூவுவார்கள். அந்த நகரமே ஆபிரிக்காவிலிருந்து சூறையாடிய செல்வத்திலிருந்து கட்டமைக்கப்பட்ட நகரம் என்பதை இவர்கள் சிந்திப்பதேயில்லை.
இரண்டரை மணிக்குப் படகு துறையை வந்தடைந்தது.
இரண்டு அடுக்குகள் கொண்ட படகு அது. உள்ளேயே வழிகாட்டி நதியின் மூலம், அங்கு வாழும் பறவைகள், மிருகங்கள் என்று விளக்கிக்கொண்டிருந்தார். ஒரு ஐஸ் பெட்டியில் குளிர்பானங்களும் விற்றுக்கொண்டிருந்தார்கள். நைல் என்ற பெயரில் உகண்டாவில் ஒரு பியரும் உண்டு. நண்பர்கள் வாங்கி அருந்தினார்கள். நைலில் வைத்து நைலையே குடிக்கிறோம் என்ற வழமையான நகைச்சுவைகள் பறந்தன. தனேஷ் யாழ்ப்பாணத்திலிருந்து வரும்போது கையோடே பகோடாவும் மிக்சரும் கொண்டுவந்திருந்தான். படகு இரண்டு மீற்றர்கள் பயணிக்கமுதல் பகோடாவும் நைலோடு வயிற்றுள் இறங்கியது. நான் குடிக்கவில்லை. சிற்றின்ப நைலில் மயங்கினால் பேரின்ப நைலினை அனுபவிக்கத் தவறிவிடுவேனோ என்ற அச்சம்தான் காரணம். நம் படகு மெதுவாக இக்கரையிலிருந்து அக்கரை நோக்கி முன்னேறியது.
முதல் ஆச்சரியம் நீர் யானைகள்தாம்.
கூட்டத்துக்குப் பதினைந்து இருபது என நைல் முழுதும் நீர் யானைக் கூட்டங்கள் பரந்து கிடந்தன. நீர் யானைகள் பகல் முழுதும் நதிக்குள்ளேயே கிடக்குமாம். அமைதியான ஆழமான நதி என்பதால் அங்கு வாழ்வது அவற்றுக்கு வசதியாக இருக்கிறது. நீர் யானைகள் நீருக்குள்ளேயே அதிகம் வாழ்ந்தாலும் அவற்றால் காற்றைத்தான் சுவாசிக்கமுடியும். எனினும் நீருக்குள்ளே ஐந்தாறு நிமிடங்களுக்கு அவற்றால் தம் பிடிக்கமுடியும். தூக்கத்தின்போதே தன்னிச்சையாக வெளியே வந்து மூச்சுவிட்டு மறுபடியும் உள்ளே போகும் வல்லமையும் அவற்றுக்குண்டு. அதனால் சலனமற்ற நீருக்கடியிலிருந்து திடீரென்று ஒரு நீர் யானை தண்ணீரை வீசி அடித்துக்கொண்டு வெளி வருவதையும் பின்னர் மறுபடியும் உள்ளே போவதையும் அந்தச் சலனம் அடங்குவதற்குள் பிறிதொரு இடத்தில் இன்னொரு நீர் யானை வெளிவருவதையும் பார்க்கவே வியப்பாக இருக்கும். அவை அப்படி எழும்போது அவற்றின் ஈரத் தலைகளில் சூரிய ஒளி பட்டுத்தெறிப்பதும் சுற்றி வளர்ந்து நிற்கும் நீர்த்தாவரங்களின் பூக்களும் அழகோ அழகு.
நதி எங்கும் குழுமிக்கிடந்த நீர் யானைகளை இலாவகமாகத் தாண்டியபடி நம் படகு முன்னே நகர்ந்துகொண்டிருந்தது. இடை நடுவே நிமிர்ந்து நிற்கும் பட்ட மரங்களில் African Fish Eagle என்கின்ற பறவைகள் இலவு காத்துக்கொண்டு அமர்ந்திருப்பது மற்றோர் அழகு. நதியில் நீந்தும் மீனைத் தூரத்திலேயே கண்டு, பறந்து சென்று மிகத்துல்லியமாகப் பிடித்துத் திரும்பும் அற்புத வேட்டைப் பறவை அது. அதனோடு African Darter, Marabou Stork, Saddle Billed Stork, Plantain Eater என்று பல பறவைகள். படகு மேலே செல்கையில் கரையோரத் திடல் ஒன்றில் நூற்றுக்கணக்கான ஆபிரிக்க எருமைகள் கூடி நின்று நீர் அருந்திக்கொண்டிருந்ததையும் பார்த்தோம். மற்றொரு பக்கம் மான் கூட்டங்கள். சற்றுத்தள்ளி காட்டுப்பன்றிகள் இரண்டு முட்டி மூசிக்கொண்டிருந்தன. லயன் கிங்கில் வருகின்ற மூசாக்கள்தாம் அவை. குழந்தைகளைப்போல வால் நிமிர்த்திப் பரபரக்க அப்பன்றிகள் அங்குமிங்கும் ஓடுவதை இரசித்தபடியே கிடக்கலாம். இன்னொரு பக்கம் பெருத்த ஆண் யானை ஒன்று தனியே மேய்ந்துகொண்டு நின்றது. கொஞ்சத்தூரம் போனதும் ஒரு குடாப்பகுதியில் முதலைகள் அமைதியாக மிதந்ததைக் கண்டோம். அலட்டிக்கொள்ளாமல் தன்பாட்டுக்கு உறைந்திருக்கும் நதிதான். ஆனால் அதுதான் அந்தப் பெருங்காட்டுக்கும் அதனிடை வாழும் நீண்ட, சிக்கலான உயிரினச் சங்கிலிக்குமான ஜீவ நதி. இதனைக் கடவுள்கள் உறையும் களம் என்று பூர்வீகக் குடிகள் விளிப்பதில் ஆச்சரியமேதுமில்லை. நான் படகின் விளிம்பு ஓரமொன்றில் தனியாக சாய்ந்து நின்றபடி நதியை உள்வாங்கிக்கொண்டிருந்தேன். காதுகளுக்குள் இரைந்துகொண்டிருந்த மனிதக் குரல்களையும் எஞ்சின் சத்தத்தையும் கொஞ்சம் கொஞ்சமாக அகற்ற முயற்சித்தேன். அப்போது குட்டியான மிதவைத் தீவு ஒன்று அசைந்து ஆடியபடி கடந்து சென்றதைக் கண்டேன். அந்தத் தீவு முழுதும் லில்லி மலர்கள் பூத்திருந்தன. அதன் நடுவே சிறு பறவை ஒன்று ஒற்றைக்காலில் நின்றது. African Jacana. நதியின் நடனத்துக்கு ஏற்ப அத்தீவு ஆட, அதன் தாளத்திற்கேற்பப் பூக்களும் அவற்றோடு சேர்ந்து ஜக்கானா பறவையும் ஆடின. கரையோரத்தில் ஒரு மான் குட்டி தாய் மடியில் பால் குடித்துக்கொண்டு நின்றது. டார்ட்டர் பறவை ஒன்று பட்ட கிளையில் தன் இரு சிறகுகளையும் விரித்துக் காயப்போட்டிருந்தது. நீருக்குள் மூழ்கிக்கிடந்த ஓர் நீர் யானை மெதுவாகத் தலை நிமிர்த்தியது. Sublime கணம் அது.
இளையராஜாவின் இசை. குரு தோத்திரம். தீபன் சக்கரவர்த்தியின் கணீரென்ற குரல்.
அவித்யாநாம் அந்தஸ் திமிர மிஹிர த்வீப நகரீ
ஜடாநாம் சைதன்ய ஸ்தபக மகரந்த ஸ்ருதி ஜரீ
தரித்ராநாம் சிந்தாமணி குணநிகா ஜன்ம ஜலதௌ
நிமக்நாநாம் தம்ஷ்ட்ரா முரரிபு வராஹஸ்ய பவதி
நடுவே ஜானகியின் ஆலாப்பும் இணைந்து கொள்ள, நதியிலாடும் பூவனம் ஆரம்பிக்கிறது. எங்கிருந்தோ பறந்து வந்த கழுகினைப் பின் தொடர்ந்தால் அது தடாலடியாக நீரில் இறங்கி மீனைப் பிடித்தெடுத்தபடி மறுபடியும் தன் கிளைக்குப் பறக்கிறது.
நிமிர்ந்தால் தூரற்றே மேர்ச்சிசன் நீர்வீழ்ச்சி. அலைகள் வீசும் சாமரம்.
ஒரு குறுகலான மலை இடைவெட்டினூடாக வழிந்து கொட்டும் மிகச் சக்திவாய்ந்த நீர்வீழ்ச்சி இது. நாம் நின்ற இடத்தில் மிக அமைதியாக வாளாவிருக்கும் நதி நீர்தான் சற்று முன்னர் இங்கே இந்த வேகத்தில் பாய்ந்தது என்பதை நினைக்கையிலேயே வியப்பு மேலிட்டது. சுற்றிவர அடர்த்தியான மலைக்காடுகளுக்கு நடுவே வானை எட்டும் நுரையோடு நைல் ஒரு நீர் வீழ்ச்சியாக அங்கே கொட்டிக்கொண்டிருந்தது. இங்கே பதுமையாக மாறி ஒரு வாழ்வையே மடியில் வைத்துத் தாலாட்டுகிறது. உயிரெலாம் இங்கிருந்தே தோன்றியதெனில் இங்கிதற்கும் உயிரும் உணர்வும் இருப்பதில் ஆச்சரியமேதுமில்லை. இவளும் மனிசிதானே?
மறு நாளும் நாம் இதே மேர்ச்சிசன் நீர் வீழ்ச்சியை அண்டிய மலைப்பகுதியை சுற்றி நடந்தோம். இலகுவான நடைதான். நூறு நூற்றைம்பது அடிகள் மூச்சிரைக்க ஏறவேண்டும். ஏறினால் இந்த அற்புத நீர் வீழ்ச்சியை மிக நெருக்கமாக நின்று பார்க்கலாம். உகண்டா பயணத்திலேயே எனக்கு மிக உச்ச தருணத்தையும் மன நெகிழ்வையும் கொடுத்த மலையேற்றம் இது எனலாம். பிரவாகம் என்ற சொல்லின் அர்த்தத்தை அந்த நீர்வீழ்ச்சி விளக்கிக்கொண்டேயிருந்தது. அதில் சிக்கினால் மீட்சியே கிடையாது. ஒரு நீர் யானைக் குட்டி இதன் வீரியத்தில் இழுபட்டு இறந்து ஓரமாக வெள்ளை நிறமேறி மிதந்துகொண்டிருந்தது. நீர் யானைகள் நதியின் நீரோட்டம் குறைந்த கரைப்பகுதியில்தான் வசிப்பதுண்டு. இது குட்டியாதலால் விசயம் தெரியாது நதிக்கு நடுவே நீந்திச்சென்று அகப்பட்டிருக்கும் என்று வழிகாட்டி விளக்கம் சொன்னார்.
ஒரு காலத்தில் பான்யன்சி என்று ஒரு பூர்வீகக் குடியினர் இந்த நீர்வீழ்ச்சிப்பகுதியிலிருந்த சில குகைகளில் வசித்து வந்தார்களாம். அவர்கள் இதன் பிரவாகத்துச் சக்தியைப் பயன்படுத்தி பாறாங் கல்லை உப்புக் கல்லாக்கும் திறமையைப் பெற்றிருந்தார்களாம். சுற்று வட்டத்திலிருந்த குடிகளுக்கெல்லாம் அவர்கள்தான் இப்படி உப்பு விளைவித்துக் கொடுத்தனராம். ஆனால் நதியில் உறையும் கடவுள்களை அவர்கள் ஒரு நாள் நிந்தனை செய்ததில் கோபங்கொண்டு நீர் வீழ்ச்சி அவர்களை மொத்தமாக விழுங்கிவிட்டது. இன்றைக்குமே கூர்ந்து பார்த்தால் நதி எழுப்பும் நுரைகளின் திரைகளில் அந்தக் குடிகளின் ஆவிகளைக் காணமுடியும் என்கிறார்கள். இயற்கையோடு பொருதப்போய் அதன் சீற்றத்துக்கு இரையாகாதே என்கின்ற ஆதாரச் செய்தியைச் சொல்லும் கதை இது.
நாங்கள் நீர்வீழ்ச்சிக்கு மிக அருகிலே செல்லச் செல்ல, நைல் எம்மை நீர்த்திவலைகளால் பன்னீர் தெளித்து வரவேற்றாள். எத்தனையாயிரம் ஆண்டுகளாக இவள் இங்கே பாய்ந்துகொண்டிருக்கிறாளோ நான் அறியேன். கிழக்கு ஆபிரிக்காவிலிருந்துதான் இன்றைய மனிதச் சமூகமே கூர்ப்படைந்து உலகமெல்லாம் பரவ ஆரம்பித்தது என்று அகழ்வு ஆய்வுகள் தீர்மானிக்கின்றன. அப்படியெனில் நைல் நதிக்கரைதான் நம் மூதாதையர்களின் தோற்றுவாய். என் தாய், பாட்டி, பூட்டி என சொல்லிக்கொண்டே போனால் சுமார் ஒன்றரை இலட்சம் தலைமுறைக்கு முன்னர் வாழ்ந்த என் மூதாட்டிக்கு முலைப் பாலூட்டியவள் இந்த நைல். அவ்வகையில் இத்தாயே என் முதல் மூதாட்டி ஆகிறாள். கம்பர் சரயு நதியைப் பற்றிப் பாடும்போது ஓதிய உடம்பு தோறும் உயிர் என உலாவதன்றே என்பார். உயிர் எப்படி உடல் முழுதும் ஓடி உலாவுகிறதோ அதுபோல சரயு நதி நானிலம் முழுதும் ஓடுகிறது என்பது கம்பரின் வரி சொல்லும் பொருள். அதற்கும் ஒரு படி மேலாக, நைல் எனும் இத்தாயின் நீர் உலகெலாம் நிறைந்திருக்கும் மனித உயிர்கள் அனைத்திலும் உறைந்திருக்கிறது எனில் அது மிகையல்ல. நாமெல்லோருமே இவளின் குழந்தைகள்தாம்.
நான் நீர்வீழ்ச்சியின் கரையை நெருங்கி, என் இரு கைகளாலும் ஒரு கவளம் நீர் ஏந்திப் பருகினேன். மௌலீமா கவனம் என்று என்னை எச்சரித்தாள். பழக்கமில்லாத ஆற்று நீரைக் குடிக்காதே என்றாள். நான் அவளுக்குப் பதில் சொல்லாது நைலைத் திரும்பிப்பார்த்தேன்.
போட்டு வாறனணை.
பேரலையின் பிரவாகத்துக்கு நடுவே என் தாய்வழி ஆச்சி நுரைத் திரையில் தோன்றிச் சிரித்தாள்.
கவனமா போயிற்று வா அப்பன். அடுத்தமுறை வரேக்க எண்ட மகளையும் கூட்டியோண்டு வா.
அவள் தன் இரு கைகளாலும் என் முகத்தை ஆராதித்து நெட்டி முறித்து ஆசி வழங்க, குபுக்கென என ஒரு நீரலை என் மேல் கொட்டி நனைத்தது.
முற்றும்.

Comments

Popular posts from this blog

அயலும் உறவும்

ஊரிலே ஒரு வீடு திருமண நிகழ்வு ஒன்றுக்குத் தயாராகிறது. அந்த வீட்டின் இளைய பெண்ணுக்குத் திருமணம். வீடே திருவிழாக்கோலம் பூணுகிறது. ஒரு திருமண வீட்டின் அமளிகளை நாம் எல்லோருமே அனுபவித்திருப்போம் அல்லவா? அதுவும் நிகழ்வுக்கு முந்தைய சில தினங்கள் அங்கு நடக்கும் ஆயத்தங்கள்தான் உண்மையிலே ஒரு திருமணத்தின் முத்தாய்ப்பான கணங்கள் என்பது என் எண்ணம். சுவர்களுக்குப் பூச்சு அடிப்பது. வீட்டைக் கழுவித்  தரைக்குப்  பிழிந்த தேங்காய்ப்பூ போட்டுப் பாலிஷ் பண்ணுவது. கிணறு இறைப்பது. சுவர்களில் சோடனைகளைத் தொங்கவிடுவது. வெளியே சொக்கட்டான் பந்தல் போடுவது. சவுண்டு சிஸ்டம் ஒன்றை வாடகைக்கு எடுத்து காலையிலிருந்தே கோயில் திருவிழாக்கள்போல பாடல்களை ஒலிக்கவிடுவது. தூக்குக் கணக்கில் விறகுகளையும் பொச்சு மட்டைகளையும் வாங்கி இறக்குவது. பலகாரச்சூட்டுக்கென உறவெல்லாம் கூடுவது. பாத்திரங்களாலும் அடுப்புப்புகையாலும் ஊர் வம்புகளாலும் நிரம்பும் கொல்லைப்புறம். சிறுவர்களின் விளையாட்டுகளால் எழும் புழுதி. முற்றத்தில் சும்மா உட்கார்ந்து பத்திரிகை படித்தும், வெற்றிலை பாக்கு போட்டுக்கொண்டும் அரசியல் பேசும் பெரிசுகள். திருமணத்துக்குத...

மனோ யோகலிங்கம்

சென்ற வாரம் இங்கே மெல்பேர்னில் மனோ யோகலிங்கம் என்ற 23 வயது இளைஞர் தீக்குளித்து உயிரிழந்தார். 2013ம் ஆண்டு தன்னுடைய பன்னிரண்டாவது வயதிலே மனோ தன் குடும்பத்தாரோடு படகிலே வந்து அவுஸ்திரேலியாவில் அகதியாகத் தஞ்சம் புகுகிறார். அவுஸ்திரேலிய அரசாங்கம் ஓராண்டுக்கும் மேலாக மனோவையும் அவருடைய குடும்பத்தையும் தடுப்பு முகாமில் அடைத்துவைத்து, பின்னர் தற்காலிக விசாவிலே அவர்களை மெல்பேர்னிலே வசிப்பதற்கு அனுமதி கொடுக்கிறது. பதின்மூன்று வயது பதின்மத்துச் சிறுவன் இப்போது உள்ளூர் பாடசாலையில் இணைந்துகொள்கிறான். படிக்கிறான். நண்பர்களைத் தேடிக்கொள்கிறான். இந்த நிலத்திலேயே வளர்ந்து பெரியவனாகிறான். ஆயினும் மனோவினதும் அவரது குடும்பத்தினதும் தஞ்சக்கோரிக்கை வழக்குகள் தொடர்ச்சியாக நிராகரிக்கப்பட்டுக்கொண்டிருக்கின்றன. அந்தக்குடும்பத்துக்கான பொது மருத்துவமும் உயர் கல்வி மானியமும் மறுக்கப்படுகிறது. ஒரு தசாப்தம் கடந்து அரசாங்கங்கள் மாறினாலும் காட்சி மாறவில்லை. தவிர நிலைமை இன்னமும் மோசமாகிக்கொண்டே இருந்தது. ஈற்றில் மறுபடியும் இலங்கைக்குத் திருப்பி அனுப்பப்படுவோம் என்ற அச்சத்தில் மனோ யோகலிங்கத்தின் இந்தத் தீக்குளிப்புச் சம...

என் கொல்லைப்புறத்துக் காதலிகள் : 6. கக்கூஸ்

                                          நடுச்சாமத்தில கக்கூசுக்கு அவசரமாக வந்துவிட்டால் அது ஒரு மிகப்பெரிய அரசியற் பிரச்சனை. தனியாகப் போகமுடியாது. கூட்டணி வைக்கவேண்டும். செத்துப்போன தாத்தா பின்பத்திக்குள்ளே சுருட்டுப் பிடித்துக்கொண்டு நிப்பார். கிணற்றடியில் பாம்பு பூரான் கிடக்கலாம். ஒரே வழி, பக்கத்தில் நித்திரை கொள்ளும் அம்மாவைத் தட்டி எழுப்புவதுதான். முதல் தட்டிலேயே எழுந்துவிடுவார். “பத்து வயசாயிட்டுது இன்னும் என்னடா பயம்?”