கடற் கோட்டை - கிண்டிலில்


செங்கை ஆழியானின் நூல்களை அமேசன் கிண்டிலில் கொண்டுவரும் முயற்சியை நண்பர் தாருகாசினி ஆரம்பித்திருக்கிறார்.

முதல் நூலாக “கடற் கோட்டை” வெளிவந்திருக்கிறது.

தாருகாசினி முறையாக செங்கை ஆழியான் குடும்பத்தோடு காப்புரிமை ஒப்பந்தத்தைச் செய்து இதனை ஆரம்பித்திருக்கிறார். கிண்டிலில் நூல்களை வாசிக்கும் பழக்கம் இன்னமும் நம்மத்தியில் பெரிதாக இல்லை. இந்த சந்தை மிகக் குறுகியது. இப்போதைக்கு உழைப்புக்குப் பலன் கிடைப்பது சந்தேகமே. ஆனால் கிண்டிலில் இருப்பது நீண்ட காலத்துக்குப் பயனளிக்கக்கூடியது. பலர் இப்போதெல்லாம் சப்ஸ்கிரிப்சன் முறையில் கிண்டில் நூல்களை வாசிக்கிறார்கள். அப்போது செங்கை ஆழியான் அறிமுகமற்ற பலரையும் சென்றடையும் சந்தர்ப்பங்கள் அதிகம். காலப்போக்கில் இது இடம்பெறும். தாருகாசினி ஒரு கர்மவீரர்போல சலிப்படையாது தான் எடுத்துக்கொண்ட தன்முயற்சியைத் தொடருமாறு கேட்டுக்கொள்கிறேன். வற்றா நதி, வாடைக்காற்று, குவேனி என்று ஒரு பெரிய லிஸ்டே இருக்கிறது. அடுத்த நூலுக்கான என்னுடைய பரிந்துரை “24 மணி நேரம்”.

“கடற் கோட்டை” கிண்டில் விலை இரண்டு டொலர்கள்.

இருபத்தைந்து வருடங்களுக்கு முன்னர் ஒரு பேச்சுப்போட்டி பரிசாக “கடற் கோட்டை” உட்பட சில நாவல்களைக் கல்லூரியில் தந்தார்கள். பொருளாதாரத் தடை இருந்த காலமது. இரட்டை ரூல் கொப்பி ஒற்றையில் அச்சடிக்கப்பட்ட புத்தகம். இப்போது கடற் கோட்டை கிண்டிலில் வெளிவருகிறது. இனிவருங்காலங்களில் அது ஒலிப்புத்தகமாகும். தொழில்நுட்பம் விருத்தியாகையில் தானியங்கி மொழிமாற்றங்கள்கூட சாத்தியப்படும்.

புத்தகங்கள் தம்மை உள்ளடக்கம் சார்ந்தும் வடிவமைப்பு சார்ந்தும் புதுப்பித்துக்கொண்டே இருக்கின்றன.

நகுலனின் இரவுகாவலுக்கு நிற்பதிலேயே என் இரவுகள் கழிகின்றன. 

நாட்டு மாந்தர். வனமேகியோர். தமையர். தம்பி. அன்னை. அவ்வப்போது மனைவி. அல்லாத பொழுதுகளில் அண்ணி. காவலுக்கு நிற்பதிலேயே என் இரவுகள் கழிகின்றன. காப்பது என் கடன் எனில் எவரிடமிருந்தெல்லாம் இவர்களைக் காத்துக்கொள்கிறேன்? நட்சத்திரங்களிடமிருந்தா? நிலவிடமிருந்தா? பறவைகளிடமிருந்தா? அடர்ந்து பரவிக்கிடக்கும் இரவிலிருந்தா? இரவுக்கு அப்பாலே வேட்டைக்குத் தயாராயிருக்கும் இரை தின்னிகளிடமிருந்தா? கெளரவர்களிடமிருந்தா? சோதரர்களிடமிருந்தா? 

அல்லது என்னிடமிருந்தா?

000

நல்ல மனிதர்களைத் தள்ளியே வைத்திருத்தல் சாலம் என்று படுகிறது. அவர்கள் என்னை நெருங்கும்போது நெஞ்சு படபடக்கிறது. அடிவயிறு கனக்கிறது. கால்களுக்கடியில் நெருப்பு சுவாலை பரப்பி எரிகிறது. அவர்களைக் கொன்று குவித்தாலேயே மனம் நிம்மதி அடையும்போலத் தோன்றுகிறது. எட்ட இருக்கும்போது அவர்களையே நினைந்து ஏற்றிக் கொண்டாடி மகிழ்ந்த மனதுக்கு, அவர்கள் கிட்ட வரும்போது மாத்திரம் அப்படி என்ன அழுங்கு? நல்ல மனிதர்கள் என்னைச் சிறுமைப்படுத்துகிறார்கள். அவர்கள் அருகாமையில் என் பிம்பம் மாடிக்கட்டடத்திலிருந்து விழுந்து சிதறும் நிலைக்கண்ணாடியாய் உரு அழிகிறது. விழும்போது அவர்களையும் கூட இழுத்துக்கொள்ளவேண்டும். சிதறித் துண்டு துண்டுகளாகி, உன்னுடல் என்னுடல் எதுவென்று தெரியாவண்ணம் பரவி. பத்தோடு பதினொன்றாகி. 

நகுலனாயிருத்தல் எப்போது எனக்குச் சாபமாகிப்போனது? 

000

ஆனந்தம் அண்ணைமனிதர்களை எப்படி இலகுவில் கடந்துபோய்விடுகிறோம் என்பது புரியாத புதிராக இருக்கிறது. 

ஆனந்தம் என்று ஒரு அண்ணை. அப்பாவின் உதவியாளர். நவாலியில் வசித்தவர். நெடுவல். நெடுவலுக்கேற்ப முகமும் நீளம். பற்களும் நீளம். அவற்றில் ஒன்றிரண்டைக் காணக்கிடைக்காது. மீதம் வெற்றிலைச்சாயம் படிந்திருக்கும்.  அண்ணை தன் ஒரு காலைக் கொஞ்சம் தாண்டித் தாண்டியே நடப்பார். ஏன் அப்படி என்று தெரியாது. போலியோவாக இருக்கலாம். அல்லது ... தெரியாது. அண்ணர் நன்றாகச் சிங்களம் கதைப்பார். சிங்களப்பாட்டு பாடுவார். 'சந்திராவே மேபாவே நாவா' என்று என்னைப் பாடசாலைக்கு அழைத்துச்செல்லும்போது பாடிக்கொண்டே சைக்கிள் மிதிப்பார்.

எம். ஜி. சுரேஷ்

எம். ஜி. சுரேஷ் காலமாகிவிட்டார்.
நண்பர் ஆனந்த் பாலாதான் முதன்முதலில் எம்.ஜி.சுரேஷை எனக்கு அறிமுகப்படுத்தியவர். ஆனந்த் எம்.ஜி.சுரேஷின் அதி தீவிர ரசிகர். எழுத்தாளர்களை ‘அவன், இவன்’ என்று உரிமைகொண்டாடும் வாசகர்.
“அவன் எம்.ஜி.சுரேஷ் இருக்கானே ஜேகே, தமிழ்ல ஒரு டான் பிரவுண் மாதிரி. செமயா இருக்கும். நீங்க வேணும்னா ஒரு தடவை வாசிச்சுப்பாருங்களேன்”

சொல்லவேண்டிய கதைகள்


எழுத்தாளரும் பத்திரிகையாளருமான லெ. முருகபூபதி எழுதிய “சொல்லவேண்டிய கதைகள்” என்கின்ற நூலின் வெளியீட்டு நிகழ்வு வரும் சனிக்கிழமை மாலை இடம்பெற இருக்கிறது.

முருகபூபதி நிறைய அனுபவங்களைச் சுமந்து திரிபவர். அவர் அவற்றைச் சொல்லும்போது ஒருவித பத்திரிகைத் துணுக்குத்தனம் தொனிக்கும். பெரும்பாலும் புனைவு கலக்காமல், முன்முடிபுகள் சேர்க்காமல் செய்தியாகவே அனுபவங்களை முருகபூபதி சொல்வார். ஒரு அனுபவத்தைப் பகிரும்போது மூலச் செய்தி என்று ஒன்று இருக்குமல்லவா? ஏனைய விடயங்கள் எல்லாம் அந்த மூலச் செய்தியைச் சுற்றி, அல்லது அதனை நோக்கியே நகருவதுண்டு. ஆனால் முருகபூபதியின் அனுபவப்பகிர்வுகள் அப்படியானவை அல்ல. செய்தியின் மூலம் என்பது அவருக்கு எந்நேரமும் நகர்ந்துகொண்டே இருக்கும். அல்லது பல மூலங்களின் வழியே செய்தி கடத்தப்படும். அல்லது ஒரே மாட்டை முருகபூபதி பல மரங்களில் கட்டிவிட்டுப் பல மரங்களைப்பற்றிப் பேசுவார். மாடும் அவ்வப்போது வந்து வந்து போகும். இதன் சிறப்பு என்னவென்றால், அவரே அறியாமல், உணராமல் பல பொக்கிசங்கள் அவர் பேச்சின்வழி வந்து வீழும். அதற்காகவே அவரின் கதைகளை நான் குறுக்கிடாமல் தொடர்ந்து கேட்பதுண்டு.