இரண்டாயிரத்துப் பத்தொன்பது, மே, இருபத்தியேழுகுளிர் ஆரம்பித்துவிட்டிருந்தது. இலையுதிர்காலம் வந்ததும் தெரியவில்லை. போனதும் தெரியவில்லை. கடந்த தடவை வசந்தகாலத்துக்கும் இதுதான் நிகழ்ந்தது. வசந்தத்தையும் இலையுதிரையும் கோடையும் குளிரும்தான் நமக்கு ஞாபகப்படுத்தவேண்டியிருக்கிறது.

வீட்டில் அப்பிள் மரம் காய்த்துக்கொட்டிக்கொண்டிருந்தது. கொழும்பிலிருந்து அப்பா ஓமந்தையால் கொண்டுவரும் நான்கு அப்பிள்களை முன்வீடு பின்வீடு என்று எல்லோருக்கும் பிரித்துக்கொடுத்தக் காலம் என்று ஒன்றுண்டு. நான்காய், எட்டாய்ப்பிரித்து அதிலொரு துண்டு கிடைக்கும். தீர்ந்துவிடுமே என்று நன்னி நன்னி சாப்பிட்டது. காலையில் காருக்குள் ஏறும் முன்னர் மரத்தில் எட்டி ஒன்றைப் பிடுங்கி, பக்கத்துப் பைப்பிலேயே கழுவி, கடித்தபடி புறப்படுகிறேன். இதனை முன்வீட்டு லலிக்குச் சொன்னால் புன்னகைப்பான் என்று நினைக்கிறேன்.

ஷாஜகானின் காட்டாறு
அண்மைக்காலங்களில் தமிழில் வாசிப்பது என்பது பெரும்பாலும் அயர்ச்சியையே கொடுத்து வந்திருக்கிறது. அதற்குக் காரணம் அவை வாசிப்புக்கு உகந்ததாகாமல் போய்விட்டன என்பதல்ல. அவற்றை வாசிக்கும்போது என் மனநிலை தளம்புகிறது. தமிழில் வாசிக்கும்போது கதைக்களனுக்குள் நுழைந்து ஒன்றிணையமுடியாமல் வாசிப்பு மனநிலை அலைக்கழிக்கப்படுகிறது. நூல்களையும் அவற்றை எழுதிய எழுத்தாளர்களையும் உள்ளடக்கிய புறச்சூழ அரசியலும் விவாதங்களும் அவர்களை வாசிக்கும்போது முழித்துக்கொண்டு ஒவ்வொரு பக்கங்களிலும் நிற்பதைத் தவிர்ப்பது கடினமாக இருக்கிறது. அதனால் அவற்றிலிருந்து வலிந்து விலகி நின்று, எழுத்தாளர்களின் பொதுவெளிகளை அவதானிக்காமல், அவர்களுடைய முகநூல், இணையத்தள, காணொலிப்பதிவுகளைக் கவனிக்காமல் நூல்களை மாத்திரமே தேடி வாசிக்கவேண்டிய நிலை ஏற்படுகிறது. வேற்றுமொழி இலக்கியங்களை வாசிக்கும்போது இந்த மனநிலை ஏற்படுவதில்லை. அந்தப் புத்தகங்களை அவற்றின் புறவெளி விவாதங்களைப்பற்றி அறியாமலேயே அணுகமுடிகிறது. அதனால் புத்தகங்களின் உள்ளடக்கங்களோடு நெருங்குவது என்பது இலகாகிறது.  கேட்கப்படாத பாடல்கள்போல வாசிக்கப்படாத புத்தகங்களும் கொஞ்சம் அதிகம் அழகுதான்.