சமாதானத்தின் கதை - யாழ் நூலக சந்திப்பு


நண்பர்களுக்கு வணக்கம்.

வரும் சனிக்கிழமை மாலை நான்கு மணிக்கு யாழ் நூலகத்தில், ஆதிரை வெளியீடான ‘சமாதானத்தின் கதை’ பற்றிய உரையாடல் ஒன்றை வெண்பா நிறுவனம் ஒழுங்குசெய்துள்ளது.

கதைகளினூடான உரையாடல் என்பது எப்போதுமே உற்சாகத்தைக் கொடுக்கக்கூடியது. ஒருவித எண்ணச்சுழற்சியில் எழுதப்படும் கதைகள் வாசிக்கப்படும்போது முற்றிலும் பிறிதொரு வடிவம் எடுத்து எழுதப்பட்டவரிடமிருந்து பிரிந்து அந்நியப்பட்டு நிற்கையில் நிறைய ஆச்சரியமும் கொஞ்சம் ஆயாசமும் சேர்ந்துவரும். அவ்விடத்தில் எழுதியவர் தொலைந்துபோய் அவரும் அந்தக்கதைகளின் இன்னொரு வாசகராகவே ஆகிறார். அந்தப்புள்ளியிலிருந்து விரிவடையும் உரையாடலை இந்நிகழ்வில் எதிர்பார்த்துக் காத்திருக்கிறேன்.

வாசிப்பினூடாக இணைந்திருக்கும் நண்பர்கள் அனைவரும் முடிந்தால் வருகை தாருங்கள். உங்கள் அனைவரையும் சந்தித்து உரையாட மிக ஆவலோடு இருக்கிறேன்.

சந்திப்போம்

சனி பிற்பகம் 4.00 மணி,
குவிமாடக் கேட்போர் கூடம்
யாழ் பொது நூலகம்

அன்புடன்.

"சமாதானத்தின் கதை" பற்றி சுபாசிகன்

"நான் வழிகாட்டிகளை நடு வழியிலேயே அடித்துத்துரத்தி விடுகிறேன். புத்தகங்களையும்தான்"

சமாதானத்தின் கதை ஜேகேயின் புத்தகம் வெளிவந்து, வாங்கி நாட்கள் கடந்து விட்டன. வாசித்து முடித்து, மனதில் தோன்றியதை எழுத வேண்டும் என்ற உந்துதல் இருந்தது. வழமைபோல் பரபரவென வாசிக்கத் தொடங்கி இரண்டாவது கதையில் ஒரு இடைவெளி வந்து விட்டது. இந்த இரண்டாவது கதை பற்றி கொஞ்சம் விரிவாகவே கூறுகிறேன். கூற வேண்டும்! சிறிது நாட்கள் இடைவெளியின் பின் மீண்டும் வாசித்து முடிக்கையில், அவரவர் ஏற்கனவே விமரிசனங்கள் எழுதி முடித்து விட்டனர். இதற்குள் நான் என்னத்தைச் சொல்லிக் கிழிக்க? எனினும் நான் நினைத்ததை முடிக்காமல் விடுவதெப்படி?

ஏழு வாத்திகளின் கதைகள் : 2. பிரின்ஸி
இந்தச் சூழலைக் கொஞ்சம் கற்பனை செய்து பாருங்கள்.
ஒரு பக்கம் பழைய பூங்கா. பூங்கா முழுதும் பிரிட்டிஷ்காலத்தில் நடப்பட்ட, அடர்த்தியாக வளர்ந்துநிற்கும் மலைவேம்புகள். அம்மரங்களின் உச்சிகளில் இலைகளுக்குப் போட்டியாகத் தொங்கிக்கிடக்கும் வௌவால்கள். பழையபூங்காவுக்குள் அப்போது காவல்துறை பயிற்சிமுகாம் இருந்தது. எப்போதாவது யாராவது தவறுதலாக வெடிவைத்தால் அத்தனை வௌவால்களும் தூக்கம் கலைந்து எழுந்து கூட்டமாக மேற்குப்பக்கமுள்ள பாடசாலையின் விளையாட்டு மைதானத்தின்மேலே ஒரு விரிப்புபோல மேவிப்பறக்கும். மற்றபடி அத்தனை வௌவால்களும் பகலில் சிறு சிறு சலசலப்புகளுடன் தொங்கியபடி.
மைதானத்தின் வடக்கு மூலையில் இரண்டுமாடி வீடு ஒன்று. அதிபர் பங்களோ. கிட்டத்தட்ட எழுபது எண்பது வருடங்கள் பழமையானது அந்த வீடு. அதுவும் பிரிட்டிஷ்காலத்தில் கட்டப்பட்டதுதான். பங்களோவின் சுவர்களைத் தொட்டால் சுண்ணாம்புப்பூச்சு உதிரும். அவ்வளவு பழசு. ஆனால் அந்தப் பழமைதான் அச்சூழலை அழகுபடுத்திக்கொண்டிருந்தது. அந்த பங்களோவின் போர்ட்டிகோவில் ஒரு சாய்மனைக்கதிரை. கதிரைக்குப்பக்கத்திலேயே தேநீர்கோப்பை வைத்து எடுக்கவென அளவான உயரத்தில் ஒரு ஸ்டூல். இங்கே பாடசாலை காலையில் ஆரம்பிக்கும் அமளியில் இருக்கும்போது அந்தக்கதிரையில் அமர்ந்திருந்து தேநீரையும் அருந்தியபடி பேப்பர் வாசித்துக்கொண்டிருப்பார் அதிபர்.

ஏழு வாத்திகளின் கதைகள்: 1. கருணைநாயகத்தார்

@http://www.thecricketmonthly.com/


எங்கள் பாடசாலையில் ‘வாழ்க்கைத்திறன் கல்வி’ என்றொரு தனிப் பாடம் இருந்தது.
வாழ்க்கைத்திறன்கள் பலவகைப்படும். சைக்கிள் டியூப் ஒட்டுவது. சட்டைக்குக் ஹங்கர் சரிக்கட்டுவது. சீலைத்துணியில் தேயிலை வடி செய்வது. செவ்வரத்தையில் பதி வைப்பது. எக்ஸோராவில் பத்து ஒட்டு ஒட்டி பதினொரு கலரில் பூக்கவைப்பது. மரக்கன்று வைக்கவென வீடுவீடாகச்சென்று குப்பைகளில் லக்ஸ்பிரே, நெஸ்பிரே பாக்குகளைத் தேடிச் சேகரிப்பது. இப்படி அடுக்கிக்கொண்டே போகலாம்.
வாழ்க்கைத்திறன் கல்வியை எங்களுக்குப் பாடசாலையில் கற்பித்தவர் கருணைநாயகத்தார்.

சமாதானத்தின் கதை : புதிய வெளியீடு
ஆதிரை வெளியீடாக நான் எழுதிய ‘சமாதானத்தின் கதை’ என்கின்ற நூல் இப்போது கடைகளில் கிடைக்கிறது.
000
கதைகளைச் சொல்லாமலேயே விட்டுவிட்டால் என்ன என்று எண்ணிய காலமது. சொல்லாத கதைகள் எப்போதுமே எம்மோடு அமுங்கியபடி கூடவே இருக்கின்றன. இரகசியங்களைப்போல. சொல்லியபின் அவை எம்மைவிட்டுப் பறந்துபோய்விடும். பின்னர் கூப்பிட்டாலும் அவை செவிமடுப்பதில்லை. எப்போதேனும் தெருவோரம் யாரோ அவற்றைக்கூட்டிச்செல்லும்போது எம் வாசலை எட்டிப்பார்ப்பதோடு சரி. அதற்குமேல் அவற்றுக்கும் எமக்குமான உறவு நெருங்குவதேயில்லை.
“சமாதானத்தின் கதை” நூலில் உள்ள பதினொரு கதைகளும் எப்போதோ என்னோடு கோபித்துக்கொண்டு பிரிந்துபோன கதைகள். அவற்றை மீள எழுதும்போது நிரம்பிய அன்பும் அதற்கும்மேலாகச் சண்டையும் அவற்றோடு பிடிக்கவேண்டியிருந்தது. சில கதைகள் வளர்ந்தும் இன்னும் பல ஒடுங்கியும் கிடந்தன. ‘விசையறு பந்து’ மதுவந்திகாவைக் காணும்போது புதிதாக இருந்தது. ‘தூங்காத இரவு வேண்டும்’ சிவலிங்கத்தின் வாழ்வை நினைத்துப்பார்க்கவே ஒரு கலக்கம் வந்துபோனது. கிட்டத்தட்ட ஒரு நான்கைந்து மாதங்கள் இக்கதைகளின் களங்களிலும் கதை மாந்தரோடும் செலவிட்ட காலைப்பொழுதுகள் இனிமேல் வராது என்றெண்ணுகையில் ஏன் இவற்றைப் பறக்க அனுமதித்தோம் என்று கவலையே பிறக்கிறது.
000
‘சமாதானத்தின் கதை’யை தானே வெளியிடுகிறேன் என்று முன்வந்த ‘ஆதிரை வெளியீடு’ சயந்தனுக்கு (Sayanthan Kathir) நன்றி. இக்கதைகள்மீதும் வாசகவெளிமீதும் அதீத நம்பிக்கைவைத்து செய்யும் முயற்சி இது. இதில் என்னுடைய பங்கு கதைகளைக் கொடுத்தது மாத்திரம்தான். சயந்தன் இந்த வெளியீட்டுக்கு கடந்த ஒர் மாதத்துக்கும்மேலாகப் பட்ட அவதியை அறிவேன். இப்போது ‘சமாதானத்தின் கதை’ சென்னைப்புத்தகக் கண்காட்சியிலும் யாழ்ப்பாணம் வெண்பா புத்தக நிலையத்திலும் அவுஸ்திரேலியாவிலும் கிடைக்கிறது. புத்தகங்கள் வாங்கி வாசிக்கப்பட்டாலேயே ஒரு வெளியீட்டாளராக சயந்தன் எடுத்துக்கொண்ட முயற்சிக்குப் பலன் கிடைக்கும். படலைக்குத் தொடர்ந்து ஆதரவு தருகின்ற வாசகர்கள் ‘சமாதானத்தின் கதை’ நூலையும் வாங்கி வாசித்து மற்றவரிடமும் கொண்டு சேர்ப்பீர்கள் என்று நம்புகிறேன்.
இக்கதைகளில் சிலவற்றை முன்னர் வெளியிட்ட ‘புதிய சொல்’, ‘ஆக்காட்டி’, ‘காலச்சுவடு’, ‘ஜீவநதி’, ‘இளவேனில்’ ஆகிய சஞ்சிகைகளுக்கு நன்றி. கதைகளை ஒரு தொகுப்பாக முதலில் வாசித்து கருத்துகள் பகிர்ந்த Shanthi Sivakumar க்கும் நன்றி.
“சமாதானத்தின் கதை” - ஜேகே
ஆதிரை வெளியீடு
அட்டைப்பட புகைப்படம் - வைதேகி Vythehi Narendran
அட்டைப்பட வடிவமைப்பு - சத்யன்
லே அவுட் - ஜீவமணி
பின்னட்டைப் புகைப்படம் - கேதா Ketharasarma Ledchumanasarma
புத்தக விநியோகம் - வெண்பா புத்தக நிலையம், இலங்கை. Discovery Book Palace, சென்னை.
தற்பொழுது புத்தகங்கள் கிடைக்குமிடங்கள்.
சென்னையில் : Discovery Book Palace

சென்னைப் புத்தகக் கண்காட்சி : - அரங்கு எண் F - 26
அவுஸ்திரேலியாவில் : ஜேகே - 📞 0403406013
இலங்கையில் : வெண்பா புத்தக நிலையம் - 📞 021 2 225090
000
இனி இது உங்கட சோலி . சொல்லிட்டன்.
அவுஸ்திரேலிய காட்டுத்தீ பற்றிய சில குறிப்புகள்


The world has been horrified by Australia’s bushfires. Picture: Saeed Khan/AFP

1. ஏன் அவுஸ்திரேலியக் காடுகள் மாத்திரம் இப்படி எரிகிறது? 

முக்கிய காரணம் இங்குள்ள காடுகளில் நிறைந்திருக்கும் யூகலிப்டஸ் மரங்கள். எங்கள் ஊர்ப்பாசையில் சொன்னால் விக்ஸ் அல்லது தைல மரங்கள். அம்மரங்களில் இலகுவில் தீப்பற்றக்கூடிய யூகலிப்டஸ் எண்ணெய் இருக்கிறது. அதனால் பல மரங்கள் வெப்பநிலை அதிகமாகும்போது சூடேறி வெடிக்கவும் செய்யும். அவுஸ்திரேலியாவின் சுதேசிய மரம் இது. அதனாலேயே சிகரட் நெருப்போ மின்னலோ அல்லது இயல்பாகவே சூடேறி வெடித்தோ காடு உடனேயே தீப்பற்றிவிடுகிறது. தவிர இங்கே காற்றில் ஈரப்பதன் இருப்பதில்லை. கொஞ்சம் வெயில் என்றாலும் மண்ணிலும் வளியிலும் குளிர்மை அகன்றுவிடும். இந்த சூழ்நிலையில் காற்றும் சேர்ந்துகொள்ள தீ இலகுவில் பற்றி விரிவடைய ஆரம்பிக்கிறது.