Skip to main content

உகண்டாவில் ஒன்பது நாட்கள் - பாகம் 2 - ஊர் எனும் யானை



விமானம் திடும்மென்று தரையிறங்கி பெரும் இரைச்சலோடு ஊர்ந்தபோது உள்ளிருந்தவர்கள் அனைவருமே கைதட்டி ஆரவாரம் செய்தார்கள். பலர் மளமளவென எழுந்து தம்முடைய கைப்பைகளைத் தூக்கிக்கொண்டு தயாரானார்கள். ஏன் அந்த அவசரம் என்று எனக்குப் புரிவதேயில்லை. விமானம் அதுபாட்டுக்கு ஊர்ந்து, நிலையத்தைச் சென்றடைந்து, கதவு திறக்கப்பட்டு, முதல் வகுப்பு இருக்கைப் பயணிகளையும் வெளியே அனுப்பிய பின்னர்தான் எங்களை வெளியேறவே அனுமதிப்பார்கள். அப்போதும்கூட முன்னிருக்கைகளில் உட்கார்ந்திருப்பவர்கள் எழுந்து, தம் கைப்பைகளைச் சாவகாசமாக எடுத்து நகரும்வரை நாம் காத்திருக்கவேண்டும். அதற்குள் அதறிப் பதறி எழுந்து முட்டிமோதி நிற்பதில் என்ன பயன்? நான் கல்லுப்பிள்ளையார் கணக்காய் உட்கார்ந்திருந்தேன். காதில் இளையராஜா தேஷாக இசைத்துக்கொண்டிருந்தார். இருபத்தெட்டு மணி நேர நெடிய பயணம். தூக்கம் வராது, தோளோடு நீ சேர்க்க ஏக்கம் வராது என்று சித்திரா இறைஞ்சிக்கொண்டிருக்க எனக்கோ தூக்கம் தூக்கிப்போட்டது.
அருகில் யன்னலோர இருக்கையில் அமர்ந்திருந்த மஹி என் தோளைத் தட்டினாள். பாட்டை நிறுத்தி, காதுக்குள் செருகியிருந்த இயர் பட்சுகளைக் கழட்டினேன். ஒரு பட்சினில் காது ஊத்தை ஒட்டியிருக்க, அவள் அறியாவண்ணம் அதனை ஒளித்தவாறு, என்ன என்று வாயைத் திறக்காமலேயே கேட்டேன். பல்லையும் இரண்டு நாட்களாய் விலக்கவில்லை.
அந்தப் பச்சை சூட்கேஸ் என்னுடையது. எடுத்துத்தரமுடியுமா?
அவள் கூரையை முட்டாவண்ணம் யன்னலோர இருக்கையில் எழுந்து வளைந்து நின்றாள். ஒரு யானை இழுத்து வளைத்த பனைமரம்போல. மஹியைப் பற்றிச் சொல்வதென்றால், மழை பொரு கண் இணை மடந்தை என்ற கம்பன் பாட்டைக் கேள்விப்பட்டிருக்கிறீர்களா? வேண்டாம். அடுத்த நான்கு வரிகளோடு காணாமல் போகப்போகிறவளின் கண்களையும் நீண்ட புருவத்தையும் பெரும்பிறை நெற்றியையும் நிஜ மயிர் எது, முடி மயிர் எது என்று தெரியாத சுருள் முடியையும் மேலும் விவரிக்கவேண்டியதில்லை என்று தோன்றுகிறது. அதிலும் மஹி உகண்டாகாரியுமில்லை. அவள் எத்தியோப்பியக்காரி. ஏதோ சர்வதேச நிறுவனத்தில் வேலை செய்கிறாளாம். பெயர்கூடச் சொன்னாள். விமான இரைச்சலில் கேட்கவில்லை. வேலை நிமித்தமாகத்தான் கம்பாலா வந்திருக்கிறாள். நான் நண்பனின் திருமணத்துக்கு வந்தேன் என்றபோது லவ்லி என்றாள். உன்னைப்பார்த்தால் வெளிநாடு போய் செட்டிலான உகண்டாகாரன்போல இருக்கிறது என்றாள். நாமெல்லோருமே உகண்டா தாயின் பிள்ளைகள்தானே என்று நான் சொன்னதற்கு அவள் ரியாக்ட் செய்யவில்லை. சொன்னாப்போல, எத்தியோப்பியப் பெண்களின் சொண்டு எப்போதுமே கட்டெறும்பு கடித்ததுபோல வீங்கிக்கிடக்கும். மஹி எத்தியோப்பியாவின் தலை நகரான அடிஸ் அபாவிலேயே பிறந்து வளர்ந்தவள். அடிஸ் அபாவில் எனக்கு வெறுமனே ஒரு மணி நேர டிரான்சிட்தான் இருந்தது. என் மூளையின் எத்தியோப்பியா செக்சனில் சிறு வயது சுகாதாரப் பாடத்தில் படித்த குவாசியக்கோர், மரஸ்மஸ் என்ற நோய்களின் பெயர்களும் கூடவே உப்பிய வயிற்றோடும் ஒல்லியான கால்களோடும் காணப்படும் சிறுவர்களின் புகைப்படங்களும்தான் ஆழப் பதிந்திருந்தன. ஆனால் அடிஸ் அபா விமான நிலையத்தைப் பார்த்தால் திகைத்துப்போவீர்கள். அது ஆபிரிக்காவின் ஒரு முக்கியமான மைய நிலையம். ஏகப்பட்ட விமான கேற்றுகள் உள்ள தளம். ஏக்கர் கணக்கில் பரந்த நிலையத்தில் பல நூற்றுக்கணக்கான விமானங்கள் தரித்து நின்றன. கேற்றுகள் போதாமல் பத்திருபது பேருந்துகளில் ஆட்களை கூட்டிச்சென்று ஏற்றியும் இறக்கிக்கொண்டும் இருந்தார்கள். விமான நிலையத்துக்கு வெளியே ஒரு பெரு நகருக்கான கட்டடங்களும் சுற்றாடல் மாசும் முள்ளுக்கம்பி வேலிகளும் அவற்றுக்கிடையே எழுந்த பிரமாண்டச் சக்கர இராட்டினமும் தெரிந்தன. எல்லாவற்றையும் விட மனிதர்கள். உடல்மொழிகளை நாம் அவர்களிடமிருந்துதான் கற்றுக்கொள்ளவேண்டும். அவர்கள் பேசும்போது உடலும் பேசும். சிரிக்கும்போது உடலும் சிரிக்கும். அணைக்கும்போது இரு உடல்களும் நெரியும்.
எண்டெபே விமான நிலையம் அது பாட்டுக்கு இயங்கிக்கொண்டிருந்தது. உகண்டர்கள் மாரதன் ஓடுமளவுக்கு ஏன் குறுந்தூர ஓட்டங்களின் ஜொலிப்பதில்லை என்பது விமான நிலையத்திலேயே தெரிந்துவிட்டது. துரிதம், வேகம், கதி என்ற சொற்களே உகண்டா அகராதியில் இருக்காது என்று நினைக்கிறேன். விமானத்தின் கதவு திறக்கவே அரை மணி ஆகியது. அப்புறம் அங்கிருந்து இறங்கி நடந்து விமான நிலையத்தை அடைந்தால் குடிவரவு அதிகாரிகள் அன்பொழுகப் பேசினார்கள். ஆனால் காரியம் மெதுவாகத்தான் நடந்தது. இந்த நாட்டில் பத்து மணிக்கு நிகழ்ச்சி என்றால் எட்டு மணிக்கு என்று சொன்னால்தான் ஆட்கள் பதினொரு மணிக்கேனும் வந்து சேருவார்கள் என்று ஜெகன் சொல்லியிருந்தான். உகண்டன் டைம் என்று அதனைச் சொல்வார்களாம். ஆனால் ஜெகன் அனுப்பிய வாடகை ஊர்திக்காரர் சரியான நேரத்துக்கே வந்திருந்தார். நானும் என்னுடைய பள்ளி நண்பனான மகிந்தாவும் ஒரே விமானத்தில்தான் பயணித்திருந்தோம். இருவரின் பெயரையும் தாங்கியபடி ஒரு போர்டு. டொமினிக் அதனைப் பிடித்திருந்தார். எம்மைத் தூரத்திலேயே அடையாளமும் கண்டுவிட்டார்.ஏன் இவ்வளவு தாமதம் என்று கேட்டார். ஜெகன் அவருக்கு உகண்டன் நேரத்துக்கமைய நம்முடைய வரவைச் சொல்லி வைத்தது பின்னர்தான் தெரிந்தது.
வாசலில் இராட்சத கொரில்லா ஒன்றும் ஆபிரிக்காவின் முத்துக்கு உங்களை வரவேற்கிறோம் என்று தானும் ஒரு போர்டைப் பிடித்து வைத்திருந்தது. இந்து சமுத்திரத்தின் முத்திலிருந்து ஆபிரிக்காவின் முத்துக்கு வந்திருக்கிறோம் என்று நாம் சொல்ல, கொரில்லா பேசாமல் உர்ரென்று நின்றது. நாங்கள் வாகனத்தில் ஏறினோம். கூடவே போகும் வழியில் தன்னையும் இறக்கிவிடுமாறு இன்னொரு உகண்டன் சாரதி இருக்கைக்குப் பக்கத்தில் ஏறிக்கொண்டார். பேச ஆரம்பித்தார். வள. வள. வள. வள. ஆங்கிலத்தை லுகண்டனிலும் லுகண்டனை ஆங்கிலத்திலும் பேசினார்போல. எதுவுமே விளங்கவில்லை.
நானும் மகிந்தாவும் யானை பார்க்க ஆரம்பித்தோம்.
முதலில் தம்புள்ளை மாதிரி நாடு இருந்தது. இரு மருங்கிலும் செம்பாட்டு மண். மலைகள். மலைகளில் பிரமாண்டமான வீடுகள். அன்னாசித் தோட்டங்கள். புல்வெளிகள். தம்புள்ளை என்றால் தென்னையை அதிகம் காணவில்லையே என்ற யோசனை வந்தது. அதனால் இது தம்புள்ளை இல்லை கண்டிபோல இருக்கிறது என்று நான் சொன்னேன். நான் சில தடவைகள்தான் கண்டிக்குச் சென்றிருக்கிறேன். பின்னர் வாழைத்தோட்டங்கள் வரிசையாக வரவும் இது இருபாலை என்றேன். அதிவேக நெடுஞ்சாலையும் அவ்வப்போது குறுக்கே நின்ற கட்டணச் சாவடிகளும் கட்டுநாயக்கா-கொழும்பு வீதியையும் ஞாபகப் படுத்தின. அப்புறம் ஒரு சந்தை வந்தது. புழுதி பறக்க, குட்டிக் குட்டி கடைகளும் சனக்கூட்டமும் நிறைந்த பெருஞ்சந்தை அது. செம்பாட்டுப் புழுதியை யோசிக்கையில் எனக்கு வட்டக்கச்சி நினைவுக்கு வந்தது. ஒரு திசையில் பார்த்தால் திருநெல்வேலிச் சந்தை. கொஞ்சம் யோசித்துப் பார்க்கையில் டெல்லியின் கரோல் பார்க்கில் அலைந்த நாட்களும் மனதில் தோன்றின. மோட்டார் சைக்கிள்கள் பெங்களுருக்கு என்னைக் கொண்டுபோயின. சூழலின் மாசு வெயில் காலத்து காத்மண்டு நகரை நினைவூட்டியது.
காளைக் கக்கா. கொஞ்சம் நிறுத்துகிறாயா?
புத்தூர் சடங்கவியரின் மகளைக் கலியாணம் கட்டி செட்டிலாகலாம் என்று நினைத்த சுந்தரரைத் தடுத்தாட்கொண்ட அதே கிழவர்தான் எண்டெபே-கம்பாலா நெடுஞ்சாலையிலும் வந்து குறுக்கே நின்றார். நான்காம் நூற்றாண்டுக்காரர் புல்ஷிட் என்று ஆங்கிலத்தில் திட்டமாட்டார் என்பதால் அது காளைக் கக்கா ஆனது என்க.
புதுசா ஒரு ஊருக்கு வருகிறாய். ஆனா அந்த ஊரை உனக்குத் தெரிந்த ஊர்களோடு ஒப்பிட்டு அதுமாதிரி, இதுமாதிரி என்று சொல்லுவது அபத்தமா இல்லையா? ஒரு ஊர் எப்படி இன்னொரு ஊர்போல இருக்கமுடியும்? இந்த ஊரின் வரலாறு தனித்துவமானது அல்லவா? இந்த மனிதர்களின் வாழ்வு, குணம், சூழல், அரசியல், உணவு எல்லாமே வேறு அல்லவா? ஒப்பீடுகளைச் செய்வதன்மூலம் அவற்றை அப்படியே உள்வாங்கக்கூடிய சந்தர்ப்பத்தை நீ இழக்கிறாய். எத்தியோப்பியாக்காரியை வர்ணிக்க நீ எதற்குக் கம்பனை கூட்டிவரவேண்டும்? அவளை அவளாகவே பாரேன். கனகாம்பரப் பூவைத் தெரியாதவர்களிடம் சென்று அதற்கு மல்லிகையைப்போல இதழும் மஞ்சவண்ணாவைப்போல நிறமும் செவ்வரத்தையைப்போல வாசமும் என்று விளக்கினால் அது கனகாம்பரத்துக்கு செய்யக்கூடிய அநியாயம் அல்லவா? கொக்கட்டூ பறவைக்கு ஒப்பீடு இருக்கமுடியுமா? உகண்டாவை நீ உகண்டாவாகவே பார்ப்பதும் காட்டுவதும்தான் நியாயம் அல்லவா? புதிய ஊருக்கான பயணம் என்பது ஒரு குழந்தை உலகத்தை முதல்முதலில தரிசிப்பதுபோல. அது முன்முடிவுகள் ஏதுமில்லாது இருக்கோணும்.
கிழவர் சொல்லச் சொல்ல, எனக்கு என்னை நினைக்கவே எரிச்சலாக இருந்தது. உண்மைதானே. இந்த அரை மணி நேரத்தில் எனக்குத் தெரிந்த ஊர்களை எல்லாம் நினைவுபடுத்தியதில் முன்னே தெரிந்த ஊரைப் பார்க்க மறந்துவிட்டேனே. நானெல்லாம் ஒரு பயணி என்று கிளம்பிவந்துவிட்டேனே. ச்சைக். என் கண்களைத் திறந்த அந்தக் கிழவருக்கு நன்றி சொல்லலாம் என்று நிமிர்ந்தேன். ஆனால் சிங்கன் அதற்குள் வேறு எவரையோ தடுத்தாட்கொள்ளச் சென்றுவிட்டார். நான் இரண்டு பத்திகள் ரிவேர்ஸ் எடுத்துச் சென்று மறுபடியும் ஆரம்பித்தேன்.
நானும் மகிந்தாவும் உகண்டாவைப் பராக்குப் பார்க்க ஆரம்பித்தோம்.
வெளியே வெயில் காய்த்தாலும் வெக்கையில்லை. உகண்டா ஒரு கடல் அண்டாத நாடு. அதனால் வளியில் ஈரப்பதனும் குறைவாக இருந்தது. உயரமான நிலம். பூமத்திய இரேகைக்கேயுரிய காலநிலை. வெயில் சுட்டாலும் காற்று மிதமாகக் குளிர்ந்தது. நிறையக் காடுகளும் நீர் நிலைகளும் இருப்பதாலோ என்னவோ, ஊரெல்லாம் செம்மண்ணும் பச்சை மரங்களும் நிறைந்திருந்தன. கொட்டில் வீடுகளும் மாடி மாளிகைகளும் அவற்றுக்குள்ளிருந்து முளைத்துக்கொண்டிருந்தன. புழுதி படிந்த பறணைக் கார்களோடு, கூடவே நவீன மேர்சிடிஸ் பென்சுகளும் வீதியில் பறந்து திரிந்தன. அறுபத்திரண்டாம் ஆண்டுவரை பிரித்தானியக் காலனித்துவத்துக்குள்ளிருந்த நாடு பின்னர் முடியாட்சி, இராணுவம் இப்போது சனநாயகச் சர்வாதிகாரம் என்று பலர் கைகளுக்கு மாறி கடித்துத் துப்பப்பட்டுக்கொண்டிருப்பதை இறங்கி இருபது நிமிடங்களுக்குள்ளேயே அறிந்துகொள்ளக்கூடியதாக இருந்தது. பூமத்திய ரேகையிலிருக்கும் வளமான நாடுகளை எல்லாம் எப்படி காலனித்துவம் தின்று தீர்த்திருக்கிறது என்பதும் அதிலிருந்து மீள முடியாது எப்படி அதன் சமூகங்கள் இன்னமுமே திணறிக்கொண்டிருக்கின்றன என்பதற்கும் உகண்டா இன்னுமொரு உதாரணம். அரசியல்வாதிகளின் முகங்கள் கட்டாக்காலி நாய்களைப்போல தெருவெல்லாம் கிழிபட்டுக் கிடந்தன. உள்ளூராட்சி உறுப்பினரிலிருந்து பாராளுமன்ற உறுப்பினர்வரை தம்முடைய படங்களை பல்வேறு சைஸூகளில் பதிப்பித்து ஊரெல்லாம் ஒட்டியிருந்தார்கள். மின்கம்பங்களில் பலர் பல்லிளித்தார்கள். ஏதாவது தேர்தல் நெருங்குகிறதா என்று கேட்டால், இல்லை அது அடுத்த வருட இறுதியில் என்று டொமினிக் சொன்னார். எதற்காக இப்போதே பிரசாரத்தை ஆரம்பித்துவிட்டார்கள் என்று கேட்டேன்.
பிரசாரம் எப்போதுமே இங்கே நடந்துகொண்டிருக்கும். நாலு நாள் படத்தை மாட்டாவிட்டால் ஐந்தாம் நாள் மக்கள் அரசியல்வாதிகளை மறந்துவிடுவார்கள் அல்லவா?
நாட்டில் நாற்பது ஆண்டுகளாக ஒரே கட்சிதான் ஆட்சியில் இருக்கிறது. எண்பதுகளில் கொரில்லா யுத்தம் செய்து ஆட்சிக்கு வந்த யோவேரி முசேவ்னிதான் இன்றைக்கும் சனாதிபதியாக இருக்கிறார். அரச வன்முறை, அதிகாரத் துஷ்பிரயோகம், வாக்கு மோசடி என்று பலவும் செய்து ஆட்சியைத் தொடர்ந்து தக்க வைத்திருக்கும் கட்சிக்கு இத்தனை பிரசாரம் எதற்கு என்று தோன்றியது. எல்லா போஸ்டர்களிலும் முசோலினியின், மன்னிக்கவும் முசேவ்னியின் படம் இருக்கிறது. ஒரு வெள்ளை நிற கவ்போய் தொப்பி, வெள்ளை நிறத்திலேயே கோர்ட்டு சூட்டு என்று தலைவர் இளித்துக்கொண்டு எங்கெனும் நிறைந்து நிற்பார். அருகேயே இன்னொரு கோர்ட்டு சூட்டு போட்ட ஆண் அல்லது கலர் கலராகச் சட்டை அணிந்த பெண் நிற்பார். அங்கு பெண்களுக்கு இட ஒதுக்கீடும் இருக்கிறது. கலியாணம், கருமாதி, பிறந்த நாள் என எல்லா நிகழ்வுகளிலும் அரசியல்வாதிகளின் வருகையும் பிரசாரங்களும் நிகழும் என்கிறார்கள்.
உகண்டாவின் சனத்தொகை ஐம்பது மில்லியன் என்றால் அதற்கிணையாகவோ அல்லது அதிகமாகவோ அங்கே மோட்டர் சைக்கிள்கள் இருக்கும் என்று நினைக்கிறேன். எங்கு பார்த்தாலும் மோட்டார் சைக்கிள்களே ஓடித்திரிந்தன. பெரும்பாலும் ஆண்கள்தான் அவற்றை ஓட்டினார்கள். முட்டுச்சந்திகளிலும் வீதி ஓரங்களிலும் மோட்டர் சைக்கிள்களில் ஆண்கள் கூட்டம் கூட்டமாக நின்றார்கள். பெரும்பாலானவை வாடகை ஊர்திகள். போடபோடாஸ் என்று அவற்றை அழைப்பார்கள். வீதியோரமாக நாம் சும்மா நடந்து போனாலே போதும். ஐந்து போடபோடாசுகள் நம்மை மறித்து சவாரி போகலாமா என்று கேட்பார்கள். ஊபரிலும் போடபோடாசுகள் இருக்கின்றன. ஹெல்மெட் எல்லாம் அணியத்தேவையில்லை. வீதி ஒழுங்கும் வாகன நெரிசலும் சிக்கான தலைமயிர்க்கற்றைபோல எந்நேரமும் இருக்குமென்பதால் வேக விபத்துகள் அந்த நாட்டில் சாத்தியமில்லை. பயமின்றி பின்னாலே ஏறி உட்காரலாம். மனமிருந்தால் இடமுண்டு என்பது இந்த போடாபோடாசு ஓட்டுநர்களுக்குத்தான் சாலப்பொருத்தம். எத்தனை பேரையும் மனம் கோணாமல் ஏற்றுவார்கள். ஒரு போடாபோடாசில் ஐந்து பேர் ஏறி உட்கார்ந்து சென்றதையும் பார்த்தேன். சில போடாபோடாசுகளுக்கு மேலே நீண்ட கூரையும் வெயிலுக்கு அமைக்கப்பட்டிருந்தது. சொல்லப்போனால் அவை இரண்டு சில்லில் ஓடும் நம்மூர் ஓட்டோக்கள்தாம். ஒப்பிடக்கூடாது என்று கிழடு சொன்னதால் அதை நான் சொல்லத்துணியவில்லை.
அதிவேக நெடுஞ்சாலையிலிருந்து விலகி கம்பாலா நகருக்குள் இறங்கும்போது பச்சை மறைந்து செம்மண் புழுதி வாரிக்கொட்ட ஆரம்பித்தது. சந்தை ஒன்றில் கூட்டம் அள்ளியது. அன்னாசி, மாம்பழம், வாழை, பலா, சேவல், நாட்டுக்கோழி, புரோயிலர், மானோ, ஆடோ, மரையோ, மாநிரையோ என்று அறியமுடியா பலவகை தொங்கு இறைச்சிகள் என்று கடைகள் வரிசையாகக் கடந்துபோக அங்கேயே இறங்கி இரண்டு பலாப்பழத்தையும் ஒரு சேவலையும் வாங்கி வாகனத்துள் போட்டால் என்ன என்ற ஆசையைக் கட்டுப்படுத்தவேண்டியிருந்தது. காலனித்துவக் கட்டடங்கள், கத்தோலிக்க சர்ச்சுகள், பள்ளிவாசல்கள், அப்பார்ட்மெண்ட் வீடுகள் என்று நகர்ப்புறங்களுக்கேயான அடையாளங்களைத் தாண்டிச் சென்று நேரே ஒரு இந்திய உணவகத்தில் டொமினிக் எங்களை கொண்டுசென்று இறக்கிவிட்டார்.
வாசலிலேயே நம்முடைய மாப்பிள்ளை ஜெகன். வாங்கடா மச்சானுகளா என்று உள்ளே அழைத்துச்சென்றான். அங்கே அவனின் திருமணத்துக்கென்று உலகத்தின் மூலை முடுக்குகளிலிருந்து வந்து சேர்ந்த பெருங்கூட்டம் உட்கார்ந்திருந்தது. பலர் என்னுடைய நண்பர்கள். ஜெகனின் குடும்பத்தினர் பலர் எனக்கு ஏலவே அறிமுகமானவர்கள். ஒரு சிலர் என்னையும் அடையாளம் கண்டுகொண்டார்கள். நீங்கள்தானே கொல்லைப்புறத்துக் காதலிகள் எழுதியவர் என்றார் ஒருத்தர். நான் உடனே நீங்கள்தானே உங்கள் வகுப்பிலேயே ஆண்டு ஐந்து ஸ்கொலர்சிப் பாஸ் பண்ணியவர் என்று பதில் கேள்வி கேட்டேன். என் ஜோக்கு எனக்கே விளங்கவில்லை. அவருக்கு எப்படி விளங்கியிருக்கும்?அதற்குள் ஜெகன் வந்து என்னைக் காப்பாற்றிவிட்டான்.
மச்சி இது எதையும் எழுதீடாதை சரியா? எல்லாமே பஃபேதான். உகண்டால மரக்கறி பிரஷ்ஷா கிடைக்கும். வெஜிடபிள் பிரைட் ரைஸ். பஜ்ஜி. பன்னீர் கறி. பருப்பு. நான்... நீ சாப்பிடு மச்சி.
இது உகண்டா சாப்பாடா? இல்லை, உச்சிப்பிள்ளையார் அன்னதானமா? சிக்கின். மட்டன். பன்றி. ஒட்டகச்சிவிங்கி. சிங்கம். சீப்றா எல்லாம் காட்டுவன் எண்டியே மச்சி?
இண்டைக்கு ஆடி அமாவாசையாம். அம்மாவேறை வந்திருக்கிறா. இப்பதான் ஒரு மாதிரி உகண்டாகாரியை ஓகே பண்ண வச்சிருக்கிறன். வந்ததும் வராதுதுமா உண்ட வேலையைக் காட்டி குட்டையைக் குழப்பீடாதை மச்சான். பிளீஸ்.

அடப் பனங்கொட்டைகளா. 

*****

தொடரும்

Comments

Popular posts from this blog

அயலும் உறவும்

ஊரிலே ஒரு வீடு திருமண நிகழ்வு ஒன்றுக்குத் தயாராகிறது. அந்த வீட்டின் இளைய பெண்ணுக்குத் திருமணம். வீடே திருவிழாக்கோலம் பூணுகிறது. ஒரு திருமண வீட்டின் அமளிகளை நாம் எல்லோருமே அனுபவித்திருப்போம் அல்லவா? அதுவும் நிகழ்வுக்கு முந்தைய சில தினங்கள் அங்கு நடக்கும் ஆயத்தங்கள்தான் உண்மையிலே ஒரு திருமணத்தின் முத்தாய்ப்பான கணங்கள் என்பது என் எண்ணம். சுவர்களுக்குப் பூச்சு அடிப்பது. வீட்டைக் கழுவித்  தரைக்குப்  பிழிந்த தேங்காய்ப்பூ போட்டுப் பாலிஷ் பண்ணுவது. கிணறு இறைப்பது. சுவர்களில் சோடனைகளைத் தொங்கவிடுவது. வெளியே சொக்கட்டான் பந்தல் போடுவது. சவுண்டு சிஸ்டம் ஒன்றை வாடகைக்கு எடுத்து காலையிலிருந்தே கோயில் திருவிழாக்கள்போல பாடல்களை ஒலிக்கவிடுவது. தூக்குக் கணக்கில் விறகுகளையும் பொச்சு மட்டைகளையும் வாங்கி இறக்குவது. பலகாரச்சூட்டுக்கென உறவெல்லாம் கூடுவது. பாத்திரங்களாலும் அடுப்புப்புகையாலும் ஊர் வம்புகளாலும் நிரம்பும் கொல்லைப்புறம். சிறுவர்களின் விளையாட்டுகளால் எழும் புழுதி. முற்றத்தில் சும்மா உட்கார்ந்து பத்திரிகை படித்தும், வெற்றிலை பாக்கு போட்டுக்கொண்டும் அரசியல் பேசும் பெரிசுகள். திருமணத்துக்குத...

மனோ யோகலிங்கம்

சென்ற வாரம் இங்கே மெல்பேர்னில் மனோ யோகலிங்கம் என்ற 23 வயது இளைஞர் தீக்குளித்து உயிரிழந்தார். 2013ம் ஆண்டு தன்னுடைய பன்னிரண்டாவது வயதிலே மனோ தன் குடும்பத்தாரோடு படகிலே வந்து அவுஸ்திரேலியாவில் அகதியாகத் தஞ்சம் புகுகிறார். அவுஸ்திரேலிய அரசாங்கம் ஓராண்டுக்கும் மேலாக மனோவையும் அவருடைய குடும்பத்தையும் தடுப்பு முகாமில் அடைத்துவைத்து, பின்னர் தற்காலிக விசாவிலே அவர்களை மெல்பேர்னிலே வசிப்பதற்கு அனுமதி கொடுக்கிறது. பதின்மூன்று வயது பதின்மத்துச் சிறுவன் இப்போது உள்ளூர் பாடசாலையில் இணைந்துகொள்கிறான். படிக்கிறான். நண்பர்களைத் தேடிக்கொள்கிறான். இந்த நிலத்திலேயே வளர்ந்து பெரியவனாகிறான். ஆயினும் மனோவினதும் அவரது குடும்பத்தினதும் தஞ்சக்கோரிக்கை வழக்குகள் தொடர்ச்சியாக நிராகரிக்கப்பட்டுக்கொண்டிருக்கின்றன. அந்தக்குடும்பத்துக்கான பொது மருத்துவமும் உயர் கல்வி மானியமும் மறுக்கப்படுகிறது. ஒரு தசாப்தம் கடந்து அரசாங்கங்கள் மாறினாலும் காட்சி மாறவில்லை. தவிர நிலைமை இன்னமும் மோசமாகிக்கொண்டே இருந்தது. ஈற்றில் மறுபடியும் இலங்கைக்குத் திருப்பி அனுப்பப்படுவோம் என்ற அச்சத்தில் மனோ யோகலிங்கத்தின் இந்தத் தீக்குளிப்புச் சம...

என் கொல்லைப்புறத்துக் காதலிகள் : 6. கக்கூஸ்

                                          நடுச்சாமத்தில கக்கூசுக்கு அவசரமாக வந்துவிட்டால் அது ஒரு மிகப்பெரிய அரசியற் பிரச்சனை. தனியாகப் போகமுடியாது. கூட்டணி வைக்கவேண்டும். செத்துப்போன தாத்தா பின்பத்திக்குள்ளே சுருட்டுப் பிடித்துக்கொண்டு நிப்பார். கிணற்றடியில் பாம்பு பூரான் கிடக்கலாம். ஒரே வழி, பக்கத்தில் நித்திரை கொள்ளும் அம்மாவைத் தட்டி எழுப்புவதுதான். முதல் தட்டிலேயே எழுந்துவிடுவார். “பத்து வயசாயிட்டுது இன்னும் என்னடா பயம்?”