Skip to main content

அம்மாளாச்சி கொடியேற்றம்



பசித்தது. சமைக்கப் பஞ்சியாகவும் இருந்தது. அம்மாவுக்கு அழைப்பெடுத்தேன்.

இரவு உங்க என்ன சாப்பாடு?

மரக்கறிதான். இண்டைக்கு அம்மாளாச்சிண்ட கோயில் கொடி. மறந்திட்டியா?

அய்யய்யோ. அப்ப முட்டைகூட பொரிக்கமாட்டீங்களா?

மச்சச்சட்டியே எடுக்கமாட்டன். புட்டு. சாம்பாறு. உருளைக்கிழங்கு குழம்பு. வேணுமெண்டா மிளகாய் பொரிக்கலாம்.

நாம் பம்மினேன். அம்மா இப்போது நாகாஸ்திரத்தை ஏவினார்.

மத்தியானம் கத்தரிக்காய் பொரிச்சு வச்ச கறி இருக்கு.

அது போதும். பழைய கத்தரிக்காய்க் குழம்பையும் புட்டையும் பிரட்டி உருட்டி உருட்டி, விரலிடுக்குகளால் எண்ணெய்க் குழம்பு வழிய, சாப்பிடுவது என்பது சொர்க்கம். அம்மாவுக்கு என்னுடைய சாப்பாட்டுப் பலவீனங்கள் எல்லாமே தெரியும். பலவீனங்களை உருவாக்கிவிட்டதே அந்த மனிசிதானே.

எட்றா வண்டியை.

போனோம். வாசலிலேயே நாதஸ்வரம் ஒலித்தது. மங்கலம் தருவாள் மதுரைக்கு அரசி பாட்டு. டிவியில் நாகபூசணியின் கொடியேற்றக் காட்சி நேரலையில் போய்க்கொண்டிருந்தது. அப்பா சோபாவில் சளிந்து உட்கார்ந்து பார்த்துக்கொண்டிருந்தார். என்னைக்கண்டதும், ஓடியா, கொடியேற்றப்போறாங்கள் என்றார். நான் நேரத்தைப் பார்த்தேன். ஊரில் இப்போது எப்படியும் மாலை நான்கு மணி தாண்டியிருக்கும். காலையில் நிகழ்ந்த நேரலையை மாலையில் பார்ப்பதுகூட அவருக்குத் தெரியவில்லை.

கொடியேற்றத்தில் ஐந்தாறு குருக்கள் கொடிக்கம்பத்தைச் சுற்றி நிற்க, அவர்களைச் சுற்றி முப்பது நாற்பது ஆண்கள் குழுமியிருந்தார்கள். பெண்களைப் பெரிதாகக் காணவில்லை. எங்கோ தூரத்தில் ஒரு பெண் உட்கார்ந்து கைகூப்பித் தொழுதுகொண்டிருந்தார்.

கோயில் என்னவோ அம்மனுக்கு. ஆனால் கொடிக் கம்பத்தைச் சுத்தி நிக்கிறது எல்லாம் ஆம்பிளையளா இருக்கு.

அப்பா திரும்பிப்பார்த்தார். என்னுடைய ஐயாயிரத்துச் சொச்ச முகநூல் நண்பர்கள்போல என் கருத்தை இயல்பாக ஸ்கிப் பண்ணினார்.

யாராவது தெரிஞ்ச ஆக்கள் நிக்கிறினமா பார். இந்த இடதுபக்கம் தூணடில கண்ணாடி போட்டுக்கொண்டு நிக்கிறது பூபாலயிங்கத்திண்ட மகன்தானே. வீரன் எப்பிடி பதக்கம் சங்கிலி வண்டில மிதக்க நிக்கிறான் பாத்தியா?

நானும் எந்த பூபாலயிங்கத்திண்ட மகன் என்று கேட்கவில்லை. அவரும் சொல்லவில்லை.

அவனுக்கு எதிரில வாசல் கரையோட ஒருத்தன் நிக்கிறான் பார். பின்னுக்குப் பின்னலோட. அவனுக்கு கோயில் சீவிய உரித்து. அதைக் காட்டிறதுக்காக வெளிநாட்டிலயிருந்து வந்து அங்க நிக்கிறான் வீரவான். உண்மைல உரித்து எங்கட குடும்பத்துக்குத்தான் இருந்திருக்கோனும். ஆனா இவங்கள் எல்லாம் ஏமாத்திட்டாங்கள்.

அப்பா தஞ்சைப் பெருங்கோயில்கூட தங்களுடைய குடும்ப உரித்து என்று சொல்லக்கூடியவர் என்பதால் நான் பெரிதாக அதனை நோண்டவில்லை.

ஏன். எல்லா உரித்தும் ஆம்பிளையளுக்குத்தானா? பொம்பிளையளுக்கு இல்லையா?

பொம்பிளையளுக்குக் குடுக்க ஏலாதுதானே? அவையள் கலியாணம் கட்டி வெளில போனா உரித்து வெளியாக்களுக்குப் போயிடுமே?

ஏன் இஞ்ச நிக்கிற எல்லாருமே வெளியாக்கள்தானே? இப்ப எவன் ஊரில இருக்கிறான்?

இம்முறை என்னுடைய ஐந்நூற்றுச்சொச்ச இன்ஸ்டகிராம் பலோவர்ஸ்போல அப்பா என் கருத்தைக் கடந்தார். ஆனால் ஸ்டோரியில் அவர் பார்த்தது தெரிந்துவிட்டது.

நீ பேக்கதைகளை விட்டிட்டு ஆக்களை வடிவாப்பார். புஷ்பா நிக்குதா? கண்ணாடி போட்டுக்கொண்டு எல்லாரையும் நடத்திக்கொண்டு நிப்பா. குட்டியாபிள்ளையர்ட பேரனும் கனடாவிலயிருந்து போனவனாம். தெரியுதா? புஷ்பா புருசனும் எங்கையாவது நிப்பான். எல்லாம் நம்மட ஆக்கள்தான்.

எனக்கு அந்தக் கறுப்பியை மட்டும்தான் தெரியுது. வேற ஒருத்தரையுமில்ல.

பருவாயில்ல. ஒருத்தரையாவது பிடிச்சிட்டாய். எந்தக் கறுப்பியைச் சொல்லுறாய்? நயினாதீவு முழுக்கக் கறுப்பியள்தானே.
 
அப்பா பல பெயர்களைச் சொன்னார். அது வேண்டாம்.

நான் அம்மாளாச்சியைத்தான் சொல்லுறன். அந்தா நேர பாருங்கோ. கருவறைக்க தெரியிறா. அவவிண்ட கொடியேற்றம். ஆனா அவவைத்தவிர மிச்ச எல்லாரையும் நல்லா விடுப்புப் பாருங்கோ.

இம்முறை வாட்ஸப் குழுமங்களின் சீன்பையில்கூடக் காட்டாத நபர்களைப்போல அப்பா என்னைக் கணக்கெடுக்கவில்லை.

மெயின் பூசை செய்யிற ஐயா இருக்கிறானே. அவன் எங்கட சுந்தரோட மகாவித்தியாலயத்தில படிச்சவன். அப்ப நல்ல மெல்லிசா இருந்தவன். இந்தியாக்குப் போய்ப் படிச்சிட்டு வந்தோன குண்டாயிட்டான்.

இப்போது அம்மாவும் இணைந்துகொண்டார்.

அவையள் மூன்று தலைமுறையா திருவிழா செய்யிறினம். சாதாரண நாளில பூசை செய்யிற ஆக்களை திருவிழாவில விடுறதில்லை.

ஏன்?

அம்மா அதற்குப் பதில் சொல்லாமல் தொடர்ந்தார்.

நல்லூரிலயும் இவையள் சில திருவிழாக்கள் செய்தவையள். ஆனா இப்ப அத வேற குடும்பம் பிடிச்சிட்டுது.

பக்தர் ஒருவர் திடீரென்று பரவசமடைந்து துள்ள ஆரம்பித்தார். அம்மா, தனக்கு இப்படிக் கோயிலில துள்ளுற ஆக்களைப் பிடிப்பதில்லை என்றார். அனேகமான ஆண்கள் வெற்று மேலில் இரட்டை வடம் சங்கிலியும் பதக்கமும் போட்டிருந்தார்கள். அப்பா அப்படி ஒரு சங்கிலி என்னிடமும் இருக்கிறதா என்று கேட்டார். நான் இல்லை என்றேன்.

அப்பிடியெண்டால் திருவிழா டைம்ல கோயில் பக்கமே தலை வச்சுப் படுக்காத. நமக்கு மரியாதை இல்லை.

உங்களிட்ட மட்டும் இருக்கா?

இருக்கு. சிங்கப்பூரில மகள் வாங்கித்தந்தவள். இப்பக்கூடப் போட்டிருக்கிறன். பாரு. ஆனா பெண்டன்தான் சின்னன். நீ பெரிசா ஒண்டை வாங்கித் தந்தியெண்டால் போடுவன்.

இம்முறை நான் அவருடைய குட் மோர்னிங் அனிமேசன் மெசேஜுகளை ஸ்கிப் பண்ணுவதுபோலக் கடந்துபோனேன். பெண்களின் சேலைகள் பற்றிய பேச்சும் வந்தது. இந்தியப் பெண்கள் அளவுக்கு நம்மூர்ப் பெண்களின் சேலை உடுத்தல் நேர்த்தி இல்லை என்று நான் திருவாய் மொழிய, அப்பா வேண்டுமென்றே இல்லாத ஜோக்குக்குக் குலுங்கிக் குலுங்கிச் சிரிக்க, நான் அம்மாவிடமும் மனைவியிடமும் வாங்கிக்கட்டிக்கொண்டேன்.
 
சீலையைக் கட்டிக்கொண்டு பஸ்ஸிலயும் லோஞ்சிலயும் ஏறி இறங்கி அந்த வெக்கைக்குள்ள கோயிலுக்குப் போனாத்தான் தெரியும். அவிச்சுக்கொட்டினா இருந்து முங்கிட்டு நல்லா கதையளக்கிறாய். அப்பிடியே அப்பனைப்போல நாறல் திரளிண்ட வாய் வந்து சேர்ந்திருக்கு.

மனிசி கடுப்பாகிவிட்டது. ஆனால் அது சொன்னதிலும் நியாயம்தான். அவ்வப்போது வெளியே காட்டிய காணொளியில் வெயில்வேறு கொழுத்தியது. இந்த அமளிக்குள் இரண்டு நீத்துப்பெட்டிப் புட்டு வண்டிக்குள் போய்விட்டது. கத்தரிக்காய்க் கறிச்சட்டியையும் பிரட்டி எடுத்துவிட்டேன். என் அம்மாவின் சமையல் ஆபுத்திரனின் அமுதசுரபி. ருசி எண்டால் அப்படி ஒரு ருசி. தூ. தூ. தூ.

திருவிழா எண்டால் அன்னதானம் எங்கட அமுதசுரபி மடத்துக்குப் போயிடும்.

அப்பா சொல்ல எனக்கு அந்த மடத்தின் கட்டடம் மனக்கண்ணில் தெரிந்தது. என் நினைவுகளில் சிறு வயதில் ஒரு முறை திருவிழாவுக்குப் போனது மட்டுமே ஞாபகத்தில் இருக்கிறது. அப்போதும் திருவிழாவைப் பார்த்தேனா என்பது சந்தேகமே. நான் அப்பாவோடு அந்த மடத்தில்தான் நாளைக் கழித்தேன். எங்கள் தாத்தா ஒருவர்தான் அமுதசுரபி அன்னதான மடத்தில் கடுமையாக உழைத்து வந்தவர். திருவிழாவுக்கு சில மாதங்கள் முன்னமேயே ஊர் ஊராகச்சென்று நன்கொடை வாங்க ஆரம்பிப்பார். யாழ்ப்பாணத்தில் நன்கொடை சேர்க்க வரும் சமயத்தில் எங்கள் வீட்டில்தான் வந்து தங்குவார். அந்தக்காலத்து நேஷனல், வேட்டி கட்டி இடுப்பில் தடித்த ஒரு பெல்ட் பூட்டியிருப்பார். பையில் வெற்றிலைச் சரை எப்போதும் இருக்கும். எங்களுக்கு மலாயன் கபேயில் வடையும் சம்பலும் வாங்கிவருவார். என்னை மடியில் உட்கார்த்தி வைத்து அவருடைய இளவயதுக் கதைகளைச் சொல்லுவார். அவர் எனக்குச் சொன்ன கதைகளை மட்டுமே எழுதினால்கூட அது நயினாதீவின் கோபல்லகிராமமாக மாறிவிடவல்லது. கதை சொல்லி முடித்து, எங்கள் வீட்டு ஹோலில் பாய் விரித்துத் தூங்கி எழுந்து, அதி காலையிலேயே அவர் டவுனுக்குச் சென்று கடை கடையாக ஏறி இறங்கி நன்கொடை சேகரிப்பார். நடைதான். அத்தோடு வண்டி வண்டியாக மரக்கறிக்கும் ஓர்டர் கொடுப்பார். அரிசி மூட்டைகள் கொழும்பிலிருந்து வருவதுண்டு. அந்த அன்னதானத்தின் சீக்கிரட் ரெசிப்பி சுடுசோறுதான். சோறு கொதிக்கிற கொதில, கறி என்ன ருசி என்றெல்லாம் பார்க்கமாட்டீர்கள். ஆறாத சோற்றை அவுக் அவுக்கென்று தானும் திண்டதில்லாமல் கோயிலுக்கு வந்தவன் எல்லாரையும் தின்ன வைப்பவன் எங்கள் அன்பு நயினாதீவான்.

இப்பவாவது வடை பாயாசம் குடுப்பாங்களோ?

அப்பா தோள்களைக் குலுக்கினார்.

அவ்வளவு சனத்துக்கு எப்பிடிக் குடுக்கிறது? ஆராவது சுவிஸ்காரன் விளாசினாத்தான். அவனொருத்தன் கோயிலுக்கு வாற எல்லாருக்கும் சீலையும் வேட்டியும் காசும் பிறீயா குடுக்கிறானாம்.

உங்களுக்கும் போய் நிண்டு காசை விளாசி விலாசம் காட்டோணுமெண்டு ஆசை இல்லையா?

ஆசைதான். ஆனா நீதான் எனக்கு ஐஞ்சியமும் தாராயில்லயே. கனடா, லண்டனில இருக்கிறவனெல்லாம் 
அப்பன்மாருக்கு முன்னால கொண்டுவந்து காசைக் குவிக்கிறாங்கள். நீ என்னடா எண்டால் உண்ட தாத்தா மாதிரி ஒரு கஞ்சப் பிசினாறியாய் இருக்கிறாய்.

அதைக் கேட்டு அம்மா டென்சனாகிவிட்டார்.

இப்ப எதுக்கு எண்ட ஐயாவை இழுக்கிறியள்? ஒவ்வொரு மாசமும் இளிச்சிக்கொண்டு வந்து ஐயாட்டை காசு கேட்டத மறந்திட்டியளா?

அம்மாவும் அப்பாவும் அடிபட ஆரம்பித்தார்கள். அம்மாள் இப்போது உள்வீதி சுற்றி முடித்திருந்தார். பல பெண்கள் அடி அழித்துக்கொண்டிருந்தார்கள். ஒரு ஆணும் பிரதட்டை செய்கிறேன் என்று சொல்லி புறத்திசையில் உருண்டுகொண்டிருந்தார். நான் பேச்சை மாற்றுவதற்காக அப்பாவிடம் கேட்டேன்.
நீங்கள் எப்பவாவது பிரதட்டை அடிச்சனிங்களா?

அதெல்லாம் செய்யிறதில்லை. ஒருக்கா ரெண்டுதரம் கோயில சுத்திக் கும்பிட்டிருக்கிறன். வெளிவீதி எல்லாம் ஊரிக்கல்லு. பிரதட்டை அடிச்சா குத்தி எடுத்திடும்.

நான் அம்மாவிடம் திரும்பினேன்.

நீங்கள் எப்பவாவது அடி அழிச்சிருக்கிறீங்களா?

சின்னனில ஒருக்காச் செஞ்சனான். பிறகு செய்யிறதில்லை.

ஏன்?

நல்ல புரியன் வரவேணுமெண்டுதான் அப்ப அடி அழிச்சனான். ஆனா அம்மாள் எனக்கு இந்தாளைத்தான் குடுத்துது. அதால கோபத்தில அதுக்குப் பிறகு அடி அழிக்கிறதில்லை.

அப்பா நிமிர்ந்து உட்கார்ந்தார். டிவியில் அம்மாளை வாகனத்திலிருந்து இறக்கி வசந்த மண்டபத்துக்கு எடுத்துச் சென்றார்கள். நான் மனைவியிடம் மெதுவாகச் சொன்னேன்.

இனி வசந்த மண்டபப் பூசை தொடங்கப்போகுது.

*****

Comments

Popular posts from this blog

அயலும் உறவும்

ஊரிலே ஒரு வீடு திருமண நிகழ்வு ஒன்றுக்குத் தயாராகிறது. அந்த வீட்டின் இளைய பெண்ணுக்குத் திருமணம். வீடே திருவிழாக்கோலம் பூணுகிறது. ஒரு திருமண வீட்டின் அமளிகளை நாம் எல்லோருமே அனுபவித்திருப்போம் அல்லவா? அதுவும் நிகழ்வுக்கு முந்தைய சில தினங்கள் அங்கு நடக்கும் ஆயத்தங்கள்தான் உண்மையிலே ஒரு திருமணத்தின் முத்தாய்ப்பான கணங்கள் என்பது என் எண்ணம். சுவர்களுக்குப் பூச்சு அடிப்பது. வீட்டைக் கழுவித்  தரைக்குப்  பிழிந்த தேங்காய்ப்பூ போட்டுப் பாலிஷ் பண்ணுவது. கிணறு இறைப்பது. சுவர்களில் சோடனைகளைத் தொங்கவிடுவது. வெளியே சொக்கட்டான் பந்தல் போடுவது. சவுண்டு சிஸ்டம் ஒன்றை வாடகைக்கு எடுத்து காலையிலிருந்தே கோயில் திருவிழாக்கள்போல பாடல்களை ஒலிக்கவிடுவது. தூக்குக் கணக்கில் விறகுகளையும் பொச்சு மட்டைகளையும் வாங்கி இறக்குவது. பலகாரச்சூட்டுக்கென உறவெல்லாம் கூடுவது. பாத்திரங்களாலும் அடுப்புப்புகையாலும் ஊர் வம்புகளாலும் நிரம்பும் கொல்லைப்புறம். சிறுவர்களின் விளையாட்டுகளால் எழும் புழுதி. முற்றத்தில் சும்மா உட்கார்ந்து பத்திரிகை படித்தும், வெற்றிலை பாக்கு போட்டுக்கொண்டும் அரசியல் பேசும் பெரிசுகள். திருமணத்துக்குத...

மனோ யோகலிங்கம்

சென்ற வாரம் இங்கே மெல்பேர்னில் மனோ யோகலிங்கம் என்ற 23 வயது இளைஞர் தீக்குளித்து உயிரிழந்தார். 2013ம் ஆண்டு தன்னுடைய பன்னிரண்டாவது வயதிலே மனோ தன் குடும்பத்தாரோடு படகிலே வந்து அவுஸ்திரேலியாவில் அகதியாகத் தஞ்சம் புகுகிறார். அவுஸ்திரேலிய அரசாங்கம் ஓராண்டுக்கும் மேலாக மனோவையும் அவருடைய குடும்பத்தையும் தடுப்பு முகாமில் அடைத்துவைத்து, பின்னர் தற்காலிக விசாவிலே அவர்களை மெல்பேர்னிலே வசிப்பதற்கு அனுமதி கொடுக்கிறது. பதின்மூன்று வயது பதின்மத்துச் சிறுவன் இப்போது உள்ளூர் பாடசாலையில் இணைந்துகொள்கிறான். படிக்கிறான். நண்பர்களைத் தேடிக்கொள்கிறான். இந்த நிலத்திலேயே வளர்ந்து பெரியவனாகிறான். ஆயினும் மனோவினதும் அவரது குடும்பத்தினதும் தஞ்சக்கோரிக்கை வழக்குகள் தொடர்ச்சியாக நிராகரிக்கப்பட்டுக்கொண்டிருக்கின்றன. அந்தக்குடும்பத்துக்கான பொது மருத்துவமும் உயர் கல்வி மானியமும் மறுக்கப்படுகிறது. ஒரு தசாப்தம் கடந்து அரசாங்கங்கள் மாறினாலும் காட்சி மாறவில்லை. தவிர நிலைமை இன்னமும் மோசமாகிக்கொண்டே இருந்தது. ஈற்றில் மறுபடியும் இலங்கைக்குத் திருப்பி அனுப்பப்படுவோம் என்ற அச்சத்தில் மனோ யோகலிங்கத்தின் இந்தத் தீக்குளிப்புச் சம...

என் கொல்லைப்புறத்துக் காதலிகள் : 6. கக்கூஸ்

                                          நடுச்சாமத்தில கக்கூசுக்கு அவசரமாக வந்துவிட்டால் அது ஒரு மிகப்பெரிய அரசியற் பிரச்சனை. தனியாகப் போகமுடியாது. கூட்டணி வைக்கவேண்டும். செத்துப்போன தாத்தா பின்பத்திக்குள்ளே சுருட்டுப் பிடித்துக்கொண்டு நிப்பார். கிணற்றடியில் பாம்பு பூரான் கிடக்கலாம். ஒரே வழி, பக்கத்தில் நித்திரை கொள்ளும் அம்மாவைத் தட்டி எழுப்புவதுதான். முதல் தட்டிலேயே எழுந்துவிடுவார். “பத்து வயசாயிட்டுது இன்னும் என்னடா பயம்?”