தட்ஸ் ரைட். என்ர போன் கொமெடுக்க விழுந்திட்டுது. பார்க்கவே குமட்டிக்கொண்டு வந்தது. என்னதொரு அறுந்த சீவியம் இண்டைக்கு. ச்சைக். அருமையான ஐபோன் எக்ஸ் போன் அது. ரிலீஸ் ஆன கையோட ஆசை ஆசையா ஓடிப்போய் வாங்கியோண்டு வந்தது. போட்டோ எல்லாம் சும்மா பளீரென்று எடுக்கும். பூவை போக்கஸ் பண்ணினா பின்னால கிடக்கிற இலை, குப்பைத்தொட்டி, வேலி எல்லாம் மறைஞ்சு பூ மட்டும் பிச்சுக்கொண்டு தெரியும். அர்ஜுனன் கிளிக்கழுத்த போக்கஸ் பண்ணினதுபோல. ஒருக்கா வீட்டில வாழையிலைச் சாப்பாடு. நான் தண்ணியைத் தெளிச்சு வழிச்சிட்டு சோத்தைப் போட ரெடி. அப்பப்பார்த்து ஒரு தண்ணித்துளி வாழையிலைத் தண்டுக்குள்ள சிக்கிக் கிடந்துது. உடனே போனை எடுத்தன். துளியை போக்கஸ் பண்ணினன். துளியை குளோசா எடுக்கேக்க அதில எண்ட மூஞ்சி தெரியிறமாதிரி. ஈ லோகத்தில வேற எவனும் அப்படி ஒரு படம் எடுத்திருக்கமாட்டான். நான் என் போனில எடுத்தன். படமெண்டா நெருப்புப் படம்.