ஒற்றன்

Apr 9, 2020


பெங்களூர் சென்ற சமயம் அசோகமித்திரனின் ‘ஒற்றன்’ நாவலை வாங்கியிருந்தேன். பெயரைப் பார்த்ததும் ஏதோ திரில்லர் கதையாக்கும் என்று இரண்டு வருடங்களாக வாசிக்காமலேயே இருந்துவிட்டேன். கிருமிக்காலத்தில் அதிகம் அழுத்தம் தராத புத்தகத்திலிருந்து மீளவும் வாசிப்பைத் தீவிரமாக ஆரம்பிக்கலாம் என்று தூக்கிய புத்தகம் ஒற்றன்.

அனுபவத்தைப் புனைவினூடு வெளிப்படுத்தும் நாவல் ஒற்றன். அமெரிக்காவிலுள்ள ஐயோவா பல்கலைக்கழகத்தின் அழைப்பின்பேரில் சர்வதேச எழுத்தாளர் சந்திப்புக்குச் செல்லும் அசோகமித்திரனுக்கு அங்கு ஏற்படும் அனுபவங்களே இந்நாவல். ஒருவிதத்தில் இது பயணக்கட்டுரை. அல்லது பயணப் புனைவு.

எல்லோருமே இப்போது பயணம் செய்கிறார்கள். தவிர, வீட்டுக்கழிப்பறையிலிருந்தவாறே சென்பீட்டர்ஸ்பேர்கின் கொங்கிரீட் பிளாட்பாரத்தில் நம்மால் இப்போது நடக்கமுடிகிறது. அங்குள்ள கட்டடங்களையும் கடைகளையும் அவதானிக்கமுடிகிறது. அந்தந்த ஊர் மக்களின் வாழ்வை அங்குள்ள இலக்கியவாதிகளே எழுதிவிடுகிறார்கள். அல்லது நண்பர்களின் முகநூல் டைம்லைன் சொல்லிவிடுகிறது. இந்த நிலையில் வெளியிலிருந்து செல்லும் ஒருவர், ஒரு குறுகிய காலத்தில் ஒரு புது ஊரையும் மனிதரையும் எப்படி இனங்கண்டு எழுதிவிடமுடியும்? பயண நூல்கள் காலவதியாவதற்கு இவையே காரணங்கள் என்று நினைக்கிறேன்.

இது தெரிந்தே ஒற்றனை அசோகமித்திரன் நாவலகாகத் தர முனைந்திருக்கிறார். ஐயோவா நகரத்தை விபரிக்க அவர் பெரிதும் அலட்டிக்கொள்ளவில்லை. ஆனால் தான் சந்தித்த மனிதர்களை ஓரளவுக்கு வெளிக்காட்ட முனைகிறார். அவர்களுடைய விழுமியங்களில் இருக்கும் நுணுக்கமான வித்தியாசங்களைத் தேடுகிறார். அதனை சொல்லாமல் சொல்லுவதுதான் அசோகமித்திரனின் எழுத்து. என்ன ஒன்று அசோகமித்தரன் ஒருபோதும் வீட்டுக்குள்ளே போவது கிடையாது. யன்னலுக்குள்ளாலும் எட்டிப்பார்ப்பது கிடையாது. அதனால் மிக நெருக்கமாகப் போய் மனிதர்களின் அந்தரங்கத்தை அவர் எழுதுவதில்லை. எட்டநின்றே விளிப்பார்.

ஒற்றனை தனியே நாவலாகவும் பார்க்கமுடியும். சிறுகதைத்தொகுப்பாகவும் பார்க்கமுடியும். பயண அனுபவமாகவும் பார்க்கமுடியும். இப்படியொரு வடிவத்தை எழுபதுகளிலேயே மனுசன் முயன்றிருக்கு. நூல் வெளிவந்த காலத்தில் அது பதிப்பாளர் வீட்டில் கட்டுக்கட்டாகத் தேங்கிக்கிடந்ததாம்.

நூலில் ஓரிரு இடங்களில் கதை சொல்லிக்கு நெருக்கமான உறவுகள் சில கிடைக்கின்றன. பெண் உறவுகளும். அவற்றோடு ஒரு எல்லைக்கு மேலே நெருங்கமுடியாமல் கதையை மாற்றுகின்ற சூழல் அசோகமித்திரனுக்கு ஏற்படுகிறது. இப்படியான தற்புனைவு எழுத்துகளில் இருக்கின்ற சவால் இது. உண்மைக்கு மிக நெருக்கமாகப் புனைவு இருக்கவேணுமெனில் புனைவில் நிறைய உண்மைகள் இருக்கவேண்டும். அப்போது புனைந்து எழுதுவதையும் வாசிப்பவர்கள் உண்மை என்று நம்பிவிடுவர். வாசிப்பு நெருக்கமாகும். இதனுடைய எதிர்விளைவு என்னவெனில் எழுத்தாளரைத் தெரிந்தவர்கள் புனைவை உண்மை என்று நம்பிவிடுவதுதான். அதிலும் சமூக இணையத்தளங்களில் சிறுகதைகளை எழுதும்போது இந்தச் சங்கடம் மேலும் சிக்கலாகிவிடும்.

சில வாரங்களுக்கு முன்னர் ‘ஊபர் ஈட்ஸ்’ என்றொரு சிறுகதை எழுதியிருந்தேன். அடுத்தநாள் மிக நெருக்கமான நண்பன் ஒருத்தன் மெசேஜ் பண்ணியிருந்தான். “என்னடா வேலை போயிற்றா?” என்று. இந்தக்கேள்வியை பொதுவான வாசகர்கள் கேட்பதில்லை. வாசகர்களுக்கு கதைசொல்லிதான் முக்கியம். அதை எழுதிய எழுத்தாளர் எக்கேடு கெட்டால் என்ன? அப்படியொரு வசதி இருக்கும்போது எந்த எல்லைவரை சென்று ஆடலாம். அசோகமித்திரன் தளைகள் ஏதுமின்றி எழுதியிருப்பின் கதைசொல்லிக்கும் அந்த இலாரியாவுக்கும் இடையிலிருந்த அன்பு இன்னமும் நீண்டிருக்கமுடியும்.

சுஜாதாவுக்கும் அசோகமித்திரனுக்குமிடையில் சின்னதான ஒரு கோட்டுத்தொடர்பு உண்டு. சுஜாதாவிடமிருக்கும் வணிகத்தன்மையை நீக்கினால் அதில் அசோகமித்திரன் தெரிவார் என்று தோன்றியது. “ஒற்றன்” நாவலின் “அம்மாவின் பொய்கள்” என்றொரு சிறுகதை உண்டு. அதில் ஞானக்கூத்தனின் கவிதை மிக அற்புதமாகப் பயன்படுத்தப்பட்டிருக்கும். அதை வாசிக்கையில் “கணையாழியின் கடைசிப்பக்கங்கள்” நினைவுக்கு வருவதைத் தடுக்கமுடியவில்லை.

இப்போது அந்தக்கவிதை.


பெண்ணுடன் சினேகம் கொண்டால்
காதறுந்து போகும் என்றாய்

தவறுகள் செய்தால் சாமி
கண்களைக் குத்தும் என்றாய்

தின்பதற் கேதும் கேட்டால்
வயிற்றுக்குக் கெடுதல் என்றாய்

ஒருமுறை தவிட்டுக்காக
வாங்கினேன் உன்னை என்றாய்

எத்தனைப் பொய்கள் முன்பு
என்னிடம் சொன்னாய் அம்மா

அத்தனைப் பொய்கள் முன்பு
சொன்ன நீ எதனாலின்று
பொய்களை நிறுத்திக் கொண்டாய்

தவறு மேல் தவறு செய்யும்
ஆற்றல் போய் விட்டதென்றா?
எனக்கினி பொய்கள் தேவை
இல்லையென் றெண்ணினாயா?

அல்லது வயதானோர்க்குத்
தகுந்ததாய்ப் பொய்கள் சொல்லும்
பொறுப்பினி அரசாங்கத்தைச்
சார்ந்ததாய்க் கருதினாயா?

தாய்ப்பாலை நிறுத்தல் போலத்
தாய்ப் பொய்யை நிறுத்தலாமா?

உன்பிள்ளை உன்னை விட்டால்
வேறெங்கு பெறுவான் பொய்கள்?

-- ஞானக்கூத்தன்.

என் அம்மாவும்கூட நான் உயர்தரப்பரீட்சை எடுத்தபின்னர் ஏனோ தன் பொய்களை நிறுத்திவிட்டமை முதற் தடவையாக உறுத்தியது.

000

Contact Form