Skip to main content

வானம் மெல்ல கீழிறங்கி!

 

“விளக்கு வச்சாபிறகு தான் அந்த ஈர்வலிய எடுத்தோண்டு போய் நல்லா இழு, உள்ள தரித்திரம் எல்லாம் வந்து சேரட்டும்”

19751_319400296414_624696414_3927151_5459133_nஇரண்டு ஈர் அடிப்பதற்குள் அம்மா குசினிக்குள் இருந்தவாறே திட்ட ஆரம்பிக்க கரண்டும் கட்டாக சரியாக இருந்தது. செவ்வாய்க்கிழமை என்றால் கம்பஸ் பகுதிக்கு மின்வெட்டு என்பதை ஏதோ ஒரு ஞாபகத்தில் மேகலா மறந்துபோயிருந்தாள். சிமினி எதையுமே துடைத்துவைத்திருக்கவில்லை. உடனேயே தட்டுத்தடுமாறி எழுந்துபோய் மெழுகுதிரி ஒன்றை கண்டுபிடித்து ஏற்றிக்கொண்டு, பழைய உதயன் பேப்பரை கிழித்து அரிக்கன் லாம்பையும், மேசை லாம்பையும் கவனமாக துடைத்தாள். கத்திரிக்கோலால் முனை கருகியிருந்த திரிகள் இரண்டையும் நேர்கோட்டில் வெட்டிவிட்டு, நெருப்புக்குச்சியை தட்டும்போது, தம்பி அறைக்குள் இருந்துகொண்டு  “விளக்கை எடுத்தண்டு வர இவ்வளவு நேரமா?” என்று நாட்டாமை செய்தான். அவனுக்கு இன்னமும் இரண்டு மாதத்தில் ஒஎல் பரீட்சை. சலலகினி சந்தேஷயவையும் குசுமாசனதேவியையும் மனப்பாடம் செய்வதற்கு அவன் செய்யும் அலப்பறைக்கு பதிலாக தான் பேசாமல் டொக்டருக்கே படித்திருக்கலாம் என்று மேகலா சமயத்தில் நினைப்பதுண்டு. முதல் ஆளாய் அவனுக்கு தான் விளக்கு கொடுக்கவேண்டும். அவன் அறைக்குள் சென்று மேசை லாம்பை வைத்துவிட்டு கதவை சாத்திக்கொண்டே குசினிப்பக்கம் போனாள். அங்கே அம்மா ஏற்கனவே கைலாம்பை ஏற்றிவிட்டு புட்டு கொத்திக்கொண்டிருந்தாள். இந்தநேரம் பார்த்து உள்ளே நுழைந்தால் “புட்டுக்கு எப்பன் தேங்காய் துருவித்தா” என்று ஆரம்பித்து கோரிக்கை “சம்பல் கொஞ்சம் இடிச்சு தா” வரைக்கும் நீளும் என்று மேகலாவுக்கு நன்றாகவே தெரியும். அம்மாவுக்கு தெரியாமல் பூனை போல ஹாலுக்குள் போய், மெழுகு திரியை அப்பாவின் அலுவலக மேசையில் வைத்துவிட்டு, ஒரு ஸ்டூலையும் கதிரையையும் தர தரவென்று இழுத்துக்கொண்டு முற்றத்துக்கு போய் ஆசுவாசமாக அமர்ந்தாள். அப்பாடி!

மணி ஏழரை ஆகிவிட்டிருந்தது. வெளிச்சம் இல்லாத யாழ்ப்பாணம், இடம்பெயர்வுக்கு முன்னிருந்த நாட்களை நினைவுபடுத்தியது. அவ்வப்போது ஒழுங்கையால் போய்வரும் சைக்கிள் சத்தங்களும் கொஞ்சமே அடங்கியிருந்தது.  விளக்கை நன்றாக குறைத்துவிட்டு அப்படியே சாய்ந்து மேலே பார்த்தால் அருந்ததி தெரியுமாப்போல, அது ஓரியனா என்ற குழப்பமும் கூடவே சேர்ந்தது. புரட்டாசியில் ஓரியன் தெரியுமா? அருந்ததி தான். இப்போதே பார்த்து வைக்கலாம் என்று நினைக்க, மேகலாவுக்கு உள்ளூர அந்த குறுகுறுப்பு மீண்டும். முன் வளவு வாழைகளும், பங்குக்கிணற்றடி தென்னை பாலைகளும் சேர்ந்து ரம்மியமான ஓசையோடு இரவு நேரத்து வெக்கையை விரட்டிக்கொண்டிருந்தன. பனசொனிக் ரேடியோவை எடுத்து திருகினால் ஜெகத்கஸ்பார் வெரித்தாஸில் ஈழத்தவருக்காக ஜெபித்துக்கொண்டிருக்க, நிறுத்திவிட்டு உள்ளே போய் லாச்சிக்குள் இருந்த பிரிவோம் சந்திப்போமை எடுத்துகொண்டு வந்து, லாம்பை மறுபடியும் தூண்டிவிட்டு வாசிக்க ஆரம்பித்தாள்.

அந்த பெண்ணை சற்று நிமிர்ந்து பார்த்து மீண்டும் தன் கையை பார்த்துக்கொண்டான். அவள் கூந்தலைப்பின்னாமல் அலைய விட்டிருந்தாள் என்பதை மட்டும்தான் கவனித்தான்.
“நீங்க தானா அது?”
ரகுபதிக்கு புரியவில்லை. “என்ன இது, என்னை பற்றி ஏதாவது புரளியா?” என்றான்.
“இல்லை இல்லை, ஐ ஆம் சப்போஸ்ட் டு மீட் யூ இன் திஸ் பார்ட்டி”
“எதுக்கு?”
“நமக்கு கல்யாணம் பண்ணி வைக்கலாமான்னு ஜனங்க யோசிச்சுக்கிட்டிருக்கு”

மேகலா தன்னையறியாமலேயே “களுக்” என்று சிரித்தாள்.  பக்கத்தில் இருந்த அரிக்கன் லாம்பும்  தன் பங்குக்கு சேர்ந்து சிரித்தது.  பின் பத்தியில் கட்டியிருந்த வில்சன், இவள் முற்றத்தில் தான் இருக்கிறாள் என்று அறிந்தவுடன் கள்ள ஊளை இட ஆரம்பிக்க, இவள் புத்தகத்தின் பக்கம் மடித்து வைத்துவிட்டு பத்திக்கு சென்று வில்சனை அவிழுத்துவிட்டாள். அந்த சந்தோசத்தில் அவள் மீண்டும் முற்றத்துக்கு வருவதற்கு முன்னரேயே, வில்சன் பதினெட்டு முறை மேகலாவை சுற்றி சுற்றி வந்து எம்பி எம்பி விளையாட ஆரம்பித்திருந்தது.

குமரன்! வில்சனை பார்க்கும்போதெல்லாம் அந்த செல்ல எருமையின் ஞாபகம் மீண்டும் மீண்டும் வருவது அவளுக்கே சிரிப்பாக இருந்தது. கள்ளன், இப்போது என்ன செய்து கொண்டிருப்பான்? போய்ச்சேர்ந்திருப்பானா? இல்லை யாராவது கறுப்பியை பார்த்து வழிந்து விழுந்துகொண்டிருப்பான், பச்சைக்கள்ளன் ப்ச் .. என்ன மாதிரி அண்டைக்கு வந்தானப்பா“, மேகலா முகம் முழுக்க புன்னகை பார்த்து, எண்ணெய் தீர்ந்த அரிக்கன் லாம்பு பக் பக் என்று கண்ணடிக்க, உள்ளே போய் மண்ணெண்ணெய் எடுத்துவந்து கொஞ்சம் விட்டுவிட்டு மீண்டும் புத்தகத்தில் ஆழ்ந்தாள் மேகலா.

“என்ன சாப்பிடுறீங்க? விஸ்கியா? ஆரம்பமே நல்லா இல்லையே?”

“நான் அதிகம் குடிக்கிறதில்ல .. பார்ட்டிக்கு வந்துதான் ..”

“எனக்கு கொடுக்காம தனியா குடிக்கிறீங்களேன்னு கேட்டேன்”

மேகலாவுக்கு “பிரிவோம் சந்திப்போம்” ரத்னாவை உடனடியாக பிடித்துக்கொண்டது. லொஸ் ஏஞ்சலஸ், குமரன் அவன் வாழும் வீடு என எல்லாமே கண் முன்னால், மேகலா புத்தகத்தை மூடிவிட்டு கற்பனையில் ஆழ்ந்தாள். அவன் இப்போது எங்கிருப்பான். ச்சே … ஒரு மாதம் இருக்குமா? முதல் நாள் நேரே விரிவுரை மண்டபத்துக்கே வந்துவிடுவான் என்று அவள் கனவிலும் எதிர்பார்த்திருக்கவில்லை. மதியம் தான் பலாலிக்கு லயன் எயர் விமானம் வந்திறங்கும். எப்படியும் அவன் உரும்பிராய் போய் வீட்டுக்காரரை சந்தித்து, ஆற அமர பின்னேரம் தான் தன் வீட்டுக்கு வருவான் என்று நினைத்திருந்தாள். அந்த மஞ்சள் நிறத்தில் பச்சை கலர் போர்டர் போட்ட சாரி, அதற்கு தாமரைப்பூ டிசைன் போர்ச் குத்தி, சின்னதாய் கனகாம்பர பூ மாலை முடிந்து, சிம்பிளாக ஆளை அடித்துப்போடலாம் என்றால்,  அவன் பார்த்து இப்படி திடுப்பென்று பல்கலைக்கழகத்துக்கே வந்துவிட்டிருந்தான்.

“எக்ஸ்கியூஸ் மீ “

வகுப்பறை வாசலில் கேட்ட சத்தத்தை சட்டை செய்யாமல் மேகலா தொடர்ந்து எழுதிக்கொண்டிருந்தாள்.

“I had rather hear my dog bark at a crow than a man..”

“… மிஸ் மேகலா?”  இம்முறை சற்று அழுத்தமாகவே கேட்க மேகலா வாசல் பக்கம் திரும்பினாள். கடவுளே. அவனே  ..ப்ச் … அவரே ப்ச்.... அவனே தான். குமரன். கண்டுபிடிப்பது ஒன்றும் அத்தனை கடினமாக இருக்கவில்லை. மாமா கொடுத்த படத்தில் மீசை இருக்கவில்லை. இப்போது மீசையோடு ரிக்கி பாண்டிங் தாடி. ஆனாலும் கண்டுபிடித்துவிட்டாள். எழுதிக்கொண்டிருந்த சோக்கட்டி நடுக்கத்தில் உடைந்து விழுந்தது. கால்களின் உதறலில் நைலக்ஸ் சாரி படபடத்து, ஐந்தும் கேட்டு அறிவும் கெட்டு அனிச்சையாய் சாரியின் பிளீட்ஸை சரிசெய்தாள்.

“சொறி டு டிஸ்டேர்ப் .. யு பெட்டர் பினிஷ் த லைன்”

“… வாட்? .. என்ன?”

“யூ பினிஷ் தட் ஷேக்ஸ்பியர் லைன் .. ஐ வில் வெயிட் அவுட்சைட்”

அன்றைக்கு அறிமுகமானது தான் அவனின் அந்த டிப்பிகல் நரிச்சிரிப்பு. மேகலாவுக்கு நடப்பது ஒன்றுமே தலைகால் புரியவில்லை. எல்லாமே கண் மூடி திறப்பதற்குள், என்ன சொல்லுவதே என்று தெரியாமல் வெறும் ஒகே என்பதற்குள் அவன் போய்விட்டிருந்தான். திரும்பி வகுப்பை பார்த்தால், முழு வகுப்புமே நமுட்டுச்சிரிப்பு சிரித்துக்கொண்டிருந்தது. கூச்சமும் சங்கோஜமும் ஒன்று சேர மீண்டும் கரும்பலகை திரும்பி வசனத்தை தொடர்ந்தாள்.

“I had rather hear my dog bark at a crow than a man swear he loves me..”

எழுதி முடிக்கும்போது தான் உறைத்தது. படுபாவி. இவனுக்கு ஷேக்ஸ்பியர் தெரிந்திருக்கிறது. இந்த வரியும் .. ச்சே முதல் சந்திப்பிலேயே இப்படியா? வாழ்க்கை முழுக்க  இந்த வசனத்தை வைத்துக்கொண்டு வதைக்கபோகிறானோ? தன் பின்னால் முழு வகுப்பும் பார்த்துக்கொண்டிருக்க ஆசையாய் ஒரு வெட்கம் கூட படமுடியாமல் மேகலாவுக்கு வெட்கம் பிடுங்கித்தள்ளியது.

“Why would Benedick and Beatrice have fought each other all the time? critically analyse.” என்று மனதில் தோன்றியதை கேட்டுவிட்டு மேகலா மேசையில் வந்து அமர்ந்து கொண்டு கடிகாரம் பார்த்தாள். ஐந்து நிமிடம், மூன்று நிமிடம் .. ஒரு நிமிடம், தட்ஸ் இட். பாடம் முடிய, வகுப்புக்கு வெளியே வந்தால், விமானத்தில் இருந்து இறங்கிய கையோடு, இரண்டு பெரிய சூட்கேஸுகள் அருகருகே இருக்க, குமரன் அங்கேயே அப்படியே. ஸ்டாப் ரூம் போய் முகத்தை சரிசெய்ய கூட சந்தர்ப்பம் இல்லாமல் .. முகத்தில் மாறாத அதே நரிச்சிரிப்பு! இவனோடு எப்படி காலம் தள்ளபோகிறோம்?

வில்சன் கால் பாதங்களை செல்லமாய் விறாண்ட விறாண்ட கூச்சத்தில் உதறிவிட்டாள். அணுங்கியது. சிரித்துக்கொண்டே வில்சனை தூக்கி மடியில் வைத்து கொஞ்ச ஆரம்பித்தாள். அதற்கும் எஜமானியின் மூட் புரிந்ததோ என்னவோ, இப்போது கன்னங்களையும் இலேசாக நக்க ஆரம்பிக்க, மேகலா “போடா நாயே” என்று செல்லக்கொபத்தில் திட்டியவாறே கீழே இறக்கிவிட்டாள். வில்சன் அப்போதும் அவள் காலை போய் விறாண்டி விளையாடிக்கொண்டிருந்தது. சும்மா சொல்லக்கூடாது. பெயர் வச்சவன் அவனல்லோ. அந்த நரிக்குணம் அப்படியே இருக்கு ..,

“குட்டிக்கு என்ன பெயர்?”

“பெயரா? .. நேற்று தான் தம்பி எங்கேயோ தாழையடிக்குள்ள இருந்து தூககியோண்டு வந்தான் .. இன்னும் பெயர் வைக்கேல்ல”

“அப்ப எப்பிடி கூப்பிடுவீங்க?”

“உஞ்சு தான்.. என்னத்த வச்சாலும் அம்மா கடைசில உஞ்சு எண்டு தான் கூப்பிடப்போறா.. முதலில இருந்த நாய்க்கு ஹீரோ எண்டு வச்சம்.. அம்மா அதை ஹீரா ஹீரா எண்டு சொல்லுறத நீங்க”

“வில்சன் எப்பிடி?”

“வில்சன்?”

“யியா .. வில்சன் ..நல்ல பெயரா … காஸ்ட் எவே வொலிபோல் பெயர்”

“காஸ்ட் எவே? யா“

“ம்ம் காஸ்ட் எவே .. போன வருஷம் ரிலீஸ் ஆன படம்.. சூப்பர்ப் மூவி தெரியுமா? .. டொம் ஹான்ஸ் மூவி .. அதில ஒரு வொலி போல் ..”

“ப்ச் .. தமிழ் படம் பாக்க கேட்டாலே அப்பா பென்ட் எடுப்பார் .. இங்க்லீஷ் படம் சான்ஸ்சே இல்லை”

“சரிவிடு .. நீ எல்ஏ வரும்போது பார்க்கலாம்”

குமரனின் “நீங்க” சாதரணமாக “நீ”யானதை மேகலா கவனித்து புன்முறுவல் செய்தாள். அமுசடக்கி கள்ளன், கொஞ்சம் கொஞ்சமாக அடித்தடம் கூட தெரியாமல் அவன் தன்னுள்ளே வியாபித்துக்கொண்டிருப்பதை மேகலா உணரத்தொடங்கினாள்.

“எல் ஏ யா?”

“யேப் .. எல் ஏ .. லொஸ் ஏஞ்சலஸ் .. நாங்க இருக்கிற இடம் டோரன்ஸ்.. அதில இருந்து கொஞ்சம் தெக்கால போகணும் .. எ ப்ளேஸ் டு லிவ் .. ஒரு பீச் இருக்கு .. சான்ஸே இல்ல .. சாகும் வரைக்கும் அங்கேயே கிடக்கலாம் தெரியுமா?”

“நாங்க எண்டா .. யார் யாரெல்லாம் இருக்கிறீங்க? கறுப்பியா? வெள்ளையா? நான் ஆரு இதில?”

“கறுப்பி”

“என்ன நக்கலா?”

“பின்ன .. இன்றைக்கு சரியா ஏழாவது நாள் .. ஒரு கிஸ் .. அட்லீஸ்ட் ஒரு ஐ லவ் யூ கூட கிடைக்காதா?”

“ரப்பிஷ்”

குமரன் முகம் போன போக்கை பார்த்து விழுந்து விழுந்து சிரித்தாள் மேகலா.

“பிள்ளை வந்து ஒருக்கா இந்த சம்பலை இடிச்சு தா”

அம்மாவுக்கு மூக்கு மேலே மணந்திருக்கவேண்டும். கொஞ்ச நேரம் சும்மா இருக்க விடமாட்டாள். மேகலா மனம் முழுதும் குமரனிடமே இருந்தது. சனியன் பிடிச்சவன். ஒரு மாசம் இருக்குமா? ஒரு லீவில் வந்து ஊருலகத்து அநியாயம் முழுக்க செய்து, இப்ப விசர் பிடிச்சவள் மாதிரி இருக்கவேண்டி இருக்கு. குறிப்பு கொண்டுவந்த சோமசுந்தரம் மாமா மீது கோபம் கோபமாக வந்தது. உலகத்தில எத்தினையோ வெளிநாட்டு மாப்பிள்ளைகள் இருக்கேக்க ..இப்பிடியா ஒருத்தனை பிடித்துக்கொண்டு வருவது?

மேகலா அந்த செல்லக்கோபமும் சிரிப்புமாகவே கட கடவென்று உரலையும், உலக்கை நுனியையும் துடைத்து, பொரித்த செத்தல் மிளகாயை போட்டு டொக் டொக் என்று இடிக்க தொடங்கினாள். மனம் எங்கோ இருக்க, கை தன் பாட்டுக்கு உலக்கை பிடிக்க, உரல் முழுதும் ஏறுக்கு மாறாய் பட்டு சத்தம் நங் நங் என்று கேட்டது.

“ஒரு சம்பலை சத்தம் போடாமா இடிக்க மாட்டியா? .. கல்லை இடிச்சு ஊரோச்சம் வைக்காம பார்த்து இடி”

அம்மா தான் மீண்டும். அவள் எப்போதுமே இப்படித்தான். மனம் மீண்டும் குமரன் பால் திரும்பியது. அவன் ஏன் அப்படி திடீரென்று லக்கேஜும் கையுமா வந்து மீட் பண்ணோணும்? அந்த நேரம் பார்த்து அந்த பாழாய்போன ஷேக்ஸ்பியர் வசனத்தை ஏன் நான் படிப்பிச்சுக்கொண்டு இருக்கோணும்? அவனோடு எப்படி அவ்வளவு ஈசியா ஒட்டிக்கொண்டு, ச்சே அவ்வளவு ஸ்டுடன்ஸ் பார்க்கத்தக்கனையா கம்பஸ் கிரவுண்ட் மரத்தடி பெஞ்சில இருந்து மணிக்கணக்கா .. அந்த சனியனில எதோ ஒண்டு .. ப்ச் .. எல்லாமே ஒரே மாசம் தான் .. சரியா இருபத்தொன்பது நாட்கள் முடிந்து, எவ்வளவு பேசியிருப்போம்? எவ்வளவு பேச இருக்கு இன்னமும்? இடையில் இரண்டு நாள் அவனுடைய முதல் காதல் கதை கேட்டு கோபப்பட்டு பேசாமல் இருந்து, ச்சே அதை வேறு வேஸ்ட் பண்ணீட்டன் .. கடவுளே எங்கேயும் எப்போதும் அவனை விட்டு பிரியாமல் எல்ஏ ஒ இல்லை இங்கேயோ அவனோடு என்றென்றும் சேர்ந்திருந்து அவன் அலம்பலை நாள் முழுதும் கேட்டு … கேட்கவேண்டும் .. அடச்சீ எல்லாமே டக் என்று முடியுமென்று மேகலா கனவிலும் எதிர்பார்த்திருந்தாளில்லை. இரண்டு நாள் முன்பு அந்த நாளும் வந்தது .. அவன் திரும்பிப்போகும் நாள்.

“நீ பேசாமா இங்கேயே நில்லேன் .. இங்கேயே .. சயன்ஸ் டிபார்ட்மென்ட்ல ஜோயின் பண்ணி .. வொர்ஸ்ட் கேஸ் ஐஐஎஸ்ல டீச் பண்ணலாம் .. ஆறு மாசம் … வெடிங் முடிஞ்சதும் நாங்க சேர்ந்து போகலாம் ப்ளீஸ்”

மேகலாவுக்கு அந்த “நீங்க” சரளமாக “நீ” ஆவதற்கு இரண்டு வாரமானது. அவன் இவ்வளவு சீக்கிரம் சென்றுவிடுவான் என்று பக்கத்தில் இருக்கும்போது தோன்றவில்லை. பத்தாக்குறைக்கு நேற்று நல்லூர் தேர் முட்டியடியில் யாருமே பார்க்காத சமயம் சனியன் கிஸ் வேறு பண்ணிவிட்டான். படுத்துகிறது. இப்போ பார்த்து திடீர் என்று புறப்படுகிறேன் என்று சொன்னால், என்ன சேட்டையா விடுறார்?

"ஐ நோ .. மேகலா .. ஆனா போகணும் .. ஐபிம் ரிசெர்ச்ல வேர்க் கிடச்சிருக்கு, விட சொல்லுறியா? இட்ஸ் மை ட்ரீம் ..ஆறு மாசம் தானே .. ஐ வில் பி பக் போர் த வெடிங் .. நெக்ஸ்ட் டைம் ஸ்ரீலங்காவால இருந்து கிளம்பும்போது இரண்டு பேருமா தான் போறம், ஓகேயா?”

“ …. “

“ஹேய் மேகலா”

“என்ன”

“வந்து … நீ இன்னமுமே என்னை பிடிச்சிருக்கா இல்லையாண்டு..”

“ரப்பிஷ்”

“இந்த முப்பது நாளில் நான் ஒரு முன்னூறு ஐ லவ் யூ .. பதிலுக்கு நீ ஒண்டு கூட சொல்ல இல்ல தெரியுமா?”

“அட்டர் ரப்பிஷ்”

நினைக்க நினைக்க மேகலாவுக்கு அவன் நினைவு இன்னும் இன்னும் வாட்டியது, ஏதோ ஒரு கோபத்தில் ஓங்கி ஒரு போடு போட, அப்போது தான் உரலுக்குள் போட்டிருந்த வெங்காயம் உலக்கை அடி பட்டு தெறித்து, ஒரு துண்டு கண்ணில் பாய்ந்தது. செத்தல் மிளகாயும் வெங்காயத்தில் ஒட்டியிருக்க, கண் வேறு கடுமையாக எரியத்தொடங்கவும், டெலிபோன் அடிக்கவும் சரியாய் இருந்தது. அவன் தான் … இந்நேரம் லாண்ட் பண்ணியிருப்பான். அப்பாடி .. ஒழுங்கா போய் சேர்ந்திட்டான் ..போட்டது போட்டபடியே, ஒரு கையால் கண்ணை கசக்கியபடியே ஹாலுக்குள் ஓடிப்போய் ரிசீவரை எடுத்தாள்.

“ஏய் குமரன் ..  ஒரு மாதிரி போய் சேர்ந்திட்டியா?”

“இன்னும் இல்ல … ஸ்டில் இன் த பிளைட் மேகலா”

“யூ சீரியஸ்? அவ்வளவு அவசரமா? கிரெடிட் கார்ட்டை வேஸ்ட் பண்ணாத .. இனி இனி பொறுப்பு வரோணும் உனக்கு”

“மேகலா…”

“நீ தான் கோல் பண்ண போறாய் எண்டு தெரியும் குமரன்.. விஷயம் தெரியுமா? பிரிவோம் சந்திப்போம் வாசிச்சுக்கொண்டிருக்கிறன் .. நீ சொன்னது போலவே ரத்னா .. ஜோர்ஜஸ் கரக்டரைசேஷன் .. அப்படியே கொஞ்சம் சென்ஸ் அண்ட் சென்சிபிலிட்டி மரியான் குணம் கூட அவளுக்கு ..ஐ ஆம் ஷூர் சுஜாதா மஸ்ட் ஹாவ் ரெட் இட் ..”

“ஹேய் லிட்ரேச்சர் லூஸ்.. நான் சொல்லுறத கொஞ்சம் கேக்கிறியா”

வழமையாக புத்தகம் என்றால் துள்ளிக்குதிக்கும் குமரனின் குரலில் ஒருவித பதட்டம் இருந்ததை கண்ட மேகலா துணுக்குற்றாள்.

“டென்ஷனா இருக்கிறியா? .. சொல்லு .. என்ன விஷயம்?”

“மேகலா . ஐ தினக் இட்ஸ் எ பாட் நியூஸ்”

“சொல்லுடா .. என்ன?” மேகலாவுக்கு இனம்புரியாத பயம் ஒன்று அடிவயிற்றில் பரவ ஆரம்பித்திருந்தது. அம்மாளாச்சி, எல்லாமே நல்லதா நடக்கோணும், உனக்கு முப்பது தடவை அடி அழிச்சு,

“எங்கட பிளேனையும் கடத்தி இருக்கிறாங்கள் .. இன் பிளைட் புல்லா ஆர்ம்ஸ் வச்சுக்கொண்டு .. அரப்காரங்கள் போல … கொஞ்ச நேரத்துக்கு முன்னால தான் ரெண்டு பிளைட் போய் வோர்ல்ட் ட்ரேட் செண்டரில மோதி வெடிச்சிருக்கு…

“என்னடா லூசுத்தனமா .. சும்மா என்னை வெருட்டாத குமரன் .. டெல் மி யு ஆர் சேஃப்.. விளையாடாத ப்ளீஸ்”

“ஐ தின்க் அமரிக்கா இஸ் அண்டர் அட்டாக் .. எல்லா பிளைட்டையும் கடத்தி கொண்டுபோய் பில்டிங்க்ஸோட .. ஐம் சொறி மேகலா .. ஒரு மாசம் .. நீ தேவதை மாதிரி வந்து … நான் வேற உன்னை குழப்பி ..”

“டேய் .. அப்பிடி ஒண்டுமே நடக்காது .. தே வில் லாண்ட் அண்ட் ரிலீஸ் யூ .. தெரியும் .. அம்மாளாச்சி எங்கள கைவிடமாட்டா”

“அம்மா .. அம்மாவுக்கு கூட நான் கோல் பண்ண இல்ல மேகலா .. இனி சான்ஸே கிடைக்காது .. அம்மாவை கட்டிப்பிடிச்சு ..”

“குமரன்”

“இங்க கொஞ்ச பேர் அவங்கள அட்டாக் பண்ண ப்ளான் பண்ணுறாங்கள் .. நோ யூஸ் .. இன்னும் கொஞ்ச செக்கன்ஸ் தான் மேகலா .. ஏதாவது பேசு .. பிடிச்சுதா … பிரிவோம் சந்திப்போம் எந்தளவுல இருக்கு? அந்த வேகாஸ் சீன் வந்திட்டுதா?”

மேகலா ஸ்தம்பித்துப்போய் இருந்தாள். என்ன நடக்குது இங்கே? எங்களுக்கு கூட இப்படி நடக்குமா? ஏன் எனக்கு மட்டும் திரும்ப திரும்ப .. எங்கிருந்தோ வந்தான், இடைச்சாதி நான் என்றான், இங்கிவனை நான் பெறவே .. ச்சே பாரதி பாட்டு வேற நேரம் காலம் இல்லாமல்,

“குமரன் .. ப்ளீஸ் ஹோல்ட் ஸ்ட்ரோங் .. என்னை விட்டு போயிடாதடா ப்ளீஸ் .. ஸ்டே ஹோல்ட் … சொல்லோணும் எண்டு நினைக்கிற போதெல்லாம் சொல்லாம.. திரும்பி வாடா .. நீ வேண்டாம் வேண்டாம் எண்டு சொல்லும் மட்டும் ..”

“என்ன அந்த … “ரபிஷ்ஷா?”

கேட்ட கணத்திலேயே மேகலா உடைந்து போனாள், தெரியும். இந்தக்கணம் கூட அந்தப்பக்கம் இருந்து அதே நரிச்சிரிப்பு சிரித்திருப்பான். இவனை இந்தக்கணத்தோடு மிஸ் பண்ண போகிறோமா? இவன் முகம், இவன் காதல், நான் ஒவ்வொருமுறையும் முறைக்கும்போது கொடுக்குக்குள் சிரிப்பானே ஒன்று, அப்படியே தோளில் கை போட்டானென்றால் .. ஐயோடா கடவுளே …

“ஐ லவ் யூ குமரன் .. ஐ லவ் யூ டாம் ஸோ மச் ……ஐ லவ் ….”

மேகலா ரிசீவரின் காதுப்பகுதியை பொத்திக்கொண்டு எட்டூருக்கும் கேட்கும் வண்ணம் மவுத் பீஸை நோக்கி கதறிக்கொண்டே இருந்தாள், நிறுத்தாமல்.

 

************************************************************

 

பின் குறிப்பு 1: கதையின் முடிவு டிராமடிக் என்று சிலவேளை வாசிப்பவர்கள் நினைக்ககூடும். அவர்களுக்கு 9/11 விசாரணையின் பொது பதிவு செய்த சாட்சியம் ஒன்று சாம்பிளுக்கு,

"Honey, it’s bad news."
"Lyz I need to know something. One of the other passengers has talked to their spouse, and he said that they were crashing other planes into the World Trade Center. Is that true."
[His wife pauses, not knowing what to say, but finally tells him it is true. There is a pause of a few minutes after hearing this.]
"I love Emmy, take care of her. Whatever decisions you make in your life, I need you to be happy, and I will respect any decisions that you make. Now, I need some advice - what to do? Should we, you know, we’re talking about attacking these men, what should I do?"

Reference : http://www.jeffhead.com/attack/heroes.htm

பின் குறிப்பு 2: இந்த சிறுகதை 9/11 சம்பவித்து சில மாதங்களில் மொரட்டுவ பல்கலைக்கழகத்தால் வெளியிடப்பட்ட தமிழருவி சஞ்சிகையில் வேறொரு களத்தில் வெளியாகி, பின்னர் ஆங்கிலத்தில் Door Mat என்று இரண்டு வருடத்துக்கு முன்னர் எழுதப்பட்டது.

Popular posts from this blog

பர்மா புத்தர் - சிறுகதை

பனம் பாத்தி மெதுவாக முளைவிட ஆரம்பித்திருந்தது .   அதிகாலைக் குளிருக்கு அத்தனை பனங்கொட்டைகளும் நிலவண்டுகளின் கூட்டம்போல ஒட்டிக்குறண்டியபடி தூங்கிக்கொண்டிருந்தன . பாத்தியில் இடையிடையே கோரைப்புற்கள் கிளம்பியிருந்தன . முந்தைய நாள் அடித்து ஊற்றிய மழையில் இருக்காழிகள் சில குப்புறப்புரண்டு சாம்பல் நரையேறிய மயிர்க்கற்றைகளோடு வானம் பார்த்தபடி அண்ணாந்து கிடக்க , சில கொட்டைகள் பாத்தியினின்று சளிந்து அடிவாரங்களில் சிதறிக்கிடந்தன . பூரானுக்காகப் பிளக்கப்பட்டிருந்த கொட்டைகள் எல்லாம் ஒரு பக்கம் குவிக்கப்பட்டிருந்தன .  கார்த்திகை விளக்கீட்டுக்குப் பாத்தியடியில் குத்திவிடப்பட்டிருந்த பந்தத்தடி பாதி எரிந்த நிலையில் கறுப்பு வெள்ளைத் தொப்பியோடு இன்னமும் எஞ்சி நின்றது .  

விளமீன் - சிறுகதை

அந்த ஒரு மீன் மாத்திரம் முழித்துக்கொண்டுத் தனித்துத் தெரிந்தது. அந்தக் குவியலில் கிடந்த மீதி அத்தனை மீன்களும் இளஞ்சிவப்பு நிறத்திலிருக்க இது மாத்திரம் வெள்ளைத்தோலில் மெலிதாகப் படர்ந்திருந்த தங்கநிறக் கண்ணாடிச் செதில்களோடும், சற்றே திறந்துகிடந்த இரத்தச்சிவப்பு செவுள்களோடும் குவிந்த கண்களோடும். சரசு மாமி ராசனிடம் திரும்பவும் சொல்லிப்பார்த்தார். இம்முறை சற்றுக் கெஞ்சலாக. “தம்பி. நான் சொல்லுறன். அது எங்கட ஊர் விளமீன்தான். விறைச்சுக்கொண்டு கிடக்கு. நல்ல உடன் மீன். வாங்கித்தாவன்.” “அரியண்டம் பண்ணாம வாங்கோம்மா. ஊர் விளமீனை ஊருக்குப்போகேக்க சாப்பிட்டுக்கொள்ளலாம்.” மாமி அந்த விளமீனையை பார்த்தபடி நின்றார். இனி எப்போது ஊருக்குப் போய், எப்போது விளமீன் வாங்கி. இதுவெல்லாம் நடக்கிற காரியமா? ராசன் வேகமாக அடுத்த கடையை நோக்கி நடக்க ஆரம்பித்திருந்தான். சந்தை முழுதும் ராசனும் ரூபிணாவும் நடந்த வேகத்துக்குச் சரசு மாமியால் ஈடு கொடுக்கமுடியவில்லை. சேலை நிலத்தில் அரிபட அவர் பின்னாலேயே இழுபட்டுக்கொண்டுபோனார். அந்த விளமீன் அவர் பின்னாலேயே இழுபட்டு வந்துகொண்டிருந்தது. “இந்த ஊர் சினப்பரும் விளமீன்மாதிரித்தான் இருக

"என் கொல்லைப்புறத்துக் காதலிகள்" பற்றி இளங்குமரன்

யாழ்ப்பாண மக்களின் வாழ்க்கை போருடனும் துயருடனும் கடந்தது என்று எல்லோரும் அறிந்ததுதான், கதைகளும் ஏராளம். ஆனால் ஜே.கே தனது சொந்த அனுபவங்களின் ஊடே காட்டும் தொண்ணூறுகளின் யாழ் வாழ்க்கை மிக அழகானது, இயல்பானது. இன்னல்கள் கடந்த ஜன்னல் காற்று அந்த வாழ்க்கை. அந்த வாழ்வுணர்வு யாழில் வாழ்ந்தவர்களுக்கு தெரியும்(வாழ்பவன் நான், சற்றுப் பின்னே பிறந்துவிட்டேன், சில அனுபவங்களை இழந்தும் விட்டேன்). • ஒவ்வொரு அத்தியாயமும் ஒவ்வொரு சுளை, ஒவ்வொரு சுளையும் தனிச்சுவை. அவ்வப்போது தூறும் குண்டுமழையில் நனையாமல் பதுங்கும் பங்கர்கள், பங்கருக்குள்ளும் பய(ம்)பக்தியுடன் வைக்கும் பிள்ளையார் படம். அவரின் தம்பி முருகனைக்காண என விழாக்கோலம் பூண்ட நல்லூர் போய், வள்ளி, தெய்வானையையே தேடித் திரியும் உள்ளூர் முருகன்கள். விளையாட்டுப்பொருட்கள், ஜஸ்கிரீம், கச்சான் என கடைக்கண் கடைத்தெருப்பக்கமே இருக்க சுற்றித்திரியும் சின்னன்கள். தெருவெல்லாம் தெய்வம்கொண்ட கோயில்கள், பரீட்சை பயத்தில் அத்தனை கோயில்களுக்கும் போடும் கும்பிடுகள். எந்தப் பக்கம் பந்து போட்டாலும் நேரே மட்டும் அடிக்க கற்றுக்கொடுக்கும் ஒழுங்கை கிரிக்கட்டுகள். பாடசாலைகளுக்கிட