என் கொல்லைப்புறத்து காதலிகள் - கம்பவாரிதி ஜெயராஜ்

Oct 23, 2011

“மனப்போராட்டம் நிறைந்த யதார்த்த மானிடம் பெரிதும் வெளிப்படுவது கம்பனில் …. “ என்று ஒரு பட்டிமண்டபம், 1992ம் ஆண்டு யாழ்ப்பாண கம்பன் விழாவில் நடந்தது. நல்லை ஆதீனத்தில் இடநெருக்கடியால் வெளியிலே நெரிசலில் நின்று,அப்பாவை இம்சித்து,என்னை தூக்கிவைத்து காட்டச்சொல்லி பார்த்த பட்டிமண்டபம்.


“இந்தை இப்பிறவிக்கு இரு மாந்தரை என் சிந்தையாலும் தொடேன்” 

என்று சொல்லி பின்னாலே சீதைக்கு சிதை மூட்டச்சொன்ன போது அடைந்த கோபம் ராமனில் வந்ததா இல்லை அதற்கு வக்காலத்து வாங்கிய கம்பனில் வந்ததா என்று ஞாபகம் இல்லை.


“சண்டாளி சூர்ப்பனகை தாடகை போல் வடிவு
கொண்டாளைப் பெண்ணென்று கொண்டாயே தொண்டர்
செருப்படி தான் செல்லாவுன் செல்வமென்ன செல்வம்
நெருப்பிலே வீழ்ந்திடுதல் நேர்” 


என்று அவர் ஔவையை அறிமுகம் செய்தபோது அதை மீண்டும் மனப்பாடம் செய்யும் தேவை இருக்கவில்லை.

ஈழத்தில் தொண்ணூறுகளில் தனக்கென ஒரு தலைமுறை இலக்கிய ஆர்வலர்களை உருவாக்கிய கம்பவாரிதி இ. ஜெயராஜ் தான் இன்றைய கொல்லைப்புறத்து காதலி. என்னுடைய முதல் காதலியும் கூட.
ஜெயராஜ் என்றால் யார் என்பதை தொண்ணூறுகளின் ஆரம்ப காலத்தில் சிறுவர்களாகவோ இல்லை இளைஞர்களாகவோ இருந்தவர்களை கேளுங்கள். கதை கதையாய் சொல்வார்கள்.  அவர் அப்போது யாழ்ப்பாணத்தில் ஒரு வித இலக்கிய எழுச்சியை உருவாக்கிக் கொண்டு இருந்தவர்.  போர் முரசும், மாவீரர் தினங்களும், சோக கீதங்களும், வெற்றி முழக்கங்களும் கொலோச்சிக்கொண்டிருந்த காலத்தில், சோழ நாட்டில் இலக்கியமும் இணைக்கு இணையாய் தளைத்தது என்று மார் தட்ட ஜெயராஜ் தான் முழுமுதற் காரணம். எங்கள் வீட்டு முற்றத்தில் மூன்று கதிரைகளை அங்கொன்றும் இங்கொன்றுமாய் வைத்துவிட்டு நானே நடுவர் நானே பேச்சாளர் என்று ஒரு தனி பட்டிமண்டபமே நடத்துவேன். வீட்டு நாய்க்குட்டி ஜிம்மியும் என்னுடைய செல்ல ஆடும் அசை போட்டுக்கொண்டே முன்னால் இருந்து பார்த்துகொண்டிருக்கும். தீர்ப்பு சொல்லும்போது ஜெயராஜ் போலவே குரலை குறித்த இடங்களில் குழையவிடுவேன். அவரைப்போலவே ஆங்காங்கே இடைவெளி விட்டு, குரலை உடையவிட்டு, உயர்த்தி தாழ்த்தி, அப்பப்பா தமிழை காதலிக்க வைத்தவர். அவர் கம்பனை காதலிக்க நாங்கள் அவரை காதலிக்க, எம்மை பலர் காதலித்தார்கள் என்றால், நண்பன் கஜன் இதற்கு மேல் வேண்டாமே என்பான்!


“ஆவியை ஜனகன் பெற்ற அன்னத்தை அமுதில் வந்த தேவியை பிரிந்ததாலே திகைத்தனை போலும் செய்கை” 


இந்த பாடலில் "திகைத்தனை" என்ற இடத்தை அவர் சொல்லும் போது குரல் உடையும். ராமனில் கோபம் வரும். பேடி போல அம்பு எய்தாலும் அது பெண்ணின் மீதான காதலால் தான் என்று சொல்லும் வாலியைப் பார்க்க துரோகி சுக்ரீவனை கல்லால் அடிக்க தோன்றும். தோன்ற வைத்து விட்டு பின்னர்

"தருமம் இன்னதெனும் தகைத்தன்மையும்
இருமையும், தெரிந்து எண்ணலை, எண்ணினால்
அருமை உம்பிதன் ஆருயிர்த் தேவியைப்
பெருமை நீங்கினை எய்தப் பெறுதியோ"

என்று இராமன் சொல்வதைச்சொல்லி வாலிக்கு இராமனின் முன்னே நின்று  போரிடும் தகுதியே கிடையாது என்ற ரீதியில் பதில் சொல்வார். அட அதுவும் சரிதானே என்று நம்ப வைப்பார். நாமும் நம்பினோம்.

ஜெயராஜ் எப்படி இந்த எழுச்சியை ஒரு முக்கிய போராட்ட காலத்தில் நிகழ்த்தினார் என்பதை இப்போது யோசித்தாலும் ஆச்சரியம். புலிகளின் ஆதிக்கத்தில் யாழ்ப்பாணம் இருந்த காலம், மின்சாரம் இல்லை, டிவி இல்லை என்று பல இல்லைகள். ஒருமுறை பிரசங்கம் செய்துகொண்டு இருக்கும் போது குண்டு விமானங்கள் வந்துவிட்டன. மக்கள் கூட்டமோ அலை மோதுகிறது. விளக்குகளை அணைத்துவிட்டார்கள். எல்லோரும் அமைதியாக இருந்து விமானங்கள் சென்றபின்னர் பிரசங்கம் மீண்டும் தொடங்கியது. மக்கள் ஆடாமல் அசையாமல் அப்படியே இருந்து முடியும் வரை கேட்டனர். அது தான் ஜெயராஜ். அது தான் எம் மக்களும் கூட!பாடசாலை, வீடு, தனியார் கல்வி நிறுவனங்கள், அவ்வப்போது கிரிக்கெட், இது தான் எமது வாழ்க்கை. யாழ்ப்பாணம் ஒரு வித மழைநீர் தேக்கம் போல இருந்த காலம். வேறு நதிகள் ஒன்றும் இணையாத நேரம், அங்கே மழை மட்டுமே, அதனால் எந்த நீர் எந்த நதியில் வருகிறது என்று வடிகட்டவேண்டிய தேவை புலிகளுக்கும் இருக்கவில்லை. மக்களுக்கும் இருக்கவில்லை. மக்கள் ஒன்று சேர்வது இரண்டு காரியங்களில், ஒன்று போராட்ட நிகழ்வுகள் மற்றயது வழிபாட்டு நிகழ்வுகள். ஆரம்பத்தில் கம்யுனிசம் பேசிய புலிகள் அதில் பின்னர் பாராமுகம் காட்டியது ஒரு நல்ல இலக்கிய சமய சூழலுக்கு வழிவிட்டது எனலாம். அதனால் கம்பனும், ஜெயராஜும் சாதி சமயம் தாண்டி இலக்கியத்தின் மூலம் மக்களை சென்றடைந்து கொண்டு இருந்தனர் எனலாம். 


ஜெயராஜ் இந்த களத்தை நன்றாகவே கையாண்டார். கம்பன் கழகம் என்ற குழு தவிர அவரின் தனி பிரசங்கங்கள் பல கோவில் திருவிழாக்களின் crowd pullers ஆகின. அதற்கு ஒரு முக்கிய காரணம் ஜெயராஜின் நிறுவனப்படுத்தப்பட்ட இலக்கிய சேவை. பலர் இன்றும் கருதுவது தமிழும் தமிழ் சார்ந்த சேவையும் இலாபநோக்கமின்றி செய்யப்படவேண்டும் என்று.  Go to hell! தமிழ் ஒன்றும் எவரினுடைய charity சேவையையும் எதிர்பார்த்து நின்றதில்லை, நிற்கப்போவதும் இல்லை. அந்த காலத்தில் ஜெயராஜை அதிகம் விமர்சித்த, குறிப்பாக யாழ்ப்பாண பல்கலைக்கழக சமூகத்தினர் தாங்கள் என்ன சமூகத்துக்கு செய்தார்கள் என்பதை நினைத்ததில்லை. நம் துறையில் நம்மை விட ஒருவன் பிரகாசிக்கும் போது, அதுவும் நம்மை போல பட்டம் எதுவும் பெறாதவன், கசக்கும் தான். எனக்கென்னவோ செங்கை ஆழியானும் ஜெயராஜும் ஈழத்துக்கு செய்த சேவை சிவத்தம்பியின் சேவைக்கு கொஞ்சமும் குறைவானது இல்லை என்றே சொல்வேன். 


ஜெயராஜ் ஒரு பிரசங்கம் என்றால் அந்த காலத்திலேயே ருபாய் ஐயாயிரம் வாங்குவாராம். இப்போது புரிகிறது அது ஏன் என்று. பணம் கொடுக்கும் போது தான் அதை ஒழுங்குசெய்பவர்களும் அந்த நிகழ்வு வெற்றிபெற உழைக்கவேண்டியவராகின்றனர். பணம் கொடுத்து வாங்கும் பொருளுக்கு இருக்கும் மதிப்பை நாம் இலவசத்துக்கு கொடுப்பதில்லை.தமிழ் இலக்கியத்தை நிறுவனப்படுத்துவதன் மூலம் இந்த நிகழ்ச்சி பலரை சென்றடைகிறது. பல இளைஞர்களை தமிழறிய செய்கிறது. இது தான் ஒரே வழி சரியான வழி என்பது இல்லை. ஆனால் இது ஒன்றும் தவறான வழியும் கிடையாது. கிழக்கு இந்திய கம்பனி இதை அந்த காலத்திலேயே ஆங்கிலத்துக்கும் கிறிஸ்தவத்திற்கும் செய்துவிட்டது.2000ம் ஆண்டு காலப்பகுதி. கொழும்பு என்பதால் மழைநீர் தேக்கத்தில் பல நதிகளும், தொழிற்சாலை கழிவுகளும் இப்போது சேரத்தொடங்கியிருந்தன. வடிகட்டிகள் அங்கே இல்லாததால் நீர் குடிக்கும் அருகதையை அந்த தேக்கமும் இழக்கத்தொடங்கி இருந்தது. இப்போது ஜெயராஜ் பற்றிய விமர்சனம் மீண்டும் தலை தூக்கிவிட்டது. நம்மவருக்கு ஒரு கருத்து இருக்கிறது. எந்த துறையினரும் அரசியலில் நாம் விரும்பும் கருத்தை எடுத்து ஆதரிக்கவேண்டும் என்பது. இலக்கியவாதிக்கும் அரசியலுக்கும் என்ன தொடர்பு? அவர் ஏன் அரசியலில் கருத்து சொல்லவேண்டும்? என்றெல்லாம் யோசிப்பதில்லை. அசின் இலங்கைக்கு போனதால் அவரை தடை செய்யவேண்டும் என்று ஒரு நண்பன் facebook இல் status போட்டிருப்பான். அவன் இருப்பது கொழும்பில், வேலை செய்வது சிங்களவர் கம்பனியில். இது தான் நாம்.  ஏ ஆர் ரகுமான் ஆஸ்கார் வாங்கும் போது ஈழத்தமிழருக்கு குரல் கொடுக்கவில்லை என்று புலம்பவில்லையா? ஆனால் தேர்தல் நடந்தால் அறுபது வீதம் தான் வாக்களிப்பு. என்னத்த சொல்ல?

இது போதும் எமக்கு இவரை துரோகி என்று சொல்ல!


ஜெயராஜின் ஒருமுறை இந்தியாவில் பேசிய பேச்சு


நானும் தமிழன்தான்... ஆனால் அயல்நாட்டுக்காரன். நான் சுதந்திரமானவனா?ஒருவன், மற்றொருவரை சுதந்திரமாக நடமாடவிடும்போதுதான், சுதந்திரமாகப் பேச, செயல்பட விடுவதுதான் உண்மையான சுதந்திரம். அந்த சுதந்திரமில்லாத நாட்டின் குடிமகன் நான். ஆனாலும், என் எல்லையை உணர்ந்து, உங்கள் சுதந்திரத்தை வாழ்த்துகிறேன்.
ஒருவன் கோடிக் கோடியாகச் சம்பாதிக்கலாம், வெற்றி பெறலாம். ஆனால் அறமில்லாத வெற்றி தூக்கத்தைத் தராது.அறமாக வாழ்ந்தால் சொர்க்கத்துக்கு போகலாம். ஆனால், சொர்க்கத்துக்கு போனவர்கள் யார் யார் என்று யாருக்கு தெரியும்.... காந்தி, அண்ணா, காமராஜர், எம்.ஜி.ஆர். என்று நாமாகச் சொல்லலாம். ஆனால் பார்த்தவர்கள் யார்?" 

 எனக்கென்னவோ ஜெயராஜின் அந்த நெருப்பு அப்படியே தான் இருக்கிறது. இந்தியாவில் அவரை கொண்டாடுகிறார்கள். ஈழத்தமிழருக்கு தன்னளவில் என்ன செய்ய முடியுமோ அதை செய்கிறார். அதே சமயம் நாங்களும் ஓடிக்கொண்டு இருக்கிறோம் என்பது தான் உண்மை. பதிமூன்று வயதில் எனக்கு அவரை மட்டும் தான் தெரியும். இப்போது ஜக்கி முதல் ஓஷோ வரை, சிவத்தம்பி முதல் டெர்ரி பிரச்செட் வரை, ஜெயமோகன் சொல்வது போல, பாலகுமாரனை வாசித்து பின் அதை தாண்டி வா என்பது போல, தாண்டி எங்கே போனோம் என்று தெரியவில்லை தாண்டிவிட்டோம் என்பது மட்டும் வெளிச்சம். ஆனால் பதினொரு வயது பாடசாலை செல்லும் சிறுவனுக்கு இன்னமும் ஜெயராஜ் தேவை என்றே நினைக்கிறேன்.இப்போதெல்லாம் யோசித்தால் ஜெயராஜின் கருத்துகளில் பல இடங்களில் மாறுபடுகிறேன். வாலி தான் பிறன் மனை நோக்கினான். இந்த ராமன் தன் மனையை சந்தேகித்தான். முன்னையதை விட பின்னையது இன்னும் அசிங்கம். மற்றவன் புறம் சொல்லுவான் என்று நீ அப்படி செய்தால் புறம் சொல்பவனை கணக்கில் எடு என்று ஆகிறதே. இருக்கட்டும், அது கம்பன் தானே. எல்லாமே சரியாக சொல்ல அவன் என்ன கடவுளா? அட கடவுளாய் இருந்தால் மட்டும் சரியாக சொல்லிவிடுவானா என்ன?


ஒருமுறை நான் பேச இருந்த பட்டிமண்டபம் ஒன்றுக்கு ஜெயராஜ் நடுவராக வருவதாக இருந்தது. வரவில்லை. முதல் காதலி! ஒருதலைக்காதல், இப்போது இது ஒன்றும் புதுசு இல்லை! ஜெயராஜ் நீங்கள் என்றாவது ஒருநாள் இதை வாசிக்க முடிந்தால்,


கண்ணொடு கண் இணை கவ்வி ஒன்றை ஒன்று
உண்ணவும் நிலைபெறாது உணர்வும் ஒன்றிட
....
....
.... 
அண்ணல் நான் இல்லை ஆனாலும் அன்று தொட்டு நோக்குகிறேன்!
அவள் நீ ஜெயராஜ் எப்போது எனை நோக்குவாயோ?

---- அடுத்த ஞாயிறு எந்த காதலி? காத்திருங்கள்! ---


Contact Form