Skip to main content
படம் : என் கொல்லைப்புறத்துக் காதலிகள்

படலை திறந்து இன்றோடு ஒன்பது வருடங்கள் ஆகின்றன. 

அப்போது ‘இது கடவுள்கள் துயிலும் தேசம்’ கதையை முயற்சிசெய்துகொண்டிருந்தேன். ஆங்கிலத்தில். ஆனால் எவ்வளவு முயன்றும் கதை இரண்டாவது பந்தியைத் தாண்டுவதாயில்லை. கதையோடு ஒட்டவும் முடியவில்லை. சரி, தமிழில் எழுதிப்பார்க்கலாம் என்று ஆரம்பித்தேன். தமிழ் யூனிகோட் தட்டச்சு இப்போதுபோல அந்நேரம் இலகுவாக இருக்கவில்லை. தட்டுத்தடுமாறி பல பிழைகளோடு எழுதியது. ஆனாலும் அந்த சுவாரசியம் பிடிபட்டுப்போக, அடுத்தடுத்த நாளே ஒரு இணையத்தளத்தை உருவாக்கி ஆட்டத்தைத் தொடங்கியாச்சு. இப்போது படலையின் முதற்பதிவை வாசித்துப்பார்க்கும்போது அதிலிருக்கும் அதிகப்பிரசிங்கித்தனம் சிரிப்பையே ஏற்படுத்துகிறது. இந்த ஒன்பது வருடங்களில் மீளப்போய் வாசிக்கும்போது பல கதைகளும் கட்டுரைகளும் அந்த உணர்வையே கொடுப்பதுண்டு. அதேபோலவே இப்போது எழுதுபவை எல்லாம் பிறிதொரு தினத்தில் சிரிப்பை வரவைக்கலாம். எல்லாமே அந்தந்த நேரம் சரி என்று நினைத்து எழுதுவது. காலப்போக்கில் நான் மாறிக்கொண்டிருக்கிறேன். எழுதிய சொற்கள் எல்லாம் அப்படியே தேங்கிவிடுகின்றன. அபத்தம் என்றாலும் அவற்றை அழித்துவிடவும் மனம் கேட்பதில்லை. முதல் பதிவில் எழுதிய வரிகள் இவை.
இது முதல் பதிவு தான். இதுவே கடைசி பதிவாகக்கூட இருக்கலாம். அல்லது ஆரம்பித்த ஆர்வத்தில் இன்னும் ஒரு நான்கு பதிவு எழுதிவிட்டு காணாமலும் போகலாம். அல்லது இப்போது இருக்கும் மனநிலை தொடர்ந்து இந்த எழுத்தை தொடரும் சந்தர்ப்பம் கூட இருக்கிறது. அதனால் எங்கு போகப்போகிறேன், என்ன எழுதப்போகிறேன் என்று எல்லாம் சொல்ல போவதில்லை. ஒரு முயற்சி தான். முடியும் என்று நினைக்கிறேன்.
படலை என் வாழ்வின் ஒரு முக்கிய திறப்பு என்பதில் சந்தேகமில்லை. படலை தொடங்கியதுமுதல் வண்ணாத்துப்பூச்சி விளைவுபோல பல சம்பவங்கள் நிகழ்ந்தேறிவிட்டன. என் வாசிப்பு மேலும் விரிவடைவதற்கு உதவி செய்வது அதுதான். வாசிப்பு அனுபவத்தைப்போலவே எழுத்து மூலமும் ஒரு மன வெளியை உருவாக்கி அனுபவிக்கலாம் என்பதை உணர்த்தியதும் அதுதான். இயலுமானவரை எனக்குப் பிடித்ததை, எழுதவேண்டும் என்று தோன்றியதை மாத்திரமே எழுதியிருக்கிறேன். கருத்துகளை எதிர்கொள்ளவும், ஏன் அவற்றைச் சொல்கிறார்கள் என்பதைப் புரிந்துகொள்ளவும் கொஞ்சம் பழகியாச்சு. சமயங்களில் ஆதிரையின் அத்தாருக்கு நிகழ்ந்ததுபோல, ஒரு தடித்த தோல் காதுகளை மூடவும் இடமளிப்பதுண்டு. For my own good. 

படலை இணையத்தளத்தை பலகாலம் புனருத்தானம் செய்யாமல் விட்டுவிட்டேன். முகநூல் வந்ததும் அது இரண்டாம் பட்சமாகிவிட்டது. வெளியீடுகளும் உரையாடல்களும் முகநூலிலேயே நிகழ்கின்றன. இப்போது படலையை கொஞ்சம் சரி செய்திருக்கிறேன். நிறையப்பேர் மொபைலில் வாசிப்பதால் அதற்கேற்ப வடிவத்தை மாற்றியுள்ளேன். புத்தகக் கடையும் இருப்பதால் தளத்துக்குக் கொஞ்சம் பாதுகாப்பும் கொடுக்கப்பட்டுள்ளது. இனிவருங்காலத்தில் படலையில் நேரத்தை அதிகம் செலவழிப்பதாக ஒரு எண்ணம். முகநூல் அதிகம் வாசகர்களைக் கொண்டுவருவது உண்மைதான். ஆனால் அது கவனத்தையும் கலைக்கிறது. எழுதிய எழுத்தை போட்டுவிட்டு பறப்பதுதான் இதிலிருந்து தப்பிக்க ஒரே வழி. படலைக்கு ஒன்பது வருடங்களாக உங்களில் பலரும் கொடுக்கும் ஆதரவுக்கு அன்பும் நன்றியும். 

கிருமிகளிடமிருந்து மீளும்பட்சத்தில் பத்தாவது வருடத்தை சிறப்பாகக் கொண்டாடவேணும் என்று ஒரு எண்ணம். பார்ப்பம்.

என்றும் அன்புடன்.

Popular posts from this blog

பர்மா புத்தர் - சிறுகதை

பனம் பாத்தி மெதுவாக முளைவிட ஆரம்பித்திருந்தது .   அதிகாலைக் குளிருக்கு அத்தனை பனங்கொட்டைகளும் நிலவண்டுகளின் கூட்டம்போல ஒட்டிக்குறண்டியபடி தூங்கிக்கொண்டிருந்தன . பாத்தியில் இடையிடையே கோரைப்புற்கள் கிளம்பியிருந்தன . முந்தைய நாள் அடித்து ஊற்றிய மழையில் இருக்காழிகள் சில குப்புறப்புரண்டு சாம்பல் நரையேறிய மயிர்க்கற்றைகளோடு வானம் பார்த்தபடி அண்ணாந்து கிடக்க , சில கொட்டைகள் பாத்தியினின்று சளிந்து அடிவாரங்களில் சிதறிக்கிடந்தன . பூரானுக்காகப் பிளக்கப்பட்டிருந்த கொட்டைகள் எல்லாம் ஒரு பக்கம் குவிக்கப்பட்டிருந்தன .  கார்த்திகை விளக்கீட்டுக்குப் பாத்தியடியில் குத்திவிடப்பட்டிருந்த பந்தத்தடி பாதி எரிந்த நிலையில் கறுப்பு வெள்ளைத் தொப்பியோடு இன்னமும் எஞ்சி நின்றது .  

பரியோவான் பொழுதுகள் - உரை

 பரியோவான் பொழுதுகள் வெளியீட்டில் இடம்பெற்ற என் உரையாடலில் காணொலி.

விளமீன் - சிறுகதை

அந்த ஒரு மீன் மாத்திரம் முழித்துக்கொண்டுத் தனித்துத் தெரிந்தது. அந்தக் குவியலில் கிடந்த மீதி அத்தனை மீன்களும் இளஞ்சிவப்பு நிறத்திலிருக்க இது மாத்திரம் வெள்ளைத்தோலில் மெலிதாகப் படர்ந்திருந்த தங்கநிறக் கண்ணாடிச் செதில்களோடும், சற்றே திறந்துகிடந்த இரத்தச்சிவப்பு செவுள்களோடும் குவிந்த கண்களோடும். சரசு மாமி ராசனிடம் திரும்பவும் சொல்லிப்பார்த்தார். இம்முறை சற்றுக் கெஞ்சலாக. “தம்பி. நான் சொல்லுறன். அது எங்கட ஊர் விளமீன்தான். விறைச்சுக்கொண்டு கிடக்கு. நல்ல உடன் மீன். வாங்கித்தாவன்.” “அரியண்டம் பண்ணாம வாங்கோம்மா. ஊர் விளமீனை ஊருக்குப்போகேக்க சாப்பிட்டுக்கொள்ளலாம்.” மாமி அந்த விளமீனையை பார்த்தபடி நின்றார். இனி எப்போது ஊருக்குப் போய், எப்போது விளமீன் வாங்கி. இதுவெல்லாம் நடக்கிற காரியமா? ராசன் வேகமாக அடுத்த கடையை நோக்கி நடக்க ஆரம்பித்திருந்தான். சந்தை முழுதும் ராசனும் ரூபிணாவும் நடந்த வேகத்துக்குச் சரசு மாமியால் ஈடு கொடுக்கமுடியவில்லை. சேலை நிலத்தில் அரிபட அவர் பின்னாலேயே இழுபட்டுக்கொண்டுபோனார். அந்த விளமீன் அவர் பின்னாலேயே இழுபட்டு வந்துகொண்டிருந்தது. “இந்த ஊர் சினப்பரும் விளமீன்மாதிரித்தான் இருக