Skip to main content

கிசோகர் வாங்கித்தந்த ஐபோன் : அத்தியாயம் 2‘மல்லி …’

கூப்பிடும் சத்தம் கேட்கிறது. ஆனால் ஆளைக் காணவில்லை. சின்னக் கக்கூசு. இதுக்குள்ள ஆரு ஒளிந்திருக்கமுடியும்? நான் சுற்றிச் சுற்றிப்பார்க்கிறேன். ம்ஹூம். மீண்டும் கொமெண்டியபடியே ஒண்டுக்கடிக்க ஆரம்பித்தேன்.

‘மல்லி உன்னைத்தான்’

அப்போதுதான் கவனித்தேன். கொமெடுக்குப் பின்னாலிருந்துதான் சத்தம் கேட்டது. அங்கே ஒரு சின்னக் கரப்பான் பூச்சி. தலைகீழாகப் பிரண்டுகிடந்து துடித்துக்கொண்டிருந்தது.

ஆச்சரியத்துடன் நான் கரப்பானிடம் கேட்டேன்.

‘நீயா பேசியது?’

‘யெஸ் யெஸ் … நான்தான் கடவுள், உன்னைத் தடுத்தாட்கொள்ள வந்தேன்..’

‘வட் … என்னை ஏன் நீ தடுத்தாட்கொள்ளவேண்டும்? அதுவும் கரப்பான் பூச்சி அவதாரத்தில் … அதிலும் குப்புறப் பிரண்டுகிடந்து’

‘அது ஒரு சின்ன லாண்டிங் புரொப்ளம் … உன்னைத் தடுத்திடோணும் எண்டு அவசரத்தில எக்ஸ்ஹோஸ்ட் ஓட்டைக்குள்ளால பாய்ஞ்சு வரேக்கே ஒழுங்கா லாண்ட் பண்ண முடியேல்ல… கவுந்துட்டன், இப்ப திரும்பிப் பிரள சக்தி இல்ல எனக்கு.’

‘என்னது? கடவுளுக்கே சக்தி இல்லையா?’

‘இருந்த எனேர்ஜி எல்லாம் பறந்து விழேக்கையிலேயே போயிட்டுது. இப்பெல்லாம் பக்தர்கள் எண்ணிக்கை குறைஞ்சிட்டு கண்டியா? சப்போர்ட்டர்ஸ் இல்லாட்டி எங்கட சக்தியும் குறைஞ்சிடும். God power is proportional to his or her number of believers’

‘உது ஏன் இப்ப இங்கிலிஷில வருது?’

‘நீ எப்பிடியும் இதை எழுதத்தான் போறாய். அதான் இங்கிலிஷ் எண்டா கொஞ்சம் பஞ்சா இருக்குமெண்டு…தவிர டெரி பிரச்சட்டில இருந்து இந்த போர்சனை நீ சுட்டது சமூகத்துக்குத் தெரியவேணாமா?’

‘நல்லா வச்சுச் செய்யுறாய். சரி நீ இப்ப எதுக்கு கரப்பான் பூச்சி அவதாரம் எடுத்து வந்தாய்?’

‘சொல்லுறன்.. பொறு .. முதலில என்னை நிமிர்த்திவிடு. உந்தக் கறுமம் பிடிச்ச கரப்பான் பூச்சி அவதாரத்தை இனி எடுக்கவே கூடாது. சனியன், பிரண்டா நிமிர்த்திவிட பக்தர் ஆரும் வரோணும். அவனும் அரோகரா எண்டபடி எக்ஸைட்மெண்ட்ல மிதிச்சிட்டால் நான் சப்பளியவேண்டியதுதான்’

நான் உச்சுக்கொட்டியபடியே கரப்பானை நிமிர்த்திவிட்டேன். கடவுள் எண்டாலும் கரப்பானைக் கையால் தொட கொஞ்சம் அரியண்டமாக இருந்ததால் டொய்லட் டிசியுவைக்கொண்டு நிமிர்த்திவிட்டேன். நான் வணங்கும் எல்லாம் வல்ல இறைவன் என்னைத் தடுத்தாட்கொள்ள வந்தான் என்பது எனக்கு எவ்வளவு பெரிய பெருமை? ‘வந்தான்’, யெஸ் ஆண்பால் விகுதிதான். என்ன இது உங்கள் இறைவரும் ஆணா? என்று தர்மினி அக்கா கொமெண்டத் தயாராவது புரிகிறது. என் பாத்ரூமினுள் நிகழ்வது என்பதால் அருவமேயானவர் ஆணுருவம் எடுத்துவந்து தடுத்தாட்கொண்டார் என்க.

‘இப்ப சொல்லுங்கள் கடவுளே … எதற்கு என்னைத் தடுத்தாட்கொள்ள வந்தீர்கள்?’

கரப்பான் குரலைச் செருமியபடியே ஆரம்பித்தது.

‘இப்ப நீ என்ன செய்துகொண்டிருக்கிறாய்?’

‘உச்சா போய்க்கொண்டிருக்கிறன்’

‘அதென்ன வலக்கையில போனை வச்சுக்கொண்டு?’

‘ஓ அதுவா … அது இந்த கிசோகர் ஸ்டேடசுக்கு கொமெண்டுறன்’

‘ஏக்கதமாய் மல்லி … பொட்டக்கின்ன… இப்ப நீ கிசோகருக்கு பதில் எழுதத்தான் வேண்டுமா?’

‘இல்லையா பின்ன? இப்பிடி ஒரு போஸ்ட் எழுதியிருக்கிறான். ஹிட்லர் ஜேர்மனியர்களுக்கு நல்லது பண்ணினான் என்று போகிற போக்கில சொல்லுறான். அப்ப அங்கு கொல்லப்பட்ட ஜூதர்கள் எல்லாம் சீனா நாட்டுக்காரர்களா? இல்ல ரெசிஸ்டன்காரர்கள் எல்லாம் ஆபிரிக்கர்களா? இப்பிடி எல்லாம் எழுதிறதை எப்படி பார்த்தும் பார்க்காமப் போகிறது? எத்தினை லைக்கெண்டு தெரியேல்ல. ஆனா தோராயமா ஒரு ஐநூறு லைக்காவது விழுந்திருக்கும். நீதான் ஒண்டும் செய்யாம லூசுமாதிரி கரப்பான் வேசம் கட்டித் திரியிறாய். நானும் பேசாமப்போனா சமூகம் என்னாகும்? அதிலும் இன்றைய இளைஞர்களுக்கு யார்தான் இதைச்சொல்லுறது?’

‘சமூகத்தைப்பற்றி நமக்கென்ன வந்துது கழுத… நீ தாங்குவியா? அத முதலில யோசி’

‘என்ன சொல்லுறீங்கள் இறைவனே?’

‘சாமி படத்தில விக்ரம் பீர்ல மூஞ்சி கழுவுற மாதிரி இவன் கிசோகர் தூஷணத்தாலதான் எழும்பினோன பல்லு விளக்குவாப்ல… நீ தாங்குவியா?’

நான் அப்போதுதான் கடவுளைக் கூர்ந்து கவனித்தேன். நிமிர்த்தியபிறகு தலைவர் இரண்டு உணர்கொம்புகளோடு அழகாகவே இருந்தார். மையோ, மரகதமோ, மறி கடலோ, மழை முகிலோ, ஐயோ இவன் வடிவு என்று விளிக்குமளவுக்கு அண்ணர் பயங்கர வடிவா இருந்தார். இதற்குமேலும் ஒரு நீண்ட வர்ணனை போடலாம் என்ற எண்ணம் வந்தது. ஆனால் என்னெய்யிறது. ஒவ்வொரு தடவையும் கடவுள் எனக்குப் புதிது புதிதாக ஒவ்வொரு ரூபத்தை எடுத்து வருவதால் கடவுள் பற்றிய விவரணங்களைச் செய்வதில் பலனில்லாமல் போய்விடுகிறது. ஒன்றை மட்டும் பொதுவில் சொல்லிவிடுகிறேன். பூவாய், புழுவாய், மரமாகி, பல் விருகம் ஆகி, பறவையாய், பாம்பாகி, கல்லாய், மனிதராய், பேயாய், கணங்களாய், வல்லசுரராகி, முனிவராய், தேவராய் எல்லாப் பிறப்பும் பிறந்திளைப்பான் எம்பெருமான். எனக்காக. பட் நான் எப்பவும் நாந்தான். ஆணவமெனில் அப்படியே ஆகுக.

‘என்னடா … இடைநடுவில எத்தனை பந்தி முடிஞ்சுது?’, கடவுள் குரலைக் கனைத்தார்.

‘ஜஸ்ட் ஒரு பந்திதான். கம்பன் பாட்டு ஒன்றையும் எடுத்து ….’

‘அந்தக்கறுமத்தை பேந்து செய். இப்ப சொல்லு. நீ தாங்குவியா?’

‘நான்கூட பள்ளிக்கூடக்காலத்தில தூஷணம் கொட்டியிருக்கிறன் கடவுளே’

‘எங்கு சொல்லு பார்க்கலாம்?’

சொன்னேன். ஐந்தாறு சொற்கள் சும்மா கட கடவென வந்து விழுந்தன.

‘எப்புடீ?’

‘இளையராஜா மெலடிமாதிரி இருக்குது. இதெல்லாம் தூஷணமாடா? தூஷணம் எண்டா அது இம்மை மறுமை இல்லாமல் இருக்கோணும்.’

கடவுளே இம்மை மறுமை பற்றிச் சொல்லும்போது கேட்டுத்தானே ஆகவேண்டும். பேசாமலிருந்தேன். சிங்கனே தொடர்ந்தார்.

�‘மல்லி, உனக்குத் தூஷணம் கொட்டத்தான் தெரியும் … ஆனா அந்த கிசோகர் நீ கொட்டினதையே குமிச்சு தண்ணி போட்டு குழைச்சு உனக்கே சமாதி கட்டுவான்… தூஷணத்தில அவன் ஒரு கோத்தாடா. நீ வெறும் சிவாஜிலிங்கம். காமடிப் பீசு. சப்போர்டுக்கு வீட்டு நாய்கூட உன்னோட வராது. சமாளிப்பியா நீ?’

‘நம்பிக்கை இருக்கு கடவுளே’

‘ஒரு கேஸ் ஸ்டடி சொல்லுறன். கேளு. பிரதீபன் குமரகுருநாதன் என்று ஒரு டொக்டர் பயல். நல்லவந்தேன். ஏதோ ஒரு அரசியல் விவாதத்தில கிசோகரோட போய்த் தனகிட்டான். வித்துவான் கொட்டினானே ஒரு கொட்டு. காயத்திரிகூட வடிவேலை அப்பிடி கிழிச்சிருக்கமாட்டாள். கடவுள் நானே டென்சன் ஆயிட்டன் எண்டா பார்த்துக்கோ.’

எனக்குச் சாதுவாகப் பயம் பீடித்துக்கோண்டது. 'சாதுவாக' என்பது எத்தனை அழகான ஒரு தமிழ்ச்சொல். எப்போதாவது பயன்படுத்தும்போது யோசித்துப்பார்த்ததுண்டா? எனிவே பக் டு தட் டொகடர்.

‘ஐயய்யோ அப்புறம் அந்த டொக்டருக்கு என்ன ஆச்சுது? வெறுப்பில போய்ப் போத்துக்கொண்டு படுத்திட்டானா?’

‘அதுதான் இல்லை. அவன் என் டிசைபிள் புத்தரோட ஒரு உண்மையான விசுவாசியாக இருக்கவேண்டும். அவ்வளவு தூஷணம் பொழிஞ்சாப்பிறகும் அங்கேயே திரியிறான். மல்டி பரல் அடிச்ச இடத்தில கொள்ளை அடிக்கப்போறமாதிரி. எதுவுமே நடக்காதமாதிரி அமைதியாக, தான் சொன்னதையே சொல்லிக்கொண்டு இருக்கிறான். அவனுகளுக்கெல்லாம் ஸ்டீல் பாடி. ஆனா நீ தாங்குவியா?’

சட்டென நனைந்தது எனக்கு.

யோசித்தேன். உண்மைதானே. சிவனே என்று காலைமை எழும்பினமா, ஒரு டீ போட்டுக் குடிச்சமா, புத்தகத்தை வாசிச்சமா, வேலைக்குப் போனமா என்று இல்லாமல் இப்ப என்ன மயிருக்குப் போய் கிசோகருக்குப் பதில்போட்டு, அதுக்கு ஒரு பதில் வாங்கி, பிறகு அதுக்குத்திரும்ப நான் ஒரு பதில் போட்டு, அதுக்கிடைல இன்னொரு பத்துக்கொமெண்ட மற்றாக்கள் போட்டு, வேலை நேரம் துலைஞ்சு, தலை இடிச்சு, வீட்டில டென்சனாகி, பிறகு தனியா மெசேஜில இன்னொரு ரவுண்ட் வந்து, இந்த காப்பில பத்துபேர் எனக்கு அறிவுரை சொல்ல வந்து, மைந்தன் சிவா பின்னாளில் ஸ்கிரீன்ஷொட் வந்திடக்கூடாது என்று தொலைபேசியிலேயே எடுத்துக்கதைத்து, இதுகளை சமாளிக்க அவசர அவசரமா நான் ஒரு பாட்டுப்பதிவு போடவேண்டி வந்து, எதுக்கு எனக்குத் தேவையில்லாத வேலை? மிக எளிமையான லோகியல் வாழ்வை வாழும் எனக்கு எதுக்கு இந்தப்பெரிய சமூக அக்கறை வேண்டிக்கிடக்கு? லீ குவான்யூவும் மரிச்சிட்டு. ஹிட்லரும் மரிச்சிட்டு. இப்ப யூதர்கள் உதே வேலையை பாலத்தீனர்களுக்கு செய்யிறாங்கள். உலக நியதில எனக்கென்ன அக்கறை எண்டு கேக்கிறன். இதில நானும் கிசோகரும் என்னத்தைக் கிண்டி என்ன வந்திடப்போகுது? அறிவுஜீவித்தனத்தை காட்டிறம் எண்டு உள்ள நிம்மதியை என்ன சனியனுக்குக் கெடுக்கவேணும்?

பளிச்சென்று ஞானம் வந்து என் மூளைக்குள் இறங்கியது. கரப்பான் கடவுளுக்கு நன்றி சொன்னேன். எவ்வளவு பெரிய பாக்கியம் பாருங்கள்? அவரவர் இமையம் முதல் குமரிவரை ஞானம்தேடி அலைகிறார்கள். எனக்கு வெறுமனே ஒரு உச்சா போகும் கப்பில் இறைவன் வந்து தடுத்தாட்கொள்கிறான். வீரவான் வந்து கவுண்டுகிடந்த இடத்தில் ஒரு சின்ன கரப்பான் சிலையை சைனீஸ் கடைல வாங்கிவந்து வைத்து நாளும் தொழுது நான் இனிக் காலைக் கடன் கழிக்கவேணும்.

‘நன்றி கடவுளே’

அவதாரப் பயன் நிறைவு எய்தியதால், கரப்பானை எடுத்து கொமெடுக்குள் போட்டுவிட்டு, கிசோகருக்கு நான் எழுதிக்கொண்டிருந்த அந்தாப்பெரிய கொமெண்டை அழிக்க ஆரம்பித்தேன்.

யெஸ், இன்னமும் ஒண்டுக்குப்போனபடியே.

000 

Popular posts from this blog

பர்மா புத்தர் - சிறுகதை

பனம் பாத்தி மெதுவாக முளைவிட ஆரம்பித்திருந்தது .   அதிகாலைக் குளிருக்கு அத்தனை பனங்கொட்டைகளும் நிலவண்டுகளின் கூட்டம்போல ஒட்டிக்குறண்டியபடி தூங்கிக்கொண்டிருந்தன . பாத்தியில் இடையிடையே கோரைப்புற்கள் கிளம்பியிருந்தன . முந்தைய நாள் அடித்து ஊற்றிய மழையில் இருக்காழிகள் சில குப்புறப்புரண்டு சாம்பல் நரையேறிய மயிர்க்கற்றைகளோடு வானம் பார்த்தபடி அண்ணாந்து கிடக்க , சில கொட்டைகள் பாத்தியினின்று சளிந்து அடிவாரங்களில் சிதறிக்கிடந்தன . பூரானுக்காகப் பிளக்கப்பட்டிருந்த கொட்டைகள் எல்லாம் ஒரு பக்கம் குவிக்கப்பட்டிருந்தன .  கார்த்திகை விளக்கீட்டுக்குப் பாத்தியடியில் குத்திவிடப்பட்டிருந்த பந்தத்தடி பாதி எரிந்த நிலையில் கறுப்பு வெள்ளைத் தொப்பியோடு இன்னமும் எஞ்சி நின்றது .  

விளமீன் - சிறுகதை

அந்த ஒரு மீன் மாத்திரம் முழித்துக்கொண்டுத் தனித்துத் தெரிந்தது. அந்தக் குவியலில் கிடந்த மீதி அத்தனை மீன்களும் இளஞ்சிவப்பு நிறத்திலிருக்க இது மாத்திரம் வெள்ளைத்தோலில் மெலிதாகப் படர்ந்திருந்த தங்கநிறக் கண்ணாடிச் செதில்களோடும், சற்றே திறந்துகிடந்த இரத்தச்சிவப்பு செவுள்களோடும் குவிந்த கண்களோடும். சரசு மாமி ராசனிடம் திரும்பவும் சொல்லிப்பார்த்தார். இம்முறை சற்றுக் கெஞ்சலாக. “தம்பி. நான் சொல்லுறன். அது எங்கட ஊர் விளமீன்தான். விறைச்சுக்கொண்டு கிடக்கு. நல்ல உடன் மீன். வாங்கித்தாவன்.” “அரியண்டம் பண்ணாம வாங்கோம்மா. ஊர் விளமீனை ஊருக்குப்போகேக்க சாப்பிட்டுக்கொள்ளலாம்.” மாமி அந்த விளமீனையை பார்த்தபடி நின்றார். இனி எப்போது ஊருக்குப் போய், எப்போது விளமீன் வாங்கி. இதுவெல்லாம் நடக்கிற காரியமா? ராசன் வேகமாக அடுத்த கடையை நோக்கி நடக்க ஆரம்பித்திருந்தான். சந்தை முழுதும் ராசனும் ரூபிணாவும் நடந்த வேகத்துக்குச் சரசு மாமியால் ஈடு கொடுக்கமுடியவில்லை. சேலை நிலத்தில் அரிபட அவர் பின்னாலேயே இழுபட்டுக்கொண்டுபோனார். அந்த விளமீன் அவர் பின்னாலேயே இழுபட்டு வந்துகொண்டிருந்தது. “இந்த ஊர் சினப்பரும் விளமீன்மாதிரித்தான் இருக

"என் கொல்லைப்புறத்துக் காதலிகள்" பற்றி இளங்குமரன்

யாழ்ப்பாண மக்களின் வாழ்க்கை போருடனும் துயருடனும் கடந்தது என்று எல்லோரும் அறிந்ததுதான், கதைகளும் ஏராளம். ஆனால் ஜே.கே தனது சொந்த அனுபவங்களின் ஊடே காட்டும் தொண்ணூறுகளின் யாழ் வாழ்க்கை மிக அழகானது, இயல்பானது. இன்னல்கள் கடந்த ஜன்னல் காற்று அந்த வாழ்க்கை. அந்த வாழ்வுணர்வு யாழில் வாழ்ந்தவர்களுக்கு தெரியும்(வாழ்பவன் நான், சற்றுப் பின்னே பிறந்துவிட்டேன், சில அனுபவங்களை இழந்தும் விட்டேன்). • ஒவ்வொரு அத்தியாயமும் ஒவ்வொரு சுளை, ஒவ்வொரு சுளையும் தனிச்சுவை. அவ்வப்போது தூறும் குண்டுமழையில் நனையாமல் பதுங்கும் பங்கர்கள், பங்கருக்குள்ளும் பய(ம்)பக்தியுடன் வைக்கும் பிள்ளையார் படம். அவரின் தம்பி முருகனைக்காண என விழாக்கோலம் பூண்ட நல்லூர் போய், வள்ளி, தெய்வானையையே தேடித் திரியும் உள்ளூர் முருகன்கள். விளையாட்டுப்பொருட்கள், ஜஸ்கிரீம், கச்சான் என கடைக்கண் கடைத்தெருப்பக்கமே இருக்க சுற்றித்திரியும் சின்னன்கள். தெருவெல்லாம் தெய்வம்கொண்ட கோயில்கள், பரீட்சை பயத்தில் அத்தனை கோயில்களுக்கும் போடும் கும்பிடுகள். எந்தப் பக்கம் பந்து போட்டாலும் நேரே மட்டும் அடிக்க கற்றுக்கொடுக்கும் ஒழுங்கை கிரிக்கட்டுகள். பாடசாலைகளுக்கிட