சோமிதரனுடைய இயக்கத்தில், பிரதீபன் செல்வரத்தினம் ஒளிப்பதிவு செய்ய வெளியாகியிருக்கும் திரைப்படமான நீளிரா பற்றி நண்பர்கள் எழுதும் கட்டுரைகளை வாசிக்க ஆர்வமும் கொஞ்சம் குற்ற உணர்வுமே மேலிடுகிறது. நீளிராவை இங்கே மெல்பேர்னில் இரண்டே இரவுகள் மட்டும் ஒன்பதரை மணிக்குக் காட்சிப்படுத்தினார்கள். அந்தத் திரையரங்கும் ஒரு மணி நேரப் பயணத் தூரத்தில் இருக்கிறது. அதனால் அதனைத் திரையில் பார்த்து அனுபவிக்கும் சந்தர்ப்பம் கை நழுவிப்போய்விட்டது. இப்போது திரைப்படம் நன்றாக ஓடிக்கொண்டிருப்பதால் மீண்டும் விநியோகஸ்தர்கள் மெல்பேர்னில் இதனைத் திரையிடக்கூடும். பார்க்கலாம். நீளிராவின் ஒளிப்பதிவாளரான பிரதீபனோடு எனக்கு நீண்ட நாள் பழக்கம் உண்டு. பதின்மூன்று வருடங்களுக்கு முன்னர் அவர் என்னைத் தொடர்புகொண்டு ‘பங்கர்’ புனைவுக்கட்டுரையை குறும்படமாக்கும் ஆர்வத்தைத் தெரிவித்தார். அவர் பூனே திரைப்படக்கல்லூரியில் அப்போது படித்துக்கொண்டிருந்தார் என்பதாக ஞாபகம். சில வாரங்களில் மிக அழகான திரைக்கதை ஒன்றையும் எழுதி அனுப்பினார். சில வசனங்களை யாழ்ப்பாண சொல்வழக்குக்கு மாற்றித்தரக் கேட்டார். சில காட்சிகளைப் படமாக்கியும் அனுப்பியதாக ஞாபகம...