Skip to main content

சுற்றுலா

கீரனூர் ஜாஹிர்ராஜா எழுதிய ‘ஞாயிறு கடை உண்டு’ என்ற நாவலை வாசித்தேன். 

சமகால தஞ்சை மண்ணில் நிகழும் கதை இது. அதிலும் தஞ்சையில் மையப்பகுதியில் அமைந்திருக்கும் கீழ்வாசல் மீன் சந்தை மனிதர்கள், ராவுத்தர் பாளையத்தில் தங்கியிருந்து தவணை வியாபாரம் செய்பவர்கள், ஜவுளிக்கடை ஊழியர்கள் என நாம் கேள்வியேபட்டிராத ஆனால் தஞ்சையின் சீவனாக இருக்கக்கூடியவர்களின் நாளாந்த வாழ்க்கைச் சிக்கல்களைப் பேசுகின்ற நாவல் இது. அதுவும் இன்றைய, காவிரி வற்றிப்போன, தன் பெருமைகளைக் கொஞ்சம் கொஞ்சமாகத் தொலைத்துக்கொண்டிருக்கின்ற அல்லது மறந்துகொண்டிருக்கின்ற மண்ணின் கதை.
தஞ்சை என்றதுமே நமக்கு முதலில் ஞாபகத்துக்கு வருவது பெருங்கோயிலும் அந்த ஊரின் சோழ, நாயக்க, மராட்டிய வரலாறும், என்றும் பசுமையான வயல்களும் காவிரியும்தான். இது மனிதர்களுடைய குறைபாடு என்றே சொல்லவேண்டும். ஊர்களை நாங்கள் எப்போதுமே அதன் பெருமைகளோடும் சிறப்புகளோடுமே தொடர்புபடுத்துகிறோம். அதற்காகவே அங்கே செல்கிறோம். அவற்றை மட்டுமே அனுபவித்துவிட்டுத் திரும்புகிறோம். சமயங்களில் துன்பங்களோடும் ஊர்களைத் தொடர்புபடுத்துவதுண்டு. முள்ளிவாய்க்கால்போல. இலங்கைக்குப்போனால் முள்ளிவாய்க்காலைப் சென்று பார்க்கவேண்டும் என்று சொல்கின்ற நிறைய இந்தியத் தமிழர்களை நான் சந்தித்திருக்கிறேன். 

ஆனால் நாங்கள் ஊர்களுக்கு சுற்றுலா செல்லும்போது அங்கேயே பிறந்து வளரும் மனிதர்களையும் அவர்களின் வாழ்க்கையையும் தரிசிக்கத்தவறிவிடுகிறோம். பயணங்களின் மிகப்பெரிய அனுபவம் மனிதர்களாகவே இருக்கமுடியும். உள்ளூர்க்காரர்களின் அற்புதமான நட்பு கொடுக்கும் பயண அனுபவத்தைக் கோயில்களும் சுற்றுலாத்தலங்களும் கொடுத்துவிடப்போவதில்லை. இடங்களையும் வரலாறுகளையும் இப்போதெல்லாம் காணொலிகளிலும் இணையத்தளங்களிலும் பார்த்துவிடமுடியும். அப்படியானால் பயணங்களினால் என்ன பயன்? என்னைக்கேட்டால் ஊருக்கு ஊர் வகை வகையான உணவுகள். அவற்றுக்கேயுரிய வெக்கை. குளிர். ஊருக்கேயான ஒருவித மணம் (நேபாளத்தில் அவர்கள் சமையலில் பயன்படுத்தும் எண்ணெயின் நெடி ஊர் முழுதும் வியாபித்துக்கிடக்கும்). எல்லாவற்றுக்கும்மேலாக அதன் மனிதர்கள். இவைதான் பயணங்கள் கொடுக்கக்கூடிய அதி உச்ச அனுபவங்கள்.

யூடோரா வெல்டியினுடையை “No place for you, my love” என்றொரு அற்புதமான சிறுகதையை அண்மையில் ஒலிப்புத்தகமாகக் கேட்டேன் (Newyorker podcast series). தனிமையில் அழுங்கும் ஒருத்தி. அவளிடம் நீ எந்த ஊரைச்சேர்ந்தவள் என்று ஒருவன் கேட்கிறான். இவள் ‘ஹவாய்’ என்கிறாள். அதற்கு அவன் ‘வாவ்’ என்று ஆச்சரியப்படுவான். அவனைப்பொறுத்தவரையில் ஹவாய் என்பது ஒரு சுற்றுலாத்தலம். அங்கேயே ஒருத்தி பிறந்து வளர்ந்திருக்கிறாள் என்றால் எப்படி தன் வாழ்வை அனுபவித்திருக்கக்கூடும் என்பது அவன் எண்ணம். ஆனால் அங்கும் மனிதர்கள் எல்லோரையும்போல பிறந்து வளர்ந்து பாடசாலை, உறவுகள், வேலை, குழந்தைகள், பிரிவுகள் என வாழ்வின் அத்தனை நாளாந்த அல்லல்களுக்கும் உள்ளாகி ஈற்றில் இறக்கிறார்கள் என்பதை சமயத்தில் பயணிகள் உணருவதேயில்லை.
 
இன்னமும் சொல்லப்போனால் கதைகள்தாம் உலகின் மிகச்சிறந்த சுற்றுலாப் பயண உணர்வைத் தருபவை. அவைதான் ஊர்களின் இயல்பையும், அதன் உணவுச் சுவையையும், அங்கு வாழும் மனிதர்களின் குணத்தையும் எமக்கு எடுத்துச்சொல்பவை. 'That's the thing about books. They let you travel without moving your feet.’ என்ற லாஹிரி வாசகம்போல. யோசித்துப்பார்த்தால் நான் போகவேண்டுமென்று நினைக்கும் ஊர்கள் எல்லாமே புத்தகங்களோடு சம்பந்தப்பட்டவைதான். லாஹிரியை வாசித்ததன் தாக்கத்தில் புரூக்லினுக்கும் எம்.ஐ.டி வாடகை வீடுகளின் தெருக்களிலும் சென்று அலையவேண்டும் என்று அப்படி ஒரு ஆசை. ‘Disgrace’ நாவல் வாசித்தபின்னர் தென் ஆபிரிக்காவின் கிழக்குக் கேப் பிராந்தியத்துக்கு செல்லவேண்டுமென்று. ஶ்ரீரங்கம் போனால் ரங்கநாதர் எங்கென்று தேடமாட்டேன். சித்திரைத்தெரு எங்கென்றுதான் கேட்டு ஓடுவேன். டோக்கியோ சுப்பர்மார்க்கட்டில் வேலை செய்யும் பெண்களை நீங்களா அந்த ‘Convenience Store Woman’ கேய்க்கோ என்று கேட்டாலும் கேட்பேன். நடக்கும்போதெல்லாம் யூகலிப்டஸ் இலைகளைப் பறித்துக் கசக்கி நுகரும் பழக்கம்கூட ‘My people’s dreaming’ வாசித்தபின்னரே ஏற்பட்டது. ‘மரையான் மொக்கு’ வாசித்துவிட்டு அந்த ஐயா மீன்பிடித்த ஏரி எது என்று கேட்டு விசாரித்த சம்பவமும் உண்டு.
ஏனிதைச் சொல்கிறேன் என்றால், இப்போதைய சூழ்நிலையில் பயணங்களை மேற்கொள்ள முடியவில்லையே என்ற ஆயாசம் எமக்குத் தேவையற்றது. ஒரு நல்ல புத்தகம் கொடுக்கும் பயணத்துக்கு ஈடு இல்லை என்பதே உண்மை. புத்தகங்களுடனான தனிமையைப்போன்ற ஒரு இனிமை உலகில் வேறு இல்லை. புத்தகங்கள் எமக்காகவே எழுதப்பட்டு நம் வாசிப்பிற்காகவே காத்துக்கிடக்கின்றன.
நான் இன்று காலை வாசித்துக்கொண்டிருந்த இத்தாலிய சிறுகதை (Malpasso) இப்படி முடிகிறது.

“பாவம் கிழவன். மனைவியை இழந்ததில் வாழ்க்கை வெறுத்துவிட்டதுபோல”

இளைஞன் முணுமுணுத்தபடியே அந்த வயோதிபரைத் தாண்டிச்சென்றான். வயோதிபர் தனியாக வாங்கிலில் அமர்ந்தபடி முன்னே விரிந்திருந்த அந்தப் பரந்த புல்வேளியிலேயே கண்களைப் புதைத்திருந்தார். உண்மைதான். இது இளையவர்களுக்குப் புரிவதில்லை. வயதானவர்கள் இயற்கையின் பிருமாண்டத்தில் இப்படி ஆழ்ந்துபோவது இயல்புதான். எல்லோரும் இறந்துபோன பின்னரும் தொடர்ந்து நீடித்து நிலைக்கப்போகும் இயற்கை கொடுக்கின்ற சொல்லொணா நம்பிக்கை அது.

Comments

Popular posts from this blog

"என் கொல்லைப்புறத்துக் காதலிகள்" பற்றி இளங்குமரன்

யாழ்ப்பாண மக்களின் வாழ்க்கை போருடனும் துயருடனும் கடந்தது என்று எல்லோரும் அறிந்ததுதான், கதைகளும் ஏராளம். ஆனால் ஜே.கே தனது சொந்த அனுபவங்களின் ஊடே காட்டும் தொண்ணூறுகளின் யாழ் வாழ்க்கை மிக அழகானது, இயல்பானது. இன்னல்கள் கடந்த ஜன்னல் காற்று அந்த வாழ்க்கை. அந்த வாழ்வுணர்வு யாழில் வாழ்ந்தவர்களுக்கு தெரியும்(வாழ்பவன் நான், சற்றுப் பின்னே பிறந்துவிட்டேன், சில அனுபவங்களை இழந்தும் விட்டேன்). • ஒவ்வொரு அத்தியாயமும் ஒவ்வொரு சுளை, ஒவ்வொரு சுளையும் தனிச்சுவை. அவ்வப்போது தூறும் குண்டுமழையில் நனையாமல் பதுங்கும் பங்கர்கள், பங்கருக்குள்ளும் பய(ம்)பக்தியுடன் வைக்கும் பிள்ளையார் படம். அவரின் தம்பி முருகனைக்காண என விழாக்கோலம் பூண்ட நல்லூர் போய், வள்ளி, தெய்வானையையே தேடித் திரியும் உள்ளூர் முருகன்கள். விளையாட்டுப்பொருட்கள், ஜஸ்கிரீம், கச்சான் என கடைக்கண் கடைத்தெருப்பக்கமே இருக்க சுற்றித்திரியும் சின்னன்கள். தெருவெல்லாம் தெய்வம்கொண்ட கோயில்கள், பரீட்சை பயத்தில் அத்தனை கோயில்களுக்கும் போடும் கும்பிடுகள். எந்தப் பக்கம் பந்து போட்டாலும் நேரே மட்டும் அடிக்க கற்றுக்கொடுக்கும் ஒழுங்கை கிரிக்கட்டுகள். பாடசாலைகளுக்கிட

என் கொல்லைப்புறத்துக் காதலிகள் : 6. குட்டியன்

தொ ண்ணூறுகளில் சங்கக்கடை நிவாரண அட்டை என்று ஒவ்வொரு குடும்பத்துக்கும் கொடுத்தார்கள் . அ , உ , இ என மூன்று வகையான அட்டைகள் . எங்கள் வீட்டுக்கு ‘ உ ’ அட்டை . அரசாங்க உத்தியோகத்தர் என்றால் பீயோனாக இருந்தாலும் ‘ உ ’ அட்டைதான் . நிவாரணத்தில் ‘ உ ’ அட்டைக்காரருக்குப் பங்கீட்டு அளவு அரைவாசியாகக் குறையும் . அரைப்போத்தல் மண்ணெண்ணெய் , அரைக் கிலோ பருப்பு , அரைக் கிலோ சீனி என்று எல்லாமே அரையில்தான் கிடைக்கும் . அதற்கே கோப்பிரட்டி மனேஜரிடம் பல்லிளிக்க வேண்டும் . குறைந்த சம்பளம் , அதிக சம்பளம் என்ற கதை பேச்சுக்கு இடமில்லை .   காரணம் கவுன்மேந்து உத்தியோகம் .

பர்மா புத்தர் - சிறுகதை

பனம் பாத்தி மெதுவாக முளைவிட ஆரம்பித்திருந்தது .   அதிகாலைக் குளிருக்கு அத்தனை பனங்கொட்டைகளும் நிலவண்டுகளின் கூட்டம்போல ஒட்டிக்குறண்டியபடி தூங்கிக்கொண்டிருந்தன . பாத்தியில் இடையிடையே கோரைப்புற்கள் கிளம்பியிருந்தன . முந்தைய நாள் அடித்து ஊற்றிய மழையில் இருக்காழிகள் சில குப்புறப்புரண்டு சாம்பல் நரையேறிய மயிர்க்கற்றைகளோடு வானம் பார்த்தபடி அண்ணாந்து கிடக்க , சில கொட்டைகள் பாத்தியினின்று சளிந்து அடிவாரங்களில் சிதறிக்கிடந்தன . பூரானுக்காகப் பிளக்கப்பட்டிருந்த கொட்டைகள் எல்லாம் ஒரு பக்கம் குவிக்கப்பட்டிருந்தன .  கார்த்திகை விளக்கீட்டுக்குப் பாத்தியடியில் குத்திவிடப்பட்டிருந்த பந்தத்தடி பாதி எரிந்த நிலையில் கறுப்பு வெள்ளைத் தொப்பியோடு இன்னமும் எஞ்சி நின்றது .