Skip to main content

அவள்வேலை முடித்து நடைப்பயிற்சிக்கு நாங்கள் தயாரானபோது ஏழுமணி ஆகியிருந்தது. 

கொஞ்சம் காற்றும் சேர்ந்த மரணக்குளிர். ஊரடங்கு எட்டு மணிக்கு என்றாலும் வீதிகள் எல்லாமே அப்போதே வெறிச்சோடிக்கிடந்தன. சனத்துக்கும் வெளியே போவதற்கான தேவைகள் ஏதுமில்லை. பாடசாலைகள் மூடப்பட்டுவிட்டன. வேலைத்தளங்கள் மூடப்பட்டுவிட்டன. பலசரக்குக் கடைகள் தவிர்ந்த ஏனையவை மூடப்பட்டுவிட்டன. மாவும் சீனியும் வாங்கக்கூட ஐந்து கிலோமீற்றரைத் தாண்டக்கூடாது என்று சட்டம். உடற்பயிற்சிக்கும் ஒருமணி நேரம்தான் அனுமதி. உலகிலேயே வாழ்வதற்குச் சிறந்த இடம் என்று கொண்டாடப்பட்ட மெல்பேர்னில் இப்போது தெருவில்கூட நடமாடமுடியாதபடி கிருமி எம்மை ஒடுக்கி வைத்திருக்கிறது.

நடக்க ஆரம்பித்தோம்.

சத்தமே இல்லாத சூழலில் பேசவே கொஞ்சம் பயமாக இருந்தது. சிறுவயது ஊரடங்குக் கால பங்கர் வாசம் ஞாபகம் வந்தது. மார்கழிக்காலத்து சாமங்களில் ஆர்மி ஷெல் அடிக்க ஆரம்பித்தால் போதும். பங்கருக்குள் போய்ப் பதுங்கினால் அங்கே பனிக்குளிர் ஆளை நடுங்க வைக்கும். துவாயைத் தலையில் போர்த்துக்கொண்டு உள்ளே குந்தியிருக்கையில் பற்கள் குளிரில் இடுக்கிக்கொள்வதுண்டு. மனைவிக்குச் சொன்னேன். என்னதான் கொடூர சம்பவம் என்றாலும் ‘நான் எல்லாம் இதனை அனுபவித்திருக்கிறேன், நீ அனுபவிக்கவில்லை பார்த்தியா’ என்ற பெருமை என் பேச்சில் இருந்திருக்கவேண்டும். அவள் சொன்னாள்.
“எங்கட வீடு மல்டி பரலில தரைமட்டம் ஆயிட்டுது. சொல்லிக்கொண்டா திரியிறன்? நீ சும்மா பங்கருக்க குளிருது எண்டு அலம்பிக்கொண்டிருக்கிறாய், பேசாமல் நட”
ஒரு பொலிஸ் வாகனம் எம்மைத் தாண்டிப்போனது. நான் நேரத்தைப் பார்த்துக்கொண்டேன். அரை மணித்தியாலம்தான் நடந்திருப்போம். இரண்டு கிலோமீற்றரும் ஐநூறு மீற்றரும் என்று கடிகாரம் தூரம் காட்டியது. கொஞ்சம் வேகமாக நடக்க ஆரம்பித்தோம். ஒரு குழந்தையைத் தள்ளுவண்டியில் இருத்தித் தள்ளியவாறே இளம் பெண்ணொருத்தி தூரத்தே நடந்துகொண்டிருந்தாள். நாங்கள் அவளை நெருங்க நெருங்க அந்த இளம் பெண்ணுக்கு ஐம்பது வயது இருக்கக்கூடும் என்று தோன்றியது. எங்களுக்கு நாற்பதாகும்போது இளமைக்கான வயதெல்லையும் அதிகரிக்கிறதுபோலும். இருபது வயதினர் எல்லாம் சிறுவர்கள் ஆகிவிடுகிறார்கள். 

அவளைப் பார்க்கவே ஆச்சரியமாக இருந்தது. இது முதற் குழந்தையா அல்லது மூன்றாவதா? மற்றவர்கள் எங்கே? இவளோடு வராமற்போனதால் அவர்கள் வயதானவர்களாகவே இருக்கவேண்டும். மூத்ததுக்கு பதினைந்து வயது ஆகியிருக்குமா? அப்படியெனில் முப்பத்தைந்தில் ஆரம்பித்திருக்கவேண்டும். ஐம்பது வயதில் ஒரு தள்ளு வண்டிக்குழந்தை என்றால் நாற்பத்தெட்டு வயதில் அவள் கருத்தரித்திருக்கவேண்டும். எதற்கு இந்த வயதில்? அதுவும் இப்போது பெற்று எப்போது வளர்த்து முடிப்பாள்? விபத்தாகத்தான் இருக்கவேண்டும். வயசானதில் திகதிகள் குழம்பிப்போய் மறந்து கணம் அவசரப்பட்டதில் லட்வீனாவோ மார்வனோ இந்தப் பூமியில் அவதரித்துவிட்டார்கள். அல்லது எப்போதோ ஏசுவுக்கோ அல்லாவுக்கோ வைத்த வேண்டுதல் விண்ணப்பம் இப்போதுதான் ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கும். நான் மனைவியிடம் இதனைப்பற்றிப் பேசலாம் என்று திரும்பினேன். அவளோ ஏதோ ஒரு பாட்டைக் கேட்டபடி வேறு உலகத்தில் இருந்தாள். ‘எதுக்கு மத்தவர் பூராயம் எங்களுக்கு?’ என்று அவள் என் கதையைக் கணக்கே எடுக்கப்போவதில்லை. 

அந்த இளம்பெண்ணின் நடையையும் உடலமைப்பையும் பார்க்கையில் அவள் கிரேக்கத்துக்காரியாகவே இருக்கவேண்டும் என்று தோன்றியது. கொஞ்சம் உயரமாக இருப்பதால் அவள் துருக்கியாகவும் இருக்கலாம். அல்லது அப்பா கிரேக்கமும் அம்மா துருக்கியாகவும் இருக்கலாம். முகத்தைப் பார்த்தால் தீர்மானமாகச் சொல்லிவிடமுடியும். அல்லது அந்தக் குழந்தையை அவள் திட்டினாலும் மொழியை வைத்துப் பிடிக்கமுடியும். ஆனால் குழந்தை தூங்கிக்கொண்டிருக்கவேண்டும். அவளும் வேகமாக நடந்துகொண்டிருந்தாள். சிக்னலில் எப்படியும் பார்த்துக்கொள்ளலாம்.

சிக்னல் என்றதும் இலை பிடுங்கவேண்டும் என்ற ஞாபகம் வந்தது. எதற்கு ரிஸ்க் எடுப்பான்? சிக்னல் பட்டன்களை அழுத்துவதற்கு நான் யூகலிப்டஸ் இலைகளையே பயன்படுத்துவதுண்டு. அதற்குக் கொஞ்சம் மருத்துவக் குணமும் உண்டல்லவா. நான் போய் நான்கு இலைகளைப் பிடுங்கிக்கொண்டுவந்தேன். அதில் இரண்டைக் கசக்கி வாசம் பிடித்தேன். மனைவிக்கும் நீட்டினேன். வாங்கி முகர்ந்துவிட்டு அவள் அதை அப்படியே எறிந்துவிட்டாள். பேசாமல் நானும் பாடல் எதையாவது கேட்கலாம் என்று முடிவெடுத்தேன். கனகாலமாக இயக்கப்பாடல்கள் கேட்கவில்லை என்று தோன்றியது. ‘வெள்ளி நிலா விளக்கேற்றும் நேரம்’ கேட்டால் இந்தச் சூழலுக்கு நன்றாக இருக்கும்.

சிக்னல் அண்மித்தது. அந்தப்பெண் சிக்னலின் பட்டனை அவசரப்பட்டுக் கைகளால் அழுத்திவிடமுதல் நான் போய் இலையால் அழுத்தி உதவவேண்டும் என்று மனம் உந்தியது. அவளுக்குக் கிருமி இருக்கலாம் என்பதைவிட அவளுக்குத் தொற்றிவிடக்கூடாது என்ற கரிசனமே மேலோங்கியிருந்தது. பாவம். கைக்குழந்தைவேறு. கணவன் என்றொருத்தன் இருக்கிறானோ தெரியாது. அல்லது இருக்கிறாளோ. ஐவிஎப் ஆகவும் இருக்கலாம். வை டு ஐ கேர்? நான் கொஞ்சம் வேகமாக நடக்க ஆரம்பித்தேன். ஆனால் அதற்குள் அவள் சிக்னலை எட்டிவிட்டாள். ஆனால் அவள் என்னைப்போல இலை குழை பிடுங்கி அலட்டிக்கொள்ளவேயில்லை. தள்ளுவண்டியில் கைகள் இரண்டையும் ஊன்றியபடி தனது இடதுகாலைத் தூக்கி சிக்னல் பட்டனை உதைத்தாள். நான் அதனை எதிர்பார்க்கவில்லை. என் நடையின் வேகத்தைக் குறைத்தேன். அந்த உதையைப் பார்த்தால் அவள் ஒரு இத்தாலிக்காரியாக இருக்குமோ என்றொரு சந்தேகம் வந்தது. முகத்தைப்பார்த்தால் நிச்சயம் பிடிக்கமுடியும். நாங்களும் சிக்னலை நெருங்கிவிட்டோம். சிக்னல் இன்னமும் விழாமல் இருக்கவும் அவள் திரும்பவும் காலால் பட்டனை உதைத்தாள். இம்முறை பலமாக. உதைத்தவள் உடனே எங்களைத் திரும்பிப்பார்த்தாள். தட்ஸ் இட். பார்த்துவிட்டேன். கழுத்துவரை ஸ்கார்ஃப். கறுப்பு முகமூடி. அதன்மேல் கண்ணாடி. தலையிலும் கறுப்பு நிற பீனித் தொப்பி அணிந்து.

தெரிந்த நெற்றியை மட்டும் வைத்துப் பார்த்தால் அவள் அச்சுவேலிப்பக்கமாகக்கூட இருக்கலாம்.

000

Popular posts from this blog

பர்மா புத்தர் - சிறுகதை

பனம் பாத்தி மெதுவாக முளைவிட ஆரம்பித்திருந்தது .   அதிகாலைக் குளிருக்கு அத்தனை பனங்கொட்டைகளும் நிலவண்டுகளின் கூட்டம்போல ஒட்டிக்குறண்டியபடி தூங்கிக்கொண்டிருந்தன . பாத்தியில் இடையிடையே கோரைப்புற்கள் கிளம்பியிருந்தன . முந்தைய நாள் அடித்து ஊற்றிய மழையில் இருக்காழிகள் சில குப்புறப்புரண்டு சாம்பல் நரையேறிய மயிர்க்கற்றைகளோடு வானம் பார்த்தபடி அண்ணாந்து கிடக்க , சில கொட்டைகள் பாத்தியினின்று சளிந்து அடிவாரங்களில் சிதறிக்கிடந்தன . பூரானுக்காகப் பிளக்கப்பட்டிருந்த கொட்டைகள் எல்லாம் ஒரு பக்கம் குவிக்கப்பட்டிருந்தன .  கார்த்திகை விளக்கீட்டுக்குப் பாத்தியடியில் குத்திவிடப்பட்டிருந்த பந்தத்தடி பாதி எரிந்த நிலையில் கறுப்பு வெள்ளைத் தொப்பியோடு இன்னமும் எஞ்சி நின்றது .  

பரியோவான் பொழுதுகள் - உரை

 பரியோவான் பொழுதுகள் வெளியீட்டில் இடம்பெற்ற என் உரையாடலில் காணொலி.

விளமீன் - சிறுகதை

அந்த ஒரு மீன் மாத்திரம் முழித்துக்கொண்டுத் தனித்துத் தெரிந்தது. அந்தக் குவியலில் கிடந்த மீதி அத்தனை மீன்களும் இளஞ்சிவப்பு நிறத்திலிருக்க இது மாத்திரம் வெள்ளைத்தோலில் மெலிதாகப் படர்ந்திருந்த தங்கநிறக் கண்ணாடிச் செதில்களோடும், சற்றே திறந்துகிடந்த இரத்தச்சிவப்பு செவுள்களோடும் குவிந்த கண்களோடும். சரசு மாமி ராசனிடம் திரும்பவும் சொல்லிப்பார்த்தார். இம்முறை சற்றுக் கெஞ்சலாக. “தம்பி. நான் சொல்லுறன். அது எங்கட ஊர் விளமீன்தான். விறைச்சுக்கொண்டு கிடக்கு. நல்ல உடன் மீன். வாங்கித்தாவன்.” “அரியண்டம் பண்ணாம வாங்கோம்மா. ஊர் விளமீனை ஊருக்குப்போகேக்க சாப்பிட்டுக்கொள்ளலாம்.” மாமி அந்த விளமீனையை பார்த்தபடி நின்றார். இனி எப்போது ஊருக்குப் போய், எப்போது விளமீன் வாங்கி. இதுவெல்லாம் நடக்கிற காரியமா? ராசன் வேகமாக அடுத்த கடையை நோக்கி நடக்க ஆரம்பித்திருந்தான். சந்தை முழுதும் ராசனும் ரூபிணாவும் நடந்த வேகத்துக்குச் சரசு மாமியால் ஈடு கொடுக்கமுடியவில்லை. சேலை நிலத்தில் அரிபட அவர் பின்னாலேயே இழுபட்டுக்கொண்டுபோனார். அந்த விளமீன் அவர் பின்னாலேயே இழுபட்டு வந்துகொண்டிருந்தது. “இந்த ஊர் சினப்பரும் விளமீன்மாதிரித்தான் இருக