ஓரன் என்கின்ற கடலோர நகரம் ஒன்றில் இடம்பெறும் கதை இது. ஒரு ஏப்ரல் நாளில் ஓரன் நகரமெங்கும் திடீரென்று ஆயிரக்கணக்கான எலிகள் செத்துவிழத்தொடங்குகின்றன. முதலில் ஒருவருடைய வீட்டு வாசலில் எலி ஒன்று செத்துக்கிடந்தது. பின்னர் தோட்டத்தில் ஐந்தாறு எலிகள் செத்துக்கிடந்தன. குப்பைத்தொட்டியருகே ஐம்பது எலிகள். ஒரு தானியக் கிடங்குக்குப் பின்னே நூற்றுக்கணக்கான எலிகள். இப்படித் தொடர்ச்சியாக எலிகள் செத்துவிழ ஆரம்பிக்கின்றன.