வெள்ளி - 4

 

அத்தியாயம் 4

01bebf3b431cb76ad119d4773775883c

நிலவு மிகவேகமாக நகர்ந்துகொண்டிருந்தது. வழியில் கடந்துபோகின்ற எந்த முகிலுக்கும் வணக்கம் வைக்காமல், அவற்றுக்குள்ளே மூழ்கி, எழுந்து, மறைந்து, வெளியேறி, என்ன அவசரமோ, யாரையோ தேடி ஓடிக்கொண்டிருந்தது. கொஞ்சத்தூரம் அப்படி ஓடிய நிலவு திடீரென்று அசையாமல் நின்று சுற்றும் முற்றும் பார்த்தது. அட தன்னைச்சுற்றி எதுவுமேயில்லை. ஓடி ஓடி கடைசியிலே தனியனாக வானத்திலே நிற்கிறேனே என்று வருந்தியது.. நிலவுக்கு இப்போது தான் எதற்காக இதுவரையும் ஓடினேன்  என்பதுகூட மறந்துவிட்டது. நான் எங்கிருக்கிறேன்? என்று சத்தமாகவே கேட்டது.

“எங்கேயும் போகவில்லை, இங்கேயேதான் இருக்கிறாய். ஓடினது முகில்தானே ஓழிய நீயல்ல. அதுபுரியாமல் மூச்சுக்கூட உனக்கு இரைக்கிறது பார்”

கோடன் நிலவைப்பார்த்து சொல்ல, அது மூச்சிரைப்பதை நிறுத்திவிட்டு முகில்களை தேடத்தொடங்கியது.

வெள்ளி – 3

 

அத்தியாயம் 3

orange20suneset

அள்ளூர் ஆற்றின் குடவாய்க்கரை விழாக்கோலம் பூண்டிருந்தது.

இந்திரவிழாவுக்கென மாதீர்த்தம், பொன்னாகரம், ஒக்கூர் என்று சுற்றியுள்ள ஊரிலிருந்தெல்லாம் மக்கள் வண்டிகட்டி சாரை சாரையாக இன்னமும் வந்துகொண்டிருந்தனர். ஒவ்வொரு ஊர் பாணர்களும் தமக்குள் கூடி  இசைப்போட்டி நடத்திக்கொண்டிருக்க, இன்னொருபுறம் மல்யுத்தத்திடலில் வீரர்கள் சண்டையிட்டுக்கொண்டிருந்தனர். சிறுவர், சிறுமியர் குறுக்கும் நெடுக்கும் ஓடித்திரிந்து விளையாடினார்கள். ஒரு வேங்கை மரத்தடியில் திண்ணை அமைத்து விறலியர்கள் நாட்டிய நிகழ்வுகள் செய்தனர். கூட்டம் ஒன்று நறவு அடித்தபடி சீட்டாடிக்கொண்டிருந்தது. அன்னதான மடத்தில் பரதேசிகள் மீண்டும் மீண்டும் வரிசையில் நின்று வயிற்றை நிரப்பி ஏப்பம் விட்டுக்கொண்டு மீண்டும் வரிசையில் இடம் பிடித்தார்கள். இடையிடையே காவல் வீரர்கள் கண்காணிப்பில் ஈடுபட்டார்கள். அவ்வப்போது வந்துபோகும் பல்லக்குகளின் ஆரவாரத்துக்கு கூட்டம் திரும்பிப்பார்த்து, தேவை என்றால் எழுந்து மரியாதையும் செய்துவிட்டு மீண்டும் திருவிழாக்கொண்டாட்டத்தில் ஈடுபட ஆரம்பித்தது.

அள்ளூர் ஆறும் தன் பாட்டுக்கு திருவிழாவில் பங்கெடுத்திருந்தது.

வெள்ளி - 2

 

அத்தியாயம் – 2

 

contact_lens

 

"Its from Thaththa"

பத்து நிமிடத்திலேயே தாத்தா பதில் அனுப்புவார் என்று கோடன் எதிர்பார்க்கவில்லை.

"Great, read it"

"It's in Jaffna Tamil, do you want to translate in English?"

"No, just read it as it is"

iHome கடிதத்தை வாசிக்கத் தொடங்கியது.

அன்புள்ள கோடனுக்கு,

இப்போதாவது தாத்தாவுக்கு கடிதம் எழுதத்தோன்றியதே!. நல்லது.

என் நாட்கள் நலமே கழிகின்றன. உனக்கும்தான். கூடியவிரைவிலேயே உனக்கது விளங்கத்தொடங்கும்.

கோடன், அப்பா அம்மாவின் பிரிவு உன்னை வருத்துவது விளங்குகிறது. ஆனால் ஒன்றைப்புரிந்துகொள். உன் அம்மாவும் அப்பாவும் பிரிந்தது அவர்கள் நன்மைக்கே. உன் அம்மா ஒரு நிலை கொள்ளாதவள். பருவக்காற்றோடு சுற்றித்திரிபவள். தனக்குள் அடையாளக் குழப்பங்களை ஏற்படுத்தி தன்னைத்தவிர்த்து பிறர்போல வாழ முயன்றவள். தன்னை பெரிய கோடாக்கவே கொஞ்சம் சிறிய கோடாக உன் அப்பாவை பார்க்க முயன்றாள். அவளுக்கு ஏதோ ஒரு விடுதலை தேவைப்பட்டது. ரெபெலியன் என்ற சொல்லின் அர்த்தத்தை அவசர அவசரமாக புரிந்துகொண்டு, அவசர அவசரமாக புரட்சி செய்து, அவசர அவசரமாக துணையை தேடி, அவசர அவசரமாக உன்னைப்பெற்று, அவசர அவசரமாக அப்பாவை தூக்கியெறிந்து என்று அவள் உலகம் எப்போதுமே அவசரமாகவிருந்தது.

வெள்ளி - 1

 

அத்தியாயம் - 1

velli1

“Ready?”

“Always”

கோடன் கட்டிலில் சாய்ந்திருந்தபடி கடிதத்தை சொல்லத்தொடங்கினான்.

Dear Thaththaa,

How are you doing?

Got your birthday card, the only card this time. It felt like going back to my vintage childhood days with you. Thanks ... for everything.

Thaththaa,
I have been longing to …

தாத்தாவுக்கு ஆங்கிலத்தில் கடிதம் அனுப்பினால் பிடிக்காது என்பது ஞாபகம் வந்தது. iHome கருவியிடம் கடிதத்தை  யாழ்ப்பாணத்தமிழுக்கு மொழி மாற்றச்சொன்னான்.

Go, Set A Watchman

இன்று "உலகம் முழுதும்" ஹார்ப்பர் லீ யின் "Go, Set  A Watchman" நாவல் வெளியாகிறது. புத்தகப்பிரியர்களுக்கு ஒரு பக்கம் கொண்டாட்டம். மற்றப்பக்கம் வயிற்றுக்கலக்கம். சில கடைகளில் வரிசையில்கூட மக்கள் நின்று வாங்கக்கூடும். ஹார்ப்பர் லீயின் முதல் நாவலான "To Kill A Mocking Bird" அறுபதுகளில் வெளியானது. வெளியான நாள் முதல் இன்று வரை அந்நாவல் ஏற்படுத்திய, ஏற்படுத்துகின்ற தாக்கம் கொஞ்சம் நஞ்சமில்லை. இப்போது அவருடைய் இன்னொரு நாவல் வெளியாகிறது என்ற ஆவல். ஐம்பத்தைந்து வருட காத்திருப்பு. சும்மாவா?

காத்திருந்த அற்புதமே

11350643_892693867490860_6937412206620419635_n

ரொபேர்ட் புரோஸ்ட் கவிதைகளை படிக்கும்போது கிடைக்கும் உணர்வுகளை எவரும் இலகுவில் விளக்கிவிட முடியாது. தனித்திருந்து மூழ்கி எழுந்தால் மாத்திரமே அர்த்தம் கொஞ்சம் புரியுமாப்போல இருக்கும். வாசிக்கும்போது நாமும் ரொபேர்ட்டோடு குதிரை வண்டியில் ஏறி உட்காரவேண்டியதுதான். பக்கத்திலேயே அவரும் அமர்ந்திருப்பார்.வண்டியை அமைதியாக ஓட்டுவார்.  பாதை போடுவது மாத்திரமே அவர் வேலை. எதுவுமே பேசமாட்டார். போகும் வழியை ரசிப்பது நம்மோடது. எப்போதாவது திடீரென்று ஒரு வசனம் சொல்லுவார். மற்றும்படி நீயே கவிதையை எழுதிக்கொள் என்று விட்டுவிடுவார். ஒரு நல்ல கவிஞன் வாசகனை கவிஞன் ஆக்குவான். ரொபேர்ட் புரோஸ்ட் தன் அத்தனை கவிதைகளிலும் அதனை செய்திருக்கிறார். தமிழில் நகுலன்அதை நிறையவே செய்திருக்கிறார். 

அது ஒரு இலையுதிர்கால பயணம். அறுவடை செய்யப்பட்ட விளை நிலங்கள், சோம்பலான பறவைகள்,  பச்சோந்திகளாக நிறம்மாறி மரம் பிரியும் பழுப்பு இலைகள் என்று காட்சிகள் விரியும். அவர் அமைதியாக இருப்பார். பயணத்தின்போது ஒரு மரம், தன் அத்தனை இலைகளையும் தொலைத்து, ஒரேயொரு இலையை மட்டும் கட்டிப்பிடித்துக்கொண்டிருந்தது. என்னை விட்டு போகாதே பிளீஸ் என்று இலையிடம் கெஞ்சியது. இலையுதிர்காலத்தின் இறுதி இலை. இதைவிட்டால் இனி வசந்த காலத்தில்தான்  மரத்தில் இலை துளிர்க்கும். நம் வண்டி வந்த சத்தம். ஒரு கண சலனம். இலை மரத்தைவிட்டு பிரிந்து விழுகிறது.  நாங்கள் அதையும் கவனித்தபடியே தாண்டிப்போகிறோம். மனதுள் நிறைய எண்ண அலைகள். ரொபேர்ட் புரோஸ்ட் இப்போது வாய் திறக்கிறார்.

"I end not far from my going forth"

அவ்வளவுதான். முழுக்கவிதையும் பளாரென்று முகத்தில் நம் அறையும்.

உனையே மயல் கொண்டு

 

_மயல்_கொண்டு__40494_zoom

சந்திரன் அவுஸ்திரேலியாவிலே விஞ்ஞான முதுமானி ஆராய்ச்சி மாணவனாக இருக்கிறான். மனைவி ஷோபா,  மிக இளம்வயதில் திருமணம் முற்றாக்கப்பட்டு, புகைப்படத்தில் பார்த்த சந்திரனை நம்பி அவுஸ்திரேலியாவுக்கு வந்திறங்கியவள். அவுஸ்திரேலியா வந்து இரண்டாம் வருடமே  குழந்தை.குழந்தைப்பேற்றோடு  ஷோபாவின் தாயும் தந்தையும்  வந்திணைகிறார்கள்.

குழந்தை பிறந்த சில நாட்களிலேயே ஷோபாவின் நடவடிக்கைகளில் மாற்றம் உருவாகிறது. மனம் ஒரு நிலையில் இல்லாமல் திடீரென்று அதி உச்ச கோபத்தையும் சமயத்தில் அதியுச்ச மகிழ்ச்சியையும் காட்டத்தொடங்குகிறாள். இது உடலுறவு வாழ்க்கையிலும் பிரதிபலிக்க ஆரம்பிக்கிறது. ஷோபாவுக்கே தன்னில் ஏற்படும் மாற்றம் புரிகிறது. தன்மீதான கழிவிரக்கம், கோபம் மேலும் அதிகரிக்கிறது.  

இந்தச்சமயத்தில் சந்திரன் ஜூலியா என்கின்ற நடுத்தர வயதுப் பெண்ணை சந்திக்கிறான்.  உதவி செய்கிறான். உறவு ஆரம்பிக்கிறது. ஜூலியா மூன்று முறை திருமணம் செய்து இப்போது தனித்திருப்பவள். இரண்டு பிள்ளைகள். இருவருமே பெரியவர்கள்.வயதுக்கு வந்த மகன் வீட்டில் இருக்கத்தக்கதாகவே ஜூலியா சந்திரனோடு உறவு கொள்கிறாள்.

சந்திர‌ன் ஷோபா, ஜூலியா என்ற இரு உறவுகளாலும் தடுமாறுகிறான். இந்த நிலையில் ஷோபாவுக்கு வந்திருப்பது பைபோலர் டிஸ் ஓர்டர் எனப்படும் மனவியாதி என்பது தெரியவருகிறது. வியாதிக்கு காரணம் ஷோபாவின் இளவயது யுத்த அனுபவங்கள். ஷோபா எண்பத்து மூன்று கலவரத்தின்போது கடுமையாக பாதிக்கப்பட்டவள். பின்னர்  யாழ்ப்பாணத்தில் டெலொவில் இணையும் அவள் தமையனையும் பலி கொடுக்கிறாள். இச்சம்பவங்கள் அவளின் ஆழ்மனதில் ஏற்படுத்தியிருக்கும் தாக்கம் இப்போது நோயாக வெளிப்படுகிறது. அவர்களின் வீட்டிற்கு மீளவும் ஷோபாவுன் பெற்றோர்கள் வந்து சேர்கிறார்கள்.  

ஷோபாவின் வியாதியை எப்படி அவளும் சந்திரனும் எதிர்கொள்கிறார்கள். இது சந்திரன் ஜூலியாவுக்கிடையான உறவில் என்ன தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்கின்ற வகையிலான உறவு மற்றும் உணர்வுச்சிக்கல்கள்தான் நாவலின் மீதிக்கதை.

“உனையே மயல் கொண்டு”