பொதுவாகவே மரணங்களின் பின்னர் மனிதர்களுக்கு அவர்களின் சுற்றத்தவர்களாலும் அறிந்தவர்களாலும் புதிய பல அவதாரங்கள் கொடுக்கப்படுகின்றன. பெரும்பாலும் அவை நல்லவையாகத்தான் இருப்பதுண்டு. அந்தியேட்டிக் கல்வெட்டுகளிலும் அஞ்சலிக் கட்டுரைகளிலும் முதற்தடவையாக அவற்றை நாம் அறிந்துகொள்ளும்போது சமயத்தில் நமக்கு ஆச்சரியமும் அடைவதுண்டு. அகால மரணங்களின்போது இவ்வடிவங்கள் மேலும் அதீத எல்லைகளைத் தொடுவதுண்டு. ஆனால் அதுவே ஒரு தற்கொலை மரணம் ஆகிவிட்டால் இந்தக் கட்டமைப்புகளில் சின்ன பச்சாதாபமும் சிறுமையும் ஒட்டிக்கொண்டுவிடுகின்றன. தற்கொலை செய்த மனிதர்களுக்கு மற்றவர் செய்யும் அஞ்சலிகளைக் கூர்மையாகக் கவனித்துப்பாருங்கள். அவற்றில் அதிகாரமும் மேதாவித்தனமும் தொக்கி நிற்கும். அக்கணம் உயிரோடு இருக்கும் நாம் இறந்தவரைவிடச் சற்றுப் பெரியவராகிவிடுகிறோம். அறிவுரை சொல்லும் நிலைக்கு உயர்ந்துவிடுகிறோம். மிகவும் நெருக்கமானவர் என்றால் கூடவே ஒரு குற்ற உணர்வும் சேர்ந்துகொள்ளும். தற்கொலைக்கான காரணங்களைத் தேட ஆரம்பிப்போம். பல சமயங்களில் நாம் உருவாக்கி வைத்திருக்கும் காரணங்களுக்கான சாட்சியங்களைத் தேடிப்போவோம். அவர் ஏன் அப்படி இறந்தார் எ