Skip to main content

அந்தி மழை பொழிகிறது


அந்தி மழை பொழிகிறது. ஒவ்வொரு துளியிலும் உன் முகம் தெரிகிறது.

ஒரு பார்வையற்றவனுக்கு எப்படித் தன் காதலியின் முகம் மழைத்துளிகளில் தெரியமுடியும் எனப் பலர் இப்பாடலை எள்ளி நகையாடுகிறார்கள். ஆனால் இவ்வரிகளை அவ்வாறான நேர்கோட்டு அர்த்தத்தில் அணுகக்கூடாது என்று நினைக்கிறேன்.
பகல் முழுதும் வெயில் சுட்டுக்கிடக்கும் காலத்தில் அந்திப்பொழுது இதத்தினைக் கொணரும். அந்த இதத்தோடு மழையும் சேரும்போது அதன் உணர்வே அலாதியானது. அந்திப்போழுது ஆதலால் மறுநாள் சூரியன் எழும்வரை இரவெல்லாம் நீடிக்கக்கூடிய இதம் அது.
இப்போது பார்வைப்புலனற்ற காதலில் வசப்பட்ட ஒருவனின் கோணத்திலிருந்து யோசித்துப்பாருங்கள்.
இத்தனை காலமும் மதிய வெயில் சுட்டு வரண்டுபோய்க் கிடந்தவன் நான். அந்திப்பொழுது எனக்குக் குளிர்ச்சியைக் கொடுக்கிறது. அப்போது பெய்யும் மழையின் துளிகள் என் உடலை வருடிச்செல்கின்றன. அவற்றில் உன் முகத்தை நான் அறிகிறேன். துளிகளின் ஸ்பரிசத்தை நீ கொடுக்கும் முத்தங்களாக உணர்கிறேன். காதலற்று உலர்ந்து கிடந்த நிலத்தில் பொழிந்த அந்தி மழையின் அணைப்பு நீ. பார்வையற்றவனுக்கு எழக்கூடிய காதலின் உன்மத்தம். அதுதான்,
அந்தி மழை பொழிகிறது. ஒவ்வொரு துளியிலும் உன் முகம் தெரிகிறது.
இது கவிதை இல்லையா?
நிற்க.
கவிஞர் வைரமுத்துமீது பலராலும் சுமத்தப்பட்ட அதிகாரப் பாலியல் துஷ்பிரயோகக் குற்றச்சாட்டுகள் பாரதூரமானவை. அவை கண்டிக்கப்படவேண்டியது. பாதிக்கப்பட்டவர்களின் பக்கம் நாம் நிற்பதும் முக்கியமானது. அதுவும் இத்தனை பெண்கள் துணிந்து முன்வந்து அக்குற்றச்சாட்டுகளைச் சுமத்தியபின்னர்.
வைரமுத்துவின் கவிதையில் பிழை கண்டு அதனை அவதூறு செய்ய முயற்சிப்பது அந்தப் பெண்களின் போராட்டத்தையும் குற்றச்சாட்டுகளையும் நீர்த்துப்போகவே வழிசமைக்கும். வைரமுத்துவின் கவிதைகளைப்போலவே இக்குற்றச்சாட்டுகளும் அவருடைய legacy. அவர்மீதான குற்றச்சாட்டுகளால் வெகுண்டெழுந்து அவரது வரிகள் கவிதைகளே இல்லை என்பதும் இலமே. அவர் கவிதைகளின்மீதான பேரபிமானத்தால் அந்தக் குற்றச்சாட்டுகளை மறுதலிப்பது அதனிலும் இலமே. இரண்டையும் அதனதன் தளத்தில் நின்று அணுகுவதே ஒரு சமூகப் பிரக்ஞை உடைய கலை இரசிகரின் மாண்பாக இருக்கமுடியும் என்பது என் தாழ்மையான எண்ணம்.

Popular posts from this blog

அம்மாளாச்சி கொடியேற்றம்

பசித்தது. சமைக்கப் பஞ்சியாகவும் இருந்தது. அம்மாவுக்கு அழைப்பெடுத்தேன். இரவு உங்க என்ன சாப்பாடு? மரக்கறிதான். இண்டைக்கு அம்மாளாச்சிண்ட கோயில் கொடி. மறந்திட்டியா? அய்யய்யோ. அப்ப முட்டைகூட பொரிக்கமாட்டீங்களா?

பழக்கப்படுத்திக்கொள்ளு பாப்பா

‘ஓ ஜனனி, என் ஸ்வரம் நீ’ என்ற பாடலைத் தொண்ணூறுகளில் வானொலி கேட்டு வளர்ந்தவர்களுக்குத் தெரிந்திருக்கும். புதிய ராகம் திரைப்படத்துக்காக இளையராஜா இசையில் மனோ பாடிய பாடல் என்ற அறிவிப்பாளரின் குரல்கூட இக்கணம் இதனை வாசிக்கும் சில நேயர்களின் காதுகளில் கேட்கவும் கூடும். அதேபோல இரண்டாயிரமாம் ஆண்டளவில் சக்தி, சூரியன் எப்.எம் வானொலிகளைக் கேட்டவர்கள் ‘ஏதோ மின்னல், ஏதோ மின்னல்’ என்ற பாடலை மறந்திருக்கமாட்டார்கள். சபேஷ் முரளி இசையில் மாதங்கியும் திப்புவும் பாடிய பாடல் அது. அக்காலத்தில் ஈழத்து வானொலி நேயர்கள் மத்தியில் மிகப் பிரபலமாக இருந்த இப் பாடல் வெளிவந்த திரைப்படத்தின் பெயர் ‘ஆயிரம் பொய் சொல்லி’.

அணையா விளக்கு - நிகழ்வு அறிவித்தல்

துயர் மிகுந்த இந்த அணையா விளக்குப் போராட்டத்தில் ‘ உஷ்… இது கடவுள்கள் துயிலும் தேசம் ’ கதை வாசிக்கப்படுகிறது. இருக்கும் கொஞ்ச நஞ்ச அறங்களும் நீர்த்துப்போன சம கால உலக ஒழுங்குகளுக்கிடையில் இம்மக்களின் உறுதியும் ஒற்றுமையும்தான் சிறு நம்பிக்கையையேனும் கொடுக்கிறது. நிகழ்வு அறிவித்தல் _______________ அன்புக்குரியவர்களே! அணையா விளக்கு போராட்டத்தின் மாலை நிகழ்வாக 5.30 மணிக்கு ஜே.கே அவர்களின் படுகொலை செய்யப்பட்ட மாணவி கிருசாந்தி தொடர்பான, “உஷ்.. இது கடவுள்கள் துயிலும் தேசம்” என்ற கதை வாசிப்பு இடம்பெறும்.