“மேகம் இடம் மாறும்போது!!”


அன்புள்ள பிருந்தன்!
Nachathera-brunthanஆரம்பத்திலேயே சொல்லி விடுகிறேன். இசையின் அரிச்சுவடி அறியாதவன் நான்.  சுருதி பிடித்து பாடுவதற்குள் கஜனிடம் நூறு தடவை குட்டு வாங்கியதால் பாடுவதை குளியலறையோடு நிறுத்தியவன். என் விமர்சனத்தை நீங்கள் பெரிதாக எடுத்துக் கொள்ளவேண்டியதில்லை. குப்பையில் போட்டு விடலாம். ATM மெஷினில் வரும் Balance Receipt ஐ பார்த்து விட்டு கசக்கி எறிவது போல எறிந்துவிடுங்கள். எவ்வளவு பணம் மீதி இருக்கிறது என்று எப்படியும் பார்ப்பீர்கள் தானே!

உங்களையும் உங்கள் சகோதரர்களையும் முதன் முதலில் கேள்விப்பட்டு இன்றைக்கு பத்து வருடங்கள் இருக்குமா? அப்போது தான் சில ராஜா, ரகுமான் பாடல்களை உங்கள் குரல்களில் பாடி ஒரு சீடி வெளியிட்டு இருந்தீர்கள். கஜன் கொடுக்கும் போதே, “காந்தினியின் குரலை கேட்டுப்பார், she got something” என்று சொன்னான். அதுதான் ஆரம்பம்.
அப்புறம் கூடிய சீக்கிரமே உங்கள் ஆல்பம் “துளிகள்” வெளியானது. கஜன் சீடீ வாங்கிக்கொண்டு நேரே என் வீட்டுக்கு தான் வந்தான். எம்மிடம் இருந்த 5 in 1 இல் போட்டு கேட்டோம் ..
By then I  realised you got something!

Brunthan’s masterpiece of todate!
அந்த அந்தி நேர இடியுடன் கூடிய மழை, தொடர்ந்து வரும் beat, கேட்கும்போதே நீங்கள் ரகுமானின் தீவிர ரசிகனா? என்று கஜனிடம் கேட்க அவன் சிரித்தான். அந்த காலத்தில் “Thakshak” படத்தில் வந்த “Bhondhon se baatein” என்ற பாடலை இலங்கையில் பலர் அப்போது அறிந்திருக்கமாட்டார்கள். ஆனால் உங்களுக்கு அந்த பாடல் எப்படிப்பட்ட காட்சியில் வருகிறது என்று கூட தெரிந்திருக்கவேண்டும். A beautifully inspired starting piece.
இந்த பாடலின் அழகை விவரிப்பது நான் என் காதலியை மற்றவர்களுக்கு விவரிப்பது போல. “மேகம் இடம் மாறும்போது” என்று ஆரம்பிக்கும் போது அப்படியே காதலி பின்னால் வந்து தோள் சுற்றி கைகள் போடும் உணர்வு ஏற்படும். “பிரிவின்றி உறவில்லை” என்று பாடும் காந்தினி அப்புறம் “மாற்றம் இன்றி” என்ற கீழ் நோட்டில் சற்றே விழுங்கினாலும் நீங்கள் அப்படியே take off ஆகி “உன்னை என்றும் மறவேன்” என்று மாறுவீர்கள். அருமை!
276802_201879359853239_4234108_nபின் அந்த வயலின் intelude. முதல் கவுன்டிங்கில் வரும் கடைசி நோட்டில்(என்ன நோட் என்று கண்டு பிடிக்கும் அளவுக்கு knowledge பத்தாது எனக்கு), வயலின் improvise பண்ணி ஒரு சங்கதி போடும். அதே சங்கதியை முதலாவது சரணத்தின் இறுதியில் காந்தினி பாடுவார்(அது பெண்குரலா? இல்லை வயலினா? என்று ரொம்ப நாளாய் ஒரு சந்தேகம்!). நீங்கள் அப்போது சகியே என்று சொல்வீர்கள். காந்தினியின் bravo attempt இல் உங்கள் portion வெறும் harmony தான்! இசையமைப்பாளனாய் நீங்கள் non-striker ஆய் நின்று பாடகியை அடித்து ஆட விட்டிருக்கிறீர்கள்! பொண்ணுக்கு இன்றைக்கு சுற்றி போடுங்கள். நாள் முழுக்க வேறு பாடலுக்கு தாவுவதாக இல்லை. She is too good. கொஞ்சம் ஹரிணி, கொஞ்சம் ஜெயஸ்ரீ சேர்த்து செய்த கலவை இந்த பெண்!
யார் அந்த Piano?  இனிமை! இரவு நேரம், நிலவு முற்றத்தில் கேட்க வேண்டிய master piece. இதம். Original Piano பாவித்து இருந்தால் இன்னும் அதிகம் உயிர் வந்து இருக்குமோ? 3.08 timeline ஐ மீண்டும் கேட்டுப்பார்த்தேன், extra note ஒன்று வருகிறது. இசையை சுவாசிக்கும் சிலர் சேர்ந்து இந்த பாடல் அமைத்து இருக்கிறீர்கள் என்று புரிகிறது. ஆனால் கொஞ்சம் clarity இல்லையோ? அதிகபிரசிங்கித்தனம் என்று நினைக்கவேண்டாம். iPad வாங்கி இரண்டு வருடங்கள் தான் ஆகிறது, ஆனால் இந்த பாடல் 247 தடைவைகள் play பண்ணி இருக்கிறேன். நம்புவீர்களா?
சரணம் போவதற்குள் பதிவு இத்தனை நீண்டு விட்டது. எனக்கு எதை எடுக்க எதை விட என்று தெரிய வில்லை.
“உன் கூந்தல் உதிர்க்கும் பூக்கள், நாம் குளிக்கும் நதியை தேடும்“
“என் நறுமணம் உனை சூழ்ந்து” …
இந்த இடங்கள் எல்லாம் மெலடி மென்னியை திருகும் .. பிருந்தன். பொறாமையாய் இருக்கிறது!

மீண்டும் வயலின்… ஒப்பிடுகிறேன் என்று ஒரு போதும் நினைக்காதீர்கள். உங்கள் originality யை என்னளவுக்கு இன்னொரு ரசிகன் கொண்டாடி இருப்பானா என்பது சந்தேகமே! இது ஒரு complement தான். தேவாவின் இசையில் “அன்பே டயானா” என்று ஒரு படம் வந்தது. “ஒரு முறை சொன்னால் போதுமா” என்ற ஹரிகரன் சுஜாதா பாடிய பாடல் அது. நீங்கள் கேட்டீர்களோ தெரியாது. எனக்கு கொள்ளை பிரியம். அந்த பாடல் இருக்க கூடிய வரிசையில் வரக்கூடிய அருமையான பாடல் இந்த “ஒரு போய் சொல்லாயோ” என்ற பாடல்.  மீண்டும் நீங்களும் காந்தினியும் சேர்ந்து கலக்கும் பாடல். “இரு மனம் இணைந்திட” என்று அவரோகணம்( சரி தானே) வரும் போது அப்படியே மெத்தையில் ஆயாசமாய் விழுந்து படுக்கும் உணர்வு. Brilliant!
என்ன சொல்வது? கொஞ்சமே கமகம்கள் அதிகமாய் போய்விட்டது. அதுவும் அந்த கீழ் நோட்களில் கம்பி மாதிரி பிடிக்கவேண்டுமோ என்னவோ என்ற எண்ணத்தில் அந்த கம்கம்கள், அது பாடலின் உயிரை சற்று பதம் பார்க்கிறது போல எனக்கு தோன்றுகிறது.
161997_170743269630902_4072412_n
உங்கள் ஏனைய சகோதர்களின் பாடல்களும் கேட்டு இருக்கிறேன். குறிப்பாக “தா” திரைப்பட பாடல். இசை குடும்பம் தான். எல்லாமே மீன் குஞ்சுகள் இல்லை, திமிங்கிலங்கள். கலக்குங்கள்!
நான் அடிக்கடி கஜனுக்கு சொல்லி குறைப்படும் ஒரு விஷயம். உங்கள் “துளிகள்” பாடல்களின் வரிகள். வைரமுத்துவை பிரிந்த ஆரம்ப காலத்தில் வந்த சில ராஜா பாடல்களின் வரிகள் போல மிக சாதாரணமாக இருக்கிறது! ஆனால் ராஜா எப்படி தன் மேட்டுகளால் பூசி மெழுகினாரோ(உதாரணம்: சித்தகத்தி பூக்களே) அது போல உங்கள் மேலடிகள் அந்த வரிகளில் இருக்கும் குறையை மறைத்து விடுகிறது.
“ஒரு பொய் சொல்லாயோ நீ, உன் காதலன் என்று” .. இந்த வரிகள் ஏற்கனவே கேட்டு விட்டோமே? ஒன்றுக்கு இரண்டு முறை. “உன்னை காணாமல் உறக்கம் இல்லாமல் தவிக்க வைத்தாயடா”, மிக சாதாரணமாக இருக்கிறது. எனக்கேன்னவோ, சந்தத்துக்கு வார்த்தைகள் கோரத்தது போல, நீங்கள் composer தான். நல்ல மெட்டு தான் ஒரு பாடலுக்கு தூண். ஆனால் வரிகள் தான் காலம் போக போக எம்மில் அந்த பாடல்களை ஊற வைக்கும். நான் சில முறை கேட்பவர்களை கணக்கில் எடுக்கவேயில்லை. இருநூறு தடவைகளுக்கு மேலே உங்கள் பாடல்களை கேட்டு ரசித்தவன் இல்லையா! சொல்லும் உரிமை இருக்கிறது! Exaggeration என்று நினைத்தால் கஜனுக்கு ஒரு call போட்டு கேளுங்கள்!!
கொஞ்ச காலத்துக்கு முன்னர் “Music And Lyrics” என்ற ஒரு அருமையான படம் வந்தது. ஒரு composerக்கும் பாடலாசிரியருக்கும் இடையேயான காதல். அந்த படத்தின் சில வசனங்களை தருகிறேன்.
ஒரு பாடலுக்கு மெட்டு முக்கியமா? இசை முக்கியமா? என்ற ஒரு argument இந்த படத்தில் வரும்.  Alex தான் பாடகர். Sophie அந்த பாடலாசிரியை.
Alex : It doesn't have to be perfect. Just spit it out. They're just lyrics.
Sophie : "Just lyrics"?
Alex : Lyrics are important. They're just not as important as melody.
Sophie : A melody is like seeing someone for the first time. The physical attraction. Sex.
Alex : I so get that.
Sophie : But then, as you get to know the person, that's the lyrics. Their story. Who they are underneath. It's the combination of the two that makes it magical.

என் அளவில் இந்த பாடல், இசையும் வரிகளும் சங்கமிக்கும் ஒரு உன்னத புள்ளி. உங்களுக்கு தெரியாதது என்று இல்லை. மனம் கேட்காமல் உங்கள் தீவிர ரசிகன் என்ற முறையில் எழுதிவிட்டேன்!
உங்களின் பல பாடல்கள் பிடிக்கும். ஆனால் இரண்டு master pieces மாத்திரம் இன்று எடுத்து இருக்கிறேன். உங்களை நான் எப்போதும் தொடர்ந்து கவனித்துக்கொண்டே இருக்கிறேன். நம்மவருக்கு பக்கத்து சீட்டில் அமர்ந்திருப்பவனின் திறமையை ரசிக்கப்பிடிக்காது. எங்கோ ஒரு மூலையில் இருப்பவனை தேடி தேடி ரசிப்பான். ஆனால் என் playlist இல் உங்கள் பாடல்கள், சமகாலத்தில் வந்த “பூவாசம் புறப்படும் பெண்ணே”, “என்னுயிர் தோழியே”, “காடு திறந்து” பாடல்களுடன் ஒன்றாக இருக்கிறது. ரகுமானும் ராஜாவும் தரும் பரவசங்களை இந்த இரண்டு பாடல்களும் தருகின்றன. என்ன நீங்கள் இப்போது தான் முதல் செஞ்சரி அடிக்கிறீர்கள், அவர்கள் 99 சென்சுரிகள் கடந்து விட்டார்கள். அண்மையில் வந்த உங்கள் பாடல்களில் அந்த “கனவே கனவின் நினைவாலே” பாடல், மனதை தொடுகிறது. பியானோ பின்னுகிறது. இம்முறை sound mixing இல் நல்ல நேர்த்தி. முழுப்பாடலையும் கேட்க ஆவலாய் இருக்கிறது. கிடைக்குமா? Smile


பதிவு நீண்டு விட்டது! ஒரு விஷயம் சொல்லி முடிக்கிறேன். பாடல் கேட்பதை விட எனக்கு வேறு வேலை கிடையாது! வேலையிலும் பாடல் தான்! எனக்கு இளையராஜாவில் இருக்கும் ஆனால் மற்றய இசையமைப்பாளர்களிடம் இல்லாத ஒரு விஷயம் எப்போது பிடிக்கும். அது தான் ஆச்சரியம் தருவது! ஆச்சரியம் என்பது எதிர்பாராத போது கிடைக்கவேண்டும்.  ரகுமானிடம் அது இல்லை. ரகுமான் தன் பாடலின் ஆரம்பத்திலேயே அந்த பாடலின் mood create பண்ணி விடுவார். வித்தியாசமான பாடல்களை இங்கே  நான் சொல்லவில்லை. உதாரணமாக “ஆரோமலே” ஒரு வித்தியாசமான பாடல். ஆனால் அதை கேட்க ஆரம்பிக்கும் போதே அது ஒரு வித்தியாசமான பாடல் என்று தெரிந்து விடுவதால் கேட்கும் போது ஆச்சரியம் ஏற்படாது. வியப்பு தான் ஏற்படும். ராஜாவின் சில பாடல்கள் எதிர்பார்க்காத திருப்பங்களை தரும். மிக சாதாரணமாக தான் அவை ஆரம்பிக்கும். அட அடுத்த பாடலுக்கு தாவுவோம் என்று நினைக்கும் போது தான் மனசை போட்டு தாக்கும் மெலடி ஒன்று சரணத்தில் வந்து இறங்கும்.

எப்படி தொடங்குகிறது இந்த பாடல்? கனவில் கூட நினைக்க மாட்டோம் இந்த பாடல் சரணத்தில் அப்படி மாறும் என்று. Interlude இல் நேர்த்தியான தெம்மாங்குக்கு தாவி சரணம் வரும்போது மெலடி நம்மை அள்ளும். சித்ரா பாடும் போது அது இன்னும் உருக்கும். உருக்கிக்கொண்டு இருக்கும் போதே பாடல் பழைய இடத்துக்கு போய்விடும். அது தான் ராஜாவின் ஆச்சரியம். அதனால் தான் ராஜாவும் ஆச்சரியம்! ரகுமானும் அப்படி ஆச்சரியங்கள் தந்திருக்கிறார். சிலவேளை அவரிடம் ஆச்சரியங்களை மட்டுமே நாம் எதிர்பார்ப்பதால் அது அடி பட்டு போய்விடுகிறது போல. ரட்சகனின் “மெர்குரி பூக்கள்” பாடலின் சரணம் அப்படிப்பட்டது. எதிர்பாராத மேலோடி அது! (பின்னர் அதை அவர் “லகான்” படத்தில் பாவித்தது வேறு விஷயம்!)

பிருந்தன் …. உங்களிடம் ஆச்சரியங்களை எதிர்பார்க்கிறேன். ஆச்சரியப்படுத்துங்கள்!

அன்புடன்,
ஜேகே

என் கொல்லைப்புறத்து காதலிகள் : குட்டி

 

pukal2[3]

எங்கள் வீட்டின் முன்னே ஒரு எலுமிச்சை மரம் இருந்தது. அது வளரும்போது எம்மை கேட்டு வளரவில்லை. நாம் கிணற்றில் அள்ளி குளித்த தண்ணீரில் தானாகவே வளர்ந்தது. காய்த்து கொட்டியது. இலைகளை விட காய்களின் எண்ணிக்கை தான் அதிகம். வளரும்போது யாரும் அதை கவனிக்கவில்லை. காய்க்க ஆரம்பித்துவிட்டதா? பாத்தி எல்லாம் கட்டி ஒரே அமர்க்களம் தான். தனியாக தண்ணீர் பாய்ச்சி, தேயிலை சாயம், கோழிச்செட்டை எல்லாம் வெட்டித்தாட்டு பெற்ற பிள்ளையை கவனிப்பது போல கவனிக்கத்தொடங்கினோம். சனிக்கிழமை வந்தால் ஐந்து மணிக்கெல்லாம் வீட்டில் எழுப்பி விடுவார்கள். ஒரு பிளேன்டீயை குடித்துவிட்டு ஒரு துவாயை தலையில் முண்டாசு போல கட்டிக்கொள்ளவேண்டும். இல்லாவிட்டால் யாழ்ப்பாண பனிக்கு முட்டுச்சளி தலைக்குள் ஏறிவிடும். எலுமிச்சை மரத்தடிக்கு போய் சந்தைக்கு கொண்டு போகக்கூடிய பதமான காய்களை பிடுங்கவேண்டும்.

வியாழமாற்றம் (24-11-2011) : விளையாட்டு அரசியல்


மேகலா

mekala[2]மேகலா யார்? என்று பலரும் கேட்கிறார்கள். இதில் என்ன விஷயம் என்றால் மேகலாவை யாராலும் காதலிக்காமல் இருக்க முடியாது. உதயசங்கர்  ஒரு பதிவில், ஜேகேக்கு(ஜெகேபி என்று சொல்லாதவரைக்கும் ஓகே!) அவன் விரும்பிய மேகலா கனவிலும் நிஜத்திலும் வரவேண்டும் என்ற வகையில் வாழ்த்தி இருந்தான்.

“சின்ன குயிலின் சோகம்!”


220px-Kschithraஅலுவலகம் முடிந்து ரயில் நிலையம் நோக்கி நடந்துகொண்டு இருக்கிறேன். ஐபாடில் சதிலீலாவதி படத்தின் “மாருகோ மாருகோ” பாடல். கமலின் கமகம்களை கேட்டபோது மெல்லிய புன்னகை என்னையறியாமல் வந்தது. நடந்து கொண்டிருந்த இடம் மெல்பேர்ன் நகரத்து யாரா(Yarra) நதியின் குறுக்கு பாலம். பாலத்தின் விளிம்பு தடுப்பில் உட்கார்ந்திருந்த வெள்ளை புறாக்களை ஒரு குட்டிப்பொண்ணு துரத்தி விளையாடிக்கொண்டு இருந்தது. அவள் தாய், தன் பருமனான உடலை தூக்கிக்கொண்டு, “Careful honey .. careful” என்று பொண்ணை அதட்டிக்கொண்டு பின்னாலேயே ஓட, அந்த சுட்டியோ சட்டை செய்யாமல் குறுக்கும் நெடுக்குமாய் ஓடியது. தாயும் சளைக்கவில்லை!

“பொன்மேனி உருகுதே” என்ற இடம் வருகிறது. சித்ராவின் ஆலாப்பு. பாடல் முழுதும் ஒருவித கோவைகுசும்பு  குழைந்த குரலில் பாடியவர் சட்டென சாஸ்திரிய சாயலுக்கு மாறி சித்ரா தான் பாடுகிறேன் என்று கோடி காட்டுகிறார். இந்த சறுக்கலை எப்படி இளையராஜா அனுமதித்தார்? என்று நினைத்துக்கொண்டே இருக்கும் போது, அந்த தாயின் கையில் பொண்ணு அகப்பட திடுக்கிட்டேன். அந்த இடத்தில் சித்ராவும் அவர் மகள் நந்தனாவும் ஓடி விளையாடுவது போல கற்பனை வர, தாங்க முடியாமல் ஐபாடை நிறுத்திவிட்டு அந்த சின்ன பொண்ணையே வெறித்து பார்த்துக்கொண்டு நின்றேன். ஒரு தாய்க்கு இதை விட வலி வேண்டாம்.உலகம் தான் மாறுமே
உறவுகள் வாழுமே
கடலை விடவும் ஆழம்
என் தன் கண்ணீர் துளிகளே
நந்தனா பிறந்த போது நானும் அக்காவும் பேசிக்கொண்டது ஞாபகம் வருகிறது. தவமிருந்து பெற்றபிள்ளை. சித்ரா எங்கு போனாலும் பொண்ணை கூட்டிக்கொண்டே போவார். அப்போதெல்லாம் நந்தனாவை குறிப்பிடாமல் எந்த ஒரு சித்ராவின் பேட்டியும் இருக்காது. அத்தனை பாசம்.  இந்த அழகு நிலவே பாடலில் கூட அந்த தாயின் ஏக்கம் நிறைந்து வழியும். இதைக்கேட்டு கண்கலங்காமலும் இருக்க முடியுமா? இதற்கு மேலும் அந்த குழந்தையையும் தாயையும் பார்க்க தைரியமின்றி பாடலையும் மாற்றிவிட்டு நானும் இடம் மாறுகிறேன்..

என்ன பாடல் அடுத்தது என்று ஸ்கிப் ஆகி ஸ்கிப் ஆகி எதிலும் மனம் லயிக்காமல் இந்த பாட்டில் வந்து நின்றது. முதலில் வந்தது யேசுதாஸ் பாடல் தான், ஸ்கிப் ஆகி சித்ராவின் பாட்டுக்கு தாவினேன்.

தென்றல் என் வாசல் தீண்டவே இல்லை கண்ணில் வெந்நீரை வார்ப்பேன்
கண்களும்ம் ஓய்தது ஜீவனும் தேய்ந்தது
ஜீவ தீபங்கள் ஓயும் நேரம் நீயும் நெய்யாக வந்தாய்
இந்த கண்ணீரில் சோகம் இல்லை இந்த ஆனந்தம் தந்தாய்


 
 
இந்த பாடலை எல்லாம் சித்ரா அடுத்த சில வருஷங்களுக்கு கேட்காமல் இருப்பது அவருக்கு நல்லது. எங்களாலேயே கேட்க தாளவில்லை. அந்த சின்ன வயதிலேயே இத்தனை கனமான பாடல் பாடி இருக்கிறார். பாடறியேன் பாடிவிடலாம். நானொரு சிந்து தான் கடினம். அதை போல தான் இதுவும்.  அத்தனை உணர்ச்சிகள் கொட்டி கிடக்கிறதே.
இந்த பொன்மானை பார்த்துக்கொண்டே ..
சென்று நான் சேர வெண்டும்
மீண்டும் ஜென்மங்கள் மாறும்போது,
நீ என் மகளாக வேண்டும்.
பாச ராகங்கள் பாட வேண்டும்..
 
இந்த ஜென்மத்திலேயே அந்த சந்தர்ப்பம் வாய்த்ததே! ஆனால் கை நழுவிவிட்டது. கடவுள் சிலவேளை உண்மையிலேயே இருக்கிறானோ? என்ற நம்பிக்கை துளிர்விடும் போதெல்லாம் இல்லவே இல்லை என்று அடித்துக்கூற இப்படி பல சம்பவங்கள் நடைபெறும். அட அப்படியே இருந்தாலும் அவனால் ஒன்றுமே புடுங்க முடியாது என்று அவனே நிரூபிக்கும் தருணங்கள் இவை. ஆனாலும் எமக்கு வேறு வழியில்லை.  மீண்டும் மீண்டும் ஏதும் செய்வான் என்று நம்பிக்கொண்டு பூச்சொரிய வேண்டியது தான். இது தெரிந்து தான் பூக்கள் எல்லாம் ஒரே நாளிலே அழுகி விடுகின்றனவோ தெரியவில்லை!
 
அப்படியே சமகாலத்து பொம்முக்குட்டி அம்மாவுக்கு படம் ஞாபகம் வந்தது. இந்த பாடல் ..

இந்த ராஜா இருக்கிறாரே. சிலவேளை ஏன் தமிழனாக பிறந்தோம்? என்று நொந்து போக வைப்பார். அப்படி பிறந்து இருக்காவிடில் இந்த மாதிரி பாடலை எல்லாம் கேட்டிருக்கவேண்டி வந்திருக்காது. நானும் எம்பாட்டுக்கு நானுண்டு என் வேலையுண்டு என்று இருந்திருப்பேன். இராட்சசன் இப்படி பாடல்களை எல்லாம் போட்டு நம் தூக்கத்தை தொலைப்பார்.  சரணத்தில் வரும் மெட்டு. ஐயோ .. இந்த கொலைக்கெல்லாம் சட்டத்தில் தண்டனை இல்லையா?

நல்லோர்கள் உன்னைப் பாராட்ட வேண்டும்
நலமாக நூறாண்டு நீ வாழவேண்டும்
காவியம் பேசும் பூ முகம் பார்த்தால்
ஓவியம் கூட நாணுமே

பிறகு அந்த பொண்ணை கொன்றுவிட்டு ஒரு காட்சி. அந்த தாய் படும் அவஸ்தை. அதற்கு ராஜாவின் ஈவிரக்கமற்ற இசையை கேளுங்கள்..

 
 
 
 
என்னடா இது, இனி பாடலே வேண்டாம் என்று முடிவெடுத்த போது அடுத்த பாடல் மாறியது. இன்றைக்கு எனக்கு சந்திராஷ்டமி தான் போல..
 
தேவேந்திரனின் “வேதம் புதிது” பாடல். இது கொஞ்சம் வித்தியாசமான பாடல். படம் பார்த்தவருக்கு இந்த பாடல் அடி மனதை ஒரு அருட்டு அருட்டும். பாடும் பெண், பிரிந்த காதலன் இன்று வருகிறான் என்று பாடும் பாடல். சித்ரா பாடும் போது காதலனின் முடிவு தெரிந்து பாடுவதால், பாட்டில் ஒரு மெல்லிய சோகம் புலப்படும். தேவேந்திரன் ஒரு தேர்ந்த இசையமைப்பாளர், தெரிந்தே அந்த சரணத்து இசையை மீட்டி இருக்கிறார்! சரணத்தில் மேல்ஸ்த்தாயி எட்டும் போது ஒரு ஏக்கம் பயம் எல்லாமே வெளிப்படும். தேவனே என்று சொல்லும் இடத்தில் சின்ன அயர்ச்சி கூட குரலில் வெளிப்படும். தெரிந்தே செய்யும் ஜாலங்கள் இவை.  பாடலின் இசை கோர்ப்பு,  முதலாவது interlude இசையில், கிட்டார் வயலின் கோர்த்த பின் ஒரு அரை வினாடி நிசப்தம், பின் புல்லாங்குழல் தபெலாவுடன் ஆரம்பிக்கும். அது ராஜா செய்யும் ஜாலம் இல்லையா? தேவேந்திரன் நிச்சயம் ராஜாவின் அதி தீவிர ரசிகனாக இருக்க வேண்டும்!
 
அடுத்து என்ன பாடல் என்ற போது எனக்கு இப்போது மனதிலே பல ஞாபகங்கள். மனம் தானாகவே “எங்கே எனது கவிதைக்கு” தாவியது. சிலவேளை எம் சோகத்தை மற்றவர் சோகத்தில் கண்டு கொண்டாடுவோம் இல்லையா? சோகத்தை எல்லாம் கொண்டாடுவதா? இல்லை அனுஷ்டிப்பதா?
 
ரகுமானும், சித்ராவும் வைரமுத்துவும் கொண்டாடுகிறார்கள். இந்த பாடலை முதலில் வேறு ஒருவர் தான் பாடுவதாக இருந்ததாம்(மூலம்: அப்துல் ஹமீது), ஆனால் பாட்டில் அந்த உணர்வு கொண்டு வர முடியாததால் சித்ராவையே பாட வைத்தார்களாம். அவர் தான் first choice ஆக இருந்திருக்க வேண்டியது. ஆனால் நான் நினைக்கிறேன் ஏற்கனவே “கண்ணாமூச்சி ஏனடா” தனி மற்றும் டூயட் பாடல்களை கொடுத்துவிட்டதால் ரகுமான் முதலில் தயங்கி இருக்கலாம். ஆனால் வேறு யாரால் இந்த வலியை உணர்ந்து பாட முடியும்? அப்போது ஸ்ரேயா கோஷலும் இல்லை! ரகுமானும் சித்ராவும் வைரமுத்துவும் எத்தனை முறை காதலில் தோல்வி அடைந்திருந்தால் இத்தகைய பாடல்களை தந்திருக்க முடியும்? எனக்கென்றால் இப்படி பாடல்கள் தர முடியுமென்றால் மீண்டும் மீண்டும் காதலில் தோல்வி அடைவதில் தப்பு இல்லை. ஏன் .. கேட்டு ரசிக்க கூட!
மாலை அந்திகளில் மனதின் சந்துகளில்
தொலைந்த முகத்தை மனம் தேடுதே
வெயில் தாரொழுகும் நகர வீதிகளில்
மையல் கொண்டு மலர் வாடுதே
மேகம் சிந்தும் இரு துளியின் இடைவெளியில்
துருவித் துருவி உனைத் தேடுதே
வரிகளை கேட்டுகொண்டு எழில்மிகு மெல்போர்ன் நகரத்தில் நடப்பதற்கு தனி வைராக்கியம் வேண்டும்!
 

இன்னும் ஒரே ஒரு பாடல் ப்ளீஸ் .. இனி ஒரு பதிவில் சித்ராவின் இத்தகைய பாடல்கள் பகிர்வேனோ தெரியாது!! அண்மையில் வந்த பாடல். படம் வெள்ளித்திரை.
உணர்ச்சிகளை கொட்ட பதிவில் இனி இடம் இல்லை. மனதிலும் பலம் இல்லை. அதனால் வரிகளோடு முடித்து கொள்கிறேன்!

இமைகளிலே கனவுகளை விதைத்தேனே
இரகசியமாய் நீர் ஊற்றி வளர்த்தேன்
இங்கு வெறும் காற்றிலே நான் விரல் நீட்டினேன்
உன் கையோடு கை சேரத்தான்
உன் உயிரையும் இல்லை என் நிழலும் இல்லை
இனி என் காதல் தொலைதூரம் தான்

எழுதி முடித்தவுடன், ஆரம்பத்து மாருகோ மாருகோ பாடலை அகற்றலாமா என்று தோன்றியது. ஒட்டவில்லை என்பதற்காக உண்மை பொய்யாகாது என்பதால், அப்படியே விட்டு விடுகிறேன்!
மீண்டும் அடுத்த வாரம் இன்னுமொரு இசை அனுபவத்துடன் ….


“படிச்சதென்ன? பிடிச்சதென்ன?” -- “ஏதென்சு நகரத்து எழில் மிகு வாலிபன்”


நீண்ட காலம் ஆகிவிட்டது சந்தித்து! இன்றும் இது எழுதுவதாய் இல்லை. ஆனால் இந்த  ஏதென்சு நகரத்து எழில் மிகு வாலிபன்  இன்று எழுத தூண்டிவிட்டான். நண்பனின் கதை என்ன தான் எழுதி இருக்கிறான் என்றே வாசிக்க சென்றேன்.  சில கதைகள் உணர்ச்சி வசப்பட வைக்கும். சில கதைகள் சிந்திக்க வைக்கும். சில கதைகள் இலக்கியத்தனமாய் இருக்கும். கம்பன் பாடல் போல, வாசிக்க வாசிக்க புது புது அர்த்தங்கள் தோன்ற வைக்கும். இந்த கதை தோன்ற வைத்தது. ஒவ்வொருவருக்கு ஒவ்வொரு அர்த்தங்கள் கிடைக்ககூடிய கதை. அது தான் இலக்கியம். கம்பவாரிதி வீட்டு கட்டுத்தறி இல்லையா! என் அர்த்தம் இங்கே!
கதையை வாசிக்க இந்த லிங்க்!

ஏதென்ஸ் தோட்டத்து ராஜகுமாரா!!!!!
ஷேக்ஸ்பியரின் “Merchant Of Venice” தான் உங்கள் பெயரை வாசிக்கும் போது ஞாபகம் வரும்! ஐரோப்பிய இலக்கியம் அழகாக காதலிக்கும்.  அதிலும் இளவரசர்கள் இன்னும் அருமை, நீங்கள் அந்த பெயரில் உலாவுவதில் எனக்கு ஆச்சரியம் இல்லை .. அது கிடக்கட்டும்!!
இந்த கதைக்கு,  எனக்கு ஒரு interpretation இருக்கிறது. அது நிச்சயம் உங்களதாய் இருக்க வேண்டிய தேவை இல்லை.
பிரபல கவிஞரும் வசனகர்த்தாவுமான Robert Browning இடம் அவருடைய கவிதை வரி ஒன்றின் விளக்கத்தை வாசகர் ஒருவர் கேட்டாராம். அதற்கு Browning சொன்ன பதில், 
"இதை எழுதும் போது எனக்கும் கடவுளுக்கும் மட்டுமே இதன் அர்த்தம் தெரிந்திருந்தது. ஆனால் இப்போது ............. Only God Knows!" 
“இன்னும் தொண்ணூறு நாட்களுக்கு மட்டுமே” என்ற தலைப்பு ஆரம்பத்திலேயே கட்டியம் கூறிவிட அந்த பாணியிலேயே வாசித்தேன். இரு துருவங்கள் இணைந்த காதல். ஆரம்பம். அவனை அவளும் அவளை அவனும் நன்றாக புரிந்திருக்கிறோம் என்று நம்புவதும், அவனுக்கு அவளும் அவளுக்கு அவனும் என்றே பிறந்திருக்கிறோம் என்று நம்புவதும் அந்த தொண்ணூறு நாட்களில் நிச்சயம் நடக்கும். ஆனால் நிஜத்தில் அவனும் அவளும் வேறு வேறு.  அவன் எதிலும் கவிதை தேடும் (கணணி மேசையை கூட கலைத்து போட்டு அழகு பார்க்கும் ஆண் அவன், அப்புறம் அந்த சமையல் ரசனை) ரசிகன். பாவம் அவளுக்கு அது புரியவில்லை. அவன் மனம் போல வாழவேண்டும் என்ற எண்ணம் இருக்கிறது. ஆனால் அது “சிந்து பைரவி” படத்தில் ஜெகேபியின் மனைவி பைரவி, இசை படிக்கும் போது, வடகம் காயப்போட்ட சிந்தனை அவளுக்கு வரும் இல்லையா அது போல இருக்கிறது. பாவம் தொண்ணூறு நாட்களின் பின் நிஜம் உறைக்கும் போது இருவருமே உடைந்து விடுவார்கள். Brilliant Thinking!

“உப்பு தூக்கலாக போட்டு, நெயில தாளிச்சு துரம்பருப்பு வறை, அவன் தான் சொல்லித் தந்தான், இவளுக்கு முந்தி அறிமுகமில்லை. ரசம் ஒருபக்கம் கொதிச்சுக் கொண்டிருந்தது , தாளிக்குறது ஒரு ரசனை அனுபவம் எண்டுவான், கருவேப்பிலை கடுகு சீரகத்துடன் பொரியும் போது வரும் சத்தமும் மணமும் காங்கேசன் வீதிகளில் பயணிக்க வைக்கும் எண்டுவான் இப்படித்தான் கருவேப்பிலைக்கும் காங்கேசன் வீதிக்கும் என்ன லிங்க் எண்டு தெரியேல்லை கேக்க வேணும் , அதுக்கொரு கதை வச்சிருப்பான்.”
செங்கை ஆழியான் பெருமைப்பட போகிறார். அவரின் ஞாபகம் வருகிறது. அவருக்கு பின் யார் என்ற அச்சம் கொஞ்சம் குறைந்தது போல. கமல் “மைனா” படத்துக்கு சொன்னது போல, இன்றைக்கு நிம்மதியாக தூங்கலாம்!! கொஞ்சம் ஓவரா போயிட்டமோ? Winking smile 
எனக்கு என்ன ஒரு சந்தேகம் என்றால். ஒருவனை நன்றாக புரிந்து கொள்ளமுடியாத பெண் எப்படி அந்த உணர்வை இத்தனை தெளிவாக தெரியப்படுத்துகிறாள்?
“இண்ட கதை வாசி எண்டு நாசரித்து எடுதிட்டான் - "உஸ் இது கடவுள்கள் துயிலும் தேசம் " எண்ட பெயரை கேட்டவுடன் எனக்கு விளங்கேல்லை , இது கடவுள்கள் துயிலும் தேசம் ஏண்டா சொர்க்கமோ , இல்லை இந்த ஊரில சாமி எல்லாம் கண்ணை மூடிக்கொண்டு இருக்கு எண்டு அர்த்தமோ. உஷ் எண்டு எதுக்கு சொல்லோணும் ? இங்கை ஆழத்த்துயில் கொள்ளும் எல்லாரும் கடவுள்கள் என்டர்த்தமோ ? சுடலை பற்றி இருக்குமோ ? துயிலும் இல்லம் ? குழந்தைகள் காப்பகம் ? அவன் இப்படித்தான் பல மாதிரி கேள்வி கேப்பான் - ஏன் இப்படி குழம்போணும் எண்டு எனக்கு விளங்கிறேல்லை.”
Narration அவள் சிந்தனையாக போகிறது. ஆனால் அதிலே அவனின் எண்ண அலைகள் தலை தூக்குகின்றன. அட அவனே அதை வாய் விட்டு சொல்லியதாய் வாதத்துக்கு எடுத்து இருந்தாலும், அதில் சின்ன சறுக்கல், பாத்திரத்துக்குள்ளாலே எழுத்தாளர் எட்டிப்பார்த்து விட்டார் போல தோன்றுகிறது. ஆனால் இது என்னுடைய interpretation தானே. இதுவே அவனின் hallucination எண்ணங்களாக இருந்தால் (அதுவும் அழகான வடிவம் தான்), இது தவறு கிடையாது.
தலைவரே கொஞ்சம் எழுத்து பிழைகள். எனக்கும் அது ஒரு பிரச்சனை. கொஞ்சம் கவனிப்போம்.
இப்படியான கதைகளில், இது தான் எழுதுகிறேன் என்று எழுத்தாளர் நீங்கள் சொல்ல மாட்டீர்கள். கதையும் ஒரு நேரிசையாக சென்று கொண்டிருக்கும். புரியாவிடில், வெறும் பெண்ணொருத்தியின் உணர்வெழுச்சிகள் என்று அந்த கதை பார்க்கப்பட்டு விடும். அதையும் தாண்டி அந்த இரு துருவங்கள் அடையப்போகும், நீங்கள் சொல்லாமல் தவிர்த்த ஏமாற்றம் இருக்கிறதே.. அது தான் இந்த கதை இலக்கிய வட்டத்துக்குள் நுழைய காரணமாகிறது.

நீங்கள் புரிந்து தான் எழுதுவீர்கள். அதனால் சொல்ல மாட்டீர்கள். எனக்கு புரிந்து விட்டது என்று நான் சொல்லும் போது உங்களுக்கு ஒரு புளகாங்கிதம் ஏற்படும். சொல்கிறேன்! அனுபவியுங்கள்!!

முன்னைய பதிவுகள்
“The Spirit Of Music”
தொடர் அறிமுகம்!

கலியபெருமாள் இந்திரன்! கலியபெருமாள் சந்திரன்!

 

முற்குறிப்பு
இந்த பதிவு எனக்கும், என்னுடைய நண்பரும் கவனிக்கத்தக்க ஈழத்து இலக்கியவாதியுமான உதயாவுக்குமிடையேயான “ஏழாம் அறிவுடை நம்பிகள்” என்ற சிறுகதை சம்பந்தமான வாத பிரதி வாதங்கள். இந்த வாதத்தில் எங்களுக்கு நடுவரின் தேவை ஏற்படவில்லை என்பது பெருமைக்குரியது!

 

 

ஜேகே!

எழாம் அறிவுடை நம்பி என்னுள், அறிவுடை நம்பி கலிய பெருமாள் இந்திரன் , அறிவுடை நம்பி கலிய பெருமாள் சந்திரன் எண்டு இரண்டு துருவங்களை உண்டு பண்ணி ஒரு பெரிய பட்டி மண்டபம் நடந்து கொண்டிருக்கு -இங்கு நடப்பதையும் தாண்டி, நடுவர் தீர்ப்பு சொன்னால் ஒரு முடிவான கருத்தை நேரம் பொறுப்பது பொறுத்து பதியுறன் , நானே எனக்குள் சில தெளிவு கொள்ளாததால் - என் உணர்வுகளை ஆட்கொள்ளும் சுழல்களை முடிந்த வரை பகிர்கிறேன் - இது கொஞ்சம் சிக்கல் - இடியப்பதிலிரிந்து சிக்கல் எடுக்குற மாதிரி - will c.


பொதுவா இந்த மாதிரி கதைகளும் கவிதைகளும் இன்னொமொரு குணத்தை வாசகனுக்கு அடையாளப்படுத்துகின்றன, தவிர முடிவு என்று பரிந்துரைப்பதில்லை - அது அதன் நோக்கமல்ல. முடிவு வாசகனின் உள்வாங்கல் மற்றும் அனுபவம் + கொள்ளளவு பொறுத்தது.


நிற்க, எழாம் அறிவு ஒரு விடியலை பெற்றுத்தரும் எண்டோ; சினிமா நடிகர்களின் நடிப்புக்கும், மேடை நடிகர்களின் நடிப்புக்கும் உணர்விளக்கும் கூட்டம் (உணர்ச்சி வசப்படல் என்பது வீறு வகை) எங்கள் 'நாளையை' வடிவமைக்கும் எண்டோ நான் நினைக்கவில்லை. ஆயினும் பெரும்பான்மை ஆகி நிற்கும் அந்த தமிழ் பேசும் (எழுதும் வாசிக்குமா எண்டு தெரியேல்லை) நல்லுலகம் (?) நாளையை இன்றைய ஜனநாயகத்தில் தீர்மானிக்கிறது என்பதே நிஜம். தமிழ்நாட்டின் அரசியல் நாளை - தமிழினது நாளையிலும். ஈழதமிழர் நாளையிலும் ஒரு முக்கிய செல்வாக்கு காரணி எண்டு நான் நினைக்குறன்.
ஒரு entertainer + உணர்வாளன் தன் எல்லைகளுக்குள், தன் கொள்ளளவுக்குள், தன் உணர்வை பதிந்திருக்குறான் எண்டே நான் எழாம் அறிவை பார்க்கிறேன்.


வாழ்வு முழுவதையும் அறிவு கொண்டு வாழ்ந்திடலாமா - முடியுமா ? + தேவையா ?, உணர்வாதல் பிழையா - என் சுழல்கள்.


என் நண்பன் ஒருவன் சொல்வது மாதிரி, போர் முனைகளில் புத்தனையும் காந்தியையும் தேடுதல் செரியா, போரை புத்தத்தையும் காந்தியத்தையும் கொண்டு ஆராய்தல் முறையா - என் சுழல்கள்.
களத்திற்கு தேவையான போது, கத்தி செய்து குடுக்காத நான், கத்தி எடுத்து களம் போகாத நான், கத்தி ஊரைக் கூட்டாத நான், கடமையே கண்ணா படிச்சுக் கொண்டிருந்த நான், கெட்ட பின் சூரிய நமஸ்காரமா, சந்திரனுக்கு அபிசேகமா, ஜடாயுவுக்கு அருச்சனையா எண்டு ஆராயலாமா தெரியேல்லை. நானும் சம்பந்தப்பட்ட ஒரு பெரும் தவறில் நியாயம் சொல்ல எனக்கு அருகதை இல்லை எண்டே நம்புகிறேன். என்னுடைய நியமங்கள் எனக்கு மட்டும், உங்களையும் அந்த வட்டத்துக்குள் வாருங்கள் எண்டு அழைக்க என் வட்டம் பற்றி எனக்குள் ஒரு தெளிவு இன்னமும் வரவில்லை.


என் அறிவும் தர்க்கமும் கொண்டு என்னால் ராமனுக்கு சூற்பனைகயை கூட கட்டி வைச்சிட முடியும். அதனால் 'இறந்த'-காலத்தை ஒரு மௌன சாட்சியாக பார்த்தபடி, தொலைந்து போன நித்திரையில் அடிக்கிற மாதிரி துடிக்கிற இதயத்தில் பனிக்கிற கண்களால் கனவொன்றை கட்டி வைச்சிருக்குறன், தவிர்க்க முடியாமல் அதன் நிறம் சிவப்பு மற்றும் மஞ்சள். அத கனவு நனாவாக்க 'நாமார்க்கும் குடியல்லோம்' எண்ட என் கிழவனின் உரப்புக்காய் வேண்டுகிறேன்.


இது ஒரு வாக்கு மூலம், யாரையும் எடை பார்க்கும் எண்ணமோ, கொள்கைப் பிரச்சாரமோ கிடையாது. எழுதுவதும் அதை வாசிப்பதும் கூட உணர்ச்சி வசப்படுதலும் எண்டுதோடு நிண்டுவிடுகிறேன் (இந்தக் கதையில் வாற குமரன் மாதிரி) எண்ட என் நண்பன் கோபியின் குற்றச்சாட்டுகளுக்கு பதில் கிடச்ச பிறகு நானும் இதுதான் எண்டு ஒண்டை இது பற்றி சொல்லுவன் - அதுவரை கனவுகளும் அதை நனவாக்கும் கனவுகளும் நானும்.

அன்புடன்

ஏதென்ஸ் நகரத்து வாலிபன்

 

அன்புள்ள உதயா,

பதில் எழுதுவது கொஞ்சம் பதட்டமாகவே இருக்கிறது. பொதுவாக கதைகள் எழுதும் போது ஒரு 250px-Pied_Piper2கருத்தியல் தளம் அல்லது அனுபவ தளத்தை எடுத்து, அதிலே உயிரும் உணர்வும் உண்மையும் கலந்து கட்டமைக்கும்போது வாசகர்களும் அந்த கட்டுக்குள் நின்று கலவி கொள்வர். வாசகரை நாம் போகும் போக்கில் இழுத்து செல்லலாம், “Pied Piper Of Hamelin” போல! என்னுடைய முன்னைய கதைகள் கொஞ்சம் அந்த ரகம். அனுபவங்களை புனைந்து பிறந்த குழந்தைகள் அவை. ஆனால் “ஏழாம் அறிவுடை நம்பிகள்” நீங்கள் சொன்னது போல வேறு ரகம். சம்பவங்களுக்கு ஒரு நூல் கோர்த்து கொடுத்தது மாத்திரமே என் வேலை. அதை சட்டையாக தைக்கிறோமா, அல்லது சாக்குத்துணி செய்து போடுகிறோமா அது அவர் அவர் தளத்தை பொறுத்தது. எனக்கு தொப்பி தான் செய்யத்தோன்றியது!

 

இந்த மாதிரி சுயவிமரிசனம், மனதிலே நீண்ட நாட்களாய் இருந்தது தான். சில மிக நெருங்கிய நட்பு வட்டாரத்தில் உரையாடி இருக்கிறேன். ஆனால் பெரும்பாலும் பேசுவதில்லை. எம்மில் பலருக்கு சிந்தனை பைனரி வடிவத்தில் அமைந்திருக்கிறது. 1 அல்லது 0. அந்த இரண்டு இலக்கங்களுக்குமிடையே முடிவற்று நீளும் தசம எண்களை நாம் சிந்தித்து பார்ப்பதில்லை. அதனால் 1 என்று நினைத்துக்கொண்டு இருக்கும் நபரிடம் 0.9 என்று சொன்னால் எம்மை 0 குழுமத்தில் சேர்த்துவிடுவார். பின்னர் நாமும் துரோகி தான். அதனாலேயே வாளாவிருந்தேன். ஆனால் பதிவு எழுதும்போது சிலவேளை அது என்னுடன் நானே உரையாடுவது போல! அதில் ஒரு சௌகரியம் என்னவென்றால் என்னோடு நான் முரண்பாட்டாலும் சண்டை போட மாட்டேன். அதனால் தோன்றியது தான் “ஏழாம் அறிவுடை நம்பிகள்”! 

இதிலே நகைச்சுவை என்னவென்றால், பலர் நினைத்தது நான் “ஏழாம் அறிவு” என்ற படத்தை விமர்சிக்கிறேன் என்று. என்னத்த சொல்ல! நான் அந்த படமே இன்னும் பார்க்கவில்லை. பார்த்தாலும் கூட ஒரு திரைப்படம் அரசியல் கருத்தை போகிற போக்கில் சொல்லிவிட்டு போவதை பார்த்து உணர்ச்சி வசப்படும் அளவுக்கு நான் இன்னும் மாற்றப்படவில்லை என்றே நம்புகிறேன். சொல்லும் விதத்தை ஒருவேளை ரசிப்பேன். கருத்து? ஒருவேளை ஹேராம் போல் சொல்வன திருந்தச்சொன்னால் ரசிப்பேன்!

ஆனால் எனக்கு இந்த “துரோகம்” பற்றிய கருத்து தேவையாய் இருந்தது. நாம் எப்போதும் தப்பே செய்வதில்லை இல்லையா! ஆச்சரியம் என்னவென்றால் நம் கடவுள்கள் கூட தப்பு செய்வதில்லை! அதற்காகவே நாம் நாரதர் என்ற பாத்திரத்தை உருவாக்கி வைத்திருக்கிறோம். நம்மில் தப்பு இல்லை, எல்லாமே நாரதர் கலகம் தான்! நாம் என்று இல்லை, ஆங்கிலேயே சட்டத்திலும் “Act Of God” என்று ஒரு ஷரத்து இருக்கிறது. தப்பை ஏற்றுக்கொள்ளாமல் விடும் கூறு, மனித இனத்தின் survival instinct என்று நினைக்கிறேன்.

அந்த survival instinct தான் நமக்கு “சிங்களம், இந்தியா, துரோகம், சர்வதேசம்” என்ற நான்கை  போராட்டத்தின் தோல்விக்கு காரணிகளாய் கூற வைத்தது. நம்பவும் வைத்தது. இதில் இலகுவாக ஒன்றை மறந்து விட்டோம். இந்த நான்கு தூண்களை நம்பியா போராட்டம் தோன்றியது. இல்லையே. நாம் பரீட்சைக்கு படிக்காமல் சென்று விட்டு பரீட்சை தாள் கடினமென்றால்? மற்றவன் பாஸ் பண்ணுகிறான் தானே! சரி பரீட்சை தான் கஷ்டம். நமக்கும் படிப்பு ஓரளவுக்கு பின் ஏறவில்லை.என்ன செய்யவேண்டும்? வேறு மார்க்கம் தேட வேண்டும் இல்லையா? கொஞ்சம் இலகுவான பரீட்சையை பார்க்க வேண்டும்! பரீட்சையே இல்லாமல் ஏதும் இருக்கிறதா? பார்க்க வேண்டும். ஏழு முறை கடந்து எட்டாம் முறை வெற்றி பெற்றது யாரு? நெப்போலியனா? மறந்து விட்டது. அவனுக்கு கூட “Water Loo” காத்திருந்ததே. "எண்ணியர் எண்ணியாங்கு எய்துப எண்ணியர் திண்ணியராகப் பெறின்' என்று வள்ளுவர் கூறியதை தப்பாக புரிந்து வைத்திருக்கிறோமா? சரி இதை எல்லாம் ஆலோசிக்கமுதல், நம்மிலும் தப்பு இருக்குமோ என்று முதலில் யோசிக்க வேண்டும். யோசிக்க வைக்க எழுதியது தான் “ஏழாம் அறிவுடை நம்பிகள்”. என்னிடமும் வலுவான பதில் இல்லை. ஆனால் யோசிக்கவாவது செய்கிறேன். அவ்வளவே!

 

இப்போது இது எதற்கு? வலிகளை கிளறி என்ன ஆகப்போகிறது? என்று ஒரு கேள்வி. ஆபத்தான கேள்வி. கிளராதே வலிக்கும் என்றும் சொல்லும் உணர்வு. ஆனால் கிளரவேண்டும். செம்மணி தோண்டும் போது நாம் ஒன்றும் புதையலை தேடவில்லையே. வலிகளை தானே தேடினோம். ஆனாலும் தோண்டினோமே? தோண்டினால், தோண்டி அதை தோல் உரித்தால், மீண்டும் செம்மணி தொன்றிவிடாது என்ற ஒரு நப்பாசை. நம்பிக்கை. அதை தோண்டியே இருக்காவிடில் யாழ்ப்பாணம் முழுதும் கிருஷாந்திகள் சைக்கிளில் சென்று இருப்பார்கள். தோண்டியதால் ஒருத்தியாவது இன்றைக்கு கண்ணம்மாவை கொஞ்சிக்கொண்டு இருப்பாள். அவளுக்கு தெரியாது அது ஏன் என்று!

 

இதை தான் நான் செய்ய முயற்சிக்கிறேன். எனக்கு ஒரு இலேசான பயம். நாம் இன்னும் நீக்குப்போக்கு இல்லாதவராகவே இருக்கிறோம். அப்படி இருப்பவர் இலகுவில் துரோகி ஆக்கப்பட்டு இன்னொரு தூணாக்கப்படுகிறார். இதிலே இந்த நீக்குப் போக்கின் எல்லை எது? எது வரை போகலாம்? முக்கியமாக வெளிநாட்டு வாழ் மக்கள். நம் இருப்பு கேள்விக்குறி இல்லை, நாளை நம் வாசலில் வெள்ளை வான் இல்லை என்ற நம்பிக்கையில் எதுவும் பேசலாம். அதை தான் நானும் செய்து கொண்டு இருக்கிறேன். இந்த உணர்ச்சி வசப்படும் தன்மை ஆக்கபூர்வமா? மீண்டும் மீண்டும் விடை ஒன்றும் சொல்வதாயில்லை. எனக்கு தெரியாது. எனக்கு சரி என்று தோன்றுவதோ, அந்த எல்லையோ உங்களுக்கு சரியாக தொன்றவேண்டியதும் கிடையாது. எனக்கு என்ன தேவை என்றால், இங்கே நம்மை நாமே கேள்வி கேட்டு சுயவிமரிசனம் செய்து கொள்வது மாத்திரமே. விடைகள் வேண்டாமே! அது பின் அரசியல் ஆகிவிடும். இதுவரைக்கும் அது ஆகவில்லை என்றே நினைக்கிறேன்!!

 

உனக்கென்ன உரிமை இருக்கிறது என்று ஒரு கட்ட பொம்மன் கேள்வி. எனக்கும் தான்! நானே கேட்டுக்கொண்டேன். எனக்கு ஒரு உரிமையும் கிடையாது. வலியை அனுபவித்து இருக்கிறேன். அவ்வளவே. ஆனால் உதயா சொன்னது போல, அங்கே ஆயுதம் சங்காரம் செய்யும் போது நான் கம்பன் பிரசங்கம் கேட்டுக்கொண்டு இருந்தேன். கோணேஸ்வரியின் பெண் உறுப்பில் கிரனைட் புகுத்திய போது நான் படையப்பா முதல் ஷோ பார்த்துக்கொண்டு இருந்தேன். எனக்கென்ன உரிமை இருக்கிறது. நான் ஏன் இந்த ஆட்டம் ஆடுகிறேன்? “ஏழாம் அறிவுடை நம்பிகள்” பதிவின் அடிப்படை நாதமே இது தானே!!

 

கண் கெட்ட பிறகு சூரிய நமஸ்காரமா? செய்யா விட்டால் தான் தப்பு! கண் நமக்கு தானே கெட்டது. சூரியன் அப்படியே அங்கேயே தானே இருக்கிறது. நமக்கு தெரியவில்லை என்பதற்காக சூரியனே இல்லை என்றா சொல்வது?

இது நான் சூரியனை நமஸ்ரிக்கும் தருணம்!

வியாழமாற்றம் (17-11-2011) : யாழ்ப்பாணம்


யாழ்ப்பாணம்


யாழ்ப்பாணத்தில் இருந்து வரும் செய்திகள் திகிலூட்டுகின்றன. சென்ற வாரம் எனக்கு ஆறாம் வகுப்பில் இருந்து ஒன்பதாம் வகுப்புவரை கற்றுக்கொடுத்த ஆசிரியர் தயாபரன்(குமரன்) வெட்டிகொலைசெய்யப்பட்டு இருக்கிறார்.

ஆத்தா நான் பாஸாயிட்டேன்!!! (‘சவால் சிறுகதை-2011’)

 

short story potti_thumb[4]பரிசில், ஆதி மற்றும் யூடான்ஸ் இணைந்து வழங்கிய சவால் சிறுகதை போட்டி முடிவுகள் வெளியாகி விட்டன. நான் எழுதிய “சட்டென நனைந்தது நெஞ்சம்” சிறுகதைக்கு இரண்டாம் இடம் கிடைத்து இருக்கிறது. காலையிலிருந்து கிள்ளி கிள்ளி பார்த்து கை முழுதும் காயம் என்றால் பார்த்து கொள்ளுங்கள்!

 

78 கதைகள் போட்டிக்கு வந்தன. அனுஜன்யா, ஸ்ரீதர் நாராயணன், எம்எம். அப்துல்லா என மூன்று தேர்ந்த நடுவர்கள். பரிசிலும் ஆதியும் ஒருங்கமைப்பாளர்கள். இரண்டு வாரங்களுக்குள் எல்லா கதைகளையும் வாசித்து அவற்றுக்கு நறுக்கென விமர்சனங்கள் கொடுத்து இறுதியில் நேற்று முடிவுகளை அறிவித்தார்கள். நான் மெல்போர்னில் வசிப்பதால் காலை ஐந்து மணிக்கு திடுக்கிட்டு எழுந்து பக்கத்தில் கிடந்த ஐபாடில் எடுத்து பார்த்த போது,  முதல் முதலாய் ஒரு மெல்லிய சந்தோஷம் வந்து விழியன் ஓரம் வழிந்தது இன்று! முதல் முதலாய் ஒரு மெல்லிய உற்சாகம் வந்து மழையைப் போலே  பொழிந்தது இன்று !!

 

முதலாம் இடத்தில் இரண்டு கதைகள். இரண்டுமே தேர்ந்த குழப்பமில்லாத சிறுகதைகள். வாசித்தபோது அவற்றின் தகுதியை மனதார மெச்சினேன். என்னுடைய கதையோடு சேர்ந்து இன்னொரு கதைக்கும் இரண்டாம் இடம் கொடுக்கப்பட்டுள்ளது. “சின்ன கல்லு பெரிய வைரம்” போல ஒரு சூப்பர் பிளாட், ஷார்ட் அண்ட் ஸ்வீட் ஆக முடித்திருப்பார். நான் என்றால் அதற்கு முதலாம் இடமே கொடுத்து இருப்பேன்! வாழ்த்துக்கள் சக போட்டியாளர்களே.

 

என்னுடைய கதை ஆங்காங்கே சற்றே குழப்பம் நிறைந்த நோன்-லீனியர் ப்ளோ, தமிழில் எழுத ஆரம்பித்து இரண்டாவது வாரத்திலேயே அனுப்பிய சிறுகதை. அதனால் ஆங்காங்கே புதுமுக எழுத்தாளர் செய்யக்கூடிய சில அதிக பிரசிங்கித்தனங்கள், குறியீட்டை தெளிவாக விளக்காமை என்று முதலாம் இடத்துக்குரிய தகுதியை என் கதை ஏற்கனவே இழந்துகொண்டு இருந்ததை மற்றைய கதைகளை வாசிக்கும்போது புரிந்தது. யாழ்ப்பாணத்தளத்தில், அந்த தமிழில் ஒரு சஸ்பென்ஸ் த்ரில்லர் எழுதி அதை பலர் வாசித்தது என்னுடைய பிறவிப்பயன். இப்போது வந்தோரை தொடர்ந்து வரவைக்க மேலும் எழுத வேண்டும். எழுதுவேன்!

நறுக்கு தெறித்தது போன்ற நடுவரிகளின் விமர்சனம்

சட்டென நனைந்தது ரத்தம்    -ஜேகே  

http://orupadalayinkathai.blogspot.com/2011/10/2011.html

முதலில் கொஞ்சம் புரிதல் சிக்கல் இருந்தது.  மீண்டும் வாசித்தபோது, இரு பத்திகளை மாற்றிப் போட்டிருக்கிறார் என்று புரிந்தது. திலீபன் குமரனை சந்தேகிக்கும் இடம் சற்று சறுக்கினாலும், நல்ல சஸ்பென்ஸ் த்ரில்லராக அமைந்திருக்கிறது. சவால் சூழலை இயல்பாக பொருத்தி இருந்தார்.  அருமை.

 

கனகச்சிதமான விமர்சனம், Hats off to judges!

 

எனக்கு இந்த கதை எழுதியது ஒரு திருவிழா போல தான். நண்பர்கள் பலர் அடுத்தடுத்து ஆதரவு தந்தார்கள். சிலர் குட்டினார்கள். 69 வாக்குகள் இந்த புதுமுகத்துக்கு விழுந்தது.  புதிய வலையுலக நண்பர்கள் என்று ஏராளம் ஆஸ்கார்கள் எனக்கு கிடைத்தன. அந்த சந்தர்ப்பத்தை தந்த ஆதி, பரிசில், யூடான்ஸ் குழுமம் மற்றும் ஏராளம் நண்பர்களுக்கு (சரியாக 688 visits) கோடானுகோடி நன்றிகள்!

 

thanks3

கடல் கோட்டை


“தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா” என்று பத்தாம் வகுப்பில் படிக்கும் போது கல்லூரியில் பேச்சுப்போட்டி. ஸ்கிரிப்ட் எழுதித்தந்தவர் பொன்னுச்சாமி தமிழ் மாஸ்டர்!  கம்பவாரிதி ஜெயராஜ் ஸ்டைலில அங்கே இங்கே ஏறி இறக்கி பேசினதில் முதலிடம் கிடைத்தது. தமிழ்த்தின விழா பரிசு போட்டியில் ஆறேழு புத்தகங்கள் தந்தார்கள். தந்ததில் பிடித்தது கடல் கோட்டை!


DSC00706சாண்டில்யன் பாணி சரித்திர நவீனம்! மருதநாயகம் போல ஒரு வன்னிமை. போர்த்துக்கீசரை நாட்டை விட்டு கலைக்க ஒல்லாந்தருடன் கைகோர்த்து, இறுதியில் ஒல்லாந்தரிடம் வெள்ளைக்கார பெண்ணை கேட்டு, ஏமாற்றப்பட்டு அவனுக்கு வெள்ளைக்காரிக்கு பதிலாக ஒரு நாயை பெண்ணாக கொடுக்கிறார்கள். வந்ததே கோபம் வன்னிமைக்கு! இப்போது ஒல்லாந்தருக்கு எதிராக மாறுகிறான்(எங்கேயோ கேட்ட/பார்த்த கதை போல இருக்கிறதா?).  இவன் வீட்டுக்கு விசிட் அடித்தான் என்ற ஒரே காரணத்தால் படித்த மிதவாதியான பூதத்தம்பி தூக்கில் இடப்பட(அங்கேயும் பொறாமை, காட்டிக்கொடுப்பு) .. இப்படி ஈழத்து தளத்தில் ஒரு வரலாற்று கதை. நிஜக்கதையை கொஞ்சம் பூடகாமாக செங்கை ஆழியான் எழுதினாரோ என்ற சந்தேகம் எனக்கு நெடுங்காலமாக இருந்தது. வெறும் அரசனின் பார்வையில் இல்லாமல் ஒரு படைத்தலைவன் பார்வையில் வந்த கதை.  இதிலே தான் புகழ்பெற்ற “சிவ சிவா இயேசுவை மறப்பேனா” வசனமும் வருகிறது. நாமறியாத இருநூறு வருஷம் பழமையான ஈழமும் அறிந்த ஈழமும் அவ்வளவு வித்தியாசம் இல்லை என்பதை மிக செடேட்டிவாக சொல்லாமல் சொல்லி, இயல்பாக தன் பாணியில் எழுதியிருப்பார் செங்கை ஆழியான்.


DSC00707செங்கை ஆழியான் அளவுக்கு ஈழத்தவர் வாழ்க்கையை படம் பிடித்து வேறு யாரும் காட்டியிருக்கிறார்களா? என்று தெரியவில்லை. எங்கள் இலக்கியங்களில் போரும், சுய பச்சாதாபமும், அளவுக்கதிகமான வீரமும், வெறுப்பும், எம்மை விட்டால் யாரும் இல்லை என்ற திமிரும் இருக்கும். செங்கை ஆழியான் இதில் விதிவிலக்கு. வாழ்க்கையை அப்படியே தந்தவர். அதிலே எந்த பகட்டும் இல்லை. வெறுப்பும் இல்லை. வீராவேசமும் இல்லை.  செங்கை ஆழியானை நான் எப்போதும் ஒரு லிபரல் எழுத்தாளர் என்று சொல்லுவேன். தனக்கென்று ஒரு அரசியல் பார்வை, அஜெண்டா வைத்துக்கொள்ளாமல் தன் போக்கில் எழுதுவதால் அவர் எழுத்துக்கள் மிகவும் உண்மையாகவும் மிகைப்படாமலும் இருக்கும். அவரை இனி வரும் தலைமுறை வாசிக்காமல் தவிர்த்துவிடுமோ என்ற அச்சத்தில் சொல்லுகிறேன். உங்கள் வீட்டு லைப்ரரியில் அட்லீஸ்ட் அவருடைய யானை, கிடுகுவேலி போன்ற புத்தகங்களையாவது நிச்சயம் வாங்கி அடுக்குங்கள்.

ஏழாம் அறிவுடை நம்பிகள்!

 

அரவிந்த், இப்ப நாம எந்த நிலைமைல இருக்கோம்னு முதல்ல தெரிஞ்சுக்கணும். வீரம் வீரம்னு தானே சண்டை போட்டாங்க நம்ம பக்கத்து நாட்டுக்காரங்க. ஜெயிக்க முடிஞ்சுதா? செத்து தானே போனாங்க?

 

----------------------------------------------------------------------

 

என்னை வாழவைத்த தமிழக மக்களே.

இலங்கை தமிழர்களை நான் நெறைய தடவ சந்திச்சிருக்கேன். அவங்க திட்டினா கூட நாதம் மாதிரி இருக்கும். இங்க நாம பேசறது definetely ராஜபக்ஸ காதுக்கு போய் சேரும். அந்த தைரியத்தில நான் ஸ்ரீலங்கா கவுர்மண்டுக்கு ஒண்ணு மட்டும் சொல்ல விரும்புறேன். தமிழ் மக்கள் உரிமைக்காக போராடினாங்க, நீங்க யுத்தத்த அனவுன்ஸ் பண்ணீங்க. ஒரு வருஷமா, ரெண்டு வருஷமா, முடியல .. முப்பது வருஷமா உங்களால அவங்கள ஒழிக்க முடியலையேன்னு சொன்னா நீங்க என்ன வீரர்கள்? ஆம்பளங்களா நீங்க? ஒத்துக்க ஒனக்கு ஈகோ இடம் கொடுக்கல .. பாரு உதிரம் கொட்டுது எங்க .. அந்த பொணங்கள எல்லாம் புதைக்கல, விதைக்கிறாங்க. நாளைக்கு அதுக எழுந்து வந்து ஒங்கள தூங்க விடாது. முப்பது ஆண்டுகளுக்கு பிறகு எல்லாத்தையும் விட்டிடு என்னா அது எப்பிடி? செத்தவங்க வந்து வாழ்றவங்கள விட்டிடுவாங்களா? இந்த விஷயத்துக்கு எவ்வளவு கொடுத்தாலும் அது போதாது. என்னுடைய சார்பில ஒரு பத்து லட்சம் ரூபா பணம் கொடுக்கிறேன்.. நன்றி.வணக்கம்!

 

டிவியில் சூப்பர்ஸ்டாரின் அண்ணாமலை பாணி வசனங்களை கேட்ட குமரனுக்கு உடம்பெல்லாம் புல்லரித்தது.

மச்சான் போத்தில உடை, தலைவர் பின்னி எடுத்திட்டார்..

மெல்போர்ன் எட்டு டிகிரியில் குளிர்ந்துகொண்டு இருந்தது.

 

----------------------------------------------------------------------

 

அண்ணை கொஞ்சம் வண்டிய நிப்பாட்டுங்க

நடராசாவின் மாட்டு வண்டில் கிளிநொச்சி, ஹட்சன் ரோட்டில் ஏறும்போது வீதியில் நின்ற போராளி ஒருவன் அவர்களை மறித்தான். வண்டியில் நடராசா, அவரின் மனைவி கனகம்மா, சின்ன மகள் வானதியுடன் ஒரு பெரிய பெட்டி மற்றும் வண்டில் கொள்ளாத வேறு சாமான்கள். மாடுகள் இழுக்கமுடியாமல் இழுத்தன.

எங்கால பக்கமா போறீங்க?

இங்கால இராமநாதபுரம் பக்கம் போய் கொஞ்சநாள் இருந்திட்டு அப்புறம் முல்லைத்தீவு போலாம்னு..

உங்கள அப்பவே எழும்ப சொல்லியாச்சு, ஏன் இவ்வளவு நாளும் போகேல்ல?

வசதி இல்ல தம்பி, மாடு தேங்காய் இல்லாட்டி எங்களுக்கு வருமானம் இல்ல ..

அதெல்லாம் தெரியாது, சொன்னா சொன்ன மாதிரி போயிடணும், உங்களுக்காக தானே சொல்றோம்..

சரி தம்பி

இது உங்க பொண்ணா?

ஆமா

வயசு?

ஆவணிக்கு பத்து

பொய், பார்த்தா பதினேழு வயசு இருக்கும் போல

தம்பி, அது இன்னும் பெரியபிள்ளை கூட ஆகேல்ல

ம்ம ம்ம .. வேற பசங்க இல்லையா?

ஒரு மகன், அவன் சண்டைல நிக்கிறான்..

ஆர்ட குரூப்?

தெரியாது தம்பி

அண்ணை போராட்டம் முக்கிய கட்டத்துக் நெருங்கிக்கொண்டு இருக்கு, நாங்கள் உயிரை கொடுத்து போராடினா தான் அடுத்த தலைமுறை நிம்மதியாக வாழும். பயப்படாதீங்க. இந்தியாவில எங்களுக்கு நல்ல ஆதரவு வந்து கொண்டு இருக்கு. வெளிநாட்டு தமிழரும் எங்களுக்கு நிகரா போராட்டத்தில குதிச்சு இருக்கினம்.. எப்படியும் மீட்டிடலாம், நீங்க கவனமா போங்க

சரி தம்பி

என்று சொல்லிக்கொண்டே நடராசா மெதுவாக வண்டில் காளைகளை விரட்டினார். கனகம்மாவும் நடராசவும் ஒன்றும் பேசவில்லை. வானதி சற்று பேயறைந்த முகத்துடன் தாயின் தோளை பற்றிக்கொண்டு இருந்தாள். வண்டி ஒரு நூறு மீட்டர் சென்று இருக்கும்.

“அண்ணை நிப்பாட்டுங்கோ.. அண்ணை உங்கள தான்”

அந்த போராளி வேகமாக ஓடி வந்தான். கனகம்மா வன்னி வெயிலிலும் கொஞ்சம் நடுங்க ஆரம்பித்திருந்தாள். நடராசாவின் புருவங்கள் சுருங்கின.

“என்ன தம்பி..”

“குறை நினையாதீங்க…. அந்த பெட்டில என்ன கொண்டு போறீங்க?”

“அது .. வந்து .. உடுப்பும் சட்டி பாத்திரங்களும் ..வேற ஒண்டுமில்ல”

“இல்ல அண்ணை, எல்லாத்தையும் செக் பண்ண சொல்லி ஆர்டர்”

“வெறும் உடுப்பு தான் தம்பி, ஷெல் அடிக்க தொடங்க முதல் நாங்க போகணும்”

“அண்ணை எல்லாரும் முதல்ல வண்டியவிட்டு இறங்குங்க, அந்த பெட்டிய செக் பண்ணோனும்”

கனகம்மாவுக்கு இதற்கு மேல் பொறுக்கமுடியவில்ல

“என்ர பிள்ளைய பிடிச்சுக்கொண்டு போக நான் விடமாட்டன், ஐயோ அம்மா, என்ர கடவுளே .. நான் விடமாட்டேன்”

கனகம்மா அந்த பெரிய பெட்டியை இருக்கப்பிடித்து கொண்டு கதறினாள்

“அம்மா, நீங்களா விட்டா ஒரு பிரச்சனையும் இல்ல, இல்லாட்டி நிலைமை மோசமாகும், நான் பொறுப்பாளி இல்ல”

கனகம்மா தொடர்ந்து பெட்டியை மறைத்துக்கொண்டு நிற்க அவனுக்கு இன்னும் கோபம் வந்தது.

“இல்லை அண்ணை, நானே வாறன், அம்மா அப்பாவை ஒண்டும செய்யாதீங்க..”

பெட்டிக்குள் இருந்து தான் அந்த குரல். நடராசாவின் மூத்த மகள் மேகலா மெதுவாக அந்த டிவி பெட்டியை திறந்து கொண்டு வெளியே தலை நீட்டினாள், வியர்த்து விறுவிறுத்த படியே.

“ஐயோ, பெடியனை முதலில பிடிச்சாங்க, இப்ப பொம்பிள பிள்ளைய கொண்டு போறாங்க, ஐயோ ஐயோ, என்ர அம்மாளாச்சி”

அம்மா, கவலை படாதீங்க, அப்பா, வானதிய வடிவா பார்த்து கொள்ளுங்க, நான் எப்பிடியும் திரும்பி வருவன்

மேகலா தயக்கத்துடன் மெதுவாக வண்டியில் இருந்து இறங்கி நடராசாவிடம் சென்றாள். நடராசாவின் கண்கள் இரண்டும் நீர் முட்டி இருந்தது. செய்வதறியாமல் திகைத்து போய் நின்றார்.

அப்பா, அம்மாவை கவனமா பாத்துக்குங்க.. அப்புறம் ..வந்து..

சொல்லம்மா

குமரன் … குமரன் தொடர்பு கொண்டா, இந்த மேகலா எப்பிடியும் அவனிட்ட திரும்பி வருவா எண்டு சொல்லுங்கோ அப்பா

விக்கித்து போய் நின்றார் நடராசா

ஐயோ ஐயோ … ஆசையா வளர்த்த பிள்ளை .. கொல்ல கொண்டு போறாங்களே .. ஐயோ.. ஐயோ

கனகம்மா அரட்டிக்கொண்டு அழுது புரண்டாள். வன்னி வெயில் அனல் அடித்தது.

 

----------------------------------------------------------------------

மச்சி சும்மா இந்த ஷிவாஸ் ரீகலையும், ப்ளாக் லேபிளயும் அடிச்சு அடிச்சு அலுப்பு தட்டுது. ஒரு சேஞ்சுக்கு டிம்பிள் அடிச்சு பார்ப்போம்

சொல்லிக்கொண்டே குமரன் தன்னுடைய நான்கு நண்பர்களுக்கும் டிம்பிள் சாராயத்தை உடைத்து ஆளுக்கொரு பெக் ஊத்தினான்.

இனி மச்சான், இந்தியா பிக் அப் பண்ணிடும். ரஜனி கமல் இப்பிடி பேசினா பிறகும் கருணாநிதி சும்மா இருப்பார் எண்டு நான் நினைக்க இல்ல. இங்கால ஜெயலலிதா வேற ப்ரெஷர் கொடுக்கிறா. நீ இருந்து பாரு, 87ம் ஆண்டு மாதிரி இந்தியா வன்னில பருப்பு போட்டாலும் போடும்

சியர்ஸ்..

மச்சி, ஒண்ட நீங்க எல்லோரும் புரிஞ்ச கொள்ள வேணும்,  எங்கட தலைவர் இந்தியாவையோ இல்ல நோர்வேயையோ நம்பி இந்த போராட்டத்த ஆரம்பிக்க இல்ல. இது எங்களால எங்களுக்கு எண்டு ஆரம்பிக்கப்பட்டது. நாங்க எப்பிடியும் இத வெண்டு காட்டுவோம்

எப்பிடி மச்சி … டேய் கீர்த்தி, அவன்னில வச்ச சிக்கின் அவிஞ்சிட்டா எண்டு பாரு .. இல்லாட்டி கொஞ்சம் திருப்பி விடு

உண்ணாவிரதம் தான் ஒரே  வழி, காந்தி  திலீபன் எல்லாம் நத்திங் மச்சான். நாங்க எல்லாரும் கான்பெராவில போய் ஒரு பத்து நாளைக்கு உண்ணாவிரதம் இருந்தா எப்பிடியும் சர்வதேசம் அடிபணியத்தான் வேணும் மச்சி

கஷ்டம்டா

பத்து நாள் கஷ்டம்னா ஒரு அஞ்சு நாள் இருப்பமா? கொம்பனில “நோ பே” போட தேவை இல்லை

கருமம், நான் அத சொல்ல இல்ல, நாங்க எத்தனை நாள் இருந்தாலும் சர்வதேசம் அசையாது பாஸ்.

அசைய வைப்போம், வெளிநாட்டு தமிழர் எல்லாம் ஸ்டெடியா இருந்தா, யாரும் எங்கள அசைக்க முடியாது.

சரியா சொன்னாய் மச்சி, இன்னொரு கிளாஸ் ஊத்து

… குமரன் தள்ளாடினான்!

 

----------------------------------------------------------------------

 

ஐயோ அம்மா, விடுங்கடா என்னை .. அம்மா

மேகலா குற்றுயிராய் முனகிக்கொண்டு நிலத்திலே கிடந்தாள். நல்லவேளை சரியான நேரத்தில் சயனைட் அருந்தி விட்டாள். எல்லாமே ஒரே மயக்கமாய் இருந்தது. சுற்றிலுமே சிங்கள உரையாடல்கள். புரிந்தும் புரியாமலுமாய் இருந்தது. உடம்பு முழுதும் அடித்துப்போட்டால் போல ஒரே வலி.  அடி வயிற்றில் பிராணன் போகிறது. உடல் முழுதும் ஒட்டு துணி இல்லாதது, உயிர் போகும் வேளையிலும் அவமானமாய் இருந்தது. மேகலா அந்த நிமிடத்திலும் குமரனை நினைத்துக்கொண்டாள்.

முகத்த காட்டு

ஆ இந்த பொண்ணு தான், இன்னும் முனகிக்கிட்டு கிடக்கு

சயனைட் குடிச்சிட்டு போல

பாடிய தூக்கி ட்ராக்டர் பெட்டில போடு

இன்னும் முனகுது பொண்ணு

இந்தா பிடி

இண்டைக்கு தூக்கினதுக்குள்ள இது தான் மாற படு

ஆ?

சுப்பர் பாடிடா இது

இதுவா இதுவா …

கேட்டுக்கொண்டே சப்பாத்து கால்களால் அந்த சிப்பாய் மேகலாவின் அடி வயிற்றை உதைக்க உதைக்க, மேகலா முணுமுணுத்தபடியே மூர்ச்சை ஆனாள்

“சாரிடா குமரன், என்ன மறந்திடு”

 

---------------------------------------------

வீரத்துக்கும் துரோகத்துக்கும் வித்தியாசம் தெரிஞ்சுக்கோ, ஒரு தமிழன ஒன்பது நாடு  சேர்ந்து கொன்னதுக்கு பேரு வீரம் இல்ல… அது துரோகம்!

கைதட்டல் விசில் தியேட்டரில் காதை பிளக்க குமரன் சற்று பெருமையுடன் பக்கத்தில் உட்கார்ந்திருந்த கீர்த்தியை பார்த்தான்.

மச்சி சூரியா கலக்கீட்டான்ல, விஜய் கதி அதோ கதி தான்

 

-------------------------------------- முற்றும் --------------------------------------------

 

முடிவுரை

நண்பர்களே, இந்த கதையை மேலோட்டமாக வாசிக்கும் போது ஒரு தப்பான புரிதலுக்கு இடமளிக்க கூடும் என சில நண்பர்கள் கருத்து தெரிவித்து இருந்தனர். அது கதையின் மூலத்தை பாதித்து விட கூடாது என்பதால் இதை எழுதுகிறேன். இதிலே நடந்த மேகலா குமரன் சம்பவங்கள் நிஜத்தில் நடந்தவை. நான் கடந்த வருடம் வன்னி சென்ற போது நேரில் கேட்டு அறிந்தது. எனக்கு தெரிந்த பெண் கூட.. இதை பற்றிய நல்ல ஒரு கலந்துரையாடல் “கருத்துகள்” பகுதியில் இடம்பெறுகின்றன. என்னுடைய ஒரு பதிலை கீழே உள்ள சுட்டியில் பார்க்கவும். சிறுகதையில் தொக்கி நிற்கும் சில விஷயங்களை தெளிவு படுத்தியுள்ளேன். எழுத்தாளர் இந்த விளக்கத்தை ஒரு போதும் கொடுக்க கூடாது. ஆனால் நான் அமெச்சூர் என்பதால் செய்யலாம் என்று நினைக்கிறேன்!!

http://orupadalayinkathai.blogspot.com/2011/11/blog-post_15.html?showComment=1321434695295#c7713364138847510834

“ஐ லவ் யூ ஆன்ட்ரியா!”


the-corrs-11காதல்கொண்டேன் படத்திலே “நெஞ்சோடு கலந்தது” பாடலை ரசிக்காமல் இருந்திருக்க மாட்டீர்கள், உயிரை அப்படியே கீறி கிழிக்கும் வயலின் செல்லோ இசையும் மெட்டும் கலந்த பாடல். என்ன கம்போசிங்டா இது, யுவன்சங்கர்ராஜா அப்பனுக்கு தப்பாமல் பிறந்த பிள்ளை என்று சிலாகித்த போது நண்பன் சொன்னான், தப்பு .. இது Corrs குழுவின் அல்பத்தில் இருந்து சுட்ட பழம் என்று. அன்றைக்கு ஆரம்பித்தது தான் ஐரிஷ் இசை பேண்ட் குழுவான  “The Corrs” மீதான காதல்.

பாடும் பெண் தான் ஆண்ட்ரியா. பக்கத்தில் இருக்கும் வயலினில் கொஞ்சும் பெண் அவரின் சகோதரி ஷரோன். டிரம்மர் இன்னொரு சகோதரி கரோலின். அந்த கிடார் வாசிக்கும் இளைஞன் இவர்களின் சகோதரன் ஜிம். இந்த நான்கு சகோதரர்களும் சேர்ந்து உருவாக்கிய இசை சங்கமம் தான் இந்த “The Corrs” என்ற பாண்ட்.

மெய் சிலிர்க்க வைப்பது என்பது இது தான்

ஆன்ரியா ஓகே என்று சொல்ல பியானோ கவுன்டிங்குடன் தொடங்கும் ஒன்று. அந்த ஒன்றை என்னவென்று சொல்வேன்? வெறுமனே பாடல் என்று சொல்ல முடியாது. இசை என்றும் சொல்ல முடியாது. ஏதோ ஒன்று, உள்ளத்தையும் உடலையும் கட்டிப்போட்டு படாதபடுத்தும் ஏதோ ஒன்று. காதல் கூட இப்படி போட்டு தாக்குமா என்பது சந்தேகமே. அந்த பேண்ட் கலைஞர்களிடம் ஒருவித vibration இருக்கும். சின்ன சின்ன அசைவுகள், புன்னகைகள், கண்களாலேயே சக கலைஞர்களை சிலாகிப்பது, ஒரு பெருமை .. எல்லாமே இருக்கும்.

the-corrs“Say it's true, there's nothing like me and you” என்று பாடும் போது பியானோ பேஸ் இல் ரிதம் கொடுக்க, அந்த வயலின் வேறு எம்மை கொலை செய்ய, சில நேரங்களில் பாடலை கேட்க தைரியம் இல்லாமல் நிறுத்தி விடுவேன். சில மெலடிகளை கேட்கும் போது தாங்க முடியாது. கண்களில் நீர் முட்டி விடும். இது அந்த வகை இசை. அந்த இறுதி சுரம் தப்புவது கூட அந்த இசைக்கு இன்னும் அழகு சேர்த்தால் போல தான் இருந்தது. நேற்று பிறந்த பிள்ளைக்கு வைத்த திருஷ்டி பொட்டு போல!

ஐரிஷ் இசைவடிவங்கள் எப்போதுமே உயிரை பிழிவன. Pan, tin, fiddle போன்ற புல்லாங்குழல்கள் கொடுத்த மூங்கில்கள் அவர்கள். என்யாவை கேட்டு இருக்கிறீர்களா. ஒருநாள், வசந்த காலத்தில், நிலா முற்றத்தில் அவரின் இசையை நிலவை பார்த்துக்கொண்டே கேட்டுப்பாருங்கள். அது போதும். காதலிக்கவேண்டாம். அப்புறம் U2 பற்றி சொல்லவே வேண்டாம். எனக்கு அண்மையில் வந்தவர்களில் “The Script” குழுவை அதிகம் பிடிக்கும், குறிப்பாக இந்த “break even” பாடல். ஆனால் The Corrs என்றால் எப்போதுமே ஒரு எக்ஸ்ட்ரா பிரியம். அவர்களின் பாடல்களில் எப்போதுமே ஒரு soul, soft, soothness எல்லாமே இருக்கும். கொஞ்சம் பலவீனமான இசை பிரியர் என்றால் உங்களை கொன்று புதைத்து விடுவார்கள். Dangerous fellas.

அந்த கிட்டார் ரிதம் இருக்கிறதே! ஆன்ட்ரியா பாட, ஷரோன் வயலினிலும், வாய்சிலும் ஹார்மனி இசைக்க, நோட்ஸ் எல்லாமே அங்கே இங்கே என்று ஓடித்திரியும். ஒரு கட்டத்தில், ஆண்ட்ரியாவின் குரலும் ஹார்மனிக்கு மாறி, பியானோவும் வயலினும் முன்னணிக்கு வர கிட்டார் அப்போதும் ரிதம் அலுக்காமல் சிவனேன்னு கொடுத்துக்கொண்டே இருக்கும். ஒரே flow வில் இருக்கும் இசையில், இத்தனை arrangements. அது வேறு unplugged. எனக்கு “பொத்தி வச்ச மல்லிகை” பாடலை improvise பண்ணி, தேர்ந்த இசை கலைஞர்களால் இப்படி ஒரு unplugged செய்ய ஆசை. தீபன் சரி என்றால் அடுத்த முறை சிங்கப்பூர் செல்லும்போது முயற்சி செய்யவேண்டும்!

மீண்டும் கொஞ்சும் அழகு தேவதை ஆன்ட்ரியா, அதிலும் அவள் தவறு செய்யும் போது முகம் போகும் போக்கை பாருங்கள். இது தான் unplugged இசை நிகழ்ச்சியில் இருக்கும் அழகு.  அந்த வயலின் கொஞ்சம் மன்மதன் அம்புவின் “நீ நீல வானம்” ஆரம்ப இசையை ஞாபகப்படுத்தும். ஐரிஷ் இசையின் அடி நாதம் இந்த வயலின் இசை என்று நினைக்கிறேன். 
வரிகள் இன்னும் அபாரம், எப்படி முடிகிறது இப்படி இசை தர?
I know this face I'm wearing now
I've seen this in my eyes
And though it feels so great, I'm still afraid

90களில் புகழ்பெற்று ஐரோப்பாவை ஒரு கலக்கு கலக்கிக்கொண்டு இந்த நூற்றாண்டுக்குள் நுழையும்போது குழுவிலே பிரிவு வந்துவிட்டது. எந்த ஒரு பெரிய பாண்டுக்கும் இது நடப்பது தான். பீட்டில்ஸ், பாக்ஸ்ட்ரீட் பாய்ஸில் இருந்து நம்முடைய தேவா சகோதரர்கள் வரை பிரிவு என்பது ரசிகர்களுக்கு ஒரு இழப்பாகவே இருக்கும். The Corrs பேண்டில் இருவர் காலாகாலத்தில் குடும்பத்தை கவனிக்க போக, ஆன்ட்ரியா அப்புறம் தனி ஆவர்த்தனம் தொடங்கினாலும், முன்னே இருந்த உயிரும், அந்த கெமிஸ்ட்ரியும் தொலைந்து போனது.


இந்த பாடல், The Corrs இன் பாடல்களிலேயே உலகை ஒரு கலக்கு கலக்கிய பாடல். அந்த lullaby இசைக்கு காரோலினின் ட்ரம்ஸ் சும்மா அடி பின்னும். ஹாரிஸ் ஜெயராஜ் ஏன் தான் இன்னும் இந்த பாடலை கேட்கவில்லையோ தெரியாது!
I met you on a sunny Autumn day
You instantly attracted me
When asking for the way
God if I had known the pain I'd make you feel
I would have stopped this thought of us
And turned upon my heel

ஆன்டிரியா flute … அதகளம்

இந்த குழுவில் ஆண்ட்ரியா ஒரு படி எப்போதுமே மேலே தான். அவர்களிலே ஊன் உயிர் உறக்கம் எதிலுமே இசை இருப்பது இந்த பெண்ணில் போல தான் தெரிகிறது. அதுவும் இந்த பெண் டின் ப்ளூட்(Tin Flute) வாசிக்கும் பாங்கு, செலின் டியனையே தூக்கி சாப்பிட்டு விடும். கேட்டு பாருங்கள்!

“The Corrs” இசைக்குழு மீண்டும் ஒரு ஆல்பம் வெளியிட ஒன்று சேர்வதாக ஒரு கதை உலாவுகிறது. சேரவேண்டும். மீண்டும் ஒருநாள் அந்த அல்பத்தை இந்த தொடரிலே நான் சிலாகிக்க வேண்டும். “The Corrs” இன் பல பாடல்களை ஆரம்பத்தில் தொகுத்தேன். ஆனால் பின்பு யோசித்தபோது, இந்த இசையை தொட்டும் தொடாமலும் சொன்னால தான், வாசிப்பவர் தன் வசம் மறந்து இவர்களின் இசையை தேடி தேடி கேட்பார். அப்படி உணர்ந்தால், அப்படி கேட்டால், ப்ளீஸ் ஒரு கமெண்ட் போடுங்கள். இந்த இசைய பற்றி பேச வேண்டுமானால் அலுவலகத்துக்கு ஒருநாள் லீவு போடவும் நான் தயார், அட வேலையை விடலாம், அந்த கொஞ்சும் சலங்கை ஆண்ட்ரியாவுக்காக!!

andrea-corr-2074
இறைவா, இறவாமை வேண்டும்,
மீண்டும் பிறப்பு உண்டேல் – இம்மாதிரி
பாடல்கள் ரசிக்கும் மனப்பான்மை வேண்டும்- வேண்டும் 
என்று கேட்கும் மட்டும் இசை தரும்
இவர்கள் இன்னும் இன்னும் வேண்டும்!
அப்புறம் ஒரு சின்ன request மை லார்ட்
அந்த பொண்ணு சூப்பரா பாடுது, அட்லீஸ்ட்
அவள்  போன் நம்பராவது வேண்டும்!!
என்ன? இந்தவார ♫♫ உ.. ஊ.. ம ப த ப மா ♪♪ பிடித்திருக்கிறதா?  மீண்டும் அடுத்த செவ்வாயில் வேறு ஒரு மியூசிக்கல் collection உடன் சந்திப்போம்!
 ♫♫ உ.. ஊ.. ம ப த ப மா ♪♪ : சீனி கம்
♫♫ உ.. ஊ.. ம ப த ப மா ♪♪ : தேடித்தேடி தேய்ந்தேனே
♫♫ உ.. ஊ.. ம ப த ப மா ♪♪ : நிலவும் மலரும் பாடுது
♫♫ உ.. ஊ.. ம ப த ப மா ♪♪ : கொச்சின் மாடப்புறாஎன் கொல்லைப்புறத்து காதலிகள் : சந்திரிகா!

 

1994ம் ஆண்டு அக்டோபர் பன்னிரெண்டாம் தேதி, யாழ்ப்பாணம் காலையிலேயே எழுந்து புத்தாடை அணிந்து புன்னகையுடன் பத்திரிக்கை படித்துகொண்டு இருந்தது. அன்று தான் சமாதான பேச்சு வார்த்தை குழு கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் வருகிறது. எங்கள் வீட்டுக்கு பக்கத்தில் தான் யாழ் பல்கலைக்கழக மைதானம், அங்கே தான் ஹெலிகாப்டர் இறங்குகிறது. பக்கத்து காணியில் ஒரு 50கலிபர் துப்பாக்கி பாதுகாப்புக்கு. ஆனால் இம்முறை எனக்கு பயம் இல்லை. அது தான் சமாதானம் வரப்போகிறதே! இரவு முழுதும் தூங்கவேயில்லை. தூதுக்குழுவின் அத்தனை உறுப்பினர் விவரமும் மனப்பாடம். அதன் தலைவரான பாலபட்டபெந்தி, ஜனாதிபது ஆலோசகர், லயனல் பெர்னாண்டோ என ஒரு ஐந்து பேர். புலிகள் குழுவில் கரிகாலன், இளம்பரிதி உட்பட ஒரு ஐந்து பேர். பேசப்போகிறார்கள். பிரச்சனையை தீர்க்க போகிறார்கள்.

 

president-chandrika-kumaratunga-ltte-peace-talks-1994-1995அன்றைக்கு பாதுகாப்பு கடும்பிடி. இராமநாதன் வீதியை மூடிவிட்டார்கள். எனக்கென்றால் ஹெலியை பக்கத்தில் இருந்து ஒருமுறை பார்த்துவிட வேண்டும் என்று ஒரு ஆர்வம. அதிலும் ஹெலியின் கதவருகே துப்பாக்கியுடன் இருக்கும் ஆர்மியை நேரில் பார்க்கவேண்டும். ஒருமுறை இந்த ஹெலி தாழ்வாக சுட்டுக்கொண்டு செல்லும்போது அம்மாவிடம் திட்டு வாங்கிக்கொண்டே, பங்கரில் இருந்து கொஞ்சம் எட்டிப்பார்த்தேன். ஹெலியின் துப்பாக்கி தெரிந்தது. சன்னங்கள் பறந்தன. ஆனால் ஆர்மி முகம் தெரியவில்லை. எப்படியும் இன்றைக்கு பக்கத்தில் இருந்து பார்த்து விடவேண்டும்.ஒரே வழி, வீட்டு கூரையில் ஏறி நின்று பார்ப்பது தான். ஒரு மிகப்பெரிய அட்டையில் இன்றைய காதலியின் பெரிய சைஸ் படத்தை ஓட்டி, கையில் பிடித்துக்கொண்டு கூரையில் நின்ற போது, துப்பாக்கி ஹெலியில் நன்றாகவே தெரிந்தது. உள்ளே வெள்ளையும் சொள்ளையுமாக தூதுக்குழு. ஆர்மியையும் கண்டுவிட்டேன். எப்படியும் சுடமாட்டான்! கையில் வைத்திருந்த அந்த சந்திரிகா படத்தை தூக்கி வைத்து ஆட்டோ ஆட்டென்று ஆட்டினேன். ஹெலி கவனிக்கவில்லை.

 

ஆம் இந்த வாரம் என்னுடைய கொல்லைப்புறத்து காதலி, 94ம் ஆண்டு யாழ்ப்பாணத்தில் இருந்த அநேகமான பதின்ம வயது இளைஞர், சிறுவர்களின் மனம் கவர்ந்த ஒரே காதலி, அப்போதைய இலங்கை ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக குமாரணதுங்க!!!

 

Chandrika18_0

சந்திரிகா பிரதமர் ஆன சமயம், இலங்கையில் சண்டை உச்சத்தில் நடந்துகொண்டு இருந்தது. மண்டைதீவு தாக்குதல், பூநகரி, ஆனையிறவு என்று போர் போர் போர், எங்கு பார்த்தாலும் இரத்தம். இது போதாது என்று கொழும்பில் வேறு அடுத்தடுத்து தற்கொலை தாக்குதல்கள். அந்த வயதில் சத்தியமாக எனக்கு இதெல்லாம் ஏன் என்று தெரியவில்லை. அட, இன்றைக்கும் அது தெரியவில்லை என்பது வேறு விடயம். என் வயதினர் ஈழத்தில் கண்டது எல்லாமே போரை தான். போரை மட்டும் தான். எதை இழந்தோம், அதை அடைவதற்கு என்பது எமக்கு புரியவில்லை, ஏனெனில், இழக்கும்போது நாம் பிறக்கவில்லை. பிறந்த போது இழப்பதற்கும் ஒன்றும் இருக்கவில்லை!

 

12709_NpAdvSinglePhotoஅப்போது போர் போரடித்து எல்லோருக்கும் ஒரு மாற்றம் வேண்டியிருந்தது. அந்த மாற்றம் தரும் மீட்பராய் சந்திரிகா தெரிந்தார். நீலப்புடவையில், கொஞ்சமே இடுப்பு தெரிய (கீர்த்தி அதை அடுப்பு என்பான், அது வேறு), அவர் வலம் வரும்போது, அடடே இவரே தான், இவரே தான் எமக்கு சமாதானம் கொண்டுவருவார் என்று தோன்றியது.  94ம் ஆண்டு நல்லூர் தேர் திருவிழாவுக்கு இரண்டு ஹெலிகள் தாழ்வாக பறந்து பூக்கள் தூவின. கூட்டம் ஆர்ப்பரித்தது. முருகன் பச்சை சாத்தி அங்கும் இங்கும் ஆடினார். அடுத்தடுத்து கடித போக்குவரத்துகள் சந்திரிகாவுக்கும் பிரபாகரனுக்கும் இடையே நடந்தது. அவரின் மாமன்காரன் வேறு வவுனியாவில் நின்று எல்லை தாண்டுபவர்களிடம் எல்லாம் எண்ணை, பட்டரி என தடை செய்யப்பட்ட பொருட்களை அனுமதிக்க, யாழ்ப்பாண வீடுகளில் விளக்கு ஒளி பிரகாசிக்க ஆரம்பித்தது.

ஆனால் அப்பா மட்டும் என் காதலை கடைசி வரை ஏற்றுக்கொள்ளவில்லை.

“இவளிண்ட அப்பன்காரனும், இப்பிடி தான் எங்கள எமாத்தினவன், இவங்கள் உண்மையிலேயே பிரச்சனைய தீர்க்கோணும் எண்டு நினைச்சா, கொஞ்சம் பெரிய ஆக்களை எல்லோ குழுவில போடோணும், பாரு, பாலபட்ட்பெந்தியும் கரிகாலனும் … அங்காலயும் சரி, இங்காலயும் சரி, மூத்திரம் போறதுக்கும் பெர்மிஷன் கேட்கிறவன் தான் உட்கார்ந்து பேசறான், இவங்கள் எப்படி டிசிஸியன் எடுக்க போறாங்கள்? அன்டன் இல்லாட்டி இவரால ஒரு முடிவும் எடுக்க ஏலாது. அவ சும்மா ஷோவுக்கு தான் இது செய்யிறா, நீ சின்ன பெடியன், உனக்கு இந்த காதல் எல்லாம் வேணாம், சும்மா படி!”

 

696080நான் அப்பாவை நம்பவில்லை. காதலிக்கும் போது இது ஒன்றும் புலப்படாது. அம்மா அப்பாவுக்கு என்னுடைய காதலியை பற்றி என்ன தெரியும்? சந்திரிகா நல்லதே செய்வார். இவ்வளவு செய்தவர் இன்னமும் செய்வார் என்று சொல்லிக்கொண்டு இருந்தேன். சந்திரிகா படம் போட்ட குட்டி கலண்டர் என்னுடைய பென்சில் பாக்ஸில் எப்போதும் இருக்கும். ஈழத்து புன்னகை இளவரசி  என்ற ஒரு பட்டம் கொடுத்து இருந்தேன். யாழ்ப்பாணத்தில் சந்திரிகா காப்பு, சேலை என்று குஷ்புக்கு இருந்தது போல ஒரு ரசிகர் பட்டாளம் உருவாகிக்கொண்டு இருந்தது. சந்திரிகா பை என்று ஒரு பை இருக்கிறது. அத்தனை பெரும் அதில் தான் சாமான் வாங்குவார்கள். இன்றைக்கும் சந்திரிகா பாக் யாழ்ப்பாணத்தில் புழக்கத்தில் இருக்கிறது. நிறைய தேங்காய் கொள்ளும் பை அது. அவரின் பெயரில் இருக்கும் ஒரே நல்ல விஷயம் அந்த பை ஒன்று தான்!

 

சந்திரிகாவை நான் விரும்பியதற்கு மூன்று காரணங்கள். Vijaya_Chandrika_TC_0318

ஒன்று: என்றைக்கும் இல்லாத சமாதான சூழ்நிலை இவர் வந்தவுடன் உருவாகி இருந்தது. அவர் France இல் படித்தவர். வெளிநாட்டில் படித்தபடியால் சிங்களவனின் வழமையான குணம் இருக்காது.

இரண்டு: அவரிடம் இருந்த வசீகரம். நம்ம ஊரு பொண்ணுங்க எல்லாம் குத்து விளக்காட்டம் இருக்க, இந்திய சஞ்சிகைகளில் வரும் பெண்கள் படங்களின் கழுத்து முதல்  கால் நுனி வரை புலிகள் கறுப்பு மை பூசி மறைக்க, சந்திரிகா தான் கொஞ்சம் கூட பார்த்து ரசிக்க கூடிய பெண்ணாக தெரிந்தார்!

மூன்று: Third one … lemme see, I can’t .. sorry … Oops!!

 

நாட்கள் கடந்து கொண்டு இருந்தன. மூன்று சுற்றுகள் முடிந்துவிட்டது.  கொஞ்சம் கொஞ்சமாக infatuation போய் காதலர்களுக்கிடையே ஊடல் தலை தூக்கி விட்டது. தலை போகும் ஊழல். ஆமாம் புலிகளின் தலைவர்களில் ஒருவரான குட்டி என்பவரில் தலையை வெட்டி வேறாக போட்டு விட்டனர். அப்போதே புரிந்து விட்டது என்ன ஆகபோகிறது என்று.

 

ஆறே மாதங்கள் தான், ஒருநாள் வழமை போல உதயன் தலைப்பு செய்தியில் புலிகள் சமாதான பேச்சுவார்த்தையில் இருந்து விலகுவதாக செய்தி வர, பகீர் என்றது எனக்கு. நாளும் பொழுதும் காதலித்த பெண் நாம் நினைத்தது போல இல்லையே என்று ஏக்கம். அப்போதும் அவளை குற்றம் சொல்ல மனம் வரவில்லை. புலிகளுக்கு எப்போதும் பேச்சு வார்த்தைகளில் ஆர்வம் இருந்ததே இல்லை என்று எண்ணிக்கொண்டேன். அதில் உண்மையும் இல்லாமல் இல்லை. பிரிவது என்று ஆன பின் பேசுவதில் என்ன ஆகபோகிறது? என்று அவர்களும் நினைத்தார்களோ தெரியாது!

 

Chandrika1999அப்புறம் சாந்தசொருபியாய் இருந்த சந்திரிகா பத்திரகாளி உருவம் எடுத்தார். சமாதானத்துக்கான நூதன போரில், இறந்தது கொஞ்சநஞ்ச மக்கள் இல்லை. நவாலி தேவாலயத்தில் இருந்த அகதிகள் மீது தாக்குதல். நாகர்கோவிலில் பள்ளி குழந்தைகள் மீது தாக்குதல். மாறி மாறி சண்டைகளும் உயிர் இழப்புகளும். போதாது என்று புலிகளும் மக்களை இடம்பெயர சொல்ல, ஒரு மனித அவலம் 1995ம் ஆண்டு நிறைவேற்றப்பட்டது. அப்புறம் சந்திரிகா மீதும் தாக்குதல் நடக்க, கண் போனது என்னுடைய முன்னால் காதலிக்கு. கண்போன போக்கிலே இப்போது நடக்க ஆரம்பித்தார். அவளுக்கு கோபம் தலைக்கு இன்னும் ஏறிவிட, பின்னர் வந்த பேச்சு வார்த்தைகளை கூட வெற்றிகரமாக முறித்துவைத்தார். அவருடைய மிகப்பெரிய சாதனை தான் இந்த ராஜபக்ச என்பதையும் குறிப்பிடவேண்டும்.

 

 

அன்று சொன்னது …

"I have studied and acquired considerable knowledge on guerrilla warfare wheapr07cn I was a student in Paris, and we knew how they would behave. We conducted talks on the basis that the LTTE would not agree to any peaceful settlement and lay down arms." President Kumaratunga, Sri Lanka Sunday Times, 20 August 1995

இன்று சொல்வது

"I sincerely tried to reach a political consensus to solve the ethnic question, and tried to introduce a pluralistic constitution that would cater to the political aspirations of the Tamil people without dividing the country" -- Kumaratunga noted recently in 2007

 

-22அண்மைக்காலங்களில் தன்னை ஒரு intellectual diplomatic  ஆக காட்டிகொள்கிறார். இந்த மாதம் கிளிண்டனுடன் விருந்து, அப்புறம் ஹார்வார்டில் “‘Inclusive Development and Shared Societies” என்ற கருத்தில் ஒரு சொற்பொழிவு. சாத்தான் ஹார்வர்ட் வரை வேதம் ஓதுகிறது.  நான் கூட சிலவேளைகளில் நினைப்பதுண்டு, அவருக்கு உண்மையிலேயே நல்ல எண்ணம் இருந்து, ஆனால் கூட இருந்தவர் சேர்க்கையால் இப்படி நடந்திருக்கலாம் என்று. ஆனால் ஒரு தலைவர் நல்லவராக இருப்பது மட்டும் முக்கியம் இல்லை. ஆனால் நல்லதை செய்ய வேண்டும். புரட்சி பேசி நேர்மையாய் இருந்து பிரயோசனமில்லை. அதன் விளைவுகள் பாசிடிவாக இருக்க வேண்டும். அது அவரிடம் இல்லை. அங்கேயே முழுதும் தோல்வி. அந்த தவறை அவர் மட்டும் செய்ய வில்லை. இலங்கையின் முன்னணி தலைவர்கள் எல்லோருமே செய்தார்கள். அது தமிழர் தரப்பில் செல்வா, அமிர்தலிங்கத்தில் ஆரம்பித்து இன்றைக்கும் தொடர்கிறது. சிங்கள தரப்பில் கிட்டத்தட்ட எல்லோருமே. இதை சொல்ல உனக்கென்ன தகுதி என்று எப்போதுமே கேள்வி கேட்போர் கேட்கலாம். நான் அதை செய்யாமல் விட்டது தான் எனது தகுதி. அது கிடக்கட்டும் விடுங்கள்.

 

navali-church-boming

 

எல்லா மரங்களும் பூப்பதில்லை. எல்லா பூக்களும் காய்ப்பதும் இல்லை. காய்ப்பதில் சில தான் பழமாகி, பரவி, வித்தாகி வேர் பரப்பும். என்னுடைய இந்த காதலி மொட்டு மலரும் தருணத்திலேயே வாடி வதங்கிவிட்டாள். சந்திரிகா வந்தார், மனதை வென்றார், மண்ணெய் தந்தார், மண்ணையும் எம்மையும் தின்று விட்டு மாறிவிட்டார். காதலை தேடி அலையும் நாம் தாம் பாவம். ஏமாறிக்கொண்டே இருக்கிறோம்.

 

காதல் சொன்ன பெண்ணை இன்று காணுமே கண்ணா?

கட்டியவள் மாறி விட்டாள் ஏனடா கண்ணா?

 

---------------------              அடுத்த வாரம் இன்னொரு காதலியுடன்  ---------------------

காதலி நம்பர் த்ரீ : உதயன்

காதலி நம்பர் டூ : மணிரத்னம்

காதலி நம்பர் ஒன் :கம்ப வாரிதி இ.ஜெயராஜ்