Skip to main content

நீண்ட காத்திருப்பு



கொமடோர் போயகொட ஶ்ரீலங்கா கடற்படையின் அதிகாரியாக இருந்தவர். 74ல் கடற்படையில் இணைந்து 93ல் சாகரவர்த்தனா கடற்படைக் கப்பலின் தளபதியாக நியமிக்கப்படுகிறார். 94ம் ஆண்டு கற்பிட்டிக் கடற்பகுதியில் நங்கூரம் தரித்து நிற்கும்போது சாகரவர்த்தனா புலிகளின் கரும்புலித்தாக்குத்தலில் சிக்குகிறது. போயகொட புலிகளால் கைது செய்யப்படுகிறார். 

அடுத்த எட்டு ஆண்டுகள் புலிகளின் கட்டுப்பாட்டில் சிறைக்கைதியாகத் தான் வாழ்ந்த வாழ்க்கையை ஒரு சுயசரித நூலாக, போயகொட சொல்லச்சொல்ல, சுனிலா கலப்பதி கேட்டு எழுதியிருக்கிறார்.“A Long Watch” என்று ஆங்கிலத்தில் வெளியான அந்த நூலைத் தமிழில் தேவா மொழிபெயர்த்திருக்கிறார். அந்த நூலின் பெயர்தான்,

“நீண்ட காத்திருப்பு”

ஈழப்போர் சார்ந்த அனுபவ, சுயசரித நூல்கள் ஏராளம் வெளிவந்துவிட்டன. பல அனுபவங்கள் புனைவாக வெளிப்பட்டிருக்கின்றன. பல புனைவுகள் அனுபவங்களாக வெளிப்பட்டிருக்கிறன. தமிழ் தரப்பில் எழுதப்பட்டதுபோலவே சிங்களத் தரப்பிலும், குறிப்பாகப் படை அதிகாரிகளின் அனுபவங்களாகப் பல நூல்கள் வெளிவந்திருக்கின்றன. அவற்றிலிருந்து மிகவும் வேறுபட்ட அனுபவத்தை நீண்ட காத்திருப்பு வாசிப்பு கொடுத்திருக்கிறது.

000

போயகொட ஒரு ‘மென்வலு’ கடற்படை அதிகாரியாக ஆரம்பம்முதலேயே அறியப்பட்டவர். பாதுகாப்புப்படை சிவில் நிர்வாகத்தை முன்னெடுக்கையில் இவ்வகை மென்வலு அதிகாரிகள் மக்களோடு நெருங்கிப்பழகுவது இயல்பாகவே இடம்பெறுவதுதான். காரைநகரில் இவர் அதிகாரியாக இருந்த காலத்தில் எப்படி இராணுவத்தினர் பொதுமக்களின் உடைமைகளைத் திருடி அவற்றை விடுமுறையில் போகும்போது தங்கள் வீடுகளுக்கு எடுத்துச்செல்கிறார்கள். அப்படிப்போகும்போது விலை மதிப்பான பொருட்கள் மாத்திரமல்லாமல் சிறுவர்களின் விளையாட்டுப்பொருட்கள், குடும்பப் புகைப்படங்களைக்கூட போர் வெற்றியின் ஞாபகச்சின்னங்களாக இராணுவத்தினர் எடுத்துப்போக முயன்றிருக்கிறார்கள். இன்றும்கூட தென்னிலங்கையில் எங்காவது கிராமத்துவீடுகளில் சிறுவர்கள் பத்தியில் கிடக்கும் ரங்குப்பெட்டிகளைத் திறந்து ஆராயும்போது இவ்வகைப் புகைப்படங்கள் தேடுவாரற்றுக் கிடக்கக்கூடும்.

போயகொடவின் சிறைவாழ்க்கை அவருடைய வார்த்தைகளின்படியே அவ்வளவு மோசமானதாக இருக்கவில்லை. ஒரு அதிகாரியாக இருந்ததால் புலிகளுக்கு அவர் ஒரு பெரும் துருப்புச்சீட்டு. அவரிடமிருந்து துப்புகளைப் பெறவும், உலகுக்குத் தாம் எப்படி சிறைக்கைதிகளை நன்றாக நடாத்துகிறோம் என்று காட்டவும், கைதிகள் பரிமாற்றப் பேரத்துக்கும் போயகொட புலிகளுக்கு மிக முக்கியமானவராக இருந்திருக்கிறார். அதனால் கவனிப்பும் சில பல சம்பவங்களைத் தவிர்த்து நன்றாகவே இருந்திருக்கிறது. ஆனால் ஏனைய பல போர்க்கைதிகளுக்கு அவ்வாறான சூழ்நிலை இருந்ததாகத் தெரியவில்லை என அவரே கூறியுமிருக்கிறார். 

புலிகளின் உள்ளக வாழ்க்கைமுறை, அவர்களின் நடைமுறைகள், கதைகள், பேச்சுகள் பற்றி வெளியார் எழுதிய குறிப்புகள் பலவற்றோடு போயகொடவின் விவரிப்புகளும் பொருந்திப்போகிறது. அடேலின் “சுதந்திர வேட்கை”, அனிதாவின் “Island of Blood” புத்தகங்களிலும் தொண்ணூறுகளின் புலிகளின் உள்ளக வாழ்வுமுறை தொட்டுச்செல்லப்பட்டிருக்கும். போயகொடவுக்கும் புலிகளின் மூத்த உறுப்பினர்கள், சிறை அதிகாரிகள் தொடங்கி சாதாரண காவலாளிகளுடனான உரையாடல்கள் எல்லாமே மிக அர்த்தமுள்ளதாக, தேவையான அளவு நூலில் பகிரப்பட்டிருக்கிறது. சிறை அதிகாரிகளைப்பொறுத்துக் கவனிப்பின் அளவும் மாறியிருக்கிறது. சில அதிகாரிகள் சமைத்துச்சாப்பிடக்கூட இவர்களை அனுமதித்திருக்கிறார்கள். சிலர் அறைக்குள்ளேயே முடக்கி வைத்திருக்கிறார்கள். ஒரு காலத்தில் போயகொடவும் ஏனைய கைதிகளும் புலிகளுடன் கிரிக்கட் விளையாடியுமிருக்கிறார்கள். 

சொல்லப்போனால் போயகொட எங்களுக்கு அருகிலேயே எங்கோ சிறைவைக்கப்பட்டிருந்திருக்கிறார் என்று தெரிகிறது. மானிப்பாய், நல்லூர், மிருசுவில், கிளாலிக் கடற்பயணம், வன்னி வாழ்க்கை என்று எங்களுடனேயே சேர்ந்து அவரும் இடம்பெயர்ந்திருக்கிறார். அவரும் கிரிக்கட் விளையாடியிருக்கிறார். அவரும் உலகக்கிண்ணத்தைக் கேட்டு ரசித்திருக்கிறார். என்ன ஒன்று. அவர் கொஞ்சம் ஒடுங்கிய சிறையில் புலிகளின் காவலில் இருந்திருக்கிறார். நாங்கள் கொஞ்சம் திறந்த அகன்ற சிறையில் அதே புலிகளின் காவலில் வாழ்ந்தோம். ஆனால் ஒருவரின் காவலில் வாழ்வதற்கும் காவலில் சிறையிருப்பதற்கும் பெரு வித்தியாசம் உண்டல்லவா?

000

ஒரு கட்டத்தில் புலிகளின் சிறைக்கைதிகள் அனைவரும் சேர்ந்து தமது விடுதலைக்காக உணவு மறுப்புப்போராட்டத்தில் ஈடுபடுகிறார்கள். அதற்குப் புலிகளின் ஆதரவும் கிடைக்கிறது. போராட்டம் பற்றிய செய்திகள் ஊடகங்களிலும் பரப்பப்பட அதை மையமாக வைத்து பெரும் பிரசாரம் ஒன்றும் முன்னெடுக்கப்படுகிறது. கைதிகளின் உறவினர்கள் இவர்களை வந்து பார்வையிட ஏற்பாடு செய்யப்படுகிறது. போயகொடவின் மனைவி கிட்டத்தட்ட ஏழு வருடங்களுக்குப் பின்னர் இவரைச் சந்திக்கிறார்.

இந்த இடத்தில் போயகொடவின் மனைவிபற்றி பேசியே ஆகவேண்டும். 

யுத்தத்தில் பொதுவாகக் கொல்லப்படுகின்றவர்கள் பற்றியும் காணாமலாக்கப்படுகின்ற, சிறை பிடிக்கப்படுகின்ற மனிதர்களைப்பற்றியுமே அதிகம் பேசப்படுவதுண்டு. ஆனால் அவர்களின் குடும்பங்கள் நாளாந்தம் சந்திக்கும் பிரச்சனைகள் சொல்லில் மாளாதவை. போயகொடவின் மனைவியின் பெயர் சாந்தினி. அவருடைய கோணத்தில் உந்த அல்லல் வாழ்க்கையை யோசித்துப்பார்த்தேன். 


82ம் ஆண்டு கொழும்பில் ‘நேவி டான்ஸ் டே’ கொண்டாட்டம் ஒன்று நிகழ்கிறது. சில நேவிக்கார்களுக்குப் பெண் நண்பிகள் உண்டு. ஆனால் எல்லாம் நேவிக்காரர்களுக்கும் கூட சேர்ந்து ஆடுவதற்குப் பெண் தோழிகள் இருப்பதில்லை. ஆக இப்படியான கொண்டாட்டங்களுக்கு நேவிக்காரர்களின் பெண் நண்பிகள் தங்களுடைய நண்பிகளையும் அழைத்துப்போவதுண்டு. அப்படியான ஒரு நிகழ்ச்சிக்கு சாந்தினி அழைத்துச்செல்லப்பட்டபோதுதான் அவர் போயகொடவை சந்தித்திருக்கிறார். அப்போது போயகொட கொழும்பில் பணி புரிந்தமையால் அதற்குப்பின்னரும் அடிக்கடி சாந்தினி அவரைச் சந்திக்ககூடியதாக இருந்தது. தொடர்ச்சியான சந்திப்புகளில் மனமொத்துப்போய், 83ம் ஆண்டு ஜூன் மாதம் இருவரும் பதிவுத்திருமணம் செய்கிறார்கள். பின்னர் போயகொட இங்கிலாந்துக்குப் பயிற்சிக்குச் சென்றுவிடுகிறார். பின்னர் நயினாதீவுக்கு மாற்றப்படுகிறார். விடுமுறைகளின்போது மாத்திரம் ஊருக்கு வருவார். 85ம் ஆண்டு மூத்த மகன். 87ல் இரண்டாவது மகன். 92ல் மூன்றாவது மகன் பிறக்கும்போது போயகொட காரைநகரில் இருந்திருக்கிறார். அப்புறம் 94ல் புலிகளிடம் பிடிபட்டுவிடுகிறார். ஏலவே விடுமுறையில் மாத்திரம் வீட்டுக்கு வந்துபோகும் கணவர். இப்போது அதுவும் கிடையாது. அடுத்த எட்டு வருடங்கள் சாந்தினி அந்த மூன்று குழந்தைகளையும் தனியாக வளர்க்கவேண்டிய நிலை. போயகொட புலிகளின்பக்கம் இணைந்து உளவு கொடுக்கிறார் என்று சிங்களப் பத்திரிகைகளும் அரசாங்கமும் செய்தி பரப்புகிறது. அவர் இப்போது தன் இனத்தின் துரோகியாகிவிட்டார். ஊராரின் அவப்பேச்சு. பாடசாலையில் அவர் குழந்தைகளை ஏனைய குழந்தைகளும் ஆசிரியர்களும் ஏளனம் செய்ய ஆரம்பிப்பார்கள். துரோகிப்பட்டம் கட்டப்பட்டவரின் மனைவியாக ஒரு ஊரில் வாழ்வது என்பது எவ்வளவு கடினமாக இருந்திருக்கும்? ஆனாலும் கணவன்மீதும் அவர் திரும்பிவருவார் என்ற நம்பிக்கையிலும் சாந்தினி வாழ்க்கையை எப்படியோ கொண்டு நடாத்துகிறார். செஞ்சிலுவைச்சங்கத்தின் கடிதப்போக்குவரத்தே ஒரே ஒரு இழை. தன் குழந்தைகளின் பிறந்தநாட்களுக்கு அப்பாவின் பரிசு என்று தானே ஏதோ வாங்கிக்கொடுக்கிறார். சிறையிலிருந்து விடுதலைபெற்று போயகொட வீடு வந்தபின்னரும்கூட நிலைமை சரியாகவில்லை. அவர்மீதான பழிச்சொல் இன்னமும் மீதமிருந்தது. குழந்தைகளுக்கும் அவருக்குமிடையேயான இடைவெளி அதிகரித்திருந்தது. இதன் நடுவில் அவர்களின் ஒரு மகன் விபத்தில் மரணமடைகிறான். சாந்தினிக்கு எத்தனை துன்பங்கள்? இப்படி யுத்தத்தின் “collateral victims” பற்றிய கதைகள் இரண்டு பக்கங்களிலும் எத்தனை ஆயிரங்கள்? கீதன் என்று என்னுடைய பள்ளித்தோழன் ஒருத்தன். இருபத்தைந்து வயதில் என்று நினைக்கிறேன். சும்மா வெள்ளவத்தை ரொலக்ஸ் பேருந்துத் தரிப்பிடத்தடியில் நின்ற சமயத்தில் யாரோ யாருக்கோ எறிந்த குண்டில் சிக்குப்பட்டு இறந்துபோனான். இன்றைக்கும் அவனை நினைத்து அவன் குடும்பத்தில் யாரோ ஒருத்தர் கண்ணீர் விட்டுக்கொண்டிருப்பர். கலட்டிக்கண்ணன் என்றொருத்தர் தொண்ணூறுகளின் இறுதியில் சுட்டுக்கொல்லப்பட்டார். அண்மையில்தான் அந்த சம்பவத்தின் பின்னர் அவர் மனைவி பட்டபாட்டை சொல்லிக் கேட்க முடிந்தது. எனக்கு போயகொடவின் சரிதத்தை வாசித்துக்கொண்டிருக்கையில் அதற்கு இணையாக அவரின் மனைவியின் வாழ்வும் அவர் பட்ட துன்பங்களும்கூட சரிதமாக விரிந்துகொண்டிருந்தது. 

என்ன ஒன்று, அப்படிப்பட்ட மனிதர்களின் அவர்களின் வாழ்வு சொல்லப்படுவதில்லை.

000

“நீண்ட காத்திருப்பு” நூலில் இயல்பாகவே ஒரு தத்துவ விசாரம் இருக்கிறது. போயகொடவின் சிந்தனைப்போக்கும் அப்படி இருந்ததால் அந்நூல் அப்படி அமைந்திருக்கலாம். அல்லது சிறையில் அவர் வாசித்த ஏனைய சிறை அனுபவ நூல்களின் தாக்கமாகவும் இருக்கலாம். அல்லது அனுபவங்கள் அவரை அப்படிச் செழுமைப்படுத்தியிருக்கும். தான் அரசாங்கத்தாலும் சக கடற்படை அதிகாரிகளாலும் கைவிடப்பட்டமை குறித்து அவருக்கு பெரும் விசனம் இருக்கிறது. ஊடகங்கள் இவரைக் கேவலப்படுத்தி எழுதியது பற்றி பெருங்கோபம் அவருக்கு உண்டு. கூடவே இவருடைய இயல்பான மென்வலு அணுகுமுறை. இது எல்லாமே சேர்ந்தே இந்தப்புத்தகத்தை ஒரு நடுநிலையான தர்க்கங்கள் கொண்ட நூலாக வெளிக்கொண்டுவந்திருக்கிறது என்று நினைக்கிறேன். 

சுயசரித நூல்களில் பெரும் சிக்கல் ஒன்று உளது. பொதுவாகச் சுயசரித நூல்களில் உண்மையே சொல்லப்படுகிறது என்பதில் எனக்குச் சந்தேகம் வருவதில்லை. ஆனால் பல உண்மைகள் சௌகரியம் கருதியும் சுய பாதுகாப்புக் கருதியும் தெரிந்தே தவறவிடப்படுகின்றன என்பதிலும் சந்தேகமில்லை. இந்தச் சூழலிலேயே சரிதையாளர்கள் (Biographers) என்ற எழுத்தாளர் குழுமத்தின் முக்கியத்துவம் அதிகரிக்கிறது. அவர்களின் வேலை, ஒருவரை முன்னிலைப்படுத்தி அவரின் சரிதத்தை எழுதும்போது அவர் சொல்வதைப் பற்றி மாத்திரமே எழுதாமல் அவருடைய வாழ்க்கையை ஆராய்ந்தும் எழுதுவது. வோல்டர் ஐசாக்சன் அப்படிப்பட்ட ஒரு எழுத்தாளர். அவருடைய ‘ஸ்டீவ் ஜொப்ஸ்’ நூல் ஒரு சரித நூல் எப்படி எழுதப்படவேண்டும் என்பதற்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டு. ஒருவரைப் புனிதப்படுத்தும் வேலையை மாத்திரம் செய்யாமல் உண்மையான விபரங்களை அப்படியே ஆராய்ந்து வாசிக்கும்படி முன்வைக்கும் செயற்பாட்டை ஐசாக்சன் மிகச்சிறப்பாக செய்வார். “நீண்ட காத்திருப்பு” அப்படிப்பட்ட ஒரு நூல் கிடையாது. போயகொட சொன்னதை அப்படியே எழுதியதுதான் இங்கே சுனிலா கலப்பதியின் வேலை. அதை மிக நேர்த்தியாக சுனிலா செய்திருக்கிறார் என்பதில் மாற்றுக்கருத்து கிடையாது. அதைத்தாண்டி சாகரவர்த்தனா சம்பவத்தைப்பற்றியோ, அது பற்றிய இராணுவ விசாரணையையோ, சாந்தினியின் வாழ்க்கை பற்றியோ, ஒப்பிலான் பற்றியோ ஆராய்ந்து எழுத சுனிலா முயலவில்லை. ஆனால் நூலில் ஓரளவுக்கு போயகொட தன்னைத்தானே சுயவிமரிசனம் செய்துகொள்கிறார். இயலுமான அளவுக்கு உண்மைகளை நினைவுகூறுகிறார். தவறுகின்ற பட்சத்தில் அதையும் குறிப்பிடுகிறார். ஆனால் அவரையும் அறியாமல் அவை யாவையும் ஒரே வீதியில் ஒரே புள்ளியை நோக்கியே பயணிப்பதுபோலவே தோன்றுகிறது. அதுவே அவர் இந்நூலை எழுதியமைக்கான காரணமும் ஆகும். ஆனால் உண்மைகள் அப்படியல்ல. உண்மையைக் காரணம், காரியம், நீதி, நியாயம், தத்துவம் என்று எவையும் கட்டுப்படுத்துவதில்லை.

000

இந்த நூலைத் தமிழில் மொழிபெயர்த்த தேவாபற்றி. 

மிக அற்புதமான, இதுவே மூலநூல் போன்ற உணர்வைக்கொடுக்கும் மொழிபெயர்ப்பு தேவாவுடையது. அதற்குப்பின்னாலிருக்கும் உழைப்பை உணரக்கூடியதாக இருக்கிறது. தேவாவின் மொழிபெயர்ப்புக்காகவே புத்தகங்களை வாங்கி வாசிக்கலாம்போலத் தோன்றுகிறது. தேவாவுக்கும் அவருக்கு உதவியாக இருந்த கௌரிபாலனுக்கும் சத்தியதேவனுக்கும், நூலினைப் பதிப்பிட்ட ‘வடலி’க்கும் நன்றிகள். 

000

“நீண்ட காத்திருப்பு” நூல் முழுதும் நம்மை அலைக்கழிக்கும் பல வாக்கியங்கள் இடம்பெற்றிருக்கும். வாசித்து சில நாட்கள் ஆனபின்னரும் என்னை அலைக்கழிக்கும் வாக்கியம் இது.

“சிலவற்றை அழிப்பதற்கு உங்களுக்கு ஆணை கிடைக்குமெனின் நீங்கள் எல்லாவற்றையும் அழிக்கும் மனநிலையை வளர்த்துக்கொள்கிறீர்கள்” 

000

Comments

  1. பக்கச்சார்பாக பேயகொட கூறுகிறார் என்று சிங்கள பதிப்பில் நிறைய மாற்றங்கள் செய்யப்பட்டதாக அறிந்தேன்.சுயசரிதையில் இருக்கும் பெரும் சிக்கல் இது தான்.திறந்த அகன்ற சிறையில் இருந்தவர்களின் கண்ணோட்டத்தில் சாந்தினியின் வாழ்க்கையை தனியாக ஒரு கதையாக்கலாம்.

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

என் கொல்லைப்புறத்துக் காதலிகள் : 6. குட்டியன்

தொ ண்ணூறுகளில் சங்கக்கடை நிவாரண அட்டை என்று ஒவ்வொரு குடும்பத்துக்கும் கொடுத்தார்கள் . அ , உ , இ என மூன்று வகையான அட்டைகள் . எங்கள் வீட்டுக்கு ‘ உ ’ அட்டை . அரசாங்க உத்தியோகத்தர் என்றால் பீயோனாக இருந்தாலும் ‘ உ ’ அட்டைதான் . நிவாரணத்தில் ‘ உ ’ அட்டைக்காரருக்குப் பங்கீட்டு அளவு அரைவாசியாகக் குறையும் . அரைப்போத்தல் மண்ணெண்ணெய் , அரைக் கிலோ பருப்பு , அரைக் கிலோ சீனி என்று எல்லாமே அரையில்தான் கிடைக்கும் . அதற்கே கோப்பிரட்டி மனேஜரிடம் பல்லிளிக்க வேண்டும் . குறைந்த சம்பளம் , அதிக சம்பளம் என்ற கதை பேச்சுக்கு இடமில்லை .   காரணம் கவுன்மேந்து உத்தியோகம் .

"என் கொல்லைப்புறத்துக் காதலிகள்" பற்றி இளங்குமரன்

யாழ்ப்பாண மக்களின் வாழ்க்கை போருடனும் துயருடனும் கடந்தது என்று எல்லோரும் அறிந்ததுதான், கதைகளும் ஏராளம். ஆனால் ஜே.கே தனது சொந்த அனுபவங்களின் ஊடே காட்டும் தொண்ணூறுகளின் யாழ் வாழ்க்கை மிக அழகானது, இயல்பானது. இன்னல்கள் கடந்த ஜன்னல் காற்று அந்த வாழ்க்கை. அந்த வாழ்வுணர்வு யாழில் வாழ்ந்தவர்களுக்கு தெரியும்(வாழ்பவன் நான், சற்றுப் பின்னே பிறந்துவிட்டேன், சில அனுபவங்களை இழந்தும் விட்டேன்). • ஒவ்வொரு அத்தியாயமும் ஒவ்வொரு சுளை, ஒவ்வொரு சுளையும் தனிச்சுவை. அவ்வப்போது தூறும் குண்டுமழையில் நனையாமல் பதுங்கும் பங்கர்கள், பங்கருக்குள்ளும் பய(ம்)பக்தியுடன் வைக்கும் பிள்ளையார் படம். அவரின் தம்பி முருகனைக்காண என விழாக்கோலம் பூண்ட நல்லூர் போய், வள்ளி, தெய்வானையையே தேடித் திரியும் உள்ளூர் முருகன்கள். விளையாட்டுப்பொருட்கள், ஜஸ்கிரீம், கச்சான் என கடைக்கண் கடைத்தெருப்பக்கமே இருக்க சுற்றித்திரியும் சின்னன்கள். தெருவெல்லாம் தெய்வம்கொண்ட கோயில்கள், பரீட்சை பயத்தில் அத்தனை கோயில்களுக்கும் போடும் கும்பிடுகள். எந்தப் பக்கம் பந்து போட்டாலும் நேரே மட்டும் அடிக்க கற்றுக்கொடுக்கும் ஒழுங்கை கிரிக்கட்டுகள். பாடசாலைகளுக்கிட...

பர்மா புத்தர் - சிறுகதை

பனம் பாத்தி மெதுவாக முளைவிட ஆரம்பித்திருந்தது .   அதிகாலைக் குளிருக்கு அத்தனை பனங்கொட்டைகளும் நிலவண்டுகளின் கூட்டம்போல ஒட்டிக்குறண்டியபடி தூங்கிக்கொண்டிருந்தன . பாத்தியில் இடையிடையே கோரைப்புற்கள் கிளம்பியிருந்தன . முந்தைய நாள் அடித்து ஊற்றிய மழையில் இருக்காழிகள் சில குப்புறப்புரண்டு சாம்பல் நரையேறிய மயிர்க்கற்றைகளோடு வானம் பார்த்தபடி அண்ணாந்து கிடக்க , சில கொட்டைகள் பாத்தியினின்று சளிந்து அடிவாரங்களில் சிதறிக்கிடந்தன . பூரானுக்காகப் பிளக்கப்பட்டிருந்த கொட்டைகள் எல்லாம் ஒரு பக்கம் குவிக்கப்பட்டிருந்தன .  கார்த்திகை விளக்கீட்டுக்குப் பாத்தியடியில் குத்திவிடப்பட்டிருந்த பந்தத்தடி பாதி எரிந்த நிலையில் கறுப்பு வெள்ளைத் தொப்பியோடு இன்னமும் எஞ்சி நின்றது .