Skip to main content

ஏழு வாத்திகளின் கதைகள்: 1. கருணைநாயகத்தார்

@http://www.thecricketmonthly.com/


எங்கள் பாடசாலையில் ‘வாழ்க்கைத்திறன் கல்வி’ என்றொரு தனிப் பாடம் இருந்தது.
வாழ்க்கைத்திறன்கள் பலவகைப்படும். சைக்கிள் டியூப் ஒட்டுவது. சட்டைக்குக் ஹங்கர் சரிக்கட்டுவது. சீலைத்துணியில் தேயிலை வடி செய்வது. செவ்வரத்தையில் பதி வைப்பது. எக்ஸோராவில் பத்து ஒட்டு ஒட்டி பதினொரு கலரில் பூக்கவைப்பது. மரக்கன்று வைக்கவென வீடுவீடாகச்சென்று குப்பைகளில் லக்ஸ்பிரே, நெஸ்பிரே பாக்குகளைத் தேடிச் சேகரிப்பது. இப்படி அடுக்கிக்கொண்டே போகலாம்.
வாழ்க்கைத்திறன் கல்வியை எங்களுக்குப் பாடசாலையில் கற்பித்தவர் கருணைநாயகத்தார்.

எனக்கும் வாழ்க்கைத்திறன் கல்விக்கும் என்றைக்கும் ஒட்டியதேயில்லை. ஏனெனில் எனக்கு இந்த இக்கிடுக்கா பிக்கிடுக்கா வேலைகள் அவ்வளவாகச் சரிவருவதில்லை. அதனால் வகுப்பில் கருணையிடம் நான் எப்போதும் வாங்கிக்கட்டிக்கொண்டேயிருப்பேன். சைக்கிள் டியூப் ஒட்டும்போது டியூபை நன்றாக வாள் பிளேடினால் வாரிவிட்டுப் பின்னர் சொலிசனைக் கொஞ்சமாகத் தடவவேண்டும். நான் சரியாகவும் வார மாட்டேன். சொலிசனையும் அள்ளி எடுத்துப்பூசிவிடுவேன். அதனால் ஒட்டு ஒழுங்காகக் காயாமல் விளிம்புகளில் கிளப்பிக்கொண்டு நின்று என் புள்ளிகளைக் குறைத்துவிடும். செவ்வரத்தையில் பதி வைத்துக்கொண்டுபோய்க் காட்டுவேன். கருணையர் அதைத் தூக்கிப்பார்க்கும்போதுதான் கறுமம் அந்தப் பதியின் பொச்சு கொப்பினின்று கழன்று விழுந்து துலைக்கும். தேயிலை வடி செய்து சாயத்தை ஊத்தினால் எல்லாமே அவிழ்ந்து பொத்தென்று ஜக்குக்குள் கொட்டும். இப்படி வாழ்க்கைத்திறன் கல்வியில் நான் தொட்டதெல்லாம் விளங்காமல் போய்க்கொண்டிருந்தது.
ஒருமுறை கருணையர் வகுப்பை ஆறு குரூப்பாகப்பிரித்து எல்லோரையும் ஒவ்வொரு சாப்பாட்டைச் சமைக்கவிட்டார்.
எங்கள் குரூப்பில் பூரி சுடுவதாக முடிவு பண்ணினோம். குரூப்பில் பலர் பூரியை வெறுமனே கேள்விப்பட்டது மட்டும்தான். சாப்பிட்டதில்லை. எங்கள் வீடுகளில் பூரி எல்லாம் சுடுவதில்லை. ஆனாலும் நாங்கள் பூரியைத் தேர்ந்தெடுத்ததற்குக் காரணம் இவன் பூரிதான். பூரிக்கு பூரி என்ற பட்டம் சூட்டப்பட்ட கணமும் காரணமும் எனக்கு ஞாபகத்தில் இல்லை. அவன் குடும்பம் பூரியில் கொஞ்சக்காலம் இருந்திருக்கலாம். அல்லது என்றோ ஒருநாள் அவன் மதிய உணவுக்கு அதிசயமாக பூரி கொண்டுவந்திருக்கலாம். அல்லது அவனை யாராவது “போடா ” என்று தூஷண விகுதியோடு திட்ட இந்த லூசு விசயம் விளங்காமல் “நீ போடா பூரி” என்று பதிலுக்குத் திட்டியிருக்கலாம். எது எப்படியோ பூரிக்குப் பூரி என்று பெயர் வந்து, பூரி எங்கள் குரூப்புக்குள் வந்து சேர்ந்ததில், பூரியைச் சுடுவதாக எங்கள் குரூப் முடிவு பண்ணிவிட்டது. குரூப் மீட்டிங்கில் பூரிக்கு மாவையும் பூரியே தன் வீட்டிலிருந்து குழைத்துவரவேண்டுமென்றும் தீர்மானம் எடுக்கப்பட்டது. சுட்டா தான் சம்பல் இடித்துக்கொண்டுவருவதாகச் சொன்னான். நான் மரக்கறி எண்ணெய் கொண்டுவருகிறேன் என்றேன். டப்பாம் அடுப்புச் சரிக்கட்டி பத்த வைக்கும் டிப்பார்ட்மெண்டை எடுத்துக்கொண்டான்.
பூரி சுடும் நாளும் வந்தது.
அன்றைக்கு ஏலவே வீட்டிலிருந்து குழைத்துக்கொண்டுவந்திருந்த மாவைத் தட்டி உருட்டி எண்ணெய்யில் பொரித்து எடுப்பது மாத்திரம்தான் எங்கள் வேலை. கொண்டுவந்த பூரி மாவை பூரி தானே உருட்டித் தட்டித்தர, நான் எண்ணெயில் போட்டுப் பொரிக்க ஆரம்பித்தேன். எனக்குப் பூரி எப்படி இருக்குமென்றே தெரியாது. ஏதோ பழைய கல்கண்டோ, ராணியோ தெரியாது, ஒரு பத்திரிகையில் அச்சடித்திருந்த பூரியின் படத்தை டப்பாம் கிழித்துக்கொண்டுவந்திருந்தான். சொன்னாப்போல டப்பாமும் ஒரு பட்டப்பெயர்தான். சஞ்சீவியில் வந்த ‘லப்பாம் டப்பாம்’ தொடரிலிருந்து உருவப்பட்டது. லப்பாம் என்றவனும் இருந்தான். அவன் குறூப் பாணுக்குப் பருப்பும் காய்ச்சிக்கொண்டிருந்தது. எங்கள் வகுப்பே இப்படித்தான். எல்லோருமே இளநிலைப் பட்டதாரிகள். என்னை அப்போது காந்தி என்ற பட்டப்பெயரில் அழைப்பார்கள். எனக்கு அந்தப் பெருமைமிகு பட்டம் கிடைத்தமைக்குக் காரணம் ஒப்கோர்ஸ் ஒரு பெண். அந்தச்சமயம் ஆரணிகாந்தி (பிரைவெசி காரணமாக முதலெழுத்து மாற்றப்பட்டிருக்கிறது) என்றொருத்தி மணி டியூஷனில் படித்துக்கொண்டிருந்தாள். நான் மணி ரியூஷனில் இணைந்து முதல்நாள் வகுப்பு. கண்டுவிட்டேன். ‘அந்தப்பிள்ளைட்ட ஒரு வடிவு இருக்கு மச்சான்’ என்று தெரியாத்தனமாக கூடவேயிருந்த கீர்த்தியிடம் உளறிவிட்டேன். அத்தோடு கதை கந்தலாகிவிட்டது. அதற்குப்பிறகு ஒருமுறை நானும்… நிற்க, இதுக்க ஒரு நாவல் கிடக்கு. இங்கே வேணாம். நாவலின் பெயரை வேண்டுமானால் இப்போதே அறிவித்துவிடுகிறேன்.
சத்திய சோதனை. The story of my experiments with love.
பக் டு பூரி ஸ்டோரி. டப்பாம் கொடுத்த பேப்பர் கட்டிங்கில் பூரி நன்றாகப் பொங்கிப் பொன்னிறத்தில் மின்னியது. ஆனால் பூரி தட்டித்தந்த பூரியைப் பொரித்தால் சனியன் பிரீசரில் வைத்த பராட்டாமாதிரி அப்படியே அமிழ்ந்துபோய்க் கிடக்கிறது. நானும் பொரிக்கிறேன், பொரிக்கிறேன், மஞ்சள் பூரி தங்கமாகி, தாலி கறுத்தும் விட்டது. ஆனால் பூரி பூரிப்பதாக இல்லை. எமக்கு டென்சனாகிவிட்டது. ‘பூரி என்று சொல்லி ரொட்டியைக் குடுத்திடாதிங்கடா’ என்று எங்கள் சமையலை வாய் பார்த்துக்கொண்டிருந்த பக்கத்து குரூப் நாய் ஒன்று கொமெண்ட் அடித்தது. அந்த ஊத்தை குரூப் கொத்துரொட்டி என்று சொல்லி எல்லாவற்றையும் தனித்தனியாக வீட்டிலிருந்து கொண்டுவந்து போட்டுக் கொத்திக்கொண்டிருந்தது. நாங்கள் அப்படியல்லவே. பூரியை நாங்களே அல்லவா சுடுகிறோம். ஆனால் இந்த சனியன் பிடித்த பூரிதான் பொங்குதேயில்லையே. கொஞ்சம் அப்பச்சோடா போட்டுப்பார்க்கலாம் என்று அதே டப்பாம் ஐடியா கொடுத்தான். உடனே கொண்டுவந்திருந்த அப்பச்சோடாவைத் தூவித் திரும்பவும் மாவைக் குழைத்துத் தட்டி ஒரு பூரி போட்டோம். சிங்கன் சின்னதாகப் பொங்கினார். எங்களுக்கெல்லாம் சிறு நம்பிக்கை பிறந்தது. மேலும் கொஞ்சம் அப்பச்சோடாவைப் போட்டோம். இன்னும் கொஞ்சம் பொங்கியது. சிக்கினாண்டா சீமான். எவ்வளவுக்கு எவ்வளவு பூரி பொங்குதோ அவ்வளவுக்கு அவ்வளவு மார்க்ஸ் கூடும் என்று டப்பாம் எகிறிக்குதித்தான். சந்தோசம் தாங்கேலாம பக்கத்து குரூப்பைப்பார்த்து ‘டேய் உங்கட கொத்துரொட்டியைப் பாத்தா எங்களுக்குச் சத்தி வருகுது’ என்று நக்கல் அடித்தோம். ஆர்வக்கோளாறில் கிடந்த அப்பச்சோடா அரைக்கிலோ பக்கற்றையும் டப்பாம் அப்படியே கவிட்டுக்கொட்டினான். கொஞ்சம் ஓவராகப் போகிறோமோ என்று எனக்குச் சின்னதாக ஒரு டவுட். ஆனாலும் டப்பாம் கொடுத்த தைரியத்தில், மாவைக் குழைத்துத் தட்டி, பூரியை தாச்சியில் போட்டோம். அம்மாணை சொல்லுறன். எங்கள் பூரி ஒரு இராட்சத பலூன் சைசுக்குப் பொங்கி எழுந்தது. ‘பிடிச்சுத் தொங்கினமெண்டால் பாஸ் எடுக்காம கொழும்புக்கே போயிட்டு வரலாம்’ என்று டப்பாம் பெருமையாகச் சொன்னான். “ஆனையிறவு தாண்டேக்க ஆமி கலிபர் அடிச்சிடும்” என்றேன் நான். எனக்கும் பயங்கரப் பெருமை. எண்ட் ஒப் த டே இந்த பூரியைச் சுட்டு எடுத்தது நானல்லவா.
கடைசியில் ஒரு பெரிய தட்டில் பூரியை ஒருமாதிரி பலன்ஸ் பண்ணி வைத்து, தேவையான பொரித்த மிளகாய்ச்சம்பலுடன் கருணைநாயகத்தாருக்குக் கொண்டுபோய்ப் பரிமாறினோம்.
“என்னடா இவ்வளவு பொங்கியிருக்கு” என்றபடி கொஞ்சம் சந்தேகத்துடனேயே கருணையர் பூரியைப் பிய்த்து சம்பலோடு தொட்டு வாயில் வைத்தார்.
அதுக்குப் ‘பின்னால’ பொங்கிச்சு கருணையருக்கு பூரி.
000

Comments

Popular posts from this blog

என் கொல்லைப்புறத்துக் காதலிகள் : 6. குட்டியன்

தொ ண்ணூறுகளில் சங்கக்கடை நிவாரண அட்டை என்று ஒவ்வொரு குடும்பத்துக்கும் கொடுத்தார்கள் . அ , உ , இ என மூன்று வகையான அட்டைகள் . எங்கள் வீட்டுக்கு ‘ உ ’ அட்டை . அரசாங்க உத்தியோகத்தர் என்றால் பீயோனாக இருந்தாலும் ‘ உ ’ அட்டைதான் . நிவாரணத்தில் ‘ உ ’ அட்டைக்காரருக்குப் பங்கீட்டு அளவு அரைவாசியாகக் குறையும் . அரைப்போத்தல் மண்ணெண்ணெய் , அரைக் கிலோ பருப்பு , அரைக் கிலோ சீனி என்று எல்லாமே அரையில்தான் கிடைக்கும் . அதற்கே கோப்பிரட்டி மனேஜரிடம் பல்லிளிக்க வேண்டும் . குறைந்த சம்பளம் , அதிக சம்பளம் என்ற கதை பேச்சுக்கு இடமில்லை .   காரணம் கவுன்மேந்து உத்தியோகம் .

"என் கொல்லைப்புறத்துக் காதலிகள்" பற்றி இளங்குமரன்

யாழ்ப்பாண மக்களின் வாழ்க்கை போருடனும் துயருடனும் கடந்தது என்று எல்லோரும் அறிந்ததுதான், கதைகளும் ஏராளம். ஆனால் ஜே.கே தனது சொந்த அனுபவங்களின் ஊடே காட்டும் தொண்ணூறுகளின் யாழ் வாழ்க்கை மிக அழகானது, இயல்பானது. இன்னல்கள் கடந்த ஜன்னல் காற்று அந்த வாழ்க்கை. அந்த வாழ்வுணர்வு யாழில் வாழ்ந்தவர்களுக்கு தெரியும்(வாழ்பவன் நான், சற்றுப் பின்னே பிறந்துவிட்டேன், சில அனுபவங்களை இழந்தும் விட்டேன்). • ஒவ்வொரு அத்தியாயமும் ஒவ்வொரு சுளை, ஒவ்வொரு சுளையும் தனிச்சுவை. அவ்வப்போது தூறும் குண்டுமழையில் நனையாமல் பதுங்கும் பங்கர்கள், பங்கருக்குள்ளும் பய(ம்)பக்தியுடன் வைக்கும் பிள்ளையார் படம். அவரின் தம்பி முருகனைக்காண என விழாக்கோலம் பூண்ட நல்லூர் போய், வள்ளி, தெய்வானையையே தேடித் திரியும் உள்ளூர் முருகன்கள். விளையாட்டுப்பொருட்கள், ஜஸ்கிரீம், கச்சான் என கடைக்கண் கடைத்தெருப்பக்கமே இருக்க சுற்றித்திரியும் சின்னன்கள். தெருவெல்லாம் தெய்வம்கொண்ட கோயில்கள், பரீட்சை பயத்தில் அத்தனை கோயில்களுக்கும் போடும் கும்பிடுகள். எந்தப் பக்கம் பந்து போட்டாலும் நேரே மட்டும் அடிக்க கற்றுக்கொடுக்கும் ஒழுங்கை கிரிக்கட்டுகள். பாடசாலைகளுக்கிட...

பர்மா புத்தர் - சிறுகதை

பனம் பாத்தி மெதுவாக முளைவிட ஆரம்பித்திருந்தது .   அதிகாலைக் குளிருக்கு அத்தனை பனங்கொட்டைகளும் நிலவண்டுகளின் கூட்டம்போல ஒட்டிக்குறண்டியபடி தூங்கிக்கொண்டிருந்தன . பாத்தியில் இடையிடையே கோரைப்புற்கள் கிளம்பியிருந்தன . முந்தைய நாள் அடித்து ஊற்றிய மழையில் இருக்காழிகள் சில குப்புறப்புரண்டு சாம்பல் நரையேறிய மயிர்க்கற்றைகளோடு வானம் பார்த்தபடி அண்ணாந்து கிடக்க , சில கொட்டைகள் பாத்தியினின்று சளிந்து அடிவாரங்களில் சிதறிக்கிடந்தன . பூரானுக்காகப் பிளக்கப்பட்டிருந்த கொட்டைகள் எல்லாம் ஒரு பக்கம் குவிக்கப்பட்டிருந்தன .  கார்த்திகை விளக்கீட்டுக்குப் பாத்தியடியில் குத்திவிடப்பட்டிருந்த பந்தத்தடி பாதி எரிந்த நிலையில் கறுப்பு வெள்ளைத் தொப்பியோடு இன்னமும் எஞ்சி நின்றது .