

படம் குலேபகாவலி, இசை MSV என்றாலும், இந்த மெட்டு K V மகாதேவனுடையது என்று MSV ஒரு நிகழ்ச்சியில் சொல்லியிருப்பார். ராஜாவும் அவருடைய மனைவி ஜிக்கியும் இணைந்து பாடிய பாடல். ஐம்பதுகளின் திரையிசை ஜாம்பவான்களான MSV, KV மகாதேவன், A M ராஜா மூவரும் இணைந்த பாடல் என்றால் சும்மாவா.
பாடலின் ஆரம்ப வீணை இசை, “கலையே என் வாழ்க்கையின்” என்று ராஜா பாடிய இன்னொரு பாடலின் மெட்டை அடியொற்றி இருக்கும்.
“பாலூட்டும் நிலவு தேனூட்டுமே, பாடும் தென்றல் தாலாட்டுமே”
என்று ஜிக்கி பாடும்போது அதில் இருந்த காதல் நிஜம் என்று தோன்றியது. அப்புறம் வரும்
“புன்னை மரங்கள் அன்பினாலே போடும் போர்வை தன்னாலே”
என்னும் போது பூக்கள் சொரியும் பாருங்கள். கண்ணதாசன் வரிகள். கொன்றுவிடும் போங்கள்.
அடுத்த பாடல். தலைவரே இசையமைத்து பாடிய பாடல். இம்முறை சுசீலாவுடன் இணைகிறார். படம் தேனிலவு. இயக்குநர் ஸ்ரீதரின் படம். முதல் படம், நண்பர் ராஜாவை இசையமைப்பாளாராய் போட்டு எடுத்த படம். காஷ்மீரில் படமாக்கப்பட்டது. பாடல்கள் எல்லாம் இம்மை மறுமை இல்லாத சூப்பர் ஹிட்ஸ். பாட்டு பாடவா, துள்ளாத மனமும் துள்ளும், காலையும் நீயே, ஓஹோ எந்தன் பேபி, நிலவும் மலரும் என்று அடுக்கிக்கொண்டே போகலாம். எதை எடுக்க எதை விட?
ஒரு மழை இரவு. மின் விளக்கெல்லாம் அணைத்துவிடுங்கள். ஒரு மெழுகுவர்த்தி மட்டும் போதும். ஒரு சின்ன டேப் ரெக்கார்டரில் இந்த பாட்டை கண்ணை மூடிக்கொண்டு கேட்டுப்பாருங்கள். இப்படியும் தாலாட்ட முடியுமா? A M ராஜா பியானோ வாத்தியத்தில் பாண்டித்தியம் பெற்றவர். அது இந்த பாடலில் நன்றாகவே தெரியும். பியானோ தான் பாடலின் அடி நாதமே.
“சிரித்து சிரித்து உறவு வந்தால் நிலைத்து வாழுமா?
மனம் துடித்து துடித்து உறவு வந்தால் தோல்வி காணுமா?”.
இப்படியொரு மயக்கும் இசை, குரல்கள் மத்தியிலும் தனித்து தெரிய கண்ணதாசனால் மட்டும் தான் முடியும். பலே. கிராதகன்.
அடுத்த பாடல் கொஞ்சமே lullaby பாணியிலானது. MSV இசை. “பெற்ற மகனை விற்ற அன்னை” படம். மீண்டும் சுசீலா கண்ணதாசன் கூட்டணி. இந்த பாடல் 90களிலே யாழ்ப்பாணத்தில் பிரசித்தி பெற்றது, பல உள்ளூர் நிகழ்ச்சிகளில் பாடப்பட்டது. எனக்கு உறவினர் முறையும், யாழ்ப்பாணத்தில் பிரபல chemistry ஆசிரியருமான சிவத்திரன் தான் இந்த பாடலை எனக்கு அறிமுகப்படுத்தியவர். இன்னும் மறக்கவில்லை!
அடுத்த பாடல், கல்யாணபரிசு. ராஜாவே இசையமைத்தது. பாடல்கள் எல்லாம் சூப்பர் ஹிட்ஸ். “உன்னை கண்டு நான் வாட” என்ற பாடலை யார் மறக்க முடியும்? இங்கே நான் தரும் பாடல் “வாடிக்கை மறந்தது ஏனோ” தான். ஒரு peppy பாடலுக்கு என்ன ஒரு மேலோடியஸ் மெட்டு! அதிலும் நோட்ஸ் எல்லாம் முடியும் இடங்களில் பியானோ டச்சஸ். ராஜாக்கள் என்றும் ராஜாக்கள் தான். பட்டுக்கோட்டையின் வரிகள்.
அடுத்தது மெஸ்ஸியம்மா. அட இந்த பாடல் இல்லாமல் ஒரு A M ராஜா பதிவா? தெலுங்கு இசையமைப்பாளர் ராஜேஸ்வரராவ் இசையமைத்தது. P லீலாவுடன் தலைவர் பாடிய ஒரு ஜெம் என்று சொல்லலாம். மிஸ்ஸியம்மா ஒரு தெலுங்கு ரீமேக் என்று நினைக்கிறேன். நான் சந்தித்த தெலுங்கர்களுக்கும் இந்த பாடல்கள் நன்றே தெரிந்திருக்கின்றன.
மீண்டும் மீண்டும் பியானோ அடி நாதம். என்னத்த சொல்ல. கொஞ்சம் நகைச்சுவையான பாடல்.
அகம்பாவம் கொண்ட சதியாள் அறிவால் உயர்ந்திடும் பதி நான்என்று அவன் சொல்ல
சதி பதி விரோதம் மிகவே சிதைந்தது இதம் தரும் வாழ்வே
வாக்குரிமை தந்த பதியால் வாழ்ந்திடவே வந்த சதி நான்என்று அவள் சொல்வாள். சாவித்திரி ஜெமினி காம்பினேஷன் … சான்சே இல்லை!
நம்பிட செய்வார் நேசம் நடிப்பதெல்லாம் வெளி வேஷம்
அடடா … நீண்டு விட்டது … இன்னும் ஒரே ஒரு பாடல் தான்….. அதை போடாவிட்டால் அம்மா அடிக்க வரும். நான் குழந்தையாய் இருக்கும்போது அம்மா மடியில் வைத்து என்னை தூங்க வைக்க பாடும் பாட்டாம் இது. அதனால் தானோ என்னவோ A M ராஜாவில் எனக்கு எப்போதுமே ஒரே கொள்ளை ஆசை. மிஸ்ஸியம்மா தான் இந்த படமும். சுசீலாவுடன் மீண்டும்.
“ஏனோ ராதா இந்த பொறாமை? யார் தான் அழகால் மயங்காதவரோ”
ஐயோ .. இந்த பாட்டுக்கெல்லாம் விளக்கம் வேறு வேண்டுமா? பியானோ, புல்லாங்குழல், வீணை என்று இசை அதகளம் செய்து இருக்கும். சுசீலாவின் இளமைக்கால குரல், ராஜாவின் வசீகர குரலை தொடரும்போது அப்படியே கிருஷ்ணன், ராதா என்று கண்களில் மதுரா நகர் காட்சிகள் விரியும்.

அடடே “துயிலாத பெண்ணொன்று கண்டேன்”, மாசிலா உண்மை போன்ற பாடல்களை மிஸ் பண்ணி விட்டேன். பதிவு நீண்டு விட்டால் நம்ம பசங்க வாசிக்கிறாங்க இல்லை!!
A M ராஜா…. எனக்கென்னவோ KV மகாதேவன், MSV, இளையராஜா, ரகுமான் வித்யாசாகர் வரிசையில் சேர்க்கப்படவேண்டியவர் என்றே தோன்றுகிறது. கொஞ்சமே எழுதினாலும் பட்டுக்கோட்டையை நாம் கொண்டாடவில்லையா? அது போல …A M ராஜாவை இன்னும் இன்னும் கொண்டாடுவோம்!
சென்ற வார ♫♫ உ.. ஊ.. ம ப த ப மா ♪♪