Yarl Geek Challenge!

 

426861_10150565099076415_852787673_n

தொழில்சார் சம்பந்தமான விஷயங்களை வெறுமனே ஒருவித அகடமிக் பாணியில் அணுகாமல், சுவாரசியமாக, ஆர்வத்தை தூண்டும் வகையாக எப்படி கொண்டு செல்லலாம்? அவற்றை வெறுமனே வேலை சார்ந்தது என்று நினைக்காமல், நித்தமும் சிந்தித்துக்கொண்டிருக்ககூடிய, விளையாட்டு இசை போன்ற எழுச்சி தரும் விஷயமாக எப்படி மாணவர்களை நினைக்கவைக்கலாம்? மாணவர்களுக்கு தொழிற்துறையில் நாளாந்தம் நடைபெறும் விஷயங்களை, அதன் செயற்பாடுகளை அந்த துறைகளில் இருந்து தொழிற்படுவர்களை கொண்டே பகிரவைக்க வேண்டும். ஆனால் அது கலந்துரையாடல் போன்று இல்லாமல் ஒரு சவாலாக இருக்கவேண்டும். பங்குபற்றும்போது ஒரு எக்சைட்மெண்ட் ... சுவாரசியம், தேடல் ஒருவித அட்டாச்மெண்ட், முடிந்து வீடு போனபின்னரும் நடந்த சம்பவங்கள் சிந்தனையில் ஓடிக்கொண்டு இருக்கவேண்டும். எப்படி செய்யலாம்?

The Apprentice என்று அமெரிக்காவில் பிரபலமான டிவி சீரியல், பொதுவான வணிக, முகாமைத்துறையில் உள்ளவர்களுக்கிடையில் reality show பாணியில் போட்டிகள் வைத்து, elimination எல்லாம் வாரம் வாரம் நடைபெறும். நிறுவனங்களில் நடைபெறும் board room சந்திப்புகள், விவாதங்கள் எல்லாவற்றையுமே போட்டியில் உருவாக்கி, அதில் எப்படி போட்டியாளர்கள் பிரகாசிக்கிறார்கள் என்பதை வைத்து அணிகளை உருவாக்கி, ஆட்களை நீக்கி, வாரா வாரம் சுவாரசியங்கள் எகிறி எகிறி, முடியும் தருவாயில் நாங்களும் அந்த மாதிரி நிறுவனங்களுக்கு போய் இப்படி செய்தால் என்ன? இந்த டிசிஷன் ஏன் பிழை? இவனை ஏன் ப்ரோஜக்ட் மானேஜராய் போட்டார்கள்? என்றெல்லாம் பார்க்கும் டிவிக்கு முன்னால் இருந்து கருத்து சொல்ல ஆரம்பித்துவிடுவோம். தொழிற்புரட்சி மேம்பட்ட இடங்களில் காணப்படும் பொதுவான ஒரு அம்சம் இது. சிறுவர்களை ஆரம்பத்தில் Monopoly விளையாட வைத்து, அவர்கள் இளைஞர்கள் ஆகும்போது இவ்வாறான நிகழ்ச்சிகளை பார்க்கவைத்து, அப்படிப்பட்ட சிந்தனையை கலாச்சாரத்தின் கூறாக ஆக்குகிறார்கள். எங்கள் ஊரில் எப்படி கணிதம் கலாச்சாரத்தோடு இணைந்துவந்ததோ, எப்படி இசை ஆர்வம் இப்போது சுப்பர் சிங்கர் ஜூனியர், சீனியர் என்று மாற்றப்படுகிறதோ அதுபோல, இது இன்னொரு பரிமாணம்.

Apprentice போன்ற ஒரு நிகழ்ச்சியை யாழ்ப்பாணத்தில் செய்து பார்ப்போமா? என்று ஒரு பொறி தட்டினபோது முதலில் ஆர்வமாக இருந்தாலும் யோசித்து பார்க்க மலைப்பாக இருந்தது. வாரா வாரம் நிகழ்ச்சி நடத்துவதற்கு ஊடக அனுசரணை வேண்டும், தகவல் தொழிற்துறை நிபுணர்கள் வேண்டும், அவர்கள் யாழ்ப்பாணத்துக்கு வரவேண்டும். இடம் வேண்டும். ஸ்பொன்ஸர்ஸ் வேண்டும். எல்லாவற்றுக்கும் மேலே நிகழ்வில் பங்கெடுக்க போட்டியாளர்கள் வேண்டும். அதே எக்சைட்மேண்டோடு, ஒரு கலக்கு கலக்கவேண்டும் என்று நினைத்துக்கொண்டு வரும் போட்டியாளர்கள். இயலுமா என்று கேட்டபோது யாருக்குமே எந்த சந்தேகமும் இருக்கவில்லை!

Yarl Geek Challenge Season I, ஒக்டோபர் 26ம் திகதியில் இருந்து 29ம் திகதிவரை நடைபெறுகிறது.

fb

இந்த போட்டி மென்பொருள் துறையை(Software Engineering) சார்ந்தே வடிவமைக்கப்பட்டிருக்கிறது. நான்கு அல்லது ஐந்து போட்டியாளர்கள், அவர்களுக்கு மென்பொருள் துறையில் நிபுணத்துவம் பெற்ற ஒரு ஆலோசகர்(mentor) என்று ஒரு அணி அமைக்கவேண்டும். அணியில் பலதரப்பட்ட திறமைசாலிகள் இருத்தல் அவசியம். திறமையான டிசைனர், வித்தியாசமான ஐடியாக்களை யோசிக்கக்கூடியவர், அவற்றை document செய்ய கூடியவர், எல்லோரையும் கவரும் வண்ணம் பிரசெண்டேஷன் செய்யக்கூடியவர், அணியை வழிநடத்த கூடியவர் என எல்லோரும் அணியில் இருந்தால் தான் சுற்றுகளில் தப்பிக்க முடியும்.

மொத்தமாக ஐந்து சுற்றுகள். முதல் சுற்றில் அணிகள் தங்களின் ப்ரோபோசலை சமர்ப்பித்து அறிமுகப்படுத்தவேண்டும். இரண்டாவது சுற்று Requirements Engineering என்று ப்ரோபோசலில் இருக்கும் அம்சங்களை எப்படி உள்வாங்கி, அனலைஸ் பண்ணி, நேர்த்தியாக குழப்பங்கள் இல்லாமல் வரையறுப்பது போன்ற செயற்பாடுகள் இந்த சுற்றில் ஆராயப்படும். மூன்றாவது சுற்று டிசைனுக்கானது. இங்கே தான் எப்படி அணிகள் தங்கள் ஐடியாவை வடிவமைத்து உருவாக்கமுடியும் என்று தெரிவிக்கப்போகின்றன. நான்காவது சுற்று அல்கோரிதம் சார்ந்தது. முழு ப்ரோஜெக்டையும் செய்து முடிக்க அவகாசம் இல்லாததால், அவர்களின் ஐடியா சார்ந்த அல்கோரிதம் ஒன்று அணிகளுக்கு கொடுக்கப்பட்டு அதை அவர்கள் செய்து காட்டவேண்டும். இதிலே சுவாரசியமான கலந்துரையாடல்கள், ஏன் இப்படி, ஏன் இப்படி இல்லை என்றெல்லாம் டிஸ்கஸ் பண்ணலாம். கடைசிச்சுற்று, எப்படி அணிகள் தங்கள் தயாரிப்பை சந்தைப்படுத்தப்போகின்றன? அதன் strategy என்ன? அடுத்தகட்ட நகர்வு என்ன? ஒரு ஐடியாவை எப்படி சந்தையில் வெற்றிகரமான product ஆக்குவது என்ற சுற்று. ஒருவித மரதன் ஓட்டம் போல, ஐந்து சுற்றுகள். காலை மாலை என மாணவர்களும் பொறியியலாளர்களும் நிபுணர்களும் ஆர்வலர்களும் ஒரே இடத்தில்.

போட்டிகள் எல்லாமே யாழ்ப்பாணத்தில் மாலை அமர்வாக, தொடர்ச்சியாக நான்கு நாட்களுக்கு நடைபெறும். காலையில் அணிகள் தங்கள் mentor உடன் இணைந்து கலந்துரையாடி அன்றைய சுற்றுக்கு தம்மை தயார் பண்ணும். மாலையில் நடுவர்கள், வெளியார்கள் முன்னிலையில் போட்டிகள், வெற்றிகள், வெளியேற்றங்கள், சுற்று சார்ந்த தொழின்முறை அமர்வுகள் என நிகழ்வுகள் நடைபெறும்.

ஒக்டோபர் பதின்மூன்றாம் திகதியன்று, யாழ்ப்பாணம் சர்வோதயா மன்றத்தில்(Sarvodaya Center Hall) ஒரு அறிமுக நிகழ்வு நடைபெறும். அணிகள் அறிமுகம், அணிகளுக்கு mentorகளை நியமிக்கும் நிகழ்வு, போட்டிகள் பற்றிய அறிமுகங்கள் … The launch அன்றைக்கு தான். அங்கேயே உங்கள் ஐடியாக்களை கலந்துரையாடி போற்றிக்கேற்றமாதிரி வடிவமைக்கலாம். பின்னர் இரண்டுவாரம் கழித்து ஒக்டோபர் 26ம் திகதியில் இருந்து 29வரை போட்டிகள் ஆரம்பமாகும்.

இப்போது இந்த போட்டிகளில் எப்படி நாமும் இணைவது? போட்டியாளர்களாக இணையவேண்டும் என்றால், நீங்கள் நான்கு ஐந்து பேர் ஒன்றிணைந்து, சாதுர்யமாக ஒரு அணியை தெரிவு செய்து ஒன்றிரண்டு ஐடியாக்களுடன் எம்மை அணுகவேண்டும். போட்டியாளர்கள் பல்கலைக்கழக மாணவர்களாக இருக்கலாம், ஐடி நிறுவனங்களில் கல்வி பயிலும் மாணவர்களாக இருக்கலாம், பாடசாலை மாணவர்களாக கூட இருக்கலாம். நம்மால் முடியும் என்று நினைத்தால், அப்படி நினைப்பவர்கள் கூட இருந்தால், ஐந்து பேர் சேர, அணி ரெடி. ரெடியாகுங்கள் … இரண்டுவாரங்கள் தான்.

ஏற்கனவே ஐடி துறையில் பரிச்சியமான, project managers, business analysts, software architects & engineers யாராவது இந்த நிகழ்வில் இணைந்து அணிகளை வழிநடத்த ஆர்வமாக இருந்தால் உங்களை அன்போடு எம்மை தொடர்பு கொள்ள அழைக்கிறோம். நான்கு நாட்கள் நீங்கள் யாழ்ப்பாணத்தில் இருக்கவேண்டும், மிகுதி விஷயங்கள் எல்லாமே நாங்கள் பார்த்துக்கொள்வோம். இப்படி ஒரு நிகழ்ச்சியை உங்களைப்போன்றவர்களின் பங்களிப்பு இல்லாமல் செய்யமுடியாது. செய்யவும் கூடாது. எனவே இணைந்து, யாழ்ப்பாணத்தில் இப்படியான பலவிஷயங்களுக்கு ஒரு முதல்விஷயமாக இதை செய்வதற்கு உங்கள் ஒத்துழைப்பு மிக அவசியம். நாடி நிற்கிறோம்.

இந்த முயற்சியில் ஆர்வமாய் இருப்பவர்கள், வெளிநாட்டில் இருக்கும் துறை சார்ந்தவர்கள், ஸ்பொன்சர்ஸ், இலங்கை நிறுவனங்கள் மூலம் ஸ்பொன்சர்ஸ் கொண்டுவரக்கூடியவர்கள், மீடியா என எல்லோரின் பங்களிப்பும் எங்களுக்கு அவசியம்.தொடர்புகொள்ளுங்கள். கலக்கலாம்!

சொல்லப்போனால் ஒக்டோபர் 26ம் திகதியில் இருந்து 29வரை, நான்கு நாட்களுக்கு எல்லோரும் சேர்ந்து எங்கள் யாழ்ப்பாணத்தில் தகவல் தொழில்நுட்பத்துறையை அடிப்படையாக வைத்துக்கொண்டு ஒரு சந்தோஷமாக கலந்து பேசி, கொண்டாடி..

Its going to be a new experience and sure it will be fun!

போட்டி பற்றிய தொடர்ச்சியான தகவல்களுக்கு Yarl IT Hub அமைப்பின் இணையத்தளத்திலோ அல்லது Facebook பக்கத்திலோ தொடர்பு கொள்ளலாம்.

அணிகளின் விண்ணப்பம்.

நிகழ்ச்சி பற்றிய தகவல்கள்.

ஏனைய இணைப்புகள்

www.yarlithub.org

http://www.facebook.com/groups/264218806991707/

யாழ்ப்பாணத்தில் ஒரு சிலிக்கன் வலி!

வானம் மெல்ல கீழிறங்கி!

 

“விளக்கு வச்சாபிறகு தான் அந்த ஈர்வலிய எடுத்தோண்டு போய் நல்லா இழு, உள்ள தரித்திரம் எல்லாம் வந்து சேரட்டும்”

19751_319400296414_624696414_3927151_5459133_nஇரண்டு ஈர் அடிப்பதற்குள் அம்மா குசினிக்குள் இருந்தவாறே திட்ட ஆரம்பிக்க கரண்டும் கட்டாக சரியாக இருந்தது. செவ்வாய்க்கிழமை என்றால் கம்பஸ் பகுதிக்கு மின்வெட்டு என்பதை ஏதோ ஒரு ஞாபகத்தில் மேகலா மறந்துபோயிருந்தாள். சிமினி எதையுமே துடைத்துவைத்திருக்கவில்லை. உடனேயே தட்டுத்தடுமாறி எழுந்துபோய் மெழுகுதிரி ஒன்றை கண்டுபிடித்து ஏற்றிக்கொண்டு, பழைய உதயன் பேப்பரை கிழித்து அரிக்கன் லாம்பையும், மேசை லாம்பையும் கவனமாக துடைத்தாள். கத்திரிக்கோலால் முனை கருகியிருந்த திரிகள் இரண்டையும் நேர்கோட்டில் வெட்டிவிட்டு, நெருப்புக்குச்சியை தட்டும்போது, தம்பி அறைக்குள் இருந்துகொண்டு  “விளக்கை எடுத்தண்டு வர இவ்வளவு நேரமா?” என்று நாட்டாமை செய்தான். அவனுக்கு இன்னமும் இரண்டு மாதத்தில் ஒஎல் பரீட்சை. சலலகினி சந்தேஷயவையும் குசுமாசனதேவியையும் மனப்பாடம் செய்வதற்கு அவன் செய்யும் அலப்பறைக்கு பதிலாக தான் பேசாமல் டொக்டருக்கே படித்திருக்கலாம் என்று மேகலா சமயத்தில் நினைப்பதுண்டு. முதல் ஆளாய் அவனுக்கு தான் விளக்கு கொடுக்கவேண்டும். அவன் அறைக்குள் சென்று மேசை லாம்பை வைத்துவிட்டு கதவை சாத்திக்கொண்டே குசினிப்பக்கம் போனாள். அங்கே அம்மா ஏற்கனவே கைலாம்பை ஏற்றிவிட்டு புட்டு கொத்திக்கொண்டிருந்தாள். இந்தநேரம் பார்த்து உள்ளே நுழைந்தால் “புட்டுக்கு எப்பன் தேங்காய் துருவித்தா” என்று ஆரம்பித்து கோரிக்கை “சம்பல் கொஞ்சம் இடிச்சு தா” வரைக்கும் நீளும் என்று மேகலாவுக்கு நன்றாகவே தெரியும். அம்மாவுக்கு தெரியாமல் பூனை போல ஹாலுக்குள் போய், மெழுகு திரியை அப்பாவின் அலுவலக மேசையில் வைத்துவிட்டு, ஒரு ஸ்டூலையும் கதிரையையும் தர தரவென்று இழுத்துக்கொண்டு முற்றத்துக்கு போய் ஆசுவாசமாக அமர்ந்தாள். அப்பாடி!

மணி ஏழரை ஆகிவிட்டிருந்தது. வெளிச்சம் இல்லாத யாழ்ப்பாணம், இடம்பெயர்வுக்கு முன்னிருந்த நாட்களை நினைவுபடுத்தியது. அவ்வப்போது ஒழுங்கையால் போய்வரும் சைக்கிள் சத்தங்களும் கொஞ்சமே அடங்கியிருந்தது.  விளக்கை நன்றாக குறைத்துவிட்டு அப்படியே சாய்ந்து மேலே பார்த்தால் அருந்ததி தெரியுமாப்போல, அது ஓரியனா என்ற குழப்பமும் கூடவே சேர்ந்தது. புரட்டாசியில் ஓரியன் தெரியுமா? அருந்ததி தான். இப்போதே பார்த்து வைக்கலாம் என்று நினைக்க, மேகலாவுக்கு உள்ளூர அந்த குறுகுறுப்பு மீண்டும். முன் வளவு வாழைகளும், பங்குக்கிணற்றடி தென்னை பாலைகளும் சேர்ந்து ரம்மியமான ஓசையோடு இரவு நேரத்து வெக்கையை விரட்டிக்கொண்டிருந்தன. பனசொனிக் ரேடியோவை எடுத்து திருகினால் ஜெகத்கஸ்பார் வெரித்தாஸில் ஈழத்தவருக்காக ஜெபித்துக்கொண்டிருக்க, நிறுத்திவிட்டு உள்ளே போய் லாச்சிக்குள் இருந்த பிரிவோம் சந்திப்போமை எடுத்துகொண்டு வந்து, லாம்பை மறுபடியும் தூண்டிவிட்டு வாசிக்க ஆரம்பித்தாள்.

அந்த பெண்ணை சற்று நிமிர்ந்து பார்த்து மீண்டும் தன் கையை பார்த்துக்கொண்டான். அவள் கூந்தலைப்பின்னாமல் அலைய விட்டிருந்தாள் என்பதை மட்டும்தான் கவனித்தான்.
“நீங்க தானா அது?”
ரகுபதிக்கு புரியவில்லை. “என்ன இது, என்னை பற்றி ஏதாவது புரளியா?” என்றான்.
“இல்லை இல்லை, ஐ ஆம் சப்போஸ்ட் டு மீட் யூ இன் திஸ் பார்ட்டி”
“எதுக்கு?”
“நமக்கு கல்யாணம் பண்ணி வைக்கலாமான்னு ஜனங்க யோசிச்சுக்கிட்டிருக்கு”

மேகலா தன்னையறியாமலேயே “களுக்” என்று சிரித்தாள்.  பக்கத்தில் இருந்த அரிக்கன் லாம்பும்  தன் பங்குக்கு சேர்ந்து சிரித்தது.  பின் பத்தியில் கட்டியிருந்த வில்சன், இவள் முற்றத்தில் தான் இருக்கிறாள் என்று அறிந்தவுடன் கள்ள ஊளை இட ஆரம்பிக்க, இவள் புத்தகத்தின் பக்கம் மடித்து வைத்துவிட்டு பத்திக்கு சென்று வில்சனை அவிழுத்துவிட்டாள். அந்த சந்தோசத்தில் அவள் மீண்டும் முற்றத்துக்கு வருவதற்கு முன்னரேயே, வில்சன் பதினெட்டு முறை மேகலாவை சுற்றி சுற்றி வந்து எம்பி எம்பி விளையாட ஆரம்பித்திருந்தது.

குமரன்! வில்சனை பார்க்கும்போதெல்லாம் அந்த செல்ல எருமையின் ஞாபகம் மீண்டும் மீண்டும் வருவது அவளுக்கே சிரிப்பாக இருந்தது. கள்ளன், இப்போது என்ன செய்து கொண்டிருப்பான்? போய்ச்சேர்ந்திருப்பானா? இல்லை யாராவது கறுப்பியை பார்த்து வழிந்து விழுந்துகொண்டிருப்பான், பச்சைக்கள்ளன் ப்ச் .. என்ன மாதிரி அண்டைக்கு வந்தானப்பா“, மேகலா முகம் முழுக்க புன்னகை பார்த்து, எண்ணெய் தீர்ந்த அரிக்கன் லாம்பு பக் பக் என்று கண்ணடிக்க, உள்ளே போய் மண்ணெண்ணெய் எடுத்துவந்து கொஞ்சம் விட்டுவிட்டு மீண்டும் புத்தகத்தில் ஆழ்ந்தாள் மேகலா.

“என்ன சாப்பிடுறீங்க? விஸ்கியா? ஆரம்பமே நல்லா இல்லையே?”

“நான் அதிகம் குடிக்கிறதில்ல .. பார்ட்டிக்கு வந்துதான் ..”

“எனக்கு கொடுக்காம தனியா குடிக்கிறீங்களேன்னு கேட்டேன்”

மேகலாவுக்கு “பிரிவோம் சந்திப்போம்” ரத்னாவை உடனடியாக பிடித்துக்கொண்டது. லொஸ் ஏஞ்சலஸ், குமரன் அவன் வாழும் வீடு என எல்லாமே கண் முன்னால், மேகலா புத்தகத்தை மூடிவிட்டு கற்பனையில் ஆழ்ந்தாள். அவன் இப்போது எங்கிருப்பான். ச்சே … ஒரு மாதம் இருக்குமா? முதல் நாள் நேரே விரிவுரை மண்டபத்துக்கே வந்துவிடுவான் என்று அவள் கனவிலும் எதிர்பார்த்திருக்கவில்லை. மதியம் தான் பலாலிக்கு லயன் எயர் விமானம் வந்திறங்கும். எப்படியும் அவன் உரும்பிராய் போய் வீட்டுக்காரரை சந்தித்து, ஆற அமர பின்னேரம் தான் தன் வீட்டுக்கு வருவான் என்று நினைத்திருந்தாள். அந்த மஞ்சள் நிறத்தில் பச்சை கலர் போர்டர் போட்ட சாரி, அதற்கு தாமரைப்பூ டிசைன் போர்ச் குத்தி, சின்னதாய் கனகாம்பர பூ மாலை முடிந்து, சிம்பிளாக ஆளை அடித்துப்போடலாம் என்றால்,  அவன் பார்த்து இப்படி திடுப்பென்று பல்கலைக்கழகத்துக்கே வந்துவிட்டிருந்தான்.

“எக்ஸ்கியூஸ் மீ “

வகுப்பறை வாசலில் கேட்ட சத்தத்தை சட்டை செய்யாமல் மேகலா தொடர்ந்து எழுதிக்கொண்டிருந்தாள்.

“I had rather hear my dog bark at a crow than a man..”

“… மிஸ் மேகலா?”  இம்முறை சற்று அழுத்தமாகவே கேட்க மேகலா வாசல் பக்கம் திரும்பினாள். கடவுளே. அவனே  ..ப்ச் … அவரே ப்ச்.... அவனே தான். குமரன். கண்டுபிடிப்பது ஒன்றும் அத்தனை கடினமாக இருக்கவில்லை. மாமா கொடுத்த படத்தில் மீசை இருக்கவில்லை. இப்போது மீசையோடு ரிக்கி பாண்டிங் தாடி. ஆனாலும் கண்டுபிடித்துவிட்டாள். எழுதிக்கொண்டிருந்த சோக்கட்டி நடுக்கத்தில் உடைந்து விழுந்தது. கால்களின் உதறலில் நைலக்ஸ் சாரி படபடத்து, ஐந்தும் கேட்டு அறிவும் கெட்டு அனிச்சையாய் சாரியின் பிளீட்ஸை சரிசெய்தாள்.

“சொறி டு டிஸ்டேர்ப் .. யு பெட்டர் பினிஷ் த லைன்”

“… வாட்? .. என்ன?”

“யூ பினிஷ் தட் ஷேக்ஸ்பியர் லைன் .. ஐ வில் வெயிட் அவுட்சைட்”

அன்றைக்கு அறிமுகமானது தான் அவனின் அந்த டிப்பிகல் நரிச்சிரிப்பு. மேகலாவுக்கு நடப்பது ஒன்றுமே தலைகால் புரியவில்லை. எல்லாமே கண் மூடி திறப்பதற்குள், என்ன சொல்லுவதே என்று தெரியாமல் வெறும் ஒகே என்பதற்குள் அவன் போய்விட்டிருந்தான். திரும்பி வகுப்பை பார்த்தால், முழு வகுப்புமே நமுட்டுச்சிரிப்பு சிரித்துக்கொண்டிருந்தது. கூச்சமும் சங்கோஜமும் ஒன்று சேர மீண்டும் கரும்பலகை திரும்பி வசனத்தை தொடர்ந்தாள்.

“I had rather hear my dog bark at a crow than a man swear he loves me..”

எழுதி முடிக்கும்போது தான் உறைத்தது. படுபாவி. இவனுக்கு ஷேக்ஸ்பியர் தெரிந்திருக்கிறது. இந்த வரியும் .. ச்சே முதல் சந்திப்பிலேயே இப்படியா? வாழ்க்கை முழுக்க  இந்த வசனத்தை வைத்துக்கொண்டு வதைக்கபோகிறானோ? தன் பின்னால் முழு வகுப்பும் பார்த்துக்கொண்டிருக்க ஆசையாய் ஒரு வெட்கம் கூட படமுடியாமல் மேகலாவுக்கு வெட்கம் பிடுங்கித்தள்ளியது.

“Why would Benedick and Beatrice have fought each other all the time? critically analyse.” என்று மனதில் தோன்றியதை கேட்டுவிட்டு மேகலா மேசையில் வந்து அமர்ந்து கொண்டு கடிகாரம் பார்த்தாள். ஐந்து நிமிடம், மூன்று நிமிடம் .. ஒரு நிமிடம், தட்ஸ் இட். பாடம் முடிய, வகுப்புக்கு வெளியே வந்தால், விமானத்தில் இருந்து இறங்கிய கையோடு, இரண்டு பெரிய சூட்கேஸுகள் அருகருகே இருக்க, குமரன் அங்கேயே அப்படியே. ஸ்டாப் ரூம் போய் முகத்தை சரிசெய்ய கூட சந்தர்ப்பம் இல்லாமல் .. முகத்தில் மாறாத அதே நரிச்சிரிப்பு! இவனோடு எப்படி காலம் தள்ளபோகிறோம்?

வில்சன் கால் பாதங்களை செல்லமாய் விறாண்ட விறாண்ட கூச்சத்தில் உதறிவிட்டாள். அணுங்கியது. சிரித்துக்கொண்டே வில்சனை தூக்கி மடியில் வைத்து கொஞ்ச ஆரம்பித்தாள். அதற்கும் எஜமானியின் மூட் புரிந்ததோ என்னவோ, இப்போது கன்னங்களையும் இலேசாக நக்க ஆரம்பிக்க, மேகலா “போடா நாயே” என்று செல்லக்கொபத்தில் திட்டியவாறே கீழே இறக்கிவிட்டாள். வில்சன் அப்போதும் அவள் காலை போய் விறாண்டி விளையாடிக்கொண்டிருந்தது. சும்மா சொல்லக்கூடாது. பெயர் வச்சவன் அவனல்லோ. அந்த நரிக்குணம் அப்படியே இருக்கு ..,

“குட்டிக்கு என்ன பெயர்?”

“பெயரா? .. நேற்று தான் தம்பி எங்கேயோ தாழையடிக்குள்ள இருந்து தூககியோண்டு வந்தான் .. இன்னும் பெயர் வைக்கேல்ல”

“அப்ப எப்பிடி கூப்பிடுவீங்க?”

“உஞ்சு தான்.. என்னத்த வச்சாலும் அம்மா கடைசில உஞ்சு எண்டு தான் கூப்பிடப்போறா.. முதலில இருந்த நாய்க்கு ஹீரோ எண்டு வச்சம்.. அம்மா அதை ஹீரா ஹீரா எண்டு சொல்லுறத நீங்க”

“வில்சன் எப்பிடி?”

“வில்சன்?”

“யியா .. வில்சன் ..நல்ல பெயரா … காஸ்ட் எவே வொலிபோல் பெயர்”

“காஸ்ட் எவே? யா“

“ம்ம் காஸ்ட் எவே .. போன வருஷம் ரிலீஸ் ஆன படம்.. சூப்பர்ப் மூவி தெரியுமா? .. டொம் ஹான்ஸ் மூவி .. அதில ஒரு வொலி போல் ..”

“ப்ச் .. தமிழ் படம் பாக்க கேட்டாலே அப்பா பென்ட் எடுப்பார் .. இங்க்லீஷ் படம் சான்ஸ்சே இல்லை”

“சரிவிடு .. நீ எல்ஏ வரும்போது பார்க்கலாம்”

குமரனின் “நீங்க” சாதரணமாக “நீ”யானதை மேகலா கவனித்து புன்முறுவல் செய்தாள். அமுசடக்கி கள்ளன், கொஞ்சம் கொஞ்சமாக அடித்தடம் கூட தெரியாமல் அவன் தன்னுள்ளே வியாபித்துக்கொண்டிருப்பதை மேகலா உணரத்தொடங்கினாள்.

“எல் ஏ யா?”

“யேப் .. எல் ஏ .. லொஸ் ஏஞ்சலஸ் .. நாங்க இருக்கிற இடம் டோரன்ஸ்.. அதில இருந்து கொஞ்சம் தெக்கால போகணும் .. எ ப்ளேஸ் டு லிவ் .. ஒரு பீச் இருக்கு .. சான்ஸே இல்ல .. சாகும் வரைக்கும் அங்கேயே கிடக்கலாம் தெரியுமா?”

“நாங்க எண்டா .. யார் யாரெல்லாம் இருக்கிறீங்க? கறுப்பியா? வெள்ளையா? நான் ஆரு இதில?”

“கறுப்பி”

“என்ன நக்கலா?”

“பின்ன .. இன்றைக்கு சரியா ஏழாவது நாள் .. ஒரு கிஸ் .. அட்லீஸ்ட் ஒரு ஐ லவ் யூ கூட கிடைக்காதா?”

“ரப்பிஷ்”

குமரன் முகம் போன போக்கை பார்த்து விழுந்து விழுந்து சிரித்தாள் மேகலா.

“பிள்ளை வந்து ஒருக்கா இந்த சம்பலை இடிச்சு தா”

அம்மாவுக்கு மூக்கு மேலே மணந்திருக்கவேண்டும். கொஞ்ச நேரம் சும்மா இருக்க விடமாட்டாள். மேகலா மனம் முழுதும் குமரனிடமே இருந்தது. சனியன் பிடிச்சவன். ஒரு மாசம் இருக்குமா? ஒரு லீவில் வந்து ஊருலகத்து அநியாயம் முழுக்க செய்து, இப்ப விசர் பிடிச்சவள் மாதிரி இருக்கவேண்டி இருக்கு. குறிப்பு கொண்டுவந்த சோமசுந்தரம் மாமா மீது கோபம் கோபமாக வந்தது. உலகத்தில எத்தினையோ வெளிநாட்டு மாப்பிள்ளைகள் இருக்கேக்க ..இப்பிடியா ஒருத்தனை பிடித்துக்கொண்டு வருவது?

மேகலா அந்த செல்லக்கோபமும் சிரிப்புமாகவே கட கடவென்று உரலையும், உலக்கை நுனியையும் துடைத்து, பொரித்த செத்தல் மிளகாயை போட்டு டொக் டொக் என்று இடிக்க தொடங்கினாள். மனம் எங்கோ இருக்க, கை தன் பாட்டுக்கு உலக்கை பிடிக்க, உரல் முழுதும் ஏறுக்கு மாறாய் பட்டு சத்தம் நங் நங் என்று கேட்டது.

“ஒரு சம்பலை சத்தம் போடாமா இடிக்க மாட்டியா? .. கல்லை இடிச்சு ஊரோச்சம் வைக்காம பார்த்து இடி”

அம்மா தான் மீண்டும். அவள் எப்போதுமே இப்படித்தான். மனம் மீண்டும் குமரன் பால் திரும்பியது. அவன் ஏன் அப்படி திடீரென்று லக்கேஜும் கையுமா வந்து மீட் பண்ணோணும்? அந்த நேரம் பார்த்து அந்த பாழாய்போன ஷேக்ஸ்பியர் வசனத்தை ஏன் நான் படிப்பிச்சுக்கொண்டு இருக்கோணும்? அவனோடு எப்படி அவ்வளவு ஈசியா ஒட்டிக்கொண்டு, ச்சே அவ்வளவு ஸ்டுடன்ஸ் பார்க்கத்தக்கனையா கம்பஸ் கிரவுண்ட் மரத்தடி பெஞ்சில இருந்து மணிக்கணக்கா .. அந்த சனியனில எதோ ஒண்டு .. ப்ச் .. எல்லாமே ஒரே மாசம் தான் .. சரியா இருபத்தொன்பது நாட்கள் முடிந்து, எவ்வளவு பேசியிருப்போம்? எவ்வளவு பேச இருக்கு இன்னமும்? இடையில் இரண்டு நாள் அவனுடைய முதல் காதல் கதை கேட்டு கோபப்பட்டு பேசாமல் இருந்து, ச்சே அதை வேறு வேஸ்ட் பண்ணீட்டன் .. கடவுளே எங்கேயும் எப்போதும் அவனை விட்டு பிரியாமல் எல்ஏ ஒ இல்லை இங்கேயோ அவனோடு என்றென்றும் சேர்ந்திருந்து அவன் அலம்பலை நாள் முழுதும் கேட்டு … கேட்கவேண்டும் .. அடச்சீ எல்லாமே டக் என்று முடியுமென்று மேகலா கனவிலும் எதிர்பார்த்திருந்தாளில்லை. இரண்டு நாள் முன்பு அந்த நாளும் வந்தது .. அவன் திரும்பிப்போகும் நாள்.

“நீ பேசாமா இங்கேயே நில்லேன் .. இங்கேயே .. சயன்ஸ் டிபார்ட்மென்ட்ல ஜோயின் பண்ணி .. வொர்ஸ்ட் கேஸ் ஐஐஎஸ்ல டீச் பண்ணலாம் .. ஆறு மாசம் … வெடிங் முடிஞ்சதும் நாங்க சேர்ந்து போகலாம் ப்ளீஸ்”

மேகலாவுக்கு அந்த “நீங்க” சரளமாக “நீ” ஆவதற்கு இரண்டு வாரமானது. அவன் இவ்வளவு சீக்கிரம் சென்றுவிடுவான் என்று பக்கத்தில் இருக்கும்போது தோன்றவில்லை. பத்தாக்குறைக்கு நேற்று நல்லூர் தேர் முட்டியடியில் யாருமே பார்க்காத சமயம் சனியன் கிஸ் வேறு பண்ணிவிட்டான். படுத்துகிறது. இப்போ பார்த்து திடீர் என்று புறப்படுகிறேன் என்று சொன்னால், என்ன சேட்டையா விடுறார்?

"ஐ நோ .. மேகலா .. ஆனா போகணும் .. ஐபிம் ரிசெர்ச்ல வேர்க் கிடச்சிருக்கு, விட சொல்லுறியா? இட்ஸ் மை ட்ரீம் ..ஆறு மாசம் தானே .. ஐ வில் பி பக் போர் த வெடிங் .. நெக்ஸ்ட் டைம் ஸ்ரீலங்காவால இருந்து கிளம்பும்போது இரண்டு பேருமா தான் போறம், ஓகேயா?”

“ …. “

“ஹேய் மேகலா”

“என்ன”

“வந்து … நீ இன்னமுமே என்னை பிடிச்சிருக்கா இல்லையாண்டு..”

“ரப்பிஷ்”

“இந்த முப்பது நாளில் நான் ஒரு முன்னூறு ஐ லவ் யூ .. பதிலுக்கு நீ ஒண்டு கூட சொல்ல இல்ல தெரியுமா?”

“அட்டர் ரப்பிஷ்”

நினைக்க நினைக்க மேகலாவுக்கு அவன் நினைவு இன்னும் இன்னும் வாட்டியது, ஏதோ ஒரு கோபத்தில் ஓங்கி ஒரு போடு போட, அப்போது தான் உரலுக்குள் போட்டிருந்த வெங்காயம் உலக்கை அடி பட்டு தெறித்து, ஒரு துண்டு கண்ணில் பாய்ந்தது. செத்தல் மிளகாயும் வெங்காயத்தில் ஒட்டியிருக்க, கண் வேறு கடுமையாக எரியத்தொடங்கவும், டெலிபோன் அடிக்கவும் சரியாய் இருந்தது. அவன் தான் … இந்நேரம் லாண்ட் பண்ணியிருப்பான். அப்பாடி .. ஒழுங்கா போய் சேர்ந்திட்டான் ..போட்டது போட்டபடியே, ஒரு கையால் கண்ணை கசக்கியபடியே ஹாலுக்குள் ஓடிப்போய் ரிசீவரை எடுத்தாள்.

“ஏய் குமரன் ..  ஒரு மாதிரி போய் சேர்ந்திட்டியா?”

“இன்னும் இல்ல … ஸ்டில் இன் த பிளைட் மேகலா”

“யூ சீரியஸ்? அவ்வளவு அவசரமா? கிரெடிட் கார்ட்டை வேஸ்ட் பண்ணாத .. இனி இனி பொறுப்பு வரோணும் உனக்கு”

“மேகலா…”

“நீ தான் கோல் பண்ண போறாய் எண்டு தெரியும் குமரன்.. விஷயம் தெரியுமா? பிரிவோம் சந்திப்போம் வாசிச்சுக்கொண்டிருக்கிறன் .. நீ சொன்னது போலவே ரத்னா .. ஜோர்ஜஸ் கரக்டரைசேஷன் .. அப்படியே கொஞ்சம் சென்ஸ் அண்ட் சென்சிபிலிட்டி மரியான் குணம் கூட அவளுக்கு ..ஐ ஆம் ஷூர் சுஜாதா மஸ்ட் ஹாவ் ரெட் இட் ..”

“ஹேய் லிட்ரேச்சர் லூஸ்.. நான் சொல்லுறத கொஞ்சம் கேக்கிறியா”

வழமையாக புத்தகம் என்றால் துள்ளிக்குதிக்கும் குமரனின் குரலில் ஒருவித பதட்டம் இருந்ததை கண்ட மேகலா துணுக்குற்றாள்.

“டென்ஷனா இருக்கிறியா? .. சொல்லு .. என்ன விஷயம்?”

“மேகலா . ஐ தினக் இட்ஸ் எ பாட் நியூஸ்”

“சொல்லுடா .. என்ன?” மேகலாவுக்கு இனம்புரியாத பயம் ஒன்று அடிவயிற்றில் பரவ ஆரம்பித்திருந்தது. அம்மாளாச்சி, எல்லாமே நல்லதா நடக்கோணும், உனக்கு முப்பது தடவை அடி அழிச்சு,

“எங்கட பிளேனையும் கடத்தி இருக்கிறாங்கள் .. இன் பிளைட் புல்லா ஆர்ம்ஸ் வச்சுக்கொண்டு .. அரப்காரங்கள் போல … கொஞ்ச நேரத்துக்கு முன்னால தான் ரெண்டு பிளைட் போய் வோர்ல்ட் ட்ரேட் செண்டரில மோதி வெடிச்சிருக்கு…

“என்னடா லூசுத்தனமா .. சும்மா என்னை வெருட்டாத குமரன் .. டெல் மி யு ஆர் சேஃப்.. விளையாடாத ப்ளீஸ்”

“ஐ தின்க் அமரிக்கா இஸ் அண்டர் அட்டாக் .. எல்லா பிளைட்டையும் கடத்தி கொண்டுபோய் பில்டிங்க்ஸோட .. ஐம் சொறி மேகலா .. ஒரு மாசம் .. நீ தேவதை மாதிரி வந்து … நான் வேற உன்னை குழப்பி ..”

“டேய் .. அப்பிடி ஒண்டுமே நடக்காது .. தே வில் லாண்ட் அண்ட் ரிலீஸ் யூ .. தெரியும் .. அம்மாளாச்சி எங்கள கைவிடமாட்டா”

“அம்மா .. அம்மாவுக்கு கூட நான் கோல் பண்ண இல்ல மேகலா .. இனி சான்ஸே கிடைக்காது .. அம்மாவை கட்டிப்பிடிச்சு ..”

“குமரன்”

“இங்க கொஞ்ச பேர் அவங்கள அட்டாக் பண்ண ப்ளான் பண்ணுறாங்கள் .. நோ யூஸ் .. இன்னும் கொஞ்ச செக்கன்ஸ் தான் மேகலா .. ஏதாவது பேசு .. பிடிச்சுதா … பிரிவோம் சந்திப்போம் எந்தளவுல இருக்கு? அந்த வேகாஸ் சீன் வந்திட்டுதா?”

மேகலா ஸ்தம்பித்துப்போய் இருந்தாள். என்ன நடக்குது இங்கே? எங்களுக்கு கூட இப்படி நடக்குமா? ஏன் எனக்கு மட்டும் திரும்ப திரும்ப .. எங்கிருந்தோ வந்தான், இடைச்சாதி நான் என்றான், இங்கிவனை நான் பெறவே .. ச்சே பாரதி பாட்டு வேற நேரம் காலம் இல்லாமல்,

“குமரன் .. ப்ளீஸ் ஹோல்ட் ஸ்ட்ரோங் .. என்னை விட்டு போயிடாதடா ப்ளீஸ் .. ஸ்டே ஹோல்ட் … சொல்லோணும் எண்டு நினைக்கிற போதெல்லாம் சொல்லாம.. திரும்பி வாடா .. நீ வேண்டாம் வேண்டாம் எண்டு சொல்லும் மட்டும் ..”

“என்ன அந்த … “ரபிஷ்ஷா?”

கேட்ட கணத்திலேயே மேகலா உடைந்து போனாள், தெரியும். இந்தக்கணம் கூட அந்தப்பக்கம் இருந்து அதே நரிச்சிரிப்பு சிரித்திருப்பான். இவனை இந்தக்கணத்தோடு மிஸ் பண்ண போகிறோமா? இவன் முகம், இவன் காதல், நான் ஒவ்வொருமுறையும் முறைக்கும்போது கொடுக்குக்குள் சிரிப்பானே ஒன்று, அப்படியே தோளில் கை போட்டானென்றால் .. ஐயோடா கடவுளே …

“ஐ லவ் யூ குமரன் .. ஐ லவ் யூ டாம் ஸோ மச் ……ஐ லவ் ….”

மேகலா ரிசீவரின் காதுப்பகுதியை பொத்திக்கொண்டு எட்டூருக்கும் கேட்கும் வண்ணம் மவுத் பீஸை நோக்கி கதறிக்கொண்டே இருந்தாள், நிறுத்தாமல்.

 

************************************************************

 

பின் குறிப்பு 1: கதையின் முடிவு டிராமடிக் என்று சிலவேளை வாசிப்பவர்கள் நினைக்ககூடும். அவர்களுக்கு 9/11 விசாரணையின் பொது பதிவு செய்த சாட்சியம் ஒன்று சாம்பிளுக்கு,

"Honey, it’s bad news."
"Lyz I need to know something. One of the other passengers has talked to their spouse, and he said that they were crashing other planes into the World Trade Center. Is that true."
[His wife pauses, not knowing what to say, but finally tells him it is true. There is a pause of a few minutes after hearing this.]
"I love Emmy, take care of her. Whatever decisions you make in your life, I need you to be happy, and I will respect any decisions that you make. Now, I need some advice - what to do? Should we, you know, we’re talking about attacking these men, what should I do?"

Reference : http://www.jeffhead.com/attack/heroes.htm

பின் குறிப்பு 2: இந்த சிறுகதை 9/11 சம்பவித்து சில மாதங்களில் மொரட்டுவ பல்கலைக்கழகத்தால் வெளியிடப்பட்ட தமிழருவி சஞ்சிகையில் வேறொரு களத்தில் வெளியாகி, பின்னர் ஆங்கிலத்தில் Door Mat என்று இரண்டு வருடத்துக்கு முன்னர் எழுதப்பட்டது.

நீ தானே என் பொன் வசந்தம்!


Neethane-en-ponvasantham1
அதிகாலை மூன்று மணி.  மெல்பேர்ன் குளிர், வசந்தகாலம் ஆரம்பித்து ஜஸ்ட் ஒரு நாள் தானே! இன்னமும் கொஞ்சமும் குளிர்ந்துவிட்டு போகிறேனே என்ற அடம் பிடித்தது. ஹீட்டர் போட்டு அதன் ஆசையை கலைக்க மனம் இல்லை. சூடாக ஒரு ப்ளேன் டீ போட்டு குடித்துக்கொண்டே, ஹோம் தியேட்டரின் வொலியூமை கொஞ்சம் குறைத்துவிட்டு couch க்கு வந்து quilt ஆல் போர்த்துக்கொண்டு சாய்ந்து கிடக்க, பதினொறாவது தடவையாக மீண்டும் ப்ளே பண்ண ஆரம்பிக்கிறது, மீண்டும் மீண்டும் மீண்டும். அப்படி ஒரு இரவின் நிசப்தத்துக்கு தேவையான அளவு சத்தம். இரண்டு பேர் மட்டுமே. ஒருவர் நான். மற்றையவர் … இளையராஜா.
இது “நீ தானே என் பொன் வசந்தம்” படத்து இசை விமர்சனம் கிடையாது.  இசை என்பது எம்மோடு கூட வரும் ஜீவன். அதை விமர்சிக்க கூடாது. அனுபவிக்கலாம். இந்த பதிவு கடந்த ஒரு வாரமாக, குறிப்பாக கடந்த சில மணித்தியாலங்களில் இளையராஜா எனக்கேற்படுத்துகின்ற அனுபவம். பகிரவேண்டும் போன்று தோன்றியது. சில மொமென்டஸ் .. பகிர தவறினால் அப்புறம் விட்டுவிடுவோம். அனுபவி ராஜா அனுபவி!

முதற்பாடல், “என்னோடு வா வா என்று சொல்லமாட்டேன்”,  ஏற்கனவே இரண்டு வரி டீசர் கொடுத்து வாரக்கணக்கில் பித்துபிடித்து அலையவிட்ட பாடல். “உன்னை விட்டு வேறு எங்கும் போக மாட்டேன்” என்று கார்த்திக் குரல் பேஸில் இறங்கும்போது, நமக்குள்ளேயே ஒரு இயல்பான புன்னகை வந்து மெலிதாய் தலை அசையும்.  இது தான் எனக்கு தெரிந்த அறிந்த அனுபவித்த ராஜா. கேட்கும்போது, இது இசை, இங்கே பாரு வயலின், இங்க பாரு percussion என்று ஒன்றுமே கிடையாது. இது உனக்குள் இருக்கும் பாட்டு, நான் வெளியே எடுத்து உனக்கே தருகிறேன் என்று சொல்லும் விஷயம் அது. வெரி சப்டில் மெலடி. இங்கே இந்த இடத்தில் என்று இல்லாமல் ஒரே சீரான meditative romantic feel தரும் பாடல். அல்பத்தில் உடனேயே பிடித்துபோகும் பாடல். இந்தப்பாடலை தூத்துக்குடி வானொலி நிலையத்தின் திரைத்தென்றல் நிகழ்ச்சியில் முதல் நாள் இரவு கேட்டுவிட்டு அடுத்தநாள் இரணைமடு அணைக்கட்டில் சைக்கிளை நிறுத்திவிட்டு பாடுவது போல ஒரு காட்சி. ராஜா என்னை பதினாறு வயதுக்கு கொண்டுபோய் சேர்க்கும் சாடிஸ்ட் வேலை பார்க்கும் பாடல் இது. ப்ச்! அனேகமாக முதலில் பிடிக்கும் பாடல் மிகவும் பிடித்த பாடலாக பிற்காலத்தில் நிலைப்பதில்லை. பார்ப்போம் இது எப்படி என்று.

“வானம் மெல்ல கீழிறங்கி மண்ணில் வந்தாடுதே”. ஐந்து வருடங்களுக்கு பின்னரும் ஐபோடில் ப்ளே பண்ணும்போது, வாசிக்கும் புத்தகத்தை மூடிவிட்டு நான் கண்மூடி லயிக்கப்போகும் பாடல் என்பது ஆரம்ப ஹார்மனி கோரஸிலேயே புரிந்துவிட்டது. பாடலில் ராஜா இசை எண்பதுகளில் இருந்து தொண்ணூறுகளுக்குள் நுழைகிறது. Again ரீதிகௌளை? தீபனிடம் கேட்கவேண்டும். ராஜாவுடன் சேர்ந்து பேலே ஷிண்டே பாடும்பாடல். பேலே ஷிண்டே பாடிய “கூட வருவியா” வை எவன் மறப்பான்? அல்பத்தில் ஸ்ரேயா கோஷல் இல்லாத குறையை பேலே தீர்த்துவைக்கிறார். மீண்டும் சப்டிலான மெலடி, அதற்கேற்ற மாதிரியான குளிரவைக்கும் ஒலிச்சேர்க்கை. கௌதம் மேனனுக்கு கோயில் கட்டி கும்பிடவேண்டும். இதை எப்படி கெளதம் காட்சிப்படுத்தியிருப்பார் என்ற ஆர்வம் எகிறிவிட்டது. கவுத்திடாதீங்க பாஸ்! கேட்கும்போது மாயக்கண்ணாடி படத்தின் “உலகிலே அழகி நீ தான்”  பாடலும் சிலம்பாட்டம் படத்தின் “மச்சான் மச்சான்” (இதுவும் ராஜா - ஷிண்டே டூயட் தான்) பாடலும் அவ்வப்போது ஞாபகம் வருவதை தவிர்க்கமுடியவில்லை. தற்போதைய நிலவரத்தின் படி my pick of the album! “இதற்கா மெனக்கட்டு லண்டன் போகவேண்டும்?” என்று கேட்ட நண்பனுக்கு என் பதில், “இதற்கு தான் போகவே வேண்டும்!”

“காற்றை கொஞ்சம்”.  மூன்று நாட்களுக்கு முதல் பாடல் வெளிவந்தவுடனேயே “This is it” என்று நினைக்கவைத்த பாடல். வாவ் …. “நானா ன ன நக நானா “  என்ற ஆண் குரலில் ஒரு prelude, காதலி பார்த்து சிரித்த கணத்தில் ரீங்காரம் இடும் prelude அது. அந்த சந்தோஷத்தில் நிச்சயம் பக்கத்தில் இருந்த Gate ஆல் எகிறிக்குதித்தால் வரும் மூடுக்கு கொடுக்கவேண்டிய இசை. ரகுமானுக்கு அது ஹொஸான்னா, ராஜாவுக்கு இந்த “காற்றை கொஞ்சம்”.  நண்பர் ஜீ இதன் பீட் தேவதை படத்து “நாள் தோறும் எந்தன் கண்ணில்”  பாட்டினுடையதை ஒத்திருக்கிறது என்றார். அட! நோட்டுகளோடு சேர்ந்து percussion கூடவே பயணிப்பது “விடிய விடிய நடனம் சந்தோஷம்” பாட்டிலும் ராஜா கொஞ்சம் ட்ரை பண்ணியிருப்பார். ராஜாவுக்குள் இருக்கும் மைக்கல் ஜாக்ஸன் ரசிகன் இப்படியான மெலடிகளில் சத்தம்போடாமல் அவ்வப்போது எட்டிப்பார்ப்பான். அவர்கள் வேலை இசை கோர்ப்பது. நம் வேலை, கேட்கும்போது அவர்களை கோர்த்து ரசிப்பது! ஹோம் தியேட்டரில் கேட்கும்போது மூலை முடுக்கில் இருந்தெல்லாம் ஹார்மனி சவுண்ட்டுகள். கேட்டமாத்திரத்திலேயே இந்த பாட்டு பல வருஷங்களாக புது புது விஷயங்களை கொட்டிக்கொண்டு இருக்கபோகிறது என்பது புரிந்துவிடுகிறது. கடவுளே நான் கடந்து போகாமல் இருக்கவேண்டும்.
“என்னை இன்று மீட்கத்தான் உன்னை தேடி வந்தேனே! மீட்டபோதும் மீண்டும் நான் உன்னில் தொலைகிறேன்!”
நா. முத்துக்குமார் அந்தப்பக்கம் ராஜா சிக்சர் பவுண்டரி விளாசும்போது அவ்வப்போது சிங்கிள் எடுத்து கொடுக்க தவறவில்லை! நல்ல காலமாக தாமரையிடம் மீண்டும் கெளதம் போகவில்லை!

“சாய்ந்து சாய்ந்து”, படத்தை பற்றி தெரிந்தவர்கள் இந்த பாடலை அறியாமல் இருக்கமாட்டார்கள். படத்தின் ஐடென்ட்டி பாடல். ராஜா தொண்ணூறுகளில் இருந்து அடுத்த தசாப்தத்துக்குள் நுழையும் பாடல். யுவன் ரம்யா பாடும் பாடல். கிட்டாரும் யுவனும் சேர்ந்து Country music ஐ கொண்டுவருகிறார்கள். ஆனால் முழுமையான country இசைக்குரிய கிட்டார் வீச்சு போதவில்லை(Alan Jackson பாடல்). ராஜா அதிகமாக ஏனோ பியானோவை தன் பாடல்களில் பாவிப்பதில்லை. ஆனால் பாவிக்கும் போதெல்லாம் அது உயிரை எடுக்கும்( என் வானிலே, நீ பார்த்த பார்வை”). இதிலே பியானோ அடி ஆழத்தில் சப்போர்ட் கொடுக்க, ஐந்தடி மேலே கிட்டார் இன்னொரு சப்போர்ட். மேல் தளத்தில் ராஜாவின் தனித்துவ ஒரகஸ்ட்ரா. எனக்கு இருக்கும் ஒரே நெருடல் அந்த யுவன் குரல் தான். பொருந்தவில்லை. பாடலை கண் மூடி லயிப்பதற்கு குறுக்கே நிற்கிறது. ரம்யா குரல் நன்றாக இருந்தாலும் அவருக்கு ஸ்கோப் அதிகம் இல்லை. யுவனை தவிர்த்திருக்கலாமோ?

That’s it. வெளியாகி ஒரே நாளில் எட்டு பாடல்களையும் கேட்டு ரசிப்பது சாத்தியமில்லை. எனக்கு பிடித்த genre இல் இருந்த நான்கு பாடல்களை மட்டும் தெரிவு செய்து இப்போதைக்கு வாழ்க்கை நடத்திக்கொண்டு இருக்கிறேன். ஏனைய பாடல்கள் காலப்போக்கில் தேடிவரலாம். அதிலே “புடிக்கல மாமு” வின் ஆரம்ப அரேஞ்மெண்ட் கலக்கல். ஆனால் பாடல் ஆரம்பித்தபிறகு தொடர்ந்து கேட்கதோன்றவில்லை. Its not mine. “முதல் முறை” பாடல் சுனிதி சவ்கான் பாடியிருக்கிறார். ஆனால் கேட்கும்போது again, வேறு genre. படம் பார்த்தபின் கேட்கலாம்.  “சற்றுமுன்” பாடலும் அப்படியே. “பெண்கள் என்றால்” பாடல் நான் எக்காலாத்திலும் ரசிக்கமாட்டேன் என்பது கேட்ட மாத்திரத்திலேயே புரிந்துவிட்டது.
tamil-movies-neethane-en-ponvasantham-audio-12
ஆனால் இங்கே பகிர்ந்த நான்கு Blues genre வகை பாடல்களும் நிச்சயம் இனி வரும் மாதங்களில் என் உயிரை எடுக்கப்போகும் பாடல்கள். கேட்க கேட்க புதிது புதிதாக அறிந்து புரிந்து ரசிக்கப்போகும் பாடல்கள்.  எப்போது மொத்தமாக ரசிப்பேன் என்று சொல்லமுடியாது. எப்போதோ வெளியான “வெண்ணிலா ஓடுது கண்ணிலே ஆடுது” இப்போதும் புதிதாக இருக்கிறது. “குண்டு மல்லி குண்டு மல்லி” என்று ஸ்ரேயா கோஷல் ஒவ்வொருமுறையும் கெஞ்சும்போதெல்லாம் ராஜாவை அடுத்த flight பிடித்து சென்னை போய் குத்திக்கொலை செய்யவேண்டும் போன்றும் தோன்றும். இரண்டு வருடங்களுக்கு முன்னர் வந்த ராஜாவின் “கண்ணுக்குள்ளே” பாடல்களை கேட்க கேட்க எங்கிருந்து இந்த மெலடிகள் இந்த மனுஷனுக்கு வந்திறங்குகிறது என்று பொறாமையாய் இருக்கும். அவற்றை வெளியே கொண்டுவருவது தான் பெரிய சவால். “என் பதின்மத்து இளையராஜா” என்ற பதிவிலே இருந்து ஒரு குறிப்பு.
“ராஜாவின் அண்மைக்கால மெட்டுகள் ஒருவித stalemate க்குள் சென்றுவிட்டதாக ஒரு அபிப்பிராயம். பால்கியின் படங்களில் அது இல்லை. தமிழில் இருக்கிறது. ஏன் அப்படி நடக்கிறது என்றால் இயக்குனர்கள் தான் காரணம். அண்மையில் தோணி படத்து இசை வெளியீட்டில் நாசர், பிரகாஷ்ராஜின் பேச்சுக்களை பாருங்கள். ராஜாவை கடவுளாகவும், கேள்வி கேட்கப்படமுடியாதவாராயும் சித்திரித்து நடுங்கி நடுங்கி பேசிக்கொண்டிருந்தார்கள். இப்படி இருந்தால் எப்படி இவர்கள் நல்ல பாடல்களை ராஜாவிடம் இருந்து வாங்க முடியும்? பாரதிராஜாவும் பாலச்சந்தரும் ராஜாவை நீ நான் என் ஒருமையில் அழைக்கக்கூடியவர்கள். ஒன்று பிடிக்கவில்லை என்றால் பிடிக்கவில்லை என்று சொல்லுவார்கள். அப்படித்தான் பாரதிராஜா “தம் தன் னம் தன தாளம் வரும்” பாடல் வாங்கியதாக ராஜாவே கூறியிருக்கிறார். இயக்குனர்கள் ராஜாவை முதலில் பயமின்றி எதிர்கொள்ளவேண்டும். கௌதம் மேனன் இப்போது அணுகி இருக்கிறார். ட்ரைலரே மிரட்டுகிறது. எப்படியும் ராஜாவுக்கு தீனி கொடுப்பார் என்று நம்பலாம்.”
கௌதம் மேனன் என் நம்பிக்கையை பொய்யாக்கவில்லை. சரியாக வேலைவாங்கி மனிஷனுக்கு தீனி போட்டிருக்கிறார். அதிலும் குறிப்பாக ராஜாவை ராஜாவாகவே கொண்டுவந்ததுக்கு கௌதமுக்கு ஒரு Hats off. நம்மில் பலர் ராஜாவிடம் ரகுமானையும், ரகுமானிடம் ராஜாவையும் தேடி தேடி கடைசியில் இருவரையும் ரசிக்கமுடியாத நிலைக்கு போய்விடுவர்.  இசையை அணுகும்போது ஒருவித premeditation உடன் அணுகுவதால் வரும் சிக்கல் இது. கௌதம் தெளிவாகவே இந்த இசை தான் எனக்கு வேண்டும் என்று அணுகியிருக்கிறார். அதுதான் நமக்கும் வேண்டும். அவரவர் இசையின் தனித்துவம் தான் அவர்களின் அடையாளம். அதில் செய்யும் இடையறாத பரிசோதனைகள் தான் அவர்களின் recreations. ஹாரிஸ், ரகுமான், ராஜா என்று கெளதம் எமக்காக அவர்களிடம் இருந்து அள்ளிக்கொடுத்த இசை கொஞ்ச நஞ்சமில்லை. இவர் அடுத்ததாக எடுக்கும் ரொமாண்டிக் கொமடிக்கு வித்தியாசாகரை நாடிப்போனால் இன்னொரு மியுசிகல் கிளாசிக் நிச்சயம்! படத்துக்கு பெயர் கூட “நீ காற்று நான் மரம்” என்று வைக்கலாம்!
“பிரிவோம் சந்திப்போம்” படப்பாடல்களை நான் கேட்காத நாள் இல்லை. ஆனால் எல்லோருக்கும் அந்த பாடல்கள் என்னளவுக்கு போட்டு தாக்கவில்லை. அதில் கூட எனக்கு ஒரு அற்ப சந்தோஷம். சிலபாடல்களை நாம் மட்டுமே ரசிக்கும்போது ஒருவித பெருமை. அட இந்த இசை எமக்காகவே உருவான இசை என்ற எண்ணம். இசை ரசனை என்பது மிகவும் பெர்சனலான விஷயம்.  அதனால் தான் பிடித்த இசையை தனிமையில் கேட்கவேண்டும் என்பார்கள். கண்ணுக்குள்ளே படத்தின் “எங்கே நீ சென்றாலும்”  பாடலில் ஒரு வரி இருக்கும். ராஜாவே சொல்லுவது போன்ற வரிகள்.

எங்கே நீ சென்றாலும் அங்கும் உன்னைத்தொடர்ந்துவரும்
என் ராகம் என் ராகம் என் ராகம்
என்னென்ன நடந்தாலும் நெஞ்சம் உன்னை கண்டுகொள்ளும்
என் ராகம் என் ராகம் என் ராகம்
தனிமையிலும் சென்று பார்
நினைவுகளில் நின்றுப்பார்
உலகில் எந்த மூலையில் இருப்பினும்
பிடித்துன்னை இழுத்து வரும்.
என்று பாடிக்கொண்டே போகிறவர் இடையில் ஒன்று சொல்லுவார்!
“கேட்காத கீதம் அது தானே அழகு, கலைஞனின் மனம் அறியும்!”

நீ பாட ஆரம்பிச்சல்ல!
அங்க நான் காலி!
இளையராஜா!