Skip to main content

நாளை காலை நேரில் வருவாளா?

 

gallery2

தொண்ணூறுகள் காதல் படங்களில் காலம். முன்னரும் பின்னருமான காலப்பகுதியிலும் காதல் படங்கள வந்தனதான். ஆனால் தொண்ணூறுகளில் காதலை மட்டுமே மையப்படுத்தி, தலைப்பிலிருந்து எண்ட் கார்ட் வரை காதல் காதல் என்று இயக்குனர்கள் உருகினார்கள். எல்லாமே காதல் கோட்டை என்ற ஒரு படம் செய்த அநியாயம். நமக்குவேறு பதின்ம வயதா; சுவலட்சுமி, தேவயாணி, கௌசல்யா என்று வரிசையாக சேலையிலேயே கவுத்தார்கள். பிறகு சிம்ரன் பாஸ்கட் போல் விளையாடிக் கவுத்தார். ரம்பா மின் விசிறிக்கு முன்னாலே நின்றால், கீர்த்தியின் வாயிலிருந்த இலையான்கூட காத்துக்கும் பறக்காமல் ஆவெண்டு பார்க்கும்.

எல்லாமே காதல் படங்கள் என்பதால், இசையிலும் நிறைய காதல் இருந்தது. தேவாவின் பொற்காலம் அது. அப்போது ராஜா, ரகுமான், வித்யாசாகர் போன்ற இசையமைப்பாளர்கள் போட்ட மெலடிகளின் எண்ணிக்கையை விட தேவா அதிகமாகவே மெலடிப்பாடல்களை தந்திருக்கிறார் என்று தோன்றுகிறது. அதுவும் மரண மொக்கைப்படங்களுக்கெல்லாம் அருமையான பாடல்களை கொடுத்திருப்பார். அதற்காகவே சந்திரன் மாஸ்டரிடம் போய்த்தவம் கிடந்த காலங்கள் ஞாபகம் வருகின்றன. இனியவளே என்று ஒரு படம். பாடல்கள் அத்தனையும் செம. அன்பே டயானா என்று இன்னொன்று. அதிலே “ஒருமுறை சொன்னால் போதுமா” என்று ஹரிகரனும் சுஜாதாவும் பாடின டூயட் இருக்கு. செம. தேவா பாட்டுக்காகவே படம் ஓடிய காலமொன்று இருந்தது. “காலமெலாம் காதல் வாழ்க”, “உன்னுடன்”, “கண்ணெதிரே தோன்றினால்”, “நினைத்தேன் வந்தாய்” போன்ற படங்களில் தேவா மட்டும் இருந்திருக்காவிட்டால் நிலைமை என்ன?

ரகுமான் புதுப்பாடகர்களை அறிமுகப்படுத்துவார். ஆனால் அவரின் படங்கள் வருடத்துக்கு ஐந்தோ ஆறோதான் வெளிவரும். அத்தனை பாடல்களும் சுப்பர் ஹிட்டாக இருக்கும்தான். ஆனால் யாருக்கு காணும்? ராஜா அவ்வப்போது “மீட்டாத ஒரு வீணை” என்பார். வித்யாசாகரை ஏனோ தெரியாது நம்மாட்கள் அதிகம் பயன்படுத்தவில்லை. ஆக நமக்கு தீனி போட்டது தேவாதான். அந்தப்பாடகர்களுக்கு அதிக சந்தர்ப்பம் கொடுத்ததும் தேவாதான். ஹரிஹரன், ஹர்ணி, சுஜாதா, உன்னிமேனன், அனுராதா ஸ்ரீராம் எல்லாம் அதிகம் பாடியது தேவாவுக்கே. தேவா அதிகம் சுதந்திரமும் கொடுப்பார். மனம் விரும்புதேயில் ஹர்ணி அடிக்கிற ஒரு பிர்கா சேர்கஸ் அந்த ரகம்.

ஹரிகரனுக்கும் பாடல்களை அள்ளிக்கொடுத்தது தேவாதான். “ஒருமணி அடித்தால்” ஒரு மரண ஹிட். கொஞ்சநாள் பொறு தலைவா இன்னொன்று. “என் மனதை கொள்ளை அடித்தவளே, வண்ண நிலவே” என்று இன்று முழுக்க லிஸ்ட் பண்ணிக்கொண்டேயிருக்கலாம்.

எங்கள் வகுப்பில் பார்த்தி ஒரு தேவா பக்தன். ப்ரியா ரகுமான் பக்தன். அடிக்கடி இருவருக்குமிடையில் சண்டையே வரும். பார்த்தி தேவாவின் எந்த புது அல்பம் வந்தாலும் சீடி வாங்கி வந்துவிடுவான். நான் என்னிடமிருக்கும் பழைய கே.டி.கே கசட் கொடுத்து அழிச்சு ரெக்கோர்ட் பண்ணித்தாடா என்று கேட்பேன். என்னிடம் பெரிய கசட் ரேடியோ எதுவும் இருக்கவில்லை. ஒரு சின்ன பனசொனிக் மோனோ ரேடியோ. ஒரு டைனமோ சைக்கிள். அவ்வளவுதான். ரிவைண்டு எல்லாம் பேனையால் பண்ணுவதுதான். தொண்ணூறுகளில் பிற்பகுதியில் ஆர்மி கொன்றோலில் யாழ்ப்பாணம் வந்தாலும் இந்த கரண்டுச்சனியன், நல்லபதிவுக்கு கிடைக்கும் லைக்கு போல அவ்வப்போதுதான் வந்து போகும். நம்பமுடியாது.

ஆனால் பார்த்தியிடம் ஒரு கார் பட்டறி இருந்தது. ஒரு ஸ்டீரியோ செட்டும்.இருந்தது. போட்டால் வீடே அதிரும். நகுமோ, தொட தொட மலர்ந்ததென்ன எல்லாம் அவன் செட்டில் கேட்டபோது கிடைத்த மகிழ்ச்சி பின்னாளில் எந்த ஹோம் தியேட்டரிலும் எனக்கு கிடைக்கவில்லை. ஒருமுறை இன்னொரு புதிய ஸ்டீரியோ செட் வாங்கியிருப்பதாக சொல்லி என்னை அவன் வீட்டுக்கு அழைத்துப்போனான். நேருக்கு நேர் வெளிவந்த டைம். எங்கெங்கே எங்கெங்கே என்று ஆஷாவும் ஹரியும் பாடின பாட்டு. புது செட்டிலயும், பழைய செட்டிலயும் மாறி மாறி பாட்டை போட்டுக்காட்டி எதில நல்லாயிருக்கு என்று கேட்டு கடுப்பேற்றினான். பேஸ் முழங்கும் பாட்டு அது. நம்ம வீட்டில் டைனமோ அதனை நார் நாராக கிழிக்கும். நான் கடுப்பில், “பழைய ரேடியோவிலயே நல்லா இருக்கு மச்சான்” என்று சொல்லி அவன் முகம் கோணியதை ரசித்தேன்.

 

 

ஏ. எல் பரீட்சை நெருங்குகிறது.

அஜீத்தின் உன்னைத்தேடி என்றொரு படம் வெளிவருகிறது. சுந்தர் சி படம். கிளாஸ் கட் பண்ணி மாஸ்டரிடம் போகிறோம். மூன்று காரணங்கள். ஒன்று மாளவிகா. மற்றது தேவா. மூன்றாவது ஹரிஹரன். படத்தில் நான்கு பாடல்களை ஹரிஹரன் பாடியிருந்தார். எல்லாமே கிளாஸ். அதிலே ஒன்று “நாளை காலை நேரில் வருவாளா”. பாட்டை பார்த்தி வீட்டிலிருந்து கேட்ட ஞாபகம் இன்னமும் இருக்கிறது. ஹரிஹரன் சலங்கை கட்டி ஆடின பாட்டு. அதுவும் “தாட்சாயிணி” என்று வரும் ஒவ்வொரு தடவையும் ஒவ்வொரு சங்கதி விழும். ஒரு சங்கதியில் ஹரிஹரன் “தயை காட்டு நீ” என்று உச்சம் அடைகையில் பார்த்தி கடுப்பாகிவிட்டான்.

“தேவா பாத்ரூம் போயிருக்கோணும் மச்சான். சைக்கிள் காப்பில ஹரிஹரன் கிடாய் வெட்டிட்டாண்டா!”

பாடல்களுக்கு வயசாவதில்லை.


தொடர்புடைய பதிவுகள்

தேடித்தேடி தேய்ந்தேனே

கொச்சின் மாடப்புறா

Popular posts from this blog

பர்மா புத்தர் - சிறுகதை

பனம் பாத்தி மெதுவாக முளைவிட ஆரம்பித்திருந்தது .   அதிகாலைக் குளிருக்கு அத்தனை பனங்கொட்டைகளும் நிலவண்டுகளின் கூட்டம்போல ஒட்டிக்குறண்டியபடி தூங்கிக்கொண்டிருந்தன . பாத்தியில் இடையிடையே கோரைப்புற்கள் கிளம்பியிருந்தன . முந்தைய நாள் அடித்து ஊற்றிய மழையில் இருக்காழிகள் சில குப்புறப்புரண்டு சாம்பல் நரையேறிய மயிர்க்கற்றைகளோடு வானம் பார்த்தபடி அண்ணாந்து கிடக்க , சில கொட்டைகள் பாத்தியினின்று சளிந்து அடிவாரங்களில் சிதறிக்கிடந்தன . பூரானுக்காகப் பிளக்கப்பட்டிருந்த கொட்டைகள் எல்லாம் ஒரு பக்கம் குவிக்கப்பட்டிருந்தன .  கார்த்திகை விளக்கீட்டுக்குப் பாத்தியடியில் குத்திவிடப்பட்டிருந்த பந்தத்தடி பாதி எரிந்த நிலையில் கறுப்பு வெள்ளைத் தொப்பியோடு இன்னமும் எஞ்சி நின்றது .  

பரியோவான் பொழுதுகள் - உரை

 பரியோவான் பொழுதுகள் வெளியீட்டில் இடம்பெற்ற என் உரையாடலில் காணொலி.

விளமீன் - சிறுகதை

அந்த ஒரு மீன் மாத்திரம் முழித்துக்கொண்டுத் தனித்துத் தெரிந்தது. அந்தக் குவியலில் கிடந்த மீதி அத்தனை மீன்களும் இளஞ்சிவப்பு நிறத்திலிருக்க இது மாத்திரம் வெள்ளைத்தோலில் மெலிதாகப் படர்ந்திருந்த தங்கநிறக் கண்ணாடிச் செதில்களோடும், சற்றே திறந்துகிடந்த இரத்தச்சிவப்பு செவுள்களோடும் குவிந்த கண்களோடும். சரசு மாமி ராசனிடம் திரும்பவும் சொல்லிப்பார்த்தார். இம்முறை சற்றுக் கெஞ்சலாக. “தம்பி. நான் சொல்லுறன். அது எங்கட ஊர் விளமீன்தான். விறைச்சுக்கொண்டு கிடக்கு. நல்ல உடன் மீன். வாங்கித்தாவன்.” “அரியண்டம் பண்ணாம வாங்கோம்மா. ஊர் விளமீனை ஊருக்குப்போகேக்க சாப்பிட்டுக்கொள்ளலாம்.” மாமி அந்த விளமீனையை பார்த்தபடி நின்றார். இனி எப்போது ஊருக்குப் போய், எப்போது விளமீன் வாங்கி. இதுவெல்லாம் நடக்கிற காரியமா? ராசன் வேகமாக அடுத்த கடையை நோக்கி நடக்க ஆரம்பித்திருந்தான். சந்தை முழுதும் ராசனும் ரூபிணாவும் நடந்த வேகத்துக்குச் சரசு மாமியால் ஈடு கொடுக்கமுடியவில்லை. சேலை நிலத்தில் அரிபட அவர் பின்னாலேயே இழுபட்டுக்கொண்டுபோனார். அந்த விளமீன் அவர் பின்னாலேயே இழுபட்டு வந்துகொண்டிருந்தது. “இந்த ஊர் சினப்பரும் விளமீன்மாதிரித்தான் இருக