Skip to main content

Go, Set A Watchman

இன்று "உலகம் முழுதும்" ஹார்ப்பர் லீ யின் "Go, Set  A Watchman" நாவல் வெளியாகிறது. புத்தகப்பிரியர்களுக்கு ஒரு பக்கம் கொண்டாட்டம். மற்றப்பக்கம் வயிற்றுக்கலக்கம். சில கடைகளில் வரிசையில்கூட மக்கள் நின்று வாங்கக்கூடும். ஹார்ப்பர் லீயின் முதல் நாவலான "To Kill A Mocking Bird" அறுபதுகளில் வெளியானது. வெளியான நாள் முதல் இன்று வரை அந்நாவல் ஏற்படுத்திய, ஏற்படுத்துகின்ற தாக்கம் கொஞ்சம் நஞ்சமில்லை. இப்போது அவருடைய் இன்னொரு நாவல் வெளியாகிறது என்ற ஆவல். ஐம்பத்தைந்து வருட காத்திருப்பு. சும்மாவா?


To Kill A Mocking Bird, அமெரிக்காவின் தென் மாநிலங்களில் ஊறிப்போயிருக்கும் பழமைவாத பால், இன, நிற பேதங்களை ஒரு சிறுமியின் பார்வையில் எளிமையாகச் சொல்லும் நாவல்.

மேகோம்ப் என்கின்ற தென் மாநில சிறு கவுண்டி ஒன்றிலே ஸ்கவுட் எனும் சிறுமி, தன்னுடைய அண்ணன் மற்றும் தந்தையுடன் வாழ்கிறாள். தந்தை அத்திக்கஸ் ஒரு வழக்கறிஞர். கறுப்பினத்தவர் ஒருத்தர் வெள்ளையினப்பெண்ணை வல்லுறவு செய்ததான ஒரு பொய்க்குற்ற வழக்கில், அந்தக்கறுப்பினத்தவர் சார்பாக அத்திக்கஸ் வாதிடுகிறார். இதுதான் நாவலின் இழை. அதை வைத்து,  பலவித மனிதர்கள், அவர்களின் குணங்கள், வெள்ளையினத்துக்குள்ளே இருக்கும் உள் சாதிகள், பெண்களை அச்சமூகம் பார்க்கும் விதம், கறுப்பினத்தவரின் சமூக நிலை என்று வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவதுபோல கதை பல விசயங்களை கவர் பண்ணும். அவர்கள் வீட்டுக்கு அருகே பூ ராட்லி என்று ஒரு "விசரன்". அந்த ஊரில் அவனால் அப்படித்தான் இருக்கமுடியும். பூ ராட்லியை வைத்து ஹார்ப்பர் லீ பண்ணும் நுணுக்கங்கள் அபாரமானவை.

அத்திக்கஸ் தார்மீக நெறிகள் வழுவாத பக்குவப்பட்ட மனிதர். சமூக நீதிக்காக போராடுபவர். ஆனால் மாற்றம் என்பது ஒரு இரவில் வரப்போவதில்லை என்பதை புரிந்தவர். பல நூறு ஆண்டுகளாக புரையோடிப்போயிருக்கும் சிந்தனைகளை ஒரு அத்திக்கஸ் மூலம் மாற்றமுடியாது என்பதையும் தெரிந்து வைத்திருந்தார். அவசரப்பட்டு தாழியை உடைக்கமாட்டார். முரண்டுபண்ணி, எதிர்ப்போரை விலக்கிவைத்துவிட்டு  பின் எதிர்ப்போரையே திருத்துவதும் முடியாதது என்பதை அத்திக்கஸ் பிள்ளைகளுக்கு விளங்கவைப்பார். தன் குழந்தைகளுக்கு  அவர் நல்லது கெட்டது சொல்லிக்கொடுக்கும் பாணி பார்த்து பயிலவேண்டியது.  அத்திக்கஸ் நமக்கெலாம் ஒரு ரோல் மொடல்.



அத்திக்கஸ் மேகொம்ப் ஊருக்கு செய்ததையே "To Kill A Mocking Bird" நாவல் மொத்த அமெரிக்காவுக்கும் செய்தது என்று நினைக்கிறேன். நோகாமல் சொல்லவேண்டியதை சொல்லும் வித்தை ஹார்ப்பர் லீக்கு நன்றாகவே தெரியும். வாசிக்கும்போது சின்ன சலனம் வரும். நல்லவர்களாகக்கூட மாறிவிட மனம் உந்தும். அதுதான் நாவலின் வெற்றி. இது பதின்ம வயது சிறுவர்கள், பெற்றோர்கள் கட்டாயம் வாசிக்கவேண்டிய நாவல். உலகின் மிக முக்கியமான நூறு புத்தகங்களுக்குள் இலகுவாக உட்காரும் இந்நாவலுக்கு பிறகு வேறு எதையும் ஹார்ப்பர் லீ எழுதவில்லை. ஊடகங்களையும் விட்டு விலகியியே இருந்தார். இப்போது மனுஷிக்கு தொண்ணூறு வயது. தானும் தன்பாடுமாக இருப்பவர்.



"To Kill A Mocking Bird" எழுதுவதற்கு முன்னர் வேறு ஒரு நாவலை ஹார்பர் லீ எழுதி பதிப்பாளரிடம் கொடுத்திருக்கிறார். அது பதிப்பாளரை அவ்வளவு கவரவில்லை. அதில் வரும் இளம்பெண் ஸ்கவுட் பிஞ்ச்சின் சிறுவயது பருவத்தை மட்டும் நாவலாக எழுதுங்கள் என்று பதிப்பாளர் ஹார்பருக்கு சொன்னாராம். அதன்பின்னர் எழுதியதுதான் "To Kill A Mocking Bird".

இப்போது அந்த நிராகரிக்கப்பட்ட முதல் நாவலின் கை எழுத்துப்பிரதியை ஹார்ப்பர் லீயின் வழக்கறிஞர்கள் கண்டுபிடித்திருக்கிறார்கள். தங்க முட்டையிடும் வாத்து. தங்க முட்டை குஞ்சு பொரிக்க பயன்படாது, ஆனால் யாருக்கு வேண்டும்? தொண்ணூறு வயசு மனுஷியிடமும் குமுதம் ஜெயகாந்தனிடம் வைரமுத்து சிறுகதைக்கு வாழ்த்து வாங்கியதுபோல எப்படியோ எழுத்து அனுமதி வாங்கிவிட்டார்கள்.  அதன் விளைவுதான் இன்று வெளியாகப்போகும்,

"Go, Set A Watchman"

இந்த நாவலில் அத்திக்கஸ் பாத்திரம் சிதைக்கப்பட்டிருப்பதாக ஊடகங்கள் சொல்லுகின்றன. அவருடைய குணாதிசயம் கூட இதில் வேறு என்கிறார்கள். கொஞ்சம் டென்ஷனாக இருக்கிறது. நாவல் "To Kill A Mocking Bird" கட்டியமைத்திருக்கும் அத்தனை சித்திரங்களையும் கசக்கி எறிந்துவிடும்போல இருக்கிறது. ரகுமான் "முன்பே வா" பாட்டுக்கு ராப், குத்து என்று முதலில் போட்டு, பின்னர் வேண்டாமென்று மெலடியாக்கினார் என்று வையுங்கள். இப்போது அந்த குத்து வேர்ஷன் வெளியானால் எப்படி இருக்கும்?

"Go, Set A Watchman" வாசித்துவிட்டு சொல்கிறேன்!

Popular posts from this blog

அம்மாளாச்சி கொடியேற்றம்

பசித்தது. சமைக்கப் பஞ்சியாகவும் இருந்தது. அம்மாவுக்கு அழைப்பெடுத்தேன். இரவு உங்க என்ன சாப்பாடு? மரக்கறிதான். இண்டைக்கு அம்மாளாச்சிண்ட கோயில் கொடி. மறந்திட்டியா? அய்யய்யோ. அப்ப முட்டைகூட பொரிக்கமாட்டீங்களா?

பழக்கப்படுத்திக்கொள்ளு பாப்பா

‘ஓ ஜனனி, என் ஸ்வரம் நீ’ என்ற பாடலைத் தொண்ணூறுகளில் வானொலி கேட்டு வளர்ந்தவர்களுக்குத் தெரிந்திருக்கும். புதிய ராகம் திரைப்படத்துக்காக இளையராஜா இசையில் மனோ பாடிய பாடல் என்ற அறிவிப்பாளரின் குரல்கூட இக்கணம் இதனை வாசிக்கும் சில நேயர்களின் காதுகளில் கேட்கவும் கூடும். அதேபோல இரண்டாயிரமாம் ஆண்டளவில் சக்தி, சூரியன் எப்.எம் வானொலிகளைக் கேட்டவர்கள் ‘ஏதோ மின்னல், ஏதோ மின்னல்’ என்ற பாடலை மறந்திருக்கமாட்டார்கள். சபேஷ் முரளி இசையில் மாதங்கியும் திப்புவும் பாடிய பாடல் அது. அக்காலத்தில் ஈழத்து வானொலி நேயர்கள் மத்தியில் மிகப் பிரபலமாக இருந்த இப் பாடல் வெளிவந்த திரைப்படத்தின் பெயர் ‘ஆயிரம் பொய் சொல்லி’.

அயலும் உறவும்

ஊரிலே ஒரு வீடு திருமண நிகழ்வு ஒன்றுக்குத் தயாராகிறது. அந்த வீட்டின் இளைய பெண்ணுக்குத் திருமணம். வீடே திருவிழாக்கோலம் பூணுகிறது. ஒரு திருமண வீட்டின் அமளிகளை நாம் எல்லோருமே அனுபவித்திருப்போம் அல்லவா? அதுவும் நிகழ்வுக்கு முந்தைய சில தினங்கள் அங்கு நடக்கும் ஆயத்தங்கள்தான் உண்மையிலே ஒரு திருமணத்தின் முத்தாய்ப்பான கணங்கள் என்பது என் எண்ணம். சுவர்களுக்குப் பூச்சு அடிப்பது. வீட்டைக் கழுவித்  தரைக்குப்  பிழிந்த தேங்காய்ப்பூ போட்டுப் பாலிஷ் பண்ணுவது. கிணறு இறைப்பது. சுவர்களில் சோடனைகளைத் தொங்கவிடுவது. வெளியே சொக்கட்டான் பந்தல் போடுவது. சவுண்டு சிஸ்டம் ஒன்றை வாடகைக்கு எடுத்து காலையிலிருந்தே கோயில் திருவிழாக்கள்போல பாடல்களை ஒலிக்கவிடுவது. தூக்குக் கணக்கில் விறகுகளையும் பொச்சு மட்டைகளையும் வாங்கி இறக்குவது. பலகாரச்சூட்டுக்கென உறவெல்லாம் கூடுவது. பாத்திரங்களாலும் அடுப்புப்புகையாலும் ஊர் வம்புகளாலும் நிரம்பும் கொல்லைப்புறம். சிறுவர்களின் விளையாட்டுகளால் எழும் புழுதி. முற்றத்தில் சும்மா உட்கார்ந்து பத்திரிகை படித்தும், வெற்றிலை பாக்கு போட்டுக்கொண்டும் அரசியல் பேசும் பெரிசுகள். திருமணத்துக்குத...