Skip to main content

சீனி கம்


Shreya-Ghoshal“ஜானே டோ னா, ஜானே ஜானே” என்று ஸ்ரேயா கோஷல் கொஞ்சும் போது கண்ணெல்லாம் ஒரு விதமாக சொருகி இதழ்களின் ஓரத்திலே ஒரு புன்சிரிப்பு ஒவ்வொருமுறையும் வரும்போது,  மெல்பேர்ன் புகைவண்டியின் முன் இருக்கையில் இருப்பவர் ஒரு மாதிரியாக என்னைப்பார்ப்பது வழக்கம். முற்பிறப்பில் செய்த புண்ணியத்தில் என்றாவது ஒருநாள்  அவள் முன்னாலே வந்து உட்கார்ந்தால் இந்த பாடலை full volume இல் வைத்து கேட்கவேண்டும். இந்த பாடலை கேட்கும் இவனை பிடிக்காத பெண்கள் இருப்பார்களா என்று தெரியவில்லை. இருந்தால் இருந்து விட்டுப்போகட்டும். யாருக்கு வேண்டும்?

தமிழில் விழியிலே மணி விழியிலே

நான் ஸ்ரேயா கோஷலை காதலிக்க ஆரம்பித்தது இந்த படத்தில் இருந்து தான். குரலிலே தேன் வடியும் என்பார்கள். ஆனால் தேன் எல்லாம் அத்தனை இனிப்பு கிடையாது. ச்சோ ஸ்வீட் என்று சுஜாதா சொல்லும் பெண் ஸ்ரேயா இல்லை, அவளுடைய குரல் என்று சொன்னால் ஒருவரும் நம்பப்போவதில்லை தான். சான்சே இல்லை.


இளையராஜாவுக்கு நீண்ட நாட்களுக்குப்பிறகு சேப்பாக்கம் மாதிரி ஒரு பாட்டிங் பிட்ச்.  ஹாண்ட்சம் லுக்குடன் அமிதாப், லண்டனில் ஒரு வசந்தகாலத்து காதல் கதை. 34 வயது தபுவுடன் காதல். இவருக்கு 64 வயது. காதலை சொல்லும் விதம் அப்படியே போட்டுத்தாக்கும். இது போதாதா சச்சினுக்கு.ரொம்ப காலத்துக்கு அப்புறம் ரொமாண்டிக் மூட் வேறு வந்திருக்க வேண்டும் தலைவருக்கு. ரிசல்ட் டபுள் செஞ்சுரி தான்.


தமிழில் குழலூதும் கண்ணனுக்கு
எனக்கு ஆச்சரியம் தந்தது இந்த பாடலில் இருக்கும் அரேஞ்ச்மேன்ட்ஸ் தான்.  2000திற்கு பின்னர் வந்த அநேகமான ராஜா பாடல்களின் மெலடியும் மெட்டும் எப்போதும் போல அதே அட்டகாசத்துடன் இருந்தாலும் அரேஞ்ச்மேன்ட்ஸில் ஒருவிதமான ரெப்படிஷனில் மாட்டுப்பட்டு இருப்பார். ஒரே விதமான ஒலிநயமும் தாளக்கட்டுகளும், வாத்தியங்களின் பிரயோகங்களும் என எல்லாமே ஒரு விதமான தேக்கநிலைக்கு சென்று இருந்தன. அவ்வப்போது கமல் தீனி போடும் போது மட்டும் ஆனந்த தாண்டவம் நடக்கும். நான் நினைக்கிறேன் ராஜா இதை எல்லாம் கடந்து சென்று தன்னளவில் செய்கின்ற பரீட்சாரத்த முயற்சிகள் என்னைப் போன்றவனை வந்தடையவில்லை என்று. உப்புமா இயக்குனர்கள் வேறு. சிலவேளைகளில் நாங்கள் எல்லாம் நிலாக்காயும் நேரத்தோடு அப்படியே நின்று விட இவர் போய்க்கொண்டே இருக்கிறாரோ என்று எண்ணத்தோன்றும். ஆனால் சீனிகம் இசையில் அந்த பேச்சுக்கே இடம் இல்லை.  பியானோ பாட்டின் எல்லா இடத்திலும் ஓடித்திரிய இண்டர்லூடில் ட்ரம்பெட், போதரான்(Bodhran) என ஐரிஷ் இசையில் சும்மா பின்னி பெடலெடுத்திருப்பார். 

தமிழில் மன்றம் வந்த தென்றலுக்கு

மீண்டும் ஸ்ரேயா, மூன்று முத்துக்களும் ஒருவரிடமே. ஆச்சரியமில்லை, ரெகோர்டிங்கில் அந்த இரண்டு பாடல்களையும் கேட்டபின்னர் மூன்றாவது பாடலை வேறு யாரிடமும் கொடுக்கத்தோன்றுமா என்ன? மணிரத்னம் இதைக்கேட்டால், மௌனராகத்தை ரீமேக் செய்து,  “மன்றம் வந்த தென்றல்” பாட்டை பெண்ணுக்கு மாற்றி, ஸ்ரேயாவையே பாட வைக்கலாம். கொஞ்சம் சிந்தித்துப்பாருங்கள். சின்ன சின்ன வண்ணக்குயில் பாட்டை ஸ்ரேயா பாடினால் எப்படி இருக்கும்? ஜானகி அதை பாடும்போது அதில் ஒரு தாபம் இருக்கும், நம்மைக் கொல்லும். ஸ்ரேயா பாடி இருந்தால் நிச்சயம் அதில் ஒரு ஏக்கம் இருந்திருக்கும், நம்மை அள்ளும். மன்னிப்பாயா ஞாபகம் இருக்கிறதா? வேண்டாம் வேண்டாம். என்னதான் இருந்தாலும் அந்த “கம்பளிப்பூச்சி” காட்சியை ரேவதி தவிர வேறு யார் தான் நடிக்கமுடியும். ரோஜா மதுபாலாவை தவிர்த்து! 


இந்த படம் வெளிவரும் போது தலைவருக்கு 64 வயது. அமிதாப்புக்கு 65. எப்படி காதலித்து இருக்கிறார்கள் பாருங்கள். படத்தை பார்க்கும் போது இசையும் நடிப்பும் அந்த வசந்த காலத்து லண்டன் ஒளிப்பதிவும் கொன்று போடும்.




சீனி கம்மில் தன்னுடைய முன்னைய பாடல்களை பயன்படுத்தினார் என்று ஒரு குற்றச்சாட்டு. இப்படித்தான் பயன்படுத்துவார் என்றால் அவர் அந்த குற்றத்தை மீண்டும் மீண்டும் செய்யட்டும்.   செய்துகொண்டே இருக்கட்டும்.


2007 இல் கானா பிரபா முதன் முதலில் இந்த பதிவு போட்ட போது, அன்றைய தினமே சிங்கபூரில் முஸ்தபா கடைக்குச்சென்று டிவிடி வாங்கிப்பார்த்தேன். படம் முடிந்த பின் மீண்டும் நள்ளிரவு லேப்டாப்பில் போட்டு மறுபடியும் பார்த்தேன். எப்படிப்பட்ட ரொமாண்டிக் இசை. ராஜா ஒரு ராட்சசன் என்று சும்மாவா சொன்னார்கள்?


காதலிக்கவேண்டும்,  தபுவை எப்படியும் தேடிப்பிடிக்கமுடியும்! தலைவரே இன்னொரு சீனிகம் ப்ளீஸ்!