யாழ்ப்பாணம் முழுதும் கட்டாக்காலி நாய்களால் நிறைந்திருந்தது. முன்னரானால் ஒழுங்கை முகப்புகளிலும் கோயில் முன்றல்களிலும் சந்தைகளிலும் சாப்பாட்டு ஓட்டல்களுக்குப் பின்னாலிருக்கும் வெறுங்காணிகளிலுமே கட்டாக்காலி நாய்கள் திரிவதுண்டு. என்னதான் கட்டாக்காலிகள் என்று சொன்னாலும் அவற்றுக்கும் ‘கண்ணன் லொட்ஜ் நாயள்’, நந்தாவில் அம்மன் நாயள்’, ‘நல்லூரடி நாயள்’, ‘மூத்திர ஒழுங்கை நாயள்’, பணிக்கரடி நாயள் என்று பல முத்திரைப் பெயர்கள் இருந்தன. அந்தக் கட்டாக்காலிகள் போட்ட குட்டிகள்தான் எங்கள் வீடுகளிலெல்லாம் வளர்ப்பு நாய்களாகவும் இருந்தன. கட்டாக்காலிகளின் எண்ணிக்கை அதிகமானாலோ அல்லது அவற்றின் தொல்லை கூடிவிட்டாலோ நகரசபை நாய்பிடிகாரர் வந்து அவற்றைப்பிடித்துக்கொண்டு போய்விடுவார்கள். பல நாய்களைத் தெருவிலேயே வைத்து இயக்கங்களும் இந்திய இலங்கை ஆர்மிகளும் மாறி மாறிச் சுட்டுப்போட்ட சம்பவங்களும் இடம்பெற்றிருக்கின்றன. சுடும்போது அவர்கள் வளர்ப்புநாயா கட்டாக்காலியா என்று பேதம் பார்க்கமாட்டார்கள். எது எப்படியோ, இன்னோரன்ன காரணங்களால் அந்நாட்களில் கட்டாக்காலிகளின் எண்ணிக்கை எப்போதுமே ஒருவித கட்டுக்குள்ளேயே இருந்தது என்க.