தேங்காய்ச் சிரட்டை ஒன்று தும்புகள் எல்லாம் நீக்கப்பட்டு, அதன் கண்களும் அகற்றப்பட்டுத் தயாராக வைக்கப்பட்டிருந்தது. இப்ப இந்தச் சிரட்டைல மூன்று குழிகள் இருக்கல்லா? அதாலதான் முக்குழி எண்ட பெயர் வந்தது. இதால மூடி வச்சுச் சுடுறதால இத முக்குழி அப்பம் எண்டு கூப்பிடுவம். எங்கள் வீட்டில், வார இறுதிகளில் காலை நேரத்து உணவாகப் பல தடவைகள் முக்குழி அப்பத்தை அம்மா சுட்டுக் கொடுத்திருக்கிறார். புட்டு, இடியப்பம், தோசை, உரொட்டிபோல முக்குழி அப்பமும் எங்கள் குடும்பத்தில் அடிக்கடி சமைக்கப்படும் ஒரு உணவு. எங்கள் வீட்டைப்போலவே எல்லா வீடுகளிலுமே இதனைச் சமைப்பார்கள் என்றுதான் சிறு வயதில் நான் எண்ணியுமிருந்தேன். ஆனால் பின்னாட்களில் முக்குழி அப்பம் என்ற பெயரையே பலரும் கேள்விப்பட்டிருக்கவில்லை என்றறிந்தபோது ஆச்சரியமே மேலிட்டது. அம்மாவிடமே கேட்டேன்.