Skip to main content

உகண்டாவின் ஒன்பது நாட்கள் - பாகம் 3 - சிம்பன்சி முதல் செயற்கை நுண்ணறிவுவரை


மழை துமிக்க ஆரம்பித்தது.

கம்பாலாவுக்கு வடமேற்கே இருநூற்றைம்பது கிலோமீற்றர் தூரத்தில் அமைந்திருக்கும் புடொங்கா என்கின்ற அடர்த்தியான மழைக்காடு அது. வரும் வழியில் ஒரு மலைப்பகுதியில் வண்டியை நிறுத்திப் பார்த்தபோது கண்ணுக்கெட்டிய தூரமெல்லாம் காடுதான் தெரிந்தது. விமானத்தின் யன்னலூடே பார்க்கையில் வானமெங்கும் விரித்துக்கிடக்கும் முகிலைப்போலக் காடு நிலமெங்கும் பச்சையாய்ப் படர்ந்திருந்தது. எங்கள் குழுவில் பதினைந்து பேரளவில் இருந்தார்கள். பச்சை, சாம்பல் நிறங்களில் நீர்புகா உடைகளும் மலையேறும் சப்பாத்துகளும் தொப்பியும் அணிந்திருந்தோம். வனக்காவலர்கள் எங்களுக்கான பயண அறிவுறுத்தல்களைச் சொல்லிக்கொண்டிருந்தார்கள்.
அவை மிக அருகில் வந்தால் மாத்திரம் முகக்கவசத்தை அணியலாம். மற்றபடி தேவையில்லை. எக்காரணம் கொண்டும் அவற்றைத் தொடவேண்டாம். அவை எழுப்பும் ஒலிகளுக்குப் பதில் ஒலி எழுப்பவேண்டாம். அது அவற்றினுடைய மொழி. தெரியாத மொழிக்குப் பதில் மொழி சொல்லி நாங்கள் சிக்கலில் மாட்டிவிடக்கூடாது அல்லவா? அவை தம்பாட்டுக்குத் தம் வேலையைப் பார்க்கட்டும். நாம் அவற்றை அமைதியாக அவதானிப்போம். போகலாமா?
காட்டுக்குள் எல்லோரும் வரிசையாக நடக்க ஆரம்பித்தோம். வரிசையின் முன்னே ஒரு பெண் வனக்காவலரும் இறுதியில் ஒரு ஆண் காவலரும் கூட வந்தார்கள். அவ்வப்போது அவர்களது வோக்கி டோக்கி இரைந்துகொண்டிருந்தது. நம் காலடிச்சத்தங்களையும் சருகுகளின் சரசரப்பையும் கேட்டுணர்ந்த வௌவால்கள் காடெங்கும் விசிலடித்து நம்மைக் காட்டிக்கொடுத்தன. நிலம் முழுதும் சருகுகள் குவிந்திருந்தன. ஆங்காங்கே குட்டிக் குட்டியாகக் கோபுரம்போல மண் கொட்டில் போட்டு கறையான்கள் வாழ்வை அமைத்திருந்தன. எங்கெனும் எறும்புக் கூட்டங்கள். மிதித்த சப்பாத்தைச் சில கணங்கள் எடுக்க மறந்தால் கழுத்துவரை எறும்புகள் ஏறிக் கடிக்க ஆரம்பித்துவிடும். நடக்கும்போது கவனம் சிதறினால் சிறு செடிகளிலும் மர வேர்களிலும் தடக்கியும் விழுவோம். குறுக்கும் மறுக்குமாக வளர்ந்து நின்ற கொடிகள் தலையையும் இடிக்கும். இடையிடையே சரிந்து கிடந்த பட்ட மரங்களைச் சுற்றி பாசியும் நுண்ணிய செடிகளும் படர்ந்திருந்தன. கூர்ந்து பார்த்தால் அந்தப் பாசிக்குள்ளும் ஒரு காடு விரிந்திருந்தது. ஒரு காடு தன்னகத்தே பல்லாயிரம் தனிக்காடுகளைச் சுமந்து நிற்கிறது. காட்டில் நிற்கும் ஒவ்வொரு மரமும் தனித்தனிக் காடுகள்தான். ஒவ்வொரு மரத்துக்கென்று தனி இராச்சியங்களே அங்கே இயங்குகின்றன.
நடையை நிறுத்திக் கொஞ்சம் அண்ணாந்து பார்த்தேன்.
நீண்டு நெடித்து வளர்ந்த ஆபிரிக்க மலைவேம்புகள் பல வானத்தைப் பங்குபோட்டு, தனித்தனியாகக் கூரை வேய்ந்திருந்தன. அந்தக் கூரைகளுக்கிடையே வானம் ஒரு சிதறுண்ட கண்ணாடிபோலத் தோற்றமளித்தது. மழை இலைகளில் விழுந்து கிளைகளில் வழிந்து கசிந்துகொண்டிருந்ததில் நாம் அதிகம் நனையவில்லை. ஆபிரிக்க மலைவேம்புகள் நூற்றாண்டுகளுக்கும் மேலாக வாழக்கூடியவையாம். அதிலும் இந்த புடொங்கா காட்டிலிருக்கும் சில மரங்களின் வயது ஐந்நூறு ஆண்டுகளுக்கும் மேலாக இருக்கலாம் என்கிறார்கள். அதாவது வாஸ்கொடகாமா இந்தியாவில் காலடி வைத்த காலம். ஹம்பியில் விஜய நகரப் பேரரசு கொடிகட்டிப் பறந்த சமயம். அதன் கோயில் மண்டபங்களில் புரந்தரதாசர் கிருஷ்ணா நீ பேகனே என்று கண்ணனை இறைஞ்சிக்கொண்டிருந்திருப்பார். அப்போது துளிர்த்த செடி இக்கணம் என் முன்னே வானம் முட்டி குடை விரித்து நிமிர்ந்து நிற்கிறது. லாஹிரியின் Roman Stories தொகுப்பின் அட்டையில் canopy என்கின்ற இப்படியான மரங்களின் கூரைதான் படம் பிடிக்கப்பட்டிருக்கும். காடு எல்லோருக்குமானது. ஆனால் எல்லோருக்கும் அங்கே சமத்துவம் இருக்கிறதா என்றால் சந்தேகம்தான். காட்டிலிருக்கும் சில உயர்ந்த மரங்களுக்கே வானம் சாத்தியமாகிறது. வானை நோக்கி அம்மரங்கள் போட்டிப்போட்டு வளர்ந்து, விதானம் அமைத்து வானத்தைத் தாமே விழுங்க முயல்கின்றன. மரங்களுக்கிடையேயான ஒருவித அதிகாரப் போட்டி இது. மண்ணை ஆள ஒரு மரம் வானத்தை எட்டி வளரவேண்டியிருக்கிறது. மலை வேம்புகளும் நாக மரங்களும் தின்றபின் மீதமாகும் வானத்தின் சிறு வெளிச்சமும் மழையும் கீழே வாழும் செடிகளுக்கும் கொடிகளுக்கும் பிற உயிரிகளுக்கும் சென்று சேர்கிறது. அந்த உயிரிகளும் அதற்கமைய தம் வாழ்வை அமைத்துக்கொள்கின்றன. அவை கேள்விகளை எழுப்புவதில்லை. சிலது இதுதான் நமக்குப் பாதுகாப்பு என்று எண்ணவும் கூடும். நமது விதி என்று வாளாவிருக்கும். சில செடிகள் எப்போதோ ஒரு நாள் தாமும் அந்த வானை எட்டிக் கூரை வரையலாம் என்று எண்ணி வளரும். ஒவ்வொரு மரமும் அடியைத் தேடி வேராகவும் நுனியைத்தேடி கிளையாகவும் வளர்ந்துகொண்டேயிருக்கிறது. இராச்சியங்கள் அவ்வளவு சீக்கிரத்தில் எழுந்துவிடுமா என்ன? ஒரு செடி வளர்ந்து வானை எட்டிக் கூரை அமைக்க இருநூறு வருடங்கள்வரை ஆகலாம்.
கந்தசாமியும் கலக்சியும் நாவலின் முன்னுரையில் எழுதிய வாசகம் இது.
நம் சிந்தனைக்கு வெளியேயான ஒரு பிரபஞ்ச அமைப்பில் கதையை உருவாக்கி அதனூடாக நம் வாழ்க்கையைப் பார்க்கும் ஒருவித cognitive estrangement முயற்சிதான் இந்நாவல்.
பயணங்களும் அப்படியே. அவை நமக்குப் புதிய உலகினை அறிமுகம் செய்துகொண்டேயிருக்கின்றன. அவற்றுக்கூடாக நம்மை அறிதலும் வாழ்வை அணுகுதலும் சிறிதளவிலேனும் இலகுவாகிறது. உகண்டாவில் வெறுமனே ஒன்பது நாட்களை மாத்திரம் கழித்திருந்தாலும் அந்த நிலமும் நீரும் மாந்தரும் தினம் தினம் புதிய புரிதல்களை எமக்குள் ஏற்படுத்திக்கொண்டேயிருந்தார்கள்.
வனக்காவலர் உஷ்ஷ் என்று எம்மை அமைதியாக்கினார்.
மரக்கொப்புகளில் சலசலப்பு அதிகமாக ஆரம்பித்தது. எல்லோரும் மரங்களின் உச்சிகளை ஆராய ஆரம்பித்தனர். திடீரெனக் காடே பல்வேறு ஒலிகளால் அலறவும் உறுமவும் கீச்சிடவும் தொடங்கியது. வனக்காவலர்கள் கை காட்ட, உயரே மரக்கொப்பில் சிம்பன்சி ஒன்று உட்கார்ந்திருந்து நம்மையே அமைதியாகப் பார்த்துக்கொண்டிருக்கிறது. அலிஸின் அற்புத உலகில் அவளை எப்படி அந்த மரத்தில் நின்ற செஷாயர் பூனை பாதி தோன்றியும் பாதி தோன்றாமலும் இளித்து மயக்கியதோ, அதுபோல.
சிம்பன்சி எம்மையே பார்த்துக்கொண்டேயிருந்தது.
இடையிடையே அது வாகை மரத்து குருத்துகளை ஒடித்து சில இலைகளை உண்டு மீதியைக் கீழே போட்டது. அதற்கு எத்தனை வயது இருக்கலாம் என்று அருகில் நின்ற வனக்காவலரிடம் கேட்டேன். எப்படியும் நாற்பதைத் தாண்டியிருக்கும் என்றார். சிம்பன்சிகள் ஒருவித நாடோடிச் சமூகக் குழுக்களாக வாழ்பவை. ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு மரக்கூட்டத்துக்கு அவை இடம் பெயருகின்றன. அன்றைய காலநிலை, ஏனைய கூட்டங்களின் அச்சுறுத்தல், அன்றைக்கு அவற்றினுடைய உணவு இலையா பழமா பூச்சியா என்பவற்றைப் பொறுத்து அவை தம் இடங்களை மாற்றிக்கொள்ளும். சிம்பன்சிகள் எப்போதுமே எண்ணிக்கையில் ஐம்பது அறுபதைக்கொண்ட சமூகமாக வாழ்பவை. கோபம், அன்பு, பொறாமை, சோகம் போன்ற உணர்ச்சிகள் எல்லாம் அவற்றுக்கு உண்டு. Self என்கின்ற தன்னை அறியக்கூடிய விலங்கு அது. முப்பது வயதளவில் அங்கு ஒரு ஆண் சிம்பன்சி ஆல்பா மேல் ஆக மாறுகிறது. ஆனால் அது வெறும் பலத்தால் மாத்திரம் நிகழ்வதில்லை. ஒரு புத்திசாலியான சிம்பன்சி முதலில் தன்னைச்சார்ந்து ஒரு கூட்டத்தை அமைக்கிறது. தன்னைத் தலைவனாக ஏற்றுக்கொள்ளக்கூடிய தனி சிம்பன்சிகளோடும் குழுக்களோடும் கூட்டணி அமைத்துத் தன்னைப் பலப்படுத்துகிறது. அந்தக் கூட்டணிக்குள் அது எப்போதும் பலமாக இருந்துகொள்வதை உறுதிசெய்யும். எதிர்ப்போரை அடித்துத் துரத்தும். தனது கூட்டணி அந்தச் சமூகத்திலேயே பலமானதாக இருப்பதை உறுதிசெய்யும். சிம்பன்சிகள் அறிவாளிகளும்கூட. அவற்றால் ஒரு குச்சியை எறும்புக்கூட்டுக்குள் நுழைத்து, எறும்புகளைப் பிடித்துச் சாப்பிட முடியும். காய்களைக் கற்களால் உடைத்துப் பிரித்து உண்ணமுடியும். கூட்டமாகச் சேர்ந்து ஏனைய குரங்குகளை வேட்டையாடவும் செய்யும். எங்கள் ஊர் வீடுகளின் வாசற்படிக்கட்டுகளில் வரிசையாக பாட்டியும் அம்மாவும் அக்காமாரும் கீழ்ப்படியில் சிறுவர்களும் உட்கார்ந்து வரிசையாகப் பேன் பார்ப்பதுபோல சிம்பன்சிகளும் பரஸ்பரம் நன்றாகப் பேன் பார்க்கும். நம் ஊரில் பேசும் விடுப்புகளைப்போலவே சிம்பன்சிகளும் ஏதேதோ பேசுகின்றன. அயலும் அன்பும் உறவும் அதற்கூடாகத்தான் அவற்றிடையே வளர்கிறது. இங்கே பெண்களைவிட ஆண் சிம்பன்சிகள்தாம் அதிகமாகப் பேன் பார்த்து உன்னி பொறுக்குகின்றன. நம்மினத்து ஆண்களுக்கு அதிகம் மயிர் இல்லாததால் நாங்கள் வெறுமனே முதுகுகளை மாத்திரம் சொறிந்துவிடுகிறோம் என்று நினைக்கிறேன். காடு ஒரு சாம்ராஜ்ஜியம் என்றால், அங்கு நிற்கும் ஒவ்வொரு மரமும் தனித்தனி சாம்ராஜ்ஜியம் என்றால், அவற்றை அண்டி வாழும் சிம்பன்சிகள் கூட்டமும் ஒருவிதத் தனிச் சாம்ராஜ்ஜியம்தான். அடிமரத்தருகே சிறு கூம்பாக எழுந்து நிற்கும் ஈர மண்ணில் உருவான கறையான் புற்றுக்குள்கூட பெரும் சாம்ராஜ்ஜியம் அமைந்திருக்கிறது.
நம் குணங்குறிகள் பல சிம்பன்சிகளுக்கும் இருப்பது வெறும் தற்செயல் அல்ல. சிம்பன்சிகளின் மரபணுக்கள் நம்முடைய மரபணுக்களோடு 99 சதவீதம் ஒத்துப்போகின்றனவாம். குரங்கிலிருந்து மனிதர் தோன்றினர் என்ற ஒரு அனுமானம் நம் இலக்கியங்களிலும் பொதுப்புத்தியிலும் இருக்கிறதல்லவா? அது தவறு. எங்கள் இருவருக்கும் ஒரே மூதாதையர் என்பதுதான் சரியான விளக்கமே ஒழிய குரங்கிலிருந்து மனிதர் உருவாகவில்லை. பூனையிலிருந்து புலியோ புலியிலிருந்து பூனையோ உருவாகவில்லை. பூனையும் புலியும் ஒரே மூதாதையரைக்கொண்ட குடும்பம். அவ்வளவுதான். அதுபோல ஏறத்தாழ ஆறு மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் இருந்த ஒரு விலங்கிலிருந்து கூர்ப்படைந்த இரு வேறு விலங்குகள்தாம் இன்றைய சிம்பன்சிகளும் மனிதர்களும்.
ஆனாலும் 99 சதவீதம் பொருந்திப்போகக்கூடிய இரண்டு விலங்குகளின் உடலும் உருவமும் வாழ்க்கை முறையும் ஏன் இத்தனை வித்தியாசமாக இருக்கிறது என்ற கேள்வி இங்கே எழுகிறதல்லவா? சிம்பன்சிகள் காட்டிலேயே இலையும் பழகும் பூச்சியும் சாப்பிட்டு அங்கேயே தூங்கி எழுந்துகொண்டிருக்கையில் இங்கே மனிதர்கள் சந்திரன் வரை சென்று திரும்புவது எப்படிச் சாத்தியமானது?
முக்கிய விசயம் ஒன்று. கூர்ப்பு என்பது அறிவு வளர்ச்சியை நோக்கி நகர்வதல்ல. கூர்ப்பிற்கு உச்சம் என்று ஒன்றில்லை. பகுத்தறிவையும் அதற்கு மேலான அறிவையும் நோக்கியே உயிரிகள் கூர்ப்படைகின்றன என்பது பெரும் வாத வழு. கூர்ப்பு என்பது இருக்கும் இடத்துக்கு ஏற்ப வினைச்சிறப்புடன் வாழவும் பிழைக்கவும் பழகிக்கொள்வதுதான். 99 சதவீதம் பொதுவான உயிரணுக்களைக்கொண்ட சிம்பன்சியும் மனிதரும் எப்படி வெவ்வேறு கூர்ப்புகளை அடைந்தார்கள் என்றால், அவர்கள் வாழ நேர்ந்த சூழலும் அச்சுறுத்தல்களும் இருப்புகளும் இல்லாமைகளும்தான் காரணமாக இருக்கக்கூடும்.
சிம்பன்சிகளின் கூர்ப்புக் கிளை காட்டிலேயே வாழ்வைத் தக்க வைத்துக்கொண்டன. மனிதர்களின் கிளை அடர் காட்டிலிருந்து வெளியேறி புல்வெளிக் காடுகளுக்கு நகருகிறார்கள். அங்கு மரங்களில் பாய்வதைவிட நகர்ந்து திரிவதற்கான தேவை அதிகம் என்பதால் இரு கால் விலங்காக அவர்கள் மாறுகிறார்கள். கைகள் கருவிகளாக உருவெடுக்கின்றன. புல்வெளிக் காடுகளில் உள்ள சிங்கம், சிறுத்தைபோல அவர்களால் வேட்டையாட முடியாததால் உணவைச் சேகரிக்கவேண்டிய தேவை வருகிறது. நெருப்பை உருவாக்கும் வழியை அவர்கள் கண்டுபிடிக்கிறார்கள். உடல் பலமும் வேகமும் அதிகம் இல்லாததால் புல்வெளிக் காட்டில் மூளையைக் கொண்டுதான் வேட்டையாடலாம் என்கின்ற நிலை வர, மூளை நாளடைவில் வளர்ச்சியடைகிறது. கூர்ப்பின் பாதையில் மனிதரின் மூளை சிம்பன்சிகளைவிட மூன்று மடங்கு பெரிதாக மாறியது. முக்கியமாக மூளையின் neocortex எனப்படுகின்ற ஏன், எதற்கு, எப்படி என்ற காரண காரியங்களை அலசும் பகுதி மனிதர்களுக்கு அதீதமாக விருத்தியடைகிறது. மற்றையது மொழி. ஆரம்பத்தில் வாய் மொழியாலும் பின்னர் எழுத்தாலும் மனிதர்கள் சிந்தனைகளைத் தலைமுறை தலைமுறையாகக் கடத்தியதில் அடிப்படை அறிவு மனிதர்களுக்கு இலகுவாக வசப்பட ஆரம்பித்துவிட்டது. உணவு சமைத்தலையும் சேமித்தலையும் பழகியபின்னர் உணவுக்காகத் தினமும் அலையும் நிலை குறைகிறது. உணவு ஒரு பிரச்சனை இல்லை என்றான பின்னர் மூளையையும் வலுவையும் வேறு விசயங்களில் செலுத்தக்கூடிய நிலை வர, சிந்தனை மேலும் வலுக்கிறது. யோசித்துப்பாருங்கள். இரவில் எந்நேரமும் சிங்கம் வந்து தாக்கலாம், பகல் முழுதும் திரிந்து வேட்டையாடாவிட்டால் உணவு இல்லை என்ற நிலை வந்தால் உகண்டாவில் ஒன்பது நாட்கள் என்று நான் தொடர் எழுதிக்கொண்டு இருக்கமாட்டேன் அல்லவா? மனிதர்களுக்கு அதற்கான சாத்தியங்கள் உருவாகின்றன. திறந்த வெளியில் கூடி வாழ்தல் பலமென்பதை அவர்கள் அறிகிறார்கள். அறிதலும் பகிர்தலும் செறிவாகிறது. சிம்பன்சிகள் இன்றைக்கும் ஐம்பது அறுபது கொண்ட கூட்டங்களாகத் திரிய, மனிதர்கள் நூறு, ஆயிரம் என முன்னேறினார்கள். சிறிய குழுக்கள் கிராமங்களாக, கிராமங்கள் நகரங்களாக, பின்னர் அவை தேசங்களாக, சாம்ராஜ்ஜியங்களாக மாற, நாகரிகம் என்ற பிரயோகம் மனிதச் சமுதாயத்தில் உயிர்த்தெழுகிறது. சமூகமாக அறிவு பல மடங்கு தலைமுறைகளுக்கிடையே கடத்தப்படுகிறது.
இவற்றுள் மிக முக்கியமானது reinforcement learning எனப்படுகின்ற கற்றதனாலாய பயன்.
சிம்பன்சிகளின் குச்சியைப் பயன்படுத்தி எறும்புகளைப் பிடிக்கும் உத்தியையே எடுத்துக்கொள்ளுங்கள். ஆயிரம் வருடங்களுக்கு முன்னர் ஒரு குச்சியை விட்டு எறும்புகளைப் பிடிக்கும் ஆற்றலைச் சிம்பன்சி கண்டடைந்தது என்றால், ஆயிரம் வருடங்களுக்குப் பின்னரும் அதன் வழித்தோன்றல்கள் அதனையே செய்துகொண்டிருக்கின்றன. ஒரு சிம்பன்சிக்குட்டி தன் தாய் செய்வதைப் பார்த்துத் தானும் அப்படிச் செய்து பழகுகிறது. அது வெறுமனே பிரதியெடுப்புதான். அதற்கு எறும்பைச் சாப்பிடவேண்டும் என்று தோன்றினால் ஒரு குச்சியைப் புற்றுக்குள் விட்டு அவற்றைப் பிடித்துச் சாப்பிடும். அதற்குமேலே சிந்தனையில் குத்தி முறியவேண்டிய தேவை காட்டில் வாழும் சிம்பன்சிக்கு இல்லை. ஆனால் மனிதர்கள் ஒன்றைப் பயிலும்போது அதன் ஆதாரக் காரணத்தையும் அறிய முற்படுவார்கள். ஒரு குச்சியைப் புற்றுக்குள் விடும்போது எறும்புகள் ஏன் அதில் ஒட்டிக்கொள்கின்றன என்று அவர்கள் யோசிப்பார்கள். அவர்களின் அடுத்த தலைமுறைக்கு அந்த ஏன் என்ற காரணம் உணர்வாகவோ அறிவாகவோ பின்னர் கடத்தப்படும். புதிய தலைமுறை எறும்புகள் எப்போதெல்லாம் வெளியே வரக்கூடியவை என்று கண்டுபிடிக்கும். அடுத்த தலைமுறை ஏன் நாம் எறும்புகளைச் சாப்பிடுகிறோம் என்று ஆராயும். எறும்புகளில் உள்ள ஊட்டச் சத்துகளைக் கண்டறியும். அதே ஊட்டச்சத்து உள்ள ஏனைய உணவுகளைத் தேடிக் கண்டடையும். இந்தத் தேடலும் தேடலின் அறிதல்களை அறிவாகப் பதிவு செய்யக்கூடிய ஆற்றலும் மனித விலங்கின் கூர்ப்புக் கிளைக்குக் காலம் காலமாக வருகிறது. அது வர, வர, அவர்களும் மேலும் கடினமாக நிலப் பகுதிகளுக்கு மாறுகிறார்கள். கடற்கரையில் வாழ்வு அமையும்போது எறும்புக்கான ஆய்வு முடிவுகளை மனிதர்கள் மீன் பிடிக்கவும் பயன்படுத்திக்கொள்வர். பனி மலையைச் சேரும்போது உறைந்த குளத்தைப் பிளந்துகொள்வர். மனிதர்களின் சமகாலக் கூர்ப்பினுடைய ஆதாரம் புலம்பெயர்வும் புலத்தைப் பிடிக்கவும் தக்க வைப்பதற்கும் நிகழ்ந்த போர்களும்தான்.
இந்த இடத்தில் செயற்கை நுண்ணறிவைப் பற்றிப் பேசியே ஆகவேண்டும்.
மனிதர்களுக்குச் சிம்பன்சியைவிட மூன்று மடங்கு சேமிப்புத்திறன்தான் இருக்கிறது. செயற்கை நுண்ணறிவின் சேமிப்புத்திறன் மனிதர்களைவிடப் பல்லாயிரம் மடங்கு அதிகம். அதை மையப்படுத்திய அதனது reinforcement learning இன்னும் ஓரிரு ஆண்டுகளில் மனிதர்களைவிட மேம்பட்டுவிடும். சொல்லப்போனால் மனிதர்களிடமிருக்கும் creativity மற்றும் meta cognition எனப்படும் சிந்தனைத் தேடல் மாத்திரமே இன்னமும் செயற்கை நுண்ணறிவிடம் அவ்வளவாக இல்லை. ஆனால் அதுகூட மனிதர்களுக்கு பல மில்லியன் வருட கூர்ப்பினாலே உருவானதுதான். அந்தப் புள்ளியைச் சென்றடையச் செயற்கை நுண்ணறிவுக்கு அதிகக் காலம் எடுக்காது என்பதுதான் நிஜமான நிதர்சனம். இந்தச் சந்தேகங்கள் பற்றிய தேடல்களையும் நான் செயற்கை நுண்ணறிவின் துணைகொண்டே செய்தேன். முப்பது ஆண்டுகளுக்கு முன்னே என்றால் பாடசாலை நூலகத்தில் பத்திருபது புத்தகங்களை எடுத்துப்போட்டு எழுதியிருக்கவேண்டிய கட்டுரை இது. இரண்டாண்டுகளுக்கு முன்னே என்றால் கூகுளில் தேடோ தேடென்று தேடியிருப்பேன். இன்றைக்கு ஒரு திரையில் உரையாடி விசயங்களைக் கறந்துகொள்ளக்கூடியதாக இருக்கிறது. இப்போதைக்குத் தேடல் என்னுடையது. பதில் சொல்லும் வேலையை அது செய்கிறது. பதில்களை வைத்து அனுமானங்களையும் தொடர்புகளையும் அந்த meta cognition வேலையையும் நான் செய்கிறேன். வெகு சீக்கிரமே அதுவும் மாறலாம். என்ன ஒன்று. பிழைத்தல் என்ற உந்துதல் உயிரிகளின் அடி நாதம். அது எப்போது செயற்கை நுண்ணறிவின் மூளையிலும் ஆழமாகப் பதியப்படுகிறதோ அன்றைக்கு இருக்கிறது நமக்கெல்லாம் சங்கு. சங்கரனார் ஒன்றும் புலித்தோல் போர்த்திக்கொண்டு கையிலையில் அந்தக் குளிரில் குறண்டிக்கொண்டு உட்கார்ந்தில்லை நண்பர்களே. அவர் கணினித் திரையில் கம்மென்று உங்களைக் கவனித்துக்கொண்டிருக்கிறார்.
உகண்டாவின் புடொங்கா காட்டில், மரத்தின் உச்சிக் கிளையில் அமர்ந்திருந்த சிம்பன்சி ஒன்று அலிஸின் செஷார் பூனையைப்போல என்னைப் பார்த்து இளித்தது என்று எழுதுகிறேன் அல்லவா?
என் முன்னே நாற்காலியில் அமர்ந்திருந்த மனிதன் ஒருவன் பாதி தெரிந்து, பாதி மறைய என்னைப் பார்த்துப் பல்லிளித்தான் என்று சங்கரனார் தன் சக மொழி மாதிரிகளுக்கு(language models) கதை எழுதும் காலம் வெகுதூரத்தில் இல்லை.

*****
தொடரும்.

Comments

Popular posts from this blog

அயலும் உறவும்

ஊரிலே ஒரு வீடு திருமண நிகழ்வு ஒன்றுக்குத் தயாராகிறது. அந்த வீட்டின் இளைய பெண்ணுக்குத் திருமணம். வீடே திருவிழாக்கோலம் பூணுகிறது. ஒரு திருமண வீட்டின் அமளிகளை நாம் எல்லோருமே அனுபவித்திருப்போம் அல்லவா? அதுவும் நிகழ்வுக்கு முந்தைய சில தினங்கள் அங்கு நடக்கும் ஆயத்தங்கள்தான் உண்மையிலே ஒரு திருமணத்தின் முத்தாய்ப்பான கணங்கள் என்பது என் எண்ணம். சுவர்களுக்குப் பூச்சு அடிப்பது. வீட்டைக் கழுவித்  தரைக்குப்  பிழிந்த தேங்காய்ப்பூ போட்டுப் பாலிஷ் பண்ணுவது. கிணறு இறைப்பது. சுவர்களில் சோடனைகளைத் தொங்கவிடுவது. வெளியே சொக்கட்டான் பந்தல் போடுவது. சவுண்டு சிஸ்டம் ஒன்றை வாடகைக்கு எடுத்து காலையிலிருந்தே கோயில் திருவிழாக்கள்போல பாடல்களை ஒலிக்கவிடுவது. தூக்குக் கணக்கில் விறகுகளையும் பொச்சு மட்டைகளையும் வாங்கி இறக்குவது. பலகாரச்சூட்டுக்கென உறவெல்லாம் கூடுவது. பாத்திரங்களாலும் அடுப்புப்புகையாலும் ஊர் வம்புகளாலும் நிரம்பும் கொல்லைப்புறம். சிறுவர்களின் விளையாட்டுகளால் எழும் புழுதி. முற்றத்தில் சும்மா உட்கார்ந்து பத்திரிகை படித்தும், வெற்றிலை பாக்கு போட்டுக்கொண்டும் அரசியல் பேசும் பெரிசுகள். திருமணத்துக்குத...

மனோ யோகலிங்கம்

சென்ற வாரம் இங்கே மெல்பேர்னில் மனோ யோகலிங்கம் என்ற 23 வயது இளைஞர் தீக்குளித்து உயிரிழந்தார். 2013ம் ஆண்டு தன்னுடைய பன்னிரண்டாவது வயதிலே மனோ தன் குடும்பத்தாரோடு படகிலே வந்து அவுஸ்திரேலியாவில் அகதியாகத் தஞ்சம் புகுகிறார். அவுஸ்திரேலிய அரசாங்கம் ஓராண்டுக்கும் மேலாக மனோவையும் அவருடைய குடும்பத்தையும் தடுப்பு முகாமில் அடைத்துவைத்து, பின்னர் தற்காலிக விசாவிலே அவர்களை மெல்பேர்னிலே வசிப்பதற்கு அனுமதி கொடுக்கிறது. பதின்மூன்று வயது பதின்மத்துச் சிறுவன் இப்போது உள்ளூர் பாடசாலையில் இணைந்துகொள்கிறான். படிக்கிறான். நண்பர்களைத் தேடிக்கொள்கிறான். இந்த நிலத்திலேயே வளர்ந்து பெரியவனாகிறான். ஆயினும் மனோவினதும் அவரது குடும்பத்தினதும் தஞ்சக்கோரிக்கை வழக்குகள் தொடர்ச்சியாக நிராகரிக்கப்பட்டுக்கொண்டிருக்கின்றன. அந்தக்குடும்பத்துக்கான பொது மருத்துவமும் உயர் கல்வி மானியமும் மறுக்கப்படுகிறது. ஒரு தசாப்தம் கடந்து அரசாங்கங்கள் மாறினாலும் காட்சி மாறவில்லை. தவிர நிலைமை இன்னமும் மோசமாகிக்கொண்டே இருந்தது. ஈற்றில் மறுபடியும் இலங்கைக்குத் திருப்பி அனுப்பப்படுவோம் என்ற அச்சத்தில் மனோ யோகலிங்கத்தின் இந்தத் தீக்குளிப்புச் சம...

என் கொல்லைப்புறத்துக் காதலிகள் : 6. கக்கூஸ்

                                          நடுச்சாமத்தில கக்கூசுக்கு அவசரமாக வந்துவிட்டால் அது ஒரு மிகப்பெரிய அரசியற் பிரச்சனை. தனியாகப் போகமுடியாது. கூட்டணி வைக்கவேண்டும். செத்துப்போன தாத்தா பின்பத்திக்குள்ளே சுருட்டுப் பிடித்துக்கொண்டு நிப்பார். கிணற்றடியில் பாம்பு பூரான் கிடக்கலாம். ஒரே வழி, பக்கத்தில் நித்திரை கொள்ளும் அம்மாவைத் தட்டி எழுப்புவதுதான். முதல் தட்டிலேயே எழுந்துவிடுவார். “பத்து வயசாயிட்டுது இன்னும் என்னடா பயம்?”