ஸ்டூடியோ மாமா

Apr 5, 2017நான்கு வருடங்களுக்கு முன்னர் ஒரு வியாழமாற்றத்தி்ல் “ஸ்டூடியோ மாமா” பற்றி எழுதியிருந்தேன். சென்றவாரம் கோபி அண்ணாவும் அவரின் நண்பர்களும் பேபி ஸ்டூடியோவுக்குப் போனசமயத்தில் மாமாவைக் கண்டிருக்கிறார்கள். கூடவே நான் எழுதியதும் ஞாபகம் வந்து அவருக்கு இதை வாசித்துக் காட்டியிருக்கிறார்கள்.

“I met the baby studio owner and told him about the blog. When I showed him he was in tears. Especially when he heard that he was like Ilayaraja”

வட்ஸ்அப் மெசேஜை வாசித்தபோது சிரிப்பு, நிறைய அந்தரம், பயங்கர சந்தோசம் ஏற்பட்டது. கோபி அண்ணாவுக்கு நன்றி. இளையராஜாவின் இரண்டு படங்களையும் அண்ணர் எடுத்து அனுப்பியிருந்தார்.
அந்தப்பதிவு மீண்டும்.


ஸ்டூடியோ மாமா


பேபி ஸ்டூடியோ மாமா. இந்த பெயர் திருநெல்வேலியை சேர்ந்த எவருக்கும் இலகுவில் மறந்துபோய் இருக்காது. கூலிங் கிளாஸ். வெள்ளை வேட்டி. வெள்ளை ஜிப்பா. தூரத்தில் பார்த்தால் இளையராஜா சைக்கிளில் வருவதுபோல இருக்கும். இராமநாதன் வீதியில் பழைய நிதர்சனத்துக்கு முன்னாலே நீண்ட காலமாக “பேபி ஸ்டூடியோ” என்ற கடையை நடத்தி வந்தவர். ரெண்டு பொம்மர் அடியோடு பரமேஸ்வரா சந்திக்குப் போய்விட்டார். அப்புறமாக ஆலடிச்சந்திக்கு போனவர் என்று நினைக்கிறேன். பின்னர் அவர் எங்கெங்கெல்லாம் போனார் என்பது மறந்துவிட்டது. ஆனால் அவர் கமராவும், பிளாஷும் அதில் செய்யும் சாகசங்களும் ஞாபகம் இருக்கிறது.

ஊருலகத்தில் எந்த நிகழ்ச்சி என்றாலும் பேபி மாமா வந்தாகவேண்டும். மாமா வந்து போட்டோ பிடிக்கும் வரைக்கும் மாப்பிள்ளை தாலியும் கையுமாய் வெயிட் பண்ணுவார். பிறந்த பிள்ளைக்கு பெயர் வைக்கமாட்டார்கள். செத்தவீட்டில் பிரேதம் எடுபடாது. வெளிநாட்டு மாப்பிள்ளைகளுக்கு பெஃயார் அண்ட் லவ்லி பெண்கள் சேலைத்தலைப்பை முன்னுக்கு ஒரு கையால் நைசாகப் பிடித்துகொண்டு அசட்டுச்சிரிப்பு சிரிக்கும் படங்களும் போயிருக்காது. சாமத்தியப்பட்ட பெண்கள் எல்லோரும் இவர் வந்து கமராவில் படம் பிடிக்கும்போதுதான் முதன்முதலாக வெட்கப்படுவார்கள்.

எங்கேயாவது கலியாணவீடு, சாமத்தியவீடு என்றால் மாமா காலையிலேயே வந்துவிடுவார். அனேகமாக தோட்டத்தில் தெரியும் செம்பரத்தை, பார்பட்டன்ஸ் வீட்டுப்படலையின் இரண்டு பக்கமும் கட்டப்பட்டிருக்கும் வாழைக்குலைகள் என்று ஷூட்டிங் ஆரம்பித்து உள்ளே போய், இரண்டு மூன்று டெக்கரேஷன் எடுத்துவிட்டுத்தான் பொம்பிளை உட்கார்ந்திருக்கும் ட்ரஸ்சிங் டேபிளுக்கு வருவார். முன்னாலே பதினாலு வயசு சரோ காஞ்சிபுரம், கனகாம்பர சடை, ஒட்டியாணம், அட்டியல், பதக்கம் சங்கிலி, முகத்தில் சிவப்புக்கலர் வியர்வை என்று ஒரு மார்க்கமாக நிற்பாள். கமரா பிளாஷ் இரண்டு அடிக்க முதலே பிளவுஸ் கமர்கட்டு தொப்பலாய் நனைந்துவிடும். அடிக்கடி மேக்கப் அக்கா லேன்ஜியால் சரோவின் முகத்தை டச்சப்பண்ணியபடி இருப்பார். சரோவை இப்போது சின்னத்தம்பி குஷ்புவாக்கவேண்டிய கட்டாயத்தோடு மெல்லிதாய் சிரிக்கச் சொல்லுவார் ஸ்டூடியோ மாமா.

அப்பெல்லாம் கமரா என்றாலே பிலிம்கமராதான். பிலிம்ரோலில் கொடாக் கொனிக்கா என்று கொஞ்ச பிராண்டுகள் இருந்தன. கொடாக் ரோலை விட கொனிக்கா ரோல் நல்லது என்பார்கள். முன்னதில் 28 படங்களும் பின்னதில் 36 படங்களும் எடுக்கலாம் என்று ஒரு ஞாபகம். ஒரு சாமத்திய வீட்டுக்கு இரண்டு ரோல் எடுபடும். கல்யாணவீடு என்றால் மூன்று நாலுவரை எடுப்பார். பின்னர் பில்ம் ரோலை கிளாலி, ஓமந்தை தாண்டி கொழும்புக்கு அனுப்பி கழுவி எடுத்து, படம் கைக்கு வந்து சேர எப்படியும் மூன்று நான்கு மாதம் பிடிக்கும். ஒரு பிரவுன் என்வலப்பில் மாமா கொண்டுவந்து கொடுப்பார். ஒரிஜினல் முப்பது ரூபாய். கொப்பிக்கு பதினைஞ்சு ரூபாய். அந்த காலத்தில இப்பிடி ஏதும் நிகழ்ச்சி என்றால் ஆளாளுக்கு ஒரு அல்பத்தை கொண்டுவந்து பரிசளிப்பார்கள். அதற்குள் பெரிதான ஒன்றை எடுத்து இந்த படங்களை பஞ்சு வைத்து போட்டு பார்த்தால் … மாமாவின் படங்கள் கிறிஸ்டல் கிளியராகத் தெரியும். அந்தக்காலத்தில்கூட ஒன்றிரண்டு கறுப்பு வெள்ளை படங்களையும் மாமா எடுப்பார். கலரே இல்லாம ஆளோட கரக்டர் மட்டுமே தெரியும் போர்ட்ரெயிட் படங்கள். கறுப்பு வெள்ளையில் தூக்கிக்காட்டும் என்றும் அவருக்குத்தெரியும்.

ஹீ வோஸ் எ ஜீனியஸ்.

&&&&&&&&&&&&&&

Contact Form