என் கொல்லைப்புறத்து காதலிகள் : சூப்பர் ஸ்டார்!

 

கையில் கமரா. பிங்க் கலர். மேலே ஒரு பட்டன் இருக்கும். அமத்தினால் “பிய்ச் பிய்ச்” என்று தண்ணி சீரும்! கிணற்றடிக்கு இரண்டு படிக்கட்டுகள். ஒரு எட்டு எட்டினால் தோய்க்கிற கல்லு. மூன்றடி உயரம். அப்படியே ஒரு கை ஊன்றி டைமிங்குடன் ஜம்ப் பண்ணி நிற்கவேண்டும். அக்கா குசினிக்குள் இருந்து “டேய் தோய்க்கிற கல்லு, வழுக்கும், விழுந்து கிழுந்து எதையும் தேடிக்கொண்டு வராம, கால கைய வைச்சுக்கொண்டு சும்மா இரு!”. போன வருஷம் நல்லூரில் எட்டாம் திருவிழாவுக்கு வாங்கிய நீலக்கலர் ஐஞ்சு ரூபாய் கூலிங் கிளாஸ். அப்பிடியே ஒரு சுழற்று சுழற்றிக்கொண்டே போட்டுக்கொண்டு, ஒரு காலை சின்னதாக மடித்து மற்றக்காலில் ஊன்றிக்கொண்டு வானத்தை ஒரு ஆங்கிளில் பார்த்துக்கொண்டே இருக்க பாட்டு ஆரம்பிக்கும்! 1276894408724

சிலு சிலுவென குளிரடிக்குது அடிக்குது,
சிறு அரும்புகள் மலர் வெடிக்குது வெடிக்குது
வனம் விட்டு வனம் வந்து மரங்கொத்தி பறவைகள்
மனம் விட்டு சிரிக்கின்றதே!

இப்போது தலைவர் கீழே குனிந்து மண்ணை மக்களை பார்க்கிறார். அம்மா தோயச்சு ஊத்தின சவர்க்கார தண்ணி பூங்கன்றுக்கு போகாதவாறு வேறு இடத்துக்கு பாத்தி மாற்றப்பட்டு இருந்தது. வெள்ளை நுரை தள்ளியது. இடை நடுவில் ஒரு குட்டி மஞ்சள் நிற சன்லைட் துண்டு வாய்க்காலில் சிக்கியிருந்தது. இன்னும் தள்ளி ஒரு லைப்போய் துண்டு.

நீரில் மெல்ல சிறு நெத்தலி துள்ள
நீரோடை தாயை போல வாரி வாரி அள்ள
நீல வானம் அதில் எத்தனை மேகம்
நீர் கொண்டு காற்றில் ஏறி நீண்ட தூரம் போகும்.

சுற்றி சுற்றி கமராவில் கிளிக்கிவிட்டு அதை கழுத்தில் போட்டவாறே ஒரே ஜம்ப்! கால் ஊன்றி நிமிரும்போது ஒரு கை அப்படியே ஸ்டைலாக தலையை கோதிக்கொண்டே கோழிக்கூட்டை பார்த்தால், பக் பக் பக் என்று அடைக்கொழி இரண்டு, மூலையில் தனியனாக ஒரு சேவல் தூங்கிக்கொண்டு, தாய்க்கோழி ஒன்று செட்டைக்குள் பதினைந்து குஞ்சுகளுடன் ரெஸ்ட் எடுத்துக்கொண்டு, …

தூறல் உண்டு மலைச்சாரலும் உண்டு!
பொன்மாலை வெயில் கூட ஈரமாவதுண்டு

தோட்டம் உண்டு கிளிக்கூட்டமும் உண்டு
கிள்ளைக்கும் நம்மைப்போல காதல் வாழ்க்கை உண்டு

நானந்த கிள்ளை போலே வாழ வேண்டும்!
வானத்தில் வட்டமிட்டு பாடவேண்டும்!


சேவல் இப்போது முழித்து இறக்கை அடிக்கிறது. நான் வந்தால் வாழைக்குருத்து கொடுப்பேன் என்று அதுக்கு தெரியும்!

எண்ணம் என்னும் சிட்டு தான் இறக்கை கட்டிகொள்ளாதா?
எட்டு திக்கும் தொட்டுதான் எட்டிப்பாய்ந்து செல்லாதா?
என் மனம் துள்ளுது, தன் வழி செல்லுது வண்ண வண்ண கோலம்!

இந்த காட்சி நடந்து இருபத்திரண்டு வருஷங்கள். இந்த இருபத்திரண்டு வருஷங்களில் அவர் மீது இருக்கும் அந்த ஒப்செஷன் கொஞ்சம் கூட குறையாமல் மேலும் மேலும் எங்கிருந்து அந்த கவர்ச்சி வருகிறது என்று இன்னுமே ஆச்சரியப்படுத்திக்கொண்டே இருக்கும், ஒரே நிலா, ஒரே சூரியன் … ஒரே சூப்பர் ஸ்டார் .. ரஜனிக்காந்த் தான் இன்றைய கொல்லைப்புறத்து காதலி.

நான் முதன் முதலில் தியேட்டர் என்ற ஒன்றுக்கு போய் பார்த்த படமும் தலைவர் படமே. 1990ம் ஆண்டளவில், மன்னார் அன்டி குடும்பத்துடன் மோரிஸ் மைனர் டாக்சியில் எல்லோருமாய் யாழ்ப்பாணம் மனோகரா தியேட்டரில் பார்த்தது “ராஜா சின்ன ரோஜா”.  கார்ட்டூன் எல்லாம் மிக்ஸ் பண்ணி ஒரு பாட்டு வரும். “நன்மை ஒன்று செய்தீர்கள் நன்மை விழைந்தது, தீமை ஒன்று செய்தீர்கள் தீமை விழைந்தது. தீமை செய்வதை விட்டுவிட்டு நன்மை செய்வதை தொடருங்கள்”. பார்த்துவிட்டு இரண்டொரு நாளுக்கு தீமை செய்யாமல் நன்மையே செய்துகொண்டிருந்தேன் என்றால் நம்ப மாட்டீர்கள்.

அந்தக்காலத்தில் ஜெனரேட்டர் வாடகைக்கு எடுத்து படம் பார்க்கும் ஒவ்வொரு தடவையும் ரஜனி படம் இருந்தே தீரும். தளபதி, உழைப்பாளி, பாண்டியன், மன்னன், அண்ணாமலை, வீரா என முதல் படமாக போடுவது தலைவர் படமே. இரண்டு தெரு தள்ளி வீரா படம் போடுகிறார்கள். அதே இரவு கலட்டி எச்சாட்டி மகாமாரியம்மன் கோயிலில் சாந்தன் கச்சேரி. எனக்கு சாந்தன் கச்சேரி என்றால் கொள்ளை பிரியம். ரஜனி படமும் மிஸ் பண்ண முடியாது. படம் தானே எப்போது வேண்டுமென்றாலும் பார்க்கலாம் என்று நினைத்துக்கொண்டு கலட்டி சந்தி தாண்டியிருப்பேன். கருமம் பிடிச்ச “கொஞ்சி கொஞ்சி” திரும்ப திரும்ப ஞாபகத்துக்கு வந்துகொண்டிருக்கவே, சாந்தனுக்கு டாடா, சைக்கிள் யூடேர்ன்.

 

Muthu95இல் இடம்பெயர்ந்து பளையில். நவம்பர் அளவில் தான் முத்து பாடல்கள் வெளியாகி இருந்தன. நாங்கள் இருந்த வீடு பளைச்சந்திக்கு அருகில். வாராவாரம் விறகு பொறுக்க உள்ளே காட்டுப்பகுதிக்குள் போகவேண்டும். பளையில் இருக்கும் காட்டுப்பகுதி வித்தியாசமானது. குருமணல், பனைமரங்கள், சவுக்கு மரங்கள் திடீரென்று நல்ல தண்ணி தேக்கம், சேனைத்தோட்டம், காட்டுப்பன்றிக்கு சுடுகளம் என போகும்வழியில் எல்லா விஷயங்களும் இருக்கும். என் சைக்கிள் பின்னால் சவுக்கு விறகு கட்டிக்கொண்டு மிதிக்கும் போது இயல்பாகவே மைண்டில் “ஒருவன் ஒருவன் முதலாளி” ஆரம்ப இசை ப்ளே பண்ணும். தலைவரே விறகு எடுத்துக்கொண்டு போவதாக எண்ணம். அப்புறம் என்ன? மண்டி என்ன? மணல் என்ன? சும்மா ஈஸ்டேர்ன் சைக்கிள் ஜிவ்வென்று பறக்கும்.

வன்னியில் இருக்கும் போது புவனேந்திரன் அண்ணா ஒருமுறை வந்து சொன்னார். “தம்பி முத்து படமும் இருக்கு, தண்ணி மாதிரி கொப்பி, பாஷா படமும் இருக்கு, எது பார்க்கலாம்?”. உடனே முத்து என்றேன். முத்துவுக்கு ரகுமான் இசை. குளுவாலிலே உதித்துக்கு தலைவர் எப்படி  நடித்திருக்கிறார் என்று பார்க்கவேண்டும். எனக்கு பாஷா படம் பற்றி பெரிதாக தெரியாது. ரஜனியின் சாதாரண இன்னொரு படம் என்றே நினைத்திருந்தேன். ஆனால் அன்றைக்கு இரவு ஏனோ தெரியாது, பாஷா தான் போட்டார்கள். “உள்ளே போ” என்று தம்பியை அனுப்பிவிட்டு அந்த ரவுடி இந்திரன் மூஞ்சியை பார்க்காமலேயே தலைவர் அடிக்க அடிக்க, இங்கே சுதி ஏறியது. மூலையில் உட்கார்ந்திருந்த தாத்தா ஒருவர் “அப்பிடித்தான் .. அடிடா அவன, மயிராண்டி” என்று திட்ட வெத்திலை எச்சில் இந்திரனின் இரத்தத்தோடு பறந்தது. “ஹே ஹே ஹே ஹே .. நல்லவங்கள ஆண்டவன் சோதிப்பான்.. ஆனா கைவிடமாட்டான், கெட்டவங்களுக்கு ஆண்டவன் அள்ளிக்கொடுப்பான், ஆனா கைவிட்டிடுவான்” வசனம் அப்போதெல்லாம் சொல்லாத நாளே கிடையாது. தூர்தர்ஷனில் ரஜனியில் பேட்டி ஒன்று கூட அப்போது வெளியாகியது. வாசகர் கேள்விகளுக்கு அவர் பதில் அளித்த பேட்டி. “கலாதியான” பேட்டி இன்றும் பசுமையாய்.

பெரியவனாக வளர்ந்த பின்னர், ரஜனி படம் பார்த்தால் matured இல்லை! இன்னும் logic இல்லாத படங்களையே பார்த்துக்கொண்டு இருப்பதா? கமலை பார்! என்ன ஒரு methodical acting. கமல் போல வித்தியாசமான கதைகளை ரஜனியால் செய்யமுடியாது. மகாநதி படத்தில் அந்த பிள்ளை தூக்கத்தில் பிதற்றும்போது அழும் அழுகையை ரஜனி ட்ரை பண்ண கூட முடியுமா? சும்மா மக்களை ஏமாற்றிக்கொண்டு … என்று பத்து வருஷமாக எனக்கு அட்வைஸ் பண்ணாத நண்பர்கள் இல்லை! எல்லோருக்கும் ஒரே பதில் “Go to hell“.

காதல் என்றால் ரஜனி தான். பதினேழு தாண்டிவிட்டது. ஓரளவுக்கு “வயசு” வந்துவிட்டது. காதலிக்கும் பருவம். எந்த பெண் சும்மா பார்த்து சிரித்தாலும் அடுத்த நிமிஷம் காஷ்மீர் கொட்டும் பனியில் அவளை சேலை கட்டி ஆடவிட்டு, சுற்றி சுற்றி வந்து “காளிதாசன் காண வேண்டும் காவியங்கள் சொல்லுவான். கம்ப நாடன் உன்னை கண்டு சீதை என்று சொல்லுவான்” என்று அப்படியே கம்பளியை விசிறிக்கொண்டே பாடும் வயசு! குமாரசாமி வீதியால் போகும் போது பாட்டு தொடங்கும். பாடும்போது ரோட்டை தல பார்க்கமாட்டார். மரம் செடி கோடி, வானத்தில் குருவி பறந்தால் அது! கமராவை பார்க்ககூடாது இல்லையா? மாதவி வேறு வெள்ளை பஞ்சாபியில் குறுக்கும் நெடுக்கும் நடந்து போக, “என்னை நான் தேடி தேடி, உன்னிடம் கண்டுகொண்டேன்!” என்று யாருடையதாவது வீட்டு மதிலுக்கு மேலால் எட்டிப்பார்க்கும் காகிதப்பூவை புடுங்கி எறிந்துகொண்டே …. இப்போது இங்கே மெல்பேர்னில் கூட வீட்டு முற்றத்துக்கு போனால் பூக்களை இறைந்துகிடக்கும்!

தர்மத்தில் தலைவன் படத்தில் சுகாசினியுடன் தல செய்யும் ரொமான்ஸ். “முத்தமிழ் கவியே வருக” , ரஜனி காதல் காட்சிகளில் எப்போதும் ரிலாக்ஸாக இருப்பார். மிகவும் கஷுவலாக அசைவுகள் ரிதமிக்காக, முகம் திருப்பினால் கூட அதிலே ஒரு கட் இருக்கும். நடக்கும் போது ஒவ்வொரு ஸ்டெப்புக்கும் உடல், ஊன்றியுள்ள கால் பக்கம் தன்னாக விழும். அது இயல்பாக ரஜனி செய்வது. தனித்துவ ஸ்டைலாக மாறிவிட்டது.  அந்த நெருப்பு இன்றைக்கும் இருக்கிறது. சிவாஜியின் “சகானா சாரல் தூவுதோ” பாடல். கண்ணாடி மாளிகை. கோடிக்கணக்கில் செலவழித்து செட். காட்டுவதற்கு இனி ஒன்றுமே இல்லை என்னுமளவுக்கு ஸ்ரேயா! இத்தனையிருந்தும் எத்தனை தடைவை பார்த்தாலும் யாராவது ஒருத்தருக்காவது… ஒருத்தருக்காவது ரஜனியை விட்டு கண் வேறு எங்கேயாவது போவதுண்டா? “பூக்களின் சாலையில் பூவுனை ஏந்தியே” என்று மிக வேகமாக ஸ்டெப் போட்டுவிட்டு “வானுக்குள் நடக்கட்டுமா?” என்று டிப்பிகல் ரஜனி நடை ஸ்டைலாக தொடங்குவார். வேறு எவண்டா இப்பிடி நடிப்பான்? அமிதாப் நடித்த சீனிகம் திரைப்படத்தை மட்டும் தமிழில் ரஜனியை வைத்து எடுத்தால், ரஜனி இதுவரை நடித்த அத்தனை படங்களையும் தூக்கி சாப்பிடும் என்பது நிச்சயம். ரஜனிக்கு அந்த நம்பிக்கை இன்னும் வராதது சோகமே! காதல் காட்சிகளில், அதுவும் இயல்பான மெலடிகளில் ரஜனி அளவுக்கு காதல் செய்யக்கூடியவர் ஒரே ஒருவர் தான் இருக்கிறார். அவர் தான் இரட்டை வேடத்தில் ரஜனி நடிக்கும் போது வரும் ரெண்டாவது ரஜனி!

 

 

 

 

 

 

 

அகராதியில் நல்ல நடிகன் என்றால் அவனுக்கு நகைச்சுவை இயல்பாக வரவேண்டும். வலிந்து வரக்கூடாது. விக்ரம் சூர்யா போன்ற நடிகர்களின் நகைச்சுவைகள் வலிந்து வருபவை. தங்களாலும் முடியும் என்று ப்ரூவ் பண்ணுவதற்காக செய்யும் வேலை அது. ஆனால் ரஜனி கமல் போன்ற நடிகர்களிடம் இந்த நகைச்சுவை இரத்தத்தில் இருக்கிறது. அதுவும் தலைவர் “வெருள” ஆரம்பித்தால் அன்றைக்கு வயிற்று வலிதான். தில்லு முல்லுவில் ஆரம்பித்த அந்த நகைச்சுவை, ரஜனியின் ட்ரேட்மார்க் ஆகிவிட்டது. ரஜனியும் கவுண்டமணியும் மன்னனில் அந்த தியேட்டருக்கு போகும் காட்சி one of the all time best. குருசிஷ்யனில் ரஜனி செய்யும் அழும்பு கொஞ்சம் நஞ்சமில்லை. இந்த லொள்ளு சந்திரமுகி வரை தொடர்ந்தது!

 

 

 

 

 

 

 

ரஜனிக்கு methodical acting தெரியாது என்றில்லை. ஆனால் அவர் அதை எப்போதும் தவிர்த்து வந்திருக்கிறார். அது செய்ய நிறைய பேர் இருக்கிறார்கள், என் வழி தனி வழி என்பது தான் அவர் பிலோசபி! ஆனாலும் அவ்வப்போது அது வெளியே வரும். முள்ளும் மலரும் காளி அந்த வகை.  ஒரு உணர்ச்சி மேல்வயப்படும் பாசக்கார கோபக்கார அண்ணன், தங்கை மேலதிகாரி என்று சுற்றும் கதை. ரஜனியின் நடிப்பு அபரிமிதம். சுயகௌரவம், அண்ணன் பாசம், கையிழந்த சோகம், ஆனால் அதை வெளிக்காட்டாத பிடிவாதம் என ரஜனி காட்டும் உணர்ச்சிகள் hall of fame ரகம்.  “கெட்ட பையன் சார் அவன்” என்றும் சொல்லும் போது வாய் சிரிக்கும், கண் அழும் ..  Genius!

இன்றைய திகதியில், ரஜனியின் சிறந்த படம் என்று கேட்டால், without a doubt, தளபதி தான். மணிரத்னமும் ராஜாவும் .. மம்முட்டியும் கூட அதற்கு கொஞ்சம் காரணம் என்றாலும், ரஜனி இல்லாத தளபதியை யாராலும் அவ்வளவு அழகாக எடுத்தே இருக்க முடியாது. Controlled aggression வகை நடிப்பு. நிறைய டைமிங் பிரேக் விட்டு விட்டு திடீரென்று சீறிப்பாயும் வசன நடை.  இந்த முதல் ஐந்து நிமிட க்ளோஸ் அப்  காட்சியில் எத்தனை உணர்வுகள். எப்படியான ஒரு டயலாக் டெலிவரி. அவரின் கண்கள் ..  டைமிங் … நடிகன்டா!

2007 ஜூன் பதினாலு! வியாழக்கிழமை. ஒரு கிழமையாகவே இன்று வருது, நாளை வருது என்று அட்வான்ஸ் புக்கிங் விசாரித்து கிடைக்கவில்லை. இன்றைக்கு நிஜமாகவே வெளியாகிறது. கஜனிடம் கேட்டால் வேலை, ஆறு மணி ஷோ கஷ்டம் என்றான். கண்டறியாத வேலை! லஞ்ச் டைம் போய் டிக்கட் முட்டி மோதி வாங்கியாச்சு. நான்கு மணிக்கே அலுவகத்தில் இருந்து வெளியேறி சிங்கப்பூர்  ஈஷூன் திரையரங்கில் நுழைகிறேன். அள்ளு கொள்ளை சனம். ஏற்கனவே டிக்கட் வைத்திருந்தாலும் உள்ளே நுழையவே கியூ. நுழைந்து இருக்கையின் இருந்தால் முதல் பத்து நிமிடங்களுக்கு பூ மாரி பொழிகிறது. வெடி கூட கொழுத்தினார்கள். சிங்கப்பூரிலுமா என்று முதலில் ஒரு வெறுப்பாக தான் இருந்தது. இவங்களுக்கெல்லாம் ஒரு வேலை வெட்டி இல்லையா!? படம் கொஞ்சம் கொஞ்சமாய் சூடு பிடித்து ஒரு சீன் வரும். தெருவோரம் ரஜனி எல்லாமே இழந்து ஒரு ரூபாய் நாணயத்தை வைத்துகொண்டு, “பூ விழுந்தா பூப்பாதை, தலை விழுந்தா சிங்கப்பாதை” என்று சொல்லிக்கொண்டே அப்படியே சுண்டுவார். விழுந்தது தலை! அப்படியே சிங்கப்பாதைடா என்று சீறும்போது போது தலையின் ஹேர்ஸ்டைல் மாறி சிலிர்த்து நிற்கும். யார்? எங்கே? வயது? எந்த யோசனையும் இல்லாமல் பாய்ந்து எழுது கைதட்டிக்கொண்டே இருந்தேன். விசில் அடிக்க தெரியாதது வெட்கமாக இருந்தது! Brilliant action. அடுத்த சீனில் வந்த பஜ்ஜி சீன் போல, ரஜனியின் ஸ்டைலுக்கு நிகரான சீன் முன்னமும் வரவில்லை. இனியும் வருமா என்றும் தெரியவில்லை.

 

 

 

 

 

 

 

ரஜனி என்ற தாரகமந்திரத்தை அதிகம் உச்சரிக்காமல் தன் கதை திரைக்கதையை நம்பி ஷங்கர் எடுத்து நோண்டியான படம் தான் எந்திரன். ரஜனி படத்தில் என் போன்ற ரசிகர்கள் தேடுவது ரஜனியை தான். ரஜனி ஸ்பெஷலை தான். ஆனானப்பட்ட மணிரத்னம் போன்ற இயக்குனர்களே அதை புரிந்து அதற்கேற்ற கதை திரைக்கதை அமைத்து தங்கள் அடையாளத்தையும் காட்டினார்கள். சிவாஜியில் அதை சரியாக செய்த ஷங்கர் over confidence ஆல் எந்திரனில் சொதப்பிவிட்டார். இதே தவறே குசெலனிலும் நிகழ்ந்தது. சந்திரமுகியிலும் நிகழ்ந்தது. முள்ளும் மலரும் என்றால் என்ன? பாஷா என்றால் என்ன? கதையின் சென்டர் பாயிண்ட் ரஜனியாக தான் இருக்கவேண்டும். இருந்தால் அது எப்போதுமே கிளாசிக் தான். பக்கா ஸ்லோவாக போகும் ஆறிலிருந்து அறுபதுவரை கூட ரஜனி என்ற ஒரு நடிகனால் தான் பார்க்கக்கூடியதாக இருந்தது.  ஆனாலும் ரஜனி படத்தில் கதையே இல்லை,  நம்பவே முடியாத action என்பவர்கள் எல்லாம் “சச்சின் எல்லாம் ஒரு பட்ஸ்மனா? இவனெல்லாம் டீமுக்காக விளையாடுபவனா? ஆஸ்திரேலியாவுடன் அடிப்பானா?” என்று திட்டிக்கொண்டே வேலைக்கு லீவு பொட்டு மாட்ச் பார்க்கும் இன்டலேக்ட் பயங்கரவாதிகள்!  சந்தர்போல் தனியனாக நின்று அணிக்காக மூன்று மாட்சாக அடிப்பதை போய் பார்க்கவேண்டியது தானே நகுல பாண்டிகளா!

 

ரஜனியின் எளிமை, அவரது இளகிய குணம், தன் நண்பர்களை, சுற்றத்தோரை அவர் கொண்டாடும் விதம், கமல்50 நிகழ்ச்சியில் அவர் பேச்சு, எல்லாமே என்னை கவர்ந்தாலும், அது ரஜனியின் சிறப்பு இல்லை. அதை தேடி நாங்கள் ரஜனியிடம் போவதுமில்லை. எங்களுக்கு ரஜனி என்றால் அது திரையில் சும்மா கதி கலக்கும் நடிகரே. ரஜனியின் தனிப்பட்ட வாழ்க்கை, அவரின் அரசியல் வருகை குறித்த பேச்சுகள், பொதுவாழ்க்கையில் வழங்கிய கருத்துகள் பற்றி பலவிதமான வாதப்பிரதிவாதங்கள். சிரிப்பு தான் வருகிறது. ரிலேட்டிவிட்டி தியரியை ரஜனியிடம் எதிர்பார்த்து பதில் தெரியாமல் அவர் தடுமாறினால் திட்டுவார்கள். ஐன்ஸ்டீனுக்கு நடிக்க தெரியுமா என்று யோசிக்கமாட்டார்கள். அவர் அரசியலுக்கு வந்து தான், கருத்து சொல்லித்தான் நமக்கு அரசியல் அறிவு வரவேண்டுமா? சினிமா எப்படி ஒரு துறையோ அது போலவே அரசியலும் ஒரு துறை. சினிமா பற்றி எப்படி எல்லோரும் கருத்து சொல்லுகிறார்களோ, விமர்சனம் செய்கிறார்களோ  அதுபோலவே அரசியல் பற்றியும் எல்லோரும் ஒரு கருத்து சொல்லுவார்கள். அதனால் அதில் தெளிவு இருக்கவேண்டும் என்று எதிர்பார்ப்பது முட்டாள்தனம். நான் எழுதுகிறேன் என்பதற்காக நான் சொல்லும் அரசியல் கருத்துகள் சரியாகிவிடுமா? அன்றைக்கு அந்த மனநிலையில் எது சரி என்று தோன்றுகிறதோ அதை எழுதுகிறோம். அது எப்போதாவது இருந்துவிட்டு சரியாக போவதுமுண்டு. ரஜனியின் கருத்துகளும் அப்படித்தான். அவர் அரசியல் அறிவுக்கு தோன்றுவதை சொல்லுகிறார். அதை சரி பிழை என்று பிரித்தறியும் திறமை எங்களுக்கு இருக்கவேண்டும்.  எல்லோருமாய் சேர்ந்து இல்லாத கடவுளை, கல்லை செதுக்கி உருவாக்கிவிட்டு, அவர் ஒன்றுமே செய்யவில்லை என்றவுடன் “கடவுள் வெறும் கல்லு” என்று சொல்வது சிரிப்பாய் இருக்கிறது. எனக்கென்றால் ரஜனி எப்போதுமே கடவுள் தான்! அவரால் முடியாததை எதிர்பார்ப்பதில்லை! கடவுள் என்ன கொடுப்பார் என்பதை தெரிந்து வைத்திருக்கும் பகுத்தறிவு எனக்கிருக்கிறது!

 

தலைமுறைகள் தாண்டியும் ரஜனி என்ற வசீகரம் செலுத்தும் ஆதிக்கம் ஆச்சர்யமானது. என் அம்மா அப்பா, முன் வீட்டு தாத்தா, அக்கா அண்ணா, இப்போது அக்காவின் பிள்ளைகள் எல்லோருக்குமே ரஜனி என்றால் போதும். கண் வெட்டாமல் பார்த்துக்கொண்டே இருப்போம். சென்ற வருடம் யாழ்ப்பாணம் வீட்டுக்கு போன போது அந்த கோழிக்கூடு சிதிலமடைந்து இருந்தது.  அதே வாய்க்கால் தண்ணி, சோப் நுரை ஓடும் கிணற்றடி. தோய்க்கிற கல்லில் கவனமாக பொறுமையாக ஏறி, தடுமாறி நிமிர்ந்து நின்றேன். வழுக்கவில்லை. காலில் அடிடாஸ் சப்பாத்து. கிரிப் விடாது. கழுத்தில் DSLR கமெரா. ரேபான் சன் கிளாசஸ். அச்சு அசலாய் எல்லாமே! தலை வானத்தை பார்த்து ஒரு கால் மடித்து ஒரு கண்ணை குறுக்கி மற்ற கண்ணை மேலே எறிந்து .. one.. two.. three.. four.. ம்ஹும் பாட்டு ஆரம்பிக்கவேயில்லை! ஏதோ மிஸ்ஸாகிறதே? வாழைக்குருத்துக்காக கெக்கலிக்கும் சேவல் இல்லை, பதினைந்து குஞ்சுகளுடன் தாய்க்கோழி இல்லை, அடைக்கொழி கேறவில்லை! குசினி யன்னல் பூட்டியிருந்தது. “டேய் தோய்க்கிற கல்லு .. வழுக்குமடா கவனம்” என்ற அக்காவின் குரல் இல்லை.… எனக்குள் அந்த சிறுவன் மட்டும் அப்படியே ..

நானந்த கிள்ளை போலே வாழ வேண்டும்!
வானத்தில் வட்டமிட்டு பாடவேண்டும்!

 

வியாழ மாற்றம் 26-04-2012 : எங்கள் புருவங்கள் தாழ்ந்துள்ளன


டேய் ஜேகே

Sushmita-Sen-157சுஷ்மிதா சென்,
டெல்லி
எங்கள் தூதுக்குழு வருகையை பற்றி என்ன நினைக்கிறீர்கள் ஜேகே? தமிழ் பத்திரிகைகள் எல்லாம் நான் தமிழருக்கு ஆதரவாய் பேசியதையும் தீர்வுக்கு அழைப்பு விடுத்ததையும் பாராட்டியிருக்கின்றனவே! பல இலங்கை அமைச்சர்களின் கண்ணில விளக்கெண்ணைய விட்டு ஆட்டிடோம்ல! 

The White Tiger

The White Tiger”. ஆஸ்திரேலியாவில் பிறந்து சென்னையில் வளர்ந்த அரவிந்த் ஆதிகா எழுதிய நாவல்.

இந்தியாவுக்கு விஜயம் செய்யும் சீன அதிபருக்கு, பெங்களூரில் ஒரு சின்ன கோர்ப்பரேட் ட்ரான்ஸ்போர்ட் கம்பனி நடத்தும் அசோக் சர்மா aka பலராம் எழுதும் கடிதம் தான் நாவல். அது சும்மா உத்திக்காக. கதை என்னவோ வழமையான சேட்டன் பகத் வகை கதை தான். போதிகாயாவுக்கு அருகே உள்ள குக்கிராமத்தில், இனிப்புகள் செய்யும் கீழ் சாதி(?)யில் பிறக்கும் ஒருவன், எப்படி ட்ரைவராகி, ஒரு கட்டத்தில் தன் முதலாளியையே கொன்றுவிட்டு, பணத்தை எடுத்துக்கொண்டு பெங்களூர் வந்து பிசினஸ் செய்வது தான் லைன். இப்படி வளருவதற்கு என்னென்ன தகிடுத்தனங்கள் செய்யவேண்டியிருக்கிறது, எந்த வித தார்மீக நெறிகளும் இருக்கக்கூடாது என்று சொல்லும் பத்தோடு பதினொன்று வகை நாவல். டிரைவர்கள் வாழ்க்கையை ஓரளவுக்கு டீடைலாக சொல்லியிருக்கும் நாவல். கொஞ்சம் மைக்ரோஸ்கோப் வைத்து பார்த்தால் இது தான் விகாஸ் சோப்ரா எழுதிய Q&A நாவலின் கதையும் கூட. சேட்டன் பகத்தின் “Revolution 2020” கதையும் இது தான். அயர்ச்சி! கீ.ரா, சுஜாதா, புதுமைப்பித்தன் போன்றோர் ஆங்கிலத்தில் எழுதாததால் போனவன் வந்தவன் எல்லாம் புக்கர் வாங்கிக்கொண்டு இருக்கிறான்! பெஸ்ட் செல்லர் கொடுக்கிறான்!

ஆறா வடு


“ஆறா வடு” என்று ஒரு நாவல் வந்திருக்கு, இப்படி ஒரு எழுத்தை அண்மைக்காலமாக வாசிக்கவேயில்லை, நீங்க கட்டாயம் விமர்சனம் எழுதோணும் -- sayanthan-1திலகன்
தம்பி, நீர் மட்டும் சிட்னி வந்தா, “ஆறா வடு” புத்தகத்தை தருவன், வாசிச்சு பாரும். --சக்திவேல் அண்ணா
3 more stories...When I finished the stories I thought I should have born as an Australian-and live with no knowledge about it at all! -- தன்யா
ஜேகே, நான் உடுமலை.காம் இல இருந்து வாங்கி வைச்சிருக்கிறன். வாசிச்சு முடிச்சு இப்ப மனிசி வாசிச்சுக்கொண்டு இருக்கு. கதை நல்லா இருக்கு. ஆனா அவர் மற்ற கோஷ்டியா? -- சுகிந்தன் அண்ணா
ஜேகே, நீங்க கட்டாயம் வாசிக்கோணும். சயந்தனில இருக்கிற லிபரல் நக்கல் எப்பவுமே கலக்கும்.  -- கேதா
அண்ணா, நீங்க வாசிச்சிட்டு விமர்சனம் போடுங்க. யாரு வாசிக்காட்டியும் நீங்க வாசிக்கோணும். அப்ப தான் “எழுத்து” என்றால் உங்களுக்கு என்னவென்று விளங்கும்! – வீணா
சயந்தன் எழுதிய “ஆறாவது வடு” நூல் ஆஸ்திரேலியாவில் எவ்வளவு பிரபலம் என்பதற்கு இதைவிட வேறு எதை சொல்லமுடியும்? சுகிந்தன் அண்ணா, மனைவி வாசிக்க முதலேயே, கேட்டேன் என்பதற்காக பறித்து எனக்கு வாசிக்க தந்தார். இதையெல்லாம் ஏன் எழுதுகிறேன் என்றால், ஈழத்தில் இருந்து ஒரு எழுத்தாளர் வெளிவரும்போது, அதை எப்படி எங்கள் ஆட்கள் கொண்டாடுகிறார்கள் என்று சுட்டிக்காட்டத்தான். இந்திய மிமிக்ரி கலைஞர்களின் கலைவிழா ஒழுங்கமைப்பாளரிடம் “அடுத்த நிகழ்ச்சிக்கு சயந்தனை கூப்பிடுவோமா? நிறைய வரவேற்பு இருக்கிறது இங்கே” என்று சொல்ல, “யாரு தம்பி சயந்தன்? விஜய் டிவியா?”!

வியாழ மாற்றம் 19-04-2012 : மகாத்மா காந்தி


டேய் ஜேகே

sakuntlaமேகலா, இதயனூர்!
ஹேய் ஜேகே, உங்கள் படலைக்கு பின்னாலே அழகான ஒரு ஒலைக்குடிசையை இலக்கியம், புத்தகம், பாடல், சிறுகதை, தொழில்நுட்பம் என்று வேய்ந்துகொண்டு வரும் வேளையில் ஏன் இந்த அரசியல்? முதல்வன் அர்ஜூனை கூட இறுதியில் அரசியல்வாதியாக்கீட்டாங்களே! வேண்டாமே! அரசியல் செய்யத்தானே பலர் இருக்கிறார்களே? எங்களுக்கு உங்கள் எழுத்து தான் வேண்டும் ஜேகே! மிகமுக்கியமாக நீங்கள் வேண்டும்!

கூட்டமைப்பு எம்.பி சுமந்திரனுடன் நேரடி சந்திப்பு!

 

MAS2512தமிழ் தேசிய கூட்டமைப்பு தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரனுடனான சந்திப்புக்கு அழைப்பு வந்தபோது முதலில் போவதில்லை என்று தான் முடிவெடுத்தேன். அப்பாவிடம் சொன்னபோது “உனக்கென்ன விசரா? அவர் கருத்தை அவர் வாயாலேயே நேரடியாக கேட்டால் தானே அவரின் நிலைப்பாடு அறியமுடியும். சும்மா பத்திரிகைகள் எழுதுவதை படித்து வியாழமாற்றத்தில விமர்சித்தால் சரியா?” என்று நெத்தியடி தர, சரி போவோம் என்று முடிவெடுத்தேன். முருகன் தானும் வருகிறேன் என்று சொல்ல, வேலை முடிந்து ஏழு மணி சந்திப்புக்கு ஆறரைக்கே போக அங்கே சுமந்திரன் ஏற்கனவே தன் காரில் டிரைவ் பண்ணி வந்திருந்தார்! அப்புறமாக ஒழுங்கமைப்பாளரும் வந்து சேர்ந்தார்.

என்னை அறிமுகப்படுத்தும்போதே, இவர் ஜேகே, வியாழ மாற்றத்தில சிலவேளைகளில் உங்களை பாராட்டுவார். பலவேளைகளில் விமர்சிப்பார்” என்று சொல்லிவைக்க, என்னடா இது லொள்ளா போயிற்று என்று யோசித்தேன். எந்த விஷயத்தில் என்னை விமர்சிக்கிறீர்கள் என்று சுமந்திரன் கேட்ட போது “13ம் திருத்தம் அமுல்படுத்தல் பற்றிய  உங்கள் நிலைப்பாடு …” என்று நான் சொல்லி முடிக்கும் முன்னமேயே, “புத்திஜீவிகள்” பற்றியும் எழுதியிருக்கிறார் என்று ஒழுங்கமைப்பாளர் அண்ணா சொல்ல சுமந்திரன் “அவனா நீயி” என்ற ரீதியில் என்னை பார்க்க, நல்ல காலம் கதிரை அடுக்கும் வேலை தான் நமக்கு சரி என்று ஜேகே எஸ்கேப்!

அன்றைக்கு காலை தான் சுமந்திரன் லக்பிம பத்திரிகைக்கு கொடுத்த பேட்டி ஒன்றை வாசித்திருந்தேன். I was stunned. இப்படி ஒரு துணிச்சலான பேட்டியை அண்மைக்காலத்தில் இவ்வளவு புத்திசாலித்தனமாக, effective ஆக எந்த அரசியல்வாதியும் கொடுத்ததில்லை. சாம்பிளுக்கு ஒன்று,

NW:
Where is your bargaining power?

MAS:
Bargaining power is the democratic wish of our people, nothing else. Otherwise, it’s a very dangerous thing to talk about bargaining power. In proposals made between 1992 and 2006, the government was willing to go much further than this. In fact, the Oslo Communiqué of December 2002 specifically talked about a federal arrangement. That was between the government and LTTE. If they were willing to go that far when the LTTE were around and today they tell the Tamil people you have no bargaining power so don’t even think of anything close to that…that’s a very dangerous message they are giving the Tamil people. They are telling them you come with the gun and we’ll give you more.

Reference : http://dbsjeyaraj.com/dbsj/archives/4057

அதே நேரம் “The Island” பத்திரிகைக்கு அவர் எழுதிய ஆக்கம் ஒன்றில் பொலிஸ் அதிகாரங்களின் முக்கியத்துவம் பற்றி எழுதும்போது, இப்படி கருத்தை போகிற போக்கில் எழுதிகொண்டு போகிறார்.

“For our part, we are clear that a durable solution to the ethnic problem must be found within the contours of a united Sri Lanka. That aside, that line of argument ignores that it was disillusioned youth – often unemployed and angry – who have resorted to violence against the State, whether in the North East or in the South.”

Reference : http://island.lk/index.php?page_cat=article-details&page=article-details&code_title=44922

வடக்கு கிழக்கில் இடம்பெற்ற போராட்டங்களை, தெற்கின் மார்க்சிய சிந்தனை போராட்டங்களின் காரணங்களுடன் பொதுமைப்படுத்தி தவறான சிந்தனையை இந்த பத்தி பரப்புகிறது. இதை சுமந்திரன் வேண்டுமென்று எழுதவேண்டிய தேவை இல்லை என்றே நினைக்கிறேன். தெரியாமல் தான் எழுதினார் என்றால், சுமந்திரன் மீண்டும் 50களில் நம் முன்னைய தலைவர்கள் செய்த தவறுகள் நோக்கி செலுத்தப்படும் அபாயமும் இருக்கிறது.

கொஞ்சம் கொஞ்சமாக ஆட்கள் வரத்தொடங்குகிறார்கள். எல்லாருமே, சேர் பொன்  இராமநாதனின் கிளாஸ்மேட் வயசில் இருக்க, டீனேஜர்ஸ் என்று பார்த்தால் நானும் முருகனும் தான்! வெளிநாட்டு இளைஞர்களின் அரசியல் ஆர்வம் லங்காசிறி, facebook இல் காட்டமான இரண்டு கமெண்ட்களுடன் முடிவது கொஞ்சம் அயர்ச்சி! வந்த ஆட்களில் “பல வகையினரும்” இருந்தார்கள். ஆதரவாளர்கள், எதிர்ப்பாளர்கள், நடுநிலையாளர்கள், படம் காட்டுபவர்கள், அரசியல் அனாதைகள் என்று தமிழ்நாட்டில் சொல்வார்களே அவர்கள், என எல்லா குழுக்களும். எல்லோரையும் ஒரே இடத்தில் கண்டவுடனேயே எனக்கு வயிற்றில் வாஷிங் மெஷின் ஸ்டார்ட் பண்ணிவிட்டது! “தக்காளி, சண்டை தொடங்கினா, நாங்க எதுக்கால ஓடலாம்” என்று முருகனிடம் கேட்க, இருவரும் எமர்ஜென்சி எக்ஸிட் பக்கம் கதிரை போட்டு உட்கார்ந்தோம்!

கூட்டம் தொடங்குகிறது. அரை மணித்தியாலம் தமிழ் தேசிய கூட்டமைப்பின் நிலைப்பாடு பற்றியும் அதன் நடவடிக்கைகள் பற்றியும் மேலோட்டமாக பேசினார்.  அரசியல் போராட்டம், ஆயுதப்போராட்டம் கடந்து இப்போது தமிழர் நடத்துவது அறிவுப்போர் என்று சொன்னார். நாம் புத்திசாலித்தனமாக இயங்கினால்தான் எதையும் செய்யலாம் என்றார். வெளிநாடுகளின் நிலைப்பாடுகள், அவற்றை சமாளிக்க கூட்டமைப்பு எடுக்கும் முயற்சிகள் என முக்கால்வாசி எமக்கு தெரிந்த விஷயங்கள் தான். தெரியாத விஷயங்களும் சொன்னார். வழக்கறிஞர் என்ற முறையில் தந்திரோபாயமாக அரசு  கொண்டுவரும் சட்டத்திருத்தங்கள், தமிழர் நலனுக்கு பாதகமாக இருக்குமேயானால் அதற்கு, சுப்ரீம் கோர்ட்டில் ஸ்டே ஒர்டர், ரிட் மனு என தாங்கள் எடுத்து நிறுத்தி வைப்பதாக உதாரணங்கள்  மூலம் சொன்னார். பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் அறிக்கைகள், ஆவணப்படுத்தப்பட்டு, தேவையான இடங்களுக்கு அனுப்பப்படுவதாகவும், சொன்னார். மக்களை கூட்டி அரசியல் செய்யும் நிலைமை கிஞ்சித்தும் இல்லை. இதனால் இராஜதந்திர அரசியல், குறிப்பாக வெளிநாடுகளையே தாங்கள் நம்பியிருக்க வேண்டியிருப்பதால், நிலைப்பாடுகளில் நெகிழ்வுத்தன்மை காட்டவேண்டியதன் அவசியத்தை சுட்டிக்காட்டினார். தீவிரமான நிலைப்பாடுகளை தற்சமயம் கடைப்பிடித்தால், எங்களின் மிஞ்சியிருக்கும் கொஞ்ச நஞ்ச இருப்பை கூட இழக்கும் அபாயத்தை, குடியேற்றங்கள், கலாச்சார பரம்பல் என்ற பல உதாரணங்கள் மூலம் விளக்கினார். இதை சமாளிக்க வேண்டிய உடனடித்தேவை இருக்கிறது என்றார். நீண்ட கால அரசியல் தீர்வு பற்றி கதைக்கும் நிலை தற்போதைக்கு இல்லை என்ற பொருள் பட பேசினார். இப்படி பொதுவாக நாங்கள் எல்லோரும் அறிந்திருக்ககூடிய விஷயங்களை சர்ச்சை ஏற்படுத்தா வண்ணம் வரிசைப்படுத்தினார்.  இடைவேளையின் போது பக்கத்தில் இருந்த தாத்தா ஒருவர், இலையான் ஒன்றை வாயில் இருந்து எடுத்து வெளியே போட்டார்!

சுமந்திரன் பேசிய விஷயங்களில் என்னை மிகவும் கவர்ந்தது வெளிநாட்டு தமிழருக்கு அவர் விடுத்த அழைப்பு தான். அரசியல், அரசியல் தவிர்ந்த சமூக முயற்சிகள் ஏராளமாக செய்யவேண்டி இருக்கிறது. அதற்குரிய ஆளணி பற்றாக்குறை இருக்கிறது. வெளிநாட்டு தமிழர்களை, திரும்பி அங்கே வந்து அரசியலையோ அல்லது சமூக வியாபார முயற்சிகளையோ எங்கள் பிரதேசத்தில் நிகழ்த்தவேண்டும். நிரந்தரமாக வர முடியாவிட்டால், ஒரு ஆறு மாசம், ஒரு வருஷத்துக்காவது வரவேண்டும்.  வருபவரின் பாதுகாப்பை உறுதிப்படுத்தமுடியுமா? அங்கே இருக்கும் மக்களுக்கு இருக்கும் பாதுகாப்பு உங்களுக்கும் இருக்கும் என்றார். Ouch! எவ்வளவு தான், வாசித்து அறிந்து புரிந்தது வைத்திருந்தாலும், நிலைமையை அங்கே இருந்து கண்டறிவது போல இங்கேயிருந்து அறியமுடியாது. எங்களுக்கு இருக்கும் அழுத்தங்கள், அபாயங்கள் என்பவற்றை வந்து அறிந்துகொள்ளுங்கள் என்றார். உடனே excited ஆகி இலங்கைக்கு டிக்கட் விலை என்னவென்று அப்போதே ஐபோனில் தேடினேன். அடுத்த நிமிஷமே, “வீட்டுக்கு மோர்த்கேஜ் கட்டவேண்டும், பின்பக்கம் பகோலா போடோணும். டாக்ஸ் ரிட்டர்ன் செய்யோணும்” என்ற யோசனை உறைத்தது! என்ன அவசரம் இப்ப? இருந்து இன்னும் ஐஞ்சு வருஷத்துக்கு உழைச்சு காசு சேர்த்துவிட்டு அப்புறமாக போகலாம். அரசியல் வேண்டுமென்றால் இங்க இருந்தும் செய்யலாம்! காசா பணமா?

பல விஷயங்களை மழுப்பலாகவே பேசினார். உத்திகளை வெளிப்படுத்தினால் அரசாங்கம் அதற்கு பதிலடி தயாரித்துவிடும் என்றார். தமிழ் மக்கள் என்ன விரும்புகிறார்கள் என்பதை விட, அவர்களுக்கு எது நன்மை பயக்குமா அதையே கூட்டமைப்பு செய்யும் என்றார். மக்கள் நலனுக்காகவே போராடுகிறோம். அதற்காக சிலவேளைகளில் புத்திசாலித்தனமாக பேசும்போது அது தவறாக பார்க்கப்படுகிறது. தனக்கு அங்கால பக்கத்தில் இருந்தும் மிரட்டல்கள் வருது. நீங்களும் இப்படி நம்பாமல் இருந்தால் நான் என்ன செய்ய? என்றார். வெளியே சொல்லமுடியாத சூழ்நிலை என்றாலும் நல்லதையே நாங்கள் செய்வோம். அப்படி செய்ய தவறினாலும் கூட ஒரு போதும் துரோகமிழைக்க மாட்டோம், எங்களை நம்புங்கள் என்றார். அன்றைக்கு புதுவருஷம். பலர் கோயிலுக்கு போய்விட்டு வந்து நெற்றியில் வீபூதி, காதிலே பூ எல்லாம் வைத்துக்கொண்டு வந்திருந்தனர். ஒரே பக்திமயமாக இருந்தது.

எனக்கு இதயவலி. என் வலியை போக்குவார் என்று நினைத்து டொக்டரிடம் போகிறேன். எனக்கு என்ன வைத்தியம் செய்யவேண்டும்? ஒப்பரேஷன் தான் செய்யவேண்டும் என்று டொக்டர் நினைத்தால், வலியில் கத்தினாலும் நான் மறுக்கமுடியாது இல்லையா! அவருக்கு என்னைவிட அதிகம் தெரிந்தபடியால் தானே அவரிடம் போனேன். ஆக முடிவை அவரே எடுக்க விடுவது நல்லது தானே! ஆனால் எனக்கு என்ன ஒபரேஷன்? அதை எப்படி செய்யப்போகிறார்? மயக்குவாரா? இதயத்தை வெளியே எடுப்பாரா? எவ்வளவு செலவு? இன்சூரன்ஸ் இருக்கா? என என் வருத்தம் பற்றிய எல்லா தகவல்களையும் எனக்கு அவர் தெரிவிக்கவேண்டிய தார்மீக கடமை டொக்டருக்கு இருக்கிறது. வந்துவிட்டேன் என்பதற்காக, என்னை படுக்கவைத்து வெட்டினால், அவர் லைசன்ஸ் அடுத்தநாளே காலி! இதை தான் சுமந்திரனுக்கு சொல்ல ஆசைப்படுகிறேன். உங்களுக்கு என்னை விட அரசியல் தெரிகிறது. சட்டம் தெரிகிறது. ராஜதந்திரம் தெரிகிறது. ஆனால் தேர்ந்தெடுத்த மக்களுக்கு என்ன செய்யப்போகிறீர்கள் என்று அவர்களுக்கு தெளிவு படுத்தவேண்டிய கடமை இருக்கிறது இல்லையா?

கேள்வி நேரம் ஆரம்பிக்கிறது. முருகன் திடீரென்று தன் பாக்கில் எதையோ கிளற ஆரம்பிக்கிறார். ஆகா இண்டைக்கு “ஹே ராம்” சீன் தான் போல! என்று பயந்தபோது தான், ஒரு கட்டு பேப்பர் வெளியே வந்தது. எல்லாமே சுமந்திரன் அண்மைக்காலத்தில் கொடுத்த பெட்டிகளின் தொகுப்பு. கூட்டமைப்பு/அரசு பேச்சுவார்த்தையால் என்ன பிரயோசனம்? என்று கேட்டதுக்கு, அது “அரசு எமக்கு ஒன்றுமே தர தயாரில்லை என்று சர்வதேசத்துக்கு காட்டுவதற்கு” என்றார். “ஏன் மூன்றாம் தரப்பு மத்தியஸ்தம் தேவை இல்லை?” என்ற அறிக்கை என கேட்க, அதற்கு வெளிநாட்டு அழுத்தம் காரணம் என்றார். “தேசியம் சுயாட்சி” என்ற முக்கிய வார்த்தைகள் ஏன் இந்தியாவில் அனைத்து தமிழ் கட்சிகளும் மத்திய அரசாங்கத்துடன் நிகழ்த்திய சந்திப்பில் நீக்கப்பட்டது? என்ற கேள்விக்கு அது ஒற்றுமைக்காக எடுத்த முடிவு. அதற்கு பதிலாக “peoples” என்ற பதம் உலக அரங்கில் பாவிக்கப்படுவதாகவும் அதிலே பெரிய வித்தியாசம் இல்லை என்றும் விளக்கம் தந்தார். “கொழும்பில் வைத்தே நீங்கள் எல்லோரும் தீர்மானித்த அந்த அறிக்கையை, சுதர்சன நாச்சியப்பனும், சில தமிழ் கட்சிகளும் வேண்டாம் என்று சொன்ன காரணத்துக்காக விட்டுக்கொடுத்தது ஞாயமா?” என்ற முருகனின் கேள்விக்கும் பதில் கிடைக்கவில்லை. எல்லாமே ராஜதந்திரம் போலும்! இன்னும் பல கேள்விகளை முருகன் கேட்டான். இனி கேட்கமுடியாது என்று பின்னால் இருந்து ஒரு ராக்கட் பாய்ந்ததால், சிங்கம் கூண்டுக்குள் போய்விட நான் கை உயர்த்தினேன்!

ஜேகே கேளுங்க என்றார்கள். வாழ்க்கையில் அரசியல் கேள்வி முதன்முதலில் ஒரு அரசியல்வாதியை நோக்கி கேட்டபோது வயிற்றில் இப்போது வாஷிங்மெசின் ஸ்பின் பண்ண தொடங்கியது.

“அரசாங்கம் சர்வதேசத்தை சமாளிக்கவும், குறிப்பாக இந்தியாவை சமாளிக்கவும் கூடிய சீக்கிரத்தில் வடக்கு தேர்தலை நடத்தப்போகிறது. கிழக்கில் விட்ட தவறு போல வடக்கிலும் கூட்டமைப்பு இந்த தேர்தலை புறக்கணிக்க முடியாது. அது மற்ற சக்திகளிடம் வடக்கை கொடுத்து குட்டிச்சுவராக்கி விடும். அதனால் ஏதோ ஒரு வகையில் தேர்தலில் பங்கேற்கவேண்டும். பங்கேற்று வென்று,  மாகாணசபை ஆட்சி தொடங்கும் பட்சத்தில், மத்திய அரசாங்கம் கொஞ்சக்காலத்துக்கு ஆளுனரை அடக்கி வாசிக்க சொல்லி, ஏதோ மாகாணசபைக்கு எல்லா அதிகாரமும் இருப்பது போல பிரமையை கூட ஏற்படுத்திவிடலாம்.  இது தமிழருக்கு நிரந்தர அரசியல் தீர்வு வந்துவிட்டது என்ற தோற்றப்பாட்டை ஏற்படுத்தும் இல்லையா? இந்த சவாலை எப்படி எதிர்கொண்டு எங்கள் நீண்ட கால அபிலாஷைகளை நிறைவேற்ற போகிறீர்கள்?”

என்று தட்டுத்தடுமாறி ஒரு கேள்வியை கேட்டேன். “முக்கியமான கேள்வி இது முக்கிய விஷயம், முதலில் தேர்தல் அறிவுப்பு வரட்டும், அதற்கு பின் நாங்கள் முடிவுகளை தெரிவிப்போம். இதெல்லாம் யோசிச்சு இருக்கிறோம். ஆனால் இப்போது சொன்னால் அரசாங்கம் எங்கள் உத்தியை கண்டுபிடித்துவிடும்” என்று அவர் பழைய புராணம் பாட, பக்கத்தில் இருந்த முருகன் காதை செக் பண்ணி பார்த்தான். பூ ஏற்கனவே விழுந்துவிட்டது அவனுக்கு!

தொடர்ந்து பல கேள்விகள். காணி நிலம், இராணுவமயப்படுத்தல் போன்ற பிரச்சனைகள். வெளிநாட்டு தமிழர் தங்கள் காணிகளை பயன்படுத்த நில உரிமை எழுதி அங்குள்ள மக்களுக்கு கொடுக்கலாமா என்ற கேள்வி. கூட்டமைப்பு இதற்கெல்லாம் சேர்ந்தாற்போல ஒரு ட்ரஸ்ட் ஆரம்பிக்கபோகிறது என்று சொன்னார். முறையான அறிவிப்பு விரைவில். “தமிழர்களின் செறிவு குறைந்துபோய் இருக்கும் சந்தர்ப்பத்தில், குடியேற்றங்களை வேண்டாம் என்று சொல்ல என்ன தார்மீக காரணம் இருக்கிறது உங்களுக்கு?” என்ற முக்கியமான ஒரு கேள்விக்கு, “இயல்பாக இடம்பெறும் இனப்பரம்பலை நாங்கள் தடுக்க முடியாது, ஆனால் கட்டாயமாக, இன விகிதாசாரத்தை மாற்றும் வகையில் நெறிப்படுத்தப்படும்(orchestrated) குடியேற்றங்கள் சர்வதேச சட்டத்தில் கூட விரோதமானது என்று எழுதப்பட்டு இருக்கிறது என்று பதில் தந்தார். ஆச்சரியமாக பார்த்தேன்.

சில அசந்தர்ப்ப கேள்விகளும் இல்லாமல் இல்லை. “ஏக பிரதிநிதிகள்”, “தர்மம்/அதர்மம்” விவகாரம் என அண்மையில் சுமந்திரன் கும்மப்படும் பல விஷயங்கள் சராமாரியாக வந்தன. அவர் ஓரளவுக்கு சமாளித்தார் எனலாம்.  இலங்கையில் இருந்து கொண்டு செய்யும் சில அரசியல் வேலைகளில் அதுவும் அவர் பாணி அரசியலுக்கு சில விஷயங்கள் தவிர்க்கமுடியாதது என்பதை புரிந்துகொள்ளக்கூடியதாக இருந்தது. இங்கே இருந்துகொண்டு அவற்றை தீவிரமாக அலசுவதற்கும் கதைப்பதற்கும், அங்கே பொதுவெளியில் தர்மசங்கடமான சூழ்நிலைகளை இராஜதந்திர ஸ்தானத்தில் நின்று சமாளிப்பதற்கும் வித்தியாசம் இருப்பதால் முட்டையில் மயிர் புடுங்க வேண்டாம் என்றே தோன்றுகிறது.

எனக்கு அரசியல் அறிவு என்பது, ஓரளவுக்கு அனுபவத்தாலும், வாசிப்பாலும், சமகாலத்து ஏனைய இனப்பிரச்சனைகள் பற்றிய தேடலாலும் மட்டுமே வந்தது. இது தற்சமயம் இருக்கும் விவகாரமான, குழப்பமான, தீவிரமான இலங்கை தள அரசியலை விமர்சிக்க போதாது. அதற்குரிய அனுபவமும் இல்லை. வயசும் இல்லை. என் வயசுக்கு நான் கொஞ்சம் தீவிரமாகவே யோசிப்பேன் என்பதை உணரமுடிகிறது. ஏன் முடியாது? என்று கேட்கும் வயசில் நான் இருப்பதால் அப்படியான கேள்விகளும் சந்தேகங்களும் எழுவதை தவிர்க்கமுடியவில்லை. ஆனால் புத்தி சொல்லுகிறது சுமந்திரனை ஒட்டுமொத்தமாக விமர்சிப்பது அழகில்லை. தவிர அது அழிவுக்கே இட்டுச்செல்லும்.  பல கருத்துக்களில் ஒத்தும்போகும் சுமந்திரன் சில கருத்துக்களில் வேறுபடுகிறார். அது அவர் அனுபவம், வயசு, அறிவுக்கு எட்டிய விஷயம். ஆக்கபூர்வமாக கலந்துரையாடுவதன் மூலம் இவ்வகை வேறுபாடுகளை ஒருவர் மற்றொருவருக்கு புரியவைக்க முடியும். எனக்கு இந்த சந்திப்பில் ஓரளவுக்கு புரிந்தது. எங்களுக்குள் இருக்கும் கருத்தியல் வேறுபாடு புரிந்தது. ஆனால் யார் சரி? என்று புரியவில்லை. இதனால் தான் இலங்கையில் இருந்து இயங்கும் குருபரன், சிறீதரன் போன்ற சக அரசியல்வாதிகளின் கருத்துக்களையும் சுமந்திரன், சம்பந்தன் போன்றவர்களின் கருத்துக்களுடன் சீர் தூக்கி ஆராய்ந்து ஒரு நிலைக்கு நாங்கள் வரவேண்டும். முதலின் நாம் எம்முள் யாரையும் புறக்கணிப்பதை ஓரளவுக்கு தள்ளிவைத்துவிட்டு, ஒருவர் ஒன்றை ஏன், எதற்கு எந்த சந்தர்ப்பத்தில் சொல்லுகிறார் என்று பார்ப்போம். அவர் கருத்துடன் நம் கருத்து மாறுபட்டால் அதை பொறுப்பாக பதிவு செய்வோம். அவர் கருத்தும் மாறாமல், பெரும்பான்மை தமிழர் கருத்தும் அவர் கருத்தாக இல்லாது போகும் பட்சத்தில்,  ஒன்று அவர் தன் கருத்தை மாற்றுவார். அல்லது மக்கள் ஆளை மாற்றுவார்கள்! இந்த பக்குவத்தை நாங்கள் எல்லோரும் எப்போதாவது அடைவோம் என்ற நம்பிக்கையும், நாம் எல்லோரும் ஒற்றுமையாக எம் பிரச்சனையை தீர்ப்போம் என்ற நம்பிக்கையும் .. பொறுங்கள் .. புது வருஷத்துக்கு கோயிலுக்கு போகோணும்!

 

குறிப்பு:

இங்கே சுமந்திரனால் மற்றும் ஏனையவர்களால் கொடுக்கப்பட்ட கருத்துக்கள், அவர்கள் சொல்லி அவற்றை நான் எப்படி புரிந்துகொண்டேன்? என்ற அடிப்படையிலேயே எழுதப்பட்டது.  அது உண்மையான அவர்களின் நிலைப்பாட்டை தான் குறித்து நிற்கிறதா? என்பது என்னுடைய கிரகிப்பு திறன் சம்பந்தப்பட்டதால், எனக்கு அவ்வளவு நம்பிக்கை இல்லை! தவிரவும், இங்கே நான் கொடுத்திருக்கும் தனிப்பட்ட கருத்துக்கள், என் அறிவுக்கு எட்டிய விஷயங்களே. அதை இன்னொருவர் மறுத்து விளக்கினால், எனக்கு புரிந்தால் ஏற்றுக்கொள்வேன். என் முயலுக்கு எத்தனை கால்கள் என்று பலவருஷமாக எண்ணிக்கொண்டு இருக்கிறேன்! மூன்று காலா, நான்கா என்று sure இல்லை! அப்படி இருப்பது எண்ணுவதற்கும் இலகுவாக இருக்கிறது!

தனிப்பட்ட முறையில் அவர் சொன்ன சில கருத்துக்கள், மைக்கை பொத்திக்கொண்டு சொன்ன பதில்கள், நாகரிகம் கருதி இங்கே எழுதவில்லை. ஆனால் அவை முக்கியமான கருத்துக்கள் ஆதலால், சந்தர்ப்பம் கிடைக்கும்போது இப்படியான சந்திப்புக்களை தவறவிடாதீர்கள். போட்டோ எடுக்க கூடாது என்பது ஒர்டர். ரேகொர்ட். பண்ண கூடாது என்று கடைசியில் தான் சொன்னார்கள். அழித்துவிட்டேன்!

References :

http://dbsjeyaraj.com/dbsj/archives/4057/mas2512

http://island.lk/index.php?page_cat=article-details&page=article-details&code_title=44922

http://www.thesundayleader.lk/2012/03/11/elucidation-through-effigy-expression/

http://groundviews.org/2011/09/04/crossing-red-lines-the-new-tamil-consensus-in-sri-lanka/?utm_source=feedburner&utm_medium=feed&utm_campaign=Feed%3A+groundviewssl+%28groundviews%29&utm_content=FaceBook

http://www.ponguthamil.com/showcontentnews.aspx?sectionid=1&contentid=41f49678-bdde-4c0c-9aff-1c0a3ebac99f

 

மிக முக்கிய குறிப்பு : இது அரசியல் பதிவு இல்லை! எனக்கு அரசியல் ஒரு சதத்துக்கும் தெரியாது!

மேகலா!

 

குட் மோர்னிங்… மேகலா … காணும் நித்திரை… எழும்பு .. இட்ஸ் coffee டைம் …

குட் மோர்னிங் கும..

கொட்டாவியால் “ரன்” சொல்லியவாறே என்னுடைய தலையணையையும் இழுத்து அணைத்துக்கொண்டே மற்றப்பக்கம் ஒருக்களித்துப்படுக்கும் மேகலாவுக்கு சென்றவாரத்தோடு இருப்பத்தேழு வயது முடிந்தது என்று நம்புவதற்கு அம்மாளாச்சிக்கு தலையில் வைத்து சத்தியம் செய்யவேண்டும். கொஞ்சம் குட்டை முடி. மிஞ்சிப்போனால் தோளின்கீழ் அரையடி நீண்டாலே அதிகம் தான். ஸ்லீக்காக சென்று, முடிவில் கேர்லியாக வளைந்து நிற்பது எப்படி என்று கேட்டு கேட்டு அலுத்துவிட்டது. சொல்லுகிறாள் இல்லை பாவி. அனிச்சையாக முடியை தவழவிட்டு மீண்டும் தலையணைக்குள் முகம் புதைக்கிறாள். பிரவுண் ப்ளெய்ன் கலரில் போர்வை. இழுத்துப்போர்த்துக்கொண்டு, மேகலா விண்டர் குளிர் தாங்கமாட்டாள். “என்ன நரகம்டா இது? திரும்பிப்போவோமா?” என்ற பல்லவி ஒவ்வொரு மே மாசமும் ஆரம்பிப்பாள். செப்டெம்பர் வசந்தகாலத்தில் ஒருமுறை கிப்ஸ்லாண்ட் ட்ரைவ் போனால் ஆகா மெல்பேர்ன் சொர்க்கம் என்பாள். குளிர் என்றால் படுக்கையில் கூட கணுக்கால் வரைக்கும் சொக்ஸ் தான். ஹீட்டர் போட்டால் தொண்டை கட்டும் குரல் போய்விடும் என்பாள். “இப்போது மட்டும் என்னவாம்” என்று திருப்பி கேட்கமாட்டேன். அவள் குத்து நிஜமாகவே வலிக்கும்!

பிங்க் கலரில் பிஜாமா. அவளானால் அது வெறும் பிஜாமா இல்லை, “An uptown stripe Flannel Pyjamas” என்று திருத்துவாள்.  ஒன்றுமில்லை. இப்போதெல்லாம் அதிகம் புத்தகங்கள் வாசிப்பதால் வரும் வினை இது! சென்றவருடம் என்று நினைக்கிறேன். Chadstone சொப்பிங் சென்டரில் வாங்கியது. இல்லையில்லை .. chadstone க்கு பக்கத்தில் இருக்கு DFO இல் வாங்கியது. தொழிற்சாலையில் இருந்து நேரடியாக கொண்டு வந்து விற்பார்கள். CK இல் சேல் போடுகிறார்கள், விலை அரைவாசி என்று செந்தூரன் போன் செய்ய இருவரும் போனோம்.  அப்போது மேகலா என்னோடு மேல்பெர்ன் வந்து இரண்டு வருடம். முதலில் வேண்டாம் என்று அடம் பிடித்தாள். “இதையெல்லாம் மனிசன் போடுவானா?”, “இதுக்கு போய் நூறு டொலரா?”, “நானே தைப்பேனே” என்பாள். “இல்லை, நீ சும்மா வாங்கு, comfortable ஆக இருக்கும்” என்று சொல்லி வாங்கி, இன்றைக்கு அதைப்போல் நான்கு பிஜாமா வைத்திருக்கிறாள்! இரண்டை வாங்கி யாழ்ப்பாணத்துக்கு கூட அனுப்பி அவள் அம்மாவிடம் வாங்கிக்கட்டினாள். ஹா .. மெல்பேர்ன்!

“யாரோ ஒருத்தர் வேலையில்லாம லேசா லுக்கு விட்டிக்கொண்டிருக்கிறார் போல!”

முகத்தை திருப்பாமலேயே சொன்னாள். கள்ளி, தூங்காமல் நோட்டம் விட்டிருக்கிறாள். தெரியும்.  இவளுக்கு நான் தான் எலார்ம்! இரண்டாவது ச்நூஸுக்காக காத்திருக்கிறாள்.

“வேற யாரடி உனக்கு விடிய வெள்ளன almond milk இல coffee போட்டுகொண்டு வந்து பேயன் மாதிரி பார்த்துக்கொண்டிருப்பான்?

கண்முழித்துவிட்டாள். மெதுவாக தலையை திருப்பி, நிமிர்ந்து உட்கார்ந்து, முடியை லாவகமாக சுருட்டி கொண்டை போட்டாள். வெறுங்கையாலேயே முகம் கழுவி வெறுங்கையாலேயே லிப்ஸ்டிக் அட்ஜஸ்ட் செய்து, கண் துடைத்து .. என் கண்ணை நேரே பார்த்து நான் தலையசைத்து ஓகே சொல்லும்வரை சரி செய்துகொண்டே இருப்பாள். Such a pain in the …

“தாங்க்ஸ் டா .. You don’t have to do this … எழுப்பியிருக்கலாம் இல்ல?”

“யோசிச்சன் .. ஆனா தலைவி நேற்று நல்லா களைச்சுப்போயிருப்பீங்க எண்டு தான் நானே”

சொல்லிக்கொண்டு கண்ணடிக்க,

“ஓ ஷட் அப் … முன் lounge க்கு போவமா? நடுங்குது .. முன்னுக்கு ஹீட்டர் போட்டு வோர்ம் பண்ணி வச்சிருக்கிறியா?”

“ஓம் மகாராணி .. எல்லாமே செய்து ரெடியா இருக்கு!”

சோபாவில் இருந்தவுடனேயே எங்கள் குட்டி லைப்ரரியில் இருந்து “A Beautiful Mind” புத்தகத்தை எடுத்து அவள் வாசிக்கத்தொடங்க எரிச்சலாக வந்தது. காலையிலேயே புத்தகமா? மொனாஷில் ஆங்கில இலக்கியம் மாஸ்டர்ஸ் படிக்கபோகிறேன் என்று சொன்னபோதே நான் அலெர்ட் ஆகியிருக்கவேண்டும். யுத்தத்தால் புலம்பெயந்த இனங்களின் இலக்கியங்களின் கருத்தியல் ஒற்றுமை தான் அவள் ரிசெர்ச் டாபிக். ஆனால் இப்போது எல்லா திசையிலும் அவள் வாசிப்பு போகிறது. திடீர் திடீர் என்று ஆயிஷாவாகவோ, லேடீஸ் கூப் ஆகிலாவாகவோ, காபுல் லைலாவாகவோ மாறி என்னென்னவோ பேசுவாள். ஒருநாள் இல்லை ஒருநாள் நீ சந்திரமுகியாகி நான் “என்ன கொடுமை சரவணன் இது” என்று சொல்லவேண்டிவரும் என்று வாய் உன்னினாலும் சொல்லமாட்டேன். அவள் குத்து நிஜமாகவே வலிக்கும்!

ஓரளவுக்கு பாடுவாள். சித்ரா என்றால் உயிர். குளிக்கும்போது இன்னும் நன்றாக பாடுவாள். ஹம்மிங் ஹால் வரை கேட்கும். “அலைபாயும் காதலே அணையாத தீயா? வலித்தாலும் காதலே இனிக்கின்ற நோயா? இசையோடு சேரும் தாளம்” என்னும் போது, அடடா இந்த பிட்ச்சில் எடுத்தால் எப்படி “சுதியோடு பாடும் ராகம்” பாடப்போகிறாள் என்று காதுவைத்து கேட்பேன். கள்ளி, ஷவரை கூட்டிவிடுவாள். ஒன்றுமே கேட்காது.

“என்ன மிஸ்டர் .. மைன்ட் எங்க போகுது … முன்னுக்கு ஒருத்தி இருக்கிறது தெரியேல்லையா?”

“அது அவளுக்கு தெரியுமா? விடியக்காலமையே புத்தகத்தோட குந்தினா?”

“சொறி டியர், நாளைக்கு ஒரு பப்ளிகேஷன் இருக்கு.. சிறுகதை .. அதில “The Beautiful Mind” இல இருக்கிற ஐடியாவை ஒரு இடத்திலா யூஸ் பண்ணலா..”

“ஆ கொப்பி அடிக்கிறீங்களா மெடம்? சொந்தமாக யோசிக்கமாட்டீங்களா நீங்க? எப்ப பார்த்தாலும் இன்ஸ்பிரேஷன் அது இது”

“ஹெலோ .. வாசிக்காம கதைக்க கூடாது … கதை அது இல்ல .. ஒரு இடத்தில சின்னதா இன்ஸ்பைர் பண்ணுறது பிழையில்ல”

“சரி விடு .. உன்னோட கதைச்சு வெல்ல ஏலாது, கதை எப்பிடி வந்திருக்கு?”

“ஸ்டார்ட் பண்ணீட்டன், எப்பிடி முடிக்கிறது என்று … நிறைய மெஸ்ஸியா இருக்கிற மாதிரி ஒரு .. நீ வேற கதைல இருக்கிறியா!”

“வாட்? நானா? பெர்சனல் விஷயம் எழுத்தில வர கூடாதென்று எங்களுக்க ஒரு ஒரு அக்ரீமன்ட்.. மறந்திட்டியா? யூ ..”

“பொறுங்கள் மை டியர் குமரன்! வேற வழியில்ல .. Its a story of a loser! உன்னை விட்டா வேற யாரு சொல்லு?”

“மைன்ட் யுவர் வோர்ட்ஸ் மேகலா .. I am not!”

“ஐயோடா … கோபம் வந்திட்டா? .. You are the biggest loser my boy!”

“இப்ப loser எண்டு சொல்லுறத நிப்பாட்ட போறியா இல்லையா?”

கத்திவிட்டேன். மேகலா என் முகத்தை நேரே பார்த்தாள். கண் வெட்டவில்லை. அந்த உதட்டோர சிரிப்பு. குறையவுமில்லை. கூடவுமில்லை. கிராதகி..

“பாட்டு போடேன் … அந்த சோங் என்னடா .. நம்மவர்ல.. ராஜாவா அது?”

அவளுக்கு தெரியும். எவ்வளவு கோபம் என்றாலும் பாட்டு என்றால் நான் மடங்கிவிடுவேன். பாட்டு பாடி சாப்பாடு ஊட்ட இந்த ஐந்து வருஷத்தில் நன்றாகவே பழகிவிட்டாள்.

“Fool .. அது ராஜா இல்ல .. மகேஷ் .. செத்துப்போனார்!”

போய் எங்கள் சோனி ட்ரீம் மெஷினில் dock பண்ணியிருந்த iPod இல் தேடி செலெக்ட் செய்தேன். பாட்டில் வரும் முன் பியானோ பீஸ் மெல்பேர்ன் பத்து டிக்ரீ குளிர் காலையை மென்மையாய் வருடியது.

“ஹேய் … பியானோ திறந்து எவ்வளவு காலமாயிற்று? ப்ளே பண்ணுறியா?”

“லூசாடா நீ? விடியக்காலம முகம் கூட கழுவயில்ல .. பியானோவா?”

“ப்ச்ச் .. சண்டே தானே, “No time like the present” வா ..”

எழுந்துபோய் மூலையில் இருந்த Upright piano வில் இருந்த போட்டோ ஸ்டாண்டையும் குட்டி பிள்ளையார் சிலையையும் எடுத்து ஸ்டூலில் வைத்துவிட்டு, அவளை பார்த்தேன்.

“சரியான அரியண்டம்டா நீ”

புத்தகத்தை புக் மார்க் வைத்து சோபாவில் போட்டுவிட்டு, வந்து கவனமாக பியானோவை தூசு தட்டி திறந்தாள், இருக்கையை சரி செய்துகொண்டு மிடில் “C” பிடித்தாள். இரண்டு கைகளும் அனாயசமாய் விளையாடியது.

piano girl“கிளாஸ்!”

“தொடங்கவே இல்லை … பொறு .. என்ன பாட்டு”

“இதையே பாடு … பூங்குயில் .. பாடினால்

“ஓ … ஹார்மனி இருக்கே .. சேர்ந்து வாசிப்போமா? சும்மா ட்ரை பண்ணேன்? ”

“வேண்டாம் சாமி! நோட் பிசகினா கத்துவாய் .. நீயே ப்ளே பண்ணு ப்ளீஸ்”

புன்னகைத்துக்கொண்டே ஆரம்பித்தாள். எப்போது இப்படி கேட்டாளோ தெரியாதோ. சரளமான ஆரம்ப இசை, நோட்ஸ் இல்லை, ப்ராக்டீஸ் இல்லை. மனதில் இருக்கும் இசை பியானோவில் வந்து விழுகிறது. யோசித்துக்கொண்டு இருக்கும்போதே திரும்பி தலையே உயர்த்தி பாடு என்று ஜாடை காட்டினாள். 1..2..3..4..1..2..3..4..1..2..3..4..1..2..3..4

“பூங்குயில் பாடினால் நல்ல சங்கீதம்”

“குழந்தையின் அழுகையும் நல்ல சங்கீதம்”

“ஓசை எல்லாம் தீர்ந்து போனால் ஏது சங்கீதம்?”

“சத்தங்கள் இல்லாத மௌனங்கள் சங்கீதம்”

“கண்கள் சங்கீதம்”

பாடும்போது “கீதம்” ஷார்ப்பாகி அவளே பல்லைக்கடித்துக்கொண்டு என்னைப்பார்க்காமாலேயே பியானோவில் தொடர்ந்தாள். கண் மூடி, ஏதோ எல்லாம் இம்ப்ரோவைஸ் பண்ணி, அவள் தன் உலகத்துக்குள் போய்விட்டாள். இனி நிறுத்தமுடியாது. கன்னங்கள் எல்லாம் வாசிப்புக்கு ஏற்ப ஏறி இறங்க, ஒரு மென்மையான் தாளத்தில் தலை ஆட, மெல்ல புடைத்து எழுந்துகொண்டிருந்த கழுத்து அவள் மனதுக்குள் சேர்ந்து பாடுகிறாள் என்றது. மெதுவாக நெருங்கி அந்த பாடும் கழுத்தில் பொறாமையாய் … ஒரு முத்தம் இட, கூச்சத்துடன் “ச்சீ” என்று திரும்பினாள்.

“ஐ லவ்  யூ .. மேகலா”

..

..

“என்ன? .. குமரன் .. நீங்க .. என்னவோ இப்ப .. சொன்னனீங்க … come again?”

அதிர்ந்துபோய் மேகலா கேட்டபோது நெஞ்சில் திக்கென்றது. வெயில்,  கொழும்பு பல்கலைக்கழத்து மகோகனி நிழலையும் தாண்டி சுட்டது. தினமும் அலுவலகம் போகும் வழியில் அவளை கம்பசில் இறக்கிவிடுவதுண்டு. தூரத்து சொந்தம். இரண்டு வருஷத்துக்கு முதல் யாழ்ப்பாணத்தில் இருந்து ஆங்கில இலக்கியம் படிக்கவென்று ஒருத்தி கம்பஸ் வந்திருக்கிறாள் என அம்மா சொன்னபோது முதலில் நம்பவில்லை. அப்புறம் அவள் சுண்டுக்குளி என்றவுடன் ஆகா இது ஆபத்தான கேஸ் ஆயிற்றே. சுண்டுக்குளிகாரிகளுடன் சும்மா பேசினாலே இங்கிலிஷ் வந்து விழுமே! இவள் வேறு ஆங்கில இலக்கியம்.  முதல் நாள் சந்தித்த போது கவனமாக வெறும் ஹாய் மட்டும் சொல்ல திருப்பி ஹவ் ஆர் யூ என்றாள். நாங்கள் வசிக்கும் வெள்ளவத்தை 44வது லேன் அப்பார்ட்மென்ட் ப்ளாக்கில் தான் அண்ணன்காரனுடன் வசிக்கிறாள். வந்து இரண்டாம் வாரமே ஒரு இங்க்லீஷ் புத்தகம் கொண்டுவந்து நீட்டினாள். “Interpreter of Maladies”.  வாசிச்சு interpret பண்ண அடுத்த நாளே பூபாலசிங்கத்தில் லிப்கோ டிக்ஷனரிக்கு ஆயிரம் ரூபாய் அழவேண்டியிருந்தது. தெரியாது என்று சொன்னால் சென்ஜோன்ஸ் மானம் என்னாவது?

கணத்தில் வந்து போன நினைவுகளில் ஒரு சிரிப்பும் சேர்ந்துகொள்ள பீம் பீம் என்று பக்கத்தால் 138ம் நம்பர் பஸ் வேகமாக தாண்டிப்போனது. புட்போர்டில் பத்து பாடசாலை மாணவர்களாவது தொங்கிக்கொண்டு; தப்பான இடத்தில் சொல்லிவிட்டோமோ? வேலைக்கு போகும் அவசரம். அரை மணியில் அவளுக்கு லெக்சர்ஸ். இந்த ட்ராபிக் புகை. என் குட்டி மாருதிக்குள், ரோட்டுக்கரையில் ச்சே.. இப்பிடியா காதல் சொல்லுறது? பொறுத்திருந்து இன்று மாலை சைனீஸ் டிராகன் கூட்டிக்கொண்டு போய் .. வைன் எடுத்து .. வைன் குடிக்கமாட்டாளே! கேட்டுப்பார்த்திருக்கலாம். ஒரு நாள் தானே. ப்ச்ச்.. சொல்லியாச்சு .. இனி யோசிக்கக்கூடாது.

ஓம் மேகலா .. I meant it… I think I am in ..…..

ஓ .. stop it குமரன் .. வேண்டாம் ப்ளீஸ் சொல்லாதீங்க

லிசின் மேகலா … இது சரியான தருணம் இல்ல தான் .. ஆனா மனசில ஆசையை வைச்சுக்கொண்டு உன்னோட பழகிறது அவ்வளவு ..

Seriously .. where is it coming from குமரன்? .. ஏன் திடீரென்று .. இப்ப?

எங்களுக்குள்ள ஈஸியா பொருந்தும் மேகலா .. யோசிச்சுப்பார் .. ஒரே வீட்டிலே ..ரெண்டு பெரும் கதைக்கிற விஷயங்கள் .. We share a lot in common மேக..

Are you telling this… ஹா .. நீங்களா? … இத ஏன் எனக்கு முதலிலேயே சொல்லேல்ல குமரன்?

ஒரு வருஷம் மேகலா .. ஒரு வருஷமா யோசிச்சு யோசிச்சு .. உனக்கு நான் சரிவருவனா? என்னை நீ சமாளிப்பாயா? உன்னோட இன்டெலக்ஷுவலிட்டிக்கு ஈடு கொடுப்பேனா .. மண்டைய போட்டு உடைச்சன் மேகலா .. காந்தனோட கூட பேசிப்பார்த்தாச்சு .. கேட்டிட்டு கட்டிப்பிடிச்சான் மேகலா.. அவ்வளவு சந்தோசம் .. ..

கடவுளே .. என்ன நடக்குது இங்க? இது … ப்ச்ச் .. குமரன் .. நீங்க என்னோட க்ளோஸ் பிரெண்ட் .. ஏன் ஒரு மெண்டர் கூட .. எனக்கு கொழும்பு சொல்லிக்கொடுத்து … நாலு பேரோட பேச பழக்கி .. ஐ ரியலி லைக் யூ குமரன் .. You are a too good of a guy to say NO .. ஆனால் என்னால முடியாது .. இந்த மாதிரி நான் யோசிக்கவேயில்ல .. ப்ளீஸ் டோன்ட் ஆஸ்க் மி திஸ் .. ஒண்டுமே கேட்காதீங்க!

மேகலா .. ஆனா ..

ப்ளீஸ் குமரன் .. இட்ஸ் ஓவர்! இட்ஸ் ஜஸ்ட் ஓவர்!

காரின் ஓடியோ ப்ளேயரையே வெறித்துப்பார்த்துக்கொண்டு இருந்தேன். “பூங்குயில் பாடினால்” பாட்டு. பேசுவதற்காக pause பண்ணியபோது செல்லமாக கோபப்பட்ட மேகலா. இனி இல்லை என்ற போது கிடு கிடுவென உடம்பு, காருக்குள் திடீரென்று பத்து டிகிரி ஏஸி போட்டது போல நடுங்க ஆரம்பித்தது. என்ன செய்வது என்று தெரியவில்லை. சீட் பெல்டை சட்டென்று மாட்டினேன். கார் யன்னலை மீண்டும் ஏற்றிவிட்டு கண்ணாடியால் வெளியே பார்த்தேன். பல்கலைக்கழகம். கையில் நோட்ஸ் புக்ஸ், பேனாவுடன் ஐந்தாறு மாணவர்கள் மரத்தடியில். தமக்குள்ளேயே சிரித்து, கதைத்து ஏதோ எழுதிக்கொண்டிருந்தனர். அசைன்மன்ட் சப்மிஷன் இன்றாக இருக்கலாம். இரண்டு வாங்குகள் தள்ளி ஒரு ஜோடி. கூட்டாக சேர்ந்து ஒரே ஐபோடில் பாட்டுக்கேட்டுக்கொண்டு ஒரே நோட்ஸை ஷேர் பண்ணிக்கொண்டு ..

யாரு மேகலா?

அவள் பக்கம் திரும்பாமலேயே கேட்டேன். “அப்படி யாரும் இல்லை” என்று சொல்லேன் ப்ளீஸ். “இப்ப வேண்டாம் பிறகு பேசலாம்" என்றாவது சொல்லேன். கம்பஸ் முடியும் மட்டும் வெயிட் பண்ணி கேட்கவா? யாழ்ப்பாணம் திரும்பிப்போகலாம். அங்கேயே கம்பசில் நான் லெக்சர் பண்ணலாம். கொழும்பில் தான் இருக்கவேண்டும் என்று இல்லை. பிள்ளையாரப்பா .. அவளை மட்டும் நல்ல பதிலா சொல்ல வை ப்ளீஸ்.

athகோகுல்!

கோகுலா?

ம்ம் .. நீங்க கூட மீட் பண்ணியிருக்கிறீங்க .. கம்பஸ் வாணி விழாவில இன்ரடியூஸ் பண்ணினேனே .. இத முறையா ரெண்டு பெரும் உங்களுக்கு சொல்லுவம் எண்டு .. …

..

..

அந்த மெடிக்கல் ஸ்டுடன்டா? சாவகச்சேரியா இல்ல .. முகமாலை .. Wherever the ..

மேகலா பேசவில்லை. இன்னொரு 138 பஸ் தாண்டிப்போனது. அதே புட்போர்ட், அதே போல மாணவர்கள். அதே மரங்கள். அதே அசைன்மன்ஸ்.. அதே ஐபோட் ஜோடி. பத்து நிமிஷத்துக்கு முன் இருந்த உலகம் மாறாமல் அப்படியே இருந்தது. என்னதை தவிர.

“We all came out of Gogol's overcoat...”

திரும்பாமல் சொன்னேன். அவளை  பார்க்கும் திராணி இல்லை.  திரும்பினால் உடைந்துவிடுவேன். முட்டை மாதிரி அழுதுவிடும் குணம். வேண்டாம்.

"Overcoat, பியடோர் தாஸ்தாவேஸ்கி கதை ...அப்படி எண்டா நான் குடுத்த புத்தகம் வாசிச்சிருக்கிறீங்க .. அதுவும் வசனம் ஞாபகம் வைக்கிற அளவுக்கு .. இல்லை எண்டு எனக்கு பொய் ..”

இதான். இந்த அறிவுஜீவித்தனம் தான் என்னை கொல்லுவது. ஒரு வசனம் சொல்லி முடிக்க முதல் மிச்ச வசனம் சொல்லுவாள். புத்தகம் கொடுப்பாள். வாசிக்கவில்லை என்றால் மூன்று நாளைக்கு மூக்கை நீட்டிக்கொண்டு.ப்ச்ச். எல்லாத்தையும் மிஸ் பண்ணிவிட்டேன். மடையன்.

“உனக்கு தோணவேயில்லையா மேகலா? ஒரு நாள் கூடவா? அட்லீஸ்ட் ஒரு மொமென்ட் கூட இல்லையா?”

Gogol is a nice guy குமரன் .. உங்களுக்கு அவன பிடிக்கும்!

“அவன” … அவன எப்ப மீட் பண்ணினனி? கனகாலம் இருக்காதே?”

ஆறு மாசம் இருக்கும் குமரன் .. ஒரு மாசத்துக்கு முன்னால தான் அவன் ..

..

..

ஒரு மாச ….அடச்சீ .. மடையன் .. மடையன் .. மடையன் .. இப்பிடி ஒரு மடையன உலகத்தில பார்க்கேலுமா? ஒரு வருஷமா பக்கத்திலேயே இருந்தும் .. பிடிச்சும் .. கேட்காம .. ச்சீ மடச்சாம்பிராணி..

குரல் உடையத்தொடங்கியது. காரின் அமைதி இன்னமும் மிரட்டியது. யன்னலை மீண்டும் இறக்கி விட்டுவிட்டு பாட்டை மீண்டும் ப்ளே பண்ணினேன். “கண்ணீர்த்துளிகள் தானே கலைகளின் வெகுமானம்”. எஸ்பிபி குரல் உடையாமல் பாடியது.

குமரன் .. ப்ளீஸ் . இப்பிடியெல்லாம் பேசாதீங்க. its all over .. உங்கள நான் .. பாதிச்சிருந்தா ரியலி சொறி. You are my best friend குமரன் .. gem of a friend .. வேற யார் கூட நான் இலக்கியம் கதைப்பன் சொல்லுங்க?

Exactly மேகலா! .. சரி .. விடு .. I will be ok .. கொஞ்ச நாளைக்கு கஷ்டமா .. ஆனால் I will get through this ..sorry if I ..

என்ன பேசுவது என்று புரியவில்லை. நான் ஏன் இதற்கு தயாராகவில்லை?  அவள் ஓம் சொல்லுவாள் என்று எப்படி அவ்வளவு நம்பினேன்? அவள் ஏன் எனக்கு சம்மதிக்கவேண்டும்? என்னிடம் அப்படி என்ன இருக்கிறது? நத்திங். ஒரு வேலை. அது கூட இரவு எட்டு மணிக்கு திரும்பி வரும் வேலை. After all I am a bloody loser. இது முதலிலேயே தெரிந்திருக்கவேண்டுமே. ச்சே ..

எனக்கு கிளாஸுக்கு டைம் ஆயிட்டுது குமரன் .. போகோணும்..

Fine மேகலா ..  Don’t take it hard .. நான் கேட்டேன் என்றதையே மறந்திடு ப்ளீஸ் .. பின்னேரம் பிக்அப் பண்ண வரவா?

இல்ல குமரன் .. எனக்கு ஏர்லியா முடிஞ்சிடும். பஸ்ல போயிடுவன் .. See you then .. Take care

மெதுவாக கார் கதவை திறந்துகொண்டு வெளியேறினாள். நாலைந்தடி போயிருப்பாள். நின்று திரும்பி நிதானமாக வந்து, எனக்கு பக் பக் என்றது. கள்ளி பொய் தானே?

உங்களுக்கு sure ஆ ஒரு நல்ல பொண்ணு .. என்ன விட கெட்டிக்காரியா .. அழகா .. நீங்க அடிக்கடி சொல்லுவீங்களே நீட்டா curly hair ஓட .. கிடைக்கும் …அந்த பிரிவோம் சந்திப்போம் “ரத்னா” போல!

சிரித்தேன். நீ தான் தமிழ் இலக்கியம் வாசிக்கிறதே இல்லையே மேகலா? எனக்கு தெரியாதா? நான் எப்பவோ சொன்னதை ஞாபகம் வைத்து. ச்சே இவளை போய் மிஸ் பண்ணினேனே? எப்பிடிப்பட்ட மனுஷன் நான்?

ரத்னாவுக்கு ஒரு ஹாய் சொல்லு மேகலா!

சொல்லிக்கொண்டே காரை ஸ்டார்ட் பண்ணி மெயின் றோட்டுக்குள் ஏறும்போதுதான் ஞாபகம் வந்து,

அடடா கதவை சரியாக பூட்டினேனா?

Lonelinessபூட்டியிருக்கலாம். ம்கூம். என்னை நம்பமுடியாது. இப்படித்தான் சென்றவாரமும் ஒரு நாள் அலுவலகம் முடிந்து திரும்பி வந்து பார்த்தால் வீட்டுக்கதவு லாக் பண்ணாமல் அப்படியே திறந்து கிடந்தது. காரை யூ டேர்ன் அடித்து  மீண்டும் வீட்டுக்கு வந்தேன்.  நினைத்தது போலவே கதவு திறந்தே இருந்தது. உள்ளே போய் பாடிக்கொண்டிருந்த சோனி ப்ளேயரை நிறுத்தினேன். திரும்பினால் lounge சோபாவில் “The Beautiful Mind“ புத்தகம் அப்படியே இருந்தது. பியானோ திறந்து, ஸ்டூலில் போட்டோ ஸ்டாண்டும் பிள்ளையார் சிலையும்; இரண்டு coffee cups. ஒன்றில் almond milk ஆடை படிந்து குடிக்காமல் அப்படியே; மற்றயது காலியாய்; புத்தகத்தை எடுத்து தட்டில் சரியான இடத்தில் வைத்துவிட்டு, பியானோவை மூடி, மேலே போட்டோவையும் பிள்ளையாரையும் வைத்தேன். இரண்டு கப்புகளையும் உள்ளே குசினிக்குள் போய் பேசினுக்குள் ஊற்றிவிட்டு டிஷ் வோஷரில் போட்டேன். எல்லா லைட்களும் ஒன் செய்யப்பட்டு ஒருந்தது. ஒவ்வொன்றாக நிறுத்திவிட்டு மீண்டும் வாசலுக்கு வந்து, தயக்கத்துடன் திரும்பிப்பார்த்தால்; ….. என் வீடு இது. காலை எட்டுமணிக்கும் இருட்டாய். இனம் புரியாத பயம் வீடு முழுக்க விரவி…… என்ன வீடடா இது?

மீண்டும் உள்ளே ஓடினேன். பெட்ரூம் லைட்டை போட்டேன். உள்ளே பாத்ரூம் லைட் போட்டேன். வார்ட்ரோப் லைட், லிவிங் ரூம், ஏனைய பெட்ரூம்கள், ஸ்டடி ரூம் என்று ஒவ்வொரு லைட்டாய் போட்டேன். சுற்றி சுற்றி பார்த்தால் இன்னமும் வீடு இருட்டினாப்போல. ஓடிப்போய் பாட்டை ப்ளே பண்ணினேன். புத்தகத்தை எடுத்து சும்மாவேனும் திறந்து வைத்தேன். ம்கூம் குளிர தொடங்கியது. ஜக்கட் சிப்பை இன்னமும் இழுத்துவிட்டாலும் நடுங்கியது. பியானோவை மீண்டும் திறந்து வைத்து தூசு தட்டி .. இருட்டு இப்போது வேகம் பிடித்தது. துரத்தியது.  பக்கத்தில் இந்தா.. தொட்டுவிடும் தூரத்தில் இருட்டு என்னை நோக்கி நெருங்க நெருங்க .... .. விறுவிறுவென்று வீட்டை விட்டு திரும்பிப்பார்க்காமல் ஓடினேன். காரை ஸ்டார்ட் செய்து யன்னல் ஏத்தி, ஹீட்டர் போட்டு மெயின் ரோட்டில் ஏறும்போது தான்,

“கதவை சரியாக பூட்டினேனா?”

 

------------------------------------------------------------- முற்றும் ----------------------------------------------------

வியாழமாற்றம் 12-04-2012 : இராவணன் ஒரு இலக்கிய கும்மி


டேய் ஜேகே

TNA-1
சம்பந்தர், விடமேறியோன்! 
திருகோணமலை
தம்பி ஜேகே, நாங்கள் இப்பொழுது மிகமுக்கியமான கட்டத்தில் இருக்கிறோம். தமிழ் மக்களின் உரிமைகளை வென்றெடுக்கவேண்டுமானால் அதற்கென்று ஒரு முறை இருக்கிறது. வரையறை இருக்கிறது. ஆனால் எம் செயற்பாடுகளில் குறை இருக்கிறது என்று கூறிக்கொண்டு ஒரு சில புத்திஜீவிகள் புறப்பட்டு இருக்கிறார்களே! யார் அவர்கள்?
ஐயா! எனக்கு அரசியல் தெரியாது என்று சொல்லிக்கொண்டுதான் கக்கூஸுக்கு கூட போக வேண்டிய நாட்டு நிலைமை! வெளிநாட்டு பாஸ்போர்ட் இல்ல பாருங்க! மருண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய் எண்டுவாங்கள். எனக்கு அது ஓகே! ஏனெண்டா வெளிச்சம் இல்லாத இருட்டில இருக்கும்போது பேய் கூட வெளிச்சம் கொடுக்கும் இல்லையா? இப்படி ஏதாவது அலம்பிக்கொண்டு ஆரம்பித்தால் தான் அவ்வளவு சீரியஸா வாசிக்கமாட்டாங்கள் ஐயா. பொறுங்க மாட்டருக்கு வாறன்!ஆல்ரெடி வவுத்த லைட்டா கலக்குது!
Sprit_of_Bangla_Join_Hand_489962bc14b90[1]உந்த புத்திஜீவிகளை பற்றி நானும் கேள்விப்பட்டேன். விசாரிச்ச அளவுல ஆட்கள் ஓகே! “எங்கட ஆட்கள்” தான். குடிவெறி இல்ல! நல்ல சம்பளம்! மருத்துவர்கள், பொறியியலாளர்கள், விரிவுரையாளர்கள், இலக்கியவாதிகள், மீனவ சங்க பிரதிநிதிகள் என ஈழத்தின் வடக்கு கிழக்கில், சமூகத்தின் பல தளங்களிலும் இருந்து செயலாற்றும், அரசியல் சார்பற்ற பெரியோர்கள். இதற்குள் புலம்பெயர் தமிழர் இல்லாதது இன்றைய நிலைமையில் நல்ல விஷயம்.  யார் செய்த புண்ணியமோ நல்ல நோக்கத்துக்காக சேர்ந்து இயங்குகிறார்கள்.
ஈழத்து அரசியல், பாராளுமன்ற அரசியல்வாதிகள், தீவிரபோக்குள்ள இளைஞர்கள் கைகளில் இருந்த காலத்தில் தூரநின்று தயக்கத்துடன் வேடிக்கை பார்த்த இந்த மாதிரி ஆட்கள், இப்போது வாய் திறந்திருப்பது கொஞ்சம் நிம்மதி தரும் விஷயம். மிரட்டல்கள், அச்சுறுத்தல்கள், மலினப்படுத்தல்கள் அனைத்தையும் தாண்டியும் அவர்கள் செயலில் இருப்பது, இவர்கள் சீரியஸாக இறங்கியிருக்கிறார்கள் என்பதை காட்டுகிறது! Need for the hour! ஆனால் யாழ்ப்பாணத்து “நண்டு” குணம் வந்து ஒருவரை ஒருவர் இழுத்து விழுத்தாமல்! தொடர்ந்து இவர்கள் செயல்பட “நல்ல புத்தியை கொடு தாயே” என்று எல்லாம் வல்ல நயினை நாகபூஷணி அம்மன் திருவடிகளை என் சிரமேற்கொண்டு பணிந்து வணங்கி … ஐயோடா .. ஓவரா எழுதீட்டமோ!
 
imagesபாலா, மதியுரைஞர்
ஆஸ்திரேலியா
ஜெனீவா தீர்மானம் முடிவடைந்துவிட்டது? அடுத்து என்ன தமிழ் சிங்கள புத்தாண்டா? கூட்டமைப்பு இந்த நேரத்தில் என்ன செய்யவேண்டும் என்று நினைக்கிறாய்? சரி வந்த மட்டுக்கும் லாபம் என்று 13வது திருத்தச்சட்டத்தை ஏற்றுக்கொள்ளலாமா?
வாங்க பாஸ்! வாரா வாரம் இப்படி ஒரு கேள்வியை தபாலட்டையில் அனுப்பி என்னைய கோர்த்துவிடாட்டி உங்களுக்கு தூக்கமே வராதே! நமக்கெல்லாம் வெள்ளைவான் சீட்டு அவ்வளவு சௌகரியம் இல்லை தல.. வாணாம்! ஓகே ஓகே இந்த வாரம் மட்டும்!
கூட்டமைப்பு என்ன செய்யவேண்டும் என்பதை நான் இங்கே இருந்துகொண்டு சொன்னால் நடுவிரல் தான் காட்டுவார்கள்! அதனால் அங்கேயே வடக்கு கிழக்கில் இயங்கும் இந்த புத்திஜீவிகள் என்ன நினைக்கிறார்கள் என்று பார்ப்போம்!
தற்சமயம் அங்கே நிலைமை என்ன? சம்பந்தன் போன்ற தலைவர்கள் நீண்ட போராட்டத்தால் கொஞ்சம் ஆயாசப்பட்டு விட்டதாய் தெரிகிறது. கிடைத்ததை பெற்றுக்கொண்டு மனேஜ் பண்ணுவோம் என்பதே அவருடையதும் சுமந்திரனதும் எண்ணமாக இருக்கலாம். கொஞ்சம் இளரத்தமான ஸ்ரீதரன், சுரேஷ் போன்றவர்கள் இறுக்கிப்பிடித்து ஒழுங்கானதை பெறவேண்டும் என்ற நிலையில். கஜேந்திரகுமாரோ, ஒரு நாடு இருதேசம் என இன்னொரு எக்ஸ்ட்ரீம். மத்தியில் கூட்டாட்சி, மாநிலத்தில் சுயாட்சி என்ற தாடிக்கார அண்ணே “என்ன கையை பிடிச்சி இழுத்தியா” என வடிவேல் கணக்கா கேட்டுக்கொண்டு இருக்கிறார்! சங்கரியார் தன்னுடைய பரந்தன் வயலுக்க கூட கால்வைக்க ஏலாத நிலைமை! மனோ அண்ணா அமெரிக்கன் எம்பசியில் ஒரு வேலைக்கு அப்பிளை பண்ணுவோமா என்று யோசிக்கிறாராம்! இந்த அல்லோகல்லோகத்துக்கு மத்தியில் உனக்கு வடக்கு முதலமைச்சர் பதவி, எனக்கு கிழக்கு முதலமைச்சர் என்று பதவி இழுபறி வேறு இருக்கிறது. இப்படி போகிறது உள்வீட்டு சீன்!
இந்த திருவிழா நெரிசலில், தேர் இழுக்கிறது கஷ்டம் என்று நினைத்து எங்கே இவர்கள் 13ம் திருத்தத்தை வைத்தே வெளிவீதி “சுற்றிவிடுவார்களோ?” என்ற பயத்தில் தான் புத்திஜீவிகள் களத்தில் இறங்கி இருக்கிறார்கள். உலக நாடுகளும், கலியாணத்தை கட்டி வச்சிட்டா அப்புறம் எல்லாம் சரியாகிடும் என்று நினைப்பதால், எங்கள் பிரச்சனை 13ம் திருத்தத்துடன் அவுட்டாக்கப்பட்டுவிடும் என்று அவர்கள் பயப்படுவதிலும் காரணமில்லாமல் இல்லை!
அப்படி என்ன தான் 13ம் நம்பரில் சிக்கல்? 13இல் ஒரு அதிகாரமுமில்லை என்பது ஒரு புறம். வழுக்கை தலையில் இருக்கும் ஓரிரு மயிர்களையும் 18ம் திருத்தம் புடுங்கிவிட்டது என்பது இன்னமும் பரிதாபம். அதிகம் இழுக்காமல், ஒரு சாம்பிள் clause தருகிறேன்!
13th Amendment, Article 154F(1):
"There shall be a Board of Ministers with the Chief Minister at the head and not more than four other Ministers to aid and advice the Governor of a Province in the exercise of his functions. The Governor shall in the exercise of his functions act in accordance with such advice, except in so far as he is by or under the Constitution required to exercise his functions or any of them in his discretion."
எல்லா வீதிகளும் ரோம் நகரத்தை நோக்கியே என்பது போல, ஆணி புடுங்கும் அதிகாரம் கூட தெளிவாக ஆளுநரை கேட்டே செய்யவேண்டும் என்று சொல்லியிருக்கிறது. ஆளுநர், நிறைவேறு அதிகாரம் கொண்ட ஜனாதிபதியால் நியமிக்கபடுவார். அப்போ முதலமைச்சர்? பெப்பே தான்!
ஒன்றுமே வாங்காவிட்டால், ஜட்டி கூட தேறாது என்ற சுமந்திரனின் வாதத்தையும் புத்திஜீவிகள் புறக்கணிக்கவில்லை! 13ஐ கூட்டமைப்பு ஏற்றுக்கொண்டால் அதுவே நிரந்தர தீர்வாகிவிடும் இல்லையா? அவர்கள் இல்லாமல், ஒரு முகாமைத்துவ குழு ஏற்றுக்கொண்டால் அது வெறும் இடைக்கால நடைமுறை தானே! எனவே கூட்டமைப்பு தொடர்ந்து நிலையான உரிமைக்காக போராடிக்கொண்டு இருக்க, இடைக்கால தீர்வாக 13ஐ ஒரு administrative committee யிடம் கொடுத்துவிடலாம். இதை தான் புத்திஜீவிகள் சொல்லுகிறார்கள். Give it a thought folks!
என்ன ஆச்சரியம் என்றால், இவ்வளத்தையும் எழுதினாப்பிறகும் எனக்கு ஒரு மண்ணும் விளங்கேல்ல! இதால தான் அரசியல் படலைக்குள் வராமல் பார்த்துகொள்கிறேன்! ஷப்பா எப்படியெல்லாம் சமாளிக்கவேண்டியிருக்கு!
  83487
44339-ShaneWarneஷேன் வோர்ன், மெல்பேர்ன்
ஹேய் ஜேகே! ஐபிஎல் ஸ்டார்ட் பண்ணியாச்சு! நீ யாருக்கு சப்போர்ட்?
இது என்ன கேள்வி! வங்கக்கடல் எல்லை! அவன் சிங்கம் பெற்ற பிள்ளை! Prince of Kolkata! Sweetest timer of offside! Merciless hitter off down the track! ஒரே நிலா, ஒரே சூரியன், தலைவர் சவுரவ் கங்குலியின் பூனா வாரியர்ஸுக்கு தான் நம்மளோட சப்போர்ட்! தல இந்த வருட ஐபிஎல் இல் முதலாவது டபிள் செஞ்சரி அடிக்க, எல்லாம் வல்ல நயினை நாகபூஷணி அம்மனின் திருவடிகளை சிரமேற்கொண்டு வணங்கி ….  ஐயோ அம்மா!!
 
TRடீஆர், மயிலாடுதுறை!
டேய் ஜேகே, நாளைக்கு புத்தாண்டு கொண்டாடுவியா? நீ தமிழனா? இந்துவா? ஆரியனா? திராவிடனா?
ஆகா, ஆரம்பிச்சிட்டீங்களாடா? போன தைப்பொங்கலுக்கு விஷயம் தெரியாம ஒரு மேடையில ஏறி நின்னா, சுற்றும் முற்றும் பயில்வான்கள் எல்லாம் உறுமிக்கிட்டு இருந்தாங்க. மேடையிலேயே பேஸ்மண்ட் நனைஞ்சு போச்சு! பயத்தில என்னா மாட்டாருன்னு கேட்டா, கவிஜ போட்டியாம்! என்ன கருமம்டா! எனக்கு ஹன்சிகாவை தானே தெரியும் என்று, அவளை மனதில் இருத்தி தமிழ் பெண்ணை பற்றி நானும் ஒண்ண வெளிய விட்டேன்! அத போயி கவுஜன்ன சொல்லி தக்காளி கைதட்டு கிழிஞ்சுதுன்னா பாரேன்! அதில இருந்து ஒரு பிட்டு பாஸ்!
தைப்பெண்ணே உன்னிடம் சங்கடமான கேள்வி!
ஒரு தாயிடம் கேட்கக்கூடாத கேள்வி!
தமிழ் வருடம், அவன் உனக்கு பிறந்தானா?
இல்லை சித்திரைக்கு பிறந்தானா?
ஐயா உன்னதாம்!
அம்மாவோ இல்லையாம்!
தமிழனே!
தகப்பனை தான் தொலைத்துவிட்டாய்!
தாயை கூடவா?

sakuntlaமேகலா, இதயனூர்
ஜேகே, வர வர உண்ட பதிவுகள் எல்லாம் ரொம்பா நீநீநீநீநீநீநீநீநீநீளமாக போகுதே? வாறவங்க ஆற ஆமர இருந்து வாசிப்பாங்களா?
என்னம்மா! நீயே இப்படி சொன்னா? வியாழ மாற்றம் என்பது ஒரு கதம்பம்! Reader’s Digest, விகடன் போல! ஒரே மூச்சில் படிக்கவேண்டும் என்பதில்லை! ஒரு வாரம் இருக்கிறதே! கொஞ்சம் கொஞ்சமாக படிக்கலாம். ஆங்காங்கே இருக்கும் லிங்க் எல்லாம் பார்க்க நேரம் தேவை! அதைவிட இதை எழுதுவதும் ஒரு அனுபவமே! உதாரணத்துக்கு 13ம் சட்டதிருத்தம் பற்றி சும்மா போகிற போக்கில Facebook கமெண்ட் போல எழுத முடியாது இல்லையா? இரண்டு மணிநேரமாக வாசித்தே அந்த கேள்விக்கு பதிலளிக்கவேண்டி வந்தது. ஒரு முயற்சி தான்! நீ கூடவா வாசிக்கமாட்டாய் கண்ணு?
 
10xsxew
420554_299166666815607_100001668275977_748399_347894599_nமன்மதகுஞ்சு, வவுனியா
குஷ்புவின் இடத்தை பிடிக்கபோவதாக ஹன்சிகா சூளுரைத்திருக்கிறாரே?

சுந்தர்.சி க்கு உடம்பு முழுக்க மச்சம்டா!

 

வாங்க பில்லியனெயர் ஆகலாம்!

2003ம் ஆண்டு பல்கலைக்கழகத்தில், Multimedia Systems என்ற இருந்த பாடத்துக்கு ஒரு போட்டோ எடிட்டிங் மென்பொருள் எழுதவேண்டும். ImageJ என்ற ஒரு ஓபன்சோர்ஸ் மென்பொருளை எடுத்து, அதில், கட்டிங், டிங்கரிங் செய்து, செப்பனிட்டு, பதப்படுத்தி கொடுத்ததில் A+ வந்தது! சந்தோஷத்தில் கிடைத்த வேலையில் சேர்ந்து அங்கே ஓரளவுக்கு ஆணி புடுங்கி, அவர்கள் சிங்கப்பூர் போய் ஆணி புடுங்கடா என்று அனுப்ப, அப்படி இப்படி என்று எட்டு வருஷத்தில் புடுங்கியது எல்லாமே தேவையில்லாத ஆணி என்பது வேற விஷயம்!
அதே இமேஜ் எடிட்டிங் filters ஐடியாவை இரண்டு வருடங்களுக்கு முன்னம், காலத்துக்கேற்ற HTML5 இல் ரெண்டு பேர் எழுதி, அதை முதலில் iOS இல் ஏத்தி, அப்புறம் அண்டோரோயிட், அண்ட்ராயர் என எல்லா தளத்திலும் எழுதிவிட, ஆறே மாதத்தில் ஒரு மில்லியன் பாவனையாளர்கள். இரண்டு வருடத்தில் தக்காளி முப்பது மில்லியன் யூசர்ஸ்!  இதன் வெற்றியை கண்ட Facebook அதை  தானே சுவீகரித்துக்கொள்ள பேசிய விலை எவ்வளவு தெரியுமா? மூச்சை பிடியுங்கள்! பில்லியன் டொலர்கள்!
ச்சே இது தெரிஞ்சா அப்பவே செய்திருக்கலாமே? இது நம்ம ஏரியாவே! வட போச்சே என்று நான் அழ, அண்ணன் சயந்தன் SurveyMonkey ஐடியாவை தான் சின்னவயதிலேயே உருவாக்கிவிட்டதாக சொல்லி அழுததும் ஞாபகம் வருது.
ஐடியா இருந்தாலும் எங்களால் ஆணி புடுங்கமுடியவில்லை. ஆனால் சிலிக்கன் வாலியில் ஒண்ணுக்கு போனா கூட மில்லியன் டாலர் கிடைக்குதே பாஸ்? எப்பிடி? 
அங்கே தான் venture capital என்ற விஷயம் வருகிறது! இளையராஜாவுக்கு கிடைக்காத ஒஸ்கார் ரகுமானுக்கு கிடைத்த அதிசயமும் இது தான். சரியான முதலீட்டாளர்கள், மார்க்கட்டிங், சேல்ஸ் என்ற ஒரு முழுச்சங்கிலியும்(ecosystem) ஒரு சின்ன ஐடியா பூவாகி, மொட்டாகி, விதையாகி மரமாக தேவையாகிறது. வெறும் “வண்டு உட்கார்ந்த மலர்” வகை கவிதை எழுதிக்கொண்டு இருந்தால் படலை தான் மிஞ்சும்!
ஆக நம்மவர்கள் ஏதாவது செய்ய ஆரம்பித்தால் உருப்படியாக உதவவேண்டும்! Venture investment இல் இருந்து, sales, marketting என்று செய்து கலக்க வேண்டும்! அதற்கு “Tipping Point” என்ற புத்தகம் முதலில் வாசிக்கவேண்டும்!!
vadivelu09மன்மதகுஞ்சு : அடேய் பனங்கொட்டை தலையா? நீ முக்கி முக்கி எழுதினாலும் சின்ன லைக்கு கூட பண்ண மாட்டேங்கிறாங்க. இதுக்குள்ள venture capital ஆ? ஷப்பா!!

இராவணன் ஒரு இலக்கிய கும்மி!!

actress.madhumitha.arai-en-305-il-kadavul-movie-stills-020இங்கே மெல்பேர்னில் மலபார் உணவகத்துக்கு நானும், அப்பாவும், பாலாவும், கேதாவும் வீணாவும் போய் உண்டு களித்து அந்த களை தொண்டர்க்கும் உண்டோ என்றபடி “சள்” அடித்துக்கொண்டு இருந்தோம்! சுமந்திரனில் ஆரம்பித்து ஜெயராஜ்,  பெரியார், ஹிட்லர் முதல் சௌக்கார் ஜானகி வரை எல்லாம் டச் பண்ண கடைசியில் “கடவுள்” வந்தார்! வழமை போலவே கார சாரமான விமர்சனம் நான் பாவிக்கும் தமிழில் வந்து முடிந்தது!  சீரியசான கொல்லைப்புறத்து காதலிகளில் கூட எதுக்கு சம்பந்தமில்லாத இந்திய தமிழ் கலக்கிறாய்? என்று பாலா கேட்க எனக்கு கோபம் வந்து “எங்கே ஒரு சாம்பிள்” சொல்லு பார்க்கலாம் என்றேன். அது “காப்டன்” வானதியா? இல்லை “கப்டன்” வானதியா? என்று கேட்டானே ஒரு கேள்வி. அது வேண்டுமென்றே எழுதவில்லை. Transliteration ஆல் வந்த தவறு, இவ்வளவு உன்னிப்பாக கூட என் எழுத்தை வாசிப்பார்களா என்ன?
ravanaஇவன் இராவணன் இருக்கிறான் இல்லையா? யுத்தகளத்தில் இல்லாத தகிடுத்தத்தங்கள் செய்கிறான். ஒரு அம்பை விடுகிறான். அம்பு மழையே விட்டு பார்க்கிறான். மாயையை உருவாக்குகிறான். வேறு ஏதேதோவெல்லாம் செய்தாலும் இராமன் முன்னால் எல்லாமே ம்ஹூம் .. கம்பர் இதை “பொய்யும் துய்யும் ஒத்து, அவை சிந்து” என்கிறார். அதென்ன பொய்யும் துய்யும்? உண்மைக்கு முன்னால் சிறுமைப்பட்டு நிற்கும் பொய்யை போலவும், துய் என்றால் பஞ்சு, நெருப்பின் முன் பஞ்சு போலவும் இராமன் முன்னால் இராவணன் எய்த அம்புகள் போயினவாம். என்ன ஒரு உவமானம்! கம்பநாடன் கவிதையில் போல் கற்றோர்க்கிதயம் கனியாதே.. கவிஞன்டா அவன்!!
ஆற்றாமையால் இராவணன் தன்னுடைய கடைசி ஆயுதமான சூலாயுதத்தையும் விட்டுப்பார்க்கிறான். அது போனால் கொல்லாமல் திரும்பாதாம். ஆனால் அதுவும் பொடிப்பொடியானதை கண்டு இராவணனுக்கு மெல்ல அறிவு திரும்புகிறது! அடடே, தம்பி அப்பவே சொன்னானே! ஆழம் தெரியாமல் காலை விட்டுவிட்டோம். இவன் இராமன் விஷயம் உள்ளவன் போல இருக்கிறது என்று நினைக்கிறான். யாராய் இருக்கும்? சிவனோ, பிரம்மனோ, திருமாலோ? இவையெல்லாவற்றையும் மிஞ்சிய ஆதிப்பரம்பொருளோ? என்று வியக்கிறான்!
ravana_400'சிவனோ? அல்லன்; நான்முகன் அல்லன்; திருமாலாம்
அவனோ? அல்லன்; மெய் வரம் எல்லாம் அடுகின்றான்;
தவனோ என்னின், செய்து முடிக்கும் தரன் அல்லன்;
இவனோதான் அவ் வேத முதல் காரணன்?' என்றான்.
என் பதிவுகளை வாசிப்பவர்கள் சாதாரணமானவர்கள் இல்லை! உண்மைக்கு முன்னால் சொல்லும் பொய் போல எவ்வளவு எழுதினாலும் காறித்துப்புகிறார்கள். இவர்களோடு எழுத்துலகில் போருதல் முடியாத காரியம்!   சக்திவேல் அண்ணா பதிவில் “யாழ் தமிழ்” கொஞ்சுகிறது. வாலிபன் கவிதையில் வாலி வைரமுத்து எல்லாம் வழுக்கி விழுகிறார்கள். சரி இதோட முடிஞ்சுது எண்டு பார்த்தால் கீதா வேறு ஆட்டோ ஒன்றில் .. சாரி .. ஓ சொறி .. ஓட்டோ ஒன்றில் வந்து பக்கத்தில் இருக்கும் “சந்துக்குள்”, அடக்கடவுளே, “ஒழுங்கைக்குள்” வைத்து வரிக்கு வரி “கிழிக்க”, நானும் எவ்வளவு நேரம் தான் “நோகேல்ல” என்று நடிக்கிறது? இலக்கியவாதிகள், இவர்களுக்கு இணையாய் சிறு துரும்பை தூக்கி போடுவதற்கு கூட, அழகு தமிழாம் யாழ் தமிழில் லக்கியதனமாக எழுதவேண்டும் என்று ஞானோதயம் வர, “நல்லா” ஒரு பதிவு எழுதி, மீண்டும் வாசித்து ஒருத்தனுக்கும் “விளங்காது” என்பதை உறுதிப்படுத்திக்கொண்டு நிமிர்ந்த போது தான் இந்த ஈமெயில் வந்து விழுந்தது,
வணக்கம் நண்பா,
உங்களுக்கு என்னை தெரியாது! தெரிந்து கொள்ளும் அளவுக்கு நான் முக்கியமானவனும். இல்லை நான் ஒரு இலங்கை தமிழ் அகதி. தற்சமயம் டென்மார்க் இல் வசிக்கிறேன். யாழ் தளத்தில் உங்கள் கடவுள் தேடலை வசித்து உங்கள் வலை பக்கம் வந்தேன் 2 நாட்களாக உங்கள் பதிவு வாசித்து வருகிறேன் தொடர்ந்து வாசிக்க ஆவலாக உள்ளேன். உங்களுக்கு இன்னுமொரு வாசகன் கிடைத்தது. மகிழ்ச்சியாக இருக்குமோ இல்லையோ எனக்கு தெரியாது. ஆனால் எனக்கு ஒரு எழுத்தாளன் கிடைத்த மகிழ்ச்சிக்கு இணையே இல்லை! இணையத்தில் எத்தனயோ பதிவுகள். ஆனால் எந்த பதிவும் இப்படி என்னை முழுதாக 2 நாட்கள் கட்டிபோட்டது இல்லை. வாழ்த்துகள் தொடர்ந்து எழுதுங்கள். என்னை போன்ற பல பேர் நிச்சயம் வாசிக்க காத்திருப்பார்கள். பல விடயங்களில் நான் ஓர் டுபாகூர் மாதிரி இந்த டைப்பிங்கும் ஒன்று. உங்கள் தொலை பேசி இலக்கம் கிடைத்தால் உங்களுடன் பேச மிகவும் ஆவலாக உள்ளேன். மீண்டும் ஒரு முறை உங்கள் பதிவிற்கு நன்றி கூறி விடை பெறுகிறேன்.
நட்புடன்,
குகன்


ஒரு கணம் தான். ஞானோதயம் கண்ட இராவணன் “தன்னிலை” அடைகிறான். போடாங் நீங்களும் உங்கட இலக்கியமும்! “ஏதொக்கும் ஏதொவ்வா ஏதாகும் ஏதாகா ஏதொக்கும் என்பதனை யார்அறிவார்” என்ற காரைக்கால் அம்மையார் பன்ச் டயலாக் போல, இனிமேல் இன்னும் கவனத்துடன் எழுதுகிறேன் மக்களே! ஆனால் எது தகும், தகாது என்பதை யாரறிவார்?
யாரேனும் தான் ஆகுக! யான் என் தனி ஆண்மை
பேரேன்; நின்றே வென்றி முடிப்பென்; புகழ்பெற்றேன்;
நேரே செல்லும் கொல்லும் எனில் தான் நிமிர்வென்றி
வேரே நிற்கும்; மீள்கிலென்' என்னா, விடலுற்றான்.
யாராவதாகவும் இருந்துவிட்டு போகட்டும். நான் எனக்கேயுரிய தனியாற்றலில் இருந்து பெயரமாட்டேன்! ramayanaஇதை கொண்டு தானே புகழ்பெற்றேன். இதை கொண்டு தானே வெற்றி கொண்டேன். எது வரினும் என்வழியே நிற்பேன் என்று இராவணனுக்கு அடுத்த கணமே தலைக்கனம் ஏற, கடைசியில் இராவணனுக்கு நடந்த நிலையை யோசிக்க… wait I am confused!
 
 
41654_100001612310791_4570591_nமன்மதகுஞ்சு: அடங்கொக்கமக்கா? காரைக்கால் அம்மையார் கெட்ட கெட்ட வார்த்தையா யூஸ் பண்ணியிருக்காப்ல! இவரு கம்பராமாயணத்தில பின்நவீனத்துவம் ட்ரை பண்ணுறாராம்!  இப்பிடியே எழுதிக்கிட்டு இரு மச்சி!! “வாரணம் பொருத மார்பு” பாட்டு படிச்சிருக்கியா? ஜட்டியோட படலைல கூவிக்கிட்டு நிப்பாய் தல! ஒருத்தனும் தலைவச்சு படுக்க மாட்டாண்டா! கம்பவாரிதி ஜெயராஜ் காலம் எல்லாம் மலையேறி போச்சு மச்சி. இப்ப ஆன்லி ஹாரிஸ் ஜெயராஜ் தான்! கொஞ்சம் ஹன்சிகாவை கண்ணுல காட்டு ராஜா!
 
 

இந்த வார புத்தகம்/படம்/பாடல்!

“ரகுபதி ஒரு இஞ்ச் உயரத்தில் மிதந்து சென்று வீட்டுக்கு வந்தான். மதிமிதாவை திறந்து முகத்தில் மதுமிதாவை இறைத்துக்கொண்டு, மதுமிதா போட்டுக்கழுவிக்கொண்டு, மதுமிதாவால் துடைத்துக்கொண்டு, மதுமிதாவை திறந்து மதுமிதாவை படித்தான்”
978-81-8493-614-_bநம்ம தலைவர் சுஜாதாவின் “பிரிவோம் சந்திப்போம்”. இதை வாசிக்காமல் சுஜாதாவை வாசித்தேன் என்று யாரும் சொல்லமுடியாது. ஒவ்வொரு எழுத்திலும் தலைவரின் டச் இருக்கும். மதுமிதா மாதிரி ஒரு பெண்ணை காண மாட்டோமா என்று ஏங்க வைக்கும். வெகுளி, what is வெட்கம்? என்று கேட்கும் மது, அப்பா சொன்னார் என்பதற்காகவே ரகுவை காதலிக்கிறாள். அவனை கிஸ் பண்ண சொல்லுகிறாள். அமெரிக்கன் ரிட்டர்ன் ராதா வந்த போது ரகுவுக்கு சங்கு. ரகு தற்கொலை முயற்சி. காப்பாற்றப்பட்டு அமெரிக்கா வர, அங்கே அவன் மதுவை கண்டு, மதுவோடு கண்டு! வரும் சிக்கல். அமெரிக்க இந்தியர் வாழ்க்கை தலைவர் பாணியில் … அப்போது தான் “என்னுடைய”  ரத்னா அறிமுகம்!
actress-rukhmini“நீங்க தானா அது?”
ரகுபதிக்கு புரியவில்லை. “என்ன இது, என்னை பத்தி ஏதாவது புரளியா?” என்றான்.
இல்லை இல்லை, ஐ ஆம் சப்போஸ்ட் டு மீட் யு இன் திஸ் பார்ட்டி
எதுக்கு
நமக்கு கல்யாணம் பண்ணி வைக்கலாமான்னு ஜனங்க யோசிச்சுக்கிட்டு இருக்கு


இப்படி ஆரம்பிக்கும் ரத்னா “காய்ச்சல்” போக போக எகிறுகிறது. புத்திசாலி அமெரிக்க வாழ் இந்திய பெண். ஈகோ ஏறிய ஆண்களுக்கு எரிச்சல் வர வைக்கும் க்யூட் இண்டலக்ட்! அவள் ரகுவுக்கு முகத்துக்கு நேரேயே அவன் வண்டவாளத்தை புட்டு புட்டு வைக்க நெற்றி வியர்க்கும். பிரிவோம் சந்திப்போம் வாசித்த நாள் முதல் ரத்னாவுடன் பேசி, சேர்ந்து பாடி, இளையாராஜா, ரகுமான் எல்லாம் டிஸ்கஸ் பண்ணி, wall street இல் இன்றைக்கு ஆப்பிள் வாலியுவேஷன் 600பில்லியனாம், ஐம்பது ஷேர் வாங்குவோமா என்று பிஸ்னெஸ் பேசி ... ரத்னாஆஆஆ…. இவள் தான் நான் எழுதும்போது அவ்வப்போது எட்டிப்பார்க்கும் மேகலா! “உஷ் இது கடவுள்கள் துயிலும் தேசத்தில்” வரும் கிருஷாந்தி!
இந்த கதையை படமாக்குகிறார்கள். திரைக்கதை வசனமும் தலைவர் தான் என்றவுடன் ஜிவ்வென்று எதிர்பார்ப்பு எகிறிவிட்டது. ரத்னா கரக்டருக்கு “ருக்மணி தேவி” என்றவுடன் புதுமுகம், ஹெவியான ரோல், சொதப்பபோறாங்கள் என்று நினைத்து பயந்தபோது தான் படம் வெளிவந்தது. வரும்போது சுஜாதா உயிரோடு இல்லை! படத்தை ஓரளவுக்கு நேர்மையாக எடுத்திருந்தார்கள். அதிலும் அந்த ரத்னா, what a brilliant casting! சாஸ்திரிய நடனம் பயின்ற திறமையான நடிகை. ருக்மணி தேவியை தான் 2009ம் ஆண்டின் சிறந்த நடிகையாகவும் அடியேன் தேர்வு செய்து இருந்தேன்!!!

இசை ஜி.வி.பிரகாஷ். சுஜாதா படம் என்பதால் பையன் கொஞ்சம் கவனம் எடுத்து “சுடாமல்” இசையமைத்ததில் பல வைரங்கள்! “பூவினை திறந்து கொண்டு போய் ஒளிந்த வாசமே”, “கள்ளில் ஆடும் தீவே” என்று வைரமுத்து ஆனந்த தாண்டவம் ஆடிய பாடல்கள்! நானும் எந்த வகையிலும் ராஜா ரகுமானுக்கு சளைத்தவன் இல்லை என்று ஜிவி சொல்லிவைத்து போட்ட பாட்டு தான் “கனா காண்கிறேன்”.  இப்படி ஒரு பாடல் எப்போதாவது ஒரு முறை தான் ராஜாவோ, ரகுமானோ அல்லது வித்தியாசாகரோ மனமுவந்து தருவார்கள். ஜி.வி நம்பிக்கை தருகிறார்.
பாடியவர்கள் நித்யஸ்ரீ, சுபா முட்கல் என்ற ஹிந்துஸ்தானி பாடகருடன் சேர்ந்து வினித்ரா என்ற புதிய பாடகி. பாடலில் உள்ள மென்மையான குரல் வினித்ராவுடையது.
மார்போடு பின்னிக்கொண்டு மணிமுத்தம் எண்ணிக்கொண்டு
மடியோடு வீடுகட்டி காதல் செய்வாயே
என்னும்போது நித்யஸ்ரீ நிஜமாகவே உணர்ச்சி வசப்பட்டு “மடியோடு” என்ற இடத்தில் அலாதியாக ஒரு ஆலாப் போட, அப்படியே நெஞ்சுக்குழி கிறுகிறுக்கும் என்று நான் சொன்னால், நான் ஏதோ கிறுக்கில் எழுதுகிறேன் என்று நினைப்பீர்கள். கேட்டுவிட்டு சொல்லுங்கள் .. கிறக்கம் தீரும் முன்னர்!
e0c72363-28bf-4840-9129-b94bb59fa8c11
மன்மதகுஞ்சு : தல, “நம்ம” ருக்மணி தான் தலைவரோட “கோச்சட்டி”ல நடிக்கபோறதா நியூஸ் வந்திச்சு!
 
 

 

ஹாட் நியூஸ்!

nithya-menon-hot5முத்துச் சரமே என் பக்கம் இருந்தால்
வேறென்ன வார்த்தை சொல்ல
மொழி வேண்டும் மொழி வேண்டும்
முன்னம் இருக்கும் இந்த சின்ன முகத்தில்
பல மொழிகள் பாடம் பெற வரவேண்டும் .
பல மொழிகள் பாடம் பெற வரவேண்டும் .
..
..
..
மௌனமே பார்வையால் ஒரு பாட்டுப் பாட வேண்டும்
நாணமே ஜாடையால் ஒரு வார்த்தை பேச வேண்டும்

நேற்று இந்தோனேஷியாவில் நிலநடுக்கம் என்றவுடன், டென்சனாகி, நித்யாவுக்கு போன் போட்டேன்.
எண்டே நித்யா ஓமனக்குட்டி ஈ சுனாமி வருதல்லோ! பயமில்லா! யான் இருக்கேனாக்கும்! கறையாண்டா!
ஆமா ஜேகே .. இந்த கறையான் தொல்லை தாங்க முடியேல்ல! மருந்து அடிக்கணும்!