சுந்தர காண்டம்

 

"ஆழ நீர்க்கங்கை அம்பி கடாவியmekala
ஏழை வேடனுக்கு, 'எம்பி நின்தம்பி, நீ
தோழன், மங்கை கொழுந்தி ' எனச் சொன்ன
வாழி நண்பினை உன்னி, மயங்குவாள்"

பொருள்: கங்கைக் கரை வேடன் குகனிடம் நட்பு கொண்டு என் தம்பி, இனி உனக்குத் தம்பி என்றும், நீ எனக்குத் தோழன் என்றும், சீதை உனக்குக் கொழுந்தி என்றும் சொன்ன அந்தப் பரிவை எண்ணி மயங்குகிறாள். என்னைத் திருமணம் புரிய வந்து, ஜனகன் சபையில் இருந்தோர் வியப்புற வடவரை போன்ற சிவதனுசை நொடியில் வளைத்து ஒடித்த பெருமான் இன்று என்னை வந்து மீட்காமல் இருக்கிறாரே என்று வருந்துவாள்

 

புத்தகத்தில் ஆழ்ந்திருந்தவள் இராணுவ போலீஸ்காரியின் அழைப்பைக்கேட்டு திரும்பினாள்.

“மிஸ்டர் குமார ஓயாவ பலன்ட அவிள்ள இன்னவா” ( திரு குமார உன்னை பார்க்க வந்திருக்கிறான்)

“குமார? ஹூ இஸ் இட் … கவுட?”

“குமாரா, ஓய தன்னவலு?” (குமார, உனக்கு தெரியுமாம்)

சிலிர்த்தெழுந்தாள் மேகலா,

“இஸ் இட் குமரன்? குமரன்த?”

“ஔ எயா தமாயி” (ஓம் அவனே தான்)

 

--------------------------------------------------

 

கிளிநொச்சி மகாவித்தியாலயம் முடிவடைந்து மாணவர்கள் கொஞ்சம் கொஞ்சமாக வெளியேறிக்கொண்டு இருந்தனர். மேகலா கணித நோட்டுகளை எல்லாம் அடுக்கி ஒரு பையில் போட்டாள். பரீட்சை நேரம். இன்றிரவு எல்லாவற்றையும் திருத்த வேண்டும். இந்நேரம் குமரன் வந்து காத்துக்கொண்டு இருப்பான். குமரனை பார்க்கபோகிறோம் என்று நினைத்தாலே அடிவயிற்றை ஏதோ உருட்டியது. காலை தானே அவனைப்பார்த்தோம். ச்சே என்ன மனம் இது? கண்ணாடியில் ஒரு தடவை முகத்தை மீண்டும் பார்த்தாள். ம்ஹூம், வகுப்பறையின் கிரவல் மண் அப்படியே முகத்தில் ஓட்டி இருந்தது. அத்தோடு சாக் பீஸ் நிறமும் சேர அவளுக்கே தன்னைப்பார்க்க  ஒரு மாதிரியாக இருந்தது. உடனே பாடசாலை கிணற்றடிக்கு சென்று முகம் அலம்பிக்கொண்டாள். இந்த மண்ணின் நிறம் தான், சனியன் எப்படி கழுவினாலும் போக மாட்டேன் என்று ஒட்டிக்கொண்டே இருக்கிறது. தலையை அங்கே இங்கே சரிசெய்து, கூடவே கொண்டுவந்திருந்த பொன்ஸ் முகப்பவுடரை பூசிக்கொண்டாள். இப்போது தேவலாம். அவனுக்கெல்லாம் இது வே ரொம்ப அதிகம். மேகலா வெளியே வரும்போது டிராக்டர் டயரில் ஓய்யாசமாய் சாய்ந்துகொண்டே குமரன் அவளையே பார்த்துக்கொண்டு இருந்தான். கிளிநொச்சி வெயில் அனல் பறந்தது.

kilinochchi central college grounds

என்ன டீச்சர், இஸ்கூல் முடிஞ்சு அரை மணித்தியாலம் ஆயிட்டு, எக்ஸ்ரா கிளாஸ் ஆ?

இல்ல … குமரன், பேப்பர் கரெக்ஷன், அதான் கொஞ்சம் ….

சரி சரி …. பாக்கவே தெரியுது

-- குமரன் சிரித்தான், சின்னதாய் குழி விழுந்தது. இந்த சிரிப்புதான் ..  படுபாவி!

 

குமரனுக்கு கிளிநொச்சி புதுசு. யாழ்ப்பாண நகரத்தில் ஒரு சிறிய புத்தகக்கடை நடத்தி வந்தவன். நன்றாக படிக்கக்கூடியவன் தான், ஆனால் அண்ணா புலிகளோடு இணைந்ததோடு, கடையின் பொறுப்பு முழுதும் இவனின் தலையில் விழுந்தது. பாடசாலைக்கு போகாது விட்டாலும், புத்தகக்கடை என்பதால் அத்தனை புத்தகங்களையும் வாசித்துவிடுவான்.  ஒரு நாவல் கூட எழுத ஆரம்பித்திருந்தான். எல்லாமே இரண்டு வருடங்களுக்கு முன்னர், போட்டது போட்டபடியே இடம்பெயர்ந்து வன்னிக்கு போனதோடு போய்விட்டது. மீண்டும் சாமான்களை எடுத்து வர செல்வதற்கு அம்மா அனுமதிக்கவில்லை. இருக்கும் ஒரே பிள்ளையையும் இழக்க அவள் தயாராக இல்லை. இப்போது கடையும் இல்லை. கதையும் இல்லை. ஒரு டிராக்டர் டிரைவர் ஆக வட்டக்கச்சியில் மாசக்கூலி வேலை பார்த்து வருகிறான்.

“இன்னிக்கு என்ன லோட் ஏத்தினாய்? பின்னாலே பெட்டியிலேயே இருக்கட்டுமா?”

டிராக்டரை ஸ்டார்ட் செய்த குமரனை பார்த்து மேகலா கேட்டாள். வேண்டாம் முன்னே பக்கத்தில் வந்து உட்கார சொல்லுடா, ப்ளீஸ் என்றது மனம்.

“பெட்டியிலேயே இரு மேகலா, mudguardல இருக்கிறது அவ்வளவு வசதி இல்ல, பிறகு நீ விழுந்தா ஐயாக்கு நான் பதில் சொல்ல முடியாது”,

அழுத்தக்காரன். மனதில் இருப்பதைககாட்டிக்கொள்ளவே மாட்டான். குமரன் ஐயா என்று சொன்னது மேகலாவின் தந்தையைத்தான். வட்டக்கச்சியின் மிகப்பெரிய பண்ணையார் அவர். நான்கு டிராக்டர்கள், மூன்று வண்டில்கள், பத்துக்கும் மேற்பட்ட கூலியாளர்கள், ஏராளமான மாடுகள், எத்தனை என்றெல்லாம் இங்கே எண்ண மாட்டார்கள். குமரன் அவரிடம் இருக்கும் மாஸ்சி 135, 25ஸ்ரீ டிராக்டரை தான் ஓட்டுகிறான். இரண்டு வருடங்களுக்கு முன்னர் ஏதிலிகளாய் குமரனும் அம்மாவும் வந்து இறங்கியபோது இருக்க இடமும் குமரனுக்கு இந்த வேலையையும் போட்டுக்கொடுத்தவர். குமரன் அவரின் மேல் அளவு கடந்த மரியாதை வைத்திருந்தான்.

“அப்படியெல்லாம் நீ என்ன விழ விட்டிடுவியா என்ன?”

மேகலா சிரித்துக்கொண்டே சேலையை ஒருக்களித்து இலாவகமாக குமரனின் பக்கத்தில் ஏறி உட்கார்ந்தாள்.  குமரன் மறுபக்கம் திரும்பி மெலிதாக புன்னகைத்துக்கொண்டே கியரை போட்டான். 135 என்ஜின் உறுமியபடியே புறப்பட்டது.

------------------------

 

மேகலா இருப்பதிலேயே ஓரளவுக்கு நல்ல நிலையில் உள்ள பாவாடை சட்டையை எடுத்து அணிந்துகொண்டாள். பத்து வருடங்கள் ஓடிவிட்டது. என்ன இன்று திடுப்பென்று வந்து நிற்கிறான்? இடையில் குமரனுடனான தொடர்பு முற்றாகவே அறுந்திருந்தது. நாவலை எழுதி முடித்திருப்பானா என்ன? இப்போது எப்படி இருப்பான்? முடியெல்லாம் கொட்டியிருக்கும். குமரனுக்கு இந்த ஆவணியுடன் முப்பத்தைந்து வயது ஆகவேண்டும். வெளிநாடு போனதாக முன்னர் ஒரு செய்தி வந்தது. கன்னம் எல்லாம் உப்பி களையாக வந்திருப்பான். இன்னமும் கன்னத்தில் குழி விழுமா? மேகலா பத்து வருடங்களில் முதன் முறையாக வெட்கப்பட்டாள். தன்னிடம் இருந்த சின்ன கண்ணாடியில் முகம் பார்த்தாள். ச்சே கண்ணுக்கு கீழே குழி எல்லாம் விழுந்துவிட்டது. விசுவமடு சண்டையில் லேசாக பட்ட துவக்கு சன்னத்தின் காயம் இன்னமும் நெற்றியில். அசிங்கமாக இருக்கிறேனா? உதடு எல்லாம் கறுத்து காய்ந்து போய் இருந்தது. பூசுவதற்கு பவுடர் கூட இல்லை. சென்ற வாரம் அம்மா கொண்டு வந்த பவுடரையும் எதற்கு என்று திருப்பி அனுப்பிவிட்டாள். புத்தகங்களை மட்டுமே எடுத்துக்கொண்டு வர சொல்லி இருந்தாள். பாவாடை கூட நூல் இழுபட்டு போய் இருந்தது. ஏன் எனக்கு மட்டும் இப்படி நடக்கிறது?

 

-------------------------

 

“குமரன், யாழ்ப்பாணத்தில சொந்த கடை வச்சிருந்திட்டு இங்க இப்பிடி கூலிக்கு வேலை செய்யிறது உனக்கு கஷ்டமா இல்லையா? நீ ஏன் திரும்பவும் படிக்கக்கூடாது?

மேகலாவுக்கு குமரனைப்பார்க்க பாவமாய் இருந்தது. சாரத்தை மடித்து கட்டியிருந்தான். காலில் எதுவும் அணிந்திருக்கவில்லை. போன வருஷம் வந்து நின்ற குமரனுக்கும் இந்த குமரனுக்கும் நிறைய வித்தியாசங்கள். கறுத்துவிட்டான். கைகள் எல்லாம் கன்றி இருந்தன. முன்னர் எல்லாம் தன் கடையில் இருந்த செங்கைஆழியான் சுஜாதா புத்தகங்கள் பற்றி கதை கதையாய் சொல்லுவான்.இந்த சண்டைக்குள்ளும் இடையிடையே நூலகத்துக்கு போய் வாசிப்பில் மூழ்கி விடுவான். குமரனிடம் ஏதோ இருக்கிறது என்பதை மேகலா அப்போதோ கண்டுபிடித்துவிட்டாள்.

 

“படிப்பா? எனக்கா? இருப்பத்திரெண்டு வயசு ஆச்சுது, பாக்கறயில்ல? இரவு பகலாய் டிராக்டர் ஓட்டம். இனி என்னத்த படிச்சு என்னத்த செய்ய? ”

“இல்ல குமரன்…”

“அப்பெல்லாம் படிக்கனும் போல இருக்கும் மேகலா, நிறைய இலக்கியம், ஜெயராஜ் தெரியமா? அவரோட பேச்சு தான் எப்போதும் கேட்பேன், கம்பராமாயணத்தில சுந்தர காண்டம் எல்லாம் அத்துப்படி..ம்ஹூம்  எல்லாமே போச்சு”

“இந்த சண்டை உன்னை நல்லா பாதிச்சிட்டு இல்ல”

“அண்ணா இயக்கத்துக்கு போய் கொஞ்ச நாளிலேயே செத்துப்போனான், பயிற்சியின் போதுதான் நடந்தது. இப்ப பத்தாயிரம் பேர்ல அவனும் ஒருத்தன். யாருமே ஞாபகம் வச்சிருக்கபோறதில்ல. எல்லாருக்கும் திலீபனையும் கிட்டுவையும் தான் தெரியும்! அண்ணாவும் அவங்கள போல தானே போராட போனார்? நாங்க பாடியை கூட பாக்க இல்ல தெரியுமா? அம்மா மட்டும் தான் ஒவ்வொரு நாளும் அழறா.

ஏன் இந்த சாவு என்று தெரிய இல்ல. ஓடிக்கொண்டே இருக்கிறோம். முதல்ல வசாவிளான், அப்புறம் உரும்பிராய், பளை, இப்ப வட்டக்கச்சி .. இதெல்லாம் எங்க போய் முடியப்போகுது மேகலா?”

 

அவன் தலையை மிருதுவாக தடவி விட வேண்டும் போல தோன்றியது. கிளிநொச்சி குளக்கட்டருகே டிராக்டர் சென்று கொண்டு இருந்தது. குளத்திலே சிறுவர்கள் நீந்தி விளையாடிக்கொண்டு இருந்தனர். நூறடிக்கு ஒருமுறை ஏதாவது ஒரு கடை இருந்தது. சைக்கிள் கடை, சாப்பாட்டுக்கடை, வெறும் டீ கடை, பாலைப்பழக்கடை என அநேகமான கடைகள் யாழ்ப்பாணத்தில் இருந்து இடம்பெயர்ந்து வந்தவர்கள் போட்ட கடைகள் தாம். ஒவ்வொரு கடையின் முன்னேயும் ஒரு கூட்டம் எப்போதுமே எதையோ பேசிக்கொண்டு இருக்கும்.  வீதியால் சென்றுகொண்டிருந்த சிலர் மேகலாவையும் குமரனையும் ஒரு மாதிரியாக பார்த்துக்கொண்டு போக மேகலா இயலுமான மட்டும் தள்ளியே உட்கார்ந்தாள்.

 

“கவனம், விழுந்திட போறாய். … உனக்கு என்ன பிளான் மேகலா? காம்பஸ் கிடைச்சா போயிடு, இது வேண்டாம், இந்த சண்டை, இப்படி கிடுகுக்கொட்டிலில வகுப்பு சொல்லிக்குடுக்கிறது, எப்ப ஷெல் அடிப்பான், எப்ப பம்பர் வரும் .. வேணாம்,  பேசாம போயிடு … மொறட்டுவவோ பெராதனையோ .. எது கிடைச்சாலும் போயிடு”

“என்ன சொல்ற குமரன்? இங்க எல்லாத்தையும் விட்டிட்டு போக சொல்றியா? இது தான் என்ர இடம். அப்பா அம்மா தம்பி, இந்த ஆடு மாடு, டிராக்டர் எல்லாத்தையும் விட்டிட்டு எப்பிடி போறது? இந்த கொட்டிலில தான் நானும் படிச்சேன். நாளைக்கு எண்ட தம்பி நல்ல இஸ்கூல் கட்டிடத்தில படிக்கோணும் ஏண்டா நான் இங்க தான் இருக்கோணும். ஏன் நாங்க எல்லோரும் இருக்கோணும். தேவை எண்டா சண்டையும் பிடிக்கோணும். நீ இருக்க மாட்டியா குமரன்? இண்டைக்கு மாதிரி நீ என்னை தினமும் இப்படி கூட்டிகிட்டு போக மாட்டியா?”

 

மேகலா சொல்லும் போது அதில் காதலோடு வாஞ்சையும் இருந்தது. அப்பா அம்மா, தன் வீடு, தன் உடமை, தன் நாடு என்று எல்லாவற்றிலும் அந்த காதல். என்ன மாதிரி பெண் இவள்? கேட்டுவிடுவோமா? குமரன் சற்றே தடுமாறினான். டிராக்டர் குளக்கட்டருகிலிருந்து திருவையாறு வீதிக்குள்ளே குலுங்கியபடியே இறங்கியது..

 

“என்ன குமரன் பேசாமல் வாறாய்? நான் கேட்டதுக்கு ஒண்ணுமே சொல்லல நீ?”

“என்ன சொல்லச்சொல்ற மேகலா? இது என்ட ஊர் கிடையாது. யாழ்ப்பாணத்த ஆர்மி பிடிச்சிட்டான். நாங்க போனா மாவீரர் குடும்பம் எண்டு யாராவது போட்டுக்குடுத்துடுவாங்க. அப்புறம் நான் பூசா கேம்ப்புக்கு தான் போகணும்? இங்க இப்பிடியே இருந்து டிராக்டர் ஓட்டி சீவிக்க சொல்றியா?”

“அப்ப போயிடுவியா? எல்லாத்தையும் விட்டிட்டு போயிடுவியா? அப்புறம் இரவெல்லாம் யாரோட பொன்னியின்செல்வன் பற்றி கதைப்பேன்? பாவை விளக்கு தேவகியோட நிக்குது? சேர்ந்து வாசிப்போம்னு சொன்னியே”

மேகலா ஏதேதோ அரற்றினாள். போகப்போகிறானோ என்ற பயம் நெஞ்சில் பற்றிக்கொண்டது.

“மேகலா, பதட்டப்படாத, என்னோட நிலையையும் கொஞ்சம் யோசிச்சுபாரு, இங்கேயே இருந்தா முன்னேற முடியாது, போகணும், எப்பிடியாவது வெளிநாட்டுக்கு போகணும்” 

 

குமரன் சொல்வதும் வாஸ்தவம் போல தான் பட்டது. ஆனாலும் இவன் ஏன் அவளையும் சேர்த்து யோசிக்க மாட்டேங்கிறான் என்று மேகலா வருந்தினாள். நான் இருக்கும் இடம் அவனது இல்லியா?  இவனுக்கு எப்படி புரிய வைப்பேன்? இவனோடு வாழும் வாழ்க்கையை நான் ஒவ்வொரு நொடியும் யோசிப்பது போல இவனுக்கேன் தோணமாட்டேங்குது? இல்லை நடிக்கிறானா? விருமம் பிடிச்சவன். இவனையெல்லாம் கட்டி என்ன அல்லல் பட போகிறோமோ? மேகலா மனதுகுள்ளேயே நொந்தாள். டிராக்டர் பண்னங்கண்டி பாலத்தை நெருங்கிக்கொண்டு இருந்தது.  வயல்கள் பச்சை காட்டின.

 

--------------

 

மருதமடு முன்னாள் போராளிகள் நலன்புரி நிலையத்தின் பார்வையாளர் சந்திக்கும் அறை நிறைந்து வழிந்தது. பலரின் குடும்பத்தினரோ, நண்பர்களோ வந்து பேசிக்கொண்டு இருந்தனர். ஒரு தாய் தன் கைக்குழந்தையை கொண்டு வந்திருந்தாள். கணவன் இன்னமும் மறியலில் தான் இருக்கவேண்டும் போல. அந்த குழந்தை தகப்பனின் கையில் இருக்கையில் கதறி அழுதது.  மற்றொருபுறம் ஒரு வயோதிபர் தான் கொண்டு வந்த மதிய உணவை மகனுக்கு கொடுத்து சாப்பிட சொல்லிக்கொண்டு இருந்தார். சில வெளிநாட்டு வாழ் தமிழர்களும் உறவினரை பார்க்க வந்திருந்தனர். மேற்கத்திய G-Star, Armany, NIKE பிராண்டுகளை பார்க்கவே புரிந்தது. இப்படி பல உறவுகள். சில அநாமதேய நடமாட்டங்களும் இல்லாமல் இல்லை.

மேகலா நுழையும்போது உள்ளே காத்திருந்த குமரன் உடனே எழுந்து ஓடி வந்தான். அடடா முடி அந்த அளவுக்கு கொட்டவில்லை. கன்னம் எல்லாம் பளபளவென்றிருந்தது. டெனிம் ஜீன்சுக்கு வெள்ளை நிற டி-ஷர்ட் அணிந்திருந்தான். மேகலாவுக்கு தன்னை நினைக்கையில் வெட்கமாய் இருந்தது. ச்சே ஒரு நல்ல சுடிதார் கூட இல்லை. பக்கத்து அறை வானதியிடம் வாங்கி போட்டுகொண்டு வந்திருக்கலாம். அவசரப்பட்டுவிட்டாள்.

 

எப்பிடி இருக்கிறாய் மேகலா? தெரியுதா என்னை?

மேகலா சன்னமாய் சிரித்தாள்

ஆஸ்திரேலியாலயே செட்டில் ஆயிட்டியா குமரன்?

அஞ்சு வருஷம் ஆச்சு மேகலா, இப்ப தான் பாஸ்போட் கிடைச்சுது, பாரு ஒன்ன பாக்க வந்திட்டன்

எப்பிடி கண்டு பிடிச்சாய்?

வீட்ட போனேன் மேகலா, ஐயா தான் சொன்னார் … நீ இங்க முகாமில எண்டு …

மேகலா இப்போது கொஞ்சமே விம்மத்தொடங்கி இருந்தாள். தாங்க முடியவில்லை அவளுக்கும். இத்தனை நாள் மனதில் அடக்கி வைத்திருந்தது, மறைக்கமுடியவில்லை.

 

உன்னோட வந்திருக்கணும் குமரன், விசரி நான், மண் மண் எண்டு கடைசில எங்க கிடக்கிறன் பாரு. தம்பி எங்க எண்டு கூட தெரியாது தெரியுமா? கடைசி நாளுக்கு மொத நாள் தான் பிடிச்சுகிட்டு போனாங்கள்.  நீ சொன்னது தான் சரி குமரன். இது வேண்டாம், இந்த மண், சண்டை, மரணம் ஒண்டுமே வேண்டாம். எங்கேயாவது …  காலைல எழுந்தா, ஒண்ணுக்குமே பயப்படாமல் … எப்ப ஷெல் வரும், ஆர்மி வரும், சாவு வரும் …  பயம் ஒண்ணுமே இருக்கக்கூடாது குமரன்.. முடியுமா"?

உனக்கு ஒண்ணு சொல்லணுமே மேகலா..

 

---------------------------

 

பண்னங்கண்டி வாய்க்காலில் தண்ணீர் சற்றே மேவிப்பாய்ந்து கொண்டு இருந்தது. கிரவல் பாதையில் மழை பெய்து ஒரே பள்ளமும் குழியுமாய். டிராக்டர் ஏறுக்கு மாறாய் போய்க்கொண்டிருக்க புதுசாய்  ஓட்டப்பழகிய குமரன் சமாளிக்க கொஞ்சம் சிரமப்பட்டான்.

குமரன் ஒண்ணு சொன்னா தப்பா எடுத்துக்க மாட்டியே?kalavani-pictures069

சொல்லு மேகலா

இல்ல விடு, நீ தப்பா நெனைப்ப!

இல்ல சொல்லு

..

தெரியாமா தான் கேட்கிறேன், இவ்வளவு பேசறோம் … ஆனா உனக்கு ஒண்ணுமே தோனல இல்ல?

குமரன் அமைதியாய் இருந்தான்.  பண்னங்கண்டி பாலத்தில் சிலர் மாடுகளை குளிப்பாட்டிக்கொண்டிருந்தனர். மாடுகள் தம் வாலால் பூச்சிகளை அடிக்கும் லாவகமும் அதற்கு சட்டை செய்யாமல் பூச்சிகள் அங்கேயும் இங்கேயும் பாய்வதும் வேடிக்கையாய் இருந்தது.

 

குமரன்…

உணமைய சொல்லட்டா மேகலா?  பத்து மணிக்கே வேலை முடிஞ்சுது. இன்னிக்கும் வேற எங்கேயும் போகேல்ல, இஸ்கூலுக்கு வந்து உனக்காகவே காத்திட்டிருந்தேன் மேகலா. நீ இப்ப பக்கத்திலே இருக்கிறயா …இளையராஜா பாட்டெல்லாம் … அப்பிடியே .. ச்சே விடு மேகலா … வேணாம் … புரியாது

 

மேகலா மெலிதாக சிரித்தாள். திருடன்! இவ்வளவு ஆசையை வைத்துக்கொண்டு மறைத்திருக்கிறான். கேட்காமல் விட்டிருந்தால் சொல்லியே இருக்கமாட்டான். அழுத்தக்காரன். அகிலனின் பாவை விளக்கை சேர்ந்து வாசிப்போமா என்று அவன் அன்றைக்கு கேட்டபோதே அவளுக்கு புரிந்துவிட்டது. இவனையெல்லாம் எப்படி கட்டி அழப்போகிறோமோ, மேகலாவுக்கு சந்தோசம் தொண்டைக்குழியை அடைத்தது.

 

அப்ப சாரே, நாளைக்கு சரியான டைமுக்கு வந்து பிக்அப் பண்ணுங்க. ஆ இன்னொரு விஷயம். இந்த சாரம் எல்லாம் இனி வேண்டாமே. ஜீன்ஸ் இருக்கில்லையா? .. ஆ அப்புறம், காலுக்கு ஸ்லிப்பர் ஏதாவது வாங்கி போடு சரியா?

“ரெண்டு நிமிஷம் கூட ஆக இல்ல, அதுக்குள்ளயா?”

குமரன் சிரித்துக்கொண்டே சொல்லும்போது வீடும் வந்தது. மேகலா இறங்கி வாசல் படலையை திறந்துவிட்டாள்.

மூஞ்சிய நல்லா அலம்பிட்டு சாப்பிட வா முதல்ல …

மேகலா அழகாய் சிரித்தாள். தூரத்தில் இராணுவ ஹெலிகோப்டர் ஒன்று விரையும் சத்தம் கேட்டது.

 

---------------------------

 

அப்பாவை பார்த்தியா குமரன்? எப்பிடி இருக்கிறார்? தம்பி காணாம போனதில ஷாக் ஆகி, வீட்டிலேயே முடங்கீட்டாரு, அம்மா தான் மாசா மாசம் இங்க வரும். புத்தகம் நிறைய கொண்டுவரும். சொன்னா சிரிப்பாய். ஒரு நாவல் எழத தொடங்கீட்டன். பெயர் என்ன  சொல்லு பார்ப்பம்?.

 

மேகலா, உனக்கு நான் ஒண்டு சொல்லோணும்

 

நினைச்சேன்! நீ கண்டு பிடிக்கமாட்டாய், உனக்கு பிடிச்ச தலைப்பு தான், “சுந்தர காண்டம்” … புரியுதா என்ன கதை எண்டு?

 

ப்ளீஸ் … என்னை கொல்லாத மேகலா … உனக்கு ஒண்டு சொல்ல தான் இங்க வந்திருக்கேன்

.குமரன் இந்த தடவை சற்று அழுத்தமாகவே சொன்னான்.

மேகலா அமைதியாய் இருந்தாள். அவளுக்கு புரிந்துவிட்டது. அவள் இது நாள் வரை எதை எண்ணி பயந்தாளோ அதுவே தான். ஜன்னல் வழியே வெறித்துப்பார்த்தாள். வவுனியா வெயில் சுட்டு எரித்தது. மேகலா சற்றே குளிருவது போல உணர்ந்தாள். கைகள் இரண்டையும் இறுக்கமாக மார்பின் குறுக்கே கட்டிக்கொண்டாள். அறை திடீரென்று நிசப்தமானது போல தோன்றியது. தந்தையின் கையில் இருந்த குழந்தை இன்னும் அழுதுகொண்டிருந்தது.

 

மேகலா…வந்து…

------

------

வேணாம் குமரன் .. சொல்லாத .. வேணாம் … தயவு செஞ்சு திரும்பிப்போயிடு .. ஒண்டுமே சொல்லாத ப்ளீஸ் … தாங்க மாட்டேன்டா

மேகலா தலை குனிந்தபடியே, இழுபட்டுக்கொண்டிருந்த பாவாடையின் அறுபட்ட நூலை மெதுவாக பற்றிக்கொண்டு விசித்து விசித்து அழ ஆரம்பித்தாள்.

அந்த தந்தையின் கையில் இருந்த குழந்தை இப்போது அழுகையை நிறுத்தி சிரிக்க ஆரம்பித்திருந்தது.

 

---------------------------------------------------- முற்றும் ------------------------------------------------------------

என் கொல்லைப்புறத்து காதலிகள் : மணிரத்னம்

ஆரம்பம் ஒரு சின்ன ஒளிப்புள்ளியில் இருந்து ஆரம்பிக்கிறது. பின்னணி இசையின் எலெக்ட்ரிக் பேஸ் கிட்டார் பிட்ச் திகிலூட்டுகிறது. அப்புறம் சேசிங். ஐந்து நிமிடத்தில் காஷ்மீரிய போராளி வாசிம்கான் சுற்றி வளைக்கப்படுகிறான். கட். அடுத்த காட்சி சுந்தரபாண்டியபுரத்தில். சின்ன சின்ன ஆசை பாடல். 

வியாழமாற்றம் (27-10-2011) : கடாபியின் பிணம்


அக்கா சென்றவார இறுதியில் அழைத்துக்கேட்டார், என்னடா “கற்றதும் பெற்றதும்” வடிவத்தை காப்பி பண்ணி வியாழமாற்றம் என்று எழுதுகிறாயா என்று. தூக்கிவாரிப்போட்டது. அதெல்லாம் நினைத்தாலும் முடியாது. இது சும்மா, டைம் பாஸுக்கு எழுதுகிறேன் என்றேன். பயபிள்ளக அலேர்ட்டா தான் இருக்காங்க. சுஜாதாவின் ஒரு குட்டி விமானம் ஓடும் பைலட்டின் கதை இருக்கிறது. அதில் வரும் narrator சுஜாதாவா இல்லை அந்த பைலட்டா என்ற குழப்பம் வாசிக்கும் முதல் சில பக்கங்களில் இருக்கும், ஒரு இலாவகமான கதை சொல்லும்பாணி. அந்த பாணியை தழுவியே “அப்பா வருகிறார்” முயற்சித்தேன். அக்கா கண்டுபிடித்துவிட்டாள். நண்பர்கள் பலரின் கருத்துக்களை பார்க்கும்போது, இன்னும் அதிக முயற்சி எடுத்து எழுதவேண்டும் போல தோன்றுகிறது. எழுதுவேன்.

அரசியல்

லிபிய முன்னாள் அதிபர் கடாபியின் பிணம் அழுகிக்கொண்டு இருக்கிறது. ஒரு சர்வாதிகாரனுக்கு தேவையே இல்லாமல் பரிதாபம் தேடுகிறார்கள். கடாபி செய்த கொடுமை ராஜபக்ச, ராஜீவ்காந்தி செய்த அநியாயங்களுக்கும் கொஞ்சமும் குறைவில்லை. ஆனால் அதற்கு லிபிய புரட்சி(?) குழு நடந்துகொண்ட விதம் மேலும் அருவருப்பூட்டுகிறது. ஆப்கானிஸ்தானில் சோவியத்படைகள் பின்வாங்கிய பின்னர் வந்த முஜாஹிதீன் குழு பண்ணிய  அட்டகாசங்கள் தான் பின்னாளிலே தாலிபானை வரவழைக்க, அதன் பின் அல்கைதா அங்கே குடியேற, என்ன நடந்ததோ அதுவே லிபியாவிலும் நடக்கும்போல இருக்கிறது.

mandela_gaddafi
எனக்கு இதிலே தென் ஆபிரிக்கா மீது பயங்கர கோபம். அவர்களின் விடுதலைக்கு கடாபி துணிந்து குரல் கொடுத்தவர். அதில் சுயநலம் இருந்திருந்தாலும் தென் ஆபிரிக்காவுக்கு அது காலத்தால் செய்த உதவி. ஆனால் எதற்கு வம்பு என்று இப்போது சுயநலமாக பேசாமல் இருந்துவிட்டது. யாராவது கர்ணன் கதையை தென் ஆபிரிக்க ஜனாதிபதிக்கு சொல்லுங்கள் ப்ளீஸ். ஒருவேளை கர்ணன் முடிவு தெரிந்து தான் கம்முன்னு இருந்ததுட்டாரோ என்னவோ.இதில் காமெடி என்னவென்றால் லிபிய அதிபர் கொலையை விசாரிக்கவேண்டும் என்று ராஜபக்ஸ தெரிவித்திருக்கிறான். தக்காளி, தொடர்ச்சியா டாய்லெட்டுக்க நாலு நாள் உட்கார்ந்திருப்பான் போல. யாருமே கவனிக்கல, அப்பிடியே மெயின்டைன் பண்ணு சூனா பானா!

சுவாரஸ்யம்

வேலாயுதம் படம் வெளியாகும் முன்னரே பிரித்து மேயந்து விட்டார்கள். சிலர் வெறுப்பில் செய்தது. சிலர் செய்தால் தான் மதிப்பு என்று செய்தார்கள். லக்கியின் இந்த அணில் படம் ஒரு கலக்கு கலக்கியது. எனக்கு பிடித்தது மனமதக்குஞ்சுவின் இந்த facebook ரியாக்க்ஷன் தான்,

எத்தனை 'அறிவு' வந்தாலும் 'வேலாயுதம்' தான் நம்பர் ஒன் : 'ஜெயம்' ராஜா கருத்து

“அண்ணனின் இந்த அயராத தன்னம்பிக்கையை பாராட்டி படகோட்டி படத்தில் சரோஜாதேவி பயன்படுத்திய சோப்பு டப்பா ராஜாவுக்கு பிறீயாக வழங்கப்படுகிறது..!!!!!” -- மன்மதக்குஞ்சு

நெகிழ்ச்சி

ஜாக்கியின் வாசகர் பற்றிய ஒரு பதிவு மிக நெகிழ்ச்சியாக இருக்க ஒரு கடிதம் எழுதினேன் தப்பு தப்பாய். அவர் உடனடியாகவே பதில் அனுப்பினார். மீண்டும் அனுப்பினேன். இப்போது அந்த கடிதங்கள் அவரில் வலைப்பதிவில். மிக இனிமையான down to earth மனிதர். எனக்கெல்லாம் அவர் தனியாக பதில் போடவே தேவை இல்லை. அழைத்து வேறு பேச  சொல்லியிருக்கிறார். அழைத்துப்பேச வேண்டும். சின்ன தயக்கம் இருக்கிறது, பேஸ்மண்ட் கொஞ்சம் வீக்கு!

இந்த வார பாடல்

எனக்கு மிகவும் பிடித்த musical comedy எது என்று யாராவது கேட்டால், அடுத்த கணமே நான் சொல்லும் படம் “Music and Lyrics”, இப்படி ஒரு இசையும் காதலும் இயல்பாக கலந்த படம் வேறு இருக்கிறதா என்று தெரியவில்லை. என்னை போட்டுத்தாக்கிய படம். இதன் DVD எல்லாம் ஏன் நம்முடைய தமிழ் இயக்குனர்களுக்கு கிடைப்பதில்லையோ தெரியாது. இயக்குநர் விஜய் இதை உணர்வுபூர்வமாக சுட முடியும்!! இந்த பாடலின் மெலடி ஒரு pancreatic cancer போல! நீங்கள் எந்தப்பெரிய ஆளாய் இருந்தாலும் தப்ப முடியாது. கொன்றுவிடும். சந்தோஷமாக இறக்கலாம்.
மிக எளிமையான உரைநடை. ஒரு பாடலுக்கு மெட்டு முக்கியமா? இசை முக்கியமா? என்ற ஒரு argument இந்த படத்தில் வரும்.  Alex தான் பாடகர். Sophie அந்த பாடலாசிரியை. பாருங்கள் அந்த உரையாடலை!
Alex : It doesn't have to be perfect. Just spit it out. They're just lyrics.
Sophie : "Just lyrics"?
Alex : Lyrics are important. They're just not as important as melody.
Sophie : A melody is like seeing someone for the first time. The physical attraction. Sex.
 Alex : I so get that.
Sophie : But then, as you get to know the person, that's the lyrics. Their story. Who they are underneath. It's the combination of the two that makes it magical.
இப்படியான வரிகள் உலகம் முழுதுமான இலக்கியங்களில் பரவிக்கிடக்கின்றன பல வடிவங்களில். நமக்கு எல்லாமே வந்து சேராது. சேர்வதை பகிர்வதில் எப்போதும் சந்தோசமே!
என்ன ஒரு மெட்டு, எத்தனை இனிமையான வரிகள்!

 

ஆப்பிள்

steve_jobs_young-thumbதிங்கள் முதலே ஸ்டீவ் ஜோப்சின் சுயசரிதம் வெளியாகும் செய்தியும் நூலின் சுவாரசிய துணுக்குகளும் வரத்தொடங்கியிருந்தன. அவர் ஒரு பெரிய business magnum, innovator என்பதை எல்லாம் விட்டுவிடுங்கள். மனிஷனின் வாழ்க்கை அவ்வளவு சுவாரசியமும் திருப்பங்களும் நிறைந்தது. செவ்வாய் அன்றே புத்தகம் எனக்குக்கிடைத்துவிட்டது. எக்ஸ்பிரஸ் வேகத்தில் இருக்கிறது, ட்ரெயினில் போய் வரும்போது வாசித்துக்கொண்டு இருக்கிறேன், iPad இல் தான். அது தான் irony!
kannathil2_copy
ஒரு சுவாரசியமான விஷயம். கன்னத்தில் முத்தமிட்டால் படத்தில் அமுதாவிற்கு ஒன்பது வயதாகும் போது அவள் தத்துப்பிள்ளை என்பதை தெரியப்படுத்துவார்கள். இது சம்பந்தமான வாதப்பிரதிவாதங்கள் அப்போது எழுந்தன. அது ரொம்ப சீக்கிரம் என்ற ஒரு கருத்து எழுந்து, சுஜாதா ஒரு விவாதத்திற்கே அழைத்திருந்தார். எனக்கென்னவோ மணிரத்னமும் சுஜாதாவும் ஆய்வு செய்தே அந்தக்காட்சி வைத்திருப்பார்கள் போல. ஸ்டீவ் ஜாப்ஸ்க்கு அவர் ஒரு தத்துப்பிள்ளை என்பதை ஏழு வயதில் சொல்லி இருக்கிறார்கள், மிக பக்குவமாக. அது அவரது personality build-up இற்கு பெரிதும் உதவி இருக்கிறது. Obvious போல நமக்கு படும் சில விஷயங்கள் உண்மையிலேயே தவறாக சிலவேளைகளில் இருக்கின்றன, மற்றவன் சொல்வதை செவிமடுக்கவேண்டியது அவசியம் என்று அடிக்கடி எனக்கே சொல்லிக்கொள்கிறேன்.  இந்த நூலைப்பற்றிய மேலதிக தகவல்களை “படிச்சதென்ன பிடிச்சதென்ன” தொடரில் விரைவில் எதிர்பாருங்கள்.

ஹாட் நியூஸ்

anne_hathaway_shorts_420

kate_winslet_shorts_420
ஆஸ்திரேலியாவில் சம்மர் தொடங்கப்போகிறது.  பெண்கள் உடைகளை பார்த்தே அதைக்கண்டு பிடிக்கலாம். வெயில் வருகிறதோ இல்லையோ,  அக்டோபர் வந்து விட்டால் பெண்கள் எல்லோரும் நம்முடைய ஷிரேயா, ஊர்மிளா மாதிரி ஆகிவிடுவார்கள். பத்திரிகை ஒன்று எப்படி குட்டையாக ஷோர்ட்ஸ் சம்மரில் அணிவது என்று ஒரு கவர் ஸ்டோரியே போட்டுவிட்டது. இனி இதற்காகவே பலர் ட்ரெயினில் பயணிப்பார்கள். இன்று மாலை,  ட்ரெயினில் ஒருத்தி ஆடை அணிந்து இருந்தாளா  இல்லையா என்றே கண்டு பிடிக்கமுடியவில்லை.  7ம் அறிவு டிக்கட் காசு மிச்சம்!! புத்தகம் இரண்டு பக்கம் கூட நகரவில்லை சீக்கிரமாக ஒரு நல்ல கறுப்புக்கண்ணாடி வாங்க வேண்டும்!!! 

 

 

 

சவால் சிறுகதை

“சட்டென நனைந்தது இரத்தம்” அறுபது வாக்குகள் வாங்கி இருக்கிறது. சந்தோஷமும் நன்றியும். பலர் வாசிக்கிறார்கள். கதை கொஞ்சம் complicated என்ற கருத்து நிலவுகிறது. அது ஒரு திரில்லர் கிரைம், சிறுகதை வேறு. ஆகவே தான் அந்த non-linear அமைப்பு. யாழ்ப்பாண மொழிவழக்கு இந்தியர்களுக்கு புரியாது என்று ரமணன் சொன்னான். நான் இயலுமானவரை புரியக்கூடிய வார்த்தைகளையே பாவித்திருக்கிறேன் என்று நினைக்கிறேன். Christopher Nolan இன் தீவிர ரசிகன். ஒரு த்ரில்லர் வாசகனை சிந்திக்க தூண்டவேண்டும் என்பதே அவரின் எண்ணம். எல்லாவற்றையும் எழுத்தாளர் அவிழ்க்கவும் கூடாது. பார்ப்போம், நம்பிக்கை தானே வாழ்க்கை. அடடே அப்பா வருகிறேன் வாசித்துவிட்டீர்களா?


இந்த வார வியாழ மாற்றம் உங்களுக்கு எப்படி? அடுத்த வாரம் தொடர்வோமா?

தேடித்தேடி தேய்ந்தேனே!!


சிறுவயதில் உங்களுக்கு அந்த பெண்ணை பிடித்திருக்கும்! ஒரு பதினைந்து வயது என்று வையுங்கள். அப்போது அவளுக்கு தெரியாமலேயே அவளை நோட்டம் விட்டிருப்பீர்கள். கணக்கே எடுத்திருக்கமாட்டாள்.  அவள் போகும் இடம் எல்லாம் பின் தொடர்ந்து, அத்தனை இளையராஜா டூயட்களையும் அவளோடு வயற்காட்டிலோ இல்லை இண்டோர் செட்டிலோ பாடிப்பார்த்து இருப்பீர்கள். ஒரு மழைக்கால இரவில் “புதுவெள்ளை மழை” பாட்டை ரேடியோவில் போட்டுவிட்டு அவளின் கண்கள் இரண்டையும் உங்கள் கைகளால் பொத்திக்கொண்டு கூட்டிச்சென்று காஷ்மீர் பனிமலைகள் காட்டி இருப்பீர்கள். அவளும் சொக்கிப்போய் சுத்தி சுத்தி பார்க்க, கண்ணாடி சில்லுகளாய் இசை சிதறி கிறங்கடிக்கும். ஆனால் நிஜத்தில் அவள் நேரில் வந்தால் அப்போது தான் பனைமரத்தில் எத்தனை நொங்குகள் இருக்கின்றன என்று எண்ணியிருப்பீர்கள். சரி, காலம் ஓடிவிட்டது, இப்போது வளர்ந்து பெரியவன் ஆகி விட்டீர்கள். ஒருநாள் திடீரென்று அவள் எதிரே வந்து நிற்கிறாள். ஒரு உறவுக்கார திருமணம் என்று வைய்யுங்களேன்! நீங்கள் நினைத்த கலரிலேயே சேலை, நீங்கள் நினைத்ததுபோலவே சிரிக்கிறாள். உங்களை ஞாபகம் வைத்து பேசுகிறாள்.  ரோஜா மதுபாலா போல “சிறு பறவை நீயானால் உன் வானம் நானே” என்று பாடுகிறாள். எப்படி இருக்கும் உங்களுக்கு? 


அப்படி இருந்தது இந்த பாடல்களை நான் தேடிக்கண்டுபிடிக்கும் போது.  ஆம்  இந்தவாரம் “உ.. ஊ.. ம ப த ப மா” வில் அதிகம் கேட்கப்படாத, கேட்கக்கிடைக்காத ஆனால் கேட்கும் போது “ச்சே இவ்வளவு காலமும் மிஸ் பண்ணிட்டோமே” என்று எண்ணத்தூண்டும் சில பாடல்களை பகிரப்போகிறேன். இப்படியான பாடல்கள் ஆளாளுக்கு மாறுபடும், இளமைக்கால காதலிகள் போல. ஆனால் பலர் ஒருவரை காதலிப்பது ஒன்றும் புதிதில்லையே. நீங்களும் இந்த பாடல்களை காதலித்து இருப்பீர்கள். நிச்சயம்! சரி பாடல்களுக்கு போவோம்.


இந்த பாடல், ஆண்டுக்கணக்கில் நான் தேடிய பாடல். அப்போது எல்லாம் tape recorder தான். இந்த பாடலை நான் தேடாத இடம் இல்லை. எந்த கடையிலும் இல்லை. சில வருடங்களுக்கு முன்னர் தான் யாரோ ஒரு புண்ணியவான் இன்டர்நெட்டில் ஏத்தி இருந்தான். மெய்யாலுமே அவள் வந்து நின்ற மாதிரி இருந்தது. இப்போது youtube இலும் வந்து விட்டது. நல்ல பாடல் எப்போதும் கேட்கப்படுகிறது தான். அகத்தியன் இசை என்று நினைக்கிறேன். உன்னி, மனோ, சித்ரா, சுஜாதா என்று ஒரு கூட்டமே பாடியிருப்பார்கள். A terrific song!வெள்ளி கொலுசு ஜதி போடுதே!

இதை youtube இல் ஏத்தியவன் உண்மையிலேயே ஒரு பக்கா ரசிகனாக இருக்கவேண்டும். “பொன் மோதிரம்” என்ற சொல் வரும் இடத்தில் ஒரு மோதிரத்தின் படமே போட்டிருப்பான்!


அடுத்த பாடல், தேவாவின் இசையில் வந்த கோல்மால் திரைப்பட பாடல். ஓரளவுக்கு பிரபலமான பாடல் தான். ஆனால் சிலவருடங்களுக்கு முன்னர் தேடும்போது கிடைக்கவில்லை. இன்னமும் யூடுயூபில் கூட இல்லை. இப்போது சேர்த்துவிட்டேன். சரணத்தில் எல்லாம் ஹரிகரனின் குரல் குழையும் பாருங்கள். பிடித்தால் நிச்சயம் எழுதுங்கள். இசையை கேட்பதும் அதைப்பற்றி பேசுவதும் எப்போதும் சுகமே.


படங்கள் : சயந்தன்Again தேவா. “அன்பே டயானா” திரைப்படம். தொண்ணூறுகளில் தேவா இருந்த போர்மில் துக்கடா படங்களுக்கெல்லாம் நல்ல இசை வழங்கிக்கொண்டு இருந்த நேரம். இந்த பாடலை எல்லாம் திரையில் பார்த்தால் சகிக்கவேமுடியாது. ஆனால் பாடலின் இசை வேறு எந்த நல்ல பாடலுக்கும் சற்றேனும் குறைந்ததில்லை. “நேற்று வரையிலும் வெறும் வண்ணமாக வாழ்ந்தேன், இன்று காதலால் நான் வானவில்லாய் ஆனேன்” என்ற வரியில் ஹரிகரன் சங்கதி சும்மா சந்திலே சிந்து பாடும். என்ன ஒரு பாடல்! இரவோடு இரவாய் யூடியுபில் எத்திவிட்டேன். கேளுங்கள், கேட்டுவிட்டுச்சொல்லுங்கள். 


படங்கள் : சயந்தன்


அடுத்த பாடல், yet again தேவா. இன்னொரு அல்வா படம். மாப்பிள்ளை கவுண்டர் என்று நினைக்கிறேன். ஆனால் தேவா எந்த பெண்ணைக கண்டாலும் காதலித்துக்கொண்டிருந்த பருவம் அது. கொஞ்சம் “ஆலோலங்கிளி தோப்பிலே” என்ற ராஜா பாடலின் சாயல் சரணத்தில் இருந்தாலும், தேவாவுக்கு இது ஒன்றும் புதுசு இல்லையே!
விஸ்வதுளசி.  சிலவருடங்களுக்கும் முன்னர் வந்த படம். இரண்டு தலைவர்கள் செந்தமிழ்பாட்டுக்குப்பின்னர் இணைந்தது என்று நினைக்கிறேன்.  இயக்குனரை கட்டி வைத்து அடிக்கவேண்டும். அழகான மெட்டுகள் உள்ள பாடல்களை எல்லாம் சின்ன சின்னதாக வெட்டி குதறியிருப்பார். ஒரு பெண் இயக்குனர் என்று நினைக்கிறேன். 

இந்த பாடலின் இறுதியில் வரும் வீணையை பாருங்கள். எப்போதாவது கேட்ட ஞாபகம் இருக்கிறதா? அதே தான். “பூ முடித்து போட்டு வைத்த வட்ட நிலா, புன்னகையில் பாட்டெழுதும் வண்ணபுறா” வில் வரும் சில arrangements தான். தலைவர் பழைய போர்மில் இருக்கிறார் என்பதற்கு அந்த இடமே நல்ல சாட்சி!

எங்கு பிறந்தது?


இந்த பாடல்களையெல்லாம் கேட்கும்போது இந்த ஒரு வரி அடிக்கடி ஞாபகம் வருகிறது.
“கேட்காத கீதம், அதுதானே அழகு கலைஞனின் மனம் அறியும்” 

என்று ஒரு இளையராஜா பாடல் அண்மையில் வந்தது.  சரணத்தில் வரும் வரிகள் அவை. அந்த பாடல் அண்மையில் வந்த ராஜாவின் பாடல்களுக்குள் ஒரு milestone என்று சொல்லலாம். ராஜா ரசிகர்களுக்கு நிச்சயம் தெரிந்திருக்கும். கண்டுபிடியுங்கள்! கருத்திடுங்கள். கலந்துரையாடுவோம்! 


என்ன? இந்தவார ♫♫ உ.. ஊ.. ம ப த ப மா ♪♪ பிடித்திருக்கிறதா? பிடித்திருந்தால் வாக்களிக்க மறக்காதீர்கள். மீண்டும் அடுத்த செவ்வாயில் வேறு ஒரு மியூசிக்கல் collection உடன் சந்திப்போம்.

தீபாவளி வாழ்த்துக்கள் நண்பர்களே!

அப்பா வருகிறார்!


Picture 016குமரனின் அப்பா இன்று தான் வருகிறார்.  காலையிலிருந்தே அவன் படலைக்கும் வீட்டிற்குமாய் ஓடிக்கொண்டு இருந்தான். இருப்புக்கொள்ளவில்லை அவனுக்கு. இரவு முழுதும் தூக்கம் இன்றி உழன்றுவிட்டு அடிக்கடி எழும்பி நேரம் பார்த்து பார்த்து வெறுத்துப்போனான். அடடே குமரனைப்பற்றி சொல்லவேயில்லை. எப்படித்தொடங்குவது? நான் தான் குமரன் என்று சொன்னால் வேலை இலகுவாக முடிந்துவிடும். ஆனால் அதில் ஒரு சங்கடம் இருக்கிறது. இதையெல்லாம் ஏன் எழுதுகிறாய் என்பார்கள். அட மறந்துவிட்டேன், சத்தியமாக இந்த குமரன் நான் இல்லை.  எங்கள் வீட்டில் அப்போது படலை இருக்கவில்லை. இரும்பு கேட் தான், ஓஹோ படலையை கேட் என்று மாற்ற அதிகம் நேரம் பிடிக்காது என்ன? ம்ம்ஹூம் ஏன் வீண் வம்பு, அது படலை தான். நான் குமரனும் இல்லை!


Bicycle-is-a-common-mode-of-transport-for-women-children-and-men-in-Jaffna.-Bicycle-plays-an-important-role-in-the-peoples-lives-in-Jaffna.-People-depend-so-much-on-bicycle-to-travel-short-and-long-distance.
குமரன், வரும் ஆவணிக்கு அவனுக்கு பதின்மூன்று வயது ஆகிறது. எங்கே வசிக்கிறானா? இதெல்லாம் இந்த கதைக்கு தேவையில்லை, இருந்தாலும் சொல்கிறேன். எப்போதாவது யாழ்ப்பாணம் வந்திருக்கிறீர்களா? வந்தால் அங்கே  பரமேஸ்வராச்சந்தி என்று ஒரு பிரபல முச்சந்தி இருக்கிறது, ஆம் அதே தான், பல்கலைக்கழகத்துக்கு அண்மையில், நிறைய பையன்கள் கூடும் சந்தி. மாணவிகள் எல்லாம் அந்த வழியால் தினம் சைக்கிளில் செல்வார்கள். சோளககாற்று சீசன் என்றால் போதும். பெண்கள்  தங்கள் பாவாடை காற்றில் பறக்காமல் தடுக்க ஒரு கையால் மூடிக்கொண்டு மறுகையால் ஹான்டிலை பிடித்துகொண்டு போகும் அழகு இருக்கிறதே. அத்தனை பையன்களும் காற்று அடங்கிய பின்னர் தான் வீடு போவார்கள். ஆனால் இப்போதெல்லாம் முன்னே மாதிரி இல்லை.  அவ்வப்போது புலிகள் வந்து பிரச்சாரம் செய்வதால் பையன்கள் குச்சு வீதிகளிலேயே நின்று கதைப்பதுண்டு. அட, ஏதோ சொல்ல வந்து எங்கேயோ போய்விட்டேன். இந்த சந்தியால் திரும்பி ஒரு நூறு மீட்டர் உள்ளே வாருங்கள். இடக்கைப்பக்கம் ஒரு பெயர்ப்பலகை இருக்கும். "சந்திரசேகரம், உத்தரவு பெற்ற நில அளவையாளர்", கண்டு பிடித்துவிட்டீர்களா?  அந்த வீடு தான் குமரனின் வீடு. சந்திரசேகரம் யார் என்றால் என் அப்பா என்று சொல்லவேண்டும். ஆனால் நான் குமரன் இல்லை என்பதால் அவரின் பெயரை சேகரச்சந்திரன் என்று மாற்றி வாசியுங்கள். அவர் தான குமரனின் அப்பா.
Picture 014
குமரனின் அப்பா பணிபுரிவது நொச்சியாகம என்னும் அனுராதபுர மாவட்டத்தில் உள்ள ஒரு குக்கிராமத்தில், சிங்களப்பிரதேசம். மகாவலி கங்கை அபிவிருத்தி திட்டத்தில் வேலை செய்கிறார். வருடம் ஒருமுறை யாழ்ப்பாணம் வருவார். அவர் தான் சில மாதங்களுக்கு முன்னர் இந்த முறை வருடப்பிறப்புக்கு வீட்டிற்கு வருவதாக தந்தி அனுப்பியிருந்தார். பொறுங்கள், தந்தி என்றால் தபால் தந்தி எல்லாம் கிடையாது. இந்திய இராணுவம் திரும்பிச்சென்ற கையோடு வடக்கு கிழக்கு புலிகள் ஆதிக்கத்தில் வந்தது இல்லையா. அதிலிருந்து மின்சாரம் தந்தி தொலைபேசி எல்லாம் விஞ்ஞானப்புத்தகத்தில் மட்டுமே. குமரனின் அப்பா எப்பாடுபட்டாவது ஒவ்வொரு மாத சம்பளத்தையும் ஒரு கடிதத்தையும் புலிகளின் கட்டுப்பாட்டு பகுதிக்குள் வரும் வியாபாரிகள் மூலம் கொடுத்துவிடுவார். அப்படி வரும் சம்பளத்தில் தான் வீட்டு செலவை எல்லாம் அம்மா சமாளித்துக்கொண்டு வந்தார். 


அதற்கும் ஆப்பு வந்தது. வவுனியா எல்லையில் சண்டை தொடங்கிவிட்டது. சண்டை என்றால் சும்மா கிளைமோரில் பத்து பேர் பலி கதை கிடையாது. ஊடறுப்பு தாக்குதல். கரும்புலியும் பாய்ந்து கருணா குரூப்பும் இறங்க, அறுவாங்கள் கொஞ்ச நாட்களில் எல்லையை மூடி விட்டார்கள். ஒரு நாள் இல்லை, இரு நாள் இல்லை, கடந்த ஆறு மாதங்களாக பாதை மூடப்பட்டுவிட்டது. வீட்டுச்செலவு கையை மீறிக்கொண்டு போனது. மண்ணெண்ணெய் முன்னூறு ரூபாய். சோப்பு நூறு ரூபாய், சீனி எல்லாம் காணவே கிடைக்காது, பனங்கட்டி தான், சுத்தமான கலப்படம் இல்லாத பனங்கட்டி, அது தான் சீனி நாட்டிலேயே இல்லையே, என்னத்த கலக்கிறது? அம்மாவின் நகை எல்லாம் ஒவ்வொன்றாக வட்டிக்கடைக்கு போய்க்கொண்டு இருக்க,  கோழிக்கூட்டில் இருந்த சேவல் முதற்தொட்டு பேடுகள் வரை எல்லாம் ஒன்றன் பின் ஒன்றாக சட்டிக்குள் போனது. விறகு கூட நெருப்பு விலை. ஒரு தூக்கு ஆயிரம் ரூபாய். கட்டுப்படியாகாது. கோழிக்கூடு உடைக்கப்பட்டு கூரை கதவு மரங்கள் எல்லாம் விறகு ஆகிக்கொண்டு இருந்தன. அட இதெல்லாம் சந்தோசமான விடயம் தான். யாருக்கு கிடைக்கும் வாரா வாரம் கோழி இறைச்சிக்கறியும் சோறும்? ஆனால் மாட்டக்கடிச்சு ஆட்டக்கடிச்சு கடைசியில் குமரனின் மடியிலும் கை வைத்துவிட்டார்கள். அது என்னவா?

குமரனிடமும் ஒரு மோதிரம் இருந்தது. ஒரு குட்டி மோதிரம். பக்கத்து தெரு தாரணி, சைக்கிளில் பாடசாலை செல்லும்போது தானும் பின்னாலே சென்று தன்னுடைய சைக்கிளின் ஹான்டிலை அந்த மோதிரத்தால் தட்டுவான். டிக் டிக் என்றால் அவள் ஒரு பக்க ஜடையை எடுத்து பின்னாலே போடுவாள். அடுத்த டிக் டிக் டிக் சத்தத்தில் ரெண்டாவது ஜடையும் பின்னால் விழும். இப்படி முன்னாலே பின்னாலே என்று பாடசாலை வரை ஆதி தாளம் தான். தப்பாது. ஒரு முறை அதுவும் தப்பியது. ஏன் என்று அடுத்த கதையில் பார்ப்போம். இப்போது இந்த மோதிரத்துக்கும் ஆப்பு வைத்துவிட்டார்கள். அந்த நேரம் தான் புலிகள் எல்லா குடும்பங்களிலும் இரண்டு பவுண் தமிழீழ நிதி வாங்கிக்கொண்டிருந்த நேரம். எல்லா நகையும் வட்டிக்கடைக்கு போயிருக்க அம்மாவிடம் ஒரு சோடி காப்பு மட்டும் தான் எஞ்சி இருந்தது.  அது வேறு ஆறு மஞ்சாடி குறைவு என்பதால் காதலித்துக்கொண்டிருந்த குமரனின் மோதிரம் வீரனாய் தேசம் மீட்கப்போய்விட்டது!Picture 001குமரன் ஒரு பாவம். அன்றைக்கு அந்த மோதிரம் விரலால் வரமாட்டேன் என்றது. சோப்பு போட்டு கழட்டலாம் என்றால்  சோப்பின் விலை அதை விட அதிகம். இழுத்து எடுக்கும் போது கத்து கத்து என்று கத்தினான். சோனியாவை விற்ற போது கூட இப்படி கத்தவில்லை அவன். ஐயையோ இப்போது சோனியா யார் என்று சொல்லவேண்டும்.  சோனியா தான் அவன் வளர்த்த ஆடு. கறவை ஆடு, நல்ல உயரம். ராஜீவ் காந்தி இலங்கை வந்த போது அவனுக்கு சோனியாவைப் பிடித்துவிட்டது. களையான முகம், வெள்ளைக்காரி வேறு, எப்படியும் கணவனிடம் சொல்லி சண்டையை நிறுத்திவிடுவார் என்று குமரன் நினைத்தான். அதனால் ஸ்ரீமா என்று வைக்க இருந்த பேரை சோனியா என்று மாற்றினான். ஒவ்வொருநாளும் தவறாமல் குழை போட்டான்.  பாடசாலை முடிந்து வீடு வந்து செய்யும் முதல்வேலை அது தான், ஒரு நீண்ட கம்பி, அதைத்தூக்கிக்கொண்டு அயல் அட்டமெல்லாம் செல்லவேண்டும். நன்றாக பழுத்த ஆனால் காயாத பலா இலைகளை அந்த கம்பியில் குத்தவேண்டும். சிலவேளை முள் முருக்கமிலை, அது சோனியாவுக்கு மிகவும் பிடித்ததும் கூட. ஆனால் காலம் போக போக, ராஜீவ் இறந்ததோ என்னவோ, சோனியா பால் தருவதில் பாராமுகம் காட்டியது. அம்மாவிடமும் காசு முடை, இறைச்சிக்கு விற்றுவிட்டார். ஆயிரம் ரூபாய் பெறுமதி. குமரனுக்கு தாங்கவில்லை. என்ன இருந்தாலும் அவன் வளர்த்த ஆடு. இப்படி போனது மனம் கேட்கவில்லை. அழுது ஆர்ப்பாட்டம் செய்ததால் அம்மா போனால் போகட்டும் என்று ஆறு மஞ்சாடியில் மோதிரம் செய்து கொடுத்தாள்.  அவனுக்கும் நல்ல சந்தோசம். இப்போது எல்லாம் குழை பொறுக்கும் வேலையும் இல்லை தானே. தாரணி வேறு ஜடை போடுகிறாள்.


கதை அங்கே இங்கே ஓடுகிறது என்றால் சொல்லுங்கள். நான் ஒரு நாளும் நிலையாய் ஒரு இடத்தில் நின்றதில்லை. பாதை மூடி விட்டார்கள் என்று சொன்னேன் இல்லையா? ஆனால் சரக்கு கப்பல் ஓடிக்கொண்டுதான் இருந்தது. இரண்டு மாதத்துக்கு ஒருமுறை லங்காமுடித்தா கப்பல் கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் வரும். அத்தனை வடக்கு மக்களுக்கும் கொஞ்சூண்டு உணவுப்பொருட்கள் அனுப்புவார்கள். அதுவும் அனுப்பாவிடில் யாழ்ப்பாணம் தனி நாடு ஆகிவிடுமாம். என்ன இழவோ, இப்படி வரும் கப்பலில் தான் அவசர பயணிகளும் மா மற்றும் சீனி மூட்டைகளோடு மூட்டைகளாக உட்கார்ந்து வருவார்கள். அப்படி மூன்று மாதத்திற்கு முன்னர் தும்மிக்கொண்டு வந்தவர் தான் சாம்பசிவம் அங்கிள். குமரனின் அப்பா காசு கொடுத்து விட்ட நபர். அவர் வீட்டிற்கு வந்த போது ஒரு லேமொன்பப் பிஸ்கட் கொண்டுவந்தார். குமரனின் அப்பா சித்தரைக்கப்பலில் வரும் தகவலையும் அவர் தான் சொன்னார். உடனடியாக திரும்புவதாகவும், கடிதம் ஏதும் கொடுக்கவேண்டும் என்றால் தரும்படியும் சொல்ல, அக்கா அண்ணா என குமரன் வீட்டில் எல்லோரும் ஆளுக்கொரு கடிதம் எழுதினார்கள். குமரனும் ஒரு பேப்பர் எடுத்து எழுத தொடங்கிவிட்டான். அப்போதே!
“அன்புள்ள அப்பா”
நலம் நலமறிய ஆவல். நான் வகுப்பில் இம்முறை நான்காம் இடம். ஆனாலும் நீங்கள் விரும்பும் போல கணிதத்தில் தொண்ணூறு புள்ளிகள். எனக்கு தான் கையஸ்ட்..
நிற்க! மாலினி அக்காவைத் தெரியும் தானே? அக்காவின் நண்பி, அவ “மேலோடிக்கா” என்று ஒரு வாத்தியம் வச்சிருக்கிறா. சும்மா வாயால நீங்க ஊதிகொண்டு கையால பாட்டு வாசிக்கலாம். “ஒ நெஞ்சே ஒ நெஞ்சே”, பாக்கியராஜ் பாடும் பாட்டு எல்லாம் வாசிப்பா. நான் ஒருக்கா தரச்சொல்லி கேட்டன். எச்சில் பண்ணுறன் என்று தாறா இல்லை.  தான் பெரிய ஆள் எண்ட நினைப்பு!
அப்பா நீங்க வரேக்க எனக்கு ஒரு மேலோடிக்கா வாங்கி வாங்க. பிங்க் கலர். அவவின்டையும் பிங்க் கலர். நானும் ஒருக்கா அத வாசிச்சு எல்லாருக்கும் காட்டனும்.
அதோட உங்களால முடியுமேண்டா, ஒரு கிரிக்கெட் பாட்டும் மூண்டு டின் பாலும் வாங்கி வாங்க. சொல்லமறந்த்திட்டன், எனக்கு விஞ்ஞானத்துக்கு எண்பது மார்க்ஸ். நல்லா படிக்கிறன் எண்டு மாஸ்டர் சொன்னவர்.
இப்படிக்கு,
உங்கள் செல்ல மகன்,
குமரன்

1537pk_zusa_k_p1


கடித்ததை மடித்து அம்மாவிடம் கொடுத்த நாள் தொட்டு குமரன் அப்பாவை எதிர்பார்க்கத்தொடங்கிவிட்டான். இது நடந்தது இரண்டு மாதங்கள் ஆகிவிட்டன. அப்பா வரும் நாளும் வந்தது. இன்றைக்கு தான், அந்த சித்திரை மாதக்கப்பல் யாழ்ப்பாணம் வருகிறது.


Lanka-Muditha-629818காலையிலேயே குமரன் உதயன் பத்திரிகை வாங்கிபார்த்து விட்டான். கப்பல் வரும் சேதி உண்மை தான். சிலவேளை கப்பல் வருவது தடைப்படுவதும் உண்டு. இந்த கப்பலில் தான் ஆர்மியும் தங்களுடைய சாமான்கள் கொண்டுவரும். இதனால் அவ்வப்போது கடல் சண்டையும் நடக்கும். அதில் தோற்றுவிட்டால் ஆர்மி கப்பலை  தங்களின் காயப்பட்டவர்களை ஏற்றிக்கொண்டு  மீண்டும் கொழும்புக்கே திரும்பிவிடும். இதையெல்லாம் தாண்டி இந்த கப்பல் வந்து சேர்ந்தால் சந்திப்பிள்ளையாருக்கு ஐந்து ரூபாய் தருவதாய் குமரன் வாக்களித்திருக்கிறான். எப்படியும் வந்துவிடும். மதியம் இரண்டு மணி ஆகிவிட்டது. அப்பா இன்னும் வரவில்லை. அம்மா குளித்துவிட்டு தயாராக இருந்தாள். பவுடர் கொஞ்சம் போட்டிருந்தாள் போல. அக்கா தனது அறையை நன்றாக சுத்தம் செய்து வைத்திருந்தாள். அண்ணன் வெளியே எங்கேயோ நண்பர்களோடு சென்றிருந்தான். அவன் எப்போதும் இப்படித்தான். அப்பா எதிலே வருவார்  என்று குமரனுக்கு ஒரே சிந்தனை. ஓட்டோவில் வரலாம், இல்லை டாக்ஸியில் வரலாம். தெரியவில்லை. குமரனுக்கு அவசரமாக மூத்திரம் வந்தது. புலிப்பாய்ச்சலாய் டாய்லெட்டுக்கு ஓடிப்போய் இருந்துவிட்டு ஓடி வர, அக்காள் டாய்லெட்டுக்கு தண்ணீர்  ஊற்ற மறக்காதே என்று கத்தினாள். அதே வேகத்தில் திரும்பி ஓடி கிணற்றிலே ஒரு வாளி  தண்ணீர் அள்ளிகொண்டு இருக்கும்போது,

“அம்மா … அப்பா வந்திட்டார், ஓடியாங்க”

என்று அக்காள் கத்தும் சத்தம் கேட்க,  வாளியை அப்படியே கிணற்றில் போட்டுவிட்டு வாசலுக்கு ஓடினான் குமரன். அப்பா தான். சேர்ட் எல்லாம் வெளியே தள்ளிக்கொண்டு, தலையிலே ஒரு சிவப்பு தொப்பியுடன் அப்பா. உடுப்பு முழுதும் ஒரே சகதி. சைக்கிள் ஒன்றை வாங்கி அதை கப்பலிலேயே கொண்டுவந்திருக்கிறார். புது சைக்கிள் முழுதும் சேறு அப்பி இருந்தது. ஹாண்டிலின் இருபுறமும் பெரிய சைஸ் பைகள் இரண்டு. பின் காரியரில் பென்னாம் பெரிய சூட்கேஸ். மூன்று நாள் தாடியில் அப்பா சிரித்தார்.

“எப்பிடி பயணம், நல்லா களைச்சு போனீங்க போல, இங்க குமரன் காலம தொட்டு உங்கள தான் பார்த்துகொண்டு இருக்கிறான்” -

அம்மா சொல்லிவிட்டு உடனே தேனீர் தயாரிக்க குசினிக்குள் போய்விட்டாள். அப்பா சைக்கிளை சுவரில் சாய்த்து விட்டு எல்லோரையும் பார்த்துச்சிரித்தார். அக்காவின் தலையை மிருதுவாக தடவியபடியே, மூத்தவன் எங்கே என்று விசாரித்துக்கொண்டு குமரனை அப்படியே அலேக்காய் தூக்கி வைத்து இரண்டு கன்னத்திலும் முத்தம் இட்டார்.

“என்னடா இப்படி வளர்ந்திட்டாய்?  அப்பாவை காலமைல இருந்து தேடினியா செல்லம்? "

----
----
----

“மேலோடிக்கா வாங்கிட்டு வந்தியா அப்பா?” 

என்றான் குமரன் அந்த சூட்கேசையே பார்த்தபடி!


--------------------------  முற்றும் ---------------------------


பின்குறிப்பு: இது நான் ஆங்கிலத்தில் எழுதிய மேலோடிக்கா என்ற சிறுகதையின் தமிழ் வடிவம், திருத்தங்களோடு! இதிலே சில தகவல் பிழைகள் இருக்கின்றன. புனைவுக்கு எது தேவையோ அதை மட்டுமே எடுத்து கற்பனை சேர்த்து இருக்கிறேன்!என் கொல்லைப்புறத்து காதலிகள் - கம்பவாரிதி ஜெயராஜ்


“மனப்போராட்டம் நிறைந்த யதார்த்த மானிடம் பெரிதும் வெளிப்படுவது கம்பனில் …. “ என்று ஒரு பட்டிமண்டபம், 1992ம் ஆண்டு யாழ்ப்பாண கம்பன் விழாவில் நடந்தது. நல்லை ஆதீனத்தில் இடநெருக்கடியால் வெளியிலே நெரிசலில் நின்று,அப்பாவை இம்சித்து,என்னை தூக்கிவைத்து காட்டச்சொல்லி பார்த்த பட்டிமண்டபம்.


“இந்தை இப்பிறவிக்கு இரு மாந்தரை என் சிந்தையாலும் தொடேன்” 

என்று சொல்லி பின்னாலே சீதைக்கு சிதை மூட்டச்சொன்ன போது அடைந்த கோபம் ராமனில் வந்ததா இல்லை அதற்கு வக்காலத்து வாங்கிய கம்பனில் வந்ததா என்று ஞாபகம் இல்லை.


“சண்டாளி சூர்ப்பனகை தாடகை போல் வடிவு
கொண்டாளைப் பெண்ணென்று கொண்டாயே தொண்டர்
செருப்படி தான் செல்லாவுன் செல்வமென்ன செல்வம்
நெருப்பிலே வீழ்ந்திடுதல் நேர்” 


என்று அவர் ஔவையை அறிமுகம் செய்தபோது அதை மீண்டும் மனப்பாடம் செய்யும் தேவை இருக்கவில்லை.

ஈழத்தில் தொண்ணூறுகளில் தனக்கென ஒரு தலைமுறை இலக்கிய ஆர்வலர்களை உருவாக்கிய கம்பவாரிதி இ. ஜெயராஜ் தான் இன்றைய கொல்லைப்புறத்து காதலி. என்னுடைய முதல் காதலியும் கூட.
ஜெயராஜ் என்றால் யார் என்பதை தொண்ணூறுகளின் ஆரம்ப காலத்தில் சிறுவர்களாகவோ இல்லை இளைஞர்களாகவோ இருந்தவர்களை கேளுங்கள். கதை கதையாய் சொல்வார்கள்.  அவர் அப்போது யாழ்ப்பாணத்தில் ஒரு வித இலக்கிய எழுச்சியை உருவாக்கிக் கொண்டு இருந்தவர்.  போர் முரசும், மாவீரர் தினங்களும், சோக கீதங்களும், வெற்றி முழக்கங்களும் கொலோச்சிக்கொண்டிருந்த காலத்தில், சோழ நாட்டில் இலக்கியமும் இணைக்கு இணையாய் தளைத்தது என்று மார் தட்ட ஜெயராஜ் தான் முழுமுதற் காரணம். எங்கள் வீட்டு முற்றத்தில் மூன்று கதிரைகளை அங்கொன்றும் இங்கொன்றுமாய் வைத்துவிட்டு நானே நடுவர் நானே பேச்சாளர் என்று ஒரு தனி பட்டிமண்டபமே நடத்துவேன். வீட்டு நாய்க்குட்டி ஜிம்மியும் என்னுடைய செல்ல ஆடும் அசை போட்டுக்கொண்டே முன்னால் இருந்து பார்த்துகொண்டிருக்கும். தீர்ப்பு சொல்லும்போது ஜெயராஜ் போலவே குரலை குறித்த இடங்களில் குழையவிடுவேன். அவரைப்போலவே ஆங்காங்கே இடைவெளி விட்டு, குரலை உடையவிட்டு, உயர்த்தி தாழ்த்தி, அப்பப்பா தமிழை காதலிக்க வைத்தவர். அவர் கம்பனை காதலிக்க நாங்கள் அவரை காதலிக்க, எம்மை பலர் காதலித்தார்கள் என்றால், நண்பன் கஜன் இதற்கு மேல் வேண்டாமே என்பான்!


“ஆவியை ஜனகன் பெற்ற அன்னத்தை அமுதில் வந்த தேவியை பிரிந்ததாலே திகைத்தனை போலும் செய்கை” 


இந்த பாடலில் "திகைத்தனை" என்ற இடத்தை அவர் சொல்லும் போது குரல் உடையும். ராமனில் கோபம் வரும். பேடி போல அம்பு எய்தாலும் அது பெண்ணின் மீதான காதலால் தான் என்று சொல்லும் வாலியைப் பார்க்க துரோகி சுக்ரீவனை கல்லால் அடிக்க தோன்றும். தோன்ற வைத்து விட்டு பின்னர்

"தருமம் இன்னதெனும் தகைத்தன்மையும்
இருமையும், தெரிந்து எண்ணலை, எண்ணினால்
அருமை உம்பிதன் ஆருயிர்த் தேவியைப்
பெருமை நீங்கினை எய்தப் பெறுதியோ"

என்று இராமன் சொல்வதைச்சொல்லி வாலிக்கு இராமனின் முன்னே நின்று  போரிடும் தகுதியே கிடையாது என்ற ரீதியில் பதில் சொல்வார். அட அதுவும் சரிதானே என்று நம்ப வைப்பார். நாமும் நம்பினோம்.

ஜெயராஜ் எப்படி இந்த எழுச்சியை ஒரு முக்கிய போராட்ட காலத்தில் நிகழ்த்தினார் என்பதை இப்போது யோசித்தாலும் ஆச்சரியம். புலிகளின் ஆதிக்கத்தில் யாழ்ப்பாணம் இருந்த காலம், மின்சாரம் இல்லை, டிவி இல்லை என்று பல இல்லைகள். ஒருமுறை பிரசங்கம் செய்துகொண்டு இருக்கும் போது குண்டு விமானங்கள் வந்துவிட்டன. மக்கள் கூட்டமோ அலை மோதுகிறது. விளக்குகளை அணைத்துவிட்டார்கள். எல்லோரும் அமைதியாக இருந்து விமானங்கள் சென்றபின்னர் பிரசங்கம் மீண்டும் தொடங்கியது. மக்கள் ஆடாமல் அசையாமல் அப்படியே இருந்து முடியும் வரை கேட்டனர். அது தான் ஜெயராஜ். அது தான் எம் மக்களும் கூட!பாடசாலை, வீடு, தனியார் கல்வி நிறுவனங்கள், அவ்வப்போது கிரிக்கெட், இது தான் எமது வாழ்க்கை. யாழ்ப்பாணம் ஒரு வித மழைநீர் தேக்கம் போல இருந்த காலம். வேறு நதிகள் ஒன்றும் இணையாத நேரம், அங்கே மழை மட்டுமே, அதனால் எந்த நீர் எந்த நதியில் வருகிறது என்று வடிகட்டவேண்டிய தேவை புலிகளுக்கும் இருக்கவில்லை. மக்களுக்கும் இருக்கவில்லை. மக்கள் ஒன்று சேர்வது இரண்டு காரியங்களில், ஒன்று போராட்ட நிகழ்வுகள் மற்றயது வழிபாட்டு நிகழ்வுகள். ஆரம்பத்தில் கம்யுனிசம் பேசிய புலிகள் அதில் பின்னர் பாராமுகம் காட்டியது ஒரு நல்ல இலக்கிய சமய சூழலுக்கு வழிவிட்டது எனலாம். அதனால் கம்பனும், ஜெயராஜும் சாதி சமயம் தாண்டி இலக்கியத்தின் மூலம் மக்களை சென்றடைந்து கொண்டு இருந்தனர் எனலாம். 


ஜெயராஜ் இந்த களத்தை நன்றாகவே கையாண்டார். கம்பன் கழகம் என்ற குழு தவிர அவரின் தனி பிரசங்கங்கள் பல கோவில் திருவிழாக்களின் crowd pullers ஆகின. அதற்கு ஒரு முக்கிய காரணம் ஜெயராஜின் நிறுவனப்படுத்தப்பட்ட இலக்கிய சேவை. பலர் இன்றும் கருதுவது தமிழும் தமிழ் சார்ந்த சேவையும் இலாபநோக்கமின்றி செய்யப்படவேண்டும் என்று.  Go to hell! தமிழ் ஒன்றும் எவரினுடைய charity சேவையையும் எதிர்பார்த்து நின்றதில்லை, நிற்கப்போவதும் இல்லை. அந்த காலத்தில் ஜெயராஜை அதிகம் விமர்சித்த, குறிப்பாக யாழ்ப்பாண பல்கலைக்கழக சமூகத்தினர் தாங்கள் என்ன சமூகத்துக்கு செய்தார்கள் என்பதை நினைத்ததில்லை. நம் துறையில் நம்மை விட ஒருவன் பிரகாசிக்கும் போது, அதுவும் நம்மை போல பட்டம் எதுவும் பெறாதவன், கசக்கும் தான். எனக்கென்னவோ செங்கை ஆழியானும் ஜெயராஜும் ஈழத்துக்கு செய்த சேவை சிவத்தம்பியின் சேவைக்கு கொஞ்சமும் குறைவானது இல்லை என்றே சொல்வேன். 


ஜெயராஜ் ஒரு பிரசங்கம் என்றால் அந்த காலத்திலேயே ருபாய் ஐயாயிரம் வாங்குவாராம். இப்போது புரிகிறது அது ஏன் என்று. பணம் கொடுக்கும் போது தான் அதை ஒழுங்குசெய்பவர்களும் அந்த நிகழ்வு வெற்றிபெற உழைக்கவேண்டியவராகின்றனர். பணம் கொடுத்து வாங்கும் பொருளுக்கு இருக்கும் மதிப்பை நாம் இலவசத்துக்கு கொடுப்பதில்லை.தமிழ் இலக்கியத்தை நிறுவனப்படுத்துவதன் மூலம் இந்த நிகழ்ச்சி பலரை சென்றடைகிறது. பல இளைஞர்களை தமிழறிய செய்கிறது. இது தான் ஒரே வழி சரியான வழி என்பது இல்லை. ஆனால் இது ஒன்றும் தவறான வழியும் கிடையாது. கிழக்கு இந்திய கம்பனி இதை அந்த காலத்திலேயே ஆங்கிலத்துக்கும் கிறிஸ்தவத்திற்கும் செய்துவிட்டது.2000ம் ஆண்டு காலப்பகுதி. கொழும்பு என்பதால் மழைநீர் தேக்கத்தில் பல நதிகளும், தொழிற்சாலை கழிவுகளும் இப்போது சேரத்தொடங்கியிருந்தன. வடிகட்டிகள் அங்கே இல்லாததால் நீர் குடிக்கும் அருகதையை அந்த தேக்கமும் இழக்கத்தொடங்கி இருந்தது. இப்போது ஜெயராஜ் பற்றிய விமர்சனம் மீண்டும் தலை தூக்கிவிட்டது. நம்மவருக்கு ஒரு கருத்து இருக்கிறது. எந்த துறையினரும் அரசியலில் நாம் விரும்பும் கருத்தை எடுத்து ஆதரிக்கவேண்டும் என்பது. இலக்கியவாதிக்கும் அரசியலுக்கும் என்ன தொடர்பு? அவர் ஏன் அரசியலில் கருத்து சொல்லவேண்டும்? என்றெல்லாம் யோசிப்பதில்லை. அசின் இலங்கைக்கு போனதால் அவரை தடை செய்யவேண்டும் என்று ஒரு நண்பன் facebook இல் status போட்டிருப்பான். அவன் இருப்பது கொழும்பில், வேலை செய்வது சிங்களவர் கம்பனியில். இது தான் நாம்.  ஏ ஆர் ரகுமான் ஆஸ்கார் வாங்கும் போது ஈழத்தமிழருக்கு குரல் கொடுக்கவில்லை என்று புலம்பவில்லையா? ஆனால் தேர்தல் நடந்தால் அறுபது வீதம் தான் வாக்களிப்பு. என்னத்த சொல்ல?

இது போதும் எமக்கு இவரை துரோகி என்று சொல்ல!


ஜெயராஜின் ஒருமுறை இந்தியாவில் பேசிய பேச்சு


நானும் தமிழன்தான்... ஆனால் அயல்நாட்டுக்காரன். நான் சுதந்திரமானவனா?ஒருவன், மற்றொருவரை சுதந்திரமாக நடமாடவிடும்போதுதான், சுதந்திரமாகப் பேச, செயல்பட விடுவதுதான் உண்மையான சுதந்திரம். அந்த சுதந்திரமில்லாத நாட்டின் குடிமகன் நான். ஆனாலும், என் எல்லையை உணர்ந்து, உங்கள் சுதந்திரத்தை வாழ்த்துகிறேன்.
ஒருவன் கோடிக் கோடியாகச் சம்பாதிக்கலாம், வெற்றி பெறலாம். ஆனால் அறமில்லாத வெற்றி தூக்கத்தைத் தராது.அறமாக வாழ்ந்தால் சொர்க்கத்துக்கு போகலாம். ஆனால், சொர்க்கத்துக்கு போனவர்கள் யார் யார் என்று யாருக்கு தெரியும்.... காந்தி, அண்ணா, காமராஜர், எம்.ஜி.ஆர். என்று நாமாகச் சொல்லலாம். ஆனால் பார்த்தவர்கள் யார்?" 

 எனக்கென்னவோ ஜெயராஜின் அந்த நெருப்பு அப்படியே தான் இருக்கிறது. இந்தியாவில் அவரை கொண்டாடுகிறார்கள். ஈழத்தமிழருக்கு தன்னளவில் என்ன செய்ய முடியுமோ அதை செய்கிறார். அதே சமயம் நாங்களும் ஓடிக்கொண்டு இருக்கிறோம் என்பது தான் உண்மை. பதிமூன்று வயதில் எனக்கு அவரை மட்டும் தான் தெரியும். இப்போது ஜக்கி முதல் ஓஷோ வரை, சிவத்தம்பி முதல் டெர்ரி பிரச்செட் வரை, ஜெயமோகன் சொல்வது போல, பாலகுமாரனை வாசித்து பின் அதை தாண்டி வா என்பது போல, தாண்டி எங்கே போனோம் என்று தெரியவில்லை தாண்டிவிட்டோம் என்பது மட்டும் வெளிச்சம். ஆனால் பதினொரு வயது பாடசாலை செல்லும் சிறுவனுக்கு இன்னமும் ஜெயராஜ் தேவை என்றே நினைக்கிறேன்.இப்போதெல்லாம் யோசித்தால் ஜெயராஜின் கருத்துகளில் பல இடங்களில் மாறுபடுகிறேன். வாலி தான் பிறன் மனை நோக்கினான். இந்த ராமன் தன் மனையை சந்தேகித்தான். முன்னையதை விட பின்னையது இன்னும் அசிங்கம். மற்றவன் புறம் சொல்லுவான் என்று நீ அப்படி செய்தால் புறம் சொல்பவனை கணக்கில் எடு என்று ஆகிறதே. இருக்கட்டும், அது கம்பன் தானே. எல்லாமே சரியாக சொல்ல அவன் என்ன கடவுளா? அட கடவுளாய் இருந்தால் மட்டும் சரியாக சொல்லிவிடுவானா என்ன?


ஒருமுறை நான் பேச இருந்த பட்டிமண்டபம் ஒன்றுக்கு ஜெயராஜ் நடுவராக வருவதாக இருந்தது. வரவில்லை. முதல் காதலி! ஒருதலைக்காதல், இப்போது இது ஒன்றும் புதுசு இல்லை! ஜெயராஜ் நீங்கள் என்றாவது ஒருநாள் இதை வாசிக்க முடிந்தால்,


கண்ணொடு கண் இணை கவ்வி ஒன்றை ஒன்று
உண்ணவும் நிலைபெறாது உணர்வும் ஒன்றிட
....
....
.... 
அண்ணல் நான் இல்லை ஆனாலும் அன்று தொட்டு நோக்குகிறேன்!
அவள் நீ ஜெயராஜ் எப்போது எனை நோக்குவாயோ?

---- அடுத்த ஞாயிறு எந்த காதலி? காத்திருங்கள்! ---


குவா குவா ஹைக்குவா!!
              பாடசாலை எதிரே
           படையினர் காவலரண்,
           உள்ளே சீருடைகள்!
100_5363

naval_11_36784_435அடையாள அட்டை எடுத்து வச்சியா?
அம்மா கேட்டாள்
இன்று சுதந்திரதினம்!

இந்தை இப்பிறவிக்கு இருமாதரை என் சிந்தையாலும்…
கொய்யால என்னை முதல்ல தொடுடா
Its been fourteen years!

Ramayana-and-Hanuman-ebook-cover


03


மணலாறு வெலிஓயா!
நயினாதீவு நாகதீப
நாமம்தான் இனி!


“ச்சே என்ன மனிதன் இவன்”
பக்கத்தில் அமர்ந்திருப்பவரை திட்டினேன்
பஸ்ஸில் கர்ப்பிணி

pregnant-woman-in-a-bus-250-thumb-250x250-701071


2002ம் ஆண்டு இருக்கும். நானும் அறிவிப்பாளர் குணாவும் சேர்ந்து சக்தி FM இல் ஹைக்கூ பற்றிய ஒரு தனி நிகழ்ச்சி நடத்தினோம். நல்ல பல ஹைக்கூக்களை சேகரித்து, அவற்றின் தோற்றம், இலக்கணம் என ஒரு முழு நிகழ்ச்சி செய்தபோது மகிழ்ச்சி தான். இதிலே முதலாவது ஹைக்கூ நான் சொல்லிக்கொண்டு இருக்கும்போது கிருஷாந்தி சம்பவத்தை சுட்டி நிற்கிறது என்று சொல்லி sensor செய்து விட்டார்கள். இன்னும் பல ஹைக்கூக்கள் அந்த காலத்தில் எழுதினேன். எல்லாம் தொலைந்து விட்டது. தோன்றும்போது எழுதுகிறேன்.

எப்போதோ ஒருமுறை, கற்றதும் பெற்றதும் என்று நினைக்கிறேன், ஒரு ஹைக்கூ வெளியானது. யார் எழுதியது என்று தெரியவில்லை. ஆனால் இன்றும் மறக்கவில்லை.

trisha-silk-saree Vinnai Thandi Varuvayaசாலை வெள்ளம்,
சேலை தூக்க,
சேறானது மனது!
வியாழ மாற்றம் (20-10-2011) : அடியே கொல்லுதே


கொத்துபராட்டா, சாண்ட்விச் என்று தமிழின் முன்னனி பதிவர்கள் வாரம்தோறும் நாட்டு நடப்பு போல ஒரு பத்தி எழுதுவர். கூட்டம் கும்மி அடிக்கும். அதனாலே நானும் வான்கோழி போல ஆட முயற்சி செய்கிறேன்.  இப்படியான பத்திகளில் ஒரு casualness இருக்கும்.  இது எல்லாமே தலைவரின் “கணையாழியின் கடைசிப்பக்கங்கள்” இன் விட்ட குறை தொட்ட குறை தான். “Good Artists Copy, Great Artists Steal” என்று ஸ்டீவ் ஜாப்ஸ் சொல்லிஇருப்பார். இது அப்பியதா சுட்டதா என்று தெரியவில்லை!  பார்ப்போம். எங்கே தான் போய் முடிகிறது என்று!

The Spirit Of Music


1992ம் ஆண்டு, ஒருநாள் எங்கள் நண்பி யசோ அக்கா வேக வேகமாக வீட்டுக்குள் நுழைந்தார். ஒருவித படபடப்பும் பரவசமும் அவர் முகத்தில்,  என்ன என்று எல்லோரும் பார்த்தோம். ரோஜாவின் இசை இப்போது தான் கேட்டேன். ஆச்சரியம் தாங்க முடியவில்லை, சொல்லுவதற்கு வந்தேன் என்று தன்னுடைய walkman ஐ எடுத்து headphone ஐ ஒவ்வொருவர் காதுகளிலும் மாறி மாறி மாட்டினார். பரவசம் எம்மையும் கொஞ்சம் கொஞ்சமாக தொற்றத் தொடங்கியது. சின்ன சின்ன ஆசையின் சின்ன சின்ன சத்தங்கள் என்னென்னவோ செய்தது. இறுதிப்பல்லவியில் வரும் ஒவ்வொரு இறுதி note இலும் ஒவ்வொரு ஜாலம் காட்டினார். "காதல் ரோஜாவே" காதலிக்கச்சொல்ல,  புதுவெள்ளை மழை யாழ்ப்பாணத்தையே குளிரவைக்க ஒரு மாலை நேரத்தில்,

ரோஜாவின் மயக்க வைக்கும் பின்னணி இசை


A R ரகுமான் பிறந்தாரே!சென்ற ஏப்ரலில் அவருடைய உத்தியோகபூர்வ சுயசரிதை “The Spirit Of Music” வெளிவருகிறது என அறிந்து சிங்கப்பூர் முஸ்தபா கடைக்கு போன் மேல் போன் போட்டும் வருவதற்கான எந்த அறிகுறியும் இல்லை. எனக்கோ இருப்புக்கொள்ளவில்லை. தலைவர் ஒவ்வொரு பாடலையும் எப்படி உருவாக்கினார், அதற்றுக்குப்பின்னால் இருந்த சுவாரசிய தகவல்கள், அவர் பார்வையில் பிறரின் இசை என்று பலதகவல்கள் இருக்குமே,  என்ன செய்வது என்று தவித்துக்கொண்டு இருந்த நேரத்தில் தான் ஆபத்பாந்தவனாய் நண்பன் அன்பு பெங்களூரில் இருப்பதாய் facebook இல் status போட்டான். இசையில் நாட்டம் உள்ளவன் என்பதால் மறுக்கமாட்டான் என்று தெரிந்து வாங்கிவரமுடியுமா என்று கேட்டேன், மறுக்கவில்லை. ஆனால் அவன் அப்படியே மலேசியா சென்று ஒருமாதம் நின்று, இன்னொரு நண்பனூடாக அந்த புத்தகம் என் கை வந்து சேர பலநாட்கள் ஆகிவிட்டது. அவன் அதற்குரிய பணமும் பெறவில்லை. நன்றி நண்பா. புத்தம் புதிதாய் புத்தகம் கமகமத்தது, கிடைக்காத காதலி ஒரு முறை நம்மைப்பார்த்து தான் சிரித்தது போல இருக்குமே, அது போல!

புதுப்புத்தகம் என் கைகளில்!

நஸ்ரின் முன்னி கபீர் என்ற இந்தியாவில் பிறந்து லண்டனில் வசிக்கும் ஒரு தொலைக்காட்சி தயாரிப்பாளருக்கும் ரகுமானுக்கும் இடையேயான உரையாடல் பாணியில்தான் நூல் நகர்கிறது. ரகுமானை தன் வட்டத்தில் இருந்து வெளியே இழுத்து வருவது இயலாத காரியம். அவர் ஒரு introvert. ஆனால் நஸ்ரினை ரகுமான் தன்னுடைய வட்டத்துக்குள் இழுத்துவிட்டாரோ என்ற பிரமை ஏற்படுகிறது. தலைப்புக்கேற்ற ஒரு spiritual feel சூபி இசை வடிவில் நூல் முழுதும் விரவி இருக்கிறது. ரகுமானின் இசையில் ஒரு openness எப்போதும் இருக்கும். ஒரு கட்டுக்குள் அடங்கமாட்டார், இது தான் சரி என்ற ஒரு வரையறையும் வைத்துக்கொள்ள மாட்டார். அது தான் அவருடைய வெற்றியின் அடிப்படை என்பது நூலை வாசிக்கும் போது தெரியும். திருடா திருடா வின் “தீ தித்திக்கும் தீ” முதலில் ஒரு lullaby யாக தான் உருவாகி இருக்கிறது. அதற்குள் ஒரு சூறாவளி இசை புகுத்தச்சொல்லி மணிரத்னம் சொல்ல இவர் முதலில் ஆச்சரியப்பட்டாலும் பின்னர் அதை செய்துபார்க்க, கிடைத்தது அந்த கொன்னக்கோலும் எலெக்ட்ரிக் மற்றும் பேஸ் கிடாரும் செய்த தாண்டவம். அந்த இசை கேட்கும்போது ஒரு ஆண்மையும் பெண்மையும் கலக்கும் உணர்வு இருக்கும். A magic created by two legends!


என்ன இது என்ன இது என்ன இதுவோ?


தன்னுடைய ஆரம்ப கால இசை முயற்சிகள், மற்றைய இசை அமைப்பாளர்களுக்கு வேலை செய்யும் நேரத்தில் மேலைத்தேய இசையை headphone இல் கேட்டுக்கொண்டு இருப்பது, இளையராஜாவிடம் ஒன்றரை வருடங்கள் வேலை பார்த்தது, இளையராஜா, ரகுமானின் தந்தையிடம் keyboard வாசித்தது என பல தெரியாத சுவாரசியங்கள் எங்கும் பரவிக்கிடக்கின்றது.

“I think, Shankar trapped in his own success” என்று ஷங்கர் பரீட்சார்த்த முயற்சிகளை கைவிட்டதை சிறு வருத்தத்துடன் கோடி காட்டுகிறார். ரகுமான் தன்னுடைய இசையில் அதிகம் விட்டுகொடுத்தல்கள் செய்தது ஷங்கருக்கும் K S ரவிக்குமாருக்கும் என்று தான் நினைக்கிறேன். இனி வரும் காலங்களில் இவர்கள் கூட்டணி தொடராவிட்டால் பல நல்ல பாடல்களை நாம் இழக்கவேண்டி வராது!


மீண்டும் மீண்டும் மீண்டும் … ப்ளீஸ் ப்ளீஸ் ப்ளீஸ்!


உரையாடல் ஹிந்தி திரை உலகத்துக்குள் நுழைகிறது. லகானிலும் , ரங்கே தே பசந்தியிலும் டெல்லி6 இலும் நடந்த ஆச்சரியங்களைப்பேசுகின்றனர். “மெயின் வரி வரி” பாடல் ரெகார்ட் செய்த கதை சுவாரசியமானது. லதா மங்கேஷ்கர் மற்றும் ஆஷா போஸ்லே உடன் பணிபுரிந்த அனுபவங்களை பகிர்கிறார். செண்பகமே செண்பகமே பாடல் யார் பாடியது என்று முதலில் தெரியாமல் கேட்ட போது ஆச்சரியப்பட்டதாக சொல்கிறார். இந்திராவுக்காக சுகாசினியுடன் பணி புரிந்துகொண்டு இருந்தபோதே “Bombay Theme Music” உருவானதாகவும், அது மணிரத்னத்துக்கு அதிகம் பொருந்தும் என்று நினைத்து கை மாற்றியதையும் சொல்கிறார். “Slumdog Millionaire”, “Couples Retreat” படங்களில் மற்றும் Dido வுடன் வேலை செய்தது என பல அனுபவங்கள் ஆங்காங்கே.


சஜ்னா !!


யார் இந்த நஸ்ரின் என்று எனக்குத்தெரியாது. ஆனால் முடியுமானால் இவர் இனி இப்படியான சுயசரிதை எழுதும் முயற்சிக்கு தடையுத்தரவு வாங்கவேண்டும்!  தன்னுடைய ரகுமான் பற்றிய பிம்பத்தை மையமாக வைத்தே கேள்விகளை கேட்கிறார். ரகுமானின் இருபது வருட தமிழிசை பற்றிய பதிவுகள் பத்தோடு பதினொன்று ஆகின்றன. ரகுமானின் எதிர்கால projectsகளை மையமாக வைத்த கேள்விகள்.  “என் மேல் விழுந்த மழைத்துளியே", "எழுத்துப்பிழையும் நீ", "கடலிலே மழை வீழ்ந்த பின் எந்த துளி மழைத்துளி” என்ற கவிதைகள் எல்லாம் குல்சார், மெஹபூப், பிரச்சூன் ஜோஷி பற்றிய கேள்விகளில் கரைந்து மறைக்கப்பட்டுவிடுகிறது. அவ்வப்போது conscious ஆக ரகுமான் சொல்ல விழைந்தாலும் நஸ்ரின் அதை புறந்தள்ளி தாண்டிச்செல்கிறார்.


ரகுமானின் படங்களிலியே the most complete and classic album என்று நான் நம்பும் “கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்” பற்றி எந்த உரையாடலும் இல்லை. வெற்றிபெறாத எந்த படமும் பேசப்படவில்லை. மே மாதம், காதல் வைரஸ், Mr Romeo என்று பல படங்களைப்பற்றிய எந்த தகவல்களும் இல்லை. ரகுமானுடன் பணிபுரிந்த தென்னிந்திய பாடகர்கள் பற்றி அதிகம் இல்லை. ரகுமானின் கர்நாடக, தென்னிந்திய கிராமிய இசை வடிவங்களில் செய்த  பரீட்சார்த்த முயற்சிகளை நஸ்ரின் கண்டுகொள்ளவேயில்லை. கண்ணோடு காண்பதெல்லாம், சௌக்கியமா, தென் கிழக்கு சீமையிலே எல்லாம் நஸ்ரின் அறிந்திருப்பாரோ தெரியாது. சூபி இசை நூல் முழுதும் நிறைந்திருப்பது புரிந்து கொள்ள முடிகிறது. அதற்காக “Luke Chuppi” போன்ற பாடல்களை எல்லாம் அப்படியே விட்டுவிடுவது அநியாயம். ரகுமானின் “Ada, A Way Of Life” ஆல்பத்தின் அறிகுறியே இல்லை. இப்படி பல இல்லைகள். எனக்கென்னவோ “Elephant and the blind philosophers” போல  தனக்கு பிடித்த, வேண்டிய  ரகுமானை  மட்டுமே நஸ்ரின் வெளிக்கொணர முயன்றிருக்கிறார். ஒரு சுயசரிதத்தின் அடிப்படையே சரிகிறது அங்கே.


என் மனம் உனக்கென்ன விளையாட்டு பொம்மையா?


புத்தகத்தில் ஒருவித அலை பாயும் தன்மையும் இருக்கிறது. எந்த பகுதி எங்கே வரும் என்று தெரியாது. டான்னி போய்லே வந்த பின்னர் சடுதியாக லதா மங்கேஷ்கர் வருவார். உலகமே கொண்டாடும் ஒரு இசையமைப்பாளனின் சுயசரிதம் இத்தனை mediocre ஆக இருந்திருக்கவேண்டாம். எதிலும் ஒரு அவசரம். எந்த ஒரு homework உம் இல்லாத ஒரு பேட்டி அயர்ச்சியை ஏற்படுத்துகிறது. அநேகமான விடயங்கள் தெரிந்தவை. அநேகமானவை ரகுமானின் கருத்துக்கள் அன்றி அவருடைய வாழ்க்கை படிமங்கள் கிடையாது.  ரகுமானை வழிபடும் எனக்கே இந்த நிலை என்றால் சாதாரண ரசிகன் மூடிவைத்துவிடும் ஆபத்தும் இருக்கிறது.


புத்த்தகத்தில் இறுதியில் ரகுமானின் “Connections” CD மற்றும் ஏராளமான புகைப்படங்கள். ஒரு ஆறுதலுக்காக இணைத்து இருக்கிறார்கள்.


CNN Talk Asia, 2009 இல் ஒரு documentary செய்திருப்பார்கள். அதில் ஒரு உயிரும் உணர்வும் இருக்கும். என்னத்த சொல்ல  நஸ்ரின் சொதப்பிவிட்டார்.


Fingerboard ஐ கேட்டு பாருங்கள் .. divine!


Spirit Of Music : அள்ளித் தெளித்த கோலம்