தேங்காய்ச் சிரட்டை ஒன்று தும்புகள் எல்லாம் நீக்கப்பட்டு, அதன் கண்களும் அகற்றப்பட்டுத் தயாராக வைக்கப்பட்டிருந்தது.
இப்ப இந்தச் சிரட்டைல மூன்று குழிகள் இருக்கல்லா? அதாலதான் முக்குழி எண்ட பெயர் வந்தது. இதால மூடி வச்சுச் சுடுறதால இத முக்குழி அப்பம் எண்டு கூப்பிடுவம்.
எங்கள் வீட்டில், வார இறுதிகளில் காலை நேரத்து உணவாகப் பல தடவைகள் முக்குழி அப்பத்தை அம்மா சுட்டுக் கொடுத்திருக்கிறார். புட்டு, இடியப்பம், தோசை, உரொட்டிபோல முக்குழி அப்பமும் எங்கள் குடும்பத்தில் அடிக்கடி சமைக்கப்படும் ஒரு உணவு. எங்கள் வீட்டைப்போலவே எல்லா வீடுகளிலுமே இதனைச் சமைப்பார்கள் என்றுதான் சிறு வயதில் நான் எண்ணியுமிருந்தேன். ஆனால் பின்னாட்களில் முக்குழி அப்பம் என்ற பெயரையே பலரும் கேள்விப்பட்டிருக்கவில்லை என்றறிந்தபோது ஆச்சரியமே மேலிட்டது. அம்மாவிடமே கேட்டேன்.
உங்களுக்கு யாரு இதச் சொல்லித்தந்தது? வேற யாரும் இதச் சுட்டுப் பார்த்திருக்கிறீர்களா?
எண்ட அம்மாட்டதான் இதப் பழகினனான். அவ அடிக்கடி வீட்டில செய்வா. மற்றபடி வேற வீடுகளில முக்குழி அப்பம் சுட்டு நான் கேள்விப்பட்டதில்லை.
அப்போது அப்பா இடையில் புகுந்தார்.
எண்ட அம்மாவும் நல்லாச் சுடுவா. இவையளிண்ட வீட்டு முக்குழி அப்பத்தைவிட அம்மா சுடுற முக்குழி அப்பம் அந்தமாதிரி இருக்கும்.
அப்பா விட்டால், இந்திரா காந்தியைச் சுட்டதுகூடத் தன் அம்மாதான் என்று உரிமை கோரக்கூடியவர் என்பதால் அவருடைய வாக்குமூலத்தை நம்பலாமா என்று எனக்குத் தெரியவில்லை. எது எப்படியோ முக்குழி அப்பம் என்கின்ற உணவை யாழ்ப்பாணத்தின் ஒரு மூலையில் உள்ள சிறு தீவான நயினாதீவில் வாழ்ந்த சில குடும்பங்கள்தான் சமைத்து வந்திருக்கின்றன என்பது ஊர்ஜிதமாகிறது. அதிலும் குறிப்பாக இன்றைய தேதிக்கு முக்குழி அப்பத்தை வீட்டில் சமைத்துச் சாப்பிடுகின்ற ஒரே நபர் என்னுடைய அம்மாதான் என்கின்ற அளவிலே முக்குழி அப்பத்தின் செயன்முறையை ஆவணப்படுத்தவேண்டும் என்ற முனைப்பும் எனக்குள் உருவானது. அதை நான் அம்மாவிடமே சொல்ல, அவருக்கும் உற்சாகம் தொற்றிக்கொண்டது.
கோதுமைதான் பாவிக்கோணும். பச்சைக் கோதுமை மா. அதில ஒரு சுண்டை எடுத்து கொஞ்சம் உப்பும் போட்டு, பச்சைத்தண்ணி விட்டுக் கரைக்கவேணும். மிக்சில போட்டு அடிச்சா, கட்டி படாமல் அது நல்லாக் கரைஞ்சு பசுந்தா வரும்.
உங்கட அம்மாவும் மிக்சிதான் பாவிச்சவாவா?
அவண்ட காலத்தில கரண்டே இல்லை. மிக்சிக்கு எங்க போவா? அவ கையாலதான் கரைப்பா.
அப்பா அந்தப் பக்கமிருந்து, நயினாதீவில் முதல் மிக்சி வாங்கியது தன்னுடைய அம்மாதான் என்று அளந்ததை யாருமே கேட்கவில்லை. அம்மா இன்னொரு கிண்ணியில் தேங்காய்ப்பூ பிழிந்து, முதற் பால் எடுத்துத் தயாராக வைத்திருந்தார். அதில் சில கரண்டி சீனியும் சிறிதே உப்பும் சேர்க்கப்பட்டிருந்தது.
இந்தப் பாணிதான் முக்கியம். முதற்பால்தான் எப்பவும் பாவிக்கவேணும். சீனி நல்லாப்போட்டா ருசியும் நல்லா இருக்கும்.
கொஞ்சம் சர்க்கரையும் கலந்தா நல்லா இருக்குமா மாமி?
மனைவி கேட்க அம்மா உடனேயே சொன்னார்.
ஓ. இனிக்கிற எதையும் போடலாம். அந்தமாதிரி இருக்கும்.
விளங்கினமாதிரித்தான். கற்பகதருவிலிருந்து நம் ஊரின் சொத்து நீரிழிவுக்கும் மாரடைப்புக்கும் கை மாறியதில் எந்த ஆச்சரியமுமில்லை.
டயபற்றிக் இருக்கிற ஆக்கள் வேணுமெண்டால் கறியோடையும் தொட்டுச் சாப்பிடலாம்.
உங்களுக்கும் டயபற்றிக் இருக்குத்தானே? கறியோடயா நீங்கள் சாப்பிடுவீங்கள?
எனக்கென்ன விசரா? முக்குழி அப்பத்தை நான் கறியோட சாப்பிடுவனா? இது மத்தாக்களுக்குச் சொல்லுறது.
அம்மா அடுப்பை மூட்டி, சட்டியை வைத்து ஒரு துளி எண்ணெய் விட்டு அதனை நன்றாகத் துடைத்து எடுத்தார். பின்னர் முக்குழிச் சிரட்டையால் வெறுஞ் சட்டியை மூடினார்.
தாச்சியும் சூடாகவேணும். சிரட்டையும் சூடாகவேணும். அப்பதான் மாவை விடேக்க, இரண்டு பக்கத்தாலயும் சூடு ஏறும். அத்தோட ஒவ்வொரு முறையும் தாச்சியை அடிக்கடி சுத்தமாகத் துடைக்கவேணும். இல்லாட்டி மாவு ஒட்டிப்போயிடும்.
அவர் சிரட்டையைத் தொட்டு சூடு ஏறிவிட்டதா என்று கவனித்தார். சூடு மிதமானதும் சிரட்டையை எடுத்துவிட்டு ஒரு அகப்பை மாவினை சட்டியில் ஊற்றினார். பின்னர் சிரட்டையால் அதனை மூடி வைத்தார்.
இப்ப விளங்குதா? சிரட்டைல முக்குழி இருக்கிறதாலதான் அப்பம் உள்ள நீர்த்துப்போகாமல் நல்லா அவியும். முதல் அப்பம் சிலவேளை சட்டில ஒட்டப்பார்க்கும். பிறகு சட்டியை நல்லாத்துடைச்சிட்டு அடுத்த தடவை ஊற்றும்போது சரியா வந்திடும்.
அவர் சொல்லிக்கொண்டே சிரட்டையைத் தூக்கி அப்பம் அவிந்துவிட்டதா என்று பார்த்தார். இரண்டாவது தடவை, சரி வந்திட்டுது என்று சொல்லியபடியே அப்பக் கரண்டியால் அதனை வழித்து எடுத்தார். முதல் முறையே முக்குழி அப்பம் பதமாக, ஒட்டாமல் சட்டியிலிருந்து எழுந்தருளியது.
பார்த்தியா. அப்பத்திலயும் குழியள் விழுந்திருக்கு. மேல வெள்ளையாவும் அடிப்பக்கம் கறுத்தும் இருக்கவேணும்.
பான் கேக்போலத்தானே?
அதேதான். இப்ப சுடச்சுடச் அந்தத் தேங்காய்ப்பால் பாணிக்க இதைப் போடவேணும். பிறகு நல்லா பாணிக்க அப்பத்தைத் தோய்ச்சுத் தோய்ச்சு எடுக்கும்போது பாணி அப்பத்திண்ட குழிகளுக்குள்ள இறங்கி, ஊறி அற்புதமா கலந்துவிடும்.
பிறகு?
பிறகென்ன பிய்ச்சுச் சாப்பிடவேண்டியதுதான்.
நான் அப்பத்திலிருந்து சிறு துண்டைப் பிய்த்துச் சாப்பிட்டேன். மறுபடியும் இன்னொரு துண்டைப் பிய்த்துத் தேங்காய்ப்பாலில் தோய்த்து எடுத்து வாயில் போட்டேன். மறுபடியும் இன்னொரு துண்டு. விரலிடுக்குகளால் தேங்காய்ப் பால் பாணி வழிந்துகொண்டிருந்தது. வாயிலும்தான். மறுபடியும் ஒரு துண்டு. அம்மா அப்போது அடுத்த முக்குழி அப்பத்தையும் என்னுடைய கிண்ணிக்குள் போட்டார். என் பாட்டி அன்னப்பிள்ளையும் இப்படித்தான் என் அம்மாவுக்கு சுட்டுக்கொடுத்திருப்பார் என்ற எண்ணமும் கூடச் சேர்ந்தது. ஊரில் இருக்கும் அம்மா வளர்ந்த வீடு ஞாபகத்துக்கு வந்தது. அங்கு அடுப்படியில் அன்னப்பிள்ளை நிற்க, அவருடைய எட்டுக் குழந்தைகளும் அப்பத்துக்காக சமையலறையில் அணி வகுத்து நிற்கும் காட்சி கண்களில் தோன்றியது. தொண்ணூறுகளில், சனிக்கிழமை காலைகளில், டியூசனுக்கு நேரமாகிறது என்று நான் அவசரப்பட, ஒரு வாய்தான் அப்பன், சாப்பிட்டுப் போ என்று முக்குழி அப்பத்தை ஊட்டிவிட்ட அம்மாவின் கரமும் ஞாபகம் வந்தது.
ஆவி பறக்க அடுத்த முக்குழி அப்பத்தையும் தேங்காய்ப்பால் வழிய வழிய வாயில் போட்டேன். அப்பா, தனக்கு இன்னமும் அப்பம் வரவில்லை என்று புறுபுறுத்தார். எண்ட அம்மா என்றால் எனக்குத்தான் முதலில் கொடுத்திருப்பார் என்று குறைப்பட்டார். எனக்கு எதுவுமே காதில் விழுவதாயில்லை. மனைவியும் ஒரு கிண்ணியில் தேங்காய்ப்பால் பாணியை விட்டுவைத்துக்கொண்டு தயாராக நின்றாள். ஆனால் நான் நிறுத்தினால்தானே? என் அம்மா சுட்டுத்தந்த முக்குழி அப்பம் குட்டிக் குட்டி நிலவாய் என் சட்டிக்குள் விழுந்துகொண்டிருக்க, நான் அதைப் பிய்த்துப் பிறையாக்கிப் பாலில் தோய்த்து உண்டு பித்தாகிக்கொண்டிருந்தேன். இன்னுமொரு முக்குழி அப்பமும் சட்டியிலிருந்து தேங்காய்ப்பால் பாணிக்குள் விழுந்து என் வாய்க்குள் கரைந்து மறைந்தது. எத்தனை சாப்பிட்டேன் என்று எனக்கே தெரியாது. என் பாத்திரத்தில் தேங்காய்ப்பால் மொத்தமாகத் தீர்ந்தபோதுதான் கொஞ்சம் சுரணை வந்தது. வாயில் இன்னமும் தேங்காய்ப்பாலின் மீதி வழிந்துகொண்டிருந்திருக்கவேண்டும். அம்மாவும் மனைவியும் என் கோலத்தைப் பார்த்துச் சிரித்தார்கள். அரை மணி நேரமாகத் தன் தவணைக்காகக் காத்து நின்ற அப்பாவுக்கு வெறுப்பேறிவிட்டது.
போதும். உமாதேவியாரிட்ட ஞானப்பால் குடிச்ச சம்பந்தரைமாதிரி பால் வடிஞ்சுகொண்டு நிக்கிறாய். போய்த் துடை.
அதைக்கேட்டு, மணியாள் என்கின்ற இராஜேஸ்வரி பெருமிதத்துடன் திரும்பி அடுத்த அப்பத்தை சட்டியில் ஊற்றத்தொடங்கினார்.
*****
புகைப்படங்கள்: ஜீவிகா
இளவேனில் ஆடி, 2025 இதழுக்காக எழுதப்பட்டது.

Comments
Post a Comment