“தம்பி ஸ்கார்பரோவில எந்தெந்த சொந்தக்காரர் வீட்டயெல்லாம் போகோணுமோ சொல்லும். நான் கூட்டிப்போறன்” எனக்குத் திடுக்கென்றது. மொத்தக் கனேடியப் பயணமே வெறும் ஐந்து நாட்கள்தான். அதிலே ஸ்கார்பரோவுக்கு இரண்டு நாட்களை மாத்திரம் ஒதுக்கியிருந்தேன். அதிலும் ஒரு நாள் கௌசல்யா அக்காவுக்கானது. அவர் என் பெரியம்மாவின் மகள். ஊரில் இருந்த காலத்தில் தீபாவளி என்றால் ஆட்டிறைச்சி சாப்பிட அக்கா வீட்டுக்குதான் ஓடுவோம். மணியாகப் பொரியல் கறி வைப்பார். அவர்களோடுதான் அரியாலைவரை ஒன்றாக 95ம் ஆண்டு இடப்பெயர்வின்போது சைக்கிள் உருட்டினோம். பின்னர் நாவற்குழியில் தொலைந்தாலும் வட்டக்கச்சியிலும் ஒன்றாக அவர்களோடு வாழ்ந்தோம். அக்காவுக்கும் தம்பி என்றால் போதும். எனக்கும் அக்கா என்றால் போதும். அத்தானும் ஒரு அற்புதமான மனிதர். எழுபத்தெட்டு வயது. கார் ஓடுவதில்லை. நான் வருகிறேன் என்று இரண்டு பேருந்து அட்டைகளுக்குக் காசு போட்டுத் தயாராக வைத்திருந்தார். ஊபர் நிரலியும் அவர் செல்பேசியில் உயிர்த்திருந்தது. “இல்லை அத்தான். சொந்தக்காரர், தெரிஞ்சாக்கள் என்று வெளிக்கிட்டா விடிஞ்சிடும். எனக்கு ஸ்கார்பரோவை சுத்திக்காட்டுங்கோ. பனங்கொட்டை பனிக்குளி