அன்றிரவு ஏழு மணிக்கு வசாவிளானில் செம்முகம் ஆற்றுகைக்குழுவினரின் அரங்கு ஒன்று நடக்கப்போவதாக அக்கா சொல்லியிருந்தார். அதனாலேயே நிருபாவின் புத்தக நிகழ்விலிருந்து வெள்ளனவே கழன்று, வீடு திரும்பி ஆறரைக்கே தயாராக இருந்தேன். நேரம் ஏழு, ஏழரை மணி ஆகிவிட்டது. ஆனால் அக்கா மட்டும் வெளிக்கிடும் சிலமனே இல்லை.
“என்னக்கா லேட்டாப் போய் என்னெய்யிறது”
ஈற்றில் ஒருவழியாக நான், அக்கா, கௌந்தி அக்கா குடும்பம் என ஐந்து பேர் ஒரு வாகனத்தைப்பிடித்துப் புறப்பட்டோம். என் யாழ்ப்பாணத்தில் வசாவிளான் என்ற கிராமம் எப்போதுமே இராணுவக் கட்டுப்பாட்டில் இருந்த ஒன்று. அப்போது திருநெல்வேலிக்கும் வசாவிளானுக்குமான தூரம் கொழும்பைவிட அதிகமானது. ஒரே ஒருமுறை வசாவிளானை அந்த ஊர்க்காரர் ஒருவர் டிசைன் பண்ணியிருந்த வேர்ச்சுவல் ரியாலிட்டி அப்ளிகேசனில் பார்த்திருக்கிறேன். இதற்குமேலும் கல்லடி வேலுப்பிள்ளையர், நாடு கடந்த வசாவிளான் கிராமம், அதன் உண்மைப்பெயர் வயாவிளான் என வசாவிளான் என்ற கிராமத்தைப்பற்றி மட்டுமே பந்தி பந்தியாக எழுதித்தள்ளலாம். அவ்வளவுக்கு விசயம் இருக்கிறது.
ஆனால் அதற்குள் அக்காவுக்கு யாரிடமிருந்தோ அழைப்பு வந்தது.
“அக்கோய் நாடகம் நடக்கிறது வசாவிளான் இல்லை, இது ஈவினையாம்”
“ஈவினைல எங்கனக்க?”
தொலைபேசியின் அந்தப்பக்கம் யாருடனேயோ பேசியது. “ஈவினை கிழக்கா அண்ணை? கலையரசியா … சரி”, குரல் திரும்பவும் அக்காவிடம், “கலையரசி கலையகமாம்” என்று ஒரு நீண்ட வழியைச் சொல்லத்தொடங்க, எனக்கு மண்டை சுழன்றது.
“என்னக்கா எப்பிடிப்போறதெண்டு ஞாபகமிருக்கா?”
“பொறு … வெல்லலாம் … வழி நெடுக கேக்கவேண்டியதுதான்”
வழமைபோல எல்லோருமே கூப்பிடுதூரம் என்றுதான் சொன்னார்கள். நம்மூர்க்காரர்களுக்கு பாதை சொல்வதில் ஒரு அலாதிப்பிரியம் உண்டு. படு விளக்கமாகச் சொல்வார்கள். உந்தா இதால கொஞ்சத்தூரம் போனிங்கள் எண்டால் ஒரு டி சந்தி வரும். இஞ்சால ஒரு பலசரக்குக் கடை இருக்கும். நேரா விட்டிங்கள் எண்டால் சின்னதா மாதா கோயில் ஒண்டு இடப்பக்கம் இருக்கும். அதையும் தாண்டி உள்ள விட்டீங்கள் எண்டால்…. ஒரு இரண்டு கட்டையில திரும்பவும் இடப்பக்கம் திரும்போணும். கொஞ்சத்தூரம் போல ஒரு பெட்டிக்கடை இருக்கும். அதில சத்தமா பாட்டுப்போடுவாங்கள். பக்கத்திலேயே பள்ளிக்கூடம்.
“சரியண்ணை நன்றி …”
“பொறும் தம்பி இன்னும் வரேல்ல … பள்ளிக்குடத்தால உள்ள போனா எக்கணை திரும்ப ஒரு டி சந்தி வரும். அங்கையிருந்து கிழக்கால போனீங்கள் எண்டா ஒரு வைரவர் கோயில். அதுக்கு முன் றோட்டால நேருக்கு விட்டா ஒரு அரைக்கட்டை தூரத்தில சனசமூக நிலையம் இருக்கும்”
சொல்லிவிட்டு அவர் நாங்கள் சரியான பாதையிலே போகிறோமா என்று சைக்கிளை எடுக்காமல் பார்த்துக்கொண்டே இருந்தார். நான் றைவர் தம்பியிடம் கேட்டேன்.
“என்னண்ணை அவர் சொன்னது முழுக்க ஞாபகம் இருக்கா?”
“ஓமண்ணை ஓரளவுக்குப் பிடிச்சிடலாம்”
அவரின் ‘ஓரளவு’ முதலாவது டி சந்தியிலேயே முடிந்துவிட்டது. அதிலிருக்கவேண்டிய பலசரக்குக் கடையைக் காணாமல் முழித்தோம். ஆனால் பின்னாலேயே எங்களுடைய அந்த கூகிள் மாப்ஸ் ஓடிவந்துவிட்டது.
“உந்த சந்தியில்லை தம்பி, இன்னும் போகோணும்”
ஒருவாறு டி சந்தியில் திரும்பி, அப்புறம் மாதா கோயிலடியில் ஒரு ஓட்டோகாரர், பள்ளிக்கூடத்தருகேயிருந்த பெட்டிக்கடையில் ஒரு சிறுமி, வைரவர்கோயிலடியில் அமர்ந்திருந்த சிகரட் பிடிப்பவர் எல்லோரும் புள்ளிகளை இணைத்துத்தர அந்த கலையரசி சனசமூக நிலையத்தைச் சென்றடைந்தோம்.
000
கலையரசி சனசமூக நிலையம் ஈவினை கிழக்கு கிராமத்தின் இருதயத்தினுள் அமைந்திருந்தது. அதுவும் ஒரு டி சந்திதான். ஒரு பக்கம் முழுதும் வீடுகள். ஏனைய இரு பக்கங்களிலும் தோட்டங்கள். வாழையும் மரவள்ளியும் பயிரிட்டிருந்தார்கள். இவ்வாறான திறந்தவெளி சனசமூக நிலைய அரங்குகளில் டிக்கட் நிகழ்ச்சி வைப்பது என்பது சுவாரசியமான ஒன்று. டி சந்தியின் மூன்று வீதிகளையும் தடை செய்து கறுப்பு நிற படங்கு கட்டியிருந்தார்கள். அனுமதிக்கட்டணம் ஐம்பது ரூவா. ஏனோ தெரியாது நாங்கள் ஐந்துபேர் போனதால் இருநூறு ரூபா போதும் என்று உள்ளே அனுமதித்தார்கள். உள்ளேபோனால் ஒரு ஐம்பது அறுபதுபேரளவில் கூடியிருந்தார்கள். ஒரு ஐஸ்கிரீம் கடை போடப்பட்டிருந்தது. கூடவே ஒரு டீக்கடை. டீக்கடையில் உப்புக்கச்சான் பக்கற்றுகளும் தொங்கியது. எல்லோருமே அரங்கத்தின் திடலில் அவரவர் கொண்டுவந்திருந்த பாய்களை விரித்து உட்கார்ந்திருந்தார்கள். ஆச்சரியமாக இளம் பெண்களின் உடுப்புகள் எல்லாமே தொண்ணூறுகளையும் இளம் ஆண்களின் ஜீன்ஸ் டி சேர்ட்டுகள் விஜயின் நண்பர்கள் குழாமையும் ஞாபகப்படுத்தின.
நேரம் ஒன்பது மணியைத் தாண்டியது. சிறுமி ஒருத்தி நித்தியஶ்ரீயின் வரவேற்புப் பாடலுக்கு நடனம் ஆடினாள். பின்னர் ஒரு ஒலிபரப்பாளர் மேடைக்கு வந்தார். ஈழத்து ஒலிபரப்புத் தமிழ் என்பது அன்றைய இலங்கை வானொலி, புலிகளின் குரலுக்குப்பிறகு இப்படியான கிராம நிகழ்வுகளில்தான் இன்னமும் உயிருடன் வாழுகிறது என்பது திண்ணம். எக்கோவும் சேர்ந்து கலக்க, ஒலிபரப்பாளர் பின்னிக்கொண்டிருந்தார். அடுத்ததாக ஒரு கிராமிய பக்தி நடனமும் “யாழ் சுப்பர் ஸ்டாரின்” பாடல்களும் உண்டு என்று அவர் கதறிக்கொண்டேயிருந்தார். ஒலிவாங்கியின் சத்தம் ஈவினை, புன்னாலைக்கட்டுவன், வசாவிளான், பலாலிவரைக்கும் கேட்டுக்கொண்டிருந்தது. நாங்கள் நிற்பதைப்பார்த்து யாரோ எங்களுக்கு இரண்டு பாய்களைக் கொண்டுவந்து தந்தார்கள்.
செம்முகம் ஆற்றுகைக்குழுவினர் இன்னமும் ஒப்பனையில் இருந்தார்கள். தவிர கூட்டமும் இன்னமும் சேர்ந்தபாடில்லை. கிராமத்து மக்கள் என்பதால் வேலை முடிந்து, வீடுபோய் சமைத்துச் சாப்பிட்டுவிட்டுத்தான் பாய் தலையணைகளோடு அங்கு வரமுடியும். ஆண்கள் பலரும் இப்போதுதான் கோர்ப்பரேசனுக்குப்போய்விட்டுத் திரும்பிக்கொண்டிருந்தார்கள். ஒரு மிதமான கள்ளின் நெடி அங்கு பரவியிருந்தது. மனிதர்கள் பலர் தோட்டங்களுக்குள்ளால் வந்துகொண்டிருந்தனர். குறுக்குப்பாதையாக இருக்கலாம். அல்லது டிக்கட் எடுப்பதைத் தவிர்ப்பதற்காக இருக்கலாம். ஐந்தாறு நாய்களும் குறுக்கும் மறுக்குமாக நடமாடிக்கொண்டிருந்தன. அவை கூட்டத்தையும் கூடுதல் சத்தத்தையும் பார்த்துக் குழம்பியதாகத் தெரியவில்லை. ஈழத்து ஹரிகரன் ‘சொல்லாமல் தொட்டுச்செல்லும் தென்றல்’ என்று வீலென்று கத்தும்போதும்கூட ஒரு நாய் ஒலி பெருக்கிப் பெட்டிக்கு முன்னே எந்தச் சலனமும் இல்லாமல் தூங்கிக்கொண்டிருந்தது. “யாழ் சுப்பர்ஸ்டார்” பெண்மணி மேடையில் தோன்றி “கற்பூர பொம்மை ஒன்று” பாடினார். நன்றாகவே இருந்தது. “செவத்த புள்ள” பாடலை யாழ் சுப்பர்ஸ்டாரும் ஈழத்து ஹரிகரனும் சேர்ந்துபாட குடிமக்கள் சுருட்டை மறந்து ரசித்தார்கள். பாடல் முடியவும் கூட்டம் கைதட்டவில்லை என்று ஒரு குடி கோபப்பட்டு வெறியில் கத்தவும் நாங்கள் எல்லோரும் உடனே கைதட்டினோம். உடனே அவர் மகிழ்ச்சியில் யாழ் சுப்பர்ஸ்டாருக்குக் கை கொடுக்கப்போனார். அந்தப்பெண் நீட்டிய கையை வெடுக்கென்று தட்டிவிட்டு மேடையிலிருந்து இறங்க, வெறி ஹரிகரனைப் போய்க் கட்டிப்பிடித்தது.
இந்த அமளிக்கிடையில் ஒரு பிளெயின் ரீ. கச்சான் சரை. தும்பு முட்டாஸ். ஒரு பிரபுதேவா நடனம், இன்னொரு ஹரிகரன் பாடல் தீர்ந்திருக்க, ஒரு வழியாக பத்தரை மணியளவில் நாடகம் ஆரம்பித்தது.
000
அதுநாள்வரை செம்முகம் ஆற்றுகைக் குழுவினரையோ அல்லது அதன் ஒருங்கிணைப்பாளர் சீலனையோ பெரிதாக நான் அறிந்துவைத்திருக்கவில்லை. கிராமம் ஒன்றில் நாடகம் என்றதும் அந்த சூழலை அனுபவிக்கும் ஆர்வத்தில் வந்திருந்தேனே ஒழிய, நாடகத்தின்மீதான எதிர்பார்ப்பு எதுவும் அவ்வளவாக எனக்குள் இருக்கவில்லை. இந்தச் சூழலில்தான் நாடகம் ஆரம்பிக்கிறது. ஆனால் ஆரம்பத்திலேயே “ஒலிவாங்கி ஒரு இடையூறு, தேவையில்லை, எல்லோரும் மேடைக்கு அருகில் வந்து உட்காருங்கள்” என்று சீலன் அறிவித்ததுமே ஒரு மெல்லிய நம்பிக்கை பிறந்தது. பின்னர் மேடையமைப்பையும் நடிகர்களின் ஒப்பனைகளையும் கவனித்ததும் இதில் ஏதோ விசயம் இருக்கப்போகிறது என்று தெரிந்துவிட்டது. அந்த நாடகத்தின் பெயர்,
‘சிமாகாவின் கனிந்த இரவுகள்’.
மாக்ஸிம் கோர்க்கி எழுதிய ரசிய சிறுகதை. தமிழில் ஶ்ரீலேகா அதனை “திருடனின் உள்ளம்” என்று மொழிபெயர்க்க, அதன் நாடக வடிவத்தை சீலனும் அவருடைய குழுவினரும் அரங்கேற்றினர். சிமாகா என்கின்ற மிகக் கொடூரமான திருடனை காவல்துறை தேடித்திரிகிறது. அவன் தலைமறைவாகத் தப்பித் திரிகையில் ஒரு கைவிடப்பட்ட குழந்தையைக் கண்டெடுக்கிறான். அதன்மீது கொஞ்சம் கொஞ்சமாக அவனுக்கு அன்பு மேலிடுகிறது. இப்படி ஒரு அழகான குழந்தையைக் கைவிட்டுவிட்டு ஓடிய அதன் தாயை அவன் திட்டித்தீர்க்கிறான். குழந்தை குளிருக்கு நடுங்க ஆரம்பிக்கிறது. பசியால் மயக்கம் போடுகிறது. குழந்தையின் உணவுக்காகவும் பாதுகாப்புக்காகவும் சிமாகா காவல்துறையிடம் தானாகவே பிடிபடுகிறான். குழந்தையின் தாயை அவன் இன்னமும் வைதுகொண்டேயிருக்கிறான். காவல்துறையால் வன்முறைக்கு ஆளாக்கப்பட்ட பெண்ணைப்பற்றிய தகவல் ஒன்றும் காவல் நிலையத்துக்குக் கிடைக்கிறது. அந்தப்பெண்ணே குழந்தையின் தாயாகவும்கூட இருக்கலாம். எது எப்படியோ சிமாகாவால் அந்தக் குழந்தையை காப்பாற்றமுடியவில்லை. அவன் தன் இயலாமையை நொந்து அரற்றியபடியே கிடக்க மெல்லிய தாலாட்டு ஒன்று பின்னணியில் ஒலிக்கிறது.
நாடகம் முடிகையில் ஈவினை கிழக்கு கிராமத்து கலையரசி சனசமூகத்தின் திடல் முழுதுமே ஸ்தம்பித்துப்போய் இருந்தது. தெளிவான கதையோட்டம். பாத்திரங்கள். அந்தச் சிமாகா பாத்திரம் செய்த நடிப்பு. முழு அரங்குக்கும் கேட்கும்வண்ணமான சுத்தமான உச்சரிப்புகள். அதற்கேற்ப பின்னணி இசை. அந்தத் தாலாட்டுப்பாடல். இப்படி எல்லாமே அற்புதமாக இணைந்த நாடகம் “சிமாகாவின் கனிந்த இரவுகள்”. ஒரு மாக்ஸிம் கோர்க்கி சிறுகதையை நாடகமாக்கி அதனை ஒரு கிராமத்து திறந்தவெளி அரங்கிலே மிக நெருக்கமாகக் கொடுக்கமுடியும் என்ற சிந்தனையே ஆச்சரியமானது. அதை செயலில் காட்டுவது என்பது மிக அற்புதமான ஒரு விடயம். அதனை செம்முகம் ஆற்றுகைக்குழு அற்புதமாக அன்று செய்து காட்டியது. அதன்பிறகு “பஞ்ச வர்ண நரியார்” என்று சிறுவர் நாடகத்தையும் நிகழ்த்தினார்கள். சிறுவர் நாடகம் என்று பெயரேதவிர பெரியவர்களும் சேர்ந்து ரசித்த நாடகத்தின் ஈற்றில் திடலில் அமர்ந்திருந்த சிறுவர்களையும் ஒன்றிணைத்து நாடகத்தை முடித்துவைத்தமை புத்திசாலித்தனம்.
நாடகம் முடிந்து நாங்கள் அனைவரும் வீடு திரும்பிக்கொண்டிருந்தோம். அக்காவும் ஏனையவர்களும் ஏலவே சீலனின் நாடகங்களைப் பார்த்தவர்கள். அவர்களும் அவருடைய முன்னைய அரங்குகளோடு இதனை ஒப்பிட்டு சிலாகித்துக்கொண்டிருந்தார்கள். நான் பேசாமலேயே அமர்ந்திருந்தேன். என்ன பேசுவது என்றே தெரியவில்லை. அக்காதான் கேட்டார்.
“என்னடா ஒண்டுமே பேசாம வாறாய் … நாடகம் பிடிக்கேல்லையா?”
சிமாகா அந்தக் குழந்தையில் தன்னையே கண்டிருக்கவேண்டும். அதனாலேயே குழந்தையின் தாயின்மீது அவனுக்கு அவ்வளவு கோபம் வருகிறது. குழந்தைமீது அப்படி ஒரு பாசம் பிறக்கிறது. ஆனால் குழந்தையைத் தவிக்கவிட எந்தத் தாய்க்குத்தான் மனசு வரும்? அவளுக்குமான ஒரு நியாயம் இருக்கவே செய்கிறது. இவை எல்லாவற்றையும் விட அதிகாரமும் நீதியின் மையங்களுமே அநீதிகளுக்கான சூழலை ஏற்படுத்துகின்றன. இதிலே நிலையான அறத்துக்கு இடம் ஏது? இப்படி எல்லாவிதமான சிந்தனைகளும் எனக்குள் வந்துபோய்க்கொண்டிருந்தது.
“உன்னத்தான் டேய் … நாடகம் எப்பிடி?”
“அந்த சீலனை தனியா ஒருக்கா சந்திச்சுக் கதைக்கோணும் அக்கா”
000
பெயர் சத்தியசீலன். குழந்தை ம. சண்முகலிங்கம் அவர்களுடைய மாணவன். அவருடைய ஆற்றுகைகள் பலவற்றில் தோன்றி நடித்து, இப்போது செம்முகம் ஆற்றுகைக் குழுவினூடாக அவரே நாடகங்களை எழுதி இயக்கி இசையமைத்து நடித்துக்கொண்டுமிருக்கிறார். “சிமாகாவின் கனிந்த இரவுகள்”போலவே “அன்பமுதூறும் அயலார்” நாடகமும்கூட ஒரு ரசிய நாடகமொன்றின் தழுவல்தான். அதைத் தமிழ்ப்படுத்தியவர் குழந்தை ம. சண்முகலிங்கம். அதன் இன்னொரு வடிவத்தை சீலன் செம்முகம் ஆற்றுகைக் குழுவினூடாக அரங்கேற்றியும் வருகிறார். இது தவிர ஏராளம் சமூக, அரசியல், சிறுவர் நாடகங்களும் அவர்களிடம் இருக்கின்றன. பெரு நகர மண்டபங்கள் என்றில்லாமல் கிராமங்கள்தோறும் சிறு திடல்களிலும் கூடல்களிலும் இப்படியான ஆற்றுகைகளை நிகழ்த்துவது இவர்களின் தனிச்சிறப்பு. இதனைவிட பல்வேறு பயிற்சிப்பட்டறைகளையும் இவர் ஒருங்கமைக்கிறார். இதுவே அவருடைய வாழ்வாதாரமும்கூட. இதில் சீலனின் மனைவியும் இணைந்து செயற்படுவது மாத்திரமின்றி நாடகங்களில் முக்கிய பொறுப்புகளையும் எடுத்து நடிக்கிறார் என்பது தனிச்சிறப்பு. கலை இலக்கியத்தை செயற்பாட்டுத்தளத்தில் முன்னிறுத்தி இயங்குவதற்கு நாடகமும் கூத்தும் ஒரு அற்புதமான வடிவம். அதனை சீலன் போன்றவர்கள் பெரிதாக அலட்டிக்கொள்ளாமலேயே இன்னொரு தளத்துக்கு எடுத்துச்செல்கிறார்கள்.
யாழ்ப்பாணத்தில் தங்கியிருந்த அந்த இரண்டரை வாரங்களில் சீலன் குடும்பத்தினரோடு மிகவும் நெருங்கிப் பழகக்கூடிய சந்தர்ப்பம் கிடைத்தது. மிக எளிமையான மனிதர்கள். சிந்தனையாளர்கள். மக்களுக்கானதே கலை என்பதில் தீவிர நம்பிக்கை உடையவர் சீலன். தன்னை எப்போதுமே அவர் உயர்த்திப்பேசமாட்டார். நான் நாடகங்கள் பற்றிப்பேசும்போதெல்லாம் சண்முகலிங்கம் சேரிண்ட புண்ணியத்தாலதான் என்று சொல்லிக்கொண்டே இருப்பார். ஶ்ரீலேகா பற்றியும் பேச மறப்பதில்லை. சீலன் என்றில்லை. செம்முகம் குழுவினர் எல்லோருமே சொல்லிவைத்ததுபோல தம் பெருமை மறுத்து மற்றவர் புகழையே பாடிக்கொண்டிருப்பர். எல்லோருமே இருபதுகளில் காலடி எடுத்துவைத்த இளையவர்கள். இப்போதே செயற்பாட்டியக்கங்களில் தீவிர ஆர்வம் அவர்களுக்கு இருக்கிறது. சீலன், ரஜனி அக்கா போன்றோரின் வழி நடத்தலும் அவர்களுக்குக் கிடைக்கிறது. சமூகம் பற்றிய ஒரு பெருத்த நம்பிக்கையைக் கொடுப்பவர்கள் இவர்கள். இனிவரும் காலத்தில் செம்முகம் ஆற்றுகைக்குழு போன்ற ஆற்றுகைக்குழுக்களை அவுஸ்திரேலியா போன்ற நாடுகளிலிருக்கும் அமைப்புகள் அழைத்து நாடகங்களை அரங்கேற்றினால் நன்றாக இருக்கும். இரண்டு மூன்று மணிநேரம் சின்ன அலுப்புக்கூடத் தட்டாமல் தீவிரமான அர்த்தமான விசயங்களை சுவாரசியமாக அரங்கேற்றும் ஆற்றல் படைத்தவர்கள் இவர்கள்.
குறிப்பாக கல்லூரி பழைய மாணவர்கள் சங்கங்கள் இதுபற்றிப் பரிசீலிக்கலாம்.
000
“சமாதானத்தின் கதை” நிகழ்வில் சிறு உரையாற்றமுடியுமா என்று சீலனிடம் கேட்டேன். அப்போது சிவராத்திரிக் காலம். தலைவர் நித்திரைகொள்ளக்கூட நேரம் கிடைக்காமல் நிகழ்வுகளில் பிசியாக இருந்த நேரம். ஆனாலும் கதைகளை வாசித்து நேர்த்தியான ஒரு பார்வையைப் பகிர்ந்தார். கதைகளில் இருக்கக்கூடிய நாடகத்துக்குரிய அமைப்புகளை இனங்கண்டு பேசினார். புனைவுகளில் உள்ள ஆவணப்படுத்தல்களைக் குறிப்பிட்டு அவற்றை “ஆவணக் கதைகள்” என்ற ஒரு வடிவத்துக்குள் கொண்டுவந்தார். அப்படியான ஒரு வார்த்தைப் பிரயோகத்தை நான் முன்னர் அறிந்திருக்கவில்லை. அது சீலனே உருவாக்கிய ஒன்றாக இருக்கலாம். “கடவுள்கள் துயிலும் தேசத்தில்” கைதடி வீட்டு வேலிகளில் தொங்கிய பெயரட்டைகள் தொடர்பான காட்சியமைப்பை “ஆவணக் கதை”க்கு உதாரணமாகச் சுட்டிக்காட்டினார்.
சீலனிடம் “வெம்பிளி ஓஃப் ஜப்னா”வை ஒரு நாடகமாக மாற்றமுடியுமா என்று நான் கேட்டேன். அக்கதையில் ஒரு நாடகத்துக்கான மூலக்கூறுகள் இருப்பதாக எனக்கொரு நம்பிக்கை. சீலன் போன்றோரிடம் அது சிக்கினால் இன்னொரு பரிமாணத்தை அக்கதை மூலத்திலும் சிறப்பாக எடுக்கக்கூடும். தொடர்ந்து அதுபற்றி சீலனிடம் பேசவேண்டும் என்று நினைத்தது. நினைப்போடு போய்விட்டது.
“அன்பமுதூறும் அயலார்” ஆற்றுகையைப் பார்க்கும் சந்தர்ப்பம் எனக்குக் கிடைக்கவில்லை. அதன் மூலமான ரசிய நாடகத்தையும் நான் இன்னமும் வாசிக்கவில்லை. ஆனால் சீலன் அந்த நாடகத்தைப்பற்றி எனக்கு விவரிக்கையில் அந்த நாடகம் ஒரு சிறுகதையாக விரிய ஆரம்பித்தது. பொதுவாக சிறுகதைகளே நாடகமாவதுண்டு. இப்போது “அன்பமுதூறும் அயலார்” நாடகத்தை சிறுகதையாக எழுதவேண்டும் என்ற ஆர்வம் என்னுள் எட்டிப்பார்த்திருக்கிறது. பார்க்கலாம்.
000
நேற்று “சிமாகாவின் கனிந்த இரவுகள்” நாடகத்தின் சிறுகதை மூலம் எது என்று கேட்பதற்காக சீலனுக்கு வைபரில் ஒரு மெசேஜ் போட்டேன். உடனேயே அழைப்பு எடுத்தார். தகவல்களைச் சொன்னார். யாழ்ப்பாணத்தில் இப்போது நாளாந்த உழைப்பின் கூலியை நம்பியிருப்பவர்களின் நிலைமை படு மோசமாக இருப்பதாகச் சொன்னார். இதற்குமேலும் ஊர் தாங்காது என்றார். கலை இலக்கியச் சமூகச் செயற்ப்பாட்டாளர்களின் நிலையும் அதுவேதான். உலகத்திலேயே கிருமியைச் சமாளிப்பதில் இலங்கை ஒரு உதாரண நாடு என்று முகநூலில் பலர் பெருமைப்படுவதைக் காணக்கிடைக்கிறது. அப்படி என்ன ஒரு பொல்லாத பெருமை என்று தெரியவில்லை. பல நாளாந்த கூலிகளின் வாழ்வாதாரத்துக்கு எந்த உதவித்திட்டத்தையும் நடைமுறைப்படுத்தாமல் வெறுமனே ஊரடங்கை நடைமுறைப்படுத்துவதால் கிருமி வேண்டுமானால் தொற்றாமல் போகலாம். வசதி படைத்தவர்கள் பிழைத்துப்போகலாம். முகநூலில் பெருமையும் பட்டுக்கொள்ளலாம். ஆனால் ஏனைய மனிதர்கள் என்ன செய்வார்கள்? அரசாங்கத்தால் கவனிக்கப்படவேண்டிய அம்மனிதர்களைக்கூட தனிமனிதர்களும் சமூகச் செயற்பாட்டாளர்களும்தான் கவனிக்கவேண்டியிருக்கிறது. ஆனால் அந்த சமூகச்செயற்பாட்டாளர்களுக்குமே வாழ்வாதாரம் மிக மோசமான நிலையில் இருப்பதே இந்தச் சூழலின் மிகப்பாரதூரமான அம்சம்.
நான் அடிக்கடி எழுதுவதுதான். சீலன் போன்ற மனிதர்களின் நட்பு எப்போதுமே என்னை புழுவிலும் சிறியனாக மாற்றிவிடுவதுண்டு. தன்னை விடுத்து தன் சமூகத்தின்மீது அக்கறையும் அதிகாரத்தின்மீதான வெஞ்சினமும் கொண்ட கலைஞர்கள் மிக மதிப்புக்குரியவர்கள். நானெல்லாம் மூன்று வேளையும் சாப்பாடும் நாளைய வருமானத்துக்கான உத்தரவாதமும் கிடைத்தபின்னரேயே எழுத்துக்குள் நுழையும் ஒரு நரி. ஆனால் செம்முகம் சீலன் போன்றவர்கள் அப்படியானவர்கள் அல்லர். தம் விழியால் பிறருக்கழுது, அவர் சிரிக்கும்போது மாத்திரம் தாமும் சிரிக்கும் மனிதர்கள் இவர்கள். இவர்களே சமூகத்தின் ஏற்றத்தாழ்வுகளை சரி செய்பவர்கள். நேற்றை விட இன்றும் நாளையும் இனிதாய் இருப்பதற்காக தம் வாழ்நாளை அர்ப்பணிப்பவர்கள்.
அவர்களே என் பேரன்புக்குரியவர்கள்.
000
வாசிக்க ஆரம்பித்தவுடன் மிகவும் சந்தோஷமாக வாசித்து கொண்டு போனேன். ஆனால் முடிவில் மனப்பாரமாக போய்விட்டது.இப்போது தான் கொஞ்சம் கொஞ்சமாக இளம் சமுதாயம் இலக்கிய கூட்டங்கள் ,கலந்துரையாடல்கள் என்று ஆரம்பித்து கொண்டிருக்கும் நேரத்தில் ....சாண் ஏற முழம் சறுக்குவதாக இருக்கிறது.
ReplyDeleteஅன்பமுதூறும் அயலார்” நாடகத்தை சிறுகதையாக எழுதவேண்டும் என்ற ஆர்வம் என்னுள் எட்டிப்பார்த்திருக்கிறது. பார்க்கலாம்.....""
ReplyDeleteWaiting for this story JK... அந்த தலைப்பே மனச விட்டு போக மாட்டுது.
அருமையான பதிவு.
சிறிய எமது குளுவுக்கும் எமது உழைப்புக்கும் கிடைத்த மிகப்பெரிய அங்கீகாரமாகவே இதை நான் பார்கின்றேன். இடிந்து போயிருக்கும் இந்நேரத்தில் நம்பிக்கையும் புத்துணர்வையும் ஊட்டியிருக்கின்றது. மிக்க நன்றி.
ReplyDelete"நானெல்லாம் மூன்று வேளையும் சாப்பாடும் நாளைய வருமானத்துக்கான உத்தரவாதமும் கிடைத்தபின்னரேயே எழுத்துக்குள் நுழையும் ஒரு நரி"
எமக்கு சீலன் அண்ணாபோன்னோர் கூறுவதும் இப்படி இருக்க வேண்டும் என்றுதான்.
சோர்வற்று செயற்பட இது சிறந்த உபாயம்.