கொட்டக் கொட்ட விழித்திருத்தல்


மழை, தந்தையிடம் ஏச்சு வாங்கிய மகளைப்போல இடைவெளி விட்டு இரவு முழுதும் விம்மிக்கொண்டிருந்தது. 

இப்போதெல்லாம் எலார்ம் அடிக்கமுதலேயே காலையில் எனக்கு நித்திரை கலைந்துவிடுகிறது. இன்றும் அப்படித்தான். ஐந்துமணி எலார்முக்கு நான்கே முக்காலுக்கே எழுந்துவிட்டேன். ஒரு சூடான தேநீரை ஊற்றிக்கொண்டு வரவேற்பறையில் வந்து அமர்ந்தேன். வெளியே அந்தச்சிறுமியின் அழுகை இன்னமும் நின்றபாடில்லை. நேற்று எழுதிமுடித்த சிறுகதையின் பிழைகளைத் திருத்தலாம் என்று அதனைத் திறந்தால், முதல் அடிக்குமேலே வாசிப்பு நகர்வதாக இல்லை. இதே சிறுகதையோடு அணு அணுவாக கடந்த இரண்டு வாரங்களின் காலைப்பொழுதுகளைக் கழித்திருக்கிறேன். ஆனால் எழுதி முடித்ததும் அதற்கு நான் ஒவ்வாமையாகிவிட்டேன். “சந்திரா என்றொருத்தி இருந்தாள்” கதையின் வரிகள்தாம் ஞாபகம் வருகின்றன.

காற்று வெளியிடைஎவ்வாறு மழையினை செம்புலம் ஏற்றதோ அதுபோல தலைவனை நம் சங்க இலக்கியத் தலைவியும் ஏற்றுக்கொள்கிறாள். நிலத்தைப் பெண்ணுக்கும் நீரை ஆணுக்கும் உருவகிப்பதில் ஓராயிரம் அர்த்தங்கள் உண்டு. நிலம் என்பது இங்கே மருதத்தை குறிப்பதாம்.

நீர் ஒரு நிலைப்பட்டதல்ல. இருக்குமிடத்தோடு அது தன் குணத்தையும் மாற்றிக்கொள்ளும். பனியாய் உறைந்து மலை உச்சியில் கிடக்கையில் அழகாய் அது பார்ப்பவரை ஈர்த்துக்கொள்ளும். நெருங்கிப்போனால் கணத்தில் நம்மையும் அது உறைய வைத்துவிடும். சரிவும் பொழிவும் பனியின் இயல்புகளாம். நீர் வானில் முகிலாய்த் திரண்டு நிலத்தின் பொறுமையையும் சோதிக்கும். அழும். கெஞ்சும். நிலத்தை அடைவதற்காக மழையாகவோ, ஆறாகவோ எப்படியோ அது வந்துசேர்ந்துவிடும்.

நீரின் கோபம் சமயத்தில் காரணமேயில்லாதது. தன்னைத்தாங்கும் நிலம்மீதே அது தன் கோபத்தை வெள்ளமாகவும் புயல்மழையாகவும் காட்டும். நிலம் பாவம். பொறுமையாய்க் காத்திருக்கும். நீர் அதனைத்தேடி வந்து கலக்கும்போது, உயிர்களெல்லாம் நிலத்தினின்று சிலிர்த்து எழும். ஆனால் அவற்றை ரசிக்கக்கூட மாட்டாமல் நீர் மீண்டும் கடலுக்கோ மலையுச்சிக்கோ சென்றுவிடும். திமிர். ஆணவம். நீருக்கு நிலம் ஒரு பொருட்டே இல்லை. அதற்கு நிலம் என்பது எப்போதுமே இரண்டாம் பட்சம்தான். தன் இச்சைக்கு அதனிடம் இணைந்துவிட்டு பின் அதுபாட்டுக்குப் பறந்துவிடும். பரந்து விரிந்த வானத்துக்கு தான் சொந்தக்காரன் என்ற இறுமாப்பு.
நிலத்தைப் பெண்ணுக்கும் நீரை ஆணுக்கும் உருவகிப்பதில் ஓராயிரம் அர்த்தங்கள் உண்டு.
நீருக்கு “வருண்” என்றும் ஒரு பெயர் உண்டு.
கறந்தபால் கன்னலொடு கலந்த நெய் என்றும் இதைச் சொல்லலாம். அல்லது,
காற்று வெளியிடை என்றும்.

ஸ்டூடியோ மாமா
நான்கு வருடங்களுக்கு முன்னர் ஒரு வியாழமாற்றத்தி்ல் “ஸ்டூடியோ மாமா” பற்றி எழுதியிருந்தேன். சென்றவாரம் கோபி அண்ணாவும் அவரின் நண்பர்களும் பேபி ஸ்டூடியோவுக்குப் போனசமயத்தில் மாமாவைக் கண்டிருக்கிறார்கள். கூடவே நான் எழுதியதும் ஞாபகம் வந்து அவருக்கு இதை வாசித்துக் காட்டியிருக்கிறார்கள்.

“I met the baby studio owner and told him about the blog. When I showed him he was in tears. Especially when he heard that he was like Ilayaraja”

வட்ஸ்அப் மெசேஜை வாசித்தபோது சிரிப்பு, நிறைய அந்தரம், பயங்கர சந்தோசம் ஏற்பட்டது. கோபி அண்ணாவுக்கு நன்றி. இளையராஜாவின் இரண்டு படங்களையும் அண்ணர் எடுத்து அனுப்பியிருந்தார்.
அந்தப்பதிவு மீண்டும்.

வெற்று முரசு


சில மாதங்களாகவே லியோ டோல்ஸ்டாயின் நாட்டார் சிறுகதை ஒன்று என்னை அலைக்கழித்துக்கொண்டிருந்தது. அதுபற்றி ஒரு கட்டுரை எழுதிக்கொண்டிருக்கையில்தான் கோமகன் அண்ணாவின் ஞாபகம் வந்தது. அவருடைய நடு சஞ்சிகைக்கு கட்டுரை எழுதித்தருமாறு கேட்டு மாதக்கணக்கில் கொடுக்கவில்லை. இதைக்கொடுக்கலாம் என்று தோன்றியது.
“நடு”. பிரான்சிலிருந்து வெளிவருகின்ற காலாண்டு இலக்கிய சஞ்சிகை. பிரான்சிலிருந்து என்று சொல்வது தேவையற்றது. கோமகன் அண்ணா எங்கிருந்தாலும் அங்கிருந்து “நடு” வெளிவரும் என்று நினைக்கிறேன். முழு முயற்சியும் அவருடையதுதான். தளத்தை மதுரன் வடிவமைத்துக்கொடுக்கிறார். எழுத்தாளர்களை அணுகிக் கட்டுரை கேட்பது, ஞாபகமூட்டுவது, மீள ஞாபகமூட்டுவது, பண்பாக ஞாபகமூட்டுவது, மரியாதையுடன் ஞாபகமூட்டுவது, எரிச்சலுடன் ஞாபகமூட்டுவது, கோபத்தைக்காட்டாமல் ஞாபகமூட்டுவது, ஆக்கம் கிடைத்தபின் எழுத்துப்பிழைகள் திருத்துவது, கொஞ்சம் அப்படி இப்படி இருந்தால் இதை எப்படி வெளியிடாமல் தவிர்ப்பது என்று குழம்புவது, தொகுப்பது, வெளியானபின்னர் எழுதியவர்கள் கொடுக்கும் அலப்பறைகளை சமாளிப்பது! என்று ஒவ்வொரு வெளியீடும் கோமகன் அண்ணாவுக்கு கொல்லக்கொண்டுபோவதுபோலத்தான். எது இவரை, இவரைப்போன்ற சிறுபத்திரிகை ஆசிரியர்களை இயக்குகிறது என்று சரியாகத்தெரியவில்லை. ஏதோ ஒரு சின்னத் தணல் எங்கோ ஒரு மூலையிலிருந்து இவர்களைத் தொந்தரவு செய்துகொண்டே இருக்கும். பிறப்பிலிருந்து அந்தத்தணல் கூடவரும். அதுதான் வாசிக்க வைப்பது. எழுத வைப்பது. செயற்பட வைப்பது. கோமகன் அண்ணாவின் தணல் இலக்கியவெளியில் அடிக்கிற பருவமழைகளுக்கும் குளிருக்கும் தணியாமல் எரியட்டும்.