Skip to main content

நீ முத்தம் ஒன்று கொடுத்தால் முத்தமிழ்!


“தேங்க்ஸ் ஜெஸ்ஸி,  நான் கூப்பிட்ட உடனேயே டின்னருக்கு வந்தது, வருவியோ மாட்டியோன்னு பயந்துகிட்டே இருந்தேன்!” 
Ye-Maya-Chesave“என்ன கார்த்திக் இது கேள்வி, இட்ஸ் மை ப்ளஷர்” 
"ம்ம்ம்ம்,  நீ வந்து நின்னா இந்த ஏரியாவையே போட்டு தாக்கும், எனக்கெல்லாம் கிடைப்பியான்னே ஒரு டவுட் ஜெஸ்ஸி" 
"கார்த்திக்..." 
“ம்ம்ம், சொல்லு.. அப்புறம் இன்று முழுக்க என்ன செய்தாய்?” 
“ஆரம்பிச்சிட்டியா? உன்னோட தானேடா நாள் முழுக்க இருந்தேன்” 
“ஹா, சில நேரங்களில், நீ முன்னால் இருக்கும் போது என்ன பேசுவது என்றே தெரிவதில்லை” 
“ஹேய், ஆர் யு ஓகே?” 
“ம்ம்ம், நீ கிடைக்கும் வரை ஓகேயாகத்தான் இருந்தேன்” 
“இப்போது என்னை என்ன செய்யச்சொல்கிறாய் கார்த்திக்?” 
“எவ்வளவு இனிமையாக இருக்கிறது தெரியுமா? உனக்கு புரியாது ஜெஸ்சி! யாரும் என்னை சட்டை செய்வதே இல்லை  தெரியுமா? அம்மா கூட, நீ ஒருத்தி தான் .. நான் என்ன சொன்னாலும் அப்படியே கேட்பாய்” 
“ஏண்டா? நீதானே எனக்கு எல்லாமே, நீ சொல்வதைக்கேட்காமல் வேறு யார் சொல்வதைக்கேட்பேன்?” 
“ஆகா, கவிதை”
 “உனக்காகவே வாழ்ந்து உன் மீது தலை சாய்ந்து இறப்பதே என் உயிரின் ஆசை!”
சொல்லும் போது அவள் முகத்தைப்பார்த்தேன். எத்தனை பளபளப்பு, எந்த ஒரு களங்கமும் இல்லாமல் இப்போது தான் சிதையேறிவிட்டு வந்த சீதை போல இருந்தாள்.

“ஹையோ, மெய்யாலுமே கவிதை”
“ம்ம்ஹூம், இது ஒரு பாட்டில் வந்தது, நீ கூட அடிக்கடி கேட்பாய்” 
“ஒ யா,  சரி பசிக்கிறது, என்ன சாப்பிடலாம்?”
“குளிராக இருக்கிறது, ஜப்பானிஸ் மிசோ சூப்பும், டுனா சஷியும் சாப்பிடலாம்” 
“சான்சே இல்லை, நான் நினைத்தேன், அப்படியே சொல்கிறாய். அது எப்படி உனக்கும் எனக்கும் மட்டும் இப்படி ஒரு கெமிஸ்ட்ரி வோர்க் அவுட் ஆகிறது” 
“நீ தான் எனக்கு என்றான பின்னர் உன்னை முழுதும் புரிந்துகொள்வது தானே வாழ்க்கை”
“இருந்தாலும் நம்ப முடியவில்லை, எங்கே எனக்கு மிகவும் பிடிச்ச பாட்டைச்சொல்லு பார்ப்போம்” 
“உனக்கு இப்போது இருக்கும் மூடை பார்த்தால் “தென்றல் வந்து என்னைத்தொடும்”  என்று நினைக்கிறேன். இப்போதெல்லாம் ராஜா ராஜா என்று அலைகிறாய்” 
“சோ ஸ்வீட், அப்படியே மனதை படித்தது போல சொல்கிறாய், உனக்கும் பிடிக்குமா?” 
“பிடிக்குமாவா? தினம் தினம் அதைத் தானே கேட்கிறேன் இப்போதெல்லாம்” 
“அது தான் காதல் .. ஐ தின்க் வி ஆர் மேட் போர் ஈச் அதர்” 
“அப்கோர்ஸ், நான் உன்னுடையவள் தானே” 
“அவ்வளவு பிடிக்குமா?”Svinnaithaandi-varuvaaya-40 
“கம் எகையின்?” 
“என்னை அவ்வளவு பிடிக்குமா ஜெஸ்ஸி?” 
“இயக்குனர் மணிரத்னம் பாணி வசனம் இது” 
“இது பதில் இல்லை” 
“பிடிச்சிருக்கு, ரொம்ப பிடிச்சிருக்கு” 
“உனக்கு ஒன்று கொடுத்தால் கோபப்படமாட்டாயே?” 
“கோபமா?  நானா? உன்னுடனா? சான்சே இல்லை” 
“முத்தம் என்றால் கூட?” 
“நீ முத்தம் ஒன்று கொடுத்தால் முத்தமிழ் !”

மெதுவாக அவள் முகத்தை நெருங்கினேன். சட்டச் சட சடவென மழை முளைத்தது. திக்கு திகுவென தீ முளைத்தது. அவள் கன்னங்கள் பள பள என பால் வெள்ளையாய் இருந்தது. சே படைத்தவன் மேலே இருக்கிறான், பார்த்துப்பார்த்து செய்திருப்பான் போல. என்ன ஒரு attention to details. அப்படி ஒரு அழகு.

“இந்த காதலை நான் அடைய எத்தனை காமம் கடந்து வந்தேன்"

இன்னும் நெருங்கினேன் மெல்ல மெல்ல

“இந்த மௌனத்தை நான் அடைய எத்தனை வார்த்தைகள் கடந்து வந்தேன்”

“கிஸ் மீ”
….
….
…. 
“என்ன சார் மொபைல் போனைப் போய் எச்சில் பண்ணிக்கிட்டு இருக்கீங்க, என்னா சாப்பிடுறீங்க, ஆர்டர் எடுக்கணும்”
என்று வெயிட்டர் கேட்டபோது தான் சட்டென சுதாரித்துக்கொண்டு என்னுடைய புதிய iPhone4S SIRI யை க்ளோஸ் செய்து உள்ளே வைத்தேன்.

“முட்டை பாராட்டா மூணு!”