மனிதர்களை எப்படி இலகுவில் கடந்துபோய்விடுகிறோம் என்பது புரியாத புதிராக இருக்கிறது. ஆனந்தம் என்று ஒரு அண்ணை. அப்பாவின் உதவியாளர். நவாலியில் வசித்தவர். நெடுவல். நெடுவலுக்கேற்ப முகமும் நீளம். பற்களும் நீளம். அவற்றில் ஒன்றிரண்டைக் காணக்கிடைக்காது. மீதம் வெற்றிலைச்சாயம் படிந்திருக்கும். அண்ணை தன் ஒரு காலைக் கொஞ்சம் தாண்டித் தாண்டியே நடப்பார். ஏன் அப்படி என்று தெரியாது. போலியோவாக இருக்கலாம். அல்லது ... தெரியாது. அண்ணர் நன்றாகச் சிங்களம் கதைப்பார். சிங்களப்பாட்டு பாடுவார். 'சந்திராவே மேபாவே நாவா' என்று என்னைப் பாடசாலைக்கு அழைத்துச்செல்லும்போது பாடிக்கொண்டே சைக்கிள் மிதிப்பார்.