Skip to main content

ஊரோச்சம் : நயினாதீவின் மாஸ்டர் செஃப்
எனக்கும் மனைவிக்குமிடையில் சாப்பாட்டு விசயத்தில் அடிக்கடி சண்டை வரும்.

நாங்கள் ஒரு தீவுக் குடும்பம் என்பதால் கடலில் நீந்துகின்ற, கடற்கரையில் ஊருகின்ற எதையுமே ருசித்துச் சாப்பிடுவோம். ஒவ்வொரு ஜந்துவையும் எப்படிச் சமைக்கவேண்டுமென்பதை வேதங்கள்போல எங்கள் முன்னவர்கள் செவிவழியாக தம் அடுத்த சந்ததிகளுக்கு அருளிச்செய்திருக்கிறார்கள். நிலவுக் காலத்தில் நண்டு வலிச்சலாக இருக்கும். சின்னத்திரளி பதினொருமணிக்குமேலே நாறிவிடும். களங்கண்டி விளமீனைப் பொரித்துப் புட்டோடு சாப்பிடவெண்டும். ஒட்டி என்றால் தடித்த குழம்பும் சொதியும். கணவாயை ஏழு சிரட்டையில் அவிய விடவேண்டும். மட்டி எப்படி சமைப்பது. ஒடியற்கூழுக்கு என்னென்ன போடுவது, நெத்தலியில் சொதி. சூடையில் பொரியல். முரள். கிளாக்கன். சீலா, கும்பளா, அறக்குளா முதற்கொண்டு முள்ளு மீனான கொய்யையையும் பச்சைத்தண்ணியான கட்டாவையும்கூட எப்படி சமைக்கவேண்டுமென எத்தனை எத்தனை ரெசிப்பிகள். எந்தெந்த நோய்க்கு எந்தெந்த மீன்கள். எந்தெந்தக் காலத்தில் எந்தெந்த கறிகள் என எல்லாமே என் அம்மாவுக்கு அத்துப்படி. அபிமன்யுவுக்கு கருவிலேயே சக்கரவியூகம் சொல்லிக்கொடுக்கப்பட்டதுபோல நயினாதீவார் எல்லோருக்கும் கருவிலேயே கடலுணவு ரெசிப்பிகள் எல்லாமே சொல்லிக்கொடுக்கப்படுகின்றன. இதைவிட நாட்டுக்கோழி, ஆட்டிறைச்சி, ஆமைக்கறி என இன்னொரு லிஸ்ட் இருக்கிறது. அடிப்படையில் நாங்கள் மச்சத்துக்கு அவ்வப்போது கொஞ்சமே மரக்கறி சேர்த்து சாப்பிடும் ஆட்கள். அதில்கூட கொம்பினேசன்கள் எங்களுக்கு முக்கியம். விளமீன் குழம்பு என்றால் கீரைத் துவையல் வேண்டும். ஒட்டி மீன் குழம்பு என்றால் பூசனிக்காய்க்கறி வேண்டும். ஆட்டிறைச்சிக்கறி என்றால் கத்தறிக்காய் வெள்ளைக்கறி வேண்டும். ஒடியற்கூழுக்கு தேங்காய்ச்சொட்டு போடாவிட்டால் அது யுத்தக்குற்றம். சூடை மீன் பொரித்தால் புட்டு இரண்டு நீத்துப்பெட்டிகள் அதிகமாக அவிக்கவேண்டும். இப்படி இன்னார்க்கு இன்னாரென்று எழுதி வைத்தாரே தீவார் அன்று.

ஆனால் என் மனைவியின் ஊர் சாவகச்சேரி. அவர்கள் மச்சம் சாப்பிடுவார்கள்தான். ஆனால் எங்களைமாதிரி சட்டிக்குள் குதித்து சூசைட் பண்ணமாட்டார்கள். மீன் தலைக்காக குடும்பங்கள் அந்த ஊரிலே பிரிவதில்லை. கணவாயின் கண் தனக்குக் கொடுக்கவில்லை என்று சிறுவர்கள் அந்த ஊரிலே நெல்லி மரத்தில் ஏறி சத்தியாக்கிரகம் செய்வதில்லை. அவர்கள் கறிக்கு வெள்ளைக்காரர்மாதிரி தூள் போடுவார்கள். எங்கள் ஊர்க்கறிகள் அவுஸ்திரேலிய காட்டுதீக்கள். எங்கள் கறிச்சட்டிகளைக் காயவைத்தால் உப்பளமே கிடைக்கும். அவர்கள் கறிகள் எல்லாமே நன்னீர் ஏரிகள்.

இது தவிர நான் பிறந்து வளர்ந்தது தின்னவேலி என்பதாலும், பல வருடங்கள் புலம்பெயர்ந்து கொழும்பு, சிங்கப்பூர், அவுஸ்திரேலியா என வாழ்ந்துவிட்டதாலும் என் உயிரணுவில் ஒட்டிக்கிடந்த நயினாதீவு மீன்வாசம் அகன்றிருக்க்கும் என்று என் மனைவி திருமணத்துக்கு முன்னர் நினைத்திருக்கக்கூடும். ஆரம்பத்தில்வேறு அவுஸி ஆக்ஸண்டில் தயார்பண்ணி வெளுத்து வாங்கியதால் இவன் பாஸ்டாவையும் பேர்கரையும்விட தவிர எந்த உணவையும் இந்தை இப்பிறவியில் தன் சிந்தையாலும் தொடான் என என் மனைவி நினைத்திருக்கலாம். ஆனால் நயினாதீவார் என்ற அடையாளம் பிறப்பால் வருவது என்பதையும் அந்தச் சாம்பல் புழுதி எங்கள் டி.என்.ஏயில் எப்போதும் கலந்திருக்கும் என்பதையும் அவர் எப்படி அறிந்திருக்கக்கூடும்?

000

நயினாதீவாரின் சாப்பாட்டுப்பழக்கம் எத்தனை பழமையானது என்பதற்கு மணிமேகலையில் வரும் இந்தப்பாடலே சாட்சி. மணிமேகலைத் துறவி மணிபல்லவத் தீவுக்கு (இன்றைய நயினாதீவு) வந்திறங்கியபோது இங்கிருந்த மக்களின் பண்புகளைப்பார்த்து வியந்தேற்றிப் பாடிய வரிகள் இவை.

செய்யுள் 119, அதிகாரம் 4,
“தீவார் திடுக்கிடுவார்
திண்ணைக்கு மண் எடுப்பார்
ஆறாத சோற்றை,
அவுக் அவுக்கென்று தின்றிடுவார்”
இப்படி நீண்டு செல்லும் இவ்வரிகளின் அர்த்தம் விளங்காதவர்களுக்காக.

தீவார் எப்போதுமே களங்கண்டி மீன்களை உண்ணும் பழக்கமுடையவர். களங்கண்டி என்பது ஆழ்கடல் மீன்பிடிப்பு அல்ல. அவை ஆழமற்ற சதுப்புக்கடல்களில் பிடிபடும் மீன்கள். ஆழமற்ற கடல்களில் வளம் அதிகமாக இருப்பதால் அந்த மீன்கள் உணவுக்காக ஊர் ஊராக அலைந்து திரிவதில்லை. அதனால் அவை அத்தனை சுறுசுறுப்பான மீன்கள் கிடையாது. அவற்றைச் சாப்பிட்டுக் கொழுத்துத் திரியும் தீவாரும் சுறுசுறுப்பானவர்கள் கிடையாது. அவர்கள் சமயம் கிடைக்கும்போதெல்லாம் கண் அயர்ந்துவிடுவர். அவர்கள் நின்றுகொண்டும் தூங்கும் வல்லமை படைத்தவர்கள். கேட்டால் அலெக்சாண்டர் குதிரையிலிருந்தே தூங்குவான் என்பார்கள். அதனாலேயோ என்னவோ எப்போதும் எந்த தீவாரையும் ‘ஏய்’ என்று கூப்பிட்டுப்பாருங்கள். உடனேயே திடுக்கிட்டு “நான் எங்கிருக்கிறேன்” என்று விளிப்பார்கள். அதுதான் “தீவார் திடுக்கிடுவார்”.

அடுத்தவரியின் அர்த்தம் நேரிடையானது. தீவார் ‘சமா’ போடுவதில் வல்லவர். திண்ணையில் உட்கார்ந்து அவர்கள் கதையளக்கத்தொடங்கினால் வெண்முரசு முடிக்காமல் எழார். அவர்கள் உட்கார்ந்த இடத்தில் மண் அரைபட்டு குறுமணல் கும்மி கும்மியாகக் குவியும். அதுதான் “திண்ணைக்கு மண் எடுப்பார்”.

“ஆறாத சோற்றை அவுக் அவுக்கென்று தின்றிடுவார்” goes without saying. அவர்களுக்கு சாப்பாடு என்றால் பொறுமை பிடிபடாது. ஒரு சாப்பாட்டை ஆற அமர ரசித்துச் சாப்பிடவேண்டும் என்ற பக்குவமே அவர்களுக்குக் கிடையாது. காரணம் வெள்ளிடையானது. அவர்கள் குடும்பங்களில் பத்துபேர் இருக்கிறார்கள் என்றால் ஐந்துபேருக்கு அளவான சோறுதான் பானையில் அவியும். ஆக சோறு அவிந்ததா, ஆறியதா என்றெல்லாம் டெஸ்டிங் செய்வதற்குள் அடுத்தவர் வந்து அதை தன் வாயில் போட்டுவிடுவார் . அதனாலேயே “ஆறாத சோற்றை அவுக் அவுக்கென்று தின்றிடுவார்”

By the way, மணிமேகலையின் மூலப்பாடல் “தீவான் திடுக்கிடுவான்” என்று ‘ன்’ விகுதியிலேயே எழுதப்பட்டிருந்தாலும் gender equality கருதி இப்போது அது ‘ர்' விகுதி சேர்த்து மாற்றப்பட்டிருக்கிறது.

000

இந்த நிலையிலேயே எங்கள் வீட்டில் சமையல் ஆரம்பிக்கிறது. உங்கள் வீடுகளில் எல்லாம் எப்படியோ தெரியாது. ஆனால் வீட்டில் மனைவி சமைக்கும்போதும் அல்லக்கை வேலை பார்ப்பது நானாகத்தான் இருக்கும். நான் சமைக்கும்போதும் அதே அல்லக்கை வேலையை நானே பார்க்கவேண்டும். அப்படி அல்லக்கை வேலை பார்க்கும்போது நான் என் வாயை வைத்துக்கொண்டு சும்மா இருக்கலாம்தான். ஆனால் என் அப்பன் வாய் எனக்கும். I can’t help myself. எல்லாவற்றுக்கும் ஏதாவது சொல்லுவேன். சமையலுக்குக் கொமெண்ட் அடிப்பேன். ஒவ்வொரு கொமெண்டை சொல்லும்போதும் அது என்னுடைய ஐடியாவாகச் சொன்னால் எடுபடாது. அம்மா அப்படித்தான் சமைப்பா என்று சொன்னால் கிழிஞ்சது கோவணம். சோ என்னுடைய குறிப்புகளுக்காக நான் எடுத்தாளும் பாத்திரம்,

கொழும்பர் மாமி.

கொழும்பர் மாமி யார், அவருக்கும் கொழும்புக்கும் என்ன சம்ப்ந்தம் என்பது இக்கதைக்கு அத்தனை முக்கியம் கிடையாது. ஆனாலும் ஒரு உக்குட்டி brief. கொழும்பர் மாமிக்கும் கொழும்புக்கும் சம்பந்தமே கிடையாது. அவர் வவுனியாவே தாண்டியதில்லை. ஆனால் அவரின் கணவர்தான் முதன்முதலில் நயினாதீவிலிருந்து கொழும்புக்குச் சென்று அங்கு பிசினஸ் செய்தவர் என்பதால் அவர் கொழும்பர் ஆனார். அவரின் மனைவி கொழும்பர் மாமி ஆனார். கொழும்பர் கொழும்புக்குப்போய் இரண்டே மாதங்களில், அவர்மீது பொறாமை பிடித்த வீரகத்தி கொழும்பருக்குச் சூனியம் வைத்ததில் கொழும்பர் களனி ஆற்றைக்கடக்கையில் மாரடைப்பில் இறந்துபோனார். அதன்பின்னர் கொழும்பர்மாமி தனிக்கட்டையாக எல்லோர் வீடுகளிலும் மாறி மாறி வாழத்தொடங்கினார். எங்காவது குழந்தைப் பிறப்பு, சாமத்தியவீடு, கலியாணம், செத்தவீடு, திவசம் என்றால் மாமியைக் கொண்டுவந்து இறக்கிவிடுவார்கள். இன்னொரு வீட்டில் கொண்டாட்டமோ அவலமோ தொடங்கும்வரை மாமி இந்தவீட்டில் இருப்பார். இருக்கும்போது அங்கிருக்கும் குழந்தைகளைக் குளிப்பாட்டி, சாப்பாடு கொடுத்து, சிறுவர்களோடு தாயம் விளையாடி, இளந்தாரிகளோடு வயது வந்தவர்களின் கதைகள் கதைத்து, பெரியவர்களோடு விடுப்பு கதைத்து, சமைத்து, வீடு கூட்டி என்று மனிசி ஒவ்வொருவீடுகளிலும் தன்னுடைய முப்பதாவது வயதிலிருந்து பாட்டிவேடம் பூண்டு வாழ்ந்தவர். ஆனால் எந்தச்சீவியத்திலும் மனிசி ஒருவீட்டில் நடக்கும் இரகசியங்களையும் சண்டை சச்சரவுகளையும் மறு வீட்டில் பகிர்ந்தது கிடையாது. இவ்வளவும் போதும்.

ஆக சிறுவயது முதலே கொழும்பர்மாமி எங்கள் வீடுகளில் ஒரு இன்றியமையாத பாத்திரமென்பதால் அவரின் பெயரால் என் மனைவியைச் சினமூட்டுவது என் வேலையாகிப்போனது.

Some of my most irritating quotes,

“கொழும்பர் மாமி எண்டா இந்த மீன் குழம்புக்கு இன்னமும் நல்லா புளிய விட்டிருப்பா”

“மனிசி கணவாய் பொறியல் கறிக்கு தண்ணி வத்திமுடியும்வரைக்கும் எண்ணை விடாது”

“நெத்தலிச் சொதிக்கு கொழும்பர்மாமி ரெண்டு அகத்தி இலை போடுவா..ச்சைக் என்ன ருசி தெரியுமா”

“அந்தக்காலத்தில் அந்த மனிசி புட்டு அவிக்கேக்க, கொஞ்சத்தை எடுத்து மல்லிகைப் பந்தலில அப்பிடியே தூவி விடுவம். ஊரே அதை எடுத்து கொண்டையில வைக்கும் தெரியுமா”

“மனிசி ரசம் வச்சா அது ரசம். இதெல்லாம் வெறும் விசம்”

இப்படியான கற்பனைகள் நாளாக நாளாக பிறிதொரு வடிவத்தை எடுத்தன.

“கொழும்பர் மாமி பிஷ் சவுடர் (Fish Chowder) செய்து நீ சாப்பிடோணுமே …. வெள்ளைக்கார சீமாட்டி ஒருத்திட்ட இருந்து பழகினவா”

“கொழும்பர் மாமிண்ட சீபுட் பாஸ்டா ரெசிப்பி ஆனானப்ப்பட்ட சிசிலிலையே பேமஸ் தெரியுமா”

“மனிசிண்ட பிரசண்டேசனுக்கு அந்தக்காலத்தில இன்ஸ்டகிராம் இருந்திருந்தா டெரர்தான் போ”

“மாமி பாரை மீனை பனங்கொட்டைல சுட்டு அதுக்கு புளிக்கரைசல ஊத்தி ஓலைக்குருத்தில வச்சுத் தரும். பக்கத்தில தேங்காய்ச்சொட்டும் இரண்டு இருக்கும். ச்சைக் மாஸ்டர் செஃப் பிஃனாலே டிஷ் அது”

“Shut up you idiot”

000

இம்முறை ஊருக்குப்போனபோது வழமைபோல நயினாதீவுக்கும் போனேன். போன இடத்தில் கொழும்பர் மாமியைப் பார்க்காமல் திரும்பமுடியுமா? கொழும்பர் மாமிக்கு இப்போது தொண்ணூறு வயதாகிறது. ஊரில் அவரும் இன்னொரு எழுபத்தைந்து வயது அம்மாவும் ஒன்றாக இருக்கிறார்கள். இருவருமே வயோதிபத்தின் இக்கட்டுகளில் இருப்பவர்கள். மாமிக்கு இடுப்பு ஒடிந்துபோய் நடக்கமுடியாத நிலை. நான் படலையைத் திறந்துகொண்டு உள்ளே போனபோது மாமி மதிய உணவுக்கு உருளைக்கிழங்கை சீவிக்கொண்டிருந்தார். வாய் முழுக்க வெத்திலை சீவல். அதை எச்சிச்சட்டிக்குள் துப்பிவிட்டு என்னைப்பார்த்தார்,

“ஆரப்பன்? மட்டுக்கட்ட ஏலேல”

“நாந்தான் மாமி, குமரன், மணியாளிண்ட மகன்”

அவ்வளவுதான்.

“ஐயோ எண்ட அம்மாளாச்சி, மணியாளிண்ட பெடியா? இப்பிடி வளந்திட்டாய், வாடா ராசன்”, என்று கட்டிப்பிடித்துக் கொஞ்ச ஆரம்பித்தார். அவரைத் தொடவே அச்சமாக இருந்தது. அவ்வளவு நொடிந்துபோய் இருந்தார். ஆனால் நினைவுகள் மங்கவில்லை. பிடித்த என் கையை விடாமலேயே என்னோடு பேசிக்கொண்டிருந்தார். அம்மாவைப்பற்றி விசாரித்தார். எங்கள் தின்னவேலி வீட்டில் அவர் நட்டுவைத்த கமுகு மரம் உயர்ந்து வளர்ந்திருக்கு என்றேன்.

“அப்பனுக்கு அதெல்லாம் ஞாபகம் இருக்கா? மாமியை இன்னும் மறக்காம இருக்கிறியே ராசா”

“மாமியை மறக்கேலுமே …அது சரி, நீங்கள் வெளிய வெளிக்கிடுறனிங்களா? கோயிலுக்கு போறனிங்களா”

“எங்கையப்பன் … நான் முத்தத்துக்க கால் வச்சே ஒரு கிழமையாகுது”

எனக்கு திடுக்கென்றது. தொண்ணூறுகளில் மாமி யாழ் நகரத்தை ஒரு சுற்று வந்துகொண்டிருப்பார். “மாமிதான் ஊர் முழுக்க சுற்றுலா போறா” என்று நாங்கள் பகிடி பண்ணுவதுண்டு. இப்போது மாமி தன் வயோதிபத்தின் எஞ்சிய தினங்களை வாழ்ந்து கழித்துக்கொண்டிருக்கிறார் என்று தோன்றியது.

“வீட்டில உங்கட கதைதான் எப்பவும் கதைப்பம் மாமி”

“அப்பிடியா … மனிசி என்ன செய்யிறாள்? பிள்ளையையும் கூட்டி வந்திருக்கலாமே”

உடனே மனைவிக்கு வைபர்போட்டேன். ஸ்பீக்கரில் “நயினாதீவில் மிக முக்கியமான சொந்தம் வீட்டில் இருக்கிறேன், கண்டுபிடி பார்க்கலாம்” என்றேன்.

“பிள்ளை, எங்கை என்னைக் கண்டுபிடி பார்ப்பம்” என்று மாமியும் கூட்டுச் சேர்ந்தார். என் மனைவி யோசிக்கவேயில்லை.

“ஆரு, எங்கட மாஸ்டர் செஃப் கொழும்பர் மாமியா?”

“கொழும்பர் மாமி” என்று மனைவி சொன்னதும்தான் தாமதம். அவருக்கு வந்த புழுகத்தைப் பார்க்கவேணுமே. “என்ர அம்மாளாச்சிக் குட்டி” என்று சொல்லியபடியே மாமி என் கையில் இருந்த போனைப் பறித்தெடுத்து அதன் திரைக்குப் பொச்சு பொச்சென முத்தம் கொடுக்கத் தொடங்கினார். தொடர்ந்து என் மனைவியோடு பேசிக்கொண்டிருந்தார். “எப்பப்பார்த்தாலும் உங்கட புராணம்தான் மாமி” என்று மனைவி சொல்ல மனிசி கதைக்கவே முடியாமல் சந்தோசத்தில் திணறிக்கொண்டிருந்தது. அடிக்கடி போனைக் கொஞ்சிக்கொண்டிருந்தது.

“மாமியிட்ட போன் நம்பர் இருக்கா?”

“ஒண்டு இருந்துது … பழுதாப்போச்சுது”

சார்ஜ் போடாமல் விடப்பட்டிருக்கலாம். அம்மாவுக்கும் வைபர் எடுத்துப் பேசவைத்தேன். பின் அக்காவுக்கும் எடுத்தேன். எல்லோரையும் மாமி கொஞ்சியதில் என் போனின் திரை முழுதும் எச்சில் படர்ந்திருந்தது.

பின்னர் கடைசி லோஞ்சிக்கு நேரமாகிறது என்று நான் விடைபெற்றேன். பாலத்தடிக்குத் திரும்பி லோஞ்சிக்காகக் காத்திருக்கையில் போனை எடுத்துப்பார்த்தேன். அதன் திரையில் இன்னமும் காயாமல் வெற்றிலைச்சாயம் எஞ்சியிருந்தது. சீவலைச் சாப்பிட்டுத் தண்ணி குடிச்சதுமாதிரி நெஞ்சை அடைத்துக்கொண்டு வந்தது. நிமிர்ந்துபார்த்தேன். நீண்டதொரு சீலா மீனைப்போல நயினாதீவு கடலில் மிதந்துகொண்டிருந்தது. அதன் தலைப்பகுதியில் அம்மாள் கோயில். அப்போதுதான் ஊருக்கு வந்து கோயிலை எட்டிப்பார்க்காமல் திரும்பிவிட்டோமே என்ற நினைப்பு வந்தது. ஒரு எட்டு போய்விட்டு வரலாம் என்று நினைப்பதற்குள் லோஞ்சி வந்து ஜெட்டியில் அடைந்தது. சரி அடுத்தமுறை பார்க்கலாம் என்று லோஞ்சியில் ஏறினேன்.

என் ஊர் கொஞ்சம் கொஞ்சமாக என்னை விலத்திக்கொண்டு நீந்திச்செல்ல ஆரம்பித்தது. கொழும்பர் மாமி இப்போது நான் வந்து போனதையும், என் அம்மாவையும் எங்கள் குடும்பங்களின் கதைகளையும் அசைபோட்டபடி வெற்றிலை மடித்துக்கொண்டிருப்பார். எங்கள் குடும்பங்களின் இன்பம் துன்பம் அத்தனையும் அறிந்தவர் அவர். தொண்ணூறைத் தாண்டினாலும் நினைவுகள் இன்னமும் அவருக்குத் தளும்பவில்லை. அழுகைகளையும் சிரிப்புகளையும் கூடவிருந்து பார்த்த சாட்சியம் அவர். நான் ஊரை வெறித்துப் பார்த்துக்கொண்டேயிருந்தேன். அம்மாள்கோயில் கோபுரம் சிறிதாகிக்கொண்டே சென்றது.

“அப்பன் எப்ப இஞ்சால வந்தாலும் இந்த மாமியை பாக்கவர மறந்திடாத”

சலுக்கென்று ஒரு அலை லோஞ்சி யன்னலுக்குள்ளால் வந்து என் முகத்தை நனைத்துவிட்டு அகன்றது.

000

Popular posts from this blog

பர்மா புத்தர் - சிறுகதை

பனம் பாத்தி மெதுவாக முளைவிட ஆரம்பித்திருந்தது .   அதிகாலைக் குளிருக்கு அத்தனை பனங்கொட்டைகளும் நிலவண்டுகளின் கூட்டம்போல ஒட்டிக்குறண்டியபடி தூங்கிக்கொண்டிருந்தன . பாத்தியில் இடையிடையே கோரைப்புற்கள் கிளம்பியிருந்தன . முந்தைய நாள் அடித்து ஊற்றிய மழையில் இருக்காழிகள் சில குப்புறப்புரண்டு சாம்பல் நரையேறிய மயிர்க்கற்றைகளோடு வானம் பார்த்தபடி அண்ணாந்து கிடக்க , சில கொட்டைகள் பாத்தியினின்று சளிந்து அடிவாரங்களில் சிதறிக்கிடந்தன . பூரானுக்காகப் பிளக்கப்பட்டிருந்த கொட்டைகள் எல்லாம் ஒரு பக்கம் குவிக்கப்பட்டிருந்தன .  கார்த்திகை விளக்கீட்டுக்குப் பாத்தியடியில் குத்திவிடப்பட்டிருந்த பந்தத்தடி பாதி எரிந்த நிலையில் கறுப்பு வெள்ளைத் தொப்பியோடு இன்னமும் எஞ்சி நின்றது .  

பரியோவான் பொழுதுகள் - உரை

 பரியோவான் பொழுதுகள் வெளியீட்டில் இடம்பெற்ற என் உரையாடலில் காணொலி.

விளமீன் - சிறுகதை

அந்த ஒரு மீன் மாத்திரம் முழித்துக்கொண்டுத் தனித்துத் தெரிந்தது. அந்தக் குவியலில் கிடந்த மீதி அத்தனை மீன்களும் இளஞ்சிவப்பு நிறத்திலிருக்க இது மாத்திரம் வெள்ளைத்தோலில் மெலிதாகப் படர்ந்திருந்த தங்கநிறக் கண்ணாடிச் செதில்களோடும், சற்றே திறந்துகிடந்த இரத்தச்சிவப்பு செவுள்களோடும் குவிந்த கண்களோடும். சரசு மாமி ராசனிடம் திரும்பவும் சொல்லிப்பார்த்தார். இம்முறை சற்றுக் கெஞ்சலாக. “தம்பி. நான் சொல்லுறன். அது எங்கட ஊர் விளமீன்தான். விறைச்சுக்கொண்டு கிடக்கு. நல்ல உடன் மீன். வாங்கித்தாவன்.” “அரியண்டம் பண்ணாம வாங்கோம்மா. ஊர் விளமீனை ஊருக்குப்போகேக்க சாப்பிட்டுக்கொள்ளலாம்.” மாமி அந்த விளமீனையை பார்த்தபடி நின்றார். இனி எப்போது ஊருக்குப் போய், எப்போது விளமீன் வாங்கி. இதுவெல்லாம் நடக்கிற காரியமா? ராசன் வேகமாக அடுத்த கடையை நோக்கி நடக்க ஆரம்பித்திருந்தான். சந்தை முழுதும் ராசனும் ரூபிணாவும் நடந்த வேகத்துக்குச் சரசு மாமியால் ஈடு கொடுக்கமுடியவில்லை. சேலை நிலத்தில் அரிபட அவர் பின்னாலேயே இழுபட்டுக்கொண்டுபோனார். அந்த விளமீன் அவர் பின்னாலேயே இழுபட்டு வந்துகொண்டிருந்தது. “இந்த ஊர் சினப்பரும் விளமீன்மாதிரித்தான் இருக