Skip to main content

கிசோகர் வாங்கித்தந்த ஐபோன் : அத்தியாயம் 1போன கிழமை கிசோகரின் புண்ணியத்தில் எனக்கு புதிதாக ஒரு ஐபோன் கிடைத்தது.

அன்றைக்கும் வழமைபோல வெள்ளனவே நித்திரையால எழும்பி சூடா ஒரு தேத்தண்ணி வைக்கலாம் என்று கேத்திலை ஓன் பண்ணினேன். தண்ணீர் கொதிப்பதற்குள் பால்மாவையும் சீனியையும் ஒரு கப்புக்குள் போட்டுட்டு, அடுத்த கப்புக்குள் இரண்டு தேயிலை பக்கற்றைப் போட்டேன். அப்பவும் தண்ணீர் கொதிக்க ஒரு பத்துப்பதினைஞ்சு செக்கன் இருந்துது. அந்தப் பதினைஞ்சு செக்கன்களுக்குள் வாழ்க்கையில் நான் எவ்வளத்தையோ சாதித்திருக்க முடியும். சிங்குக்குள் முந்தைய நாள் பாத்திரங்கள் கழுவாமற் கிடந்தன. ஒன்றை எடுத்துக் கழுவி வைத்திருக்கலாம். குப்பைப்பையைக் கொண்டுபோய் வெளியே தொட்டிக்குள் போட்டிருக்கலாம். கழுவிக் காய வைத்திருந்த பிளேட்டுகளை கப்பேர்டுக்க வைத்திருக்கலாம். பாணுக்கு பட்டர் பூசியிருக்கலாம். வேலைகளா இல்லை. ஆனா எனக்கு அதுக்குள்ள ஒருக்கா பேஸ்புக்குக்குள்ள போயிட்டு வரலாம் என்று ஒரு அறுந்த யோசினை வந்துது. போனேன். அப்ப பிடிச்சுது சனி.

நம்ம கிசோகரின் பதிவு ஒன்று கண்ணுக்குள்ள ஆப்பிட்டுது. 

சர்வாதிகாரிகள் எல்லாம் கொடுங்கோலர்கள் அல்லர். ஹிட்லர் உலகத்துக்குத்தான் கொடுங்கோலன். ஆனால் அவன் ஆண்ட ஜேர்மனிக்கு அல்ல. லீ குவான் யூ சர்வாதிகாரிதான். ஆனால் சிங்கப்பூரைப் பொறுத்தவரைக்கு அவன் ஒரு நல்லதிகாரி என்ற வகையில அந்த போஸ்ட் போச்சுது. எனக்கெண்டா அஜித் அகர்கர் மாதிரி ஒரு ஸ்பின்னர் புத்தம் புதுபோலை கொண்டுவந்து ஹால்ப்வொலியாப்போட்டா எப்பிடி இருக்குமோ அப்பிடி இருந்துது. புட் வேர்க்கூட தேவையில்லை. சும்மா வழிச்சுவிட்டா எக்ஸ்றா கவருக்குள்ளால பந்து ஸ்டேடியம் தாண்டும். விடலாமோ அப்பன்? முடியாது. விறு விறு என்று கிசோகரின் பதிவுக்குக் கொமெண்டத் தொடங்கினன். சிங்கப்பூர் எதிர்க்கட்சியின் தீவிர மெம்பர்வேற எனக்கு நெருங்கிய நண்பி. இரண்டாம் உலக யுத்தகால ஜேர்மனிய வரலாறும் ஓரளவுக்குத் தெரியும். தகவலுக்கா குறைச்சல்? புளே எண்டா அப்படி ஒரு புளோ. அடிச்ச அடியில பந்து ஹியூம் பிரீவேயால சிட்னிக்குப் போய்க்கொண்டிருந்தது. எல்லாத்தையும் நீளமா எழுதிப்பழகினதில சனியன், கிசோகரிண்ட அஞ்சுவரி ஸ்டேடசுக்கு என்ர கொமெண்ட் லிற்றேச்சர் ரிவியூ, டேட்டா அனலிஸிஸ், எக்ஸகட்டிவ் சமரி ரேஞ்சில ஒரு ஜேர்னல் பேப்பர் நீளத்துக்குப் போகுது. ஆனால் ஒரு சின்ன ஒழுக்குக்கூட வந்திடாமா கூரைய வேஞ்சிடோணும் எண்டதில கவனமா இருந்தன். இவனுக எங்காவது எழுத்துப்பிழையை வச்சே காலத்தை ஓட்டிடுவானுக எண்டு தெரியும். கேத்தில் தண்ணி கொதிச்சு ஆறியும் போயிட்டுது. நான் எழுதிக்கொண்டிருக்கிறன். 

அப்பதான் எனக்கு ஒண்டுக்கு வந்துது. போனன். உள்ளே நுழையும்போதுதான் ஞாபகம் வந்தது. அட, இவ்வளவு நாளாக இங்கிதம் கருதி இதைத் தவிர்த்துவிட்டேனே. இதுக்குள்ள நனையிறதுக்கு எவ்வளவு மாட்டர் இருக்கு? இதை எப்படி மறந்தேன்?

நான் ஊரை விட்டு வெளிக்கிட்டு இருபது வருசம் ஆயிட்டு. கடைசியா ஊருக்குப்போயும் அஞ்சு வருசம் ஆயிட்டு. மல்லாகம் சந்தி தாண்டினா சிறுப்பிட்டியா உடுப்பிட்டியா என்று யோசிக்கக் குழப்பமா இருக்கு. ஆனாலும் முப்பத்தஞ்சு வயசில செத்துப்போன டயானா மாதிரி ஊர் எனக்கு எப்பவுமே இளமையாவே இருக்குது. தவிர ஊரை வச்சு எழுதினாத்தானே ஆருமே திரும்பிப் பாக்கினம். பண்ணிட வேண்டியதுதான்.


என் கொல்லைப்புறத்துக் காதலிகள் - ஒன்றுக்குப்போதல்


தொண்ணூறுகளில் எங்கள் ஊர்க் கக்கூசுக் கதவுகளுக்கு ஒரு பொது இயல்பு உண்டு. அவை எல்லாமே தன்னியக்கமாகவே திறக்கும் கதவுகள். தாமாக அவை ஒருபோதும் மூடா. ஆனால் திறக்கும். எவ்வளவு அடிச்சுத் சாத்தினாலும் சடக்கென்று திரும்பித் தானா திறந்துவிடும். அதற்கு மெயின் காரணம் எப்போதும் அந்தக் கதவுகள் பிணைச்சல் கறல்பிடித்தோ அல்லது கறையான் அரித்தோ அந்தரத்தில் தொங்குவதுதான். அவசரத்தில் கதவைத் திறந்துகொண்டு உள்ளேபோய் குந்திட்டு நிமிர்ந்து பார்த்தால் கதவு ஓ என்று அறுந்தது கிறீச்சிக்கொண்டு வந்து பக்கத்து சுவரில அடிக்கும். ‘சனியனே கதவை மூடிட்டு கக்கா இரு’ எண்டு வெளியே மிட் ஓனில் சம்பல் அரைச்சுக்கொண்டிருக்கும் ஆச்சிவேறு அலுப்படிக்கும். அந்தக் கதவுகளுக்குப் பூட்டுகளும் இருப்பதில்லை. பொதுவாக ஒரு உடைந்த சீமெந்துக்கல்லை வைத்துச் சாத்துவோம். ஆனால் ஒண்டுக்குப்போகும்போது வேலை மெனக்கட்டு கல்லை நாங்கள் நகர்த்துவதில்லை. அதற்கும் ஒரு டெக்னிக் இருக்கிறது. உள்ளேபோய் இடக்கையால் கதவைச் சாத்தியபடி வலக்கையால் பிடித்து டார்கட் பண்ணக்கூடிய இளமை அப்போது எமக்கிருந்தது. சிலவேளைகளில் கதவில் முதுகுப்புறமாக முண்டியபடி இங்கிருந்துகொண்டே அங்கே பேசினுக்கும் அடிக்கலாம். என்ன ஒன்று, முடிக்கும்போது ஊரெல்லாம் மழை துமிச்சிருக்கும். பிறகு கிணத்தில் துலா இழுக்கிற பஞ்சியில் தண்ணியும் அள்ளி ஊற்றுவதில்லை. அதனால் அடுத்து உள்ளே போபவர் ஊரைக்கூப்பிட்டுத் திட்டுவதுண்டு. இதனாலேயே ஏன் சோலி என்று நாங்கள் பொதுவாக கக்கூசுக்குள் ஒன்றுக்குப்போவதை முற்றாகவே தவிர்ப்போம்.

எங்களுக்கான நிலமொன்று இருந்த காலமது. அதனால் எங்கும் ஒன்றுக்கடிக்கலாம். அடித்தோம். பொதுவாக வீட்டுப்பத்திதான் வாகான இடம். வேலிக்கரை, மதில், மாமரத்தடி, விறகு பறிச்ச இடம் என்று ஒரு தொகை உபரிகளும் உண்டு. இப்படியான இடங்களில் ஒன்றுக்கடிக்கையில் நாங்கள் ஒரு கையை மரத்திலோ மதிலிலோ ஊன்றுவதுண்டு. அதற்கு என்ன காரணம் என்பதை உய்த்தறிய முடியவில்லை. ஒரு கையை என்ன செய்வது என்ற கேள்விக்குப் பதிலாக அது ஆரம்பித்திருக்கலாம். ஊன்றுவதற்கு தோதில்லாத வெட்ட வெளி என்றால் மாத்திரம் நாங்கள் இரண்டு கைகளாலும் பிடித்துப் பெயதபடி வானத்தைப்பார்த்து ‘கண்ணீரே’ என்று கத்துவதுண்டு. அநேகமான ரகுமான் பாடிய பாடல்கள் ஒண்டுக்கடிக்கையில் ஆசுவாசத்தைக் கொடுப்பவை. நம்பாட்டா இன்று ‘மாதரே’ ட்ரை பண்ணிப்பாருங்கள். ஈவின் வெள்ளைப்பூக்கள்கூட. சரணம் ட்றை பண்ணிப்பாருங்கள். கோடிக் கீர்த்தனைகளும். கவி கோர்த்த வார்த்தைகளும். யு கெட் இட்? ஒரு கிளீன் ரிலீபிங் பீலிங்கை கொடுக்கிறதல்லவா. ராஜா பாடல்கள் அப்படியல்ல. ‘தலையைக் குனியும் தாமைரையே’ பாடிக்கொண்டு… சான்சே இல்லை. மே பி பிகோஸ் ஒப் ரீதி கௌளை. இசை தெரிந்தவர்கள் கிளாரிபை பண்ணுங்கள்.

போதும்.

இன்றைக்குக் காலம் பயங்கரமாக மாறிவிட்டது. இப்போதெல்லாம் தொண்ணூறுகள்போல எங்களால் ஒண்டுக்கடிக்க முடிவதில்லை. சலக்கடுப்பு காரணமாகவும் இருக்கலாம். நிலமில்லாததும் இன்னொரு காரணமாக இருக்கலாம். நடு வீட்டுக்குள்வேறு கக்கூசுகள் வந்துவிட்டதால் ரகுமான்போல ‘ஓ நாடா’ என்று கத்த முடிவதுமில்லை. தவிர இன்றைய தலைமுறை தம் வாழ்வை அனுபவிக்கமுடியாதபடி தொழில்நுட்பம் தடுத்துக்கொண்டிருக்கிறது. சுவரில் கையை ஊன்றுவதற்குப்பதிலாக கையில் போனை வைத்து சாட் பண்ணியபடியே ஒன்றுக்கடிக்க ஆரம்பித்துவிட்டது இன்றைய தலைமுறை. சச் எ பிட்டி.

இப்படியெல்லாம் எழுதிக்கொண்டே போகலாம் என்று கண நேரத்தில் ஐடியா வந்துபோனது. பட் நினைக்கவே எரிச்சல் வந்தது. எதுக்கு? முந்தியெல்லாம் எழுதினத வாசிக்கேக்கதான் எரிச்சல் வரும். இப்ப எழுதிறதப்பற்றி நினைச்சாலே எரிச்சல் வருது. சோ மீண்டும் கொ.பு.கா எழுதும் ஐடியாவை அப்படியே கிடப்பில் போட்டுவிட்டேன்.

எனக்குக் கிசோகருக்குப் பதில் எழுதி முடிப்பது மிக முக்கியம். அதற்கு இரண்டு காரணங்கள்.

1. கிசோகரைவிட, கிசோகரின் வேகத்துக்கு ஈடுகொடுத்து தொடர்ச்சியாக லைக் பண்ணுற அந்த ஆசாமிகளைவிட நான் ஒரு மாபெரும் அறிவாளி எண்டத புரூவ் பண்ணோணும்.

2. எனக்கு முன்னரே போய் இன்னொரு அறிவாளி, குறிப்பா உந்த சயந்தன் கதிர் போய் அப்பிடியொரு கொமெண்டைப் போட்டிடக்கூடாது.

விளைவு. ஒரு கையில் போனை வைத்துக்கொண்டு தொடர்ந்து கிசோகர் ஸ்டேடசுக்குக் கொமெண்டியபடியே ஒண்டுக்கடிக்க ஆரம்பித்தேன்.

Popular posts from this blog

பர்மா புத்தர் - சிறுகதை

பனம் பாத்தி மெதுவாக முளைவிட ஆரம்பித்திருந்தது .   அதிகாலைக் குளிருக்கு அத்தனை பனங்கொட்டைகளும் நிலவண்டுகளின் கூட்டம்போல ஒட்டிக்குறண்டியபடி தூங்கிக்கொண்டிருந்தன . பாத்தியில் இடையிடையே கோரைப்புற்கள் கிளம்பியிருந்தன . முந்தைய நாள் அடித்து ஊற்றிய மழையில் இருக்காழிகள் சில குப்புறப்புரண்டு சாம்பல் நரையேறிய மயிர்க்கற்றைகளோடு வானம் பார்த்தபடி அண்ணாந்து கிடக்க , சில கொட்டைகள் பாத்தியினின்று சளிந்து அடிவாரங்களில் சிதறிக்கிடந்தன . பூரானுக்காகப் பிளக்கப்பட்டிருந்த கொட்டைகள் எல்லாம் ஒரு பக்கம் குவிக்கப்பட்டிருந்தன .  கார்த்திகை விளக்கீட்டுக்குப் பாத்தியடியில் குத்திவிடப்பட்டிருந்த பந்தத்தடி பாதி எரிந்த நிலையில் கறுப்பு வெள்ளைத் தொப்பியோடு இன்னமும் எஞ்சி நின்றது .  

விளமீன் - சிறுகதை

அந்த ஒரு மீன் மாத்திரம் முழித்துக்கொண்டுத் தனித்துத் தெரிந்தது. அந்தக் குவியலில் கிடந்த மீதி அத்தனை மீன்களும் இளஞ்சிவப்பு நிறத்திலிருக்க இது மாத்திரம் வெள்ளைத்தோலில் மெலிதாகப் படர்ந்திருந்த தங்கநிறக் கண்ணாடிச் செதில்களோடும், சற்றே திறந்துகிடந்த இரத்தச்சிவப்பு செவுள்களோடும் குவிந்த கண்களோடும். சரசு மாமி ராசனிடம் திரும்பவும் சொல்லிப்பார்த்தார். இம்முறை சற்றுக் கெஞ்சலாக. “தம்பி. நான் சொல்லுறன். அது எங்கட ஊர் விளமீன்தான். விறைச்சுக்கொண்டு கிடக்கு. நல்ல உடன் மீன். வாங்கித்தாவன்.” “அரியண்டம் பண்ணாம வாங்கோம்மா. ஊர் விளமீனை ஊருக்குப்போகேக்க சாப்பிட்டுக்கொள்ளலாம்.” மாமி அந்த விளமீனையை பார்த்தபடி நின்றார். இனி எப்போது ஊருக்குப் போய், எப்போது விளமீன் வாங்கி. இதுவெல்லாம் நடக்கிற காரியமா? ராசன் வேகமாக அடுத்த கடையை நோக்கி நடக்க ஆரம்பித்திருந்தான். சந்தை முழுதும் ராசனும் ரூபிணாவும் நடந்த வேகத்துக்குச் சரசு மாமியால் ஈடு கொடுக்கமுடியவில்லை. சேலை நிலத்தில் அரிபட அவர் பின்னாலேயே இழுபட்டுக்கொண்டுபோனார். அந்த விளமீன் அவர் பின்னாலேயே இழுபட்டு வந்துகொண்டிருந்தது. “இந்த ஊர் சினப்பரும் விளமீன்மாதிரித்தான் இருக

"என் கொல்லைப்புறத்துக் காதலிகள்" பற்றி இளங்குமரன்

யாழ்ப்பாண மக்களின் வாழ்க்கை போருடனும் துயருடனும் கடந்தது என்று எல்லோரும் அறிந்ததுதான், கதைகளும் ஏராளம். ஆனால் ஜே.கே தனது சொந்த அனுபவங்களின் ஊடே காட்டும் தொண்ணூறுகளின் யாழ் வாழ்க்கை மிக அழகானது, இயல்பானது. இன்னல்கள் கடந்த ஜன்னல் காற்று அந்த வாழ்க்கை. அந்த வாழ்வுணர்வு யாழில் வாழ்ந்தவர்களுக்கு தெரியும்(வாழ்பவன் நான், சற்றுப் பின்னே பிறந்துவிட்டேன், சில அனுபவங்களை இழந்தும் விட்டேன்). • ஒவ்வொரு அத்தியாயமும் ஒவ்வொரு சுளை, ஒவ்வொரு சுளையும் தனிச்சுவை. அவ்வப்போது தூறும் குண்டுமழையில் நனையாமல் பதுங்கும் பங்கர்கள், பங்கருக்குள்ளும் பய(ம்)பக்தியுடன் வைக்கும் பிள்ளையார் படம். அவரின் தம்பி முருகனைக்காண என விழாக்கோலம் பூண்ட நல்லூர் போய், வள்ளி, தெய்வானையையே தேடித் திரியும் உள்ளூர் முருகன்கள். விளையாட்டுப்பொருட்கள், ஜஸ்கிரீம், கச்சான் என கடைக்கண் கடைத்தெருப்பக்கமே இருக்க சுற்றித்திரியும் சின்னன்கள். தெருவெல்லாம் தெய்வம்கொண்ட கோயில்கள், பரீட்சை பயத்தில் அத்தனை கோயில்களுக்கும் போடும் கும்பிடுகள். எந்தப் பக்கம் பந்து போட்டாலும் நேரே மட்டும் அடிக்க கற்றுக்கொடுக்கும் ஒழுங்கை கிரிக்கட்டுகள். பாடசாலைகளுக்கிட