Skip to main content

பிரபாகரனின் போஸ்ட்மார்ட்டம் - மயிலன்


பொதுவாகவே மரணங்களின் பின்னர் மனிதர்களுக்கு அவர்களின் சுற்றத்தவர்களாலும் அறிந்தவர்களாலும் புதிய பல அவதாரங்கள் கொடுக்கப்படுகின்றன. பெரும்பாலும் அவை நல்லவையாகத்தான் இருப்பதுண்டு. அந்தியேட்டிக் கல்வெட்டுகளிலும் அஞ்சலிக் கட்டுரைகளிலும் முதற்தடவையாக அவற்றை நாம் அறிந்துகொள்ளும்போது சமயத்தில் நமக்கு ஆச்சரியமும் அடைவதுண்டு. அகால மரணங்களின்போது இவ்வடிவங்கள் மேலும் அதீத எல்லைகளைத் தொடுவதுண்டு. ஆனால் அதுவே ஒரு தற்கொலை மரணம் ஆகிவிட்டால் இந்தக் கட்டமைப்புகளில் சின்ன பச்சாதாபமும் சிறுமையும் ஒட்டிக்கொண்டுவிடுகின்றன. தற்கொலை செய்த மனிதர்களுக்கு மற்றவர் செய்யும் அஞ்சலிகளைக் கூர்மையாகக் கவனித்துப்பாருங்கள். அவற்றில் அதிகாரமும் மேதாவித்தனமும் தொக்கி நிற்கும். அக்கணம் உயிரோடு இருக்கும் நாம் இறந்தவரைவிடச் சற்றுப் பெரியவராகிவிடுகிறோம். அறிவுரை சொல்லும் நிலைக்கு உயர்ந்துவிடுகிறோம். மிகவும் நெருக்கமானவர் என்றால் கூடவே ஒரு குற்ற உணர்வும் சேர்ந்துகொள்ளும். தற்கொலைக்கான காரணங்களைத் தேட ஆரம்பிப்போம். பல சமயங்களில் நாம் உருவாக்கி வைத்திருக்கும் காரணங்களுக்கான சாட்சியங்களைத் தேடிப்போவோம். அவர் ஏன் அப்படி இறந்தார் என்று ஆய்வு செய்யத்தொடங்கிவிடுவோம். அத்தகைய ஆய்வின் ஒரு முழுநீள வடிவம்தான், மயிலன் ஜி சின்னப்பன் எழுதிய ‘பிரபாகரனின் போஸ்ட்மார்ட்டம்’ நாவல்.

நாவலின் ஆரம்பத்தில் அறுவை சிகிச்சைக்கான மருத்துவக்கல்வியில் இறுதியாண்டு படிக்கும் பிரபாகரன் எனும் மாணவன் தற்கொலை செய்துகொள்கிறான். அதனைத் தொடர்ந்து, அந்தத் தற்கொலைக்கு முன்னரும் பின்னருமான சில நாட்களைப்பற்றியும், அந்தச் செய்தியை அவனுடைய நெருங்கிய நண்பர்கள் சிலர் எப்படி அணுகுகிறார்கள் என்றும் கதை நகர்கிறது. பிரபாகரனின் தற்கொலை தவிர்ந்த நாவலின் ஏனைய பகுதிகள் எல்லாம் அவனது நண்பன் ஒருவனது பார்வையிலேயே சொல்லப்படுகிறது. அந்த நண்பன் பிரபாகரனின் தற்கொலைக்கான காரணங்களை அறிய முயல்கிறான். அதற்காக வைத்தியசாலையின் பணியாளர்களோடும் விரிவுரையாளரோடும் சக மாணவர்களோடும் பிரபாகரனின் குடும்பத்தவர்கள், நண்பர்களோடும் பேசிப்பழகுகிறான். ஒவ்வொருவருடனும் பேசும்போதும் பிரபாகரன் பற்றிய சித்திரங்கள் மாறிக்கொண்டேயிருக்கின்றன. சிற்பக்கலை அறியாத ஒருத்தர் உளி கொண்டு செதுக்கும் கல்லைப்போலப் பிரபாகரனின் உருவம் ஒரு முழுமையை நோக்கி நகராது அங்குமிங்குமென திசைமாறி அலைந்துகொண்டிருக்கிறது. யானை பார்த்த குருடர்கள்போல எல்லோருக்கும் பிரபாகரன் பற்றிய ஒரு சித்திரம் இருந்தது. அதில் கொஞ்சம் நிஜ பிரபாகரனும் மீதி தம் மனநிலை சார்ந்து ஏற்றிவிட்ட புதியதொரு மனிதனும் இருந்தார்கள். இவற்றையெல்லாம் தேடிச் சேகரிக்கும் அவனது நண்பனுக்கும் தனியாக ஒரு வடிவம் உருப்பெறுகிறது. வாசிக்கும்போது நமக்கு இங்கே நிகராகக் கிடைப்பது பிரபாகரனோ அவனுடைய தற்கொலைக்கான காரணங்களோ அல்ல. மாறாக அவனைச் சுற்றியிருந்த மனிதர்களின் எண்ணங்களும் சிந்தனைகளுமே.
‘பிரபாகரனின் போஸ்ட்மார்ட்டம்’ நாவலின் ஆதார இழை தமிழுக்கு ஒன்றும் புதிதில்லை. எஸ். ராமகிருஷ்ணனின் ‘உறுபசி’ நாவலும் இவ்வகையான இரு கதைக்களத்தையும் உத்தியையும் கொண்டதுதான். சம்பத் என்னும் நண்பனது மரணத்தின் பின்னர் அவனது மூன்று நண்பர்கள் எப்படி அவனை நினைவு மீட்டிக்கொள்கிறார்கள் என்பதுதான் உறுபசியின் கதை. அங்கும் அவர்கள் மீட்டிக்கொள்வது என்னவோ சம்பத்தைத்தான். ஆனால் வெளித்தெரிவது அவரவர் எண்ணங்களே. இரண்டு நாவல்களுக்குமான பெரு வித்தியாசம் என்னவென்றால், உறுபசி நாவலில் மூன்று வேறு வேறு நண்பர்களின் கோணங்களில் கதை நகரும், இந்த நாவலில் பலரது பார்வை இருந்தாலும் ஒரே ஒருவனது கோணத்திலேயே கதை கட்டியமைக்கப்படும்.
‘பிரபாகரனின் போஸ்ட்மார்ட்டம்’ நாவல் இந்திய மருத்துவத்துறையிலும் குறிப்பாக மருத்துவக்கற்கையிலும் உள்ள சிக்கல்களை வெளிப்படையாகப் பேசுகிறது. அங்கிருக்கும் அதிகார துஷ்பிரயோகங்கள், மாணவர்களின் உளச்சிக்கல்கள், ஊழல் என்று அது சொல்லும் விசயங்கள் நமக்கு ஓரளவுக்குத் தெரிந்தவைதான். வைத்தியசாலையில் நிகழும் கதைகள் அங்கு வருகைதரும் நோயாளிகளின் பார்வையிலேயேதான் பெரும்பாலும் எழுதப்படுவதுண்டு. இந்த நாவல் அதிலிருந்து மாறுபட்டு உள்ளிருந்தே உரத்து ஒலிப்பதால் அதற்கு ஒரு வலுவும் உண்மைத்தன்மையும் சேர்ந்துகொள்கின்றன. ஆயினும் அது கொடுக்கும் விம்பமானது ஏனைய கதைகளிலிருந்து மாறிவிடவில்லை. இதன் சிக்கல் என்னவென்றால், ஒரு துறை சார்ந்த முழு சித்திரமும் இதுதான் என்ற ஒரு தோற்றப்பாட்டை அவை ஏற்படுத்திடும் அபாயம் இருக்கிறது. அத்துறை கட்டிவைத்திருக்கும் மேட்டிமைத்தனத்தின்மீது கொண்ட வெறுப்பால் இந்த நாவலை நாங்கள் ஒரு புன்னகையோடு அப்படியே ஏற்றுக்கொள்ளும் மனநிலையும் நமக்கு வந்துவிடுகிறது. இத்துறையில் ஆறுதல் கொடுக்கும் விசயங்களே இல்லையா என்ற கேள்வியும் எழுகிறது. இலக்கியம் என்பது எப்போதுமே விளிம்புகளையும் சிக்கல்களையுமே பேசவேண்டும் என்று தமிழில் எழுந்திருக்கும் சமகாலத் தோற்றப்பாட்டின் விளைவுதான் இது என்று தோன்றுகிறது. பொதுப்புத்தி மருத்துவத்துறையை விதந்தேற்றிக்கொண்டிருப்பதால் இலக்கியம் அதன் மறுபக்கத்தைக் காட்ட விளைகிறது என்று எடுத்துக்கொள்ளவேண்டியதுதான்.
‘பிரபாகரனின் போஸ்ட்மார்ட்டம்’ நாவலின் மொழியில் ஒருவித தன்னமைதி இருக்கிறது. மயிலனுக்கு மனித உணர்வுகளின் அலசலை மிக இயல்பாகச் செய்யமுடிகிறது. ஆதவனைப்போல. ஆதவனின் கதைகளிலும் எழுத்தாளரின் சமூக விமர்சனம் தனியாக ஒலித்துக்கொண்டேயிருக்கும். ஆனால் அது கதைகள் முழுதும் வியாபிக்காது. இங்கே அது நாவல் முழுதும் வியாபிக்கிறது. என்ன ஒன்று, அந்த விமர்சனம் முழுதும் ஒருவித காழ்ப்பும் வன்மமும் சுய பச்சாதாபமும் தெறித்துக்கொண்டேயிருக்கின்றன. சமகாலத் தமிழ் எழுத்துகள் பலவற்றில் நாம் காண்பதுபோல இந்த வெறுப்பு எனும் உணர்வு இங்கும் ஆழ நீரோட்டமாக ஓடிக்கொண்டேயிருக்கிறது. அல்லது அதிலிருந்து மீள முயற்சி செய்கின்ற சுய பரிசோதனை எழுத்துகள். சமூக வலைத்தள வெளி இந்தத் தலைமுறைமீது ஊன்றிவிட்ட விசச்செடி அது. இந்நாவலில் ஒரு புள்ளிக்கு மேலே அந்தத் தொனிமீது நமக்கு ஒரு வெறுப்பு வந்துவிடுகிறது. உண்மையில் நாவலின் போக்கில் அறிமுகப்படுத்தப்படும் பாத்திரங்களினூடாகவே பிரபாகரனின் போஸ்ட்மார்ட்டம் இடம்பெற்றுவிடுகிறது. வாசகர்களாகிய நாமும் கதை சொல்லியைப்போலவே அதனை அலசியபடிதான் முன்னகர்ந்து செல்கிறோம். ஆனாலும் இரண்டாம் பாதியில் கதை சொல்லி மறுபடியும் ஒவ்வொரு பாத்திரங்களையும் அலசி ஆராய்கிறான். அது நாவலின் மொழியும் எண்ணங்களும் மீளவும் ஒப்பிக்கப்படுகின்ற தோற்றத்தைக் கொடுக்கிறது.
இணையத்தில் வாசிக்கவும் எழுதவும் ஆரம்பித்த காலந்தொட்டே மயிலனை எனக்குத் தெரியும். எழுத்து, வாசிப்பு காரணங்களையும் தாண்டியது நமது நட்பு. மயிலன் ரசனைக்காரர். வாழ்க்கையைக் கொண்டாடத்தெரிந்தவர். மனித எண்ணங்களை ஆழமாகப் புரிந்துகொள்ளக்கூடியவர். அதன் வெளிப்பாட்டை இந்நாவலிலேயே பல இடங்களில் அறிந்துகொள்ளமுடியும்.
குறிப்பாக இந்த வரிகளில்.
“தன்னுடைய தவறுகளுக்காகத் தன்னையே கேள்வி கேட்டுக் கொள்வது ஒருவித மனமுதிர்ச்சியாகப் பாவிக்கப்பட்டு, நான் என் தவறுகளை மழுப்பி சால்ஜாப்பு சொல்லி சமாளிக்காமல் எத்தனை திறந்த மனதுடன் நேர்மையாக அதனை அலசி உண்மையை நோக்கிப் பயணிக்கிறேன் என்றொரு கர்வத்தை அது கொடுத்துவிடுகிறது. அது சற்று பொங்கிவிடும்போது அந்த சுய பகடி தனக்கே மனரீதியான தண்டனை கொடுக்க ஆரம்பிக்கிறது. அநாவசிய உளவியல் சிக்கல்கள் அங்கே ஆரம்பபாகின்றன. ஒரு வகையில் இது ஈகோவிற்கும் சூப்பர் ஈகோவிற்கும் இடையிலான போராட்டம், இது கொடுக்கும் குற்றவுணர்வால் உண்டாகும் மன அழுத்தத்தைக் குறைக்க சூப்பர் ஈகோ என்ற அக விமர்சகனை தலையில் கொட்டி ஓரமாக உட்கார வைத்துவிடவேண்டும்”
இந்த ஆழமான சிந்தனைகள்தான் மயிலனிடம் எனக்கு மிகவும் பிடித்த விசயம். சவால் என்னவென்றால் அதனை நேரடியாகச் சொல்ல எத்தனிக்காது தன் புனைவையும் பாத்திரங்களையும் நம்பி அந்தப் பொறுப்பை அவற்றிடம் ஒப்படைப்பதுதான்.

Popular posts from this blog

பர்மா புத்தர் - சிறுகதை

பனம் பாத்தி மெதுவாக முளைவிட ஆரம்பித்திருந்தது .   அதிகாலைக் குளிருக்கு அத்தனை பனங்கொட்டைகளும் நிலவண்டுகளின் கூட்டம்போல ஒட்டிக்குறண்டியபடி தூங்கிக்கொண்டிருந்தன . பாத்தியில் இடையிடையே கோரைப்புற்கள் கிளம்பியிருந்தன . முந்தைய நாள் அடித்து ஊற்றிய மழையில் இருக்காழிகள் சில குப்புறப்புரண்டு சாம்பல் நரையேறிய மயிர்க்கற்றைகளோடு வானம் பார்த்தபடி அண்ணாந்து கிடக்க , சில கொட்டைகள் பாத்தியினின்று சளிந்து அடிவாரங்களில் சிதறிக்கிடந்தன . பூரானுக்காகப் பிளக்கப்பட்டிருந்த கொட்டைகள் எல்லாம் ஒரு பக்கம் குவிக்கப்பட்டிருந்தன .  கார்த்திகை விளக்கீட்டுக்குப் பாத்தியடியில் குத்திவிடப்பட்டிருந்த பந்தத்தடி பாதி எரிந்த நிலையில் கறுப்பு வெள்ளைத் தொப்பியோடு இன்னமும் எஞ்சி நின்றது .  

பரியோவான் பொழுதுகள் - உரை

 பரியோவான் பொழுதுகள் வெளியீட்டில் இடம்பெற்ற என் உரையாடலில் காணொலி.

விளமீன் - சிறுகதை

அந்த ஒரு மீன் மாத்திரம் முழித்துக்கொண்டுத் தனித்துத் தெரிந்தது. அந்தக் குவியலில் கிடந்த மீதி அத்தனை மீன்களும் இளஞ்சிவப்பு நிறத்திலிருக்க இது மாத்திரம் வெள்ளைத்தோலில் மெலிதாகப் படர்ந்திருந்த தங்கநிறக் கண்ணாடிச் செதில்களோடும், சற்றே திறந்துகிடந்த இரத்தச்சிவப்பு செவுள்களோடும் குவிந்த கண்களோடும். சரசு மாமி ராசனிடம் திரும்பவும் சொல்லிப்பார்த்தார். இம்முறை சற்றுக் கெஞ்சலாக. “தம்பி. நான் சொல்லுறன். அது எங்கட ஊர் விளமீன்தான். விறைச்சுக்கொண்டு கிடக்கு. நல்ல உடன் மீன். வாங்கித்தாவன்.” “அரியண்டம் பண்ணாம வாங்கோம்மா. ஊர் விளமீனை ஊருக்குப்போகேக்க சாப்பிட்டுக்கொள்ளலாம்.” மாமி அந்த விளமீனையை பார்த்தபடி நின்றார். இனி எப்போது ஊருக்குப் போய், எப்போது விளமீன் வாங்கி. இதுவெல்லாம் நடக்கிற காரியமா? ராசன் வேகமாக அடுத்த கடையை நோக்கி நடக்க ஆரம்பித்திருந்தான். சந்தை முழுதும் ராசனும் ரூபிணாவும் நடந்த வேகத்துக்குச் சரசு மாமியால் ஈடு கொடுக்கமுடியவில்லை. சேலை நிலத்தில் அரிபட அவர் பின்னாலேயே இழுபட்டுக்கொண்டுபோனார். அந்த விளமீன் அவர் பின்னாலேயே இழுபட்டு வந்துகொண்டிருந்தது. “இந்த ஊர் சினப்பரும் விளமீன்மாதிரித்தான் இருக