Skip to main content

சமாதானத்தின் கதை : புதிய வெளியீடு
ஆதிரை வெளியீடாக நான் எழுதிய ‘சமாதானத்தின் கதை’ என்கின்ற நூல் இப்போது கடைகளில் கிடைக்கிறது.
000
கதைகளைச் சொல்லாமலேயே விட்டுவிட்டால் என்ன என்று எண்ணிய காலமது. சொல்லாத கதைகள் எப்போதுமே எம்மோடு அமுங்கியபடி கூடவே இருக்கின்றன. இரகசியங்களைப்போல. சொல்லியபின் அவை எம்மைவிட்டுப் பறந்துபோய்விடும். பின்னர் கூப்பிட்டாலும் அவை செவிமடுப்பதில்லை. எப்போதேனும் தெருவோரம் யாரோ அவற்றைக்கூட்டிச்செல்லும்போது எம் வாசலை எட்டிப்பார்ப்பதோடு சரி. அதற்குமேல் அவற்றுக்கும் எமக்குமான உறவு நெருங்குவதேயில்லை.
“சமாதானத்தின் கதை” நூலில் உள்ள பதினொரு கதைகளும் எப்போதோ என்னோடு கோபித்துக்கொண்டு பிரிந்துபோன கதைகள். அவற்றை மீள எழுதும்போது நிரம்பிய அன்பும் அதற்கும்மேலாகச் சண்டையும் அவற்றோடு பிடிக்கவேண்டியிருந்தது. சில கதைகள் வளர்ந்தும் இன்னும் பல ஒடுங்கியும் கிடந்தன. ‘விசையறு பந்து’ மதுவந்திகாவைக் காணும்போது புதிதாக இருந்தது. ‘தூங்காத இரவு வேண்டும்’ சிவலிங்கத்தின் வாழ்வை நினைத்துப்பார்க்கவே ஒரு கலக்கம் வந்துபோனது. கிட்டத்தட்ட ஒரு நான்கைந்து மாதங்கள் இக்கதைகளின் களங்களிலும் கதை மாந்தரோடும் செலவிட்ட காலைப்பொழுதுகள் இனிமேல் வராது என்றெண்ணுகையில் ஏன் இவற்றைப் பறக்க அனுமதித்தோம் என்று கவலையே பிறக்கிறது.
000
‘சமாதானத்தின் கதை’யை தானே வெளியிடுகிறேன் என்று முன்வந்த ‘ஆதிரை வெளியீடு’ சயந்தனுக்கு (Sayanthan Kathir) நன்றி. இக்கதைகள்மீதும் வாசகவெளிமீதும் அதீத நம்பிக்கைவைத்து செய்யும் முயற்சி இது. இதில் என்னுடைய பங்கு கதைகளைக் கொடுத்தது மாத்திரம்தான். சயந்தன் இந்த வெளியீட்டுக்கு கடந்த ஒர் மாதத்துக்கும்மேலாகப் பட்ட அவதியை அறிவேன். இப்போது ‘சமாதானத்தின் கதை’ சென்னைப்புத்தகக் கண்காட்சியிலும் யாழ்ப்பாணம் வெண்பா புத்தக நிலையத்திலும் அவுஸ்திரேலியாவிலும் கிடைக்கிறது. புத்தகங்கள் வாங்கி வாசிக்கப்பட்டாலேயே ஒரு வெளியீட்டாளராக சயந்தன் எடுத்துக்கொண்ட முயற்சிக்குப் பலன் கிடைக்கும். படலைக்குத் தொடர்ந்து ஆதரவு தருகின்ற வாசகர்கள் ‘சமாதானத்தின் கதை’ நூலையும் வாங்கி வாசித்து மற்றவரிடமும் கொண்டு சேர்ப்பீர்கள் என்று நம்புகிறேன்.
இக்கதைகளில் சிலவற்றை முன்னர் வெளியிட்ட ‘புதிய சொல்’, ‘ஆக்காட்டி’, ‘காலச்சுவடு’, ‘ஜீவநதி’, ‘இளவேனில்’ ஆகிய சஞ்சிகைகளுக்கு நன்றி. கதைகளை ஒரு தொகுப்பாக முதலில் வாசித்து கருத்துகள் பகிர்ந்த Shanthi Sivakumar க்கும் நன்றி.
“சமாதானத்தின் கதை” - ஜேகே
ஆதிரை வெளியீடு
அட்டைப்பட புகைப்படம் - வைதேகி Vythehi Narendran
அட்டைப்பட வடிவமைப்பு - சத்யன்
லே அவுட் - ஜீவமணி
பின்னட்டைப் புகைப்படம் - கேதா Ketharasarma Ledchumanasarma
புத்தக விநியோகம் - வெண்பா புத்தக நிலையம், இலங்கை. Discovery Book Palace, சென்னை.
தற்பொழுது புத்தகங்கள் கிடைக்குமிடங்கள்.
சென்னையில் : Discovery Book Palace

சென்னைப் புத்தகக் கண்காட்சி : - அரங்கு எண் F - 26
அவுஸ்திரேலியாவில் : ஜேகே - 📞 0403406013
இலங்கையில் : வெண்பா புத்தக நிலையம் - 📞 021 2 225090
000
இனி இது உங்கட சோலி . சொல்லிட்டன்.
Popular posts from this blog

பர்மா புத்தர் - சிறுகதை

பனம் பாத்தி மெதுவாக முளைவிட ஆரம்பித்திருந்தது .   அதிகாலைக் குளிருக்கு அத்தனை பனங்கொட்டைகளும் நிலவண்டுகளின் கூட்டம்போல ஒட்டிக்குறண்டியபடி தூங்கிக்கொண்டிருந்தன . பாத்தியில் இடையிடையே கோரைப்புற்கள் கிளம்பியிருந்தன . முந்தைய நாள் அடித்து ஊற்றிய மழையில் இருக்காழிகள் சில குப்புறப்புரண்டு சாம்பல் நரையேறிய மயிர்க்கற்றைகளோடு வானம் பார்த்தபடி அண்ணாந்து கிடக்க , சில கொட்டைகள் பாத்தியினின்று சளிந்து அடிவாரங்களில் சிதறிக்கிடந்தன . பூரானுக்காகப் பிளக்கப்பட்டிருந்த கொட்டைகள் எல்லாம் ஒரு பக்கம் குவிக்கப்பட்டிருந்தன .  கார்த்திகை விளக்கீட்டுக்குப் பாத்தியடியில் குத்திவிடப்பட்டிருந்த பந்தத்தடி பாதி எரிந்த நிலையில் கறுப்பு வெள்ளைத் தொப்பியோடு இன்னமும் எஞ்சி நின்றது .  

பரியோவான் பொழுதுகள் - உரை

 பரியோவான் பொழுதுகள் வெளியீட்டில் இடம்பெற்ற என் உரையாடலில் காணொலி.

விளமீன் - சிறுகதை

அந்த ஒரு மீன் மாத்திரம் முழித்துக்கொண்டுத் தனித்துத் தெரிந்தது. அந்தக் குவியலில் கிடந்த மீதி அத்தனை மீன்களும் இளஞ்சிவப்பு நிறத்திலிருக்க இது மாத்திரம் வெள்ளைத்தோலில் மெலிதாகப் படர்ந்திருந்த தங்கநிறக் கண்ணாடிச் செதில்களோடும், சற்றே திறந்துகிடந்த இரத்தச்சிவப்பு செவுள்களோடும் குவிந்த கண்களோடும். சரசு மாமி ராசனிடம் திரும்பவும் சொல்லிப்பார்த்தார். இம்முறை சற்றுக் கெஞ்சலாக. “தம்பி. நான் சொல்லுறன். அது எங்கட ஊர் விளமீன்தான். விறைச்சுக்கொண்டு கிடக்கு. நல்ல உடன் மீன். வாங்கித்தாவன்.” “அரியண்டம் பண்ணாம வாங்கோம்மா. ஊர் விளமீனை ஊருக்குப்போகேக்க சாப்பிட்டுக்கொள்ளலாம்.” மாமி அந்த விளமீனையை பார்த்தபடி நின்றார். இனி எப்போது ஊருக்குப் போய், எப்போது விளமீன் வாங்கி. இதுவெல்லாம் நடக்கிற காரியமா? ராசன் வேகமாக அடுத்த கடையை நோக்கி நடக்க ஆரம்பித்திருந்தான். சந்தை முழுதும் ராசனும் ரூபிணாவும் நடந்த வேகத்துக்குச் சரசு மாமியால் ஈடு கொடுக்கமுடியவில்லை. சேலை நிலத்தில் அரிபட அவர் பின்னாலேயே இழுபட்டுக்கொண்டுபோனார். அந்த விளமீன் அவர் பின்னாலேயே இழுபட்டு வந்துகொண்டிருந்தது. “இந்த ஊர் சினப்பரும் விளமீன்மாதிரித்தான் இருக